Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-3

அத்தியாயம் – 3

 

சந்தித்த முதல் நாளே தன்னுடைய பர்சைக் கழுவித் துடைத்துக் காயவைத்துவிட்ட சித்தார்த்தின் சாதூர்யம் ஆரம்பத்தில் பூர்ணிமாவிற்குப் புரியவில்லை என்றாலும் சிந்திக்கச் சிந்திக்கப் புரிந்தது. ‘நைசா பேசியே ஏமாத்திட்டானே…! டேஞ்சரஸ் மேன்…’ என்று நினைத்தவள் அதன் பிறகு ஒரு வாரத்திற்கு அவன் கண்ணிலேயே மாட்டாமல் நழுவிக் கொண்டிருந்தாள். ஒரே வளாகத்திற்குள் இருந்து கொண்டு எத்தனை நாள் அவனைச் சந்திக்காமல் தவிர்க்க முடியும்.

 

அன்று மாலை சித்தார்த் அவனுடைய வண்டியை எடுக்கப் பைக் ஸ்டாண்டிற்குச் சென்ற போது எதேர்சையாக அவன் கண்ணில் மாட்டினாள் அவள். ஊதா நிற ஜீன்சும் சாம்பல் நிறச் சட்டையும் அணிந்து… கைக்குட்டையை முறுக்கி நெற்றியில் கட்டிக் கொண்டு ஒரு பல்சர் வண்டியை வெளியே எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

“ஹேய் பூசணி… அங்க யார் வண்டிய ஆட்டையப் போட்டுக்கிட்டு இருக்க…?” – தூரத்திலிருந்து சித்தார்த் குரல் கொடுத்தான்.

 

குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்த பூர்ணிமா ‘இவனா…! என்னோட பர்ஸ்ல இருந்த மொத்தப் பணத்தையும் ஆட்டைய போட்டுட்டு என்னைய சொல்றான் பாரு…’ என்று மனதில் நினைத்ததை வெளியில் சொல்லாமல் “ஆட்டையும் போடல… மாட்டையும் போடல சீனியர்… இது என்னோட சொந்த வண்டி…” என்றாள்.

 

“உன்னோட வண்டியா…! இதுவா!” – அவன் ஆச்சர்யமாகப் வாயைப் பிளந்தான்.

 

“ம்ம்ம்… ஒரு வாரம் உண்ணா விரதம் இருந்து எங்க அப்பா மனசக் கரைச்சு வாங்கினேன்…”

 

‘நீதான் ஒரு மார்க்கமான கேசுன்னு நினச்சா உங்கப்பன் அதுக்கு மேல இருப்பான் போல…’

 

“ஏன் பூசணி… பொம்பள புள்ளைங்க ஓட்டுரதுக்காகவே ஸ்கூட்டி… ஆக்டிவான்னெல்லாம் வண்டிங்க இருக்கு உனக்குத் தெரியுமா?”

 

“தெரியும் தெரியும்… ஆனா எனக்குக் கியர் வண்டி ஓட்டறதுக்குத் தான் ரொம்பப் பிடிக்கும்…”

 

“அதுக்கு ஒரு டிஸ்கவரோ இல்ல ஸ்ப்லென்டரோ வாங்கியிருக்கலாம்ல… எதுக்கு இவ்வளவு ஹெவியான வண்டியை வாங்கின?”

 

“ஹெவியான வண்டிய ஓட்டும் போதுதான் ‘கெத்’ கிடைக்கும் சீனியர்… ” லாவகமாக வண்டியை வெளியே எடுத்துக் கொண்டு வந்தபடிக் கூறினாள்.

 

“அதுசரி… உனக்கு ரஜினின்னா ரொம்பப் பிடிக்குமோ…?”

 

“ஹா… தலைவர பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா? என்ன ஸ்டைல்… என்ன நடை… மாஸ் ஹீரோல்ல…” – சிலாகித்தாள்.

 

“பார்த்தாலே தெரியுது…”

 

“என்ன…? என்ன தெரியுது…?”

 

“உன்னோட ட்ரெஸ்ஸும், ஹேர் ஸ்டைலும், நடையும்… அப்படியே ரஜினிக்கு டூப் போடுற ஆர்டிஸ்ட் மாதிரியே இருக்க…”

 

“ஓஹ்… நான் தலைவர் மாதிரி இருக்கேனா??? அவரை மாதிரிதான் நடக்கறேனா??? ஆஹா… என்னோட டிரெஸ்ஸிங் கூடத் தலைவர் மாதிரிதான் இருக்கா…? அதான் பசங்க நான் கிராஸ் பண்ணும் போது படையப்பா… படையப்பான்னுக் கத்தராங்களா… அடடா… தெரியாமப் போச்சே…!!!” – பெரிதும் மகிழ்ந்து போய்ப் பூரித்தாள்.

