குற்றப்பரிகாரம் – 26
1548
0
அத்தியாயம் – 26
வருவானா!
வருவானா!
ஆண்டவா வரனுமே!
ஆயிரத்தெட்டு வேண்டுதலுடன் கல்லூரி லைப்ரரியில் தவங்கிடந்தாள் ப்ரியா!
வருவான் என்று உள் மனம் சொல்லியது.
அருணுக்கும் நன்றாக புரிந்தது. ப்ரியா தன்னை நேசிக்கிறாள் என்று. அதனால் தானே, தான் லைப்ரரி செல்லப் போவதாக சொல்லிவிட்டு, நீ வருவாயா என்று ஒரு கேள்வி! அப்படியென்றால் வா என்று அர்த்தம்.
அருண் வருவதை ப்ரியா பார்த்துவிட்டாள். ஹை! அப்ப அதேதான்! பொறு ப்ரியா! ஒருவேளை அகஸ்மாத்தாகக் கூட வரலாம்! அதையும் செக் பண்ணிட்டா போச்சு என்று லைப்ரரி வாசலில் உள்ள மரத்தின் கீழே உட்கார்ந்தாள். லைப்ரரி வந்த அருண், நேராக அவளிடமே வந்தான்.,
” என்ன ப்ரியா! லைப்ரரி போறேன்னு சொல்லிட்டு இங்க உக்காந்துருக்க!”
கொஞ்சம் தடுமாறிப் போனவள் டக்கென சுதாரித்தாள்,
” நீங்க கூடத்தான், லைப்ரரி வர்ற வேலை இல்லைனு இங்க வந்துட்டீங்க”
“அடடா! நான் வந்தது உனக்கு பிடிக்கல போலையே! நான் வேணா கிளம்பறேன்”
“ஹலோ, உங்கள யாருக்காவது பிடிக்காம போகுமா? நீங்கதான்
ஒரே நாள்ல காலேஜ் ஹீரோ ஆகிட்டீங்களே”
“நாம பயந்து பயந்து சாகாம, கொஞ்சம் திருப்பி எதிர்த்தா யார் வேணா ஹீரோ ஆகலாம்”
“உண்மைதான்! இவன் என்கிட்டையும் ஒரு தரம் வாலாட்டினான். மகனே! நான் மத்தவங்கள மாதிரி இல்லடா!னு அப்பாவ வச்சு வால நறுக்கிட்டேன்”
“அய்யய்யோ! நல்ல வேலைக்கு சொன்னியே!”
“ஏன்”
“ஒன்னுமில்ல சும்மாதான்”
“என்னவோ மறைக்கறீங்க! அது சரி காலேஜ் ஹீரோ! நம்ம கிட்டலாம் சொல்வீங்களா?”
“என்ன நீ சும்மா ஹீரோ ஹீரோன்னுகிட்டு! இந்த காலேஜ் ஹீரோவாகி என்ன பிரயோஜனம்! எனக்கு பிடிச்ச ஹீரோயின் மனசுல ஹீரோ ஆக முடியலையே!
மனசுக்குள்ள இலவம் பஞ்சு பறந்தது ப்ரியாவிற்கு! ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டாள்
“யார்ங்க அந்த அதிர்ஷ்டசாலி”
“அட விடுப் ப்ரியா! ஏற்கனவே அவகிட்ட ஒருத்தன் வாலாட்டித்தான், அவ அப்பாகிட்ட சொல்லி ஒட்ட நறுக்கினாளாம்”
சந்தோஷத்தில் குப்பென வேர்த்தது ப்ரியாவிற்கு… இருந்தாலும் அவன் இன்னும் நேரடியாய்ச் சொல்லவில்லையே!
“அட அவளும் நம்ம கேஸ்தான் போல! யார்ங்க அது நான் தெரிஞ்சுக்கலாமா!?”
எவ்வளவு அழுத்தம். பாவம் பெண் அல்லவா?
“ஓ… தாராளமா! அவ இங்கதான் இருக்கா! உன் கையக் கொடேன் அவள் பெயரை எழுதி காமிக்கிறேன்” என்று அவனாகவே அவள் கையை பிடித்து, உள்ளங்கையில் எழுதினான்
ப் ரி யா என்று…
ப் ரி யா…
கைகளில் எழுதியவுடன் ப்ரியா நெக்குறுகிப் போனாள் ஆனந்தத்தில் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. ஆனாலும், கல கல என சிரித்தாள். அந்த நொடி, வாழ்க்கையில் திரும்பி வருமா எனத் தெரியவில்லை. அப்படியே அருணின் கைகளை எடுத்து தன் கண்ணங்களில் வைத்துக் கொண்டாள்.
அருணும் உணர்ச்சிவசப் பட்டுத்தான் போனான். ஒரு முறைக்கு ஆயிரம் முறை யோசித்தே இந்த முடிவிற்கு வந்தான். அவளின் மனம் பணக்காரத்தனம் இல்லை, என்று பலமுறை கண்ட பிறகே இந்த முடிவிற்கு வந்தான்…..
“ப்ரியா., நான் முதல்ல ரொம்ப யோசிச்சேன். சினிமாவுல வர்றா மாதிரி, நீ எங்கையோ நான் எங்கையோ!”
“அப்படிலாம் சொல்லாத, அருண் என்னோட பணம் அந்தஸ்து எல்லாம் உனக்கு, உன் நல்ல மனசுக்கு முன்னாடி தூசி. உன்னோட சந்தோஷம் சோகம் எதுவா இருந்தாலும் உன் கூடவேதான் நான் கடைசிவரை இருப்பேன்”
எந்த நேரத்தில் சொன்னாளோ, முதலில் சோகம் தேடி வந்தது. ஜலால் கல்லூரியை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
“ப்ரியா ரொம்ப நேரமாயிருச்சு. நீ கிளம்பு நாளைக்கு பாக்கலாம். முடிஞ்சா நைட் கால் பன்றேன்”
முடிஞ்சா? அதுதான் அருண். லவ் பண்ணியாச்சேனு மணிக்கணக்கா மொக்க போட மாட்டான். உடனே வழி வழியென்று வழியவும். மாட்டான். உண்மையில் நான் கொடுத்து வைத்தவள்தான்… என்று வானத்தைப் பார்த்தவள்.. அட! ஆமாம் ரொம்ப நேரமாய்ருச்சு எனத் தனக்குள் சொல்லிக் கொண்டே…
“ஓகே அருண்., இந்த கேட் வழியா கிளம்பறேன். உனக்கு மெயின் கேட் வழிதான ரூம் கிட்டக்க!” என்று மற்றொரு வழியில் ப்ரியா கிளம்பினாள். கொஞ்ச நேரம் அப்படியே தனிமையில் காதலின் சுகத்தை நுகர்ந்தபடி அமர்ந்திருந்தவன், இருளத் தொடங்கும் அந்திப் பொழுது வந்ததைப் பார்த்து மெல்ல கிளம்பினான்.
Comments are closed here.