Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

வரலாற்று கதை, கல்கி

Share Us On

[Sassy_Social_Share]

பொன்னியின் செல்வன் முதல் பாகம்-36

அத்தியாயம் 36 – “ஞாபகம் இருக்கிறதா?”

லதா மண்டபத்தின் தோட்ட வாசலண்டை வந்து நின்று நந்தினி மூன்று தடவை கையைத் தட்டினாள்.

 

அப்போது அவள் முகத்தில் படிந்திருந்தது பயத்தின் ரேகையா அல்லது மரங்களின் இருண்ட நிழலா என்று சொல்ல முடியாது.

 

தோட்டத்தில் சிறிது தூரம் வரையில் பெரிய பெரிய அடி மரங்களும் அவற்றைச் சுற்றிக் கொண்டிருந்த கொடிகளும் தெரிந்தன. அப்பால் ஒரே இருட் பிழம்பாயிருந்தது.

 

இருளைக் கீறிக் கொண்டு, கொடிகளை விலக்கிக் கொண்டு, மரம் ஒன்றின் பின்னாலிருந்து மந்திரவாதி வெளியே வந்தான்.

 

நந்தினி தன்னுடைய புஷ்ப மஞ்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவள் அழகிய முகத்தில் இப்போது அமைதி குடிகொண்டிருந்தது.

 

மந்திரவாதி லதா மண்டபத்துக்குள் நுழைந்தான். தங்க விளக்கின் சுடர் ஒளி அவன் முகத்தின் மீது விழுந்தது.

 

ஏற்கெனவே பார்த்த முகமாயிருக்கிறதே! யார் இவன்? ஆம்! திருப்புறம்பியம் பள்ளிப் படையினருகில் நள்ளிரவில் கூடியிருந்த மனிதர்களில் ஒருவன் இவன். பையிலிருந்து பொன் நாணயங்களைக் கலகலவென்று கொட்டியவன். “ஆழ்வார்க்கடியானைக் கண்ட இடத்தில் உடனே கொன்று விடுங்கள்!” என்று மற்றவர்களுக்குக் கூறிய ரவிதாசன்தான் இவன்.

 

வரும்போதே அவன் முகத்தில் கோபம் கொதித்தது. மலர்ப் படுக்கையில் சாந்த வடிவமாய் அமர்ந்திருந்த நந்தினியைக் கண்டதும் அவனுடைய பூனைக் கண்கள் வெறிக் கனல் வீசின.

 

மஞ்சத்தின் எதிரில் கிடந்த பலகையில் உட்கார்ந்து கொண்டு நந்தினியை உற்றுப் பார்த்துக் கொண்டு “ஹூம் ஹ்ரீம் ஹ்ராம்! பகவதி! சக்தி! சண்டிகேசுவரி!…” என்று சில மந்திரங்களைச் சொன்னான். “போதும்! நிறுத்து! தாதிப் பெண் வாசற்படியில் உட்கார்ந்தபடி தூங்கித் தொலைத்து விட்டாள் போலிருக்கிறது! சொல்ல வேண்டியதைச் சீக்கிரம் சொல்! ‘அவர்’ கோட்டைக்குள் வந்து விட்டார்!” என்றாள் நந்தினி.

 

“அடி பாதகி!” என்று ரவிதாசன் கூறியது, நாகப்பாம்பு சீறுவது போலத் தொனித்தது.

 

“யாரைச் சொன்னாய்?” என்று நந்தினி சாந்தமாகவே கேட்டாள்.

 

“நன்றி கெட்ட நந்தினியைத்தான்! பழுவூர் இளையராணியைத்தான்! உன்னைத்தான்!” என்று ரவிதாசன் தன் ஒரு கை விரலால் அவளைச் சுட்டிக்காட்டினான்.

 

நந்தினி மௌனமாயிருந்தாள்.

