Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-4

 

அத்தியாயம் – 4

 

ஹாஸ்ட்டல் கட்டிலில் கவிழ்ந்தடித்துப் படுத்துச் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் பூர்ணிமாவை எழுப்ப நினைத்து அவளுடைய பின்னந்தலையில் யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள்.

 

“ஸ்ஷ்ஷ்…” – ஏதோ கொசுவைத் தட்டிவிடுவது போல் அந்தத் தட்டலை தட்டிவிட்டுவிட்டு உறக்கத்தைக் கண்டின்யூ செய்தாள்.

 

அவளை எழுப்ப நினைத்த புண்ணியாத்மா இன்னும் வேகமாகத் தட்டியது. ‘ப்ரீத்தியா தான் இருக்கும்…’

 

“இப்ச்… கொஞ்ச நேரம் ப்ரீத்தி… ப்ளீஸ்…”

 

“ப்ரீதியா! ஹேய் பூசணிக்கா… எந்திரிக்கிரியா இல்லையா…?” – முதுகில் ஏதோ பொருளைக் கொண்டு அடித்தாள் ப்ரீத்தி..

 

‘ப்ரீத்தியின் குரல் ஏன் இப்படிக் கர்ணக் கொடூரமா மாறிப் போயி இருக்கு!’ – சிரமப்பட்டுத் தலையை நிமிர்த்திக் கண்களை விழித்துப் பார்த்தாள். எதிரில் கையில் பேப்பர் சுருளுடன் ஆஜானுபாகுவாக நின்றிருந்தான் சித்தார்த்.

 

‘இவன் எப்படி ஹாஸ்ட்டலுக்கு வந்தான்…!’ – அவளுக்கு ஏதும் புரியவில்லை. சுற்றிமுற்றிப் பார்த்தாள்.

 

“லை..ப்..ர..ரி…! ஓ… தூங்கிட்டேனா?”

 

“இல்ல… கும்பகர்னியா மாறிட்ட…” என்றவனுக்கு, ‘நாம கூட ஃபர்ஸ்ட் இயர்ல கிளாஸ் கட்டடிச்சுட்டு வந்து லைப்ரரில தூங்கினது இல்ல… இந்த பூசணிக்காய்க்கு என்னா தில்லு…! ‘ என்று ஆச்சர்யமாக இருந்தது.

 

“நீங்க என்ன சீனியர் இந்தப் பக்கம்…?”

 

“ம்ம்ம்… அப்படி ஓரமா படுத்து ஒரு தூக்கம் போடலாம்னுதான் வந்தேன்” – இறுதியாண்டு ப்ராஜெக்ட் திட்டத்திற்குக் குறிப்பு எடுப்பதற்காக, அதிசியமாகக் கல்லூரி நூலகத்திற்கு வந்திருந்த சித்தார்த், பூர்ணிமாவின் அபத்தமான கேள்விக்கு நக்கலாகப் பதில் சொன்னான்.

 

“அப்போ அதைச் செய்ய வேண்டியதுதானே? எதுக்கு என்னோட தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணுரிங்க?”

 

“நல்லா சாப்பிட்டுட்டு தூங்கித்தூங்கி தான் இப்படிப் பூசணிக்கா சைசுக்கு ஊதி போயிக்கிடக்கற? இன்னும் தூக்கமா? இதை என்ன உன் வீட்டுப் பெட் ரூம்னு நினைச்சியா?”

 

“இப்ச்… அப்படி நினைச்சிருந்தாதான் நல்லா காலை நீட்டி தூங்கியிருப்பேனே! இப்படி சேர்ல மடங்கி உட்கார்ந்துகிட்டே தூங்கி முதுகு வலியை வர வச்சுக்குவேனா?” – பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பேசினாள்.

 

“பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல… எழுந்து போயி முகத்தைக் கழுவிட்டு கிளாஸுக்கு போ” – விரட்டினான்.

