குற்றப்பரிகாரம் – 29
1480
0
அத்தியாயம் – 29
டிஐஜி.,யின் உதவியால், டிஜிபி.,யிடம் இரண்டே இரண்டுநாள் அவகாசம் மட்டும் கேட்டு வாங்கினான். அவர் இறுதியாக சொன்ன வார்த்தைகள், மீண்டும் மீண்டும் காதுகளில் எதிரொலித்தன.
“தீபக்., சி.எம்.,க்கு பதில் சொல்ல முடியல
வழக்கை சிபிசிஐடியிடமோ அல்லது சிபிஐ இடமோ பரிந்துரைக்கப் போவதாக சொல்கிறார். அவருக்கு எதிர்கட்சிகளிடமிருந்து ப்ரஷர். அயல்நாடு சம்பந்தம் வேற. அதனால மத்திய அரசும் பிடுங்கி எடுக்கிறது. அரசியல், மீடியா என அக்குவேறு ஆணி வேறாக பிரிப்பதாகவும், வேதனைப் படுகிறார்.
நீங்கதான் இந்த கேஸை பெர்ஸனலா டீல் பன்றதா டிஐஜி சொன்னார். உங்களை எனக்கு பரிச்சயமில்லை. ஆனா, உங்கப்பா கர்னல் தீனதயாளை நல்லா தெரியும். அவருடைய வளர்ப்பு நீங்கள். புலிக்கு பிறந்தது புலியாகத்தான் இருக்கும்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. ரெண்டுநாள் அவகாசம் தரேன். அதுக்குள்ள கேஸை முடிவுக்கு கொண்டு வாங்க. இல்லைனா, நானே நினைச்சாலும், ஒன்னும் பண்ண முடியாது. இலாகா மாறிடும். நம்ம பேர் நாறிடும்” என்றார்.
மனதில் அதை மட்டும் தேக்கி வைத்து, பத்து நிமிடங்கள் அமைதியாக தியான நிலையில் அமர்ந்து எழுந்ததும் எழுதத் துவங்கினான்…
உருகுவே அமைச்சர்,
இணையமைச்சர்,
ஜான்,புஜ்ஜி,மாரி,ராஜி,
ரெட்டி,சுலைமான்,அறிவு
ரஹீம், மாணிக்கம், வக்கீல்,வாசு,
பாண்டிச்சேரி இரு ரௌடிகள்…
இன்றும் தொடரலாம்.
ஒவ்வொருத்தர் ஜாதகத்தையும் மீண்டும் மீண்டும் படித்தான். கொலைக்கும் கடத்தலுக்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடு இருப்பது போலவே இருந்தது. வட்டங்கள் சுருக்கின.
ஏன் கொலை!
பின் ஏன் கடத்தல் மட்டும்…. இந்த பாய்ண்ட் நெருடியது. ஆனால், செய்த எல்லா செயலும் அதர்மத்தை விரும்பாதவைப் போல்.
இன்னொரு விஷயமும் நெருடியது.
ரௌடிகள் மூவரும், வக்கீலும் ஒரே நாளில் தொலைந்துள்ளனர். அதுவும் கோர்ட்டிலிருந்து திரும்புகையில். ஏன் பர்டிகுலரா கோர்ட்டிலிருந்து திரும்பும் போது! அவர்களை கடத்த வேறு இடமில்லையா? கோர்ட்டிற்கு செல்லும் போதோ அல்லது அதற்கு முன்போ ஏன் கடத்தப்படவில்லை. நால்வருக்கும் கோர்ட்டில் அன்று என்ன வேலை. மூன்று குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழக்கு. ஒருவர் ஜாமீன் வாங்கிக் கொடுக்க வாதாடியவர்! பாண்டியிலும் தானே வக்கீல்கள் வாதாடினர். அவர்கள் ஏன் கடத்தப்படவில்லை!
அப்படி என்ன சென்னை வக்கீல் மட்டும் முக்கியம்! என்று யோசித்தபடியே அவரின் குறிப்புகளை கண்களில் ஓட்டியவன் மனது துள்ளியது. ஆஹா., சார் ஜாமீன் ஸ்பெஷலிஸ்ட். ஜாமீன் கிடைப்பது கடினம் என்னும் நிலையில் உள்ள குற்றவாளிகள், தங்கள் வழக்கை இவரிடம் தள்ளுகிறார்கள்! மனுஷன் எப்பாடுபட்டாவது ஜாமீன் வாங்கித் தந்துவிடுவார்! ஆக…
வக்கீல், வாசுவிற்கு ஜாமீன் வாங்கித் தந்த போது கடத்தப்பட்டார்…
வாசு ஜாமீன் வாங்கும் போது கடத்தப்பட்டான்…
பாண்டியில் இரண்டு ரௌடிகள் ஜாமீன்…
தீபக்கிற்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது. ஏன்? ஏன் அப்படி இருக்கக்கூடாது?
சரி அதற்கும் கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்? முதலில் கொலை செய்யப் பட்டவர்கள் யார்? அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன சம்பந்தம் இருக்கக்கூடும்! இருக்கும் இல்லாமல் இருக்காது! கொலையாளியைப் பிடிச்சா கடத்தலைத் தடுக்கலாம்.
தீபக் தீபக் கிட்ட வந்துட்ட
யோசி! யோசி! எழுது!
உருகுவே ஜாதகம்! படிப்பு! கல்லூரி படிப்பு! தொழில்! நடத்தைகள்!
அமைச்சர் ஜாதகம்! படிப்பு! கல்லூரி படிப்பு! தொழில்! நடத்தைகள்!
