உனக்குள் நான்-36
3300
1
அத்தியாயம் – 36
“சாரி கிருபா. விக்டிம் ரெண்டுபேரும் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்காங்க. ஒருத்தருக்கு வலதுகையில எலும்பு முறிவு… இன்னொருத்தருக்குத் தலையில அடி. ஜி.ஹெச்-ல அட்மிட் பண்ணியிருக்காங்க. அவங்க சைடு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க. எஃப்.ஐ.ஆர் போட்டே ஆகணும். என்னால எதுவுமே செய்ய முடியாது” – காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் தன் முன் அமர்ந்திருக்கும் வழக்கறிஞர் கிருபாகரனிடம் கறாராகப் பேசினார். அதே அறையில் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த கார்முகிலனுடன் தர்மராஜ் மெல்லிய குரலில் எதையோ பேசிக் கொண்டிருந்தார்.
“இப்படிச் சொன்னா எப்படி சார்… சாயங்கால நேரத்துல கூட்டிட்டு வந்திருக்கீங்க. இனி கோர்ட்ல ஆஜர் பண்ணவும் முடியாது. நைட் அவர் இங்க இருக்க முடியாது சார்…”
“புரியாமப் பேசாதீங்க கிருபா… காலேஜ்ல… ஸ்டூடெண்ட்ஸ்… ஸ்டாஃப்னு நூறு பேருக்கு எதிர்ல ரெண்டு பசங்கள போட்டு அடிச்சிருக்காரு”
“காலேஜ்ல அதே நூறு பேருக்கு முன்னாடி தான் அவனுங்க ரெண்டுபேரும் குடிச்சிட்டு வந்து அட்டகாசம் பண்ணியிருக்கானுங்க… முகிலன் டென்ஷன்ல கை நீட்டிட்டாரு. நாளைக்கு அவனுங்க சொந்தக்காரங்கள கூப்பிட்டு வச்சு காம்ப்ரமைஸ் பண்ணிடலாம்… இன்னிக்கு நீங்க அவரை என்கூட அனுப்புங்க சார். நம்ம விஷயத்தை எல்லாம் நான் அவங்ககிட்டப் பேசிக்கறேன்…” – ‘நம்ம விஷயம்’ என்கிற வார்த்தையில் பூடகமாக எதையோ அவருக்கு உணர்த்தினார்.
உடனே முத்துகுமாரின் குரல் சற்று இளகியது. “நீங்க சொல்றதெல்லாம் புரியுது கிருபா. ஆனா அந்தப் பையனோட அப்பா டி.எஸ்.பிக்கு ஏதோ சொந்தக்காரன் போலருக்கு. டி.எஸ்.பி வேற சாயங்காலம் போன் பண்ணிட்டாரு. இந்த கேஸ்ல மட்டும் இப்போதைக்கு என்னால ஒண்ணுமே பண்ண முடியாது”
“என்ன சார் நீங்க… சாதாரண நைன்டி ஃபைவ் கேஸுக்குப் போயி இவ்வளவு கெடுபிடி பண்றீங்க…”
“அதைத்தான் நானும் சொல்றேன். பெரிய கேசுக்கு ரிஸ்க் எடுத்தாலும் பரவால்ல. இந்த கேசுக்குப் போயி டி.எஸ்.பி கிட்டப் போயி முட்டிக்கிட்டு நிக்கணுமா. இன்னிக்கு ஒரு நைட் தானே… அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லாம நான் பார்த்துக்கறேன். நாளைக்கு முடிஞ்சா காம்ப்ரமைஸ் பண்ணி பார்க்கலாம். முடியலன்னா… கோர்ட்ல பார்த்துக்கோங்க. அவனுங்க குடிச்சிட்டு காலேஜிக்குள்ள அத்துமீறி நுழைஞ்சதே தப்பு. அதிலேயும் தகராறு பண்ணியிருக்கானுங்க. கேஸ் நிக்காது கிருபா… உங்களுக்குத் தெரியாததா…”
வழக்கறிஞர் கிருபாகரன் பதில் பேசவில்லை. முத்துக்குமாரின் பேச்சிலிருந்த நியாயம் அவருக்குப் புரிந்தது. ஆனால் அதை எப்படி அவரை முழுமையாக நம்பியிருக்கும் அவருடைய கட்சிக்காரரிடம் விளக்குவது…! நெற்றிப்பொட்டை தேய்த்துவிட்டபடி யோசித்தார்.
