உனக்குள் நான்-35
3425
0
அத்தியாயம் – 35
“ஹ… ஹலோ…” – பதட்டமான குரலில் பேசினாள் மதுமதி.
“ஹலோ… யாரு மதுவா?” – தர்மராஜின் குரல்.
“தாத்தா….” – அழுகுரலில் அழைத்தாள்.
“ம்மா… முகிலன் வந்தான்னா உடனே அவனை அங்கிருந்து கிளம்பி இங்க வரச்சொல்லு… ஒரு நிமிஷம் கூட அங்க இருக்க வேண்டாம்…” – மதுமதியின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணராமல் அவர் போக்கில் பேசினார்.
“தா…த்…தா… அவர கூட்டிட்டுப் போய்ட்டாங்க தாத்தா…” – தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்ட வார்த்தைகள்… அலறலான அழுகையோடு அடித்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தன.
“கூட்டிட்டுப் போயிட்டாங்களா! யாரு..?” – அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது அவர் குரலில்.
“போலீஸ்காரங்க தாத்தா… ரெண்டு பேரு…”
“போச்சு… நான் எது நடந்துடக் கூடாதுன்னு நெனச்சேனோ அது நடந்தே முடிஞ்சிட்டுது… இனி ஒரு மண்ணும் செய்ய முடியாது…”
“ஐயையோ… என்ன தாத்தா சொல்றீங்க? ஒண்ணும் செய்ய முடியாதா? ஏன் தாத்தா? என்ன பிரச்சனை? எதுக்கு அவரைக் கூட்டிட்டுப் போறாங்க… சொல்லுங்க தாத்தா… ப்ளீஸ் தாத்தா…” – அழுகையும் தவிப்புமாகப் பேசினாள்.
“ஆமாம்… இப்ப உக்காந்து அழுவு… இந்த அறிவெல்லாம் ஸ்டூடண்ட்கிட்ட அதிகப்பிரசங்கித்தனமா பேசுறதுக்கு முன்னாடியே இருந்திருக்கும்… பொம்பள புள்ளைக்கு அப்படி என்ன வாய்த்துடுக்கு…” – எரிச்சலுடன் கடுகடுத்தார்.
‘ஸ்டூடண்டா…!’ – தர்மராஜின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடி போல் அவள் செவிகளில் இறங்கி இதயத்தை உலுக்கியது. “என்…என்ன தாத்தா..? கலைவாணியா?” – திகைப்பிலிருந்து மீள முடியாதவளுக்குக் கோர்வையாகப் பேச முடியாமல் குரல் கரகரத்தது.
“என்ன கலைவாணியான்னு கேள்வி கேக்குற..? நீ அந்தப் பொண்ணுகிட்ட தானே வழக்குப் பண்ணின? புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும் வருஷத்துக்கு ஒரு தடவ போலீஸ் கோர்ட்டுன்னு அலையலன்னா தூக்கம் வராதா? ஒருத்தர் மாத்தி ஒருத்தர் எதையாவது பண்ணிக்கிட்டே இருங்க…” – பயங்கரக் கோபத்துடன் கத்தினார்.
அவருடைய கோபம் அவளைப் பாதிக்கவில்லை. ஆனால் அவர் கூறிய விஷயம்… சாதாரண அதிரிச்சியல்ல… பேரதிர்ச்சி… நம்ப முடியாத அதிர்ச்சி. அவளுடைய இதயமே ஒரு நொடி நின்று பின் துடித்தது. ‘செத்துட்டாளோ…!’ – அதற்குமேல் சிந்திக்கக் கூட முடியவில்லை. அதிர்ச்சியில் கண்கள் கூட வறண்டுவிட்டன.
“நீ…லவேணி மாதிரி… செ… செத்துப் போயிட்டாளா தாத்தா..? ஏதும் எழுதி…” – மதுமதிக்கு உடலோடும் மனதோடும் சேர்ந்து குரலும் நடுங்கியது. உலர்ந்துவிட்ட நாவைச் சுழட்டி பேச கூட முடியாமல் தடுமாறினாள்.
“அது வேற ஆசையா உனக்கு..?” – சுருக்கென்று கேட்டுவிட்டார். அதுவரை அவள் முயன்று விழுங்கிக் கொண்டிருந்த அழுகை… அதிர்ச்சியில் உள்ளுக்குள்ளேயே உறைந்து நின்ற அழுகை… அவருடைய சூடான கேள்வியில் கட்டவிழ்த்துக் கொண்டது. அந்தக் கேள்வியைத் தாங்கமுடியாத மதுமதி வெடித்து அழுதாள். அந்த நிமிடம் வரை கோபத்தின் பிடியில் சிக்கியிருந்தவர், விம்மி வெடித்து அழும் பேத்தியின் நிலை பொறுக்காமல் மனம் இளகினார். “அட… நீ எதுக்கு அழுவுற? பேசாம இருன்னு சொல்றேன்ல… மது… மதும்மா…” – சமாதானம் செய்ய முயன்றார்.
