Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-2

அத்தியாயம் – 2

 காலை பதினொரு மணி டீ பிரேக்… டீயும் வடையும் வாங்கிக் கொண்டு கேண்டீனை பார்வையால் அலசினாள் பூர்ணிமா. சீனியர் ராகிங் பயமோ என்னவோ கேண்டீனில் முதலாம் ஆண்டு மாணவிகளை அதிகம் காணவில்லை. கடைசி மேஜையில் மட்டும் தன்னுடைய வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களிடம் சென்று “ஹாய்… கேன் ஐ ஜாயின் வித் யு கைஸ்…” என்றாள்.

 

“ப்ளீஸ்…”

 

“எங்க… நம்ம கிளாஸ் ஸ்டுடென்ட்ஸ் யாரையும் காணும்…?”

 

“சீனியர்ஸ் கூட்டம் குறைந்ததும் கொஞ்சம் லேட்டா வருவாங்கன்னு நினைக்கிறேன்…”

 

“ஓகே… ஓகே…” – வகுப்பு தோழனுக்குப் பதில் கூறியபடி வாங்கி வைத்திருந்த வடையைக் கவனிக்கலானாள் பூர்ணிமா. அப்போது பக்கத்து மேஜையில் கிடந்த நாற்காலியை இழுத்து இவர்கள் மேஜைக்கு அருகே போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தான் சித்தார்த்.

 

“ஹாய் சீனியர்…” – பூர்ணிமா புன்னகையுடன் கூறினாள்.

 

அவளோடு அமர்ந்திருந்த மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு திருதிருத்தார்கள். அவர்களும் அன்று காலை சித்தார்த்தின் குரூப்பிடம் மாட்டித் தப்பிப் பிழைத்து வந்தார்கள்தான். அதனால் ‘எங்கடா… இவன் இங்கேயும் வந்து தொலைச்சுட்டான்…! ஒரு டீயைக் கூட நிம்மதியாக் குடிக்க விடமாட்டானுங்களோ…! பேசாம நாமளும் கிளாஸ் ரூம்லேயே இருந்திருக்கலாம்…’ என்கிற தீவிரச் சிந்தனைக்கு உள்ளாகியிருந்தார்கள்.

 

“ஃபர்ஸ்ட் இயர்தானே…?” அவர்களுடைய சிந்தனையைக் கலைத்தது சித்தார்த்தின் குரல்.

 

“ஆ… ஆமாம் சார்…”

 

“இந்த டேபிள் பைனல் இயர் ஸ்டுடென்ட்ஸ் உக்கார டேபிள். தெரியாது?” – உறுத்து விழித்தான்.

 

“சாரி சார்…” என்று கூறிவிட்டு அடுத்த நொடி அவர்கள் கையில் டீ கப்பை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்கள்.

 

‘கேண்டீன்ல சீனியர்ஸ்கும் ஜூனியர்ஸ்கும் தனித்தனியா டேபிள் சேர் போட்டு வச்சிருக்காங்களா! என்னமாக் கதை விடறான்!’ – பூர்ணிமா மனதிற்குள் எரிச்சல் பட்டாள்.

 

“என்ன லுக்கு?” – விழியகலாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளை நோக்கி ஒரு அதட்டல் போட்டான்.

 

“நானும் ஜூனியர்தானே… இங்கே உக்காரலாமா… இல்ல பர்ஸ்ட் இயர் டேபிள் எங்க இருக்குன்னு தேடிட்டுப் போகலாமான்னு யோசிக்கறேன்”

 

“என்ன நக்கலா? டீ பிரேக்ல உன்ன கேண்டீன்னு வரச் சொன்னது என்னைப் பார்க்க… நீ இங்க வந்து டீயையும் வடையையும் மொக்கிகிட்டு இருக்க? அதுவும் ரெண்டுக் கொடுக்கைக் கூடச் சேர்த்துகிட்டு…”

 

“நா வந்தப்போ நீங்க இங்க இல்ல சீனியர்… அதான் அப்படியே பிரண்ட்ஸ் கூடச் சேர்ந்து ஒரு கப் டீ சாப்பிடலாமேன்னு நினைத்தேன்…”

 

“ஏன்? உனக்கு கேர்ள்ஸ் எல்லாம் பிரண்ட்ஸா மாட்டலையா?”

 

“ஏன் மாட்டல? எல்லாம் மாட்டியிருக்காங்க”

 

“அப்போ அவங்களோட சேர்ந்து டீ சாப்பிட வேண்டியதுதானே?”

 

“எங்க… அவங்கல்லாம் சீனியர்ஸ் ராகிங்கு பயந்து கேண்டீன் பக்கமே வர மாட்டேங்கிறாங்களே!…”

 

“உனக்கு மட்டும் பயமே இல்ல. அப்படித்தானே?”