 

“பெண்ணே! நினைவில் வைத்திருக்க வேண்டிய சில சம்பவங்களை நீ மறந்து விட்டாய் போலிருக்கிறது. அவற்றை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்” என்றான் ரவிதாசன்.

 

“பழைய கதை இப்போது எதற்கு?” என்றாள் நந்தினி.

 

“இப்போது எதற்கு என்றா கேட்கிறாய்? சொல்கிறேன், முதலில் ஞாபகப்படுத்தி விட்டுப் பிற்பாடு சொல்கிறேன்” என்றான் ரவிதாசன்.

 

அவனைத் தடுப்பதில் பயனில்லையென்று கருதியவளைப் போல் நந்தினி ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

 

“ராணி! கேள்! மூன்று வருஷத்துக்கு முன்னால் ஒரு நாள் நடுநிசியில் வைகை நதிக் கரையில் உள்ள மயானத்தில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சாஸ்திரப்படி புரோகிதர்களைக் கொண்டு அந்திமக்கிரியை ஒன்றும் அங்கு நடக்கவில்லை. காட்டில் காய்ந்து கிடந்த கட்டைகளையும் குச்சிகளையும் இலைச் சருகுகளையும் கொண்டு வந்து அச்சிதையை அடுக்கினார்கள். மரத்துக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த ஓர் உடலைக் கொண்டு வந்து அந்தச் சிதையில் இட்டார்கள். பிறகு தீ மூட்டினார்கள். காட்டுக் கட்டைகளில் தீ நன்றாய்ப் பிடித்துக் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது காட்டு நிழலிலிருந்து உன்னைச் சிலர் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்கள். உன் காலையும் கையையும் கட்டிப் போட்டிருந்தது. உன் வாயில் துணி அடைத்திருந்தது. இன்று அழகாகப் பூ வைத்துக் கொண்டை போட்டு கொண்டிருக்கிறாயே, அந்தக் கூந்தல் விரிந்து தரையில் புரண்டு கொண்டிருந்தது. உன்னை அம்மனிதர்கள் ஜூவாலை விட்டு எரிந்து கொண்டிருந்த சிதையில் உயிரோடு போட்டுக் கொளுத்தி விட எண்ணியிருந்தார்கள். ‘இன்னும் கொஞ்சம் தீ நன்றாக எரியட்டும்!’ என்று அவர்களில் ஒருவன் சொன்னான். உன்னை அங்கேயே போட்டு விட்டு அந்த மனிதர்கள் தனித்தனியே ஒரு பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள். அதை நீ கேட்டுக் கொண்டிருந்தாய். உன் வாயை அடைத்திருந்தார்களே தவிர, கண்ணையும் கட்டவில்லை; காதையும் அடைக்கவில்லை. ஆகையால், பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்தாய். அவர்கள் அனைவரும் சபதம் கூறி முடிந்த பிறகு உன்னை நெருங்கினார்கள். அது வரை சும்மா இருந்தவள், கட்டுண்டிருந்த உன் கைகளால் ஏதோ சமிக்ஞை செய்ய முயன்றாய். உன் கண்களை உருட்டி விழித்துப் புருவத்தை நெரித்துக் கஷ்டப்பட்டாய். அவர்களில் ஒருவன் ‘இவள் ஏதோ சொல்ல விரும்புகிறாளடா!’ என்றான். ‘பழைய கதையாகத்தான் இருக்கும்; தூக்கிச் சிதையில் போடு!’ என்றான் இன்னொருவன். ‘இல்லையடா! தீயில் போடுவதற்கு முன்னால் என்னதான் சொல்கிறாள், கேட்டு விடலாம்! வாயிலிருந்து துணியை எடு!’ என்றான் மற்றொருவன். அவனே அவர்களுக்குத் தலைவன் ஆனபடியால் உன் வாயிலிருந்து துணியை எடுத்தார்கள். நீ அப்போது என்ன சொன்னாய் என்பது நினைவிருக்கிறதா, பெண்ணே!” என்று ரவிதாசன் கேட்டுவிட்டு நிறுத்தினான்.

