குற்றப்பரிகாரம் – 23
1661
0
அத்தியாயம் – 23
கல்லூரி வாசலை ஜீப் கடந்ததுமே, வெடிக்கும் பலூன் போல பட்டென அழத் தொடங்கினான் ஜலால். அவன் ஆயுசில், குலுங்கி அழுது அவனே பார்த்ததில்லை. சே., எத்தனை பெரிய அவமானம். இனிமேல் யார் தன்னை மதிப்பார்கள். காலேஜ் வாசலில், தான் சொன்னபடி நோட்டீஸ் கொடுத்த அந்த பிஎஸ்சி ஜூனியர் கூட நம்மைப் பாத்து சிரிப்பானே! நினைக்க நினைக்க அழுகை இன்னும் பீறிட்டு வந்தது.
“தம்பி நீங்க வேணும்னா, இறங்கிக்கங்க…. வீட்டுக்கு போய் நேரா ஸ்டேஷனுக்கு வாங்க. வராம போய்டா வம்பாயிடும். இல்லன்னா சொல்லமாட்டேன்”
“நோஓஓஓ… வேண்டாம் நேர ஸ்டேஷனுக்கே போங்க” மொத்த கோபத்தையும் சேர்த்து கத்தினான்.
எத்தனை பெரிய அவமானம். ஒவ்வொரு வருஷமும் சார் ரெண்டு சீட்டு, சார் ரெண்டு சீட்டுனு காலேஜ் ஓசி சீட்டுக்கு நம்ம வீட்டு கதவைத் தட்டும் போலீசெல்லாம், நமக்கு இரக்கப் படற மாதிரி வச்சுட்டானே, அந்த அருண்…அவன
பல்லை நற நறவென தேய்க்காமல் உள்ளுக்குள் மொத்த கோபத்தையும் அடக்கினான்.
அப்பாவின் பணம், செல்வாக்கு இரண்டு மணி நேரத்தில் அவனை வெளியே கொண்டு வந்தது. நேரே வீட்டிற்கு சென்றவன், அப்பாவைப் பார்க்க வெளிநாட்டு நபர்கள் காத்திருப்பதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை.
காச்மூச்சென்று கத்தினான். அவனை அடக்காமல் அப்பனும், அருணை நினைத்து மகனுடன் சேர்ந்து கத்தினான்.
வத்திருந்தவர்கள் எல்லோரும் போய்விட்டனர். கறுப்பன் ஒருவனைத் தவிர…. அந்த அயல்நாட்டுக் கறுப்பன் அட்ஷர சுத்தமாய் தமிழ் பேசுவான் எனக் கனவிலும் ஜலால் எதிர்பார்க்கவில்லை.
“என்ன ஜலால், இப்படி பாக்கற. நமக்கு காலேஜ் படிப்பே நீ படிச்ச காலேஜ்தான். உங்கப்பா, உங்க டீன், நான் எல்லோருமே பிரண்ட்ஸ்தான். இப்ப என்ன ஆகிப்போச்சு. ஏன் அப்பனும் பிள்ளையும் ஊருக்கே தெரியற மாதிரி இப்படிக் கத்துறீங்க”
ஜலால் எல்லாவற்றையும் சொன்னான்., “அவனைப் பழி வாங்கனும்பா”னு அப்பாவை துணைக்கு அழைத்தான் ஜலால்.
“அவ்ளோதானே! விடு! இன்னும் அரை மணி நேரத்துல அவன் உடம்பு கூவத்ல மிதக்கும்” என்றபடி போனை எடுத்தார் ஜலாலின் அப்பா.
“ஓ… நோ நோ… வைங்க! வைங்க சார்., அட வைங்க சொல்றேன். தம்பி சொன்னதை வச்சு பாக்கும்போது, பிரச்சனை கொஞ்சம் பெருசு. அதுவுமில்லாம காலேஜ் முழுதும் தெரிஞ்சுருச்சு. அதனால…
” அதனால அவன சும்மாவிட்டுடலாம்னு சொல்றீங்களா! இத்தனை வருஷம் கட்டிக்காத்த கௌரவம் (!) போச்சு” ஜலாலின் அப்பா மூஞ்சியை கடுகடுப்புடன் வைத்தபடி கேட்டார்..
