விடிவெள்ளி – 41
4147
1
அத்தியாயம் – 41
படபடவென்று கதவு தட்டப்படும் சத்தத்தைக் கேட்டு “இப்ச்… யாரது…?” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தபடி எழுந்து வந்து கதவை திறந்தான் ஜீவன். ஒரு நாள் முழுக்க கணவனைக் காணாமல் துடித்துக் கொண்டிருந்தவள் அவனை நேரில் பார்த்ததும் கோபமும் அழுகையும் முட்டிமோத பொங்கிவரும் கண்ணீரை துடைக்கக் கூட தோன்றாமல் மேல்மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தாள். ஒரே நாளில் சோர்ந்து போய் களையிழந்து வந்து நிற்பவளைக் கண்டு ஒரு நொடி திகைத்தவன்… பிறகு எதுவும் சொல்லாமல் திரும்பி அறைக்குள் சென்றான். அவளும் அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றாள்.
அவள் தன்னை தேடி இவ்வளவு தூரம் வருவாள் என்று ஜீவன் எதிர்பார்க்கவே இல்லை. அவளுடைய வருகை புண்பட்டிருந்த அவன் மனதிற்கு இதமாக இருந்தது. நேற்று முழுவதும் அனுபவித்த வேதனை பாதியாக குறைந்துவிட்டது… ஆனாலும் மிச்ச சொச்சம் இருந்த கோபத்தில் “நீ எதுக்கு இங்க வந்த…?” என்றான் எரிச்சலுடன்.
“நான் என் புருஷனைத் தேடி வந்தேன்…. நீங்க யாரைத் தேடி இங்க வந்திங்க…?” என்று அவள் குத்தலாக மூக்கை விடைத்துக் கொண்டு கேட்கும் பொழுதே கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது. அவனை ஒரு வழிப்பண்ண வேண்டும் என்று வந்துவிட்டு… தான் அழுது கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் கண்ணீரோடு சண்டைக்கு தயாரானாள் பவித்ரா.
அவளுடைய உள்குத்து வெளிக் குத்தையெல்லாம் புரிந்துகொள்ளும் சூட்சுமம் ஜீவனுக்கு ஏது…! அவன் வெள்ளந்தியாக ‘என் புருஷன்…’ என்று அவள் உரிமையுடன் சொன்ன வார்த்தைகளில் குளிர்ந்து போய் அசையாமல் நின்றான்.
புகைத்துவிட்டு போட்டிருந்த சிகெரெட் துண்டுகளையும்… டீப்பாயில் இருந்த மது பாட்டில்களையும் கவனித்தவள் முகத்தை சுளித்துக் கொண்டு “பழசை எதையுமே நீங்க மறக்கலல்ல…?” என்றாள்.
‘நேத்து ஃபுல்லா என்னை சாகடிச்சுட்டு இப்ப எதுக்கு இவ இப்படி டேமை திறந்துவிட்டுகிட்டு நிக்கிறா…?’ என்று அவளுடைய கண்ணீரைப் பார்த்து நக்கலாக நினைத்தவன்… ‘நேத்து முழுக்க ஆளைக் காணம்னோன பயந்துட்டா போல… அதான் இந்த எஃபக்ட்’ என்று முடிவு செய்து… ‘அழட்டும்…. ஒரு நாள் முழுக்க நான் எவ்வளவு துடிச்சேன்…’ என்கிற வன்மத்தோடு பதிலே பேசாமல் அசையாமல் அவள் முகத்தை முறைத்துப் பார்த்தபடி நின்றான்.
“சிகரெட்… தண்ணி… அந்த தருதலைப் பசங்களோட சகவாசம்… எதையுமே விடல… இதெல்லாம் பத்தாதுன்னு பழைய காதல் வேற இன்னும் மனசுக்குள்ள பூவா பூத்துக் குலுங்குது…” நக்கலும் கோபமுமாக சொன்னாள்.
நொடியில் அவன் முகம் பேயறைந்தது போல் ஆனது… ‘என்ன சொல்றா இவ…!’ அவன் மேலே சிந்திப்பதற்கு முன் அவள் பேச்சை தொடர்ந்தாள்…
“அவளைவிட நான் எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டேன்…? சொல்லுங்க… இப்படி அவளையே நெனச்சுகிட்டு பைத்தியம் மாதிரி சுத்துரிங்களே அசிங்கமா இல்ல…?”
