Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-41(Final)

அத்தியாயம் – 41

 

கார்முகிலனின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், கல்லூரி வளாகத்திலேயே கைக்கலப்பில் ஈடுபட்டதாலும் கல்லூரி நிர்வாகம் அவனைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்தது. அதற்காக அவன் துளியும் வருந்தவில்லையோ அல்லது தன் வருத்தத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லையோ… வீட்டில் இருப்பவர்களிடம் மிக இயல்பாக இருந்தான். மதுமதிக்குத் தான் கவலையாக இருந்தது. தன்னால் தான்  இப்படியெல்லாம் நடக்கிறதோ என்று உறுத்தலாக இருந்தது.

 

மனசாட்சியின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் சில சமயம் சோர்ந்து போய்த் தனிமையில் அமர்ந்திருப்பாள். அப்படித்தான் ஒரு நாள் மாலை, தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவள் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த போது முகிலன் அங்கு வந்தான்.

 

“என்ன மதி..? ஏன் இங்க வந்து தனியா உட்கார்ந்திருக்க?”

 

“ப்ச்… ஒண்ணுல்ல…” – அலுப்புடன் கூறினாள்.

 

“பார்த்தா அப்படித் தெரியலயே”

 

அவள் திரும்பி அவன் முகம் பார்த்தாள். ‘என்ன..?’ – என்று புருவம் உயர்த்திக் கண்களால் கேட்டான்.

 

“சாரி மாமா…” – வருத்தம் இழையோடும் குரலில் கூறினாள்.

 

“ப்ச்… இன்னும் எத்தனை தடவ தான் சாரி கேட்ப..? அதுவும் காரணமே இல்லாம…”

 

“காரணமெல்லாம் இருக்கு… நான் தானே…”

 

“ஐயையோ… தாயே என்னை விட்டுடுடி… இதுக்கு மேல என்னால அந்தப் புராணத்தக் கேட்க முடியாது….” – அலறினான்.

 

சீரியசாக அவன் கொடுத்த அதிகப்படியான ரியாக்ஷனில் ஒரு நொடி திகைத்தவள் பின் சிரித்துவிட்டாள்.

 

“என்ன மாமா நீங்க… நானே வருத்ததுல பேசறேன். நீங்க கிண்டல் பண்றீங்க…”

 

“எதுக்கு வருத்தம்னு கேக்கறேன்? நானே வாழ்க்கையில இப்போ தான் முழுச் சந்தோசத்தோட இருக்கேன். இப்ப எதுக்கு நீ வருத்தப்பட்டு என்னையும் மூட் அவுட் பண்ணுறேன்னு கேக்கறேன்..?” – உண்மையிலேயே அவன் மகிழ்ச்சியாகத்தான இருக்கிறான் என்பதை அவனுடைய உற்சாகமான குரல் உறுதி செய்தது.

 

“என்ன மாமா சொல்றீங்க..? உங்கள சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களேன்னு நீங்க ஃபீல் பண்ணவே இல்லையா?”

 

“இல்லவே இல்ல… ரொம்ப வருஷத்துக்குப் பிறகு மனசுல எந்தக் குறையும் இல்லாம இப்போ தான் நான் நிம்மதியா இருக்கேன். முன்னாடில்லாம் அம்மா இறந்துட்ட சோகம்… அக்கா மேல கோபம்… அத்தான் மேல வெறுப்பு… அவங்க மேல இருக்கிற கோபத்துல உன்னைக் கஷ்டப்படுத்துறோமேங்கிற குற்ற உணர்ச்சி… நீலாவோட மரணத்துக்கு நாம காரணம் ஆயிட்டோமேங்கிற உறுத்தல்… உன்னைப் பிரிஞ்சுட்ட கஷ்டம்… அப்புறம் நாம சேர்ந்துட்ட பிறகும் உனக்கு என் மேல கோபம் குறையலங்கிற மனக்கஷ்டம்… நீலவேணிகிட்ட மட்டமா ஏமாந்து வாழ்க்கையை நாசம் பண்ணிக்கிட்டோமேங்கிற உறுத்தல்… இப்படி இவ்வொரு டைம்லேயும் ஒவ்வொரு விதமான கஷ்டம்…”

