Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-5

அத்தியாயம் – 5

 

“நல்லா சாப்பிட்டுகிட்டு இருந்தவனுக்குத் திடீர்னு என்னதான்டா ஆச்சு? சாமி வந்த மாதிரி அவனப் போட்டு அந்தப் புரட்டுப் புரட்டி எடுத்துட்டு வந்ததும் இல்லாம… இப்போ ஒண்ணும் தெரியாத பச்சபுள்ள மாதிரிப் படுத்திருக்க?” – ஹாஸ்ட்டலில் தங்க பிடிக்காமல் வெளியே ரூம் எடுத்துத் தங்கியிருந்த சித்தார்த்துடன் சேர்ந்து தங்கியிருந்த கதிர், காயம் பட்ட நண்பனுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்தபடி அவனைக் கடிந்து கொண்டான்.

 

“இப்ச்… சும்மா தொனதொனக்காம முதுகுப் பக்கம் நல்லாப் பிடிச்சுவிடுடா…”

 

“அடிக் குடுத்த உனக்கே இவ்வளவு வைத்தியம் தேவைப்படுதுன்னா அடி வாங்கின அவனுக்கு எப்படி இருக்கும்…? ஏண்டா உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா…? அவனைப் பிடிச்சு எதுக்குடாப் பேயி ஓட்டுன?”

 

“இப்போ நீ பேசாம ஒத்தடம் கொடுக்கறியா இல்ல உனக்குப் பேய் ஓட்டட்டுமா?”

 

“எதுக்கு…? நானா அந்தப் படையப்பாவுக்குப் பக்கத்துல உக்கார்ந்துப் படையல் போட்டுக்கிட்டு இருந்தேன்…?” – கதிர் தன் மனதில் இருந்த ஊகத்தைப் போட்டு உடைத்துவிட்டான்.

 

சட்டென்று எழுந்து அமர்ந்து நண்பனை வெறித்துப் பார்த்தான் சித்தார்த்.

 

“என்ன உளர்ற?”

 

“சரி நான் உளறல… நீயே சொல்லு எதுக்கு அவனை அடிச்ச?”

 

சித்தார்த் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

 

“எனக்குத் தெரியும்டா… நேத்து கேண்டீன்குள்ள அந்தப் படையப்பா நுழஞ்சதிலிருந்தே நான் உன்ன கவனிச்சுகிட்டுத் தான் இருந்தேன்”

 

“தேவையில்லாம எதையாவது பேசி என்னைக் கடுப்பேத்தாம மரியாதையாப் போய்டு” – கடுமையாகப் பேசினான்.

 

நண்பனின் கோபம் கதிரை சிறிதும் பாதிக்கவில்லை. அவன் தொடர்ந்து பேசினான்.

 

“லவ் பண்ணுறியாடா..?”

 

சித்தார்த் பதில் சொல்லவில்லை. அவன் எதையோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனுடைய சிந்தனையைக் கலைக்காமல் சற்று நேரம் அமைதியாக இருந்த கதிர், “நேத்து கேண்டீன்ல நடந்த பார்டி எதுக்குன்னு தெரியுமாடா?” என்றான் அமைதியாக.

 

“எதுக்கு?” – புருவம் சுருக்கிக் கேட்டான்.

 

“அந்தப் படையப்பா சதீஸ் பிரண்ட்ஸ் நாலுப் பேரோட சேர்ந்து பைக் ரேஸ் பண்ணியிருக்கா… அவதான் ஜெயிச்சாளாம்…”

 

“என்னது…!!” – முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டான்.

 

சித்தார்த்திற்கு இது புதிய செய்தி. அவள் கபடி விளையாடுவாள், கராத்தே கிளாஸ் போவாள், ஆண் பிள்ளைப் போல் உடையனிந்துக் கொள்வாள் என்றெல்லாம் தெரிந்திருந்தாலும் ஆண்களோடு சேர்ந்து பைக் ரேசில் கலந்து கொள்ளும் அளவிற்கு அவள் செல்வாள் என்று அவன் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அவன் அதிர்ச்சியுடன் கதிரை பார்த்தான்.