“ஓ….இப்படி அவசரப்பட்டா எப்படி… அவனுக்கு இப்ப எது ஒன்னு ஆனாலும்., தம்பிக்குதான் ப்ராப்ளமாகும்”
“அப்பா வாட் ஹி சேஸ் இஸ் கரெக்ட். அவனை விட்டுரலாம். அவன் யாருக்காக வக்காலத்து வாங்கினானோ அந்த பொண்ண துவம்சம் பண்ணிடலாம். நான் சொன்ன மாதிரியே ஆஸிட்ல குளிப்பாட்டிடலாம்”
“தம்பி, இதுக்கு அப்பா சொன்னதே பரவாயில்ல! இது லேடீஸ் மேட்டர். அதுவும் அதே காலேஜ் பொண்ணு. அவன் லெக்சர் அடிச்சதா சொன்னியே! அப்ப இந்த பாய்ண்டைத் தான் அவன் தொட்டான். உங்க உடம்புல ஆஸிட் படற மாதிரி யோசிச்சுப் பாருங்கனு சொன்னதும் தான் எல்லோரும் சேந்து போலீஸ்கு போனதே! இப்போ அதையே நீங்க செஞ்சா?”
ஜலாலின் அப்பாவைப் பார்த்தான். “சார்., செல்வாக்கு, பணம், ஆள்பலம், அரசாங்க பலம் எல்லாத்துக்கும் ஒரு அளவு உண்டு. சினிமாலலாம் பாத்துருப்பீங்களே! ஸ்டூடண்ட்ஸ் பவர்னு. அது எல்லாம் பொய் இல்ல! அப்புறம் அவனை பழிவாங்கப் போய் நம்ம புள்ள வாழ்க்கை முழுதும் களிதிங்க வேண்டியதுதான்”
“அப்ப என்னதான் செய்யணும்னு சொல்றீங்க”
“அவன் அழனும். நம்ம தம்பி அழுத மாதிரி அவன் வாழ்க்கை முழுதும் அழனும். ஆனா அவனையோ, அந்த பொண்ணையோ கை வைக்கக்கூடாது. நல்லதோ கெட்டதோ, தம்பி போலீஸ் ஜீப்ல ஏறும் போது நல்லவன் வேஷம் போட்டு ஏறியிருக்கு. அது ஒன்னு போதும். அவனைத் தொடாம அவன அடிக்கிற அடி, நம்ம மேல பழியும் வராது. அவன் அழுது அழுது வாலை சுருட்டிக்குவான்.
” அதுதான் எப்படி”
“தம்பி அவன் காலேஜ்ல கொடுத்திருக்குற பேமிலி டீடெய்ல்ஸ் கிடைக்குமா”
“கிடைக்குமாவா! காலேஜே நம்மளோடதுதான். பத்து நிமிஷத்ல உங்க கையில் இருக்கும்” என்று யாருக்கோ போன் செய்தான். அடுத்த பத்து நிமிடத்துக்குள் அனைத்தும் ஜலாலின் லேப்டாப்பில் வந்து உட்கார்ந்தது.
“நீண்ட நேரம் அதைப் பார்த்த கறுப்பன்., ரிகார்ட் படி அவனுக்கு ஒரு தம்பி இருக்கான். நமக்குத் தேவை கொலை கூட செய்யத் தயங்காத நாலு பேரு. நாம, அவன் வீட்டுக்கு போறோம் அவன் தம்பிய அந்த நாலு பேரை வச்சு வம்புக்கு இழுக்கறோம். அவனை முடிக்கறோம். அருணுக்கு மட்டும் நீதான் செஞ்சனு தெரிய படுத்துறோம். பொருமி பொருமி அவன் அழனும். நீ நிம்மதியா இருக்கனும்”
“வாவ்., சந்தேகம் நம்ம மேல விழாது. எதோ உள்ளூர் தகராறு மாதிரி செட்டப் ஆகும். எனக்கு அவன் அழனும், அவ்வளவுதான்”
“ஆமா அவன் தம்பிய எப்படி வெளியக் கொண்டு வர்றது,வீட்ல இருந்து”
“ம்… ஒண்ணு செய்ங்க. இந்த லேப்டாப்பை கையில எடுத்துக்கங்க. எதுக்கும் காலேஜ்லருந்து அவனோட அப்ளிகேஷன், அட்மிஷன் பேப்பர்ஸ்லாம் எடுத்துக்கங்க”
“எடுத்து…
” எடுத்துக்கங்க சொல்றேன்! அப்டியே ரெண்டு மூணு, நான் கேட்ட மாதிரியான ஆளுங்களையும் வரவழைங்க”
“கல்குவா., நீ கேட்டதை எல்லாம் நான் ரெடி பன்றேன். இந்த மேட்டரை மட்டும் நீ நல்லபடியா முடி., உன்னை கவனிக்கிற விதத்துல நான் கவனிக்கிறேன்”
“உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன! நாம என்ன இன்னிக்கு நேத்திக்கா பழகுறோம். நான் கேட்டதை மட்டும் நீங்க செஞ்சுக் குடுங்க, அப்புறம் பாருங்க இந்த கல்குவா யார்னு”
அந்நிய மண்ணின் ஆளை வைத்து, தன் சொந்த மண்ணின் மைந்தர்களை புதைக்கத் தேவையானதை ஏற்பாடு செய்தார் ஜலாலின் அப்பா!
Comments are closed here.