விடிவெள்ளி – 32
3006
1
அத்தியாயம் – 32
பண்டிகைக்கால சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும் பொருட்களை அள்ளிச் செல்வதற்கு கடைகளில் கூட்டம் அலைமோதியது. வேலையில் சேர்ந்த பத்தாவது நாள் முதலாளியிடம் முன்பணமாக பதினைந்தாயிரம் வாங்கிக் கொண்டு மனைவியுடன் கடைக்கு வந்திருந்தான் ஜீவன். மின்விசிறி, டிவி, கிரைண்டர், பிளாஸ்டிக் நாற்காலிகள், சுவர் கடிகாரம் என்று வீட்டுக்கு தேவையான பொருட்களை பார்த்து வாங்கினார்கள். பில் போடும் இடத்தில் நல்லக் கூட்டம். வரிசையில் நிற்கும் பொழுது, வாங்கிய சாமான்களின் விலையை கணக்கு செய்தாள் பவித்ரா.
‘இது ரெண்டாயிரத்து ஐநூறு… இதுக்கு இருபது பர்சண்ட் தள்ளுபடி… இதுக்கு பதினந்து… இதுக்கு பதினேழு… ஏழாயிரம்… எட்டாயிரத்தி ஐநூறு… பத்து… பதிமூணு… பதிமூணு எண்ணூறு…’
“ஏங்க… பதிமூனாயிரத்து எண்ணுத்தி ஐம்பது ரூபாய் எடுத்து வச்சுக்கோங்க…” என்றாள்.
அவளுடைய செய்கையை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவன். ‘இந்த பொருட்களின் விலையை கணக்குப் பண்ண கணினியைப் பயன்படுத்தினால் கூட… பொருட்களில் விலையை டைப் செய்ய சிறிது நேரம் எடுக்கும். இவள் என்னடாவென்றால் விரல்களை ஆட்டி ‘இது… அது…’ என்றுவிட்டு விலையை சொல்கிறாள். சும்மா குத்து மதிப்பா சொல்றாளோ…!’ அவனுடைய சிந்தனையை கலைத்தது பில் போடும் பெண்ணின் குரல்.
“பதிமூனாயிரத்து எண்ணுத்தி ஐம்பது ரூபாய் கொடுங்க சார்…” அவளுடைய துல்லியமான மனக்கணக்கில் ஜீவன் அசந்துவிட்டான். பள்ளிப் படிப்பை தாண்டாத இவளிடம் இப்படி ஒரு அறிவா…! என்று ஆச்சர்யமாக நினைத்தபடி பில் பணத்தை எடுத்து நீட்டினான்.
வீட்டிற்கு வரும் பொழுதே எலெக்ட்ரிஷியனை அழைத்துக் கொண்டு வந்து ஃபேனை மாட்டிவிட்டு மற்றப் பொருட்களில் ஆர்வம் இல்லாமல் புது மின்விசிறியின் காற்றை அனுபவிக்க காற்றாடிக்கு கீழே பாயைவிரித்து படுத்தான். பவித்ரா எல்லாப் பொருட்களையும் ஆர்வத்தோடு மீண்டும் ஒருமுறைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு பொருளையும் பிரிக்கும் பொழுது அவள் முகம் மகிழ்ச்சியில் மலர்வதை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான்.
‘கடையில என்னமா கணக்குப் போட்டா…! புத்திசாலியாத்தான் இருப்பாளோ…! ஹும்… என்ன புத்திசாலியா இருந்து என்ன பலன்… காலேஜ் வாசலக் கூட மிதிக்காதவளா போயிட்டாளே…!’ அவன் வருந்திக் கொண்டிருக்கும் பொழுதே பவித்ரா, நாற்காலியை சுவர் ஓரமாக இழுத்துப் போட்டு அதன் மீது ஏறி சுவற்றில் கடிகாரத்தை மாட்ட முயன்றாள். உயரம் எட்டவில்லை. எக்கி நுனிக்காலில் நின்று முயன்றாள். முடியவில்லை… மீண்டும் முயன்றாள்.