 

கதிர் ‘ஆம்..’ என்பது போல் தலையை ஆட்டிவிட்டு மேலும் விபரம் சொன்னான்.

 

“ரேஸ் ஒண்ணும் பெரிய அளவுல நடக்கல… ஆனாலும் பசங்க கூடச் சேர்ந்து ராஷ் டிரைவ் பண்ணியிருக்கா. உன் கேரக்ட்டருக்கு இந்தப் பொண்ணு செட் ஆகும்னு எனக்குத் தோனல…”

 

“செட் ஆகுமா இல்லையாங்கறத நான் பார்த்துக்கறேன். நீ ரேஸ் எங்க நடந்ததுன்னு மட்டும் சொல்லு…”

 

“நேற்று சாயங்காலம் காலேஜ் மெயின் பில்டிங்லேருந்து பாய்ஸ் ஹாஸ்ட்டல் வரைக்கும் நம்ம காலேஜ் ரோட்ல ரேஸ் நடந்திருக்கு. அதுலக் கலந்துகிட்டப் பூர்ணிமாவுக்கு டார்கெட் லைனை தாண்டும் போது பைக் ஸ்கிடாகி கீழ விழுந்துக் கால்ல அடிபட்டிருக்கு. ஹாஸ்ட்டல் பசங்க சொன்னானுங்க. நீ வேணுன்னா விசாரிச்சுப் பாரு…”

 

சித்தார்த் கோபத்தில் பல்லைக் கடித்தான். எரிச்சலுடன் எழுந்துச் சட்டையை மாட்டிக் கொண்டு, கதிரின் ஆட்சேபனையைக் அலட்சியம் செய்துவிட்டு வெளியே சென்று வண்டியைக் கிளப்பினான்.

 

கேண்டீன் செல்லும் சாலையில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பூர்ணிமாவிற்காகக் காத்திருந்தான் சித்தார்த். அந்த வழியாக இரண்டு பெண்களுடன் பேசிச் சிரித்தபடி லேசாக நொண்டியடித்துக் கொண்டே வந்த பூர்ணிமா, இவனைக் கவனித்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல முயன்றாள்.

 

“ஏய்… நில்லு…” – அதட்டினான். மூன்று பெண்களும் நின்றுத் திரும்பிப் பார்த்தார்கள்.

 

அவன் பூர்ணிமாவைப் பார்த்து “உன்ன மட்டும்தான் நிற்கச் சொன்னேன்…” என்றான். மற்ற இரண்டு பெண்களும் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுத் தயக்கத்துடன் அங்கிருந்து நகர்ந்துச் சென்றார்கள்.

 

“வெயிட் பண்ணிட்டு இருக்கதுத் தெரியல? நீபாட்டுக்குக் கண்டுக்காமப் போயிட்டு இருக்க? திமிரா?” – கோபத்துடன் கேட்டான்.

 

‘நம்மகிட்டக் கோவப் படறதுக்கு இவனுக்கு என்ன அதிகாராம் இருக்கு…’ – கடுப்பான பூர்ணிமா சுள்ளென்று பாய்ந்தாள். “இந்த ரோட்ல எத்தனையோ பேர் நிக்கறாங்க. எல்லார்கிட்டயும் நின்னுப் பேசி நலம் விசாரிச்சுட்டு வரணும்ங்கற அவசியம் எனக்கு இல்ல…”

 

“இங்க பாரு… உன்கிட்டப் பேசணும்னு வந்திருக்கேன். என்னை டெண்ஷனாக்காமச் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் கேளு…” – கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினான்.

