Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 33

அத்தியாயம் – 33

ஜீவன் இரவில் நிம்மதியாக உறங்கி வெகு நாட்களாகிவிட்டது. என்றைக்கு அவனுடைய வெளிநாட்டு பயணம் உறுதியானதோ அன்றிலிருந்து தூக்கத்தை தொலைத்துவிட்டான். அம்மா… தம்பி… பாட்டி… புனிதா… யாரைப் பற்றியும் மனதில் கூட நினைக்கவில்லை அவன். உறங்கும் போதும் விழித்திருக்கும் போதும் நொடி பொழுதும் விலகாமல் ஒரே ஒரு முகம்தான் அவன் முழு மனதையும் ஆக்கிரமித்திருந்தது. பவித்ரா…!!!

 

‘இவளைப் பிரிந்து எப்படி மூன்றரை ஆண்டுகள் இருக்கப் போகிறேன்…!’ அவனுடைய தைரியம் குலைந்தது. அழ வேண்டும் போல் தோன்றுகிறது… ஆனால் ஆண்பிள்ளை அழக் கூடாதே(!). உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு நடமாடினான்.

 

எப்போது அவள் அவனுக்குள் இவ்வளவு ஆழமாக ஊடுருவினாள் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவனுடைய மனதில் அவள் மட்டும்தான் நிறைந்திருக்கிறாள் என்பதை அவன் தெளிவாக உணர்ந்துவிட்டான்.

 

இப்போதும் அவளிடம் முன்பு அவன் எதிர்பார்த்த அளவு படிப்போ அழகோ இல்லை தான்… ஆனால் இன்றைய நிலையில் அவனுக்கு பவித்ராவை விட உலகில் வேறு எவளும் அழகியில்லை… அவளை விட வேறு எவரும் புத்திசாலியில்லை… ‘பவி…!!! பவி…!!! பவி…!!!’ அவன் மனம் புலம்பி தவித்தது.

 

வெளிநாடு செல்வதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே அவன் கால் டாக்ஸி ஓட்டும் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்தான். அவனுக்கு அவளோடு நேரம் செலவழிக்க ஆசை. பவித்ராவிற்கும் அதே ஆசை தான் என்றாலும் விடுப்பு எடுத்தால் இவன் என்ன சொல்வானோ என்கிற பயத்தில் தினமும் கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள். இருவரும் தங்கள் மனதில் உள்ளதை பகிர்ந்துக் கொள்ளாமல் தங்களை தாங்களே வேதனைப்படுத்திக் கொண்டார்கள்.

 

வெள்ளிக் கிழமை மாலை பவித்ரா கல்லூரியிலிருந்து வரும் பொழுது ஜீவனோடு சிவகாமியும் பாட்டியும் வீட்டில் இருந்தார்கள். ஜீவன் ஊருக்கு கிளம்புவதை அறிந்து அவனோடு ஒருவாரம் சேர்ந்து இருக்கலாம் என்று நினைத்து வந்திருந்தார்கள். அவர்களுடைய வருகையை சரியாக பயன்படுத்தி பவித்ராவை விடுப்பு எடுக்க வைக்க வேண்டும் என்று நினைத்தான் அவன்.

 

“வாங்கத்த… பாட்டி… எப்ப வந்திங்க? நல்லா இருக்கிங்களா…?” பவித்ரா உள்ளே வரும் பொழுதே இன்முகமாக மாமியாரையும் பாட்டியையும் வரவேற்றபடி வந்தாள்.

 

“காலையிலேயே வந்துட்டோம்மா…” என்று பாட்டி பதில் சொல்ல… சிவகாமி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பவித்ராவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

 

பவித்ரா புத்தகப்பையை உள்ளே கொண்டுசென்று வைத்துவிட்டு முகம் கை கால் கழுவி… உடைமாற்றி கொண்டு வந்து “டீ சாப்பிட்ரிங்களா… இல்ல காபி போடட்டுமா அத்த…” என்று சிவகாமியிடம் பேச்சுக் கொடுத்தாள்.