 

அவன் முகம் இஞ்சித் தின்ற மந்தி போல் மாறியது… “ரொம்ம்ம்பப் பெருமை போலருக்கு…?”

 

“பின்ன இருக்காதா… தலைவர்னா சும்மாவா?”

 

“எல்லாம் சரிதான்… உங்க தலைவர் எப்பவும் ஸ்லிம்மாதானே இருப்பாரு… அது மட்டும் உன் கண்ணுக்குத் தெரியலையா?”

 

“ஏன்…? தெரியாம என்ன…? நான் கூட எங்க தலைவர் மாதிரி ஸ்லிம்மா…” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவன் முறைத்தான். அவளுடைய பேச்சுப் பாதியிலேயே தடைப்பட்டது.

 

“பேருக்குத் தகுந்த மாதிரி நல்லா பூசணிக்கா சைஸ்ல இருந்துகிட்டு நீ ஸ்லிம்மா…? மனசாட்சி வேணாம்…” – ஆதங்கத்துடன் கேட்டான்.

 

அவன் ஆதங்கப்படும் அளவிற்கு அவள் பிந்துகோஸ் இல்லை என்றாலும் சின்ன வயது ஜோதிகாதான் என்பதில் சந்தேகமில்லை… அதை அறிந்திருந்தவளுக்கு முதல் முறையாக லேசாக வெட்கம் வந்தது.

 

“ஹி… ஹி… ஹாஸ்ட்டல்ல சேர்ந்த பிறகு கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்…”

 

“எல்லாரும் ஹாஸ்டலுக்கு வந்தா மெலிஞ்சுதான் போவாங்க… நீ மட்டும் வெயிட் போட்டிருக்க… எதுலையுமே நீ கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான் போ…” நக்கலடித்தபடி அவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய அவனுக்கு முன் அவள் கிக்கரை உதைத்து ஸ்டார்ட் செய்து அக்சிலேட்டரை முறுக்கி “பாய் சீனியர்…” என்று கூறிவிட்டு பறந்தாள்.

 

# # #

 

திருச்சி அருகில் ஸ்ரீரங்கம் கணபதி நகரில் அமைந்துள்ள அந்தப் பழங்கால ஒட்டு வீட்டுக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஓர் இளைஞன் படுத்திருந்தான். மாதக்கணக்கில் மழிக்கப்படாத தாடி… குழிவிழுந்த கன்னம்… கருவளையத்தால் சூழப்பட்டிருந்த கண்கள்…. உறங்கும் பொழுதும் புருவ மத்தியில் சுருக்கம்… அவன் ஆழ்ந்து உறங்கவில்லையோ!

 

உடல் முழுக்கத் தீக்காயம் பட்ட ஒரு மனிதன் மருத்துவமனை பெட்டில் படுத்திருக்கிறான். அவன் வேதனைத் தாங்காமல் அழுது புலம்புகிறான்.

 

“ஐயோ… தம்பி… புடிடா… தூக்குடா… முடியலடா… ரவி… தம்பி… தூக்கு… தூக்கு…” அழுகையினூடே புலம்புகிறான்.

 

“அண்ணே… இதோ… வந்துட்டேண்ணே… வந்துட்டேன்… அண்ணே…” சப்தமிட்டபடி ஊஞ்சலில் படுத்திருந்த ரவி உருண்டுக் கீழே விழுந்தான்.

 

“ரவி…!” – தவிப்புடன் சமையலறையிலிருந்து பாய்ந்தோடி வந்து மகனை மடியில் தாங்கிக் கொண்டாள் பார்வதி.

 

“என்னப்பா…?” – கண்ணீருடன் கேட்டாள்.

 

தாயின் மடியிலிருந்து விலகி அமர்ந்த ரவி… “அண்ணன்மா… கனவுல…”

 

“ஆறு மாசம் ஆச்சுப்பா… இன்னமும் மறக்கலைன்ன எப்படிடா… அவன் விதி அவ்வளவுதான்… இருக்கற நீயாவது நல்லா இருந்தாதானே எனக்கு நிம்மதி… வயசானக் காலத்துல, பெத்தப் பிள்ளைகளை இப்படிப் பார்க்கரதுக்கா உங்கள நான் கஷ்டப்பட்டுப் பெற்று வளர்த்தேன்…” – பார்வதியின் புலம்பல் கேவலில் முடிந்தது.

