உனக்குள் நான்-34
3349
0
அத்தியாயம் – 34
மாலை ஐந்து மணியிருக்கும்… கடலைமாவுடன் தேவையான பொருட்கள் சேர்த்துக் கரைத்த பஜ்ஜி மாவுக்கரைசலில், மெலிதாகச் சீவிய வாழைக்காயை நனைத்து, சூடான எண்ணையில் போட்டு பொறித்து வேறு பாத்திரத்தில் வாரி வைத்துக் கொண்டிருந்தாள் மதுமதி. அவளுடைய கை தானாக வேலை செய்து கொண்டிருந்தாலும் கவனம் செய்யும் வேலையில் இல்லை.
‘இந்நேரம் போன் பண்ணி சொல்லியிருப்பா… வந்ததும் என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம அப்படியே குதிகுதின்னு குதிப்பார்… இன்னிக்கு மட்டும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி ஒரு வார்த்தைப் பேசட்டும்… ஒரு வழி பண்ணிடறேன்….’ – இன்று கலைவாணியிடம் தான் பேசிய விதத்திற்குக் கணவனிடம் என்ன எதிரொலி இருக்கும் என்று தானாகக் கற்பனை செய்துகொண்டு மனதிற்குள்ளேயே அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
வெளியே ஹாரன் ஒலியைத் தொடர்ந்து கார் வரும் சத்தம் கேட்டது. முகிலனின் வந்துவிட்டான் என்பதை உணர்ந்து கொண்டவள், அடுப்பை அணைத்துவிட்டு வெளியே வந்து கேட்டைத் திறந்துவிட்டாள். போர்டிகோவில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய முகிலனின் முகம் கடுமையான கோபத்தில் இருந்தது. அதுமட்டுமல்ல… அவனுடைய கேசம், ஆடையெல்லாம் கூட லேசாகக் கலைந்திருப்பது போல் தோன்றியது. அவன் காலணியைக் கழட்டிய விதத்திலும், மனைவியின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் வேகமாக உள்ளே நுழைந்த விதத்திலும் கூட ஒருவித சீற்றம் இருந்தது.
ஹாலுக்குள் நுழைந்தவன் கையிலிருந்த புத்தகம் கார் சாவி போன்றவற்றை சோபாவில் தூக்கிப் போட்டுவிட்டு நேராக டைனிங் ஹாலுக்குள் நுழைந்து ஃபிரிட்ஜிலிருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்து வாயில் சரித்தான். அவன் சரித்த வேகத்தில் தண்ணீர் சிந்தி சட்டையெல்லாம் ஈரமானதைக் கூட உணராமல் மடமடவென்று குடித்து முடித்துவிட்டு பாட்டிலைத் தூக்கி டைனிங் டேபிளிலேயே போட்டுவிட்டு, சட்டை பட்டனைக் கழட்டிக் கொண்டே ஹாலுக்கு வந்து மடிப்படிகளில் ஏறினான்.
சில நாட்களாக எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது அவன் தீவிரமாகக் கடைபிடித்து வரும் ஒரு நல்ல பழக்கம். எவ்வளவு சண்டை வந்தாலும் கோபப்பட்டாலும், மனைவிக்காகச் சிறிது நாட்களாக அவன் மேற்கொண்டிருந்த பழக்கங்களைக் கைவிடவே மாட்டான். ஆனால் இன்று..? அப்படி என்ன கோபம்..? அவளைத் திட்டியதற்காகவா? – மதுமதிக்கும் ஆத்திரமாக வந்தது. ஆனால் வெறி பிடித்தது போலிருக்கும் கணவன் முகத்தைப் பார்த்தாலே உள்ளே குளிர் பிறக்கிறது. இதில் அவனிடம் கேள்வி கேட்கும் தைரியம் எங்கிருந்து வரும் அவளுக்கு. அமைதியாக ஒதுங்கி நின்று அவனுடைய நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
மாடிக்குச் சென்ற முகிலன் கிட்டத்தட்ட இருபது நிமிடம் கழித்தும் கீழே இறங்கி வரவில்லை. ‘வாயைத் திறந்தால் அவனை ஒரு வழி பண்ணிவிட வேண்டும்’ என்று காத்துக் கொண்டிருந்த மதுமதியோ, வாயைத் திறக்காமலேயே தன்னை ஒரு வழி பண்ணிவிட்டு மாடிக்குச் சென்றுவிட்ட கணவனிடம் நெருங்கவே பயந்து போய் நின்றாள். அவளுக்குள் இப்போது வேறுவிதமான தவிப்பு உண்டாகியிருந்தது.