“என்னடி காலையிலேயே இங்க வந்து நின்னிகிட்டு கத்தர…? நா யாரடி நெனச்சு சுத்திகிட்டு இருக்கேன்…? எல்லாம் தெரிஞ்ச மாதிரி உலராத…” அவன் கடுப்பாக பேசினான்.
“சும்மா மெரட்டாதிங்க… எனக்கு எல்லாம் தெரியும்… அந்த புனிதாவ மனசுல நெனச்சுக்கிட்டுத்தானே நீங்க என்னை வெறுத்து ஒதுக்குனிங்க..” கண்ணீர் ஒரு பக்கம் வழிந்து கொண்டிருப்பதையோ… அழுகையோடு பேசுவதால் குரலில் லேசான மாற்றம் இருப்பதையோ கண்டுகொள்ளாமல் கடுமையான முகத்துடன்… முகத்தில் அறைவது போல் நறுக்கென்று கேட்டாள்.
ஜீவன் அவளுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் அதிர்ந்து முகம் வெளிறி போனான்…. ‘ஐயையோ… புனிதா விஷயம் இவளுக்கு எப்படி தெரிஞ்சுது…!’ அவனுக்கு உதறலெடுத்தது. அதைவிட அவள் பேசுவது வெளியில் கேட்டுவிடப் போகிறது என்கிற பயத்தில்,
“ஏய்… எங்க வந்து எதைடி பேசிகிட்டு இருக்க…? அறிவு இருக்கா…?” என்று பதட்டத்துடன் கேட்டவன் வேகமாக ஓடிச் சென்று கதவை மூடி தாழிட்டான்.
அவனுடைய பேச்சு அவள் செவிகளில் ஏறவில்லை… “எத்தனை தடவ ரெத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிருப்பிங்க…? அசால்டா சொல்றிங்க… உலர்றேன்னு…! ஏன் பைத்தியம்ன்னு சொல்லுங்களேன்… டிவோர்ஸ் பண்ண வசதியா இருக்கும்…” என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள்.
“அவளை மாதிரி பொண்ணுதான் வேணுன்னு பிடிவாதமா இருந்தவர் என் கழுத்துல எதுக்கு தாலி கட்டினிங்க…?” என்று மூக்கை உறிஞ்சினாள்.
“அழறாளே…!!!” என்று அவன் மனம் பதறியது. அவளை அனைத்து ஆறுதல் சொல்லி தன் மனதை விளக்க வேண்டும் என்கிற துடிப்பும் இருந்தது… ஆனால் இருக்கிற கோபத்தில் வெறுப்பாக பேசிவிடுவாளோ என்கிற பயம் அதைவிட அதிகமாக இருந்தது.
‘சும்மாவே இவளுக்கு நம்மள கண்டா இளக்காரம் தான்… இதுல பழையக் காதல் கன்றாவியெல்லாம் வேற தெரிஞ்சிடுச்சா… இனி நம்மை சுத்தமா வெறுத்துடப் போறா…’ பதைபதைக்கும் மனதோடு இறுகிப்போய் நின்றான்.
“சரி கல்யாணம்தான் பண்ணித் தொலச்சுட்டிங்க… ஆரம்பத்துல இருந்த மாதிரி என்கிட்டயிருந்து விலகியே இருந்திருக்க வேண்டியதுதானே…! ஊருக்கு போறதுக்கு முன்னாடி எதுக்கு அப்படி உருகினிங்க…? எதுக்கு என் என் மேல ஆசை இருக்க மாதிரி நடிச்சிங்க…?”
‘நடிப்பா… ஐயையோ… அதெல்லாம் சத்தியமான நெஜம்டி…’ நினைத்ததை வாய்விட்டு அவனால சொல்ல முடியவில்லை. புனிதா விஷயம் வெட்டவெளிச்சமான பிறகு… இவளிடம் தன் காதலை எப்படி புரிய வைக்க முடியும் என்கிற பயத்தில் ஊமையாகிவிட்டான்.
“குடிகாரர்… பொறுப்பில்லாதவர்ன்னு தெரிஞ்சும் எதுக்காக உங்களோட இருந்தேன்…? நீங்க இன்னொருத்தியை லவ் பண்ணினவர்ன்னு தெரிஞ்சும் எதுக்காக உங்களை விட்டு போகல…? திருந்துவிங்கன்னு நெனச்சேன்… மனசு மாறுவிங்கன்னு நம்பினேன்… என்னை ஏமாத்திட்டிங்க… நீங்க மாறவே இல்ல… மாறப் போறதும் இல்ல…” தேம்பினாள். உடனேயே கண்ணைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்று கைகளை ஆட்டி விழிகளை உருட்டி உணர்ச்சிப் பூர்வமாக பேசினாள்.