 

“அதெல்லாம் எதுவும் வேண்டாம்… உன் வேலையை பாரு…” சுள்ளென்று வந்து விழுந்தது சிவகாமியின் வார்த்தைகள்.

 

பவித்ராவின் முகம் கூம்பிவிட்டது. “நாங்க சாப்பிட்டுவிட்டோம்மா… நீ போய் பால் எடுத்துக்க…”

 

“சரி பாட்டி…” பாட்டியிடம் பதில் சொல்லிவிட்டு “நீங்க சாப்ட்டிங்களா…?” என்று டிவி பார்த்துக் கொண்டிருந்த ஜீவனிடம் கேட்டாள்.

 

“தலை வலிக்கற மாதிரி இருக்கு… மொட்டை மாடிக்கு போறேன்… ஒரு கப் டீ கொண்டுவா…” என்றுவிட்டு மாடிக்கு சென்றான்.

 

பவித்ரா தனக்கும் அவனுக்கும் இரண்டு கோப்பைகளில் டீ எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள். தொலைவானத்தை வெறித்தபடி அவளுக்கு முதுகுகாட்டி நின்றான் ஜீவன். கம்பீரமான அவன் உருவம் பவித்ராவின் மனதை தொட்டது. அடுத்த வாரத்திலிருந்து இவனை கண்ணால் கூட பார்க்கமுடியாது என்கிற எண்ணம் மனதில் மின்னல் போல் பாய… அடி வயிற்றிலிருந்து சொல்லில் வடிக்க முடியாததொரு உணர்வு பொங்கி எழுந்து தொண்டையை அடைத்தது. விட்டால் ஓவென்று கதறி அழுதுவிடுவாள்… ஆனால் அழக் கூடாது என்கிற பிடிவாதத்தில் தொன்டையில் அடைத்த உணர்வை விழுங்கிவிட்டு ஆழமாக மூச்செடுத்து தன்னை சமாளித்துக் கொண்டு அவனிடம் நெருங்கினாள்.

 

“இந்தாங்க…” அவள் டீயை நீட்டினாள்.

 

அவன் திரும்பிப் பார்த்து அவள் கையிலிருந்த டம்ளரை வாங்கிக் கொண்டான்.

 

“காலேஜ் எப்படி போகுது…?”

 

“ஒன்னும் பிரச்சனை இல்ல…”

 

“அம்மாவும் பாட்டியும் வீட்ல இருக்காங்க… ஒரு வாரம் லீவ் எடுத்துக்கோ… நான் ஊருக்கு கிளம்பினதும் காலேஜ்க்கு போனா போதும்… லீவ் கிடைக்கும்ல்ல…?”

 

“ம்ம்ம்… எடுத்துக்கலாம்…” மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் மனதை வெளியேக் காட்டாமல் அடக்கி வாசித்தாள். அவனுக்கும் மகிழ்ச்சிதான்.

 

பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு கைபேசியை எடுத்து அவளிடம் நீட்டினான். “உனக்காக வாங்கினேன். வச்சுக்கோ… நான் ஊருக்கு போன பிறகு உன்கிட்ட பேச பயன்படும்…”

 

“தேங்க்ஸ்…” அவள் வாங்கிக் கொண்டாள்.

 

“உனக்கு துணையா பாட்டியை இங்க இருக்க சொல்லியிருக்கேன்… ”

 

“சரி…”

 

“இங்க இருக்க கஷ்ட்டமா இருந்தா அம்மாகூட வேணுன்னா போய் இருந்துக்கோ…”

 

“இல்ல வேண்டாம்… இங்கதான் எனக்கு பிடிக்குது…”

 

“நீயே பார்த்து பார்த்து செட் பண்ணின வீடாச்சே பிடிக்காம போகுமா…?” புன்னகையுடன் சொன்னான். அவள் முகத்திலும் புன்னகை அரும்பியது. அந்த மெல்லியப் புன்னகை அவனை என்னவோ செய்தது.

