விடிவெள்ளி – 42
4385
1
அத்தியாயம் – 42
தொலைந்து போன பொக்கிஷத்தை தேடியலைந்து கலைத்து ஓய்ந்தவனுக்கு… மீண்டும் அந்த பொக்கிஷம் கைசேர்ந்தால் கிடைக்கும் நிம்மதியும் ஆசுவாசமும்… ஜீவனுக்கும் கிடைத்திருந்தது… கட்டில் தலைப்பில் தலையணையை முதுகுக்கு அனைவாகக் கொடுத்து சாய்ந்து அமர்ந்திருந்தவனின் நெஞ்சில் சிறு குழந்தை போல் ஒட்டிக் கொண்டு கண் மூடிக் கிடந்தாள் பவித்ரா. அவள் நெற்றியில் சரிந்து விழும் கற்றைக் குழலை காதோரம் ஒதுக்கிவிட்டவன்… நெற்றியில் அழுத்தமாக தன் அன்பை பதிவுசெய்தான்.
பூரிப்பும் வெட்கச் சிரிப்புமாக அவள் தலையை நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். இவருடைய பார்வையும் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டது… அவள் புருவங்களை உயர்த்தி ‘என்ன…?’ என்று கேட்டாள்.
‘ஒண்ணும் இல்லை…’ என்று சொல்வது போல் தலையை குறுக்காக ஆட்டியவனின் அணைப்பில் இறுக்கம் கூடி.. உடல் ஒருமுறை சிலிர்த்து நடுங்கியது…
“என்ன ஆச்சு…?”
அவனிடமிருந்து வெளிப்பட்ட நீண்டதொரு பேரு மூச்சைத் தொடர்ந்து “ரொம்ப பயந்துட்டேன்…” என்றான்.
அவள் கேள்வியாக அவனைப் பார்த்தாள். பேசும் அவள் மௌனத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் “உனக்கு என்னை பிடிக்கலையோ… வெறுக்குரியோன்னு தப்பா நெனச்சுட்டேன்…” என்றான் மெல்லிய சிரிப்புடன்.
“பிடிக்காதா…! உங்களையா…? உங்களை எப்படி எனக்கு பிடிக்காம போகும்…?” அவள் புரியாமல் கேட்டாள்.
“எப்படி பிடிக்கும்… ரேமண்ட்ஸ் மாடல் மாதிரி போனவன்… கட்டடம் கட்டுற கொத்தனார் மாதிரி திரும்பி வந்திருக்கேன்… உன்னை அட்ராக்ட் பண்ற மாதிரி என்கிட்டே எதுவுமே இல்லையே… அதான்…”
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளுடைய முகம் அஷ்ட்டகோனலாக மாறியது. ‘அட லூசே…!’ என்கிற ரேஞ்சில் அவள் பார்க்க… அவளுடைய முகத்தில் தோன்றிய வித்தியாசமான பாவனையில் சத்தமில்லாமல் குலுங்கி சிரித்தவனுடைய சிரிப்பு அவள் முறைத்த முறைப்பில் அடங்கிப் போனது…
“ஆஃப் பண்ணிட்டாளே…! நிம்மதியா சிரிக்கக் கூட விடமாட்டா… எங்கதான் கத்துகிட்டாளோ இந்த முறைப்பை…” என்று முணுமுணுத்தவன்… “இப்படித்தான்…. நா வந்ததிலேருந்து முறைச்சு முறைச்சு பார்த்துகிட்டு இருந்த… ஒரு சிரிப்பு…! ஆசையா ஒரு பார்வை…! ம்ஹும்… அப்புறம் நான் என்ன நினைக்கிறது…? அதான் என்னை பிடிக்கலையோன்னு நெனச்சுட்டேன்….” என்றான் வருத்தம் இழையோடும் குரலில்.
