Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-39

 

அத்தியாயம் – 39

 

மதியம் மூன்று மணி இருக்கும்… மதுமதியின் மனம் பதட்டத்தின் உச்சத்தில் இருந்தது. ‘இந்நேரம் மாமாவை கோர்ட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருப்பாங்க… விசாரணை கூட முடிஞ்சிருக்கும். பெயில் கிடைச்சிருக்குமா… இல்ல ஏதாவது… கடவுளே…! இந்த தர்மா தாத்தா வேற நம்மள கூட்டிட்டே போமாட்டேன்னு சொல்லிட்டாரே! அங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே தெரியலையே… இந்தத் தாத்தா ஒரு போன் கூடப் பண்ணாம இருக்காரே… ச்ச…’ – அவள் மனம் நிலையில்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்த நேரம் டெலிபோன் மணி ஒலித்தது.

 

மதுமதி சோபாவிலிருந்து வேகமாக எழுந்தாள். அதேநேரம் கௌசல்யா சமையலறையிலிருந்து அடித்துப் பிடித்துக் கொண்டு ஹாலுக்கு ஓடிவந்து ரிசீவரை எடுத்து “ஹலோ…” என்றாள். அவளும் இவ்வளவு நேரமும் இந்தத் தொலைபேசி அழைப்பை எதிர்நோக்கித்தான் காத்துக் கொண்டிருந்திருக்கிறாள் என்பது அவளுடைய ஓட்டத்திலேயே தெளிவாகத் தெரிந்தது.

 

“யாரும்மா..? கௌசல்யாவா?” – தர்மராஜின் குரல்.

 

“ஆமாம் சார்… சொல்லுங்க… என்னாச்சு?” – படபடத்தாள்.

 

“பெயில் கெடச்சுட்டும்மா. வந்துகிட்டு இருக்கோம். மதுகிட்டச் சொல்லு. பயந்துகிட்டு இருப்பா”

 

“பெயிலா…! அப்போ கேஸ் முடியலயா?”

 

“கேஸெல்லாம் ஒரே நாள்ல முடியாதும்மா… இன்னிக்குத் தானே ஃபஸ்ட் ஹியரிங்… முகிலன விசாரிச்சாங்க. இவன் வேற… யாரு கேட்டாலும் ‘ஆமாம் அடிச்சேன்’னு சொல்றான். பெயிலே கிடைக்குமோ கிடைக்காதோன்னு பயந்துகிட்டு இருந்தேன். நல்லவேள… ராகவனுடைய உடல்நிலை… குடும்பச் சூழ்நிலை இதையெல்லாம் காரணமா வச்சு பெயில் வாங்கி இருக்கோம்… அதுவுமில்லாம அவங்க பக்கத்துலேயும் கொஞ்சம் வீக் இருக்கு. அதனால தான் பெயில் கிடைச்சிருக்கு. இல்லன்னா கஷ்டம் தான்…”

 

“ஓ… அப்போ எப்ப இந்தப் பிரச்சனையெல்லாம் முழுசா முடியும்..?”

 

“அந்தப் பசங்க ரெண்டுபேரும் இன்னும் ஹாஸ்பிட்டல்ல தானே இருக்காங்க. அதுனால அடுத்த விசாரணைய வர்ற இருபதாம் தேதிக்கு ஒத்தி வச்சிருக்காங்க”

 

“வக்கீல் என்ன சொல்றாரு..? பயப்படறதுக்கு ஒண்ணுமில்லையே..?”

 

“பயப்பட ஒண்ணுமில்லன்னு தான் சொல்றாரு” அரைகுறை நம்பிக்கையுடன் கூறினார். குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டால் குறைந்தபட்சம் ஆறுமாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதோடு வேலைக்கும் ஆபத்து வந்துவிடும். அதோடு முகிலனும் தன்னுடைய குற்றத்தை வெளிப்படையாக எல்லோரிடமும் ஒத்துக் கொண்டுவிட்டான். இனி என்ன நடக்குமோ என்கிற பயம் அவருக்குள் உருண்டு கொண்டிருந்தது. ஆனால் அதை வீட்டிலிருக்கும் பெண்களிடம் சொல்லி அவர்களையும் கலவரப்படுத்த விரும்பாமல் மழுப்பலாக எதையோ சொல்லிவிட்டு போனை வைத்தார்.

