உனக்குள் நான்-38
3707
1
அத்தியாயம் – 38
கார் வீட்டு போர்டிகோவில் வந்து நின்ற பிறகும் மதுமதி அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். முகிலன் அவள்மீது கொண்டுள்ள அன்பை விளக்கி சொன்ன பிறகு அவள் நெகிழ்ந்து போவாள்… மகிழ்ச்சியில் பூரித்துப் போவாள் என்று எண்ணியிருந்த தர்மராஜ் ஏமாற்றமடைந்தார். உயிருள்ள மனுஷியா அல்லது தத்ரூபமான சிலையா என்று சந்தேகமே வந்துவிடும் அளவிற்கு இறுக்கமாக அமர்ந்திருந்த அவளுடைய தோற்றத்தைக் கண்டு திகைப்படைந்தார்.
“மது… மதும்மா…” – அழைத்தார். உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தாள்.
“இறங்கும்மா…”
சாவி கொடுத்த பொம்மை போல் காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றாள்.
“கோவிலுக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள அப்படி எங்கடி அவசரமா ஓடின..? குழந்தை அழுது அழுது ஓஞ்சு போய் இப்பத்தான் தூங்கினா. ஆமாம்… முகிலன் எங்க?” – கௌசல்யா வரிசையாகக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே தர்மராஜ் உள்ளே வந்தார்.
“வாங்க சார்..? உக்காருங்க… மது உங்கள பார்க்கத்தான் தேனிக்கு வந்தாளா? என்னாச்சு அவளுக்கு? ஏன் ஒருமாதிரி இருக்கா?” – பதட்டத்தை மறைக்க முயன்றாலும் கேள்விகள் அடுக்கடுக்காக வந்து விழுந்தன.
தர்மராஜ் கௌசல்யாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பிக்கும் பொழுது மதுமதி தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைக் கூட எட்டிப் பார்க்கும் சிந்தனையில்லாமல் மாடிப்படிகளில் ஏறினாள்.
மூடியிருந்த படுக்கை அறையின் கதவைத் தள்ளி திறந்து கொண்டு உள்ளே சென்றவள், கனத்துப் போயிருந்த மனதைச் சுமக்கும் தெம்பில்லாதவள் போல் கட்டிலில் பொத்தென்று அமர்ந்தாள். வண்டு குடைவது போல் உள்ளத்தைக் குற்ற உணர்ச்சி குடைந்து கொண்டிருந்தது. நிமிர்ந்து சுவற்றைப் பார்த்தாள். அவளுடைய திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படம் லேமினேட் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது.
படத்தில் முகிலனின் முகம் சற்று இறுக்கமாகத்தான் இருந்தது. அன்றைய அவனுடைய சூழ்நிலை அப்படிப்பட்டது… ஆனால் அவள் முகம்…! எத்தனை பூரிப்பு அந்த முகத்தில்…! எத்தனை பெருமிதம் அவள் கண்களில்…! எத்தனை உயிரோட்டமான முறுவல் அவள் இதழ்களில்..! எதற்காக அத்தனை மகிழ்ச்சி..?
மனதில் நினைத்தவனையே மணந்து கொண்டோம் என்கிற பூரிப்பா..? உயிரில் கலந்தவனையே உறவாக்கிக் கொண்டோம் என்கிற களிப்பா..? காதலித்தவனையே கைப்பிடித்துவிட்டோம் என்கிற ஆனந்தமா..? ஏன்..? ஏன் அவள் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி..? – எண்ணிப் பார்க்கையிலேயே கண்களில் கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்தது.
இடைப்பட்ட நாட்களில் இந்த மகிழ்ச்சி எங்கே ஓடி ஒளிந்தது கொண்டது. இத்தனை நாட்களும் மனதில் நெருஞ்சி முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்த அவனுடைய துரோகம், இன்று… இந்த நிமிடம்… அவள் மனதிலிருந்து வடுவின்றி மறைந்து போன மாயம் என்ன? செய்த தவறுக்குத் தண்டனையை அனுபவித்துவிட்டான் என்கிற நிம்மதியா..? அல்லது பழிவாங்கி விட்ட திருப்தியா..?
‘பழிவாங்கறதா…! நானா..? மாமாவையா…! ஐயோ…! கடவுளே…!’ – அவள் மனம் அரற்றியது.