“தாத்தா… நா… நான் தான் தாத்தா தப்புப் பண்ணினேன்… மாமாவ கூட்டிட்டுப் போயிட்டாங்களே! தாத்தா… அந்த ரெண்டு போலீஸ்காரங்களும் கோபமா… ரொம்பக் கோபமா இருந்தாங்க தாத்தா… அவர் கையைப் பிடிச்சு வம்படியா இழுத்துக்கிட்டுப் போனாங்க… ஐ…யோ… கடவுளே…! நான் பண்ணின தப்புக்கு…” – பெரிய கேவலுடன் “அடி…ச்சிடு…வா…ங்களோ…!” – என்கிற வார்த்தையும் வந்து விழுந்தது. அதை நினைக்கும் பொழுதே அவளுக்குத் தாங்க முடியவில்லை. நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.
“வம்படியா இழுத்துக்கிட்டுப் போனாங்களா? எதுக்கு..?” – தர்மராஜும் பதட்டத்துடன் கேட்டார். இது ஒன்றும் அவ்வளவு பெரிய கேஸ் இல்லையே என்கிற ஆதங்கம் அவருக்கு.
“முறச்சுட்டாரு தாத்தா…”
“முறச்சானா? போலீஸ்காரன போயி எதுக்கு இந்தப் பய முறைச்சான்? எல்லாத்துலயும் வில்லங்கத்தையே இழுத்து வையிங்க…” – மீண்டும் அவருடைய இரத்த அழுத்தம் உயர்ந்தது.
“ஐயோ… தாத்தா… எதுவும் சொல்லாதீங்களேன்… ப்ளீஸ்… மாமாவ எப்…படியாவது வெளியே கூட்டிட்டு வந்துடுங்க… அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்கவே முடியாது தாத்தா… அப்புறம் நான்… என்னால வாழவே முடியாது தாத்தா… செத்தே போய்டுவேன்… ப்ளீஸ் தாத்தா… ப்ளீஸ்…”
மதுமதியின் பேச்சில் அவர் பயந்துவிட்டார். ஏற்கனவே மனம் பலவீனமாக இருந்து இப்பொழு தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறியிருக்கிறாள். இதில் இந்தப் பிரச்சனை வேறு வந்து தொலைத்துவிட்டது. மனம் தாங்காமல் ஏதேனும் செய்து கொண்டாள் என்றால் என்ன செய்வது…!
“ப்ச்… என்ன ஆயிடுச்சு இப்ப..? எதுக்குக் கண்டபடி உளர்ற நீ..? அவன இங்க ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வர்றதுக்குள்ள, நான் லாயரோட ஸ்டேஷனுக்குப் போயிடுவேன்… நீ மனச போட்டு அலட்டிக்காம இரு… ராகவனுக்கு இதெல்லாம் சொல்லி அவருக்கும் ஆபத்த இழுத்து வச்சுடாத… நான் போனை வைக்கிறேன்…” – அதட்டலாகவே மதுமதிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போனை அணைத்தார்.
அவருடைய தைரியமான பேச்சு அவளுக்குச் சற்று இதமாக இருந்தாலும் முழுமையாக ஆறுதலடைய முடியவில்லை. குழந்தை, தந்தை, தாய் யாரைப் பற்றியும் யோசிக்காமல் கையில் கிடைத்த ஒரு சுடிதாரை எடுத்து மாட்டிக்கொண்டு கார் சாவியை எடுத்தாள். மாலை நேரத்து வேலைகளைக் கவனிப்பதற்காக ராதா வீட்டிற்குள் நுழைந்தாள்.
“என்னமா ஆச்சு? எதுக்கு இப்படி முகமெல்லாம் சிவந்து வீங்கியிருக்கு?”
“ராதாம்மா… நான் அவசரமா தேனிக்குக் கிளம்பறேன். அம்மா வந்தா சொல்லுங்க… அப்பா தூங்கறாங்க… பார்த்துக்கோங்க…” – பேசிக்கொண்டே வெளியே வந்து காலணியை அணிந்து கொண்டு வெளியே வந்து காரை எடுத்தாள்.
###
அந்த அரசு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் கையில் மாவுக்கட்டுப் போட்டுக்கொண்டு ஒரு கட்டிலில் அமர்ந்திருந்தான் கதிரவன். அவனுக்குப் பக்கத்துக் கட்டிலில் அவனுடைய நண்பன் ஒருவர் தலையில் கட்டுடன் படுத்திருந்தான். அருகில் நின்று கொண்டிருந்த கலைவாணியின் தாய் மேகலையின் முகம் கோபத்தில் கடுகடுத்துக் கொண்டிருந்தது.