“நீங்க எதுவும் யோசிக்காதீங்க கிருபா… நானே அவங்ககிட்டப் பேசுறேன்…” – கிருபாகரனிடம் கூறிவிட்டு “சார்… இப்படி வாங்க…” – முகிலனை அழைத்தார் முத்துக்குமார். முகிலனோடு சேர்ந்து தர்மராஜும் ஆணையர் மேஜைக்கு அருகே வந்தார்.
“ஏன் சார்… படிச்சு நல்ல வேலையில இருக்கீங்க… உங்களுக்கெல்லாம் எதுக்கு சார் இந்த வேலை..? அவனுங்க சின்னப் பசங்க… அவனுங்க மேல போய்க் கைய வச்சிருக்கீங்க… தேவையா இதெல்லாம்…?” – காக்கி உடையின் விறைப்பு அவர் பேச்சிலும் வெளிப்பட்டது.
கார்முகிலனுடைய இத்தனை வருட வாழ்க்கையில்… ஒருவர் அமர்ந்துகொண்டு அலட்சியத் தோரணையில் கேட்கும் கேள்விகளுக்கு, அவன் நின்றுகொண்டு பதில் சொல்லும் நிலை ஏற்பட்டதே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இன்று அந்த அனுபவம் அவனுக்குக் கிடைத்துவிட்டது. புதிய அனுபவம் தான்… ஆனால் கசப்பான அனுபவம்… அவமானத்தில் இறுகிய முகத்துடன் பதில் பேசாமல் நின்றான். அவனுடைய மனநிலையைத் துல்லியமாக உணர்ந்து கொண்ட தர்மராஜ் அவனுக்குப் பதிலாகத் தானே பேசினார்.
“அவனுங்க பார்க்க தான் சார் சின்னப் பசங்க… காலேஜ்குள்ள வந்து என்னென்ன பேசினானுங்கன்னு எங்களுக்குத் தான் தெரியும்”
“அவனுங்க பிரச்சனை பண்ணினாங்கன்னா நீங்க போலீஸுக்குக் கால் பண்ண வேண்டியது தானே? அதை விட்டுட்டு நீங்களா அடிதடில இறங்கினா எப்படி சார்? அப்புறம் நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்?”
“ரெண்டு பக்கமுமே தப்பு இருக்கு… பார்த்துப் பேசி விடுங்க சார்… அவங்களுக்கு ஏதும் செட்டில்மெண்ட் பண்றதுன்னாலும் பண்ணிடலாம்…” – பிரச்சனையைச் சுமூகமாக முடித்துவிட வேண்டும் என்பதற்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு இறங்கி பேசினார்.
“உங்க லாயரும் அதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்காரு. ஆனா உடனே அது மாதிரி செய்ய முடியாது சார். இன்னிக்கு ஒரு நைட் அவர் இங்க இருக்கட்டும். நாளைக்குக் காலையிலேயே நாம காம்ப்ரமைஸ் பண்ணி பார்ப்போம். முடியலன்னா எஃப்.ஐ.ஆர். போட்டுச் சாயங்காலம் கோர்ட்ல ஆஜர் பண்ணிடுவோம். மத்ததெல்லாம் உங்க லாயர் பார்த்துக்குவாரு. என்ன சொல்றீங்க…”
“நைட் இங்க இருக்கணுமா…! அதோட எஃப்.ஐ.ஆர். போட்டா வேலைக்குப் பிரச்சனை வந்திடுமே சார்…” – தர்மராஜ் திகைப்புடன் கேட்கும்பொழுதே கார்முகிலனின் அழுத்தமான குரல் இடையிட்டது.