ஒட்டுகிறது! இணை அமைச்சர் பார்ட்னராய் இருந்தக் கல்லூரியில் தான் உருகுவே படித்துள்ளான். அப்போ அந்தக் கல்லூரியில் இருக்கிறது முடிச்சு. அட கூப்பிடு தூரத்தில் இருக்கான் நம்மாளு! உற்சாகம் தள்ள,
காலந்தாழ்த்தாமல் தீபக்கே கல்லூரிக்கு சென்றான். அவனுடைய சமயோசிதம் + போலீஸ் மிரட்டலில் விஷயங்கள் கொட்டியது….
அமைச்சர் கல்லூரியின் பார்ட்னர். அவரின் மகன் ஜலால். ஜலாலின் அட்டகாசங்கள்…. சுடலையின் கை போனது… ஜலாலின் ஜாமீன்! அரசல் புரசலாய் வந்த அருணின் தங்கை விஷயம்… நடந்தது எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு.
அருணின் கிராமத்திற்கு விடு வண்டியை! உள்ளூர் எஸ்ஐ., தீபக்கைக் கண்டதும் பயத்திலேயே நடந்ததைக் கொட்டினார்.
பல நபர்களால் கற்பழிக்கப்பட்டு, ஆசிட் ஊற்றி கொல்லப் பட்டிருக்கிறாள். யார் செய்தது எனத் தெரியவில்லை – பணம்., ஜலால் விஷயத்திற்கும் இதற்கும் சம்பந்தமுண்டாவெனத் தெரியாது – பணம்., கேஸ் எந்த அளவில் உள்ளது… குற்றவாளிகளைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் – பணம்.
புரையோடிப்போன லஞ்சம், எங்கும் வியாப்பித்து இருக்கும் லஞ்சம்…. சரி இப்போது அருண் குடும்பம் எங்கே? தெரியாது! அந்த சம்பவத்திற்கு பிறகு அருண் மட்டுமல்ல சுடலைக் குடும்பமும் அவர்கள் ஊரில் இல்லை.
ஆஹா… நெருடுகிறதே! பலபேர் இன்வால்வ் ஆகியுள்ளது நிரூபணமாகிறதே!
ஜலால் வீட்டிற்கு சென்றான். ஏற்கனவே இன்ஸ்பெக்டர்கள் அமைச்சரின் இருப்பை உறுதி செய்ய வந்த வீடு…. புருஷன் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளதாய் சொன்ன வீடு… வீடா அது… அரண்மனை… இந்த அரண்மனையில் இன்ஸ்பெக்டர்கள் எந்த அளவு அனுமதிக்கப் பட்டிருப்பார்கள் என்பதே பெரியக் கேள்விக்குறி! ( ஒரு ஒலைக் குடிசைக் கூட இல்லாத ப்ளாட்பார ஏழைகளை எண்ணி ஒரு பக்கம் வயிறு எரிந்தது ) வாசலில் இணையமைச்சர் படமாய் தொங்கினார்…
“வாங்க போலீஸ், எங்க எஜமானரைக் கொன்னவனைக் கண்டுபிடிச்சுட்டீங்களா?
வேலைக்காரனின் கேள்விக்கு, ” அலி உள்ள போ” என்றபடியே ஒரு அம்மாள் வந்தார்.
தீபக்கையே பார்த்தபடி இருந்தார். ஒன்றும் கேட்கவில்லை… என்ன கேக்க முடியும். பொய் சொன்னதால் புருஷன் உயிரே போச்சு…
“ஜலால் எங்க”
நேரடியாய் விஷயத்திற்கு வந்தான் தீபக்…
“தெரியாது… சத்தியமா தெரியாது”
மனசுக்குள் தீபக் சொல்லிக்கொண்டான். அனுபவம்… அனுபவம்.. மகனையும் இழக்க விரும்புவாளா என்ன?…
” தெரியாதுன்னா! ஒரு போன் பண்ணுங்க மேடம்”
“இல்ல! அவன்தான் போன் பண்ணுவான். அவன் வாப்பா மௌத்தானதுல, மனசு ரொம்ப ஒடிஞ்சு போய்ட்டான். கொஞ்சநாள் நான் எங்கையாவது போய்ட்டு வரேன், என்னத் தேடாதீங்க., நானே ரெண்டு மூணு மாசத்ல வந்துடுவேன்னு சொல்லிட்டு போய்டான். சும்மா தொந்தரவு பண்ணுவீங்கனு செல்லைக் கூட எடுத்துட்டு போல”
“இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு”
“பொய் சொல்லி ஏற்கனவே, இவரை இழந்தது பத்தாதா? ஆனா ஒண்ணு,
அவனா வீட்டுக்கு தினமும் பேசுவான்”
“எப்போ! இன்னிக்கு பேசினாரா!”
“எப்ப வேனா பேசுவான். சாதாரணமா, ஏழு ஏழரைப் போல”
“இன்னிக்கு போன் பண்ணதும், இந்த நம்பருக்கு போன் பண்ணச் சொல்லுங்க!
அசட்டையா இருக்க வேணாம் உங்க பையன் உயிர் சமாச்சாரம்… நான் முடிஞ்சா ஏழு மணிக்கு இங்க வரேன்” என்று தன் நம்பரைக் கொடுத்தான்.
என்ன சொல்றாரு இந்த போலீஸ்., ஜலால் உயிருக்கு ஆபத்தா? குழம்பியபடியே நம்பரை வாங்கிக் கொண்டாள்.
Comments are closed here.