Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

பொன்னியின் செல்வன் முதல் பாகம்-54

அத்தியாயம் 54 – “நஞ்சினும் கொடியாள்”

மாமல்லபுரத்தில் பழைய பல்லவ சக்கரவர்த்திகளின் மாளிகை ஒன்றில் அன்றிரவு அம்மூன்று வீரசிகாமணிகளும் தங்கினார்கள். இரவு உணவு அருந்தியானதும் மலையமான் அரசர் ஐந்து ரதங்களுக்கு அருகில் அரவான் கதை நடக்கிறது என்று கேள்விப்பட்டு அதைக் கேட்கப் போய் விட்டார். ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும் அரண்மனை மேல் மாடத்துக்குச் சென்றார்கள்.

 

மேல்மாடத்திலிருந்து ஆதித்த கரிகாலன் மாமல்லபுரத்தின் இரவுத் தோற்றத்தைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆங்காங்கு மினுக்கு மினுக்கு என்று சில தீபங்கள் மங்கலாகப் பிரகாசித்தன. வீதிகளில் பெரும்பாலும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. கோவில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து வெளிக் கதவுகளைச் சாத்திக் கொண்டிருந்தார்கள். சமுத்திரத்தின் கோஷம் ‘ஓ’ வென்று சோகத் தொனியாகக் கேட்டது.ஐந்து ரதங்களுக்குப் பக்கத்தில் வில்லுப்பாட்டு வித்வானும் அவருடைய கோஷ்டியும் அரவான் கதை நடத்த, அவர்களைச் சூழ்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்த ஜனக் கூட்டம் தீவர்த்திகளின் ஒளியில் கரிய நிழல் உருவங்களாகத் தெரிந்தனர்.

 

“இந்த முதிர்ந்த வயதில் கிழவர் கதை கேட்கப் போய் விட்டார், பார்! என்ன இருந்தாலும் பழைய காலத்து மனிதர்கள்தான் மனிதர்கள்! அவர்களுடைய உடல் வலிமையும் மனோதிடமும் இந்த நாளில் யாருக்கு உண்டு?” என்றான் ஆதித்த கரிகாலன்.

 

“அரசே! தாங்களும் பழைய காலத்தின் பெருமையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா? பழைய கால மனிதர்கள் சாதித்த என்ன காரியத்தை நம் காலத்தில் நாம் சாதிக்கவில்லை? தங்களைப் போல் இளம் பருவத்தில் போர்க்களத்தில் வீரச் செயல் புரிந்தவர்களைப் பற்றிக் கதைகளிலும் காவியத்திலும் கூடக் கேட்டதில்லையே?” என்றான் பார்த்திபேந்திரன்.

 

“பார்த்திபா! நீ உண்மை உள்ளம் படைத்தவன். மனத்தில் ஒன்று வைத்துக் கொண்டு வாயினால் ஒன்று பேசாதவன் என்பதை நன்கு அறிந்திருக்கிறேன். இல்லாவிட்டால் நீ என்னுடைய நண்பன் அல்ல, இத சத்ரு என்றே சந்தேகிப்பேன். அவ்வளவு தூரம் என்னைக் குறித்து நீ முகஸ்துதி செய்கிறாய். முகஸ்துதியைப் போல் ஒருவனைப் பாதாளப் படுகுழியில் தள்ளக்கூடியது வேறொன்றுமில்லை!” என்றான் ஆதித்த கரிகாலன்.

 

“ஐயா! சுயநல நோக்கத்துடன் ஒருவனைப் பற்றி இல்லாத உயர்வைப் புனைந்து சொன்னால் அது முகஸ்துதியாகும். தஞ்சாவூரில் பழுவேட்டரையர்களின் அடிமையாக இருக்கிறானே மதுராந்தகன், அவனிடம் சென்று ‘நீ வீராதி வீரன்’ என்று நான் புகழ்ந்தால் அது முகஸ்துதியாகும். அப்படி நான் எப்போதாவது செய்ததாகத் தெரிந்தால் என்னை உடனே தங்கள் கையிலுள்ள வாளினால் கொன்று விடுங்கள். தங்களைப் பற்றி நான் சொன்னதில் ஒரு வார்த்தை கூட அதிகம் இல்லையே? பழைய காலத்தில் எந்த வீரன் இவ்வளவு இளம் வயதில் இத்தனை பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிறான்! தங்கள் பெரிய பாட்டனாராகிய யானை மேல் துஞ்சின இராஜாதித்தியரை ஒருவேளை தங்களுக்குச் சமமாக வேணுமானால் சொல்லலாம்; தங்களை விட அதிகம் என்று அவரையும் சொல்ல முடியாது…”

