உனக்குள் நான்-33
3309
0
அத்தியாயம் – 33
மனைவியின் சேலையை நெஞ்சிலும் முகத்திலும் போட்டுக்கொண்டு மொட்டை மாடியில் மல்லாந்து படுத்திருந்த கார்முகிலன், குளிரை உணர்ந்து கண்விழித்தான். இரவு உணர்ச்சிவசப்பட்டு அழுதபடியே வெறும் தரையில் படுத்து நீண்ட நேரம் சிந்தனைகளுடன் போராடிக் கொண்டிருந்தவன், எப்போது உறங்கினான் என்பதே தெரியவில்லை. அதிகாலையில் இரைதேடி கூட்டிலிருந்து சிறகடிக்கும் பட்சிகளின் குரல்களில் நேரத்தை ஊகித்தபடி எழுந்தான். மனதில் அலைபாய்ந்து கொண்டிருந்த உணர்வுகள் ஓரளவு சமன்பட்டிருந்தன.
கையிலிருந்த சேலையைக் கொடியில் போட்டுவிட்டுப் படியிறங்கி வந்தான். வீடு அமைதியாக இருந்தது. இன்னும் யாரும் எழவில்லை என்பதைப் புரிந்துகொண்டு படுக்கையறைக்குச் சென்றான். மதுமதியும், குழந்தையும் இரவு பார்த்தது போலவே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். இவனும் கட்டிலின் மறுபக்கம் படுத்துக் கண்மூடினான். இரவெல்லாம் சரியாக உறங்காததன் பலனாகச் சற்றுநேரத்தில் அவனிடமிருந்து மெல்லிய குறட்டையொலி வெளிப்பட்டது.
“எந்திரிக்கலையா? டைமாச்சு பாருங்க… யாழி குட்டி… அப்பாவ எழுப்புடா…” – ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கார்முகிலனுக்கு யாரோ எங்கோ பேசுவது போல் தோன்றியது. இடையிடையே “ங்க்கூ… ப்பா… ங்க்கூ… ப்பா…” என்று அவன் செவியை வருடிய மழலை மொழி கூட எங்கோ கேட்பது போல் தான் தோன்றியது.
“ஏங்க… யாழி அப்பா… என்ன இன்னிக்கு இவ்வளவு நேரம் தூக்கம்…” – மதுமதி இப்போது கணவன் மீது கைவைத்து உலுக்கி எழுப்பினாள்.
“ப்ச்… என்ன..?” – சற்று எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டே எழுந்தவனுக்கு இமைகளைப் பிரிக்கவே முடியாத அளவுக்குக் கண்கள் எரிந்தன. சமாளித்துக்கொண்டு கண்களைக் கசக்கி ஒருவழியாகச் சரி செய்து கொண்டு மனைவியின் முகம் பார்த்தான். அப்போது தான் குளித்திருப்பாள் போல… புதிதாகப் பூத்த மலர் போல் மங்களகரமாக அவன் முன் நின்று கொண்டிருந்தவள் தனக்குத் தெரியாமலே, சற்று மட்டுப்பட்டிருந்த அவன் மனக்காயத்தைக் குத்திக் கிளப்பினாள்.
அழுததாலும், போதுமான உறக்கமின்மையாலும் கோவைப்பழம் போல் செக்கச்செவேல் என்று சிவந்திருந்த கணவனின் கண்களைப் பார்த்துத் திடுக்கிட்டவள், “என்னாச்சு? ஏன் கண்ணு இப்படிச் சிவந்திருக்கு?” என்றபடி அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.
“சூடு இல்லையே… என்ன பண்ணுது..?” – என்றபடி உள்ளார்ந்த அக்கறையுடன் கழுத்தில் கைவைத்துப் பார்த்தாள்.
‘எத்தினி நாளைக்கு இந்த அக்கறையெல்லாம்…’ – வேதனையுடன் முகம் சுளித்தவன் அவளுடைய கையை விலக்கி விட்டுவிட்டுக் குளியலறைக்குச் எழுந்து சென்றான்.
முகத்தில் அறைவாங்கியது போல் திகைத்து நின்றாள் மதுமதி. பொதுவாக அவள் தானாகக் கணவனிடம் நெருங்கவே மாட்டாள். ஆனால் இன்று அவனுடைய கண்கள் சிவந்திருந்த விதம் கண்டு என்னவோ ஏதோ என்று பயந்து போய் முகம் கழுத்தையெல்லாம் தொட்டுப் பார்த்தால், ஏதோ அருவருப்பை உணர்ந்தது போல் முகத்தைச் சுளித்துக்கொண்டு அவளை விலக்கிவிடுகிறானே…! நாசி விடைக்கக் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.
முகிலன் குளித்துவிட்டு வரும்பொழுது மதுமதி அறையில் இல்லை. உடை மாற்றி, கல்லூரிக்குச் செல்லத் தயாராகி கீழே இறங்கி வந்தான்.
