பொன்னியின் செல்வன் முதல் பாகம்-29
759
0
அத்தியாயம் 29 – “நம் விருந்தாளி”
புலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்து கொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கிக் கணவருக்குக் கொடுத்தாள்.
அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைப் பிடித்தபிடி விடாமல் இழுத்துக் கொண்டே சக்கரவர்த்தியின் அருகில் போய்ச் சேர்ந்தார்.
“பிரபு! புது மருந்தினால் ஏதாவது பலன் தெரிகிறதா?” என்று கேட்டார்.
“பலன் தெரிகிறதாக மருத்துவர் சொல்லுகிறார்; தேவியும் சொல்கிறார்; ஆனால் எனக்கென்னவோ நம்பிக்கை உண்டாகவில்லை. உண்மையைச் சொன்னால், தளபதி! இதெல்லாம் வீண் முயற்சி என்றே தோன்றுகிறது. என் விதி என்னை அழைக்கிறது. யமன் என்னைத் தேடிக் கொண்டு பழையாறைக்குப் போயிருக்கிறான் என்றே நினைக்கிறேன்.அங்கே நான் இல்லையென்று அறிந்ததும், இவ்விடம் என்னைத் தேடிக் கொண்டு வந்து சேருவான்!…”
“பிரபு! தாங்கள் இப்படி மனமுடைந்து பேசக் கூடாது. எங்களையெல்லாம் இப்படி மனங்கலங்கச் செய்யக் கூடாது. தங்கள் குல முன்னோர்கள்…”
“ஆ! என் குல முன்னோர்கள் யமனைக் கண்டு அஞ்சியதில்லையென்று சொல்லுகிறீர்! எனக்கும் என் குல முன்னோர்கள் பலரைப் போல் போர்க்களத்தில் முன்னணியில் நின்று போர் செய்து உயிர் விடும் பாக்கியம் கிடைக்குமானால், அத்தகைய மரணத்துக்குச் சிறிதும் அஞ்ச மாட்டேன்; சோர்வும் கொள்ள மாட்டேன். உற்சாகத்துடன் வரவேற்பேன். என்னுடைய பெரிய தகப்பனார் இராஜாதித்தியர் தக்கோலத்தில் யானை மேலிருந்து போர் புரிந்தபடியே உயிர் நீத்தார். சோழ குலத்தின் வீரப் புகழைத் தக்கோலம் போர்க்களத்தில் என்றென்றும் நிலைநாட்டினார். ‘யானை மேல் துஞ்சிய தேவர்’ என்று புகழ்பெற்றார். நான் என்ன புகழைப் பெறுவேன்? ‘நோய்ப் படுக்கையில் துஞ்சிய சுந்தர சோழன்’ என்றுதானே பெயர் பெறுவேன்? என்னுடைய இன்னொரு பெரிய தகப்பனார், கண்டராதித்த தேவர் சிவபக்தியில் ஈடுபட்டு மரண பயத்தை விட்டிருந்தார். ஸ்தல யாத்திரை செய்வதற்கு மேற்குக் கடற்கரை நாடுகளுக்குப் போனார். அங்கேயே காலமானார். ‘மேற்கெழுந்தருளிய தேவர்’ என்று அவரும் பெயர் பெற்றார். அவரைப் போன்ற சிவபக்தனும் அல்ல நான்; ஸ்தல யாத்திரை செய்யவும் இயலாதவனாகி விட்டேன். இப்படியே எத்தனை நாள் படுத்திருப்பேன்? என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் பாரமாக!…ஆனால் என் மனத்திற்குள் ஏதோ சொல்கிறது. அதிக காலம் நான் இந்தப் பூவுலகில் இருக்க மாட்டேன் என்று…”
“சக்கரவர்த்தி! அரண்மனை வைத்தியர் தங்களுக்கு அபாயம் ஏதும் இல்லை என்று கூறுகிறார். சோதிடர்களும் அபாயம் இல்லையென்றே சொல்கிறார்கள். ஆனால் இந்தச் சிறு பிள்ளை தங்களிடம் ஏதோ அபாயத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்….”
“ஆ! இவன் காஞ்சி நகரிலிருந்து வந்த பிள்ளைதானே? ஆமாம், ஏதோ அபாயம் என்று சொன்னான்; எதைப் பற்றிச் சொன்னாய், தம்பி? என்னுடைய நிலையைப் பற்றியா?”
வல்லவரையனுடைய மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. ‘அபாய’த்தைப் பற்றித் தான் எச்சரித்ததாக ஒப்புக் கொண்டால் சந்தேகங்கள் ஏற்பட்டுத் தனக்கு அபாயம் நேருவது நிச்சயம். அந்த இக்கட்டிலிருந்து தப்ப வேண்டும். நல்லது; ஓர் உபாயம் செய்து பார்க்கலாம். இலக்கணத்தைத் துணையாகக் கொண்டு நெடிலைக் குறில் ஆக்கலாம்!