 

“நீங்க மட்டும் நேத்து என்னை டெண்ஷனாக்கல? பிரண்ட்ஸ் கூட ஜாலியா ட்ரீட் கொண்டாடிட்டு இருக்கும் போது திடீர்ன்னு உள்ள பூந்து அந்தச் சதீஷை அடிச்சு நொறுக்கல? உங்களுக்குள்ள பிரச்சனைன்னா அதை வேற எங்கேயாவது போயி வச்சுக்க வேண்டியதுதானே? எதுக்காக என் கூட உட்கார்ந்திருக்கும் போது வந்து அவரை அடிச்சிங்க?” – ஆத்திரத்துடன் பொரிந்தாள்.

 

கடுமையான முகத்துடன் ஓரிரு நொடிகள் அவளைக் கூர்மையாகப் பார்த்தவன் பிறகு அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்… “உன் கூட உட்கார்ந்ததுனாலதான் அவனை அடிச்சேன். இனி எவன் உட்கார்ந்தாலும் அடிப்பேன்…”

 

பூர்ணிமாவிற்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை. ‘இவன் என்ன சொல்றான்…!’ – பாறைப் போல் இறுகியிருந்த அவன் முகத்தை ஆராய்ச்சி செய்வது போல் பார்த்தாள்.

 

“பசங்க தோள்லக் கையப் போட்டுக் கெக்கபுக்கென்னு இளிக்கறது, ரௌடிப் பய மாதிரி ஊரச் சுத்தறது, கபடி விளையாடறேன்… ரேஸ் பண்ணறேன்னு அங்கங்க விழுந்துக் கையக் கால ஒடச்சுக்கறது இந்த மாதிரி வேலையெல்லாம் இன்னையோட விட்டுடு. இல்ல… என்னை நீ வேற மாதிரிப் பார்க்க வேண்டியிருக்கும்” – அழுத்தமான குரலில் எச்சரித்தான்.

 

பூர்ணிமா ஸ்தம்பித்துப் போய் நின்றாள். சித்தார்த் அவளுக்குத் தெரிந்தவன்தான். ஒரு நண்பனாக நினைத்து அவனிடம் பழகியிருக்கிறாள்தான். ஆனால் இவ்வளவு உரிமை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களுக்குள் என்ன தொடர்பு…! எந்தத் தைரியத்தில் அவன் அவளிடம் இப்படிப் பேசுகிறான்…!

 

“மிஸ்டர் சித்தார்த்… என்ன ரொம்ப மிரட்டரிங்க? உங்க பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படற ஆள் நான் இல்ல. காலேஜ் மேனேஜ்மென்ட்ல கம்ப்ளைன்ட் பண்ணினேன்னா ஒரே நொடில உங்க சீட்டுக் கிழிஞ்சிடும் பார்த்துக்கோங்க. என்னை யாருன்னு நினைச்சிங்க? சேலம் எம்-எல்-எ வேல்முருகனோட பொண்ணு… ஞாபகம் இருக்கட்டும்”

 

“எனக்கு அது நல்லாவே ஞாபகம் இருக்கு பூர்ணிமா. ஆனா என்னைப் பற்றி நீ ஒரு விஷயம் தெரிஞ்சுக்க. எனக்குப் படிப்பை விட… வருங்கால வாழ்க்கையை விட… ஏன்… என் உயிரை விட முக்கியமான விஷயங்கள்னு சிலது தோணும். அப்படித் தோணினா அதுக்காக நான் எதையும் செய்வேன். இப்போதைக்கு எனக்கு முக்கியமாத் தோணறது…” என்று கூறிவிட்டு ஒற்றை விரலால் அவளைச் சுட்டிக் காட்டினான்.

 

அந்த நிமிடம்தான் அவனுடைய ஆளுமையான பேச்சும் தோரணையும் அவள் கருத்தில் பதிந்தது. அதுவரை ‘இவன் என்ன நம்மை அதிகாரம் செய்வது…’ என்கிற எண்ணப் போக்கில் அவனிடம் எதிர்வாதம் செய்து கொண்டிருந்தவள் அமைதியானாள். ஆனால் சித்தார்த் அவளுடைய அமைதியை நீடிக்க விடவில்லை.