அவனுடைய வருத்தம் அவளையும் வேதனைப் படுத்தியது என்றாலும் இரண்டு நாட்களாக அவளுக்குள் உழன்று கொண்டிருந்த ஆதங்கம் ஞாபகம் வந்துவிட…
“உங்களுக்கு புனிதாகிட்ட நலம் விசாரிக்க மட்டும் தானே நேரம் இருக்கும்… என்னோட முறைப்பையெல்லாம் கவனிக்க கூட நேரம் இருந்திச்சா…?” என்றாள் ஊடலுடன்.
“அடிப்பாவி… அநியாயமா பேசாதடி…! வந்ததுலேருந்து ஒரு சிரிப்புக்காக உன் முகத்தையே பார்த்துப் பார்த்து நொந்து போனவனை பார்த்து இப்படி அபாண்டமா பேசுறியே…!” அவன் பொருமினான்.
“சும்மா கதை அளக்காதிங்க… எனக்கு எல்லாம் தெரியும்… உங்களுக்கு அந்த புனிதா….” அவள் பேசி முடிப்பதற்குள்,
“போதும் பவி… உன் வாயிலேருந்து இந்த மாதிரி பேச்செல்லாம் வரலாமா…?” அவன் தீவிரமான முகத்துடன் கேட்டான்.
அவள் பதில் பேசாமல் மௌனமாகிவிட்டாள்.
“என் மேல நீ எவ்வளவு வேணுன்னாலும் கோபப்படலாம்… அதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு… ஆனா புனிதா யாரு…? பிரகாஷோட மனைவி… புனிதாவை நீ எது சொன்னாலும் அது பிரகாஷையும் பாதிக்கும்… யோசி பவி…”
“இந்த குடும்பம் இன்னிக்கு மேல வந்திருக்குன்னா அதுக்கு பிரகாஷ் மட்டும் தான் காரணம்… நான் என்ன செஞ்சிருக்கேன்… மூத்த மகனா நான் என்னவெல்லாம் செய்யணுமோ… அது அத்தனையும் என் தம்பி செஞ்சிருக்கான்… சின்ன வயசுலேருந்து நான் எவ்வளவோ தப்பு பண்ணியிருக்கேன்… ஒரு தடவக் கூட அவன் என்ன விட்டுக் கொடுத்ததே இல்ல… அவன் எனக்கு தம்பியா இருந்தாலும் எனக்கு தகப்பனாத்தான் நடந்துகிட்டான். அவனுக்கு ஒரு பாதிப்பு வர மாதிரி நீ பேசலாமா..?”
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவன் பேச்சிலிருந்த ஞாயம் அவளை சுட்டது.
“ஏதோ விபரம் புரியாத வயசுல… புனிதாவுக்கும் எனக்கும் இடையில ஒரு ஈர்ப்பு வந்தது உண்மைதான்…” அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவளுடைய கண்கள் கலங்கியது…
“பவி… ப்ளீஸ்… அது முடிஞ்சு போன கதை… உனக்கு புரியனுமேங்கரதுக்காகத்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்… நீ இப்படி எமோஷ்னலானா என்னால பேசவே முடியாது…” என்றான்.
அவனிடமிருந்து விலகி அமர்ந்து மூக்கை உறிஞ்சியபடி “ம்ம்ம்… சொல்லுங்க…” என்றவளின் கண்களிலிருந்து நிற்காமல் உதிரும் கண்ணீர் மணிகள் கன்னங்கள்… தாடை… என்று உருண்டோடி அவளுடைய ஆடையை கூட ஈரமாக்கியது.
ஜீவனுக்கு அவளுடைய கண்ணீரை பொறுக்க முடியவில்லை… அவள் மனம் வலித்து அழுவது அவளைவிட இவனுக்கு அதிகமாக வலித்தது… மீண்டும் அவளை இழுத்து அனைத்து முதுகை வருடி… தலையை கோதி… கண்ணீரை துடைத்து… ஆறுதல்படுத்த முயன்றான். அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்து பருகச் சொன்னான்.
ஓரளவு அவளுடைய உணர்வுகள் கட்டுக்குள் வந்ததும்… நிமிர்ந்து அமர்ந்து தனக்கு எதிரில் அவளை அமரச்செய்து அவள் வலது கையை தன் கரங்களில் எடுத்து விரல்களை நீவியபடி “சாரி பவி..” என்றான்.