 

“நிறுத்து, பார்த்திபா, நிறுத்து! இராஜாதித்யர் எங்கே? நான் எங்கே? மகா சமுத்திரம் போல் பொங்கி வந்த இராஷ்டிர கூடர்களின் மாபெரும் சைன்யத்தை ஒரு சின்னஞ்சிறு படையை வைத்துக் கொண்டு எதிர்த்து நிர்மூலமாக்கி வீர சொர்க்கம் அடைந்த இராஜாதித்தியரைப் பற்றிப் பேசுவதற்கே நாம் தகுதியற்றவர்கள். அவருடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்வதா? சோழ குலம் இருக்கட்டும்; நீ பிறந்த பல்லவ குலத்தில் முற்காலத்தில் எப்பேர்ப்பட்ட மகாபுருஷர்கள் இருந்தார்கள்! மகேந்திரவர்மரையும் மாமல்லரையும் இனி இந்த நாட்டில் எப்போதாவது காணப் போகிறோமா? தெற்கே துங்கபத்திரையிலிருந்து வடக்கே நர்மதை வரையில் ஒரு குடை நிழலில் ஆண்ட புலிகேசியை வென்று வாதாபியை அழித்து ஜயஸ்தம்பம் நாட்டிய நரசிம்மவர்மர் எங்கே? நீயும் நானும் எங்கே? இந்த மாமல்லபுரத்தைப் போல் ஒரு சொப்பனபுரியை நம்முடைய காலத்திலோ நமக்குப் பிற்காலத்திலோ யாராவது சிருஷ்டி செய்ய முடியுமா?…. அடடா! ஒரு தடவை நாலு புறமும் நன்றாய்ப் பார், பார்த்திபா! அதோ வில்லுப் பாட்டு நடக்கிறதே, அங்கே உற்றுப் பார்! அம்மாதிரி கற்பாறைகளைக் குடைந்து அற்புத ரதங்களின் வடிவங்களிலே அமைத்தவர்கள் சாதாரண மனிதர்களா? முந்நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாமல்லபுரம் எத்தகைய கோலாகலமான காட்சி அளித்திருக்க வேண்டுமென்று நினைக்கும் போதே எனக்கு உடம்பு சிலிர்க்கிறது! உனக்கு அத்தகைய உணர்ச்சி உண்டாகவில்லையா? உன் முன்னோர்களைப் பற்றி எண்ணும்போது உன் தோள்கள் பூரிக்க வில்லையா?”

 

“அரசே! சற்று முன்பு தங்களை முகஸ்துதி செய்வதாகச் சொன்னீர்களே? சில சமயம் தங்களிடமுள்ள குற்றங்குறைகளையும் நான் எடுத்துச் சொல்வதுண்டு என்பதை மறந்து விட்டீர்கள். சிற்பம் – சித்திரம் – கலை என்று வாழ்நாளை வீணாக அடிக்கும் பைத்தியம் தங்களையும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பைத்தியம் பிடித்ததினாலேதான் என் முன்னோர்கள் அடைந்த வெற்றியெல்லாம் வீணாக ஆயிற்று. வாதாபிக்குச் சென்று ஜயஸ்தம்பம் நாட்டி விட்டு மாமல்லர் திரும்பி வந்தாரே? பிறகு என்ன செய்தார்? கற்களைச் செதுக்கிக் கொண்டும் பாறைகளைக் குடைந்து கொண்டும் உட்கார்ந்திருந்தார்! அதன் பலன் என்ன? சில காலத்துக்கெல்லாம் மறுபடியும் சளுக்கர்கள் தழைத்தோங்கினார்கள். பெரும்படையுடன் மீண்டும் பழிவாங்குவதற்கு வந்தார்கள். காஞ்சியையும் உறையூரையும் அழித்தார்கள். மதுரை வரையில் சென்றார்கள். நெடுமாற பாண்டியன் மட்டும் நெல்வேலியில் சளுக்கர் படையைத் தடுத்து நிறுத்தித் தோற்கடித்திராவிட்டால் இன்று வரை இத்தென்னாடு முழுதும் சளுக்கர் ஆட்சியில் இருந்திருக்கும் அல்லவா?”