“ம்மா… எதுக்குமா என்னையே முறைச்சு பார்த்துட்டு இருக்க?”
“முறைக்காம என்னடா செய்வாங்க? அறிவுக்கெட்டவனே… நீதான் பயலுங்களோட சேர்ந்து குடிச்சிட்டுக் கெட்டு ஒழியறேன்னு நெனச்சேன்.. இப்போ அவளோட ப்ராஜெக்ட் வொர்க்கையும் கெடுத்துவுட்டுட்டியேடா…”
“நான் என்னம்மா செஞ்சேன்… நீதான் பார்த்தல்ல… அன்னிக்கு உன் பொண்ணு எப்படி அழுதான்னு… அதான் என்னடான்னு அவன்ட்ட போயி கேக்கலாம்னு போனேன்…”
“ஆமாம்… அவ அழுதாளாம்… இவன் கேக்கப் போனானாம்… அவதான் தொட்டதுக்கெல்லாம் கண்ணுல பைப்பத் திறந்து விடுவாளே… அவள நம்பிதான் நீ அந்த ஆளுகிட்டப் போயி அடி வாங்கிகிட்டு வந்தியா?” – மேகலையின் பேச்சு கதிரவனின் தன்மானத்தைத் தொட்டுப் பார்த்தது. அவனுக்குள் கோபம் கிளர்ந்தெழுந்தது.
“ம்மா… சும்மா தொண தொணக்காதம்மா… தலைய வலிக்குது..” – என்று தாயிடம் கடுப்படித்தவன் பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த நண்பனை முறைத்தான்.
‘எல்லாம் இவனால வந்தது… அவன் எடத்துக்குப் போறோம்… அதுவும் தண்ணி போட்டுட்டுப் போறோம்… கூட ரெண்டு பேரச் சேர்த்துக் கூட்டிட்டுப் போவோம்டான்னு சொன்னதுக்கு… கேட்டானா? நான் ஒருத்தன் நூறு பேருக்குச் சமம்டான்னு சொல்லிக் கூட்டிட்டுப் போயி அந்தத் தடிமாட்டுப் பயல்ட்ட அடிவாங்க வச்சுட்டானே…! பரதேசி…! அடிச்ச சரக்கு இன்னமும் தெளியல போலருக்கு… எப்படிப் படுத்திருக்கான் பாரு… வீணாப் போனவன்… இதுவேற… மொறச்சு மொறச்சு பார்த்துகிட்டு… பெத்தப்புள்ள அடிவாங்கிக் கைய ஒடச்சுக்கிட்டு வந்துட்டானேன்னு கொஞ்சமாவது கவலையிருக்கா… கல்லு மாதிரி நிக்கிறதப் பாரு…’ – தாய், நண்பன், பகைவன் என்கிற பாரபட்சமின்றி, சமச்சீர் முறையில் அனைவருக்கும் அர்சனைகளை வாரி வழங்கினான்.
“எதுக்குடா அப்படியே உக்காந்திருக்க… படு…” – மேகலை மகனை அதட்டினாள்.
“ப்ச்… ம்மா… எவ்ளோ நேரமா இங்க இருக்கறது… வேற ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போம்மா… இல்லன்னா வீட்டுக்காவது போய்டுவோம் வா… ஒரே ஸ்மெல்… தலைவலி தாங்கமுடியல…”
“கண்ட கருமத்த குடிக்கும் போது இதெல்லாம் தெரியாது… ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போதுதான் தெரியும். கொஞ்சநேரம் பேசாம படு… நான் கேண்டீனுக்குப் போயி உனக்கு ஒரு காபி வாங்கிட்டு வந்திடுறேன்… சூடாக் குடிச்சா தலைவலிக்கு நல்லாருக்கும்…” – மேகலை கேண்டீனை நோக்கி நடந்தாள். கேண்டீனை நெருங்கும் பொழுது எங்கிருந்தோ வந்த பெண்ணொருத்தி “என்ன மேகலா… இந்தப் பக்கம் வந்திருக்க..?” என்று அவளோடு இணைந்து நடந்தாள்.
“வா தாமர… நல்லா இருக்கியா..? கதிரை இங்க சேர்த்திருக்கோம்… அதான்…” – மனம் சோர்ந்திருக்கும் நேரத்தில் எதிர்பாராமல் நெருங்கிய தோழியைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி தெரிந்தது மேகலையின் குரலில்.
“என்ன பண்ணுது கதிருக்கு? அதுவும் இங்க கொண்டு வந்து சேர்த்திருக்க..?”