“இப்ச்… சரி விடுங்க… மேல சொல்லுங்க…”
“ஸ்கூல் படிக்கும் போது… ஏதோ… வயசுக்கோளாறு… பழகினோம்… போகப்போக அந்த ஃபீலிங்க்ஸ் குறைய ஆரம்பிச்சிடுச்சு… ரெண்டு பேரும் பேசிக்குவோம்… ஆனா அதிகமா சண்டைதான் போடுவோம்… நான் செய்றது புனிதாவுக்கு பிடிக்காது… புனிதா செய்றது எனக்கு பிடிக்காது… ஆனாலும் ரெண்டு பேருக்குமே எங்களுக்குள்ள என்ன நடக்குதுங்கரது புரியல… சண்டை போட்டாலும்… ஒருத்தருக்கொருத்தர் ஒத்துப் போகலைன்னாலும் ரிலேஷன்ஷிப்பை பிரேக் பண்ணாம… ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது மாதிரிதான் நடந்துகிட்டோம்… ”
“கல்யாணம் அப்படின்னு வந்ததும் புனிதாவுக்கு முழிப்பு வந்துடுச்சு… படிக்காத… சம்பாதிக்காத என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பல… சந்தர்ப்பம்… சூழ்நிலை… என் தம்பியே புனிதாவை கல்யாணம் பண்ணிட்டான்…”
“என்னதான் நான் படிக்காதவனா இருந்தாலும்… சம்பாதிக்காதவனா இருந்தாலும்… நானும் ஒரு ஆண்… என்னோட சுத்தின பொண்ணு என்னை கைகழுவினதோட இல்லாம… என் தம்பிக்கே மனைவியானதை என்னால பொறுக்க முடியல… கொதிச்சுப் போயிட்டேன்…”
“அந்த நிமிஷத்துலேருந்து புனிதாவை பார்த்தா எனக்கு கொலை வெறிதான் வரும்… ஒரு பொண்ணுகிட்ட தோத்துட்டோமேன்னு ஆத்திரம் தான் வரும்… லவ் பண்ணின பொண்ண மிஸ் பண்ணிட்டோமேங்கர ஏக்கமோ வருத்தமோ இருந்ததே இல்ல…”
“நாங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் பண்ணிக்க போறோம்ன்னு என் ஃபிரண்ட்ஸ் எல்லாருகிட்டயும் சொல்லியிருந்தேன்… அது நடக்காம போன உடனே ரொம்ப அவமானமா ஃபீல் பண்ணினேன்… பசங்க முகத்துல முழிக்கவே அசிங்கமா இருக்கும்… ஏமார்ந்துட்டோமேங்கர வெறில தண்ணி… அடிதடின்னு ஆளே மாறிப் போயிட்டேன்…”
“நான் இப்படியே கெட்டு ஒழிஞ்சிடுவேனொன்னு வீட்டுல எல்லாரும் சேர்ந்து எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க… நான் மறுத்தேன்… அந்த டைம்ல பொண்ணுங்க மேல பயங்கர வெறுப்புல இருந்தேன்…”
“ஆனா… பாட்டி என்னை மந்திரிச்சிடிச்சு… புனிதா உன்னை ஏமாத்தினா நீ எதுக்கு வாழ்க்கையை வீண் பண்ணுற…? அவளைவிட நல்ல பொண்ணா… அழகான பொண்ணா… படிச்ச பொண்ணா கல்யாணம் பண்ணி அவளுக்கு முன்னாடி வாழ்ந்து காட்டுன்னு உசுப்பேத்தி விட்டுடுச்சு…”
“நானும் சம்மதிச்சுட்டேன்… நிறைய எதிர்பார்ப்புகளோட உன்னை கல்யாணம் பண்ணினேன்…” என்றவனை தொடர்ந்து… “நான் ஏமாத்திட்டேன் இல்ல…?” என்றாள் பவித்ரா வருத்தத்தோடு.