“காம்ப்ரமைஸ் எதுவும் தேவையில்ல… எதுவா இருந்தாலும் சட்டப்படியே பார்த்துக்கலாம்”
கிருபாகரன் சட்டென்று நிமிர்ந்து கார்முகிலனைப் பார்த்தார். ‘உங்களுக்காக நான் இங்க பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க எதுக்கு இடையில வார்த்தையை விடுறீங்க..?’ என்கிற எச்சரிக்கை இருந்தது அவருடைய பார்வையில். தர்மராஜும் “டேய்… திரும்பத் திரும்ப அதையே உளறாம சும்மா இருடா…” என்று அதட்டினார்.
“இல்ல சார்… குறுக்குவழில நான் வெளியே வர மாட்டேன்” என்று தர்மராஜின் கண்களைப் பார்த்து அழுத்தமாகக் கூறியவன் “நான் அடிச்சது உண்மை தான். நீங்க எஃப்.ஐ.ஆர். போடுங்க” என்றான் ஆணையரிடம்.
அவனுடைய ஆளுமையான பேச்சு ஆணையர் முத்துக்குமாரின் மனதைத் தொட்டது. காக்கிஉடையின் துணையில்லாமல் தன்னால் கூட இவ்வளவு நிமிர்வாகப் பேச முடியாது என்று நினைத்து அவனுடைய உறுதியான மனப்பாங்கை ரசித்தபடி, “அவசரப்படாதீங்க… எதுக்கும் நாளைக்குக் காலையில அவங்ககிட்ட ஒரு தடவ பேசி பார்க்கலாம். முடியலன்னா அடுத்து எஃப்.ஐ.ஆர். போட்டுக்கலாம்…” என்றார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கலைவாணியின் தந்தை மற்றொரு வெள்ளை வேட்டிக்காரருடன் காவல்நிலையத்திற்குள் நுழைந்தார்.
“என்ன சார் இந்த ரௌடி பயலுக்கு மரியாதைக் கொடுத்துப் பேசிக்கிட்டு இருக்கீங்க? என் பையன அடிச்சுக் கொல்லப் பார்த்தவன் சார்… கேஸப் போட்டு உள்ளத் தள்ளுங்க முதல்ல…” – உள்ளே வந்தவர் ஆவேசத்துடன் கத்தினார்.
“எதுக்குக் கத்துறீங்க? இது என்ன உங்க வீட்டுக்கூடம்னு நெனச்சீங்களா? போலீஸ் ஸ்டேஷன் சார். இங்க என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு எங்களுக்குத் தெரியும். கம்ப்ளைண்ட் எழுதி கொடுத்துட்டீங்கல்ல..? எஃப்.ஐ.ஆர் காப்பியை வாங்கிக்கிட்டுக் கிளம்புங்க. மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்கறோம். இனி நீங்க எதுவா இருந்தாலும் கோர்ட்ல போய்ப் பேசிக்கங்க… ம்ம்ம்… கெளம்புங்க… கெளம்புங்க…” – அதட்டலாகப் பேசி அடக்கினார். அதோடு இனி இவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை செல்லுபடியாகாது என்பதையும் புரிந்து கொண்டு, ரைட்டரிடம் முதல் தகவல் அறிக்கையைத் தயார் செய்யும்படி கூறினார்.
கையில் முதல் தகவல் அறிக்கை பிரதியுடன் கார்முகிலனை முறைத்துக்கொண்டே அவர் காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய சிறிது நேரத்தில், பதற்றத்துடன் உள்ளே நுழைந்தாள் மதுமதி.