 

“உங்க அப்பன் பேரைச் சொன்னா பயந்துடுவேன்னு நினைச்சியா? ஹா… அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்க எனக்கு ஒரு நிமிஷம் கூட ஆகாது. என் ரூட்ல மட்டும் அவன் கிராஸ் பண்ணட்டும். அப்புறம் இருக்கு அவனுக்கு…” – ஏற்கனவே அவனுடைய முகம் கடுமையாகத் தான் இருந்தது என்றாலும் வேல்முருகனைப் பற்றிப் பேசும் பொழுது இன்னும் பயங்கரமாக மாறிவிட்டது.

 

என்னதான் அவனுடைய ஆளுமையான தோரனையை அவள் ரசித்தாலும், சம்மந்தம் இல்லாமல் தன்னுடைய தந்தையைப் பற்றி அவன் அதிகப்படியாகப் பேசும் பொழுது அவளால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்… அவளும் வார்த்தையைச் சிதறவிட்டாள்.

 

“ஏய்… எங்க அப்பாவைப் பற்றி ஏதாவது பேசின… மரியாதைக் கெட்டுடும் ராஸ்கல்…” – இன்னும் கடுமையாகப் பேசியிருப்பாள்… ஆனால், பேச முடியாமல் ஆத்திரத்தில் தொண்டை அடைத்துவிட்டது. உணர்ச்சிப் பெருக்கில் உடல் நடுங்கியது.

 

“அப்படிதாண்டிப் பேசுவேன்… என்ன செய்வ? உங்கப்பன பற்றிப் பேசினதும் அப்படியே பொங்குற… அவன் என்ன பெரிய ஒழுக்கச் சீலனா? ஊர ஏமாத்திக் கொள்ளையடிக்கறப் பரதேசிப் பயதானே? அவனைப் பார்த்துச் சொல்லு ராஸ்கல்னு… நீ எப்படிச் சொல்லுவ…? ஒரு எம்எல்எ சீட்டுக்காக ஓராயிரம் தகிடுதத்தம் செய்யிற நல்லவனோட பொண்ணுதானே நீ? ரௌடித்தனம்… அடாவடித்தனம்… அடங்காப் பிடாரித்தனம்… இதைத் தவிர உன்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்? உங்கப்பனோட கட்சியில அடியாளாச் சேர்றதுக்குத் தான் நீ லாயக்கு. மத்தபடி ஒரு பொண்ணுக்கு இருக்க வேண்டிய எந்தக் குணமும் உன்கிட்ட இல்ல… உன்னப் போயி எப்படிதான் நான்…” சொல்ல வந்ததை முடிக்காமல் பல்லைக் கடித்தான்.

 

பூர்ணிமாவிற்கு உள்ளம் கொந்தளித்தது. அழுகையில் உதடுகள் துடித்தன. நாசி விடைத்து… கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. கேண்டீன் செல்வதற்காக வந்தவள் முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு ஹாஸ்ட்டல் நோக்கி நடந்தாள். செல்கிற வழியெல்லாம் அவன் பேசிய வார்த்தைகள்தான் அவள் காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

 

அவள் பெண்ணே இல்லையாம்… அடக்கப் பிடாரியாம்… ரௌடியாம்… அவள் அப்பாவின் கட்சியில் அடியாளாகப் போகிறவளாம்… அவளை மட்டுமாப் பேசினான்… அவளுடைய தந்தையைக் கூட விட்டுவைக்கவில்லையே! என்னென்ன பேசிவிட்டான். – அவளுக்கு மனம் ஆறவே இல்லை. நினைக்க நினைக்கக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அழுது கொண்டே விடுதிக்கு வந்து சேர்ந்தாள்.

 




Comments are closed here.

You cannot copy content of this page