‘நேத்து நைட்டிலிருந்து ஒழுங்காவே சாப்பிடலயே… மதியம் கூட கேண்டீன்ல சாப்பிட்டானோ என்னவோ தெரியலை…!’ – மனம் அடித்துக்கொண்டது.
நடப்பது நடக்கட்டும் என்று நினைத்து மெல்ல படியேறி மாடிக்குச் சென்றாள். மூடியிருந்த கதவைத் தள்ளி திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
கட்டிலில் குறுக்காக மல்லாந்து படுத்திருந்த கார்முகிலனின் கால்கள் கட்டிலுக்கு வெளியே மடங்கி தரையில் ஊன்றியிருந்தன. குளித்திருப்பான் போலும்… அடர்த்தியான முடி சரியாகக் காயாமல் ஈரமாக இருப்பது தெரிந்தது. வீட்டிற்கு வந்தபோது இருந்த கோபம் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் மூடியிருந்த இமைகளுக்குள்ளே உருளும் விழிகள்… புருவ மத்தியில் முடிச்சு… மனதில் ஏதோ குழப்பம்… தீவிர சிந்தனை… இது எல்லாவற்றையும் மீறி முகத்தில் ஒருவித சோகம்… ஏன்..? கலைவாணியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காகவா…! அல்லது உடம்புக்கு ஏதும் செய்கிறதோ…! – குழப்பமும் கவலையும் அவளைத் தொற்றிக் கொண்டன.
“ஏதாவது சாப்பிடறீங்களா..?” – மெல்லிய குரலில் கேட்டாள்.
அவன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். அவன் பார்வையில் கோபமில்லை… அவளைக் குற்றம் சாட்டவில்லை… மாறாக எதையோ கேட்க வேண்டும் போல் ஒரு தவிப்பு… ஏதோ ஒரு வலி… மதுமதிக்கு வயிற்றைப் பிசைந்தது. நெஞ்சுக்குள் ஏதோ ஊடுருவுவது போல் மனதை வலித்தது. அவன் வாயைத் திறந்து ஏதாவது பேசினால் பரவாயில்லை என்றிருந்தது.
“எ… என்ன… ஏன் இப்படியே படுத்துறீங்க? உடம்புக்கு ஏதும்..?” – தயக்கத்தில் அவளுக்குத் தொடர்ந்து பேச முடியவில்லை. குற்ற உணர்வு குறுகுறுத்தது. ‘ஒரு மாணவிகிட்ட அப்படிப் பேசியிருக்கக்கூடாதோ…’ – மனசாட்சி சுட்டது.
அவளுடைய சங்கடத்தை அவன் புரிந்து கொண்டான் போலும். சட்டென்று எழுந்தமர்ந்து சகஜமாகப் பேச முயன்றான்.
“யாழி எங்க?”
“அம்மா கோவிலுக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க…”
“ஓஹ்… அத்தான்..?”
“தூங்கறாங்க…”
“ம்ம்ம்…”
“தலை ஈரமா இருக்குப் போலருக்கே… சளி பிடிச்சிட போகுது…” – டவலை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அதைக் கையில் வாங்கித் தலையைத் துடைத்துக் கொண்டான். ஆனால் சரியாகத் துடைக்கவில்லை. அவன் மனம் வேறு எங்கோ இருப்பது போல் தோன்றியது.
“இப்படித் தொடச்சா எப்படிக் காயும்… குடுங்க…” அவள் வாங்கித் துவட்டிவிட்டாள். ஏனோ இருவர் மனமும் நெகிழ்ந்திருந்தது.
“மதியம் சாப்பிட்டீங்களா?” – – கணவனின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
ஒரு நொடி கடுமையாக மாறிய அவன் முகப்பாவம் இமைக்கும் நேரத்தில் இயல்புக்குத் திரும்பியது. மதுமதிக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ‘ஒரு செகெண்ட்ல என்னாச்சு இவனுக்கு…’ – புரியாமல் விழித்தவள் “என்ன..?” என்று வாய்விட்டும் கேட்டாள்.
“என்ன கேட்ட?”