 

நந்தினி மறுமொழி சொல்லவும் இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. நெஞ்சில் குடிகொண்டிருந்த அருவருப்பையும் பீதியையும் அதே சமயத்தில் பயங்கர சங்கல்பத்தின் உறுதியையும் அவள் முக மண்டலம் காட்டியது. அவளுடைய கரிய கண்களிலிருந்து இரு கண்ணீர்த் துளிகளும் ததும்பி நின்றன.

 

“பெண்ணே! பேச மாட்டேன் என்கிறாய்! வேண்டாம்! அதையும் நானே சொல்லி விடுகிறேன். அந்த மனிதர்களைப் போலவே நீயும் பழி வாங்கும் விரதம் பூணப் போவதாகச் சொன்னாய். பழி வாங்குவதற்கு அவர்களைக் காட்டிலும் உனக்கே அதிகக் காரணம் உண்டு என்று சத்தியம் செய்தாய். உன்னுடைய அழகையும் மதியையும் அதற்கே பயன்படுத்துவதாகக் கூறினாய். அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி புரிவதாகவும் சொன்னாய். சபதத்தை நிறைவேற்றியதும் நீயே உன் உயிரை விட்டு விடத் தீர்மானித்திருப்பதாகவும் ஆணையிட்டுச் சொன்னாய். உன்னை மற்றவர்கள் நம்பவில்லை. ஆனால் நான் நம்பினேன். நம்பி, உன்னைத் தீயில் போட்டு விடாமல் தடுத்தேன். உன் உயிரைத் தப்புவித்தேன், இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று ரவிதாசன் கூறி நிறுத்தினான்.

 

நந்தினி சற்றுத் திரும்பி அவனைப் பார்த்து, “ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கிறாயே? என் நெஞ்சில் அவ்வளவும் தீயினால் எழுதியது போல் எழுதி வைத்திருக்கிறதே?” என்றாள்.

 

“பின்னர் ஒருநாள் நாம் எல்லோரும் அகண்ட காவேரிக் கரையோரமாகக் காட்டு வழியில் போய்க் கொண்டிருந்தோம். திடீரென்று பின்னால் குதிரை வீரர்கள் வரும் சப்தம் கேட்டது. அவர்கள் போகும் வரையில் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாகக் காட்டில் ஒளிந்துகொள்ளத் தீர்மானித்தோம். ஆனால் நீ மட்டும் அத்தீர்மானத்தை மீறி வழியிலேயே நின்றாய். அந்த வீரர்கள் உன்னைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய தலைவனாகிய பழுவேட்டரையன் உன்னைக் கண்டு மயங்கி உன் மோக வலையில் விழுந்தான். அவனை நீ மணந்தாய். என்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் நான் ஏமாந்து விட்டதாக என்னை இடித்துக் கூறினார்கள். நான் உன்னை விடவில்லை. எப்படியோ ஒரு நாள் உன்னைத் தனியே பிடித்துக் கொண்டேன். துரோகியாகிய உன்னைக் கத்தியால் குத்திக் கொன்று விட எண்ணினேன். மறுபடியும் நீ உயிர்ப் பிச்சை கேட்டாய். நம்முடைய சபதத்தை நிறைவேற்றுவதற்காகவே இங்கு வந்திருப்பதாகக் கூறினாய். இந்த அரண்மனையில் இருந்தபடியே எங்களுக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்வதாகச் சத்தியம் செய்தாய். இதெல்லாம் உண்மையா இல்லையா?” என்று கேட்டு விட்டு நிறுத்தினான் ரவிதாசன்.

 

“இதெல்லாம் உண்மைதான்; யார் இல்லை என்றார்கள்? எதற்காகத் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறாய்? இப்போது நீ வந்த காரியத்தைச் சொல்லு!” என்றாள் நந்தினி.