எத்தனை சந்தர்ப்பங்கள். ஒன்றா..? இரண்டா..? தினம்தினம் அவனை மனதார மன்னிக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்துக் கொண்டே இருந்ததே… ஒரு நாள் ஒரு பொழுதாவது அவன் செய்த குற்றத்தை மறந்து அவனோடு ஒன்றி வாழ்ந்தாளா..?
ஒருமுறை செய்த தவறுக்காக நாள்தோறும் தண்டனையை அனுபவித்துத் தாளமுடியாமல் ‘மன்னித்துவிடு மதி’ என்று கெஞ்சினானே. மன்னித்தாளா..? இல்லையே… ‘உன்னுடைய மதி செத்துவிட்டாள்… இவள் புதியவள்… இனி இந்தப் புதிய நடைபிணத்துடன் தான் உன் வாழ்க்கை’ என்று கூறி இரக்கமில்லாமல் அவன் மனதைக் குத்திக் கிழித்தாளே. அதன்பிறகும் கூட அவள் மனம் அமைதி அடையவில்லையே! – தவித்தாள்.
பிடிவாதம் ஒன்றையே பிறவிக்குணமாகக் கொண்டவன், தன்னுடைய அடிப்படை குணத்தையே அவள்மீது கொண்ட காதலுக்காக மாற்றிக்கொண்டு, சின்னச் சின்ன விஷயத்தில் கூட அவளுடைய விருப்பங்களை முன்னிறுத்தி தன்னுடைய ஆசைகளை அழித்துக் கொண்டானே! அப்போதாவது அவனுடைய காதலை உணர்ந்து மனதை மாற்றிக்கொள்ள முடிந்ததா அவளால்..? இல்லையே… ‘மனதைக் கொன்றுவிட்டு மருந்து போட பார்க்கிறாயே பாதகா’ என்று பழிக்கத்தானே முடிந்தது! – மனசாட்சி உறுத்தியது.
கேரளாவில் ஒருநாள் அவளைக் காணாமல் தவியாய்த் தவித்து உணர்ச்சிக் கொந்தளிப்பில் கண்ணாடியில் கையை மோதி தன்னையே காயப்படுத்திக் கொண்டானே…! கையில் ரத்தம் சொட்டச் சொட்ட, கோபமும் ஏமாற்றமும் ஏக்கமுமாக அவளைப் பார்த்தானே…! ஒற்றைப்பார்வை தான்… ஒருநொடி பார்வை தான்… ஆனால் அவள் உயிரைத் தீண்டிய அந்தப் பார்வையால் கூட அவள் மனதிலிருந்த நெருடலை நீக்க முடியவில்லையே! அழுதாலும் துடித்தாலும் அடிமனதில் கணவன் மீது அவளுக்கிருந்த அவநம்பிக்கை அழியவே இல்லையே! – அன்றைய நினைவில் இன்று பதறியது அவளின் மனம். கட்டிலிலிருந்து எழுந்து சுவற்றில் மாட்டியிருந்த படத்தைக் கையில் எடுத்துக் கணவனின் முகத்தைத் தொட்டுப்பார்த்துக் கண்ணீர் விட்டாள்.
அன்று இரவு தூக்க மாத்திரையின் வேகத்தில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கும் போதும் அவளைத்தேடி அவன் மனம் அலைந்ததே… அவளுடைய ஸ்பரிசத்தை உணர்ந்ததும் நொடியில் அமைதிபட்டு மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றதே…! அன்று அவன் காதலை அவள் உணரத்தானே செய்தாள். ஆனால் அதன்பிறகும் கூட அவளுடைய மனம் ஆறுதலடையாமல் அவனை ஒவ்வொரு விஷயத்திலும் சோதிக்கும்படி அவளைத் தூண்டியதே! எவ்வளவு வஞ்சம்! அதைவிடப் பெரிய கொடுமை, அவன் தன்னைக் காதலிக்கிறான் என்று பரிபூரணமாகத் தெரிந்த பிறகு, ஒவ்வொரு விஷயத்திலும் அவனைச் சோதித்துத் துடிக்க வைத்தாளே…! என்ன ஒரு குரூரம்! – அவள் நடந்துகொண்ட விதத்தை நினைக்கும் பொழுதே நெஞ்சுக்கூடு பற்றி எரிவது போல் மனம் எரிந்தது. ஆறுதல் தேடி கையிலிருந்த படத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
மற்றவர்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்தினாள்! தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடித்தாள்! கோபத்தையும் வெறுப்பையும் நெருப்பாய் அவன்மீது கொட்டினாள்! அத்தனையையும் பொறுத்துக்கொண்டு அமைதியாகப் போனானே! அப்போதாவது அவளுடைய மர மண்டைக்குப் புரிந்ததா! கடைசிவரை புரியவே இல்லையே…! இன்று மாலை கூட அவனைக் கரித்துக் கொட்டினாளே!