 

“அதுக்காக நான் சந்தோஷமாவே இல்லன்னு சொல்ல முடியாது… தர்மா சார் கிடைச்சது… நம்ம கல்யாணம்… யாழிகுட்டி… இதெல்லாம் எனக்கு வாழ்க்கையோட அழகான பக்கத்தை எடுத்துக்காட்டி சந்தோஷத்த உணர வச்ச விஷயங்கள். ஆனா முழுசா சந்தோசத்த அனுபவிக்க முடியாம சில எமோஷ்னல் தடைகள் எனக்குள்ள இருந்துகிட்டே இருந்தது. அது எதுவுமே இல்லாம இன்னைக்கு நிம்மதியா இருக்கேன். தர்மா சார், அக்கா, அத்தான், நீ, யாழிகுட்டி எல்லாரும் என்னோட இருக்கீங்க. எனக்கு வேற என்ன வேணும். இது எல்லாமே எனக்குக் கிடைக்கறதுக்கு இந்த வேலை தான் விலைன்னா போயிட்டுப் போகட்டுமே… எனக்குக் கவலை இல்ல…” – அவளைச் சமாதானம் செய்வதற்காக அவன் ஒப்புக்குப் பேசவில்லை என்பதைக் கூர்மையான அவன் கண்களும் தெளிவான குரலும் உறுதியாகக் கூறின.

 

அவனுடைய மகிழ்ச்சியைத் தன்னுடைய மகிழ்ச்சியாகப் பாவிக்கும் குணமுடைய மதுமதி, கணவன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்கிற அளவில் ஆறுதலடைந்தாள். கணவனைப் பார்த்து உயிர்ப்புடன் புன்னகைத்தாள். அவன் முகத்தில் சிரிப்பு தோன்றவில்லை. மாறாக மதுமதியின் கண்களைக் கூர்ந்து நோக்கியபடியே, “ஒண்ணுமே இல்லாத பாலைவனத்துல கொண்டு போய் விட்டாக் கூட நான் பொழச்சுக்குவேன் மதி… ஆனா…” என்று இழுத்தான்.

 

“ஆனா…” மதுமதி எடுத்துக் கொடுத்தாள்.

 

“ஆனா… என்கூட நீ இருக்கணும். எப்பவும்…”

 

“உங்ககூட இல்லாம நான் எங்க போய்ட போறேன்..?” – புரியாமல் கேட்டாள்.

 

“எங்கேயும் போகப் போறது இல்லையா?” – கண்களில் அதே தீவிரம்.

 

“எங்க போகப் போறேன்..?” – அப்போதும் குழப்பத்துடனே கேட்டாள்.

 

“பெங்களூர்க்கு..?”

 

“பெங்களூர்க்கா… எதுக்கு..?”

 

“அன்னிக்கு குணாகிட்டச் சொன்னியே… பெங்களூர்க்கு வர்றேன்னு… அவன்கூட உனக்கு ஜாப் ரெடி பண்ணினானே…” – இனி அவள் தன்னை விட்டுப் போகமாட்டாள் என்கிற நம்பிக்கை இருந்த போதும் பழைய நினைவில் சிறு ஊடலுடன் கேட்டான்.

 

அவன் அப்படி உரிமையும் ஊடலுமாகப் பேசுவதை ரசித்த மதுமதி அவனைப் பார்த்துக் கலகலவெனச் சிரித்தாள். “எதுக்குச் சிரிக்கற?”

 

“ஹாஹா… சிரிக்காம என்ன மாமா செய்வாங்க..? இருக்கற பிரச்சனைப் பத்தாதுன்னு இதை வேற உங்க மனசுல போட்டுக் குழப்பிக்கிட்டு இருந்தீங்களா? ஹையோ மாமா… அப்படில்லாம் ஈஸியா உங்கள விட்டுட்டுப் போய்டுவேனா…” கிண்டலாகவே கேட்டாள்.