 

“கிளாஸுக்கா…! அதெல்லாம் போக முடியாது… இன்னிக்கு அந்த மௌஸ் மண்டையனோட கிளாஸ் இருக்கு… சரியான போர்…”

 

மௌஸ் மண்டையன் என்று ஏதோ ஒரு விரிவுரையாளரை தான் அவள் மரியாதையுடன் விளிக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட சித்தார்த் சிரமப்பட்டுச் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

 

“சரி அப்போ ஹாஸ்ட்டலுக்காவது போகலாம்ல?”

 

“போகலாம்தான். ஆனா அங்க அந்த லேடி முசோலினி இருக்கும். என்னைப் பார்த்துடிச்சுன்னா பிரின்ஸிகிட்ட போட்டு கொடுத்துடும். அதோட எனக்கு ஈவினிங் டைக்குவாண்டோ கிளாஸ் இருக்கு. இப்போ ஹாஸ்டலுக்குப் போயிட்டு திரும்ப வர்றது அலைச்சல்… சோ இங்கேயே கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் கிளாஸ் முடிச்சுட்டு அப்புறம் போயிக்கறேன். நீங்களும் இந்த டேபிள்ளையே உட்கார்ந்து உங்க வேலையைப் பாருங்க. அப்படியே லைப்ரரி ஸ்டாஃப் யாராவது வந்தா என்னை எழுப்பிவிடுங்க…” அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் மீண்டும் தலையை மேஜையில் கவிழ்துவிட்டாள்.

 

கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அசால்டாக இருப்பவளை ஏதோ ஒரு விதத்தில் அவனுக்குப் பிடித்திருந்தது. நிற்சிந்தயாகக் கவிழ்ந்து படுத்திருப்பவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு தோள்களைக் குலுக்கிவிட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்கலானான்… அதே டேபிளில் அமர்ந்து.

 

# # #

 

காலேஜ் கேம்ப் என்றாலே கொண்டாட்டம்தான். அடுத்த வாரம் நடக்கவிருக்கும் கல்சுரல்ஸ் மற்றும் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டன. ஒவ்வொரு ஏற்பாட்டையும் கவனிக்கத் தனித்தனியாகக் குழுக்கள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவுக்கும் இறுதியாண்டு மாணவர்களே தலைவர்களாக நியமிக்கப் பட, கல்லூரியை சுத்தம் செய்து அலங்கரிக்கும் குழுவின் தலைவனாகச் சித்தார்த் நியமிக்கப்பட்டிருந்தான். எதேர்சையாக பூர்ணிமாவும் அதில்தான் உறுப்பினராக இணைந்திருந்தாள்.

 

தன்னுடைய குழு உறுப்பினர்களை ஐந்தைந்து பேர் கொண்ட சிறு சிறு அணிகளாகப் பிரித்துவிட்டு ஆளுக்கு இவ்வளவு இடம் என்றும் ஒதுக்கிவிட்டான் சித்தார்த். அனைவரும் மண்வெட்டி, துடைப்பம், காரைச்சட்டி சகிதம் களத்தில் இறங்கினார்கள்.

 

வீராவேசத்துடன் மண்வெட்டியை எடுத்துத் தரையில் மண்டிக் கிடந்த புல்லில் இரண்டு கொத்து கொத்திய பூர்ணிமா இடுப்பைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்தாள். “உஸ்….அப்பாடா!” – பழக்கமில்லாத வேலை… ஊர்க்காட்டுப் பக்கத்திலிருந்து வந்திருந்தவர்களுக்கெல்லாம் தோட்ட வேலை ஏற்கனவே பழகியிருந்ததால் சக்கை போடு போட்டார்கள். ஆனால், அவளுக்கோ மேல் மூச்சு வாங்கியது.

 

வேலை செய்பவர்களுக்குக் களைப்புத் தெரியாமல் இருக்க இடையிடையே விநியோகிக்கப்பட்ட ஜீஸை வாங்கிக் குடித்துவிட்டு மீண்டும் மண்டிக் கிடக்கும் புல்லுடன் போராடினாள். எவ்வளவுதான் போராடினாலும் குடம் கணக்கில் ஜீஸை மட்டும்தான் அவளால் காலி செய்ய முடிந்ததே தவிரப் புல்லை அசைக்கவே முடியவில்லை.