 

‘உன்னை தனியா விட்டுட்டு போக மனசே வரலன்னு சொல்லு… சொல்லு…’ என்று அவன் மனம் அவனை உந்தியது. ஏனோ அவனால் அவளிடம் அதை சொல்லவே முடியவில்லை.

 

‘நீங்க வெளிநாட்டுக்கு போறது எனக்கு கஷ்டமா இருக்கு… அடிக்கடி போன் பேசுங்க…’ என்று சொல்ல அவள் நா துடித்தது. அவளாலும் முடியவில்லை. இருவருக்குள்ளும் பிரிவுத் துயரும்… அதை வெளிப்படுத்தி சொல்ல முடியாத தயக்கமும் முட்டி மோதிக் கொண்டிருந்தது.

 

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் வானத்தையும் தரையையும் பார்த்தபடி டீயை குடித்து முடித்தார்கள். அந்த சூழ்நிலையின் கனத்தை தாங்க முடியாமல் அவன் குடித்துவிட்டு வைத்த டம்ளரை கையில் எடுத்துக் கொண்டு கீழே செல்ல எத்தனித்தாள் பவித்ரா.

 

“எங்க போற…?” ஓடும் மேகங்களிலிருந்து பார்வையை விலக்காமல் அவளை தடுத்தான். அவள் பிரேக் போட்டது போல் நின்றாள். ‘இன்னும் சிறிது நேரம் இங்கு இருந்துவிட்டு போயேன்…’ என்று கேட்காமல் கேட்ட… அவனுடைய குரலில் இழையோடிய ஏக்கம் அவளை அசைய விடாமல் தடுத்தது.

 

சமாளித்துக் கொண்டு மெல்ல சொன்னாள், “டிஃபன் பண்ணனும்…”

 

அவன் பதில் பேசாமல் வானத்தை பாத்தபடியே நின்றான்.

 

“நா….ன் போ… போகட்டுமா…?” தயக்கத்துடன் கேட்டவள் ‘என்ன ஆச்சு நமக்கு… எதுக்கு எல்லாத்துக்கும் இப்படி தடுமார்றோம்…’ என்று உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

 

அவன் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான். பல்லில் சிக்கிக் கொண்டு துன்பப்படும் கீழுதட்டின் அழகில்… அவன் மனம் சிக்கிக் கொண்டு துன்பப்பட்டது. இத்தனை நாட்களும் இல்லாமல்… இன்று ஏனோ அவள் இதழ்களின் அழகு அவனை இம்சித்தது. அவனுடைய பார்வை வித்தியாசத்தை உணர்ந்து கொண்டவள் முகம் சிவக்க தலைக் கவிழ்ந்தாள். அவளுடைய நாணம் கூட அவனை மிக மோசமாக ஈர்த்தது. எதிலிருந்தோ தப்பிக்க விரும்புகிறவன் போல் “சரி போ…” என்று பட்டென்று சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டான்.

 

பவித்ரா கீழே சென்றபிறகு ஒரு மணிநேரம் கழித்து மாடியிலிருந்து  இறங்கி வந்த ஜீவனை தாயின் புலம்பல்கள் வரவேற்றன.

“ரெண்டு பிள்ளைகளை பெத்தேன்… ஒருத்தன் தான் வெளிநாட்டுக்கு போய்ட்டான்… இன்னொருத்தனாவது கூட இருப்பான்னு நெனச்சேன். அவனையும் என்கிட்டயிருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்துட்ட… அதுமட்டும் போதாதுன்னு இப்போ துபாய்க்கு வேற அனுப்ப துணிஞ்சிட்ட… அங்க போய் என் பிள்ளை என்னவெல்லாம் கஷ்டப் படப் போறானோ…! முருகா…!!!”

 

“புலம்பாம இரு சிவகாமி…” பாட்டி அதட்டினார்கள்.