 

“ஆமாம்… எதுக்குப் பயப்படணும்? அப்படி என்ன நீங்க பெருசா ராக் பண்ணிடப் போறீங்க? தரையில நீச்சலடி… விரைப்பா நின்னு குட் மார்னிங் சொல்லு… டான்ஸ் ஆடு… பாட்டுப் பாடு… இதானே? இதெல்லாம் எங்களுக்குத் தண்ணிப் பட்டபாடு…”

 

“ஓஹோ… அவ்வளவு அலட்சியமா?” – கண்கள் இடுங்கக் கேட்டான்.

 

“அலட்சியமெல்லாம் இல்ல… ஒரு தன்னம்பிக்கைதான்…” – அழகாகச் சிரித்தாள்.

 

“பார்த்தும்மா… ஓவர் நம்பிக்கை உடம்புக்கு ஆகாது…” என்றபடி அவளுடைய பர்சை கையில் எடுத்தான்.

 

“ஹலோ சார்… அது என்னோட பர்ஸ்” – வடையை வாயில் திணித்துக் கொண்டே கூறினாள்.

 

“தெரியுது தெரியுது… நீ முதல்ல உள்ள தள்ளுற வேலையை ஒழுங்காக் கவனி” என்றபடி பர்சை திறந்து உள்ளே இருக்கும் நோட்டுகளை உருவினான்.

 

“இன்னிக்குதான் ATM லேருந்து எடுத்திருப்பப் போலருக்கு… மடிப்புக் கலையாம அப்படியே மின்னுது” – பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தான்.

 

“ம்ம்ம்… ஹாஸ்ட்டல் டெப்பாசிட் கட்டிட்டு மீதிப் பணம். இந்த மாசச் செலவுக்கு… பத்திரமா உள்ள வைங்க…” – கடைசி வாய் வடையையும் வாயில் போட்டு அசைபோட்டப் படிக் கூறினாள்.

 

“பத்திரமாதானே… வச்சுட்டாப் போச்சு…” என்றபடி இரண்டு மேஜை தள்ளி அமர்ந்து தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்குச் சைகைக் காட்டி அருகில் அழைத்தான்.

 

‘என்ன பண்றான் இவன்!’ – பூர்ணிமா சந்தேகக் கண்ணுடன் அவனைப் பார்த்தாள்.

 

“என்ன மச்சி?” கதிர் அருகில் வந்து கேட்டான்.

 

“இந்தா… இந்தப் பணத்தைக் கொண்டு போயி நம்ம கேண்டீன் கவுன்ட்டர்ல கொடுத்துப் பத்திரமா வைக்கச் சொல்லு. அப்படியே நம்மப் பசங்க எல்லாரையும் கூப்பிட்டு என்னென்ன வேணுமோ வாங்கிக்கச் சொல்லு. நம்ம பூசணிகிட்டேயும் ஏதாவது வேணுமான்னுக் கேட்டுகிட்டுப் போடா. என்ன பூசணி… உனக்கு இது வரைக்கும் உள்ள தள்ளினது போதுமா இல்ல… இன்னும் ஏதாவது வேணுமா? சும்மா வெட்கப்படாமச் சொல்லு…” – கரிசனமாகக் கேட்டான்.

 

கதிர் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு “என்னடாச் சொல்ற?” என்று புரியாமல் கேட்டான்.

 

“ட்ரீட்டுடா… நம்ம பூசணி கொடுக்கறா. என்ன்ன்ஜாய்…!!!” – மகிழ்ச்சிக் கூத்தாட உற்சாகமாகக் கூறினான்.

 

பூர்ணிமா திகைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே… “வாவ்… இன்னிக்கு பூரணியோட ட்ரீட்டா… கிரேட்… கலக்கிட்ட பூரணி… டேய்… மச்சான்… இன்னிக்கு நம்ம பூரணியோட ட்ரீட்டா… என்ஜாய் பண்ணுங்க…” மைக் இல்லாமலே கேண்டீனில் அமர்ந்திருந்த அத்தனை பேருக்கும் அனௌன்ஸ் செய்துவிட்டான் கதிர்.

 

செய்வதறியாது விழித்த பூர்ணிமா அவன் அந்தப் பக்கம் நகர்ந்ததும் “சீனியர்… அது என்னோட பணம்…” என்றாள் சற்று எரிச்சலுடன்.

 

“ஆமாம்… நாங்க என்ன எங்களோட பணம்னாச் சொன்னோம்? உன்னோட பணத்துலத்தானே நீ ட்ரீட் கொடுக்க முடியும்?”

 

‘பைவ் தௌசண்ட்கிட்ட இருந்திருக்குமா? இல்ல அதிகமா இருந்திருக்குமா! எண்ணி வைக்காமப் போயிட்டேனே… பாவி… எல்லாப் பணத்தையும் அப்படியே அபேஸ் பண்ணிட்டனே!’