 

“அதானே… நீதான் கோவமா இருந்தாக் கூட… கூடவே இருந்து ஒருவழி பண்ணுற ஆளாச்சே… இப்ப வேற மாதிரி முடிவெடுக்குறியோன்னு எனக்கு டவுட்டா தான் இருந்துச்சு. ஆனா குணா தான் உன்ன குழப்புறானோன்னும் தோணுச்சு. அதான் மனசுக்குள்ள ஒரு பயம்… அந்த டைம் நான் கொஞ்சம் வீக்கா தான் ஆயிட்டேன்…”

 

“ம்ம்ம்… குணா அண்ணன் என்னை கன்வின்ஸ் பண்ணினதெல்லாம் உண்மைதான். ஆனா நான் அப்போவே சொல்லிட்டேன். தேனியை விட்டு நகர மாட்டேன்னு…” – இருவரும் மனம் விட்டுச் சிரித்தார்கள்.

 

அன்றிலிருந்து சரியாக இருபத்தி மூன்றாவது நாள்… தேனி நீதிமன்றம்… அளவில் ஓரளவு சுமாரான கட்டிடம் தான்… ஆனால் பல அறைகள் இருந்தன. அவற்றில் சில அறைகள் அலுவலக அறைகளாகவும், சில அறைகள் வழக்கறிஞர்களுக்காகவும் நீதிபதிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றச் சில அறைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அவற்றில் ஓர் அறை வாசலில் தர்மராஜோடும், தன் பக்கத்து வழக்கறிஞரோடும் காத்துக் கொண்டிருந்தான் முகிலன். ஒலிப்பெருக்கியில் அவனுடைய வழக்கு எண் அறிவிக்கப்பட்டது. எல்லோரும் உள்ளே சென்றார்கள்.

 

குமாஸ்தா குற்றப்பத்திரிக்கையை வாசித்தார். கார்முகிலனின் பெயர் அழைக்கப்பட்டது. விசாரணைக் கூண்டில் வந்து நின்றான். சத்திய பிரமாணம் வாங்கப்பட்டது.

 

“குற்றத்த ஒத்துக்கறியாப்பா?” – நீதிபதி கேட்டார்.

 

“ஆமாம்… ஒத்துக்கறேன்” – தயக்கமில்லாமல் கூறினான். கண்ணாடியைச் சரி செய்து கொண்டு கையிலிருந்த காகிதத்தில் எதையோ குறித்துக் கொண்டார்.

 

“நீ அப்படி நடந்துகிட்டதுக்கு ஏதாவது காரணமிருக்கா?” – மீண்டும் முகிலனைப் பார்த்துக் கேட்டார்.

 

“இருக்கு சார்…”

 

“உன் சார்பா வக்கீல் யாராவது ஆஜர் ஆகறாங்களா?”

 

“எஸ் யுவர் ஆனர்…” கிருபாகரன் எழுந்து நீதிபதியை வணங்கிவிட்டுத் தன்னுடைய கட்சிக்காரருக்காக வாதாடினார்.

 

“சம்பவம் நடந்த இடம் குற்றம் சாட்டப்பட்டுள்ள என் கட்சிகாரர் கார்முகிலன் வேலை செய்யும் கல்லூரி. எனவே கார்முகிலன், கதிரவனையோ தாமோதரனையோ தேடிச்சென்று பிரச்சனை செய்யவில்லை”

 

“கதிரவனும் தாமோதரனும் குடித்துவிட்டுக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார்கள். ப்ரூஃப்… கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் எடுக்கப்பட்ட கதிரவன் மற்றும் தாமோதரனின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை” – கையிலிந்த மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

 

“கல்லூரி வளாகத்தில் குடி வெறியில் கார்முகிலனையும் அவரைச் சேர்ந்தவர்களையும் கொச்சை வார்த்தைகளால் இழிவு படுத்தியிருக்கிறார்கள். ஒதுங்கிப் போக முயன்ற என் கட்சிக்காரரை மேலும் வார்த்தைகளால் காயப்படுத்தி அவருடைய தன்மானத்தைச் சீண்டி வம்புக்கு இழுத்து அவரைக் காயப்படுத்த முயன்றிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கார்முகிலன் தன்னைக் காத்துக்கொள்ள முயன்ற போது இரு தரப்பினருக்குமே உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. வாதி கதிரவனும், தாமோதரனும் குடிபோதையில் இருந்ததால் நிதானமின்றிக் கீழே விழுந்து அதிகமாகப் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். விட்னஸ் சம்பவ இடத்தில் இருந்த வாட்ச்மேன் மற்றும் பியூன்”