அவள் திரும்பத் திரும்ப முயற்சி செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவன், ‘இங்க ஒருத்தன் சிலை மாதிரி படுத்திருக்கேன்… என்கிட்ட சொல்லுதாப் பாரு…! விழுந்து கையக்கால ஓடச்சுக்கடி மகளே…!’ என்று நினைக்கும் பொழுதே, லேசாக மேலே ஏறியிருந்த நைட்டியில்… மெல்லிய வெள்ளிக் கொலுசு மாட்டிய அழகியப் பாதம் அவன் பார்வையில் பட்டது.
‘ஐயோ… இந்த கால் உடையனுமா…! அதுசரி… இவளுக்கென்ன பாதம் இவ்வளவு அழகா இருக்கு…!’ அவன் கண்கள் அந்த அழகில் சிக்கிக்கொள்ள அங்கிருந்து பார்வையை அகற்ற முடியாமல் தடுமாறினான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவள் நாற்காலியிலிருந்து கீழே இறங்கினாள். ‘ரொம்ம்ம்ப சோதிக்கிறாளே…!’ தலையை உலுக்கிக் கொண்டு பார்வையை வேறுபக்கம் திருப்பினான்.
மனம் மனைவியின் பக்கம் லேசாக சாய்வதும்… தேவையில்லாத முரட்டுப் பிடிவாதத்தால் அவள் பக்கம் அது முழுவதும் சரிந்துவிடாமல் இவன் இழுத்துப் பிடிப்பதுமாக மூன்று மாதம் கழிந்தது. பவித்ராவின் முயற்சியினாலும் சிக்கனத்தினாலும் அவர்களிடம் சிறு சேமிப்பும் மிஞ்சியிருந்தது.
###
மே மாதம் ஒன்பதாம் தேதி… பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. அன்றிலிருந்து பவித்ராவிற்கு ஒரே யோசனை… இதை எப்படி அவனிடம் சொல்வது…? சொன்னால் ஒப்புக்கொள்வானா…? எப்படி பேசி சம்மதிக்க வைப்பது…? என்றெல்லாம் சிந்தித்து ஒரு நல்ல தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
அன்று அவனுக்கு விடுமுறை… பால்கனியில் அமர்ந்து மாலைக் காபியை சுவைத்துக் கொண்டிருந்தவனுக்கு அருகில் தனக்கும் ஒரு நாற்காலியை எடுத்துச் சென்று போட்டுக் கொண்டு அமர்ந்தாள் பவித்ரா. ‘என்னடா இது…? கத்திரிக்கா நம்மப் பக்கத்துல வந்து உக்காருது…!’ அவன் நக்கலாக நினைத்தான்.
“காபி நல்லா இருந்துச்சா?”
“என்ன விஷயம்…?” அவன் அவளைத் திரும்பிப் பார்க்காமலேக் கேட்டான்.
“என்ன…?” அவள் விழித்தாள்.
“நீதான் சொல்லனும்…” அவளைத் திரும்பிப் பார்த்துக் கேட்டான்.
அவள் புன்னகையுடன் “ஆமாம்… சொல்லனும் தான்…” என்றாள்.
அவள் கண்களிலிருந்து விலகாத அவன் பார்வை ‘என்னன்னு சொல்லு…’ என்றது.
“பிளஸ் டூக்கு ரிசல்ட் வந்துடிச்சு…”
“ம்ம்ம்…”
“இன்னும் ரெண்டு மாசத்துல ஸ்டுடன்ஸ் எல்லாம் காலேஜ்ல சேர ஆரம்பிச்சிடுவாங்க…”
“அதுனால என்ன…?” அவன் புரியாமல் கேட்டான்.
“நான் கூட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் பிளஸ் டூ முடிச்சேன்…”
அவனுடைய புருவங்கள் சுருங்கின. அவள் அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.
“என்னை நீங்க படிக்க வைக்கிரிங்களா…? இன்ஜினியரிங்…”
‘என்னை நீங்க படிக்க வைக்கிரிங்களா…?’ என்று அவள் கேட்டபோது மின்னிய அவன் கண்களில் ‘இன்ஜினியரிங்’ என்றதும் அலட்சியம் குடிகொண்டது.