 

“ச்ச…” என்று காலை தரையில் உதைத்து எரிச்சலை வெளிப்படுத்திவிட்டு, மண்வெட்டியை எடுத்து இன்னும் வேகமாகக் கொத்தினாள். அவளுடைய செய்கையைக் கவனித்த சித்தார்த்திற்குச் சிரிப்பு வந்தது. ஏனென்றே தெரியாமல் வலிய சென்று உதவினான்.

 

“ஹேய் பூசணி… என்ன பண்ணிட்டு இருக்க? அதைக் கொடு இப்படி” – அவள் கையிலிருந்த மண்வெட்டியை பிடுங்காத குறையாக வாங்கினான்.

 

“பார்த்தா தெரியில? கிளீன் பண்ணிட்டு இருக்கேன்”

 

“கிழிச்ச… ” என்றபடி அவளை ஒதுக்கிவிட்டவன், லாவகமாகப் புல்லைக் கொத்தி அள்ளிக் கொண்டினான்.

 

மொத்த மாணவர்களும் வெட்டி, கொத்தி, கூட்டி ஒதுக்கிய சருகுகளையெல்லாம் நடுவில் போட்டு தீ மூட்டி, கேம்ப் ஃபயர் என்று ஒரே ஆட்டம். அடுத்து வகுப்புகளையெல்லாம் சுத்தம் செய்து, அலங்கார தோரணங்களைத் தொங்க விட்டார்கள். ப்ளாக் போர்டை வண்ணமலர் காடாக மாற்றினார்கள். ஜன்னல்களெல்லாம் மாலை போட்டுக் கொண்டன. அடுத்த ஏழு நாட்களும் கருத்தரங்கம், போட்டிகள் மற்றும் கல்சுரல்ஸ் கொண்டாட்டம் என்று கல்லூரி களை கட்டிவிட்டது.

 

சீனியர் மாணவர்களுக்கு பேப்பர் பிரசன்டேஷன், இண்டர்நெல் ப்ராஜெக்ட் சப்மிஷன் என்கிற அளவில் போட்டிகள் நடைபெற்றால்… முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மெமரி கேம், பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, கோலப்போட்டி என்கிற அளவில் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரும்பாலானவற்றில் பூர்ணிமா கலந்து கொண்டு சொதப்பினாள். தன்னைக் கிண்டலடிக்கும் மாணவர்களைத் திருப்பிக் கிண்டலடித்துவிட்டு அடுத்த விளையாட்டில் கலந்து கொள்ள உற்சாகத்துடன் கிளம்பினாள்.

 

‘எதுக்கும் அசர மாட்டாளே…!’ – வழக்கமான துள்ளல் நடையுடன் சென்று கொண்டிருப்பவளை ரசனையுடன் நோக்கினான் சித்தார்த்.

 

# # #

 

அடுத்த நாள் மதிய உணவு இடைவெளியில் பூர்ணிமா கேண்டீனுக்கு வரும்பொழுது நொண்டிக் கொண்டே வந்தாள். கூடவே ஒரு பெரிய கூட்டத்தையும் கூட்டிக் கொண்டு வந்தாள்.

 

‘என்ன ஆச்சு இந்தப் பூசணிக்காவுக்கு… நொண்டி அடிச்சுகிட்டே வருது… கைய கால வச்சுகிட்டு ஒழுங்கா இருக்கறதே இல்ல…’ – தூரத்திலிருந்து பார்த்த சித்தார்த் மனதிற்குள்ளேயே அவளுக்கு அர்ச்சனை செய்தான்.

 

“ஹாய் சீனியர்… எங்க தப்பிச்சு ஓட பார்க்கறீங்க…? வாங்க வாங்க… நொண்டிகிட்டே வந்தாலும் சொன்னபடி என் பிரண்ட்ஸோட வந்துட்டேன் பாருங்க…” – பூர்ணிமாவின் பார்வை சென்ற திசையை நோக்கினான் சித்தார்த்.

 

‘சதீஷ்… இவனோட இவளுக்கு என்ன பழக்கம்…!’ – சித்தார்த்தின் முகம் கடுத்தது. அமைதியாக மேலும் நடப்பதை கவனித்தான்.