“மதியம் சாப்பிட்டீங்களான்னு கேட்டேன்…”
“இல்ல…”
“சாப்பிடலயா!” – சுருக்கென்று வலித்தது மதுமதிக்கு. ‘மூணுவேளை பட்டினியா கிடந்திருக்கானே…! உடம்பு என்னத்துக்கு ஆகும்…’ – அவன்மீது அவள் கொண்டுள்ள பாசம் அவளை வாட்டியது.
“எழுந்து வாங்க சாப்பிடலாம்…” – குரலில் ஒருவித அவசரத்துடன் அழைத்தாள்.
“இல்ல… கொஞ்சநேரம் ஆகட்டும்… ஒண்ணா நைட்டே சாப்பிட்டுக்கறேன்… இப்போ ஒரு கப் பால் எடுத்துட்டு வா…”
“பொதுவாகவே அவன் நேரம் தவறிய நேரத்தில் சாப்பிட மாட்டான் என்பதால் பாலாவது குடிக்கட்டும் என்று நினைத்து அவசரமாகப் படியிறங்கி கீழே ஓடினாள். சமையலறைக்குள் நுழைந்து ஒரு டம்ளரில் பால் கலந்து எடுத்துக்கொண்டு, சின்னத் தட்டில் பஜ்ஜியோடு சட்னியையும் சேர்த்து எடுத்துக்கொண்டு திரும்பினாள். முகிலன் சமையலறை வாசலில் நின்று கொண்டிருந்தான்.
“இங்கேயே வந்துட்டீங்களா..? சரி வாங்க…” – கணவனை உணவு மேஜையில் அமரச் சொல்லி பரிமாறினாள்.
அவன் சிற்றுண்டியை ஒரு வாய் உண்பதற்குள் அழைப்புமணி ஒலித்தது. மதுமதி எட்டிப் பார்த்தாள். யாரோ இரண்டு ஆண்கள் கேட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களின் வாட்டசாட்டமான உருவமும், ஒட்ட வெட்டிய கிராப்பும் அவள் மனதிற்குள் பீதியைக் கிளப்பியது. அப்போதுதான் அவர்கள் அணிந்திருந்த பேண்டைக் கவனித்தாள். காக்கி நிற பேண்ட்… ஆம்… வந்திருப்பவர்களில் ஒருவர் அவளுக்கு அறிமுகமானவர் தான். தேனி காவல்நிலையத்தில் ஒரு கைதியை தாறுமாறாகத் தாக்கி சித்ரவதைச் செய்து, அவளைக் குலைநடுங்க வைத்த புண்ணியாத்மா… எஸ்.ஐ குமரகுரு.
மதுமதிக்குப் பயத்தில் நா வறண்டு உடல் நடுங்கியது. வெளிறிய முகத்துடன் கண்களில் கலவரத்தோடு திகைத்துப் போய் நிற்கும் மனைவியைக் குழப்பத்துடன் பார்த்த முகிலன் “என்னாச்சு? யார் வந்திருக்கறது..?” என்றான்.
உலர்ந்துவிட்ட தொண்டையை உமிழ்நீரால் நனைத்துக்கொண்டு அவள் பேச முயற்சிப்பதற்குள் வெளியே நின்றவர்கள் பொறுமையிழந்து மேலும் இரண்டு முறை பலமாக அழைப்புமணியை அழுத்தவும், “யாரதுன்னு கேக்கறேன்ல…” – சற்று அதட்டலாகக் கேட்டபடி எழுந்து கை கழுவ சென்றான்.
“ப்… போ… போலீஸ்….” – தட்டுத்தடுமாறி பேசினாள்.
“போலீசா…! ஓ…” – முதலில் ஒரு நொடி ஆச்சர்யமாகக் கேட்டவன், அடுத்த நொடியே அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
பதட்டம் என்பது சிறிதுமில்லாமல், கேட் சாவியை எடுத்துச் சென்று… ஏதோ காத்திருந்த நண்பனுக்குக் கதவைத் திறந்து விடுவது போல் மிகவும் நிதானமாக கேட்டை திறந்து அவர்களை உள்ளே அழைத்தான்.
“வாங்க சார்… என்ன விஷயம்…”
“இங்க ‘கார்முகிலன்’ங்கறது நீங்க தானே?”
“ஆமாம்…”
“சரி கிளம்புங்க…”
மதுமதி திடுக்கிட்டாள். “கிளம்பறதா…! எங்க..?” அதுவரை பயத்துடன் கணவனின் முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்றவள், கணவனை அழைக்கிறார்களே என்கிற தவிப்பில் பயத்தையெல்லாம் உதறிவிட்டு ஓர் எட்டு முன்னே வந்து கேட்டாள்.