“சக்கரவர்த்திப் பெருமானே! அபாயத்தைப் பற்றிச் சொல்வதற்கு நான் யார்? நம் வீர தளபதி சின்னப் பழுவேட்டரையரும், அரண்மனை வைத்தியரும், சாவித்திரி அம்மனையொத்த மகாராணியும் இருக்கும் போது என்ன அபாயம் வந்துவிடும்? ‘அபயம்’ ‘அபயம்’ என்று தங்களிடம் நான் முறையிட்டுக் கொண்டேன். பழைய வாணர் குலத்துக்கு நான் ஒரு அறியா சிறுவன்தான் இப்போது பிரதிநிதியாக மிஞ்சியிருக்கிறேன். தங்கள் திருப்புதல்வர் மனம் மகிழும்படி சோழப் பேரரசுக்குத் தொண்டு புரிந்து வருகிறேன். எங்கள் பழைய பூர்வீக ராஜ்யத்தில் ஒரு சிறு பகுதியையாவது அடியேனுக்குத் திருப்பிக் கொடுக்க அருள்புரிய வேண்டும். அரசர்க்கரசே! அபயம்! அபயம்! இந்த அறியாச் சிறுவன் தங்கள் அபயம்!” என்று வல்லவரையன் மூச்சு விடாமல் படபடவென்று பேசி நிறுத்தினான்.
இதைக் கேட்ட பழுவேட்டரையரின் முகம் சுருங்கியது. சுந்தர சோழரின் முகம் மீண்டும் மலர்ந்தது. மகாராணியின் முகத்தில் கருணை ததும்பியது.
“இந்தப் பிள்ளை பிறந்தவுடனே சரஸ்வதி தேவி இவனுடைய நாவில் எழுதி விட்டாள் போலும்! இவனுடைய வாக்குவன்மை அதிசயமாயிருக்கிறது!” என்றாள் தேவி.
இதுதான் சமயம் என்று வந்தியத்தேவன், “தாயே! தாங்கள் எனக்காகப் பரிந்து ஒரு வார்த்தை சொல்லவேணும். நான் தாய் தந்தையற்ற அநாதை; வேறு ஆதரவு அற்றவன்.என்னுடைய வேண்டுகோளை நானேதான் வெளியிட்டாக வேண்டும். பக்தனுக்குப் பரிந்து பார்வதி தேவி பரமசிவனாரிடமும், லக்ஷ்மிதேவி மகாவிஷ்ணுவிடமும் பேசுவது போல் தாங்கள் எனக்காகப் பேச வேண்டும். எங்கள் பூர்வீக அரசில் ஒரு பத்துக் கிராமத்தை திரும்பக் கொடுத்தாலும் போதும் நான் மிகவும் திருப்தி அடைவேன்!” என்றான்.
இதையெல்லாம் கேட்கக் கேட்கச் சுந்தர சோழருக்கு ஒரே வியப்பும் மகிழ்ச்சியுமாயிருந்தது. அவர் சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்து, “தளபதி! இந்த இளைஞனை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. தேவியின் முகத்தைப் பார்த்தால், இவனை மூன்றாவது பிள்ளையாகச் சுவீகாரம் எடுத்துக் கொண்டுவிடலாமா என்றே யோசிப்பதாகத் தெரிகிறது. இவனுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கலாம் அல்லவா? அதில் ஒன்றும் கஷ்டம் இராதே? உமது அபிப்பிராயம் என்ன?” என்றார்.
“இதில் அடியேனுடைய அபிப்பிராயத்துக்கு இடம் என்ன இருக்கிறது? இளவரசர் கரிகாலரின் கருத்தையல்லவோ அறிய வேண்டும்?” என்றார் தஞ்சைக் கோட்டைத் தளபதி.
“சக்கரவர்த்தி! இளவரசரைக் கேட்டால், பழுவூர்த்தேவரைக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். பழுவூர்த்தேவரோ இளவரசரைக் கேட்க வேண்டும் என்கிறார். இரண்டு பேருக்கும் நடுவில் என் கோரிக்கை…”
“பிள்ளாய்! நீ கவலைப்படாதே! இரண்டு பேரையும் சேர்த்து வைத்துக் கொண்டே கேட்டு விடலாம்!” என்றார் சக்கரவர்த்தி.
பிறகு சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்து, “தளபதி! இளவரசனிடமிருந்து இந்தப் பிள்ளை ஓலை கொண்டு வந்தான். பழையபடி காஞ்சிக்கு நான் வரவேண்டும் என்றுதான் ஆதித்தன் ஓலையில் எழுதியிருக்கிறான்.அங்கே புதிதாய்ப் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். அதில் நான் சில நாளாவது தங்க வேண்டுமாம்!” என்றார்.
“தங்கள் சித்தம் எப்படியோ, அப்படியே செய்கிறது!” என்றார் கோட்டைத் தளபதி.