“அவ என்ன பெரிய உலக அழகியா…? அவளை மாதிரியேதான் உங்களுக்கு மனைவி வேணுமோ…! ஏன் எங்களையெல்லாம் பார்த்தா அழகியா தெரியலையா…? நீங்க எதிர்பார்த்த படிப்பும் அழகும் தான் இப்போ என்கிட்டையே இருக்கே…! அப்புறம் ஏன் இன்னமும் கண்ட கண்ட நெனப்போட சுத்திகிட்டு இருக்கீங்க…?”
‘நா எங்கடி கண்ட நெனப்போட சுத்திகிட்டு இருக்கேன்.. நீதானேடி முட்டாள் பயல்ன்னு சொல்லி விரட்டிவிட்ட…?’ என்று மனதிற்குள் தான் அவனால் கேட்டுக்கொள்ள முடிந்தது. பிறகு… பத்ரகாளி அவதாரமெடுத்து தாண்டவமாடிக் கொண்டிருப்பவளிடம் வாய் திறந்தா பேச முடியும்…?
“நீங்க பண்ணின டார்ச்சரையெல்லாம் தாங்கிகிட்டு உங்களோட வாழ்ந்தேனே…! என் மனசுக்குள்ள இருந்த ஆசையில நூத்துல ஒரு பங்கு கூட உங்ககிட்ட இல்லாம போயிடிச்சே…! எல்லாம் என் தலையெழுத்து… இப்படி ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு அழுது புலம்ப வேண்டியிருக்கு…” அவள் நெற்றியில் அடித்துக் கொண்டாள்.
‘உன் மனசுல ஆசையா…!!!’ இறுகியிருந்த அவன் முகம் நொடியில் பிரகாசமானது… அடுத்து அவள் என்ன சொல்ல போகிறாள் என்கிற எதிர்பார்ப்பில் நெஞ்சம் படபடத்தது…
“போன்ல பேசும்போதெல்லாம் நல்லா பேசிகிட்டு இருந்தவர் அவளை ஒரு நாள் நேர்ல பார்த்ததும் என்னை வெறுக்க ஆரம்பிச்சுட்டிங்களே…! உங்களால எப்படி முடிஞ்சுது…?” என்று தேம்பினாள். அவன் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த போராடினான்.
“எனக்கு தெரியும்… உங்களுக்கு என்னை பிடிக்கவே இல்ல… சுத்தமா பிடிக்கல… ஆனா அதுக்கெல்லாம் நான் ஒண்ணும் செய்ய முடியாது… எனக்கு உங்களை பிடிச்சிருக்கு… ரொம்ப பிடிச்சிருக்கு… உங்களை என்னால விட்டுக் கொடுக்கவே முடியாது… நீங்க இல்லாம என்னால வாழ முடியாது… முடியவே முடியாது…” என்று சிறு பிள்ளை போல் பிடிவாத குரலில் கூறிவிட்டு விம்மிவெடித்து அழுதாள். அவள் அழும் பொழுது இவன் கண்களிலிருந்தும் கண்ணீர் கசிந்தது. உணர்ச்சி வேகத்தில் அவள் அதை கவனிக்கவில்லை.
“செத்துப் போய்டுவேன்… நீங்க இல்லைண்ணா நிச்சயம் செத்துப் போய்டுவேன்… சும்மா இல்ல… உங்களையும் கொண்ணு….ட்டு…. ம்ம்ம்…! என்… என்ன…?” அவள் பேசி முடிப்பதற்குள் அவனுடைய இறுகிய அணைப்பில் சிக்கியிருந்தாள்….