“இன்ஜினியரிங் படிக்க பிளஸ் டூ பாஸ் பண்ணினா மட்டும் போதாது…”
“நைன் எய்ட்டி நைன்…”
“என்ன ‘நைன் எய்ட்டி நைன்’…?”
“என் மார்க்…”
அவன் வாயடைத்துப் போனான். சிறிது நேரம் அவனுக்கு பேச்சே வரவில்லை. ஜஸ்ட் பாஸ் பண்ணவே அவன் எவ்வளவு பாடுபட்டு கடைசியில் தோற்றே போனான்… இவள் என்னடாவென்றால் தொளாயிரத்து என்பத்தி ஒன்பது மார்க் வாங்கினேன் என்கிறாளே…! அதுவும் புனிதா வாங்கிய மதிப்பெண்களை விட அதிகமாக சொல்கிறாளே…! ஒருவேளை பொய் சொல்கிறாளோ…! இல்லையே… இவள் முகத்தைப் பார்த்தாள் அப்படித் தோன்றவில்லையே…! அவன் குழம்பினான்.
“என்ன ஆச்சு…?”
“ஆங்… ம்ஹும்… ஒன்னும் இல்ல… நீ ஏன் மேலப் படிக்கல…?”
“அந்த வருஷம்தான் அம்மா… அப்பா… இப்ச்… அண்ணனுக்கு படிக்க வைக்க விருப்பம் இல்ல… சீக்கிரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்துடணும்ன்னு மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க…”
“ஓ…” படிப்பே வராத அவனுக்கு மேலே படிக்க எல்லா வசதியும் இருந்தது… ஆனால் நன்றாகப் படிக்கக் கூடிய இவளுக்கு அந்த வசதி இல்லாமல் போய்விட்டது பாவம்… அவன் மனம் அவளுக்காக இரங்கியது.
“என்ன முடிவு பண்ணியிருக்கிங்க…?”
“ரெண்டு வருஷம் கேப் விழுந்துடிச்சே… உன்னால படிக்க முடியுமா…?”
“படிக்க வைக்க உங்களால முடியுமா?”
அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. மனம் ஆனந்தத்தில் தத்தளித்தது. தன்னால்தான் படிக்க முடியவில்லை. தனக்கு வரும் மனைவியாவது படித்தவளாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை கொண்டிருந்தவனுக்கு பட்டம் பெறாத பவித்ரா மனைவியாக வந்தது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இப்போது அவளே படிக்கிறேன் என்று சொன்ன பிறகு அவனுடைய மகிழ்ச்சியை அளவிட்டு சொல்லவா முடியும்…?
மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் “உயிரைக் கொடுத்தாவது உன்னை படிக்க வச்சே தீருவேன்…” என்று உறுதியளித்தான்.
பவித்ரா பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுதினாள். ஓரளவு நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. வைராக்யமாக தாயிடமோ… தம்பியிடமோ… உதவிக் கேட்காமல் வெளியே கடன் வாங்கி அவளை தனியார் கல்லூரியில் சேர்த்தான். அவள் முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் பொழுது பவித்ராவை விட ஜீவன்தான் மகிழ்ச்சியில் மிதந்தான். வானத்தையே கைவசப்படுத்திவிட்டதாக கர்வம் கொண்டான்.
முதல் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தையை தாய் எப்படி பார்த்துப் பார்த்து தயார் செய்து அனுப்புவாளோ அதே அளவு கவனத்துடனும் அக்கறையுடனும் பரபரப்பாக வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தான்.
“புக் எடுத்துக்கோ… நோட் எடுத்துக்கோ… இந்தா இந்த பணத்தை வச்சுக்கோ… மறக்காம கேண்டீன்ல லஞ்ச் சாப்பிடு… இன்னிக்கு நானே உன்னை கூட்டிட்டு போய் விடறேன்… நாளையிலேருந்து காலேஜ் பஸ்ல போயிக்கலாம்…” என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கும் ஜீவன் அவளுக்கு புதிதாக இருந்தான்.