“ம்மா… அவரைச் சாப்பிட வரச் சொல்லுங்க…” – டைனிங் ஹாலில் எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த மதுமதி… படியிறங்கி வந்த கணவனைக் கவனித்துவிட்டு, சோபாவில் அமர்ந்து குழந்தைக்குக் காலை உணவை ஊட்டிக் கொண்டிருந்த தாயிடம் கூறினாள்.
சட்டென்று நின்ற முகிலன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான். அவளும் அந்த நேரம் கணவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் என்பதால் இவருடைய பார்வையும் ஒரு நொடி பின்னிக் கொண்டன.
‘என்ன பார்வை இது…! அடிபட்ட குழந்தை மாதிரி…!’ – கணவனுடைய பார்வைக்கான காரணத்தை அவளால் சரியாகக் கணிக்க முடியவில்லையென்றாலும், அந்தப் பார்வையிலிருந்த வலி அவள் இதயத்திற்குள் ஊடுருவி மனதைப் பிசைந்தது. மேலே பேசவும் முடியாமல், அவனிடமிருந்து பார்வையை விலக்கவும் முடியாமல் சிலை போல் நின்றாள்.
மகள், கணவனை நேரடியாக அழைக்காமல் தன்னை ஏன் தூது விடுகிறாள் என்கிற குழப்பத்துடன் மகளையும் தம்பியையும் மாற்றி மாற்றிப் பார்த்த கௌசல்யா அவர்களுக்குள் ஏதோ சின்னப் பிணக்கு என்று நினைத்து நமுட்டுச்சிரிப்புடன், “இதோ முகிலனே வந்துட்டானே… கூப்பிட்டுச் சாப்பாட எடுத்து வையி…” என்றாள்.
மனைவியிடமிருந்து முதலில் பார்வையை விலக்கிக் கொண்ட முகிலன், மாடிப்படியிலிருந்து இறங்கி உணவுக்கூடத்திற்குள் செல்லாமல் வெளிப்பக்கம் நோக்கி நடந்தான்.
“சாப்பிடலயா..?” – அவன் இரவும் சரியாகச் சாப்பிடவில்லையே என்று தவிக்கும் உள்ளத்தை வெளிக்காட்டாமல் ஒட்டாதது போல் கேட்டாள் மதுமதி.
அவன் பதில் சொல்லாமல்… கார் சாவி, கல்லூரிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்கள் ஆகியவற்றை எடுத்தான். கௌசல்யா அவர்களுக்குள் பேசிக் கொள்ளட்டும் என்று நினைத்து அமைதியாகப் பேத்திக்கு உணவை ஊட்டுவதில் கவனம் செலுத்துவது போல் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
உணவுக்கூடத்திலிருந்து வெளியேறி கணவனிடம் நெருங்கிய மதுமதி, “சொல்றேனே… காது கேக்கலயா? சாப்பிட்டுட்டுக் கிளம்புங்க…” என்றாள் அமைதியான குரலிலேயே.
“டைமாச்சு…” என்றபடி ஷூவைக் காலில் மாட்டினான்.
அப்போது தான் நிலைமைத் தீவிரமடைவதை உணர்ந்த கௌசல்யா “முகிலா… என்னப்பா இது..? ஒரு அஞ்சு நிமிஷம் உக்கார்ந்து ரெண்டு இட்லி சாப்பிட்டுட்டுக் கிளம்பு… அதுக்குள்ள என்ன அவசரம்…” என்றாள்.
“இல்லக்கா… இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கு…” என்றவன், “வர்றேன்” – என்று பொதுவாகக் கூறிவிட்டு வெளியேறினான்.
மனைவியின் முகத்தைப் பார்த்தாலே அவனுடைய மனவேதனை அதிகமாகிறது என்பதால் அவளைத் தவிர்த்துவிட்டு இவன் தப்பித்து ஓடுகிறான். அதைப் புரிந்து கொள்ளாத மதுமதி, அவன் தன்னை உதாசீனப்படுத்துவதாக நினைத்து வெகுண்டாள். எப்பொழுதும் விடாக்கண்டனாக அவளைச் சுற்றி சுற்றி வரும் கணவன் இன்று பாராமுகம் காட்டுவதைத் தாங்கமுடியாமல் மனதிற்குள் கொந்தளித்தாள்.
‘மூஞ்ச திருப்பிக்கிட்டுப் போறீங்களா..? போங்களேன்… எனக்கென்ன வந்தது… மதி… கிதின்னு சொல்லிக்கிட்டு என்கிட்ட திரும்ப வருவீங்கள்ள… அப்போ வச்சுக்கறேன் உங்களுக்குக் கச்சேரி…’ – பொருமியபடி சமையலறைக்குள் நுழைந்து ‘டமார்… டுமார்…’ என்று பாத்திரங்களை உருட்டியபடி வேலை செய்தாள்.
இரண்டு மணிநேரம் கழிந்திருக்கும். வீரராகவன் அவருடைய அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். கௌசல்யா சமையலறையில் இருக்க ராதா அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். ஹாலில் குழந்தையுடன் அமர்ந்திருந்த மதுமதியின் மனம், காலையில் கணவன் நடந்து கொண்ட விதத்தையே நினைத்து பொருமிக் கொண்டிருந்தது. அந்த நேரம் தொலைபேசி ஒலித்தது. எழுந்து சென்று எடுத்து பேசினாள்.