“ஆ! என்னுடைய சித்தம் எப்படியோ அப்படி நீர் நடத்துவீர். ஆனால் என் கால்கள் மறுக்கின்றன. காஞ்சிக்குப் பிரயாணம் செய்வது இயலாத காரியம். அரண்மனைப் பெண்டுகளைப் போல் பல்லக்கில் ஏறித் திரைபோட்டுக் கொண்டு யாத்திரை செய்வதென்பதை நினைத்தாலே எனக்கு அருவருப்பாயிருக்கிறது. ஆதித்த கரிகாலனை இங்கே வந்து விட்டுப் போகும்படிதான் மறு ஓலை எழுதிக் கொடுக்க வேண்டும்…”
“இளவரசர் இச்சமயம் காஞ்சியை விட்டு இங்கு வரலாமா? வடதிசையில் நம் பகைவர்கள் இன்னும் பலசாலிகளாக இருக்கிறார்களே!”
“பார்த்திபேந்திரனும் மலையமானும் அங்கிருந்து பார்த்துக் கொள்வார்கள். இளவரசன் இச்சமயம் இங்கே என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று என் உள்ளத்தில் ஏதோ சொல்கிறது. அது மட்டுமல்ல; ஈழ நாட்டுக்குச் சென்றிருக்கும் இளங்கோவையும் உடனே இங்கு வந்து சேரும்படி அழைப்பு அனுப்ப வேண்டும். இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்ய விரும்புகிறேன். அருள்மொழி இங்கு வரும்போது ஈழப் படைக்கு உணவு அனுப்புவது பற்றி உங்கள் ஆட்சேபத்தையும் அவனிடம் தெரிவிக்கலாம்…”
“சக்கரவர்த்தி! மன்னிக்க வேண்டும். ஈழத்துக்கு உணவு அனுப்புவதை நான் ஆட்சேபிக்கவில்லை. தனதான்யாதிகாரியும் ஆட்சேபிக்கவில்லை. சோழ நாட்டுக் குடிமக்கள் ஆட்சேபிக்கிறார்கள். சென்ற அறுவடையில் சோழ நாட்டில் விளைவு குறைந்து விட்டது. நம்முடைய மக்களுக்கே போதாமலிருக்கும்போது, இலங்கைக்குக் கப்பல் கப்பலாக அரிசி அனுப்புவதை மக்கள் ஆட்சேபிக்கிறார்கள்! தற்போது வாய்க்குள் முணுமுணுக்கிறார்கள். கொஞ்ச நாள் போனால், மக்களின் கூச்சல் பலமாகும். தங்கள் உடல்நிலையைப் பாதிக்கும்படி இந்த அரண்மனைக்குள்ளேயும் அவர்களுடைய கூச்சல் வந்து கேட்கும்!…”
“குடிமக்கள் ஆட்சேபிக்கிற காரியத்தைச் செய்ய அருள்மொழி ஒரு நாளும் விரும்ப மாட்டான். எல்லாவற்றுக்கும், அவன் ஒரு தடவை இங்கு வந்து விட்டுப் போகட்டும். பெரிய பழுவேட்டரையர் வந்ததும் இலங்கைக்கு ஆள் அனுப்புவது பற்றி முடிவு செய்யலாம்; அவர் எப்போது திரும்புகிறார்?”
“இன்று இரவு கட்டாயம் வந்து விடுவார்!”
“காஞ்சிக்கும் நாளைய தினம் ஓலை எழுதி அனுப்பலாம். இந்தப் பிள்ளையினிடமே அந்த ஓலையையும் கொடுத்தனுப்பலாம் அல்லவா?”
“இந்தச் சிறுவன் காஞ்சியிலிருந்து ஒரே மூச்சில் வந்திருக்கிறான். சில நாள் இவன் இங்கேயே தங்கி இளைப்பாறி விட்டுப் போகட்டும். வேறு ஆளிடம் ஓலையைக் கொடுத்தனுப்பலாம்.”
“அப்படியே செய்க. இளவரசன் வருகிற வரையிலே கூட இவன் இங்கேயே இருக்கலாம்!”
இச்சமயம் மலையமான் மகள் எழுந்து நிற்கவே, சின்னப் பழுவேட்டரையர், “இன்று அதிக நேரம் தங்களுக்குப் பேசும் சிரமம் கொடுத்து விட்டேன். மன்னிக்க வேணும். தேவி எச்சரிக்கை செய்யும் வரையில் நீண்டு விட்டது!” என்று சொன்னார்.
“தளபதி! இந்தப் பிள்ளை நம் விருந்தாளி. இவனுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுங்கள். சக்கரவர்த்திக்கு மட்டும் உடம்பு சரியாயிருந்தால், இவனைத் தமது அரண்மனையிலேயே இருக்கச் சொல்லியிருக்கலாம்!” என்றாள் மலையமான் மகள்.
“நான் கவனித்துக் கொள்கிறேன், தாயே! தங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நன்றாய்க் கவனித்துக் கொள்கிறேன்!” என்றார் சின்னப் பழுவேட்டரையர். அப்போது அவரை அறியாமலே அவருடைய ஒரு கை மீசையைத் தொட்டு முறுக்கிற்று.
Comments are closed here.