 

“இல்லை, பார்த்திபா, இல்லை! உலகில் எந்த அரச குலமும் என்றென்றைக்கும் நீடித்திருந்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை. இராமர் பிறந்த இக்ஷவாகு குலத்துக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. சளுக்கர்களை வீழ்த்த இரட்டை மண்டலத்தார் தோன்றினார்கள். இராஜ்யங்கள் சில சமயம் உன்னத நிலைமை அடைவதும் சில சமயம் தாழ்ச்சி உறுவதும் இயல்பு. சில இராஜ்யங்கள் சில காலம் எவ்வளவோ உன்னதமாக இருந்து விட்டு இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றன. என்னுடைய முன்னோர்களையே பார்! கரிகால்வளவன், கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர்கள் எவ்வளவோ சீரும் சிறப்புமாயிருந்தார்கள். அவர்களையெல்லாம் பற்றி இப்போது நமக்கு என்ன தெரிந்திருக்கிறது? கவிஞர்கள் சிலர் அவர்களைப் புகழ்ந்து பாடியிருப்பதனால் அவர்கள் பேரையாவது தெரிந்து கொண்டிருக்கிறோம். கவி பாடிய பாணர்கள் உண்மையைத்தான் பாடினார்களோ, அல்லது நன்றாக மதுபானம் செய்துவிட்டு, மனம் போன போக்கில் பாடினார்களோ, நமக்குத் தெரியாது. ஆனால் மகேந்திர பல்லவரும் மாமல்லரும் இந்தச் சிற்பபுரியைச் சிருஷ்டித்தார்களே, இது ஆயிரமாயிரம் ஆண்டு காலம் அவர்களுடைய பெருமையை உலகத்துக்கு உணர்த்திக் கொண்டிருக்கும். அவர்கள் செய்த காரியத்துக்கு ஈடாக நீயும் நானும் என்ன செய்திருக்கிறோம்! போர்க்களத்திலே பல்லாயிரம் மனிதர்களைக் கொன்று குவித்திருக்கிறோம்; இரத்த வெள்ளம் ஓடச் செய்திருக்கிறோம். உலகில் நம் பெயரை நிலைநிறுத்த வேறு என்ன செய்திருக்கிறோம்?”

 

இதைக் கேட்ட பார்த்திபேந்திரன் இவ்விதம் பேசுவது ஆதித்த கரிகாலன்தானா என்று ஐயுறும் பாவனையுடன் சிறிது நேரம் திகைத்திருந்தான். பிறகு ஒரு பெருமூச்சு விட்டு, “அரசே! போரையும் வீரத்தையும் குறித்துத் தாங்களே இவ்விதம் பேசுவது என்றால், நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது? தங்களுடைய மனம் இன்று சரியான நிலையில் இல்லை. ஆகையினாலேயே இப்படிப் பேசுகிறீர்கள்! ஐயா! தங்கள் மனத்திலுள்ள வேதனை இன்னதென்பதை எனக்குச் சொல்லலாகாதா? தங்களுடைய வயிர நெஞ்சத்தைச் சிறிது திறந்து காட்டக் கூடாதா?” என்று ஆவலோடு கேட்டான்.

 

“பார்த்திபா! என் நெஞ்சைப் பிளந்து காட்டினேனாயின், அதற்குள்ளே என்ன இருக்கும், – எவர் இருப்பர் என்று நினைக்கிறாய்?”

 

“அதைத்தான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், சுவாமி!”

 

“என்னைப் பெற்ற தாயும் தந்தையும் இருக்க மாட்டார்கள். என் உயிரினும் இனிய தங்கையும் தம்பியும் இருக்க மாட்டார்கள். என் உயிருக்குயிராகிய நண்பர்களாகிய நீயும் வந்தியத்தேவனும் இருக்க மாட்டீர்கள். வஞ்சகமே வடிவான ஒரு பெண் அதில் இருப்பாள். பாவமே உருவான பழுவூர் இளையராணி அதில் இருப்பாள். நஞ்சினும் கொடியவளான நந்தினி என் நெஞ்சுக்குள்ளே இருந்து என்னைப் படுத்தி வைக்கும் பாட்டை இன்று வரை வாயைத் திறந்து யாரிடமும் சொன்னதில்லை. உன்னிடந்தான் இன்று சொன்னேன்!” என்று ஆதித்த கரிகாலன் கூறிய வார்த்தைகளில் தணலின் ஜூவாலை வீசிற்று.