 

“ஹாய் பூர்ணி… தப்பிச்செல்லாம் ஓடலம்மா… நீ வந்ததைக் கவனிக்கல அவ்ளோதான்… இந்த கேண்டீன்ல ட்ரீட் கொடுக்கறதுக்குப் பயந்து ஒடரவனா நான்…? நீ மட்டும் ஓகேன்னு ஒரு வார்த்தைச் சொல்லு… உங்க அத்தனை பேருக்கும் ஸ்டார் ஹோட்டல்லேயே ட்ரீட் தர்றேன்…” – வழிந்தான்.

 

“ஓஹ்ஹோ…” – உற்சாகமாகக் குரல் கொடுத்தவள் “நல்ல டீல்தான்… பட் இதை மேட்சுக்கு முன்னாடி பேசியிருந்திருக்கணும்… பரவால்ல நெக்ஸ்ட் டைம் ஞாபகம் வச்சுக்கறேன். இப்போதைக்கு நம்ம கேண்டீன் மாஸ்ட்டர் கைபக்குவத்தை ஒரு கவனிப்புக் கவனிப்போம்…” – என்று கூறிவிட்டு டோக்கன் கெளன்டரை நோக்கி நடந்தாள்.

 

ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் அனைவரோடும் சகஜமாகப் பேசிச் சிரித்து விளையாடியபடி உணவருந்திக் கொண்டிருக்கும் பூர்ணிமாவைப் பார்க்கும் பொழுது சித்தார்த்திற்கு ஏனோ கோபம் பற்றிக் கொண்டு வந்தது. அவள் செயலில் சிறிதும் தவறில்லை என்று அவன் அறிவு உணர்த்தினாலும் மனம் ஏனோ முரண்டியது. அவளிடம் வேகமாகப் பாய்ந்துச் சென்று ‘பேசுவியா…? சிரிப்பியா…?’ என்று நான்கு வைக்க வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால் எந்த உரிமையில் அவன் அவளைக் கட்டுப்படுத்த முடியும். பல்லைக் கடித்துக் கொண்டு அமைதிக் காத்தான்.

 

சென்ற வாரத்தில் ஒரு நாள் நடந்த நிகழ்வு அவன் மனதில் தோன்றியது. அன்றும் இப்படித்தான் பூர்ணிமா முழங்காலை உடைத்துக்கொண்டு ரெத்தம் வழிய வழிய அதைப் பெரிது படுத்தாமல் கபடி விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

அவள் விளையாடியது அந்தக் கல்லூரியின் பெண்கள் கபடிக் குழுவுடன்தான் என்றாலும் அவளுடைய அந்த முரட்டுத்தனம் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

 

‘என்ன மாதிரிப் பொண்ணு இவ…!’ – கோபத்துடன் கபடிக்களத்தை நெருங்கினான்.

 

“ஹாய் சீனியர்… மேட்ச் பார்க்க வந்தீங்களா…?” – ஆட்டமிழந்துக் களத்திற்கு வெளியே வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்த பூர்ணிமா கேட்டாள்.

 

“என்ன விளையாட்டு இது? கால்ல ரெத்தம் வர்றது உன் கண்ணுக்குத் தெரியில…?” – எரிச்சலுடன் கேட்டான்.

 

“வீர விளையாட்டுன்னாச் சும்மாவா சீனியர்… ரெத்தத்தையெல்லாம் பார்த்து பயப்படாம அப்படி ஓரமா உக்கார்ந்து வேடிக்கைப் பாருங்க. விளையாட்டு இப்பதான் சூடு பிடிக்குது…” – பேசிக்கொண்டே இருந்தவள் எதிரணியில் ஒருவர் அவுட் ஆனதும் தனக்கான வாய்ப்புக் கிடைத்துவிடக் களத்தில் குதித்தாள்.

 

அப்போதும் இப்படித்தான்.. பல்லைக் கடித்துக் கொண்டு மேட்ச் முடியும் வரை காத்திருந்து… முடிந்ததும் மனம் ஆறும் வரை அவளுக்கு மண்டகப்பொடி நடத்திவிட்டு… காயத்தைக் கழுவச் சொல்லி… கேண்டீன் ஸ்டோரில் வாங்கி வைத்திருந்த இரண்டு பேண்டெயிடை அவள் கையில் கொடுத்துக் காயத்தில் ஒட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். இன்றைக்கும் இப்படித்தான் மேட்ச் கீட்ச் என்று எங்கோ விழுந்து வாரிக்கட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று நினைத்தபடிப் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஆனால் அவன் பொறுமைக்கும் சவால் விடும்படி அடுத்து ஒரு சம்பவம் நடந்தது.