 

வாதம் முடிந்த பிறகு கதிரவன் மற்றும் தாமோதரனின் பெயர்கள் அழைக்கப்பட்டன. வழக்கம் போல் சத்திய பிரமாணமும் வாங்கப்பட்டது.

 

“பிரச்சனை நடந்தது எங்கன்னு சொல்ல முடியுமா?” – கிருபாகரனின் குறுக்கு விசாரணை ஆரம்பமானது.

 

“எ.ஆர்.எம் காலேஜ்…”

 

“அங்க எதுக்காக நீங்க போனீங்க..?”

 

“கார்முகிலனைப் பார்க்க…”

 

“அவரை எதுக்காகப் பார்க்கப் போனீங்க…”

 

“சும்மா… தெரிஞ்சவரு…”

 

“எப்படித் தெரிஞ்சவரு..?”

 

அவ்வளவு தான்… கதிரவன் மாட்டிக்கொண்டான். கலைவாணியின் பெயரை சொல்லலாமா வேண்டாமா என்று விழித்தான். ஒரமாக நின்று கொண்டிருந்த தந்தையைத் திரும்பிப் பார்த்தான். அவர் சொல்லாதே என்று கண்களால் சைகை காட்டினார். அதற்குப் பிறகு அவனால் எந்தக் கேள்விக்கும் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை. நண்பன் பதில் சொல்லாததால் தாமோதரனும் உண்மையைப் பேசவில்லை. இருவரும் முன்னுக்குப் பின் முரணாக உளறினார்கள்.

 

கதிரவனின் பலவீனம் என்னவென்று கருணாகரனுக்குப் புலப்பட்டுவிட்டது. அவன் கலைவாணியின் பெயரை கோர்ட்டில் சொல்ல விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். அதனால் பிரச்சனைக்கான காரணம் என்ன..? என்னவிதமான வாக்குவாதம் நடந்தது..? எப்படி அடிதடி ஆரம்பித்தது..? யார் முதலில் அடித்தார்கள்..? என்ன சொன்னதால் அடித்தார்கள்..? என்பது போல் மடக்கி மடக்கி கேள்வி கேட்டார். கதிரவன் திணறிவிட்டான். எங்கே தாமோதரன் உளறிவிடுவானோ என்கிற பயத்தில் உடனடியாகப் பின்வாங்கினான்.

 

“சும்மா தான் பேசிக்கிட்டிருந்தோம்… அப்புறம் வாக்குவாதமாயிடுச்சு… நாங்களும் அடிச்சோம்… அவரும் அடிச்சாரு… சண்டையாயிடுச்சு…” – பூசிமொழுகி பேசினான். தாமோதரனும் அவனை ஒத்தூதினான்.

 

கதிரவனின் பக்கமிருக்கும் நியாயம் வலுவிழந்தது. உடம்பில் காயமும்… அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சான்றும் இருந்தால் இந்த வழக்கில் வென்றுவிடலாம் என்கிற அதிகப்படியான நம்பிக்கையால் அவன்தன் பக்கத்திற்கு வாதாடவென்று தனியாக ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொள்ளாததும் அதற்கு ஒரு காரணமாகிவிட்டது.

 

“உன் பக்கத்திற்கு வாதாட வழக்கறிஞர் யாரையாவது ஏற்பாடு செய்து கொள்கிறாயா… அவகாசம் வேண்டுமா?” என்று நீதிபதி கேட்கத்தான் செய்தார். ஆனால் ஏனோ கதிரவனின் தந்தை வேண்டாம் என்று சைகை செய்ததால் இவனும் மறுத்துவிட்டான். மேலும் மேலும் சிக்கலைப் பெரிதாக்கினால் தன் பெண்ணின் பெயர் இதில் அடிபட்டுவிடுமோ என்கிற பயம் அவருக்கு.