 

“அரசே! அதை ஒருவாறு நான் ஊகித்தேன். பழுவூர் இளையராணியின் பேச்சு வரும்போதெல்லாம் தங்கள் முகம் கறுத்துக் கண்கள் சிவந்து சொல்ல முடியாத மனவேதனையை வெளியிட்டதைக் கொண்டு அறிந்தேன். ஆனால் இந்தத் தகுதியில்லா மோகம் எப்படித் தங்கள் நெஞ்சில் இடம்பெற்றது? அன்னியப் பெண்களையெல்லாம் அன்னையெனக் கருதும் மரபில் தாங்கள் வந்தவராயிற்றே? பழுவேட்டரையர் தங்கள் குலத்துக்கு நெடுங்கால உறவினர்; பிராயம் முதிர்ந்தவர். இன்றைக்கு அவர்கள் நமக்குப் பகைவர்களானாலும் முன்னால் அப்படியில்லையே? தங்கள் தந்தையும் பாட்டனாரும் அவரை எவ்வளவு மதித்து மரியாதை செய்தார்கள்? அப்படிப்பட்டவர் அக்னி சாட்சியாக மணந்து கொண்ட பெண்ணை… அவள் எவ்வளவுதான் கெட்டவளானாலும்…தாங்கள் மனத்திலும் கருதலாமா?”

 

“கூடாது, பார்த்திபா, கூடாது! அது எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறாய்? தெரிந்திருப்பதினாலேதான் இந்த மனவேதனை. அவள் பழுவேட்டரையரை மணந்த பிறகு என் நெஞ்சில் இடம் பெறவில்லை. அதற்கு வெகு காலம் முன்பே என் உள்ளத்தில் அவளுடைய மோக விஷம் ஏறிவிட்டது. அதைக் களைந்தெறிய எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. குற்றம் எல்லாம் அவள் பேரில் என்று தோன்றும்படி நான் பேசுகிறேன். குற்றம் யாருடையது என்பதைக் கடவுளே அறிவார். பார்க்கப் போனால், பாவம் பழியெல்லாம் எங்களைப் படைத்த கடவுள் தலையிலேயே விழ வேண்டும். அல்லது எங்களைச் சந்திக்கப் பண்ணிப் பின்னர் பிரித்து வைத்த விதியின் பேரில் குற்றம் சொல்ல வேண்டும்!”

 

“அரசே! நந்தினி பழுவூர் ராணியாவதற்கு முன்னால் தாங்கள் அவளைச் சந்தித்ததுண்டா? எங்கே, எப்போது எப்படிச் சந்தித்தீர்கள்?”

 

“அது பெரிய கதை. இன்றைக்கு அதைக் கேட்க விரும்புகிறாயா?”

 

“கட்டாயம் கேட்க விரும்புகிறேன். அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கு மன நிம்மதியிராது. நாளைக்கு இலங்கை போகச் சொல்லுகிறீர்களே? அங்கே சென்று என் கடமையைச் சரிவரச் செய்ய முடியாது. நிலைமை இன்னதென்பதைத் தெரிந்து கொண்டு தங்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனால்தான் என் உள்ளம் ஒருவாறு நிம்மதி அடையும்!”

 

“நண்பா! எனக்கு ஆறுதல் சொல்லப் போகிறாயா? இந்த ஜன்மத்தில் எனக்கு ஆறுதல் என்பது கிடையாது. அடுத்த பிறவியில் உண்டா என்பதும் சந்தேகம் தான். உன்னுடைய மன நிம்மதிக்காகச் சொல்கிறேன். உன்னிடம் சொல்லாமல் நான் எதையோ ஒளித்து வைத்திருப்பதாக எண்ணிக் கொண்டு நீ இலங்கை போக வேண்டியதில்லை!”

 

இவ்விதம் கூறி ஆதித்த கரிகாலன் சிறிது நிதானித்தான். பிறகு ஒரு நெடிய பெருமூச்சு விட்டு விட்டுச் சொல்லத் தொடங்கினான்.




Comments are closed here.

You cannot copy content of this page