“ஸ்டேஷனுக்குத் தான்…” – போலீஸ்காரர் ஒருவர் பதில் கூறினார்.
“ஸ்டே…! என்… என்ன சார் சொல்றீங்க? அவரை எதுக்கு ஸ்டேஷனுக்குக் கூப்பிடறீங்க?” கணவனின் கரத்தை இறுக்கமாக பற்றிப் பின்னுக்கு இழுத்தபடி அவரிடம் கேட்டாள்.
மனைவியின் பதட்டமும்… அவளுடைய தைரியமான பேச்சும் முகிலன் முகத்தில் ஒரு கணம் மென்மையைக் கொண்டுவந்தது. அவளுடைய கையை அழுத்திப்பிடித்து “ஒண்ணுமில்ல… எதுக்கு டென்ஷன் ஆகற..?” என்றான்.
“ம்ம்ம்… ம்ம்ம்… கிளம்புங்க சார்… டைமாச்சு…” அவசரப்படுத்தினார் இன்னொரு காவலர்.
“ஐயோ…! என்ன சார்..? எதுக்கு அவர கூப்பிடறீங்க? ஏங்க… என்னங்க இது..?” – பதறினாள்.
“அதெல்லாம் ஸ்டேஷன்ல வந்து பேசிக்கங்கம்மா… நீங்க வாங்க சார்…” – முரட்டுத்தனமாக முகிலனின் கையைப் பிடித்தார்.
“ப்ச்… கையை விடுங்க…” – முகிலன் முகச்சுளிப்புடன் அவரிடமிருந்து கையை உருவி கொள்ள, வந்திருந்த காவலர்களின் முகம் பயங்கரமாக மாறியது.
“என்ன..? எங்ககிட்டயே உங்களோட சண்டியர் தனத்தையெல்லாம் காட்டறீங்க..? மரியாதையா கூப்பிட்டா வர மாட்டீங்களோ..?”
போலீஸ்காரர்களின் வார்த்தை வலுப்பதைக் கண்ட மதுமதி நடுங்கிப் போனாள். “ஏங்க… கொஞ்சம் பொறுமையா இருங்க… சாரி சார்… மன்னிச்சிடுங்க… அவரை எதுக்காகக் கூப்பிடறீங்கன்னு மட்டும் சொல்லுங்க சார்… ப்ளீஸ்… இந்த ஊர்ல ரெண்டு மூணு கார்முகிலன் இருக்காங்க சார்…” – பதைபதைப்புடன் கெஞ்சினாள்.
“மதி… அவங்க என்னைத் தேடித்தான் வந்திருக்காங்க… நீ உள்ள போ…” – முகிலன் மனைவியை அதட்டி அடக்க முயன்றான். ஆனால் அவன் கூறிய விஷயத்தால் அவளுடைய பதட்டமும் அழுகையும் பலமடங்கு அதிகமானது. இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில் தறிகெட்டுத் துடித்தது ஓடியது. எகிறிய ரத்த அழுத்தத்தில் மயக்கம் வராதது தான் குறை.
“ஐயோ… என்னங்க சொல்றீங்க? உங்களை எதுக்கு..? கடவுளே…! முருகா…! சார்… அவரைக் கூட்டிட்டுப் போய்டாதீங்க சார்… ப்ளீஸ்… என்னங்க ஆச்சு..? காரை யார் மேலயாவது இடிச்சிட்டீங்களா..?” – தவியாய் தவித்தவளின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது.
மனைவியின் கண்ணீரை அவனுக்குச் அவனால் சகிக்க முடியவில்லை. இப்போதைக்கு அவளிடம் பேசி எதையும் புரிய வைக்க முடியாது என்பதால் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… லாயர்கிட்டப் பேசிட்டு வந்திடுறேன்…” என்றான் முறைப்புடன் நின்று கொண்டிருந்த காவலர்களிடம்.
“ஏன்… பிரச்சனைப் பண்றதுக்கு முன்னாடியே லாயர்க்கு கால் பண்ணியிருக்க வேண்டியது தானே? காசு இருக்கிற திமிர்ல ஆட வேண்டியது… அப்புறம் கருப்பு கோட்டுக்காரனை சப்போர்ட்டுக்குக் கூட்டிக்க வேண்டியது. எங்களையெல்லாம் பார்த்தா கேனப்பயலுங்க மாதிரி இருக்கா… கெளம்புங்க சார் முதல்ல…” – முன்பை விட அதிக வேகத்துடன் முகிலனின் கையை முரட்டுத்தனமாகப் பிடித்து இழுத்தார்.