 

நீதிபதி கோபமானார். “எதுக்குயா இந்த மாதிரி கேஸ் எல்லாம் கோர்ட் வரைக்கும் கொண்டு வந்து கோர்ட்டோட டைம வேஸ்ட் பண்றீங்க..?” என்று இன்ஸ்பெக்டரைப் பார்த்து எரிச்சலுடன் கேட்டார்.

 

குற்றம் சாட்டப்பட்டிருந்த கார்முகிலன் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தாலும், குற்றம் நடந்த சூழ்நிலை… கதிரவன் மற்றும் தாமோதரனின் வாக்குமூலம் மருத்துவப் பரிசோதனை அறிக்கை அனைத்தும் கார்முகிலனுக்குச் சாதகமாக அமைந்துவிட்டதால் நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு… நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக கதிரவனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

 

வீரராகவனுக்கு உடல்நிலை வெகுவாய்த் தேறிவிட்டது. அவருடைய கவனம் குடும்பத்தின் மீது திரும்பியது. சில நாட்களாக மருமகன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருப்பதைக் கவனித்துவிட்டு மனைவியிடம் மெதுவாக விசாரித்தார். விஷயத்தின் வீரியத்தைக் குறைத்து கௌசல்யா கணவனுக்குத் தெரியப்படுத்தினாள். அந்தப் பிரச்னையை அவர் இயல்பாக எடுத்துக்கொண்டார். மருமகனிடம் மருத்துவமனையின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும்படி கூறினார். ஆனால் சொந்த முயற்சியை மூலதனமாக நினைக்கும் முகிலன் பிடிகொடுக்காமல் சுற்றிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் தான் முகிலன் மீண்டும் பணியில் சேர்ந்து கொள்ள வேண்டி அழைப்பு வந்திருந்தது.

 

கார்முகிலன் இழந்த வேலை அவனுக்கு மீண்டும் கிடைத்துவிட்டது என்றதும் மதுமதிக்குள் ஒளிந்திருந்த கொஞ்சநஞ்ச குற்ற உணர்ச்சியும் காற்றில் கரைந்த கற்பூரம் போல் கரைந்துவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தாள். முகிலனையும் மதுமதியையும் தவிர வீட்டில் வேறு யாருக்கும் பெரிதாக மகிழ்ச்சியில்லை. எல்லோருமே அவன் மருத்துவமனை நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று தான் விரும்பினார்கள். ஆனால் அவனுடைய விருப்பம் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் இருந்ததால் ஒருவரும் அவனைக் கட்டாயப்படுத்தவில்லை.

 

முகிலனை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும் அவன் மதுமதியை ஒரு விஷயத்தில் கட்டாயப்படுத்தினான். அவள் மருத்துவமனை நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினான். அதை வற்புறுத்தல் என்று கூடக் கூற முடியாது. திறமை இருந்தாலும் ‘மேனஜ்மெண்ட் பத்தி எனக்கு என்ன தெரியும்…!’ என்று பயத்தில் ஒதுங்க நினைத்தவளை “அதெல்லாம் எனக்குத் தெரியாது… உன்னால முடியும்… நீ நாளையிலேருந்து ஹாஸ்பிட்டல் போற…” என்று கட்டாயப்படுத்துவது போன்ற பாவனையில் ஊக்கப்படுத்தினான். அவளும் யோசித்துப் பார்த்தாள். ‘ஏன் முயற்சி செய்யக்கூடாது..?’ என்று தோன்றியது. மெல்ல மெல்ல பயமும் விலக ஆரம்பித்தது.

 

முகிலன் மீண்டும் கல்லூரியில் சேர்ந்துவிட்டான். மதுமதி மருத்துவமனைக்குச் செல்ல ஆரம்பித்து ஒருவாரம் ஆகிவிட்டது. வீரராகவனுக்கு உடல்நிலை முற்றிலும் குணமாகிவிட்டதைத் தொடர்ந்து தங்களுடைய வீட்டிற்குப் புறப்பட்ட பெற்றோரை, குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற காரணத்தைக் காட்டி லக்ஷ்மிபுரத்திலேயே தங்கும்படி கேட்டுக்கொண்டாள் மதுமதி. ஆனால் கெளசல்யாவிற்குத் தான் தன்னுடைய தோட்டத்தைப் பிரிந்து இருக்க முடியவில்லை.