“இப்ச்… இல்ல… நான் தான் என்னோட தகுதிய மறந்துட்டேன்… அதனால உன்னோட மதிப்பு என் கண்ணுக்கு தெரியாம போச்சு…” என்றபடி அவன் கைகளுக்குள் சிக்கியிருந்த அவள் கையில் அழுத்தம் கொடுத்தான்.
“ஆரம்பத்துல உன்னை வெறுத்து ஒதுக்கினேன்… ஆனா போகப் போக நீ எனக்குள்ள வந்துட்ட… எப்படின்னெல்லாம் தெரியாது…”
“அது எப்படி தெரியாமப் போகும்…? நான் நீங்க விரும்பின மாதிரி படிச்சிட்டேன்… இப்போ என்னோட அப்பியரன்ஸ் கூட மாறிப் போச்சு… அதான்…” மெல்லியக் குரலில் பேசிக் கொண்டிருந்தவள் அவன் முகமாற்றத்தைக் கண்டு பேச்சை பாதியிலேயே நிறுத்தினாள். அவ்வளவு வருத்தம் அந்த முகத்தில்…
“நீ அப்படித்தான் நினைக்கிறியா பவி…?”
அடிபட்ட வேதனையுடன் ஒலிக்கும் அவன் குரல் அவளைக் கட்டிப் போட்டது. அவள் பதில் சொல்லாமல் அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீ தனி வீடு பார்த்து வரணுன்னு சொன்னதும்… வயசான பாட்டியையும் அம்மாவையும் தனியா விட்டுட்டு உன் பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி வந்துட்டேனே… அதுக்கு பேர் என்ன பவி…?” அவன் அவளைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டான்.
அவள் விழிகள் விரிந்தன. பிறகு உடனே முகம் குழப்பத்துடன் சுருங்கியது… “இல்ல… நீங்க ஒண்ணும் நான் கூப்பிட்ட உடனே வரல… உங்க தம்பி கட்டாயப் படுத்தினதுனால தான் வந்திங்க…”
“அவன் சொன்னா நான் கேட்டுடுவேனா…? அவன் என்னை எத்தனயோ செய்ய சொல்லியிருக்கான்… படிக்க சொன்னான்… ஆட்டோ ஸ்டாண்டை விட்டு ஒழிக்க சொன்னான்… குடிக்க கூடாதுன்னு சொன்னான்… பணம் தர்றேன் பிசினஸ் பண்ணுன்னு சொன்னான்… எதை நான் செஞ்சேன்…?”
அவளுடைய முகத்தில் பிரகாசம் வந்தது… ஜீவன் தொடர்ந்து பேசினான்.
“அவன் சொன்ன அத்தனையும் நான் செஞ்சேன்தான்… ஆனா அவன் சொன்னப்ப இல்ல… நீ சொன்னப்ப… நீ சொன்னப்ப மட்டும் தான்…” அவன் உணர்ச்சிப் பூர்வமாக பேசிக் கொண்டிருந்தான்.
அவள் நிதானமாகத் திரும்பி டீப்பாயில் இருந்த மது பாட்டில்களைப் பார்த்தாள்.
“என்ன…? என்ன அங்க பார்க்கற…?”
“இல்ல நீங்க தண்ணியடிக்கிறத நிறுத்திட்டதா சொன்னிங்களே… அப்போ இதெல்லாம் என்ன…?” என்றாள் உதட்டை சுழித்துக் கொண்டு…
“நீ பண்ணின கொடுமைல அதை ஊத்திகிட்டு சாஞ்சிடுவோம்ன்னுதான் நெனச்சேன்… ஆனா மனசு வரல… அதான் சிகரெட்டோட நிறுத்திகிட்டேன்… வேணுன்னா எடுத்து பாரு… ஓபன் பண்ணவே இல்ல…” உரிமை கலந்த கோபத்துடன் பேசினான்.