 

“நீ சும்மா இரும்மா… உனக்கு என்ன தெரியும்… இவ படிக்கிறதுக்கு என் பிள்ளை கஷ்ட்டப்படனுமா… இவ அண்ணன்கிட்ட சொல்லிப் படிக்க வைக்க சொல்ல வேண்டியது தானே…!”

 

“அத்த… உங்க பிள்ளையை நான் வெளிநாட்டுக்கு போகச் சொல்லல…”

 

“ஆஹா… நீ சொல்லாமத்தான் என் பிள்ளை இந்த புராக் கூட்டுக்கு குடி வந்தானா…? நீ சொல்லாமத்தான் டிரைவர் வேலைக்குப் போனானா? நீ சொல்லாமத்தான் உன்னை காலேஜ்ல சேர்த்தானா…? நீ சொல்லாமத்தான் ஊரை சுத்தி கடன் வாங்கினானா? எல்லாத்தையும் செஞ்சுட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி பேசினா நான் நம்பிடுவேனா…?”

 

“என் மகன் என்னோடு இருக்கும் போது சம்பாதிக்கலன்னாலும் கடன் கிடன்னு எதுவும் வாங்காம நிம்மதியா இருந்தான்… இப்போ அவன் நிம்மதியை கெடுத்து ஊரை விட்டு துரத்துறியே… உனக்கே இது ஞாயமா இருக்கா…?” சிவகாமி பவித்ராவிடம் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டிருக்கும் பொழுதுதான் ஜீவன் வீட்டிக்குள் நுழைந்தான்.

 

பேரன் உள்ளே நுழைவதை கவனிக்காமல் பாட்டி சங்கடத்துடன் மகளை “அட… விடு சிவகாமி…” என்று சமாதானம் செய்ய முயன்றார்கள்.

 

பவித்ரா நினைத்தால் ஒரு நொடியில் சிவகாமியை வாயடைக்கச் செய்துவிட முடியும். ஆனால் அவளால் அதை செய்ய முடியவில்லை. மாமியாரின் பக்கம் இருக்கும் ஞாயம் அவளுக்குப் புரிந்தது. தாயிடமிருந்து மகனைப் பிரித்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சி மேலெழுந்தது. ஆனால் இவர்களுடைய பாசத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் அவளுடைய வாழ்க்கை என்னாவது…? சுயநலமாக சிந்திக்கிறோமே…! அவளுக்கு தெளிவு கிடைக்கவில்லை…  உதட்டைக் கடித்தபடி… தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

 

பவித்ராவை அந்த மாதிரி நிலையில் ஜீவனால் பார்க்க முடியவில்லை. “ம்மா… என்ன சத்தம் போட்டுக்கிட்டு இருக்க…?” என்று தாயை அதட்டினான்.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா… உனக்கு சாப்பாடு எடுத்து வைக்க சொல்லவா…?” பாட்டி பேச்சை மாற்றினார்கள்.

 

அவன் பாட்டியை முறைத்துவிட்டு மனைவியிடம் திரும்பி, “நீ எதுக்கு இப்படி நின்னுகிட்டு இருக்க…? உள்ளப் போ…” என்று அதட்டி அவளை உள்ளே அனுப்பினான். பிறகு

 

“எதுக்கும்மா அவகிட்ட கத்துற? என் மனைவி என்ன… நீ வச்ச ஆளா..? நிக்க வச்சு கேள்வி கேக்கற? உனக்கு ஏதாவது தெரியனும்ன்னா உன் மகன்கிட்ட கேளு… அதவிட்டுட்டு பவித்ராவ எதாவது சொன்ன… அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்…” என்று அடி குரலில் உறுமிவிட்டு உள்ளே சென்றான்.

 

சிவகாமியும் பாட்டியும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘இவன் எப்போதிலிருந்து இப்படி ஒரு பெண்டாட்டி தாசனாக மாறினான்…!’ என்கிற செய்தியை பிரதிபலித்தது அவர்களுடைய பார்வை.




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Nice

You cannot copy content of this page