 

பேத்தியைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற கடமை அவளை லக்ஷ்மிபுரத்திலேயே தங்கும்படி கூறினாலும்… குழந்தை போல் பார்த்துப் பார்த்து வளர்த்த தோட்டம் அங்கு வாடிக் கொண்டிருப்பதை நினைக்கும் பொழுது இங்கு இவளுக்குத் தூக்கமே வராது. தாயின் மனதை நன்கு புரிந்து கொண்ட மதுமதி அவர்களை காம்காபட்டிக்கு அனுப்பிவைக்க முடிவு செய்துவிட்டாள். ஆனால் வேலைக்குச் செல்ல முடிவு செய்துவிட்ட பிறகு குழந்தையை வேலைக்காரர்களை முழுமையாக நம்பி எப்படி விடுவது என்கிற கவலை மதுமதியை ஆக்கிரமித்தது. அப்போது கொஞ்சமும் எதிர்பார்க்காத விதமாக தர்மராஜ் உதவிக்கு வந்தார்.

 

“கௌசல்யா போனா என்ன..? நான் எதுக்கு இருக்கேன்..? என் பேத்திய நான் பார்த்துக்க மாட்டேனா?” என்றார் வழக்கம் போல் தடாலடியாக.

 

“தாத்தா…!” – மதுமதி ஆச்சர்யத்துடன் விழிவிரித்தாள்.

 

“என்ன இப்படி முழிக்கற? இனி தேனில என்னாலேயும் தனியா இருக்க முடியாது. வயசான காலத்துல எனக்கும் எதாவது ஒரு பொறுப்பு இருந்தாதான் வாழ்க்கை அலுப்புத்தட்டாம போகும். இனி யாழிகுட்டிய பார்த்துக்கறது தான் என்னோட வேலை… நீ இப்படி மூஞ்ச சுளிச்சுக்கிட்டுத் திரியாம வேலைய பாரு…” – வழக்கமான அவருடைய அதட்டலில் வழக்கம் போல் கோபமில்லாமல் பாசம் மட்டுமே நிறைந்திருந்தது.

 

அன்றிலிருந்து காலையும் மாலையும் வாக்கிங் செல்லும்பொழுது யாழினியை வெளியே தூக்கிச் செல்வது அவருடைய முதல் வேலை. ராதா யாழினிக்கு உணவு கொடுப்பதிலிருந்து குளிக்க வைப்பது… உறங்க வைப்பது என்று எதைச் செய்தாலும் அதைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணிப்பது இரண்டாவது வேலை. குழந்தையை வாரத்திற்கு ஓரிரு நாட்கள் காம்காபட்டிக்குத் தூக்கிச் சென்று வருவது அடுத்த வேலை… இப்படியே அவருடைய வயோதிகம் விருப்பமான வேலைகளைச் செய்வதில் இன்பமாகக் கழிந்தது.

 

அந்தக் குடும்பத்தைச் சுற்றிக் கொண்டிருந்த அத்தனை பிரச்சனைகளும் ஒவ்வொன்றாகக் கலைந்தோடிவிட்டது. கார்முகிலனும் மதுமதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த சமயம்… ஒருநாள் முகிலன் மனைவியையும் குழந்தையையும் வெளியே அழைத்துச் சென்றிருந்தான். அது ஒரு ரெஸ்டாரண்ட்…

 

கார்முகிலன் குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது அங்கே தோழிகளுடன் உள்ளே வந்த கலைவாணி முகிலனை நேருக்கு நேர் மிக அருகில் பார்த்துவிட்டாள். ஏனோ முகம் குப்பென்று வியர்த்துவிட்டது. உள்ளுக்குள் ஒரு நடுக்கம் பிறந்தது.