அவனுடைய அக்கரையிலும் ஆர்வத்திலும் அவளுக்கு முழுமையாக மகிழ முடியவில்லை. ‘பவித்ராவை புனிதாவாக மாற்றுவதில் உனக்கு இவ்வளவு இன்பமா…!’ அவள் மனம் வலித்தது. ஏனோ அழுகை தொண்டையை அடைத்தது. சமயலறைக்குச் சென்று தண்ணீர்க் குடித்து… தண்ணீரோடு சேர்ந்து அழுகையையும் விழுங்கிவிட்டு சிந்தனையை மாற்றினாள்.
‘அவன் விரும்பும் மனைவியாக அவனுக்கு முன் நிற்க வேண்டும் என்பது நாம் எடுத்த முடிவுதானே…! அவன் நம்மை மாற்ற நினைக்கவில்லையே…! பாதி கிணறைத் தாண்டிவிட்ட பிறகு இது என்ன தேவையில்லாத சிந்தனை… இனி படிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது…’
“என்ன இப்படியே நின்னுட்டு இருக்க…? டைம் ஆச்சு பாரு… கிளம்பு… கிளம்பு…” விரட்டினான்.
“நான் ரெடி… வாங்கப் போகலாம்…” அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
பவித்ரா கல்லூரியில் சேர்ந்த பிறகு ஜீவனுக்கு பணத்தின் தேவை அதிகமானது. உழைக்கும் நேரத்தை அதிகப் படுத்தினான். செலவைக் குறைத்தான். குடிப்பதை சுத்தமாக நிறுத்தினான். இருந்தும் சமாளிக்க முடியவில்லை.
கல்லூரிக் கட்டணம்… பேருந்துக் கட்டணம்… புத்தகம் வாங்கும் செலவு… உபகரணங்கள் வாங்கும் செலவு… வாங்கியிருந்த கடனுக்கு வட்டி… வீட்டு வாடகை… சாப்பாட்டு செலவு… அவனுக்கு மூச்சு முட்டி விழி பிதுங்கியது… கடுமையான நெருக்கடியில் சிக்கியிருந்தான். இருந்தாலும் அவளைப் படிக்க வைத்தே தீர வேண்டும் என்கிற உறுதி சிறிதும் குறையவில்லை. அவனுடைய மனஉறுதி பவித்ராவை ஆச்சர்யப்படுத்தியது. முதல் முறையாக தன் கணவனை நினைத்துப் பெருமைப் பட்டாள்.
வருமானத்தை அதிகப்படுத்தியாக வேண்டும் என்கிற வெறியில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்த ஜீவனுக்கு புதிதாக ஒரு வழி கிடைத்தது. அரபுநாட்டில் இருக்கும் நண்பன் ஒருவன் அவனுக்கு அங்கே டிரைவர் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக சொன்னான். மாதம் அறுபதாயிரம் சம்பளம்… வாரத்தில் ஆறு நாள் வேலை… நல்ல வேலை தான்… ஆனால் பவித்ராவை இங்கே தனியாக விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு போக வேண்டுமா…? ஜீவனுக்கு குழப்பமாக இருந்தது.
ஆனால் அடுத்ததுத்து வந்து கொண்டிருந்த பண நெருக்கடி அவனை அதிகம் சிந்திக்க விடவில்லை. பாஸ்போர்ட்… விசாவிற்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தான். விஷயத்தைக் கேள்விப்பட்ட பவித்ரா வியந்தாள்.
‘சம்பாதிக்க வேண்டும் என்கிற வேகமும்… நினைத்ததை முடித்தாக வேண்டும் என்கிற துடிப்பும் (பிடிவாதமும்) தான் அவனை இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது… இவ்வளவு நாளும் காட்டுக் குதிரைப் போல் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தவன் இப்போது கடிவாளம் கட்டப்பட்டப் பந்தயக் குதிரைப் போல் முறையாக ஒரு இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டான்…’ அவனுடைய மாற்றங்கள் அவளை குளிர்வித்தாலும் அவனைப் பிரிய வேண்டுமே என்கிற வேதனை மனதை அறுத்தது. ஆனால் வேறு வழியில்லை. இந்த துன்பத்தைக் கடந்தால் தான் வெற்றியை எட்ட முடியும் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டாள்.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
NICE