 

பூர்ணிமாவின் அருகில் வாய்ப்புக் கிடைத்ததும் வந்து அமர்ந்த சதீஷ் இயல்பாக அவள் தட்டில் இருக்கும் உணவை எடுத்து உண்பது… அவள் தலையில் செல்லமாகத் தட்டிச் சிரிப்பது போன்ற சில்மிஷ வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். விகல்பமில்லாத பூர்ணிமாவும் அவனுடன் இசைந்துச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள். சித்தார்த்திற்குப் பொறுக்கவே முடியவில்லை. கோபத்துடன் எழுந்து அவளை நோக்கிச் சென்றான்.

 

“ஹாய் சீனியர்… வாங்க… வாங்க… இன்னிக்கு நம்ம ட்ரீட்தான் இங்க… நீங்களும் கலந்துக்கோங்க… உங்க செட் சதீஷ் சார் நேத்து நம்மகிட்ட மொக்கை வாங்கிட்டாரு… அதான் இன்னிக்குச் செலவுப் பண்ணிக்கிட்டு இருக்காரு…” என்று சதீஷையும் வம்புக்கு இழுத்துப் பேச்சில் கொண்டுவந்தாள்.

 

அதுவரை அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த் திடீரென்று சதீஷின் கன்னத்தில் ஒரு அறைவிட்டான். தன் முகத்திலேயே அறை விழுந்தது போல் கன்னத்தைப் பிடித்துக் கொண்ட பூர்ணிமா கலவரத்துடன் சித்தார்த்தை பார்த்தாள்.

 

சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் விழுந்த பேய் அறையில் பொறிக் கலங்கிப் போன சதீஷ் ஒரு நொடி ஸ்தம்பித்துப் பின் சித்தார்த்தின் மீது பாய்ந்தான். ஏன் அடிக்கிறோம் என்றே புரியாமல் சித்தார்த் சதீஷை அடித்துத் துவைக்க… எதற்காகச் சண்டைப் போடுகிறோம் என்கிற விபரம் தெரியவில்லை என்றாலும் தன்னை அடித்தவனைத் திருப்பி அடிக்க வேண்டும் என்கிற ஆவேசத்தில் சதீஷும் சித்தார்த்தை பதிலுக்குத் தாக்கினான். இருவரும் வெறிபிடித்த மிருகம் போல் மோதிக் கொண்டார்கள். சுற்றியிருந்தவர்கள் அவர்களை விளக்கிவிட்டதால் சற்று நேரத்தில் அங்கு நடந்துவிட்ட களோபரம் ஒரு முடிவிற்கு வந்தது. ஆனால், பிரச்சனை அதோடு நின்றுவிடவில்லை.

 

கல்லூரி நிர்வாகத்திற்கு விஷயம் தெரிந்து இருவரையும் அழைத்து விசாரித்தார்கள். சதீஷ் சித்தார்த்தை கைகாட்டிவிட்டான். அவன்தான் முதலில் பிரச்சனைச் செய்தது என்பதை எடுத்துக் கூறினான். சித்தார்த் அதை மறுத்துப் பேசவும் இல்லை… தன்னிலை விளக்கமும் கொடுக்கவில்லை. எப்படிக் கொடுக்க முடியும்… அவனுடைய செயலுக்கான காரணம் அவனுக்கே விளங்கவில்லையே…! அதோடு அந்தச் சண்டையில் அதிகம் காயம் பட்டது சதீஷ்தான் என்பதால் அவனை விடுவித்த நிர்வாகம், சித்தார்த்தை கணிசமான அபராதத் தொகை விதித்துத் தண்டித்ததுடன் கடுமையாக எச்சரித்தும் அனுப்பியது.




Comments are closed here.

You cannot copy content of this page