தன்னுடைய விருப்பம், ஆசை, பிடிவாதம், கோபம், கௌரவம் அனைத்தையும் விட்டுவிட்டு அவன் அவள் முன் மண்டியிட்ட போது அவனை மன்னிக்காத அவளுடைய மனம், இன்று அவள் அனுபவித்த அதே துன்பத்தை அவனும் அனுபவித்துவிட்டான் என்றதும் நொடியில் மாறிவிட்டது என்றால் என்ன அர்த்தம்..?
‘பழிவாங்கிட்டேனா…! என் மாமாவ நானே தண்டிச்சுட்டேனா…! என் கண்ண நானே குத்திக்கிட்டேனா?’ – உணர்ச்சிவசப்பட்டு நெற்றியில் அடித்துக்கொண்டாள்.
உண்மை காதல் பழிவாங்குமா? கொலையே செய்தாலும் அன்பு கொண்ட உள்ளத்திற்கு மன்னிக்க மட்டும் தானே தெரியும்..? என் காதலில் உண்மை இல்லையா..! என் அன்பில் தூய்மை இல்லையா…! – நினைக்கும் பொழுதே துடித்துப் போனாள். மனதில் தாங்கமுடியாத வலி பாய்ந்தது. “ஐயோ…! அம்மா…!” – நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் அருவியாய்க் கொட்டியது.
“மாமா… நான் உங்கள பழிவாங்கணும்னு நினைக்கவே இல்லையே மாமா… நீங்க கஷ்டப்படணும்னு நான் கனவுல கூட நினைக்கலையே…” – நைந்து போன குரலில் முனங்கினாள்.
“இல்ல… நான்தான்… நானேதான் மாமா… நானேதான்…” – தேம்பினாள். “என்னோட கோபமும் வெறுப்பும் தான் மாமா உங்களைப் பழிவாங்கிடுச்சு… நான் பட்ட அதே கஷ்டத்த உங்களையும் அனுபவிக்க வச்சுட்டேனே…! மாமா…!” – குற்றக் குறுகுறுப்பைத் தாங்க முடியாமல் தனிமையில் வெடித்து அழுதாள்.
“கடவுளே…! சாமி…! இதெல்லாம் கனவா இருக்கக்கூடாதா… என் மாமாவுக்கு எந்த அவமானமும் நேராம இருந்துடக் கூடாதா…” – துடியாய் துடித்து வாய்விட்டுப் புலம்பினாள். இமையோடு இமை சேர்த்துக் கண்மூட முடியாமல் இரவெல்லாம் உறக்கமின்றித் தவித்தாள். கல்லைக் கட்டிக்கொண்டு தண்ணீரில் மூழ்குவது போல் மூச்சு முட்டிப் போனாள்.
சுவாசக்காற்றைத் தேடி பால்கனிக்குச் சென்றாள். சில்லென்ற குளிர்காற்று மேனியை தீண்டினாலும் மனதின் பாரம் சிறிதும் குறையவில்லை. துக்கமும் துயரமும் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே தான் இருந்தது. மதுமதி மட்டுமல்ல… அங்கே கார்முகிலனும் தன் மனசாட்சியுடன் போராடிக்கொண்டு தான் இருந்தான்.
மங்கலாக ஒளிரும் விளக்குகள். நாற்காலியில் சாய்ந்தமர்ந்த நிலையிலேயே கண்களில் துணியைப் போட்டு மறைத்துக்கொண்டு குறட்டை விடும் ஏட்டு… லாக்கப்பிற்குள் சில குற்றவாளிகள்… வாசலில் புகை பிடித்தபடி ஒரு காவலர்… உள்ளே கார்முகிலனின் மீது ஒரு கண்ணை வைத்துக்கொண்டே கைப்பேசியில் செவிப்பொறியை மாட்டி, பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு கான்ஸ்டபிள்… வெளியே நாய் ஊளையிடும் சத்தம்… உள்ளே ஃபேன் கிரீச்சிடும் சத்தம். அந்தச் சூழ்நிலையை மிக இறுக்கமாக உணர்ந்தான் கார்முகிலன்.