“எ…ன்…ன்ன… இது…? வி… விடுங்க…” என்று திமிரியவள் அவன் உடல் நடுங்குவதையும் இதயம் டம் டம்மென்று பலமடங்கு வேகமாக துடிப்பதையும் உணர்ந்து அடங்கி… பின் அவனோடு ஒட்டிக் கொண்டாள். ஒரு நாள் முழுக்க அவள் தவித்த தவிப்பிற்கும்… அனுபவித்த வேதனைக்கும் அவனுடைய ஒற்றை அணைப்பு அருமறுந்தாகிவிட அவள் வாயடைத்துப் போனாள். மனமெங்கும் இதமானதொரு உணர்வு பரவியது…
அதுவரை அவன் மீது அவளுக்கு எதிர்பார்ப்பிருந்தது… அது நிறைவேறாத கோபமிருந்தது… தேவையில்லாத சந்தேகங்கள் கூட இருந்தன… அதற்கான விளக்கங்களும் தேவைப்பட்டன. ஆனால் அந்த நொடி… அந்த ஒரு நொடியில் அவள் மனம் நிர்மாலமானது… குழப்பங்களும் கலக்கங்களும் மறைந்து மனம் காற்றில் பறக்கும் இறகைப் போல் லேசானது… கணவனுடைய கையனைப்பிற்குள் இருந்தபடி அவனுடைய சட்டையை பிடித்திருந்த அவள் கரங்கள் அவன் முதுகில் பரவிப்படர்ந்து இறுகின.
“என் மன்னவா… உயிர் காதலா…
என் நெஞ்சிலே பனி போரடா
என் மௌனத்தை உன்
பார்வையால் வென்றாயடா…
உன் பேச்சினில் உதிர்ந்தேனடா
உன் சிரிப்பினில் சிதைந்தேனடா
உன் வாசத்தில் என்
சுவாசத்தை தொலைத்தேனடா…
உன் கோபத்தில் குளிர்காய்ந்து
என் காதலில் உன்னை கரைத்து
எனை உன்னிடம் இழந்தேனடா… என் காதலா…!!! ”
அவள் நெஞ்சில் மூண்டிருந்த பனிப்போர் உருகியோடிவிட்டது… அவனுடைய பேச்சிலும் சிரிப்பிலும் சிதைந்தவள் கடைசியில் அவனுக்குள் கரைந்தே போனாள்…
“motherhood is unconditional…” என்று சொல்வார்கள். காதலுக்கும் அது பொருந்தும். பவித்ராவின் காதலும் நிபந்தனையற்றதுதான்… அவளுக்கு எந்த கேள்விகளும் கேட்கத் தோன்றவில்லை… எந்த விளக்கங்களும் தேவைப்படவில்லை… எது எப்படியிருந்தாலும் அவன் அவளுடையவன் மட்டும் தான்… அவள் உயிரின் உறைவிடம் அவன் உடல் மட்டும் தான்… மற்ற அனைத்துமே அவளுக்கு இரண்டாம் பட்சம்தான்…
கணங்கள் நிமிடங்களாகி நேரம் கரைந்தோடிக் கொண்டிருந்தது… நிமிடங்கள் பல கழிந்த பிறகு அவனுடைய பிடி மெல்ல இளகியது…. அவளுடைய பிடியும் இளகியது… யார் முதலில் விலகுவது என்கிற போட்டியில்லாமல்… விலக மனமில்லாமல் இருவரும் ஒன்று போல ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி மெல்ல விலகினார்கள்.
அவன் கண்களில் வழியும் காதல் அவளை கூச அவள் நாணி தலைகுனிந்தாள். அவளுடைய முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியில் இதழ் பதித்து “லவ் யு பவி…” என்றவனின் குரல் நெகிழ்ந்திருந்தது. சிலகணங்கள் அவனை இமைக்காமல் பார்த்தவள்… சட்டென்று எக்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
“மழை மாலையில் மண் வாசம் நீ…
கடும் கோடையில் குளிர் தென்றல் நீ…
கண்மூடி நான் தினம் கேட்டிடும்
குழல் கீதம் நீ…
என் சோலையில் மலர் வாசம் நீ…
சுடும் பாலையில் நீர் ஊற்று நீ…
என் வானிலே தினம் தோன்றிடும்
விடிவெள்ளி நீ…!!!
சிறு கோபத்தில் ஊடல் கொண்டு
உயிர் தேடலில் மாயம் செய்து
உன் மூச்சிலே எனை மறைத்தாயடி… என் காதலி…!!!”
அந்த ஒரு நொடியில்தான் ஜீவன் வாழ்ந்தான்… அந்த ஒரு நொடியில் தான் அவன் ஜெயித்தான். அவள் காதலின் ஆழத்தை உணர்த்திய அவளுடைய அந்த செயலால்… ஏதோ இனம் புரியாத… இதுவரை அனுபவித்தறியாத உணர்வலைகள் அவன் நெஞ்சுக்குள் படிந்து அவனை சிலிர்க்கச் செய்தன.