அவளுடைய கண்கள் பரபரப்புடன் கணவனைத் தேடி அந்த அறை முழுக்க வட்டமடித்தன. வலது பக்கத்தில் வரிசையாக இரண்டு மேஜை நாற்காலிகள். அதில் ஒன்றில் அமர்ந்து கண்ணாடி அணிந்த காவலர் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அதே பக்கத்தில் போடப்பட்டிருந்த ஒரு மர பெஞ்சுக்கு அருகில் பதிமூன்றிலிருந்து பதினைந்து வயது நிரம்பிய மூன்று சிறுவர்கள் கலவரமான முகத்துடன் தரையில் அமர்ந்திருந்தார்கள். இன்னும் சில காவலர்களின் நடமாட்டமும் அந்த அறையில் இருந்தது.
எதிர்பக்க சுவற்றில் தலைவர்களின் படங்கள். அதற்குக் கீழே ஓர் இரும்பு அலமாரி… அது நிறையக் காகிதங்கள், கோப்புகள். அதையடுத்து ஆணையர் அறைக்குச் செல்லும் வழி… இடதுபக்க மூலையில் ஒரு பக்கம் சின்ன ஸ்டூல் மீது பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர்… அதற்குப் பக்கத்தில் ஒரு பழைய டம்ளர். அதை அடுத்து இரண்டு செல்கள்… செல்லுக்கு வெளியே அழுக்குத்துணியும் பரட்டைத் தலையுமாக ஒருவன் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான்.
அவனையும் தாண்டி ‘எங்கே… எங்கே…’ என்கிற தவிப்புடன் ஓடியது மதுமதியின் பார்வை. அதோ… அங்கே… அந்தப் பரட்டைத் தலையனுக்கு அருகில் கிடக்கும் பெஞ்சில், முழங்கையைக் காலில் ஊன்றி, நெற்றியை இரண்டு விரல்களால் பிடித்துக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தான் அவளுடைய உயிருக்குயிரானவன். அவனை அந்தக் கோலத்தில் பார்த்ததும் சட்டென்று அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“யாரும்மா… என்ன வேணும்..?” – ரைட்டர் கண்ணாடியைச் சரி செய்து கொண்டே அவளை ஆராய்ச்சி பார்வையுடன் கேட்டார். அவளுக்குப் பேச்சு வரவில்லை. பயம் நிறைந்த கண்களுடன் கணவன் அமர்ந்திருக்கும் திசைப்பக்கம் சுட்டிக்காட்டினாள்.
முகத்தில் எந்தக் கள்ளத்தனமும் இல்லாமல் ஒருவித தவிப்புடன் நின்று கொண்டிருப்பவளைப் பார்க்கும் பொழுது அவருக்கே பாவமாக இருந்ததோ என்னவோ. அதற்குமேல் எதுவும் கேட்காமல் ‘போய்ப் பார்..’ என்பது போல் தலையசைத்தார்.
அதே நொடி “மது… நீ எங்க இங்க..?” – இன்ஸ்பெக்டர் அறையிலிருந்து வெளியே வந்த தர்மராஜ் பதட்டத்துடன் கேட்க, திடுக்கிட்டு நிமிர்ந்தான் முகிலன். வாசற்படிக்கு அருகில் மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் வெடவெடவென்று நிற்கும் மனைவியைக் கண்டதும் அதிர்ந்தவன் “மதி…!” – என்றபடி சட்டென்று எழுந்து நின்றான்.
தர்மராஜின் குரல் கேட்டு அவர் பக்கம் ஒருநொடி தலையைத் திருப்பிய மதுமதி கணவனின் அழைப்பைக் கேட்டதும் மீண்டும் அவன் பக்கம் பார்வையைத் திருப்பினாள். அடுத்த நொடியே அவனிடம் பாய்ந்து ஓடியவள், அவனை நெருங்கியதும் தயங்கி நின்றாள்.
கலங்கி சிவந்த விழிகளும், துடிக்கும் இதழ்களுமாகத் தவிப்புடன் கணவனைத் தலை முதல் கால் வரை பார்வையால் ஆராய்ந்தாள். அவனிடம் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் அவள் மனம் ஆறுதல் அடையவில்லை. அவளுடைய தவிப்பும் குறையவில்லை.