 

கௌசல்யா தொலைபேசியில் பேசி முடிக்கும் வரை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்ற மதுமதி, அவள் போனை வைத்த அடுத்த நொடி, “என்னவாம்மா..?” என்றாள்.

 

“வந்துகிட்டு இருக்காங்க…”

 

“பெயில்ல வர்றாரா?”

 

“ம்ம்ம்….”

 

“வக்கீல் என்ன சொல்றாருன்னு கேட்டீங்களா..?”

 

“பயப்படறதுக்கு ஒண்ணுமில்லையாம். நீ மனசப் போட்டுக் குழப்பிக்காம தைரியமா இரு…” மகளுக்கு ஆறுதல் கூறினாள். மதுமதி முழுமையாகச் சமாதானம் ஆகவில்லை. அவள் மனதில் ஒருவித உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது. மெளனமாகப் படியேறி மாடிக்குச் சென்றாள்.

 

அடுத்த அரை மணிநேரத்தில் தர்மராஜின் கார் வாசலில் வந்து நின்றது. கௌசல்யா தான் சென்று கதவைத் திறந்தாள். தர்மராஜும் முகிலனும் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். இறுக்கமான முகத்துடன் உள்ளே நுழையும் தம்பியிடம் எதையும் கேட்டுக்கொள்ளாமல் சாதாரணமாகப் பேச முயன்றாள்.

 

“வாப்பா…”

 

முகிலன் வந்து சோபாவில் அமர்ந்தான். நான் போயி கொஞ்சநேரம் படுக்கறேன்…” என்று கூறிவிட்டு தர்மராஜ் மாடிக்குச் சென்றார்.

 

“இந்தா… தண்ணி குடி…” – கௌசல்யா தண்ணீர் கோப்பையை நீட்டினாள். அதைக் கையில் வாங்கியவனின் மனம் மனைவியைத் தேட… கண்கள் ஹாலை வட்டமடித்தன.

 

மனதின் தேடலை வெளியே காட்டிக்கொள்ளாமல் கையிலிருந்த தண்ணீரைப் பருகிவிட்டு இயல்பாகக் கேட்டான், “பொம்மு எங்க?”

 

“ராதாட்ட இருக்கா… நீ போயி குளிச்சுட்டு வந்துடு. குழந்தையை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்…” என்றாள்.

 

அவன் சட்டென்று திரும்பி தமக்கையின் முகம் பார்த்தான். பின் அவளுக்குள் ஏதோவொரு செண்டிமெண்ட் இருப்பதைப் புரிந்து கொண்டு, எதுவும் சொல்லாமல் சிறு தலையசைப்புடன் எழுந்து மாடிப்படிகளில் ஏறினான்.

 

படுக்கையறையிலும் மதுமதியைக் காணவில்லை. ‘எங்க போனா…!’ என்கிற சிந்தனையுடனே டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். பத்து நிமிடத்தில் குளித்து முடித்துவிட்டு மீண்டும் கீழே வந்தான்.

 

“சாப்பிடறியாப்பா..?”

 

“மதி எங்க?”

 

“மேல தானே இருந்தா…! நீ பாக்கலயா?”

 

“இல்லை… ரூம்ல காணோமே…”

 

“காணோமா..? மொட்டமாடில இருக்காளோ என்னவோ…!”

 

“ம்ம்ம்…”

 

“டிஃபன் எடுத்து வைக்கவா?”

 

“இல்லல்ல… வந்திடுறேன்…” – மீண்டும் மாடிப்படிகளில் ஏறினான். கௌசல்யா ஒரு பெருமூச்சுடன் சமையலறைக்குள் நுழைந்தாள்.