 

“என்ன பூசணி… இவ்வளவு பாசமாப் பார்க்கற?”

 

“நீங்க கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடச்சதை நினச்சு அசந்துப் போய் உட்கார்ந்திருக்கேன்” என்று எரிச்சலுடன் ஆரம்பித்தவள் “ஆமாம்… அதுல எவ்வளவு பணம் இருந்துச்சு?” என்று பாவமாக முடித்தாள்.

 

அவள் கஷ்டம் அவளுக்குத்தானே தெரியும். ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேணும் என்பது போல் வேல்முருகன் என்னவோ பணக்காரர்தான். கோடிக் கோடியாய் சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பவர்தான். மகள் கேட்டால் எதையும் வாங்கிக் கொடுப்பார்தான். ஆனால் அவள் கையில் செலவுக்கென்று பணத்தைக் கொடுக்கும் பொழுது மட்டும் கணக்குக் கேட்டுத்தான் கொடுப்பார். ஏற்கனவே அடாவடித் தனமாகச் சுற்றும் பெண். அவளிடம் கணக்கில்லாமல் பணத்தை வேறு கொடுத்தால் கதைக் கந்தலாகிவிடும் என்பது அவருடைய எண்ணம்.

 

‘கருமி… உங்கப்பன் கோடிக் கோடியாக் கொள்ளையடிச்சு வச்சிருக்கான். நீ இந்த தம்மாத்துண்டுப் பணத்தைச் செலவுச் செய்யறதுக்கு மூக்கால அழுவுறியா?’ – நக்கலாகச் சிரித்துக் கொண்டான்.

 

“என்ன பூசணி நீ…? நம்மப் பசங்களுக்குச் செலவுப் பண்ணறதுக்குப் போயிக் கணக்குப் பார்த்துகிட்டு? உங்க அப்பா ஒரு தங்கமான மனுஷன்… கோடிக் கோடியா தானம் பண்ணுறவர். அவரோட பொண்ணு நீ… இவ்வளவு கஞ்சக் கருமியா இருக்கியே…!” வஞ்சகமாகப் புகழ்ந்தான்.

 

‘நம்ம அப்பா தானம் பண்ணினாரா!! நமக்குக் கூடத் தெரியாம எதுவும் பண்ணியிருப்பாரோ!! இருக்கும் இருக்கும்… அவரை மாதிரி நல்ல மனுஷன் இந்த உலகத்துல யார் இருக்கா… ஊருக்கெல்லாம் தாராளப் பிரபுவா இருக்கறவர் நம்மப் பணம் கேட்டா மட்டும் கஞ்சூஸா மாறிடராறு. நாமளும் அவரை மாதிரியே இருக்க முடியுமா? பெரிய மனுஷனுக்குப் பிள்ளையாப் பிறந்திட்டா இந்த மாதிரிச் செலவுகளையெல்லாம் சமாளிச்சுத்தான் ஆகணும்… சமாளிப்போம்…’ – மனதைத் தேற்றிக் கொண்டு பேசினாள்.

 

“நீங்க சொல்றதும் சரிதான் சீனியர். எங்க அப்பா கொள்கைக்காக வாழறவர். நிறையப் பேருக்கு ஹெல்ப் பண்ணுவார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லைதான்…” என்றபடிக் கேண்டீனை ஒரு சுற்றுக் கண்களால் வட்டமிட்டாள். ‘பேய் தீனி’ என்பார்களே… அது போல் ஒட்டுமொத்தக் கேண்டீணும் விட்டு விளாசிக் கொண்டிருந்தது. “ஹ்ம்ம்… யாராவது கஷ்டப் படறவங்களுக்கு ஹெல்ப் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்கும்… போகட்டும் நம்மப் பசங்கதானே…” – பெருமூச்சுடன் கூறியவள் சிரமப்பட்டு உதட்டைக் காதுவரை இழுத்துப் பல்லைக் காட்டினாள்.

 

‘ம்க்கும்… இதுக்கு நீ இளிக்காமலே இருந்திருக்கலாம்’ – மனதிற்குள் நினைத்தபடி வந்த வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்ட திருப்தியுடன் “ஓகே பூசணி… இதே கேண்டீன்ல திரும்ப ஈவினிங் மீட் பண்ணலாம்…” என்று டாட்டா… பாய் பாய்… சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

 

‘திரும்ப ஈவினிங் வேறையா! என் பர்ஸ் தாங்காதுடா ராசா… நீ இருக்கேன்னு தெரிஞ்சா இந்தப் பக்கம் தலைவச்சுக் கூடப் படுக்க மாட்டேன்.’ – அவள் அரண்டுப் போனாள்.

 




Comments are closed here.

You cannot copy content of this page