“நீ எதுக்கு இங்க வந்த..?” – கணவனுடைய கேள்வியில் சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்தது.
“ப்ச்… இப்போ எதுக்கு அழற? மதி…! என்னாச்சு இப்போ..? நீ எதுக்கு இங்க வந்த?” – அவளுடைய தளிர்விரல்களைப் பிடித்து… நடுங்கும் அவள் கரத்தை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு பிரியத்துடன் கேட்டான்.
அவளுடைய அழுகை அதிகமானது. கட்டுப்படுத்த முடியாமல் திணறியவள் திடீரென்று சூழ்நிலையை மறந்துவிட்டு அவனைக் கட்டிக்கொண்டு ‘ஓ’வென்று குமுறியழுதாள். கார்முகிலனே அதை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. எல்லோருடைய கவனமும் தங்கள் மீது இருப்பதைக் கண்டு ஒருநொடி தயங்கியவன்… மனைவியின் உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து அவளை இறுக்கமாக அணைத்து ஆறுதலளித்தான்.
“மதி… என்ன இது… சின்னக் குழந்தை மாதிரி..? ” – அவளைத் தட்டிக் கொடுத்து தேற்ற முயன்றான்.
சிறிது நேரத்தில் சிறு செருமல்களுடன் அவனிடமிருந்து விலகினாள். ஆனால் குற்ற உணர்ச்சி மிகுதியில் கணவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
“இந்த நேரத்துல எப்படி வந்த? கூட யார் வந்திருக்கிறது?”
“யாரும் இல்ல… நான் மட்டும் தான்… உங்க கார்ல…”
“கார்… தனியா…! இந்த நேரத்துல காரைத் தனியா எடுத்துக்கிட்டு வரலாமா… என்ன மதி நீ..?” – சற்று வருத்தத்துடன் கேட்டான்.
“ப்ச்… இங்க என்ன சொல்றாங்க?” – தனக்காக அவன் வருந்துவதைக் கவனிக்கும் மனநிலையில் இப்போது அவளில்லை. அவளுடைய எண்ணம் முழுவதும் கணவனைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட என்பதிலேயே இருந்தது.
“பயப்படறதுக்கெல்லாம் ஒண்ணுமில்ல மதி… நான் நாளைக்கு வீட்டுக்கு வந்திடுவேன். நீ கிளம்பு…” – அன்பொழுகும் குரலில் கூறினான்.
அந்தக் குரல் அவள் இதயத்தை மேலும் கசக்கியது. மனம் வலித்தது… ‘உங்களை விட்டுட்டு நான் எப்படி இங்கிருந்து போவேன்…’ என்கிற கலக்கத்துடன் கணவனைப் பார்த்தாள். மனைவியின் கண்களிலிருந்த பரிதவிப்பைத் துடைக்க முடியாத வேதனை அவன் முகத்தில் படர்ந்தது.
கணவனின் முகமாற்றத்தைக் காணச் சகிக்காமல் பட்டென்று அவன் கையை இறுக்கமாக பற்றினாள். “என்னால தான் எல்லாமே… நான் தான்… ரொம்ப… பெரிய தப்புப் பண்ணிட்டேன்…” – சிவந்திருந்த அவள் கண்கள் மீண்டும் கலங்கின.
“என்னடா…” – மிக மிக நெகிழ்ச்சியான தருணங்களில் வெளிப்படும் ‘டா’ என்கிற அழைப்பு இப்போது அவனிடமிருந்து வெளிப்பட்டு அவளைச் சுட்டது. ‘நம்ம மேல கோபமே இல்லையா…! இந்த நேரத்துல கூட உருகறானே!’ – கண்களில் திரண்டிருந்த கண்ணீர் கன்னங்களில் உருண்டது.
“என்ன மது… நீ எதுக்கு இங்க வந்த?” – அதுவரை கணவன் மனைவிக்குத் தனிமைக் கொடுத்துச் சற்றுத்தள்ளி நின்ற தர்மராஜ் அவர்களை நெருங்கி வந்தார்.