 

கௌசல்யா ஊகித்தது சரிதான். மதுமதி மொட்டைமாடியில் தான் இருந்தாள். தர்மராஜின் கார் வாசலில் வந்து நின்றதையும் அதிலிருந்து கணவனும் தர்மராஜும் இறங்கி வீட்டுக்குள் செல்வதையும் பார்த்துக் கொண்டு தான் நின்றாள். ஆனால் அவளால் கீழே இறங்கி வர முடியவில்லை. ஏதோ ஓர் உணர்வு அவளைக் கணவனிடம் நெருங்க விடாமல் தடுத்தது. அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் இல்லாமல் தனிமையில் எங்கோ வெறித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

 

முதுகுக்குப் பின்னால் அழுத்தமான காலடியோசை அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தது. கூடவே சோப் மற்றும் ஆஃப்டர் ஷேவ் ஜெல்லின் கலவையான வாசமும் காற்றில் கலந்து வந்து அவள் மூளையில் மின்னல் வெட்டச் செய்தது.

 

‘மாமா… இங்கேயே வந்துட்டாரு போ..லி..ரு…’ அவள் நினைத்து முடிப்பதற்குள் “க்கும்..” என்கிற கனைப்புச் சத்தத்துடன் அவளுக்கருகில் வந்து பக்கவாட்டுச் சுவற்றில் கையை ஊன்றி நின்றான்.

 

அவளுக்குள் ஒரு படபடப்பு உண்டானது… உள்ளுக்குள் மெலிதாக நடுக்கம் பிறந்தது. அவனைத் திரும்பிப் பார்க்கும் துணிவின்றி அப்படியே நின்றாள். ‘கடவுளே… எனக்கு ஏன் இப்படியெல்லாம் ஆகுது…’ இரவெல்லாம் யோசித்துக் கண்டதையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இப்போது குற்ற உணர்ச்சியில் தவிக்கிறோம் என்பது அவளுக்கே புரியவில்லை.

 

‘என்னாச்சு இவளுக்கு..? நேத்து கூட போலீஸ் ஸ்டேஷன்ல நல்லாதானே பேசிட்டு வந்தா… இன்னிக்கு என்ன திடீர்னு…!’  – “என்ன மதி..? இங்க வந்து தனியா நின்னுட்ட..?” – அமைதியாகக் கேட்டான்.

 

“இ..இல்ல… ஒண்ணுல்ல…” – கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் உள்ளே போய்விட்ட குரலில் தடுமாற்றத்துடன் பேசினாள்.

 

அவன் அவள் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது, அவன் பக்கம் திரும்பாமலே அவளுக்குப் பக்கவாட்டில் தெரிந்தது. கீழுதட்டைக் கடித்துக்கொண்டு தலைகுனிந்தாள். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஏனோ அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல் இருந்தது. சட்டென்று திரும்பி நடந்தாள். நொடியில் அவள் கையைப் பற்றித் தடுத்தான். மதுமதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. உடல் வெடவெடத்தது. நாசி விடைக்க… கண்கள் கலங்க… உள்ளே உணர்வுகள் கட்டுப்பாடிழந்து கொண்டிருந்தன. மனைவியின் மனநிலையை உணர்ந்து கொண்டவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது. அவளைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்க நினைத்தான்.

 

“எங்க ஓடற?” அவளைத் தன்பக்கம் இழுத்து நிறுத்திக் கேட்டான்.

 

“அ..அது… யாழி… யாழி சத்தம்…” – பேச முடியாமல் தடுமாறினாள்.

 

கலங்கி சிவந்திருந்த அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவளோ தரையில் பார்வையைப் பதித்திருந்தாள்.

 

“நைட் முழுக்க ஸ்டேஷன்ல இருந்துட்டு வந்திருக்கேன். அந்த எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சுன்னு கேக்க மாட்டியா மதி..?” – மெல்லிய குரலில் கேட்டான்.

 

தவிப்புடன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். அதுவரை விழவா வேண்டாமா என இமைகளுக்குள் கட்டுப்பட்டிருந்த கண்ணீர், இப்போது கரை உடைத்துக் கொண்டு கன்னத்தில் வழிந்து ஆடை நனைத்தது.

 

அவள் கண்ணீரை துடைத்துவிட்டபடியே செல்லக் குரலில் பேசினான். “உடம்பெல்லாம் ஒரே வலி… புருஷன கொஞ்சமாவது கவனிக்கிறியா நீ?”

 

“என்ன… என்னாச்சு?” – பீதியுடன் கேட்டாள்.