“ஹலோ…”
ஒரு நொடி தயக்கத்திற்குப் பின், “சார் இருக்காங்களா…” என்ற பெண் குரல் ஒலித்தது.
ஏற்கனவே கோபத்தில் இருந்த மதுமதிக்கு, கலைவாணியின் குரலைக் கேட்டதும் பற்றிக்கொண்டு வந்தது. ஆனாலும் பொறுமையைக் கடைபிடித்து, “இல்ல…” என்றாள் ஒற்றை வார்த்தையாக.
கலைவாணிக்கு அவசியமாக முகிலனிடம் பேச வேண்டியிருந்தது. அவனுடைய கைப்பேசிக்கு அழைக்க முயன்றாள். ஆனால் அவன் வகுப்பில் இருந்ததால் கைப்பேசி அழைப்பிற்குப் பதிலளிக்கவில்லை. கால் டைவர்ட்டாகி வீட்டுத் தொலைபேசியோடு இணைக்கப்பட்டுவிட்டது. ஏக்கனவே ஒருமுறை முகிலன் வீட்டில் இருக்கும் பொழுதே இல்லை என்று மதுமதி மறுத்துவிட்டதாலும், கலைவாணி தொடர்பு கொண்டது முகிலனுடைய கைப்பேசிக்குத் தான் என்பதாலும், மதுமதியின் வார்த்தையை அவள் நம்பவில்லை.
கால் டைவர்ட்டானதை அறியாமல் மதுமதி, முகிலனின் கைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்த கலைவாணி, “இங்க பாருங்க… நான் உங்ககிட்டப் பேசறதுக்காக போன் பண்ணல… தயவு செஞ்சு போனை சார்கிட்ட கொடுங்க… நான் என் ப்ராஜெக்ட் சம்மந்தமா முக்கியமா பேசணும்…” என்றாள் பொறுமையிழந்து.
‘என்ன திமிர் இருந்தா என் வீட்டுக்கு போன் பண்ணிட்டு என்கிட்டயே இவ்வளவு அலட்சியமா பேசுவா…’ – மதுமதிக்கு ஆத்திரமாக வந்தது.
“உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா? இப்போ அவர் வீட்டுல இல்ல…” – வெடுக்கென்று பேசினாள்.
“எதுக்கு இப்படி சீப்பா பிஹேவ் பண்றீங்க? ப்ராஜெக்ட் சம்மந்தமா பேசணும்னு சொல்றேன். அப்போவும் போனை சார்கிட்ட குடுக்கமாட்டேன்னு அடம்பிடிக்கிறீங்க…”
“ப்ராஜெக்ட் சம்மந்தமா பேசணும்னா அவர் காலேஜ்ல இருக்கும்போது பேசிக்கோ…. இல்ல… லேப்புக்கு வரும்போது பேசிக்கோ. இப்படிச் சும்மா சும்மா போன் பண்ணி தொல்ல பண்ணாத…” கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன் கத்தரித்துப் பேசினாள். ஆனால் மதுமதியிடம் மூக்குடைபட்டுப் புறமுதுகிட்டு ஓட விரும்பாத கலைவாணி விடாமல் திருப்பிக் கொடுத்தாள்.
“நான் ஒண்ணும் தொல்ல பண்றதுக்காக போன் பண்ணலைங்க… நீங்கதான் என்னையும் சாரையும் எங்க வேலையைப் பார்க்க விடாம தொல்லை செய்றீங்க…”
அவ்வளவு தான்… எங்கிருந்து தான் மதுமதிக்கு அந்தக் கோபம் வந்ததோ… கண்மண் தெரியாத கோபம்… கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகள் சீற்றத்துடன் வெளிப்பட்டன.
“ஏய்… படிச்ச பொண்ணு தானே நீ..? நல்லவிதமா சொன்னாப் புரிஞ்சுக்க மாட்ட? ஸ்டூடண்ட் டீச்சர் ரிலேஷன்ஷிப் எல்லாம் காலேஜோட நிக்கணும். பிரண்ட்ஸ், ஸ்டூடண்ட்ஸ்னு நான் யாரையும் வீட்டுல அலோ பண்றதில்ல. நீ என்ன சின்னக் குழந்தையா? வளர்ந்த பொண்ணு தானே? ஓர் ஆணுக்கு போன் பண்ணும்போது அது அவனோட மனைவிக்குப் பிடிக்கலன்னு தெரிஞ்சா குறச்சுக்கணும்னு புரியாது? எதையுமே முகத்துல அடிக்கிற மாதிரி நேரடியா சொன்னாத்தான் புரிஞ்சுப்பியா..? இனி வீட்டுக்கெல்லாம் போன் பண்ற வேலை வச்சுக்காத… வை போனை…” – படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு டொக்கென்று ஒலிவாங்கியைத் தொலைபேசி கருவியின் மீது போட்ட மதுமதிக்குக் கோபத்தில் மேல்மூச்சு வாங்கியது.
Comments are closed here.