 

“இல்லை, பெண்ணே! உனக்கு ஞாபகம் இல்லை. எல்லாவற்றையும் நீ மறந்து விட்டாய்! பழுவூர் அரண்மனையின் சுகபோகத்தில் அழுந்தி உன் சபதத்தை மறந்து விட்டாய்! அறுசுவை உண்டி அருந்தி, ஆடை ஆபரணங்கள் புனைந்து, சப்ரகூட மஞ்சத்தில் பட்டு மெத்தையில் உறங்கி; தந்தப் பல்லக்கில் பிரயாணம் செய்யும் ராணி நீ! உனக்குப் பழைய ஞாபகங்கள் எப்படி இருக்கும்?”

 

“சீச்சீ! இந்த மஞ்சமும் மெத்தையும் ஆடை ஆபரணமும் யாருக்கு வேண்டும்? இந்த அற்ப போகங்களுக்காகவா நான் உயிர் வாழ்கிறேன்? இல்லவே இல்லை!”

 

“அல்லது வழியில் போகிற வாலிபனுடைய சௌந்தரிய வதனத்தைக் கண்டு மயங்கி விட்டாய் போலும்! புதிதாகக் கொண்ட மையலில் பழைய பழிவாங்கும் எண்ணத்தை மறந்திருக்கலாம் அல்லவா?”

 

நந்தினி சிறிது துணுக்கம் அடைந்தாள். அதை உடனே சமாளித்துக் கொண்டு “பொய்! முழுப் பொய்!” என்றாள்.

 

“அது பொய்யானால், நான் இன்று வரப் போவதாக முன்னதாகச் சொல்லி அனுப்பியிருந்தும் வழக்கமான இடத்துக்கு உன் தாதிப் பெண்ணை ஏன் அனுப்பி வைக்கவில்லை?”

 

“அனுப்பி வைத்துத்தான் இருந்தேன். உனக்கு வைத்திருந்த ஏணியில் இன்னொருவன் ஏறி வந்து விட்டான். அந்த மூடப் பெண் அவனை நீதான் என்று எண்ணி அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். அது என்னுடைய குற்றமா?”

 

“யாருடைய குற்றமாயிருந்தால் என்ன? இன்னும் ஒருகணத்தில் என் உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தது. அந்த வாலிபனைத் தேடி வந்த கோட்டைக் காவலர் என்னைப் பிடித்துக் கொள்ள இருந்தார்கள். இந்த அரண்மனைக்குப் பக்கத்துக் காட்டிலுள்ள குளத்தில் மூச்சுத் திணறும் வரையில் முழுகியிருந்து, அவர்கள் போன பிறகு தப்பித்து வந்தேன். சொட்டச் சொட்ட நனைந்து வந்தேன்…”

 

“உனக்கு அது வேண்டியதுதான். என்னைச் சந்தேகித்த பாவத்தை அந்த முழுக்கினால் கழுவிக் கொண்டாய்!”

 

“பெண்ணே! சத்தியமாகச் சொல்! அந்த வாலிபனுடைய அழகில் நீ மதிமயங்கி விடவில்லையா?”

 

“சீச்சீ! இது என்ன வார்த்தை! ஆண்பிள்ளைகளின் அழகைப் பற்றி யாராவது பேசுவார்களா? இந்த வெட்கங்கெட்ட சோழ நாட்டிலேதான் ‘அரசன் அழகன்’ என்று கொண்டாடுவார்கள். ஆண் பிள்ளைகளுக்கு அழகு உடம்பிலுள்ள போர்த் தழும்புகள் அல்லவா?”

 

“நன்றாக சொன்னாய்; இதை நீ உண்மையாகச் சொல்லும்பட்சத்தில், அந்த வாலிப வழிப்போக்கன் இங்கு எதற்காக வந்தான்?”

 

“முன்னமே சொன்னேனே, நீதான் என்று எண்ணி வாசுகி அவனை அழைத்துக் கொண்டு வந்தாள் என்று.”