 

“உள்ள வச்சு நிமித்திட்டானுங்க…”

 

அவ்வளவுதான்… மதுமதியின் இதயத்திற்குள் ஈட்டி பாய்ந்தது… துடித்துப் போய்விட்டாள்.

 

“எ…என்…ன… அ…அடிச்சுட்டாங்களா?” – பதறினாள். கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்து கொண்டிருந்தது. “ஐயோ… கடவுளே…! ரொம்ப அடிச்சுட்டாங்களா? வலிக்குதா மாமா..? எங்க வலிக்குது?” அவன் முகம், தோள்பட்டை, மார்பு, கைகள் என்று எங்கும் தொட்டுத் தடவி ஆராய்ந்தாள்.

 

“நல்லா நெஞ்சுலேயே ஏறி மிதிச்சுட்டானுங்க…” – குரலில் அதீத வருத்தமும் முகத்தில் குறும்பு புன்னகையுமாகக் கூறினான்.

 

அதுவரை அவனுடைய காயங்களைத் தேடி உடலை ஆராய்ந்து கொண்டிருந்தவள் சட்டென்று நிமிர்ந்து அவனுடைய முகத்தைப் பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை. ஆனால் அடுத்த நொடியே அவன் உதட்டில் நெளிந்த புன்னகை அவள் மூளைக்குள் மணியை அடிக்கச் செய்தது.

 

“சும்மா சொன்னிங்களா?” – அழுகையில் சிவந்திருந்த கண்களைப் பெரிதாக விரித்துத் திருதிருத்தபடிக் கேட்டாள்.

 

அவள் முகத்தையே பார்வையால் பருகிக் கொண்டிருந்தவனுடைய குறும்பு புன்னகை பெரிதாக விரிந்தது. அவளுக்கும் விஷயம் விளங்கியது. அவனோடு நெருக்கமாக நின்றவள் அவன் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல் இரண்டடி பின்னால் நகர்ந்து தரையில் சரிந்தமர்ந்து முழங்காலில் முகம் புதைத்தாள். அழுகையில் அவள் முதுகு குலுங்க… மெல்லிய செருமல் ஒலிகளும் வெளிப்பட்டன.

 

“ப்ச்… மதி… என்னாச்சு இப்போ… சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்… இங்க பாரு…” – அவளுக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்து சமாதானம் செய்ய முயன்றான். சிறிதும் பலனில்லை…

 

அவள் கால்களைச் சேர்த்துப் பிணைத்திருந்த கையை வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்து அவள் முகத்தை நிமிர்த்தினான். கலங்கி சிவந்திருந்த அவளின் முகத்தைக் கைகளுக்குள் தாங்கி அவள் கண்களுக்குள் கூர்ந்து நோக்கினான். ஓரிரு நொடிகள் தான்… அதற்குமேல் அந்தப் பார்வையையும் அதில் வழிந்த காதலையும் தாக்குப்பிடிக்க முடியாமல் அவனைப் பாய்ந்து கட்டிக்கொண்டாள். கணக்கில்லாமல் முத்தம் பதித்தாள். இறுக்கமாக… இன்னுமின்னும் இறுக்கமாக அவனுக்குள் புதைந்து போனாள்.

 

அந்தத் தருணம் முகிலனின் மனம் அனுபவித்த பலவிதமான உணர்வு குவியல்களை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது… பாலைவனத்தில் வெந்து கொண்டிருந்தவனுக்குப் பாலாபிஷேகம் செய்தது போல் குளிர்ந்து போனான்.

 

இருக்காதா! அவன் மனதை முழுவதும் ஆக்கிரமித்து அவனையே ஆட்சி செய்து கொண்டிருந்தவள் சிலகாலமாகக் காட்டிக் கொண்டிருந்த விலகலால் தவணை முறையில் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தவன் இன்று அவளுடைய ஆவேசமான ஒற்றை அணைப்பில் உயிர்பெற்று… உயிர் தொடும் முத்தத்தில் சொர்க்கத்தை எட்டிப் பார்த்துவிட்டானே…!




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Susi Selvakumar says:

    Niraivana padaippu.thampathiyarin urimai unarval varum mama virilsal azhahaga kathaiakkappattulathu.super nithya

You cannot copy content of this page