அவமானத்தில் அவனுடைய முகம் இறுகிக் கருத்தது. கோபத்தில் கண்கள் சிவந்தன. ஆனாலும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். இப்போது அவனுடைய எதிர்ப்பைத் தெரிவித்தால் வீட்டிலேயே ரசாபாசம் ஆகிவிடும். மதுமதி அதைத் தாங்கவே மாட்டாள்… அதோடு உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் வீரராகவனின் உடல் நிலைக்கும் ஆபத்தாகிவிடும் என்பதால் அமைதியாக அவர்களுக்கு ஒத்துழைத்தான்.
தன்னுடைய கம்பீரத்தை இழந்துவிட்டு, இன்னொருவனின் பிடிக்குக் கட்டுப்பட்டு அவன் இழுத்த இழுப்பிற்கு அவனின் பின்னாலேயே செல்லும் கணவனைக் கண்ட மதுமதிக்கு இதயம் வலித்தது. எந்தச் சூழ்நிலையிலும் நிமிர்ந்து நிற்கும் தன் அன்புக் கணவனை… இப்படியொரு நிலையில் தான் காண நேரிடும் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை. அந்தக் காட்சியை அவளால் பார்க்கவே முடியவில்லை…
“ஐயோ… விடுங்க… விடுங்க சார் அவரை…” – காவலர்களை அதட்ட முயன்றாள். ஆனால் அழுகையில் வலுவிழந்த குரல் பிசிறடித்தது. கணவனின் இன்னொரு கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்துத் தன்னோடு நிறுத்திக் கொள்ளப் போராடினாள். ஆனால் இரண்டு ஆண்களின் பலத்திற்கு அவளால் ஈடுகொடுக்க முடியுமா என்ன..? அவர்களோடு சேர்ந்து இவளும் வாசலுக்குச் சென்று சேர்ந்தாள்.
“போலீஸ்காரங்க எல்லாரும் இப்படி அராஜகம் பண்றீங்களே…! இதெல்லாம் நியாயமே இல்ல… விடுங்க… விடுங்கன்னு சொல்றேன்ல… ப்ளீஸ் விட்டுடுங்க… கடவுளே… அவரை விட்டுடுங்க சார்… ப்ளீஸ்… உங்களைக் கெஞ்சி… ஐயோ… என்னங்க… போகாதீங்க…” – கோபத்தில் ஆரம்பித்துக் கெஞ்சலில் வந்து நின்றாள்.
வாசலில் காம்பௌண்ட் மறைவில் நின்ற வெள்ளை நிற அம்பாசிடரில் ஏறுவதற்கு முன் தயங்கி நின்ற முகிலன்… “தைரியமா இரு… தர்மா சாருக்கு போன் பண்ணு… அத்தானுக்கு எதுவும் தெரிய வேணாம்…” என்று கூறிவிட்டுக் காரில் ஏறினான்.
“இல்ல… நீங்க… வேணாம்… இருங்க… ஐயோ… ஏறாதீங்க… ஏறாதீங்க… நம்ம கார்ல… ப்ளீஸ்… போ…கா…தீங்…க…” – தவித்துப் போனாள். அந்த அபலை பெண்ணின் கதறலை மதிக்காமல் சீறிப் பாய்ந்தது அந்த கார். முடிந்து விட்டது… அவள் கண்ணெதிரிலேயே அவளுடைய கணவனை இழுத்துச் சென்றுவிட்டார்கள். ஐயோ…! அடிப்பார்களோ…! மரியாதைக் குறைவாக நடத்துவார்களோ…! அடி வயிற்றிலிருந்து உருண்டு வந்த பயப் பந்து நெஞ்சையடைத்தது. செத்துவிடலாம் போன்ற வேதனையில் மனம் துடித்தது…
‘கடவுளே…! நான் என்ன பாவம் பண்ணினேன்… இப்படிச் சோதிக்கிறாயே…’ தரையில் சரிந்து ஓவென்று கதறியழுதாள். தைரியம் சொல்லக்கூட ஆளின்றி, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று விளங்காமல் தடுமாறிப்போய் இருந்தவளை, வீட்டிற்குள்ளிருந்து அலறிய தொலைபேசி அழைத்தது. விழுந்தடித்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.
Comments are closed here.