 

தாயின் அழுகைக்குச் சமாதானம் சொல்லும் மனநிலையில் இல்லை ரவி. அவன் எழுந்து சட்டையை மாட்டினான்.

 

“எங்கப்பாக் கிளம்பிட்ட?”

 

“வெளியே போயிட்டு வர்றேம்மா…”

 

வெளியே சென்றால் அவன் நேராக ஒயின் ஷாப்பைத் தேடித்தான் செல்வான் என்பது தெரிந்திருந்தபடியால் பார்வதி அவசரமாகத் தன் இளைய மகனுக்கு போன் செய்தாள். நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கும் தன்னுடைய நடுமகன் இளையவன் வார்த்தைக்கு மட்டும்தான் கட்டுப்படுவான் என்பது பார்வதியின் நம்பிக்கை. அதுதான் உண்மையும் கூட…

 

“இரு ராஜுக்கு போனை போடுறேன். அவன்கிட்ட ரெண்டு வார்த்தைப் பேசிட்டுப் போ…”

 

“வந்து பேசறேன்மா…”

 

“இதோ எடுத்துட்டான்… பேசிட்டுப் போ…” – போனை ரவியிடம் நீட்டி அவனுடைய வேகத்திற்குத் தடைப் போட்டாள் பார்வதி.

 

# # #

 

ஹாஸ்டலில் உறங்கிக் கொண்டிருந்த பூர்ணிமாவை சப்தமிட்டு எழுப்பியது அவளுடைய கைபேசி…

 

“ஹலோ…” – தூக்கக் கலக்கத்துடன் ஹலோ சொன்னாள்.

 

“தூங்கிட்டியாம்மா?” – வேல்முருகனின் குரல்.

 

“ஏம்ப்பா… நாய் பேய் கூடத் தூங்கற நேரத்துல நான் தூங்காம இருப்பேனா? ஹா….வ்… என்னப்பா விஷயம்…?” – பெரிதாகக் கொட்டாவிவிட்டாள்

 

“அப்பா ஒரு மீட்டிங்ல மாட்டிகிட்டேண்டா… அதான் லேட்டாயிடிச்சு… சாப்டியா?”

 

“ம்ம்ம்…”

 

“காலேஜெல்லாம் எப்படிப் போகுது… ஹாஸ்ட்டலெல்லாம் வசதியா இருக்கா…?”

 

“ப்பா… தூங்கிகிட்டு இருக்கவள எழுப்பிக் கேக்கறக் கேள்வியாப்பா இதெல்லாம்…? எல்லாம் வசதியாத்தான் இருக்கு… இப்போ என்னை நீங்க தூங்கவிட்டா இன்னும் வசதியா இருக்கும்…” – சிணுங்கினாள் மகள்.

 

“அப்பகிட்டப் பிடிவாதம் பண்ணி சென்னை போயிருக்க… பத்திரமா இருந்துட்டு வரணும்… வண்டியை எடுத்துகிட்டு வெளியேயெல்லாம் போகக் கூடாது… காலேஜ் விட்டா ஹாஸ்ட்டல்… ஹாஸ்ட்டல் விட்டா காலேஜின்னு இருக்கணும்… எப்பவும் இந்த வேல்முருகனோட பொண்ணா… என் பேரை காப்பாத்தற மாதிரி நடந்துக்கணும். சரியாம்மா?”

 

“ம்ம்ம்…ம்ம்ம்… காப்பாத்துறேன்… காப்பாத்துறேன்… நீங்க போயித் தூங்குங்க… ஹா….வ்…” – மீண்டும் ஒரு கொட்டாவியை விட்டபடி இணைப்பைத் துண்டித்துவிட்டுத் தூக்கத்தை விட்ட இடத்திலிருந்து பிடித்தாள்.

 

‘இது என்னத்தக் காப்பாத்தப் போகுதோ தெரியல. ஆம்பள புள்ள மாதிரி வளர்த்துத் தொலைச்சுட்டேன்… கொஞ்சம் கூடப் பொறுப்பு இருக்க மாதிரியே தெரியல… ஹும்ம்…’ – பெருமூச்சுடன் போனை அணைத்தார்.




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Meera says:

    Nice,

You cannot copy content of this page