 

“என்னிடம் கூட நீ கொடுக்காத உன் முத்திரை மோதிரத்தை அவனிடம் ஏன் கொடுத்தாய்?”

 

“அவனை இவ்விடம் தருவித்துப் பேசுவதற்காகவே கொடுத்தேன். இப்போது அம்மோதிரத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு விடப் போகிறேன்…”

 

“எதற்காக அவனைத் தருவித்தாய்? அவனிடம் இவ்வளவு நேரம் என்ன சல்லாபம் செய்து கொண்டிருந்தாய்?”

 

“ஒரு முக்கியமான லாபத்தைக் கருதியே அவனுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தேன். நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவனால் பெரிய அனுகூலம் ஏற்படும்.”

 

“அடி பாதகி! கடைசியில் உன் பெண் புத்தியைக் காட்டி விட்டாயா? யாரோ முன்பின் தெரியாத வாலிபனிடம் நமது இரகசியத்தை…”

 

“வீணில் ஏன் பதறுகிறாய்? நான் ஒன்றும் அவனிடம் சொல்லிவிடவில்லை. அவனிடமிருந்துதான் இரகசியத்தைக் கிரஹித்துக் கொண்டேன்.”

 

“என்ன கிரஹித்துக் கொண்டாய்?”

 

“இவன் காஞ்சியிலிருந்து பழையாறைக்கு ஓலை கொண்டு போகிறான். பழையாறையிலுள்ள பெண் புலிக்குக் கொண்டு போகிறான், அதை என்னிடம் காட்டினான். அவள் கொடுக்கும் மறு ஓலையை என்னிடம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீ வந்து விட்டாய்.”

 

“ஓலையுமாயிற்று; எழுத்தாணியும் ஆயிற்று. இதனாலெல்லாம் நமக்கு என்ன உபயோகம்?”

 

“உன்னுடைய அறிவின் ஓட்டம் அவ்வளவுதான்! புலிக் குலத்தை அடியோடு அழிப்பது என்று நாம் விரதம் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் ஆண்புலிகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். பெண் புலியினாலும் குலம் வளரும் என்பதை மறந்து விட்டீர்கள். அது மட்டுமல்ல; தற்போது இந்தச் சோழ ராஜ்யத்தை ஆளுவது யார் என்று எண்ணியிருக்கிறாய்? பலமிழந்து செயலிழந்து நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் கிழவனா? காஞ்சியிலும் இலங்கையிலும் உள்ள இளவரசர்களா?…”

 

“இல்லை! உன்னை ராணியாகப் பெறும் பாக்கியம் பெற்ற தனாதிகாரி பழுவேட்டரையர்தான். இது உலகம் அறிந்ததாயிற்றே!”

 

“அதுவும் தவறு! உலகம் அப்படி எண்ணுகிறது; இந்தக் கிழவரும் அப்படி எண்ணியே ஏமாந்து போகிறார். நீயும் அந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறாய். உண்மையில் பழையாறையில் உள்ள பெண் புலிக்குட்டிதான் இந்த ராஜ்யத்தை ஆளுகிறது. அரண்மனைக்குள் இருந்தபடி அந்தக் கர்வக்காரி சூத்திரக் கயிற்றை இழுத்து எல்லாரையும் ஆட்டி வைக்கப் பார்க்கிறாள்! அவளுடைய கொட்டத்தை நான் அடக்குவேன். அதற்காகவே இந்த வாலிபனை உபயோகப்படுத்திக் கொள்ளப் போகிறேன்…”

 

ரவிதாசனுடைய முகத்தில் வியப்புக்கும் மரியாதைக்கும் உரிய அறிகுறிகள் தென்பட்டன.

 

“நீ பெரிய கைகாரிதான்; சந்தேகம் இல்லை; ஆனால் இதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம்? உன்னை எப்படி நம்புவது?” என்றான்.