“அதை ஏன் கேக்குற தாமர… போலீஸ் கேஸாகிப் போயிட்டு… அதான் இங்க சேர்த்திருக்கோம்… அநேகமா நாளைக்கு வெளி ஹாஸ்பிட்டலுக்குப் போயிடுவோம்…”
“போலீஸ் கேஸா! என்னாச்சு?”
“கலைவாணிய பத்திதான் உனக்குத் தெரியுமே…! அவ அப்பாவுக்கு ரொம்பச் செல்லம்… சிரிச்சுக்கிட்டே இருப்பா… சின்னதா யாராவது ஏதாவது சொல்லிட்டாலும் தாங்க மாட்டா… அழுதுடுவா…”
“குழந்த மனசு அவளுக்கு… எதையும் தாங்க மாட்டா…”
“ஆமாம்… குழந்தை மாதிரிதான்… ஆனா குழந்தைங்க சண்டையில பெரியவங்க தலையிட்டா என்ன ஆகும்… அதுதான் எங்க வீட்டுலேயும் நடந்திருக்கு…”
“என்ன சொல்ற மேகலை?”
“என் பொண்ணுக்குக் கடைசி வருஷம் ப்ராஜெக்ட் பண்றதுக்கு ஒரு வாத்தியாரு ஹெல்ப் பண்றாரு. அவரு குடும்பத்துல யாருக்கோ உடம்பு சரியில்லன்னு ப்ராஜெக்ட்டைப் பாதியிலேயே வேற ஒரு வாத்தியாருக்கு மாத்தி விட்டுட்டாரு. என் மகளுக்கு… புதுசா வந்த வாத்தியாரு சொல்லிக் கொடுக்கறது பிடிக்கல. அவ அந்த முதல் வாத்தியாருக்கு அப்பப்ப போன் பண்ணி சந்தேகம் கேட்டுக்குவா… அது அந்த ஆளோட பொண்டாட்டிக்குப் புடிக்கல போலருக்கு. அவ என் பொண்ண இங்கெல்லாம் போன் பண்ணுற வேலை வச்சுக்காதன்னு மூஞ்சில அடிக்கிற மாதிரி பேசிட்டா…”
“ஐயையோ… படிக்கிற பொண்ண அந்த மாதிரி பேசலாமா? என்ன பொம்பள அவ…”
“அவ பொம்பளையெல்லாம் இல்ல… சின்னப்பொண்ணு தான்… அவ பேசிட்டான்னு இவ ‘ஓ’- ன்னு அழ ஆரம்பிச்சுட்டா… அவ அப்பாவும் கதிரும் ரொம்ப டென்ஷனாயிட்டாங்க”
“ஐயையோ… அப்புறம்…”
“அப்புறம் என்ன… என் வீட்டுக்காரர், ‘தர்மராஜ்’னு ஒருத்தருக்கு போன் போட்டுத் திட்டிக்கிட்டு இருக்கும்போது, கதிரு அவன் ஃப்ரண்ட் ஒருத்தனுக்கு போனைப் போட்டு வரச்சொல்லி வண்டிய எடுத்துக்கிட்டு கெளம்பிட்டான்…”
“எங்க..?”
“அந்த வாத்தியாருகிட்டச் சண்ட போடத்தான்…”
“அடடா… இவனுக்கு எதுக்கு இந்த வேலை… அதான் அவனோட அப்பா பேசிக்கிட்டு இருந்தாருல்ல… அவரு பேசிக்கட்டும்னு இவன் அமைதியா இருக்க வேண்டியது தானே?”
“நாம சொல்றதையெல்லாம் எங்க கேக்கறாங்க… போனவன் நிதானத்தோட போயி ஞாயமா பேசியிருந்தாலும் பரவால்ல…. அதை விட்டுட்டுப் பயலுங்கள கூட்டு சேர்த்துக்கிட்டுத் தண்ணிய போட்டுட்டுப் போயி ரகளை பண்ணியிருக்கான். அந்த வாத்திப் பய நாலு சாத்துச் சாத்தி கையை ஒடச்சு அனுப்பிட்டான்…”
“அடக் கடவுளே… இப்போ கதிருக்கு எப்படி இருக்கு… நான் வந்து பார்க்கறேன்… எந்த ஃப்ளோர்ல இருக்கான்…”
“ஜெனரல் வார்டு தான்… கதிரோட அப்பா போலீஸ் கேஸ் குடுத்துட்டாரு… அதான் நாளைக்கு வரைக்கும் இங்க இருக்கற மாதிரி இருக்கும்னு நினைக்கறேன்…” – பேசியபடியே கேண்டீனுக்கு வந்தவர்கள் ஆளுக்கொரு காபியைக் குடித்துவிட்டு மீண்டும் வார்டுக்கு வந்தார்கள்.
Comments are closed here.