குற்றப்பரிகாரம் – 30
1770
0
அத்தியாயம் – 30
தீபக் தியானம் செய்து துப்பறியத் தொடங்கிய அதே நாள். காற்றுக்காக சிறு வட்ட வடிவ, பௌர்ணமி நிலா அளவிற்கு, துளை இருந்த ஒரு அறையில் அவர்கள் கட்டப்பட்டுக் கிடந்தார்கள். தலைக்கு மேலே உயரத்தில், ஒரு டப்பாவிலிருந்து, சீரான இடைவெளியில் ஒவ்வொரு சொட்டாக அவர்கள் தலையில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அநேகமாய் டப்பாவில் ஐஸ்கட்டி இருக்கக்கூடும். முதலில் கொஞ்ச நேரத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. போகப் போக உச்சி மண்டையில் தெளித்த ஒவ்வொரு சொட்டும், ஒவ்வொரு முறையும் நரகத்திற்கு அனுப்பி வைத்தது. கத்த கூட முடியாமல் வாயில் பிளாஸ்த்ரி. கதவைத்திறந்து வந்தவனைக் கண்டதும் இருவருக்கும் உயிரே போய்விட்டது… அருண்!
“என்ன பிரண்ட்ஸ், வசதி எல்லாம் சௌகர்யமா இருக்கா! எதாவது வேணும்னா சொல்லுங்க செஞ்சுத் தரச் சொல்றேன்” நக்கலாய் அவன் கேட்டதே அவர்களுக்கு அவர்களின் நிலைப் புரிந்தது. பின்பக்கமாக யாரோ வந்து நிற்பது தெரிந்தது. வந்து நின்றவனைப் பார்த்து அருண் கூறினான்…
” நான் இப்ப ஒரு கேள்வி கேப்பேன். பதில் சொல்ல ஒருத்தருக்கு பிளாஸ்த்ரிய எடுப்பேன் பதிலைத் தவிர வேற எதாவது வார்த்தை வந்தா, அடுத்தவன அடி” என்று சொன்னபின் ஒருவனைப் பார்த்துக்கேட்டான்…
“ஜலால் எங்க” சற்றே ப்ளாஸ்த்ரியைப் பிரித்ததும், அவன் தெரியாது என்பது போலத் தலையை ஆட்டினான்.
“ர்ரப்” ஒரே அடி. ஆனால் தண்ணீர் சொட்டி வேதனை அளித்த இடத்தில், மரக்கட்டையை வைத்து அடித்தது போல் இருந்தது.. பொறி கலங்கியது… கத்தகூட முடியவில்லை…
“இரண்டு பேர் இருக்கீங்க. ஆளுக்கொரு சான்ஸ். இப்போ இவன். அதே கண்டிஷன்ஸ்தான், ஆனா இவன் சொல்லலைனா உன்னைக் கொன்னுடுவான். ரெடி என அடுத்தவனுக்கு பிளாஸ்த்ரியை லேசாக எடுத்தான். இம்மிகூட மிச்சம் வைக்காமல் உண்மையைக் கக்கிவிட்டான் அவன்.
” ம்…. வெரிகுட். காலேஜ்ல பாத்தது. ஜலால் வாப்பா இறுதி சடங்கிற்கு நீங்க ரெண்டுபேர் மட்டும் வந்ததுலையே உங்க நெருக்கம் தெரிஞ்சது” எனும்போதே பின்னாலிருந்து சுடலை வெளியே வந்தான். அவனின் தோளிலிருந்து மரக்கைத் தொங்கியது.
“சுடலை, இவங்கதானே ஆசிட் கொடுத்தது. அந்த கையை உடை”
“வேண்டாம் அருண். நான் படற கஷ்டம் இவங்க பட வேணாம். இதுங்க வெறும் அம்புகள்தானே” என்றதும் இருவரும் வெட்கத்தில் தலையைக் குனிந்தார்கள்.
“சரி சுடலை., இவங்கள எஸ்டேட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செஞ்சுட்டு ரெடியா இரு. பாண்டிச்சேரி போறோம். எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்”
‘ஒன்லி பேர்’ ஷீ ஷோர் மோட்டல்ஸ்.