 

“அந்த வாலிபனை உன்னிடமே ஒப்புவிக்கிறேன். நீயே அவனைச் சுரங்க வழியில் கோட்டைக்கு வெளியே அழைத்துக் கொண்டு போ! கண்ணைக் கட்டி அழைத்துக் கொண்டு போ! பழையாறைக்கு அருகில் சென்று காத்திரு! குந்தவை கொடுக்கும் மறு ஓலையுடன் இங்கே அவனை மீண்டும் அழைத்துக் கொண்டு வா! அவன் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாலும் உன்னை ஏமாற்றப் பார்த்தாலும் உடனே கொன்று விடு” என்றாள் நந்தினி.

 

“வேண்டாம்! வேண்டாம்! நீயும் அவனும் எப்படியாவது போங்கள்! அவனைச் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் கோட்டைக்குள் இப்போது தேடுகிறார்கள்; வெளியிலும் சீக்கிரத்தில் தேடப் போகிறார்கள். அவனோடு சேர்ந்து போனால் எனக்கும் ஆபத்து வரும். நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லு!”

 

“வந்த காரியம் என்னவென்று நீ இன்னமும் தெரிவிக்கவில்லை…”

 

“காஞ்சிக்கும் இலங்கைக்கும் ஆட்கள் போக ஏற்பாடாகி விட்டது. இலங்கைக்கு போகிறவர்கள் பாடு ரொம்பவும் கஷ்டம். அங்கே வெகு சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும்…”

 

“அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? இன்னும் பொன் வேண்டுமா? உங்களுடைய பொன்னாசைக்கு எல்லையே கிடையாதா?”

 

“பொன் எங்களுடைய சொந்த உபயோகத்துக்கு அல்ல; எடுத்த காரியத்தை முடிப்பதற்காகத்தான். பின் எதற்காக உன்னை இங்கு விட்டு வைத்திருக்கிறோம்? இலங்கைக்குப் போகிறவர்களுக்குச் சோழ நாட்டுப் பொன் நாணயத்தினால் பயன் இல்லை; இலங்கைப் பொன் இருந்தால் நல்லது…”

 

“இதைச் சொல்வதற்கு ஏன் இத்தனை நேரம்? நீ கேட்பதற்கு முன்பே நான் எடுத்து வைத்திருக்கிறேன்” என்று நந்தினி கூறி, தான் இருந்த மஞ்சத்தின் அடியில் குனிந்தாள். ஒரு பையை எடுத்து ரவிதாஸன் கையில் தந்தாள். “இது நிறைய இலங்கைப் பொற்காசு இருக்கிறது. எடுத்துக் கொண்டு போ! அவர் வரும் நேரமாகி விட்டது!” என்றாள்.

 

ரவிதாஸன் பையை வாங்கிக் கொண்டு புறப்பட்டபோது, “கொஞ்சம் பொறு! அந்த வாலிபனைக் கோட்டைக்கு வெளியிலாவது கொண்டு போய் விட்டு விடு! அப்புறம் அவன் வேறு பாதையில் போகட்டும்! சுரங்க வழியை அவனுக்கு காட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை!” என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று, இருண்ட மாளிகைப் பக்கம் பார்த்தாள்.

 

அங்கே ஒன்றும் தெரியவில்லை விரல்களினால் சமிக்ஞை செய்தாள்; இலேசாகக் கையைத் தட்டினாள்; ஒன்றிலும் பலன் இல்லை.

 

அவளும் ரவிதாசனும் லதா மண்டபப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றார்கள். அந்தப் பிரம்மாண்டமான இருள் மாளிகையில் அங்கிருந்து பிரவேசிக்கும் வாசலை நெருங்கினார்கள்.

 

ஆனால் வந்தியத்தேவனைக் காணவில்லை! சுற்றும் முற்றும் நாலாபுறத்திலும் அவனைக் காணவில்லை!




Comments are closed here.

You cannot copy content of this page