 

‘பேசலாமா… வேண்டாமா.. பேசினால் திட்டிவிடுவாரோ… பேசாமல் சென்றால் தவறாக நினைப்பாரோ…’ – ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலைபாய்ந்தன. பேச வேண்டும் என்கிற ஆசையும், பேசினால் திட்டிவிடுவாரோ என்கிற பயமும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. அவனுக்கு எதிர்பக்கத்தில் குழந்தைக்கு ஏதோ ஊட்டிவிட்டபடி அமர்ந்திருந்த மதுமதியைப் பார்க்க கூடப் பயமாக இருந்தது. திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தாள்.

 

ஆனால் அவளைப் பார்த்த அடுத்த நொடியே மெல்லிய புன்னகையுடன் மிக இயல்பாக “ஹேய் காமெடி குயின்… எங்க இந்தப் பக்கம்..?” என்றான் கார்முகிலன்.

 

கலைவாணியின் முகத்தில் சட்டென்று ஒரு பிரகாசம் வந்தது. நாக்குழற, “குட்… குட் ஈவ்…னிங்… சா…சார்…” என்று உளறினாள்.

 

“என்னாச்சு..? எதுக்கு இப்படி வாயிலயே டைப் அடிக்கற?” – எப்பொழுதும் போல் வம்பிழுத்தான்.

 

கார்முகிலன் எந்தத் தயக்கமும் இன்றி எப்பொழுதும் போல் பேசியதில் அவளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. கண்கள் கூட லேசாகக் கலங்கியது போல் தோன்றியது. மதுமதியின் பக்கம் தயக்கத்துடன் திரும்பினாள். அவளோ பளிச்சென்ற புன்னகையுடன் “நல்லா இருக்கியா கலைவாணி..?” என்றாள்.

 

கார்முகிலன் அவளிடம் சகஜமாக நடந்து கொண்டது கூட வியப்பில்லை. ஆனால் மதுமதியின் புன்னகை தான் அவளுக்குப் பேரதிசயமாக இருந்தது. ‘ஹே… இவங்க நம்மள பார்த்துச் சிரிக்கறாங்க…!!!’ – பேரின்பத்துடன் “ஆங்… நல்லா இருக்கேன்… நீங்க நல்லா இருக்கீங்களா?” என்றாள் உற்சாகமாக. மதுமதி கலைவாணியைத் தனக்கருகில் அமரும்படி கூற அவளும் மறுக்காமல் அமர்ந்து மதுமதியோடு சிரித்துச் சிரித்து மகிழ்ச்சியாகப் பேசினாள். குழந்தையைக் கொஞ்சினாள்.

 

“ப்ராஜெக்ட்ட ஒழுங்கா முடிச்சியா இல்லையா?” – முகிலன் விசாரித்தான்.

 

“அதெல்லாம் முடிச்சுட்டேன் சார்…” – ‘ஈஈஈ…’ என்று பல்லைக் காட்டிக்கொண்டு பெருமிதமாகக் கூறினாள். அதன்பிறகு ப்ராஜெக்ட் சம்மந்தமாகச் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று அமைதியானாள். பின் “சாரி சார்…” என்றாள்.

 

அவள் எதற்காக மன்னிப்புக் கேட்கிறாள் என்பது புரிந்ததால், அவன் மென்மையாகப் புன்னகைத்தான். உள்ளார்ந்த அன்பு தெரிந்தது அந்தப் புன்னகையில்.

 

“யாழி பெரியவளா ஆனா உன்ன மாதிரி தான் இருப்பா கலை… வாலு பிள்ளையா…” என்று கலைவாணியிடம் கூறியவன் மனைவியைப் பார்த்து “இல்ல மதி..?” என்றும் மறக்காமல் கேட்டுக் கொண்டான்.

 

“கண்டிப்பா…” – மதுமதி கலைவாணியைத் தோளோடு அணைத்துக் கொண்டாள்.

 

“சரி நீ கிளம்பு.. உன் ஃப்ரண்ட்ஸ் பட்டாளமெல்லாம் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு…”

 

சில நாட்களாக ஒருவித உறுத்தலில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த கலைவாணியின் மனம் இன்று மகிழ்ச்சியில் துள்ளியது. “தேங்க் யு சார்… வர்றேன்… வர்றேன் மேம்… குட்டி டாட்டா…” என்று சிரித்த முகமாக விடைபெற்றுச் சென்றாள்.