“தாத்தா… நான்தானே தாத்தா தப்பு…” – அவள் பேசி முடிப்பதற்குள் எரிச்சலுடன் குறுக்கிட்டார் தர்மராஜ்.
“அட என்னம்மா நீ..? தேவையில்லாம பேசி சிக்கல அதிகமாக்கிடாம நீ முதல்ல வீட்டுக்குக் கிளம்பு…” – எதையாவது பேசி அவளும் இந்த வழக்கில் சிக்கிக்கொள்ளப் போகிறாளோ என்கிற பயத்தில் படபடத்தார். அதே கவலை கார்முகிலனின் மனதையும் அப்போது பீடித்துக் கொண்டது.
“இல்ல தாத்தா… நான் என்ன சொல்றேன்னா…”
“ஐயோ… நீ எதையும் சொல்ல வேண்டாம்… உன்ன வீட்டுல தானே இருக்கச் சொன்னேன். நீ எதுக்கு இங்க வந்த..?” – கோபத்துடன் வினவினார்.
“டென்ஷன் ஆகாதீங்க சார்… ஒண்ணுமில்லமா… நீங்க பயப்படாதீங்க… சாருக்கு எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன்” – வழக்கறிஞர் தைரியம் கூறினார்.
“இல்ல சார்… இந்தப் பிரச்சனைக்கே நான்தான் காரணம்…” – அவள் விளக்கம் கூற ஆரம்பிக்கும் பொழுது, “ஏய்…” – கார்முகிலனின் கடுமையான குரல் அவளை அதட்டியது.
சற்றுமுன்பு வரை கணவனுடைய பாசத்தில் மூழ்கி எழுந்தவள், நொடியில் அவன் காட்டிய கடுமையில் திடுக்கிட்டு அவனின் முகம் பார்த்தாள். அவன் முகத்திலிருந்த கோபம் அவளை மோசமாகப் பாதித்தது. பதில் பேச முடியாமல் ஸ்தம்பித்து நின்றாள்.
மனைவியின் அதிர்ந்த முகம் அவனை என்னவோ செய்தது. ஒருநொடி பேசாமல் அவள் முகத்தைப் பார்த்தபடியே நின்றான். பிறகு, “உனக்கு ஒரு தரம் சொன்னா புரியாது..?” என்றான் கோபம் குறையாத குரலில்.
அடிவாங்கிய குழந்தை போல் விழிக்கும் அவளுடைய கண்களைச் சந்திக்க முடியாமல் தர்மராஜ் பக்கம் திரும்பி “சார்… இவ இந்த நேரத்துல தனியா போக வேண்டாம்… நீங்க காரை எடுங்க. இன்னிக்கு நைட் லக்ஷ்மிபுரத்துலேயே தங்கிடுங்க. நாளைக்குக் காலையில லாயர் எத்தனை மணிக்கு வரச் சொல்றாரோ அப்போ வந்தா போதும்” என்று கூறிவிட்டு, “ம்ம்ம்… கிளம்பு…” என்று மீண்டும் மனைவியிடம் வந்து நின்றான்.
அவளுடைய பரிதாபமான பார்வை அவன் மனதைப் பிசைந்தாலும் இந்த நேரத்தில் அவளிடம் இளக்கம் காட்டினால் அவளை இங்கிருந்து நகர்த்த முடியாது என்பதை மனதில் வைத்து, கோப முகமூடியின் துணைக்கொண்டு அவளை அங்கிருந்து துரத்தினான்.
மனம் நிறையக் கணவனைப் பற்றிய கவலையைச் சுமந்துகொண்டு, கலங்கிய கண்களும் துடிக்கும் இதழ்களுமாகக் கணவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே காவல் நிலையத்திலிருந்து தர்மராஜுடன் வெளியேறினாள் மதுமதி.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thara V says:
Nice update