அவனுடைய கோபத்தில் அவளுக்கு சிரிப்பு வந்தது… “சரி… எல்லாத்தையும் விட்டிங்க… இந்த கோபத்தை எப்போ விடப் போறீங்க?” என்றாள் சிரித்தபடி. ஆனால் அவன் சிரிக்கவில்லை…
“நான் மாறியிருக்கேன் பவி… என்னை நீ நம்பலையா…? உன்னை தவிர வேறு யாரு கழுத்துல நான் தாலிக் கட்டியிருந்தாலும்… அவ எவ்வளவு பெரிய ரம்பை ஊர்வசியா இருந்தாலும் என்னை மாத்தியிருக்க முடியாது பவி.. இது உனக்கு புரியலையா…?” அவன் ஏக்கமாகக் கேட்டான். அவளுடைய சிரிப்பும் மறைந்து முகபாவம் சீரியசாக மாறியது.
“நீ இல்லன்னா என்னோட வாழ்க்கை இருட்டுதான் பவி… இதை நீ நம்பனும்…” மனதின் ஆழத்திலிருந்து உணர்ந்து சொன்னான்.
“எப்படி… எப்படி என் மேல…? உங்களுக்கு…” அவள் தயக்கத்துடன் தடுமாற… அவன் தொடர்ந்தான்.
“காதல் இன்ன காரணத்தினால வந்துச்சு… இன்ன நேரத்துல வந்துச்சுன்னு யாராலையும் சொல்ல முடியாது பவி… என்னாலையும் முடியல… ஆனா என்னை ஆட்டிப்படைக்கிற சக்தி உன்கிட்ட மட்டும் தான் இருக்கு… என் மனசுலயும் நீ மட்டும் தான் இருக்க…” அவன் அழுத்தமாக சொன்னான்.
வறண்டிருந்த அவளுடைய கண்கள் மீண்டும் குளமாயின. அவன் துடைத்துவிடவில்லை… அவளை சமாதானம் செய்ய முனையவில்லை… மாறாக அவள் கண்ணீரை பார்த்தபடி தொடர்ந்து பேசினான்…
“பவி… நீ என் வாழ்க்கைல வர்றதுக்கு முன்னாடி என்னோட வாழ்க்கை வேறமாதிரி இருந்துச்சு… கரடுமுரடா… பாதுகாப்பு இல்லாம… நிம்மதி இல்லாம… எப்பவுமே ஒரு மாதிரி… மனசு இருக்கமாவே இருக்கும்… ஆனா இப்போ… எல்லாமே மாறிடிச்சு… வாழ்க்கையை எப்படி வாழணுன்னு கத்துகிட்டேன்… சந்தோஷமா இருக்கேன்… நிம்மதியா இருக்கேன்… எல்லாமே உன்னாலதான்… நீ தான் என் வாழ்க்கையை மாத்தினவ… நீதான் என்னோட விடிவெள்ளி…” கனத்த குரலில் உருக்கமாக சொல்லிவிட்டு… அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்கிற பதைப்புடன் அவள் முகம் பார்த்தான்.
அவளுக்கு பேச்சு வரவில்லை… கண்ணீர்தான் அதிகமானது… அது சந்தோஷத்தில் விளைந்த கண்ணீர்… அவளுக்குத் தெரியும் அவன் அவளை காதலிக்கிறான் என்று… ஆனால் அந்த காதல் அவனுடைய எதிர்பார்ப்புகளை அவள் பூர்த்தி செய்த பிறகு பூத்ததல்ல… அதற்கு முன்பே… அவன் அடங்காத முரட்டுக்காளையாகச் சுற்றிக் கொண்டிருந்த போதே பூத்துவிட்டது என்று அவனே சொல்லிக் கேட்ட பிறகு… வேறு என்ன வேண்டும் அவளுக்கு…!!! அவள் மனம் நிறைந்துவிட்டது… கண்களிலிருந்து தொடர்ந்து கண்ணீர் கசிந்துக் கொண்டிருந்தாலும் உதட்டில் புன்னகைப் பூத்தது…
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vats says:
Very nice story! Thanks a lot