மரத்துப் போன இதயம் கொண்ட காவலர்களுக்கு மத்தியில்… அடிமட்ட குற்றவாளிகளுக்குச் சமமாக… கொசுக்கடியையும் குளிரையும் சமாளித்துக்கொண்டு மாலையிலிருந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது கொடுமையாக இருந்தது. கைகால்களை அசைப்பதற்காக லேசாக எழுந்தாலே, “என்ன சார் வேணும்..?” என்று சந்தேகத்துடன் கேட்டுக் கவனத்தை இவன் பக்கம் திருப்பும் கான்ஸ்டபிளை நினைத்தாலே எரிச்சல் வந்தது.
அவனுடைய ‘சார்’ என்கிற மரியாதை கூட இன்ஸ்பெக்டரின் ஆதரவு தன் பக்கம் இருப்பதால் தான் என்பதை நன்றாக உணர்ந்திருந்தான். இன்னும் ஒருமுறை எழுந்தால் மற்றக் குற்றவாளிகளுடன் லாக்கப்பிற்குள் தள்ளி கதவைப் பூட்டினாலும் பூட்டிவிடுவான் என்பதால் பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
சிறு வயதிலிருந்து அடிபட்டு வளர்ந்த பக்குவப்பட்ட ஆண் அவன். உலக அனுபவம் பெற்றவன். பலவிதமான மனிதர்களோடு கலந்து பழகியவன். கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்தவன். இப்போதும் குற்றம் செய்துவிட்டு ‘ஆமாம்… செய்தேன்… சட்டப்படி நீ என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்’ என்று திமிராக வந்து அமர்ந்திருப்பவன்.
அவ்வளவு மனவலு கொண்ட அவனுக்கே ஒரு நாள் இரவை அந்தக் காவல் நிலையத்தில் கழிப்பது என்பது சுலபமாக இல்லையே…! ஆனால் ஒரு பாவமும் அறியாத அவனுடைய மதி…! பெற்றோரின் சிறகுகளுக்குள் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பூஞ்சை மனம் கொண்ட மதுமதி…! புழு பூச்சியைக் கூட வதைக்காத மென்மையான உள்ளம் கொண்ட அவன் கண்மணி…! எப்படித் தாங்கினாள்…! – ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து அவன் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிற விஷயம் தான் என்றாலும் இன்று அதிகமாக வலித்தது. அவள் பட்ட துன்பத்தின் அளவு மலை போல் உயர்ந்து நின்று அவன் மனதைக் கனக்கச் செய்தது.
‘மிரண்டு போய் அழுதாளே…! ஃபோன்ல கெஞ்சினாளே…! கல்லு மாதிரி இருந்துட்டோமே!’ – அன்று அவள் சிந்திய கண்ணீரை நினைத்து இன்று இவன் இதயத்தில் இரத்தம் கசிந்தது.
‘டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பினா துடிச்சுப் போவான்னு தெரிஞ்சே… அவ மனச நசுக்கி கொன்னுட்டோமே…!’ – உள்ளே வலித்தது. அவனுடைய மனசாட்சியே அவனை வதைத்தது.
பாசத்தை மட்டுமே காட்டத்தெரிந்த ஓர் அன்பு உள்ளத்தை… காதல் மனைவியை, தன்னை விட மோசமாக உலகத்தில் எவனும் துன்புறுத்தியிருக்க மாட்டான் என்கிற எண்ணம் தோன்றிட கழிவிரக்கத்தில் துவண்டான். மதுமதியின் இளகிய மனமும், பெருந்தன்மையும், அவள் நம் மீது கொண்டுள்ள கரைகாணாத காதலும் தான்… இன்று அவள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் என்பது மனதில் கல்வெட்டு போல் பதிந்தது.
தற்போதைய தன்னுடைய பிரச்சனைகள்… அதன் பாதிப்புகள்… அதிலிருந்து வெளியே வரும் மார்க்கம் எதைப்பற்றியும் அவன் யோசிக்கவில்லை. எண்ணங்கள் முழுக்க முழுக்க மனைவியையும், அவள் அனுபவித்த துன்பங்களையுமே சுற்றி வந்து கொண்டிருந்தது
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nice update