வாப்பா போனதால மனசு சரியில்லைனு சொல்லிட்டு, என்னென்ன சிற்றின்பங்கள் இருக்குமோ அதை ஒண்ணுவிடாமல் அனுபவித்துக் கொண்டிருந்தான் ஜலால்…
” ஹேய் ஹனி! நாந்தான் ஜலால்! லஞ்ச் சாப்ட்டு ரெஸட் எடுத்துட்டு, முழிக்கும் போது நீ என் ரூம் காலிங் பெல்ல டச் பன்ற! ஓகே… யா… சேம் மோட்டல்… இன்னும் போர் ஆர்ஸ்ல உன்னை எதிர்பாக்றேன்., சி., யு ., பை” ரிஷப்சனுக்கு தட்டியவன்., ட்ரிங்சும் சாப்பாடும் ஆர்டர் செய்துவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
மூன்று மணி நேரம் கழித்து., க்விங்., க்விங் என காலிங் பெல் கத்தியது. சோம்பல் முறித்தபடியே, கமிங் கமிங்., கமிங் ஹனி., வெய்ட் என்று கதவைத் திறந்தவன் வாசலில் நின்றவனைப் பார்த்து அதிர்வதற்குள் பலமாக தலையில் தாக்கப்பட்டான். அப்பா என்ன அடி, தலையை சிலுப்பி எழுவதற்குள், சுருக்கென எதுவோ கையில் குத்தியது. மயக்கம்தான்… விழிக்கையில் பாத்டப்பில் உள்ளாடையுடன் படுத்திருந்தான்…
வாயில் பிளாஸ்த்ரி, கை கால்கள் கட்டப்பட்டிருந்தன. சுற்றிலும் பார்த்தவன் அதிர்ந்தான்., மூன்று பேர் நின்றிருந்தார்கள்.
அருண், சுடலை, இன்னொருவன், அருணின் சாயலில் இருந்தான். அவன் பார்த்த க்ரோதப் பார்வையே, என்ன பண்ணுவானோ என இருந்தது ஜலாலுக்கு.
அருண் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். “ஏன்டா சொறி நாயே. ஒரு சின்ன பூ அவ உனக்கு என்னடா பாவம் செஞ்சா. இத்தனைபேரு அந்த பூவை கருகடிச்சிட்டீங்களேடா” சொல்லியபடியே ஆத்திரம் தீர ஜலாலை அடித்தான்.
சுடலைதான், “அருண் நேரமாகுது. ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்து… என்றவன் துப்பாக்கியை எடுத்தான்…
“வேண்டாம்” எனத் தடுத்த அருண் தான் அதுவரை முதுகில் சுமந்திருந்த பேகைத் திறந்தான்.
“என்ன சுடலை பாக்கற., சின்ன வேலை இருக்குன்னேனே! இதுதான்! நீ கைல பட்ட வேதனை இவன் பட வேண்டாமா! தங்கை பட்ட வேதனை இவன் பட வேண்டாம்., அதுக்குத்தான் இது”
என்றபடி அந்த பார்சலைப் பிரித்தான்.
பார்த்ததுமே ஜலாலுக்கு உயிரே போய்விட்டது. வேண்டாம் வேண்டாம் என்று கண்ணில் தாரை தாரையாய் நீரை வடித்தான்.
” அழு நல்லா அழு., வாழ்க்கை முழுதும் அழு., ஆனா உன் வாழ்க்கை இன்னும் மிஞ்சி மிஞ்சி போனால், பத்து நிமிடம்தான்… சொல்லி வாய் மூடவில்லை, அருணின் செல் அடித்தது….
அட… ஏஎஸ்பி தீபக்!
காதிற்கு கொடுத்தான்…
“ஹலோ அருண். நான் ஏஎஸ்பி தீபக்”
“தெரியும் சார். உங்க நம்பரைத்தான் விவிஐபி லிஸ்ட்ல வச்சுருக்கேனே”
“எங்க இருக்கீங்க!”
“என்ன பன்றீங்கனு கேளுங்க. வெய்ட் ஒரு போட்டோ அனுப்பறேன்”
என்று ஜலாலின் கோலத்தை ஒரு போட்டோ எடுத்து அனுப்பினான்.
“ஸ்டாப்… ஸ்டாப்… ப்ளீஸ் ஸ்டாப் அருண். உங்க உணர்வுகள் புரியுது. எங்க இருக்கீங்க”
“ஹஹ ஹா என்ன ஏஎஸ்பி சார், இந்த நேரம் கன்ட்ரோல் ரூம் ட்ரேஸவுட் பண்ணியிருப்பாங்களே! போன் பறந்துருக்குமே! எங்களைத் தேடி பட்டாளம் வருமே!
சாரி சார் அதுக்குள்ள எங்க வேலைய முடிக்கனும்” என்று போனை ஸ்விச் ஆஃப் செய்தான்.
அதற்காகவே காத்திருந்தவன் போல் சுடலை, ஜலாலின் கையை ஆசிட்டால் குளிப்பாட்டினான். அதே துடிப்பு… தான் துடித்த அதே துடிப்பு. அடுத்த நொடி ஜலால் மயங்குவதற்குள், அவன் வாயை வலுக்கட்டாயமாய் திறந்து ஆசிட்டை அவன் வாயில் ஊற்றினான் எழிலரசு…
வெட்டி வெட்டி ஜலால் துடிப்பதை வீடியோ எடுத்தான் எழில்…
அருணின் ஏன் என்னும் பார்வையை பார்த்தவன் “அம்மாவுக்காக” என்றான்.
Comments are closed here.