இதுவரை எத்தனையோ வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்திருக்கிறான்… எத்தனையோ மகிழ்ச்சிகளையும் துக்கங்களையும் அனுபவித்திருக்கிறான்… ஆனால் இன்றைய நாளின் வெற்றியும்… மகிழ்ச்சியும்… அதை தாங்க முடியாத துக்கமும் அவனை ஆகாயத்தில் தூக்கியெரிந்துவிட்டது… அவன் வாழ்க்கையை வென்ற அந்த தருணம்… சிலிர்ப்பான தருணம்… வாழ்க்கையில் எப்பொழுதும் மறக்க முடியாத தருணம்… மரணப்படுக்கையிலும் நினைவுக் கூர்ந்து மகிழக்கூடிய தருணம்…
மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பிரித்துப் பார்க்க முடியாதது போல் ஒரு புதிரான உணர்வை அவளுடைய முதல் முத்தத்தில் உணர்ந்தவன் அதிலிருந்து வெளியே வர தோன்றாமல்… வர முடியாமல்… உணர்வுள்ள சிலை போல் சமைந்து நின்று… பின் சுதாரித்து அவள் கொடுத்ததை பலமடங்காக அவளிடமே திருப்பிக் கொடுத்தான்…”
“ம்ம்ம்… போதும் விடுங்க…” அவள் வெட்கத்துடன் விலக… “ஏய்… அஞ்சு வருஷம் விட்டாச்சுடி… இனியும் விட்டா நாம எங்க உருப்பட்டு… உன் மாமியாருக்கு பேரன் பேத்தியை பெத்துக் கொடுக்கறது…” என்றபடி அவன் அவளை வளைத்தான்.
“இப்போவேவா…?” என்றபடி அவள் அவனிடமிருந்து நழுவினாள்.
“வேணுன்னா ஐயரை போய் கேட்டுட்டு வருவோமா…?” என்று நக்கலுடன் கூறியபடி அவன் தன் பிடியை இறுக்க “ச்சீ… இங்கேவா… நம்ம வீட்டுக்கு…” என்று அவள் சிணுங்க… “இதுவும் நம்ம வீடுதான்… பேசாம இருடி…” என்று அவன் அவளை அடக்கினான்.
அவள் எங்கே அடங்கினாள்….? “கீழ எல்லாரும் இருக்காங்க… ஏதாவது நெனச்சுக்க போறாங்க…” என்று அவள் அவனை தவிர்க்க முயல… “ஏண்டி… நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டிங்கர நினைப்பு மனசுல கொஞ்சமாவது இருக்கா…?” என்று கோபத்துடன் அவன் கோபத்துடன் சீறினான்.
“இந்த நேரத்துலக் கூட கோவம் தானா…?” அவள் அலுத்துக் கொண்டாள்.
“ஹும்… நானும் காதல் மன்னனா இருக்கனுன்னுதான் நினைக்கிறேன்… நீ எங்க விட்ற…? என்ன வில்லனா மாத்துரதுலேயே தானே குறியா இருக்க… உன்னை விட்டா பேசிக்கிட்டே இருப்ப… அதனால இனி ஸ்ட்ரைட் அட்டாக்தான்…” என்று அவன் சிரித்துக் கொண்டே செயலில் குதிக்க அவள் நாணத்துடன் அடங்கிப் போனாள். அவர்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் துவங்கியது…
“கார்மேகமும் குளிர் வாடையும்
காதல் கொண்டு யுத்தம் செய்து
பார் மேனியில் மழைச்சாரலை பூந்தூவுதே…!
கருவண்டுகள் புதிர் பேசிட
மலர் கூட்டங்கள் கதை கேட்டதால்
தேன் போயினும் கனி வந்ததே…!
மணமேடையில் இணைகூடி… மனதோடு உறவாடி…
சிறு பொறியாய் மூண்ட காதல்…
பெரும் மோகத்தீயாய் மாற…!
உன்னில் நானும்… என்னில் நீயும்…
எரிந்து மறைந்து… உருகிக் கரைந்து…
இரு உயிர் ஒருயிரானதோ…!”
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vats says:
Appada Oru vazhiya samadanam aitanga.. nice episode