 

கலைவாணி அங்கிருந்து சென்ற பிறகு முகிலன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்.

 

“என்ன?” – அவனுடைய பார்வைக்கான அர்த்தம் புரியாமல் கேட்டாள்.

 

“என்ன இன்னிக்குக் கலைவாணிகிட்ட இவ்ளோ பாசமா பேசற? ரெண்டுபேரும் எலியும் பூனையுமா இருப்பீங்க?”

 

“ஹா ஹா… எலியும் பூனையுமா! அப்படில்லாம் இல்ல… கொஞ்சம் ‘மெச்சூரிட்டி’ இல்லாத சின்னப் பொண்ணு… அதைப் புரிஞ்சுக்காம நான்தான் கொஞ்சம் அதிகப்படியா ரியாக்ட் பண்ணிட்டேன். அதனால தான் கொஞ்சம் குளிப்பாட்டி அனுப்பினேன்…” – சிரித்துக்கொண்டே கூறினாள்.

 

“ஓ.. வெறும் குளிப்பாட்டல் தானா? உண்மை இல்லையா..?” –

 

“உண்மையா…!!! ம்க்கும்… என் பொண்ணு பெரியவளான பிறகு என்ன மாதிரி தானே இருப்பா… கலைவாணி மாதிரி இருப்பாளாக்கும்..?” – நொடித்துக் கொண்டாள்.

 

மனதில் கோபம் சிறிதும் இல்லையென்றாலும் நொடிப்பது போல் சிரித்துக் கொண்டே நடிக்கும் மனைவியின் ரியாக்ஷனைப் பார்த்து கார்முகிலன் கடகடவெனச் சிரித்தான்… அவன் சிரிக்கும் அழகைப் பார்த்து அவள் ரசித்துச் சிரிக்க… குழந்தை பயந்து போய் அழுதது.

 

“ஆஹா… குழந்த பயந்துட்டா மாமா… வால்யூம குறைங்க…” – அவள் மகளைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டே கணவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது… அவனுக்கருகில் இருந்த மதுமதியின் கைப்பேசி சத்தமிட்டது.

 

“யாருன்னு பாருங்க…” – மதுமதி கூறினாள்.

 

“அட…! நம்ம மச்சான்…!!”

 

“மச்சானா…! யாரு..?” – மதுமதி குழப்பத்துடன் கேட்டாள். அவன் கைப்பேசியின் திரையை அவளிடம் திருப்பிக் காட்டினான். திரையில் குணாவின் பெயர் ஒளிர்ந்தது.

 

“குணா அண்ணனா…!” – மதுமதியின் விழிகள் வியப்பில் விரிய குறும்பு சிரிப்புடன் அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டிவிட்டு போனை ஆன் செய்து, “ஹலோ… சொல்லுங்க மச்சான்…” என்றான் முகிலன்.

 

“ஹாங்…!!!” – மதுமதி இங்கே வாயைப் பிளக்க… அங்கே குணா வாயைப் பிளந்தான்.

– நிறைவடைந்தது.

 




6 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    D Deepa D deepa says:

    Happy ending


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    sumathi A mathim says:

    beautiful,lovable story with heart full of feelings.wonderful,hats off to you for giving such a marvelous story


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you so much… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thamizhselvi Ramasamy says:

    I’m new to sahaptham. I’ve already read this story.thanks for giving an opportunity to read it again.expect more and more from sahaptham.much impressed by the name SAHAPTHAM.thank you.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ramya Raja says:

    Hi Nithya,
    This is Ramya .niyabagham iruka intha storyku daily update padichu review poduven ladys wingsla .Ippo padichalum antha pazhaya effect super Nithya


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Oh! Thank you so much Ramya… Welcome to Sahaptham… Happy to see you here… matra stories kum unga support kodunga… ippo kanalvizhi kadhal ennoda new story… padichcuttu pidichchirukaa sollunga…

You cannot copy content of this page