Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-6

அத்தியாயம் – 6

 

அன்று காலை எப்பொழுதும் போல் குளித்து உடைமாற்றி… தலை வாருவதற்காகக் கண்ணாடி முன் வந்து நின்ற பூர்ணிமாவிற்குத் திடீரென்று அந்தச் சந்தேகம் தோன்றியது. ‘தான் ஒரு பெண் மாதிரிதான் இருக்கிறோமா…?’ – என்று முகத்தையும் உடலையும் திருப்பித் திருப்பிப் பார்த்துத் தன்னைத்தானே ஆராய்ந்தாள்.

 

‘பையன் மாதிரி டிரஸ் பண்ணியிருந்தாலும் நல்லாத்தானே இருக்கோம்…!’ – தனக்குள் நினைத்துக் கொண்டவள் “ஹும்…” – ஒரு பெருமூச்சுடன் தலைவாரி முகத்திற்கு லேசாக ஒப்பனைச் செய்து முடித்து, கைகளில் புத்தகங்களுடன் அறையிலிருந்து வெளியேறி பைக் ஸ்டாண்டிற்குச் சென்றாள்.

 

வண்டியை எடுப்பதற்கு முன் நேற்று சித்தார்த் பேசிய கடுமையான வார்த்தைகள் மீண்டும் அவள் மனதில் தோன்றின. சட்டென்று முகம் சிவந்து சூடானது. வண்டியை வெளியே எடுத்து வழக்கத்தைவிட வேகமாக ஓட்டிச் சென்றாள். நொடிப் பொழுதுக் கூட விலகாமல் அவன் பேசிய வார்த்தைகள் மட்டுமே அவள் மனதில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

 

கோபாவேசத்துடன் கல்லூரிக்கு வந்து சேர்ந்தவள் நேராகக் கருத்தரங்கக் கூடத்திற்குச் சென்றாள். அன்று ஒரு முக்கியமான தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவிருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மனதை அமைதிப்படுத்திக் கருத்தரங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்த பூர்ணிமா தனியாகச் சென்று கடைசி வரிசையில் ஒரு சேரில் அமர்ந்தாள். சற்று நேரத்தில் அந்தக் குரல் அவள் கவனத்தை ஈர்த்தது.

 

“இப்போ கால் எப்படி இருக்கு?”

 

சட்டென்று திரும்பிப் பார்த்தாள். புன்சிரிப்புடன் பக்கத்துச் சேரில் அமர்ந்திருந்தான் சித்தார்த். அந்த முகத்தையும் இளிப்பையும் பார்த்தவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

 

“என் கால் எப்படி இருந்தா உனக்கென்ன? ” – ஏகவசனத்தில் பேசினாள். ஆச்சரியப்படும் விதமாக அவனுடைய புன்னகை முகம் மாறவில்லை.

 

“என்ன பூசணி…? இன்னுமா கோவம் குறையல? நைட் நல்லாத் தூங்கினியா இல்லையா?” – அக்கறையாகக் கேட்டான்.

 

‘இவன் பேசினப் பேச்சுக்கு எனக்குத் தூக்கம் வேற வருமாம்மா! ஆளையும் மூஞ்சியையும் பாரு… வந்துட்டான்… பெருசா நலம் விசாரிக்க…’ – மானசீகமாக அவனைத் திட்டிக் கொண்டே இருக்கையிலிருந்து எழுந்தாள். அடுத்த நொடி அவள் கையைப் பிடித்துத் தடுத்தான் சித்தார்த்.

 

“எங்க ஓடுற? உக்கார்… உன்கிட்டப் பேசணும்” – சாதாரணமாகப் பேசினான்.

 

பூர்ணிமாவின் விழிகள் விரிந்தன. தன் கையை அழுத்தத்துடன் பிடித்திருக்கும் அவன் கையை ஓரிரு நொடிகள் வெறித்துப் பார்த்தவள், பிறகு அவன் கண்களைப் பார்த்து “என்ன இது…? கையை விடு…” என்றாள் கடுமையாக.

 

“நீ உட்காரு… நான் விடறேன்…” – சிரித்துக் கொண்டே சொன்னவனின் பிடியில் சிறிதும் இலக்கம் இல்லை.

 

‘இவனுக்கு என்ன  பைத்தியமா! நட்டநடு ஹால்ல… இவ்வளவு ஸ்டுடென்ட்ஸுக்கு மத்தியில… விருப்பம் இல்லாத ஒரு பொண்ணோட கையைப் பிடிக்கிறான். இப்போ மட்டும் நான் கம்ப்ளைன்ட் பண்ணினா இவன் கதி என்னவாகும்… இந்த மாதிரி கேசுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இருக்காது போல…’

 

“எனக்கு டேக்வோண்டோ தெரியும்ங்கறது உனக்கு நல்லாவே தெரியும். மரியாதையாக் கையை விடு…” – சிடுசிடுத்தாள்.

 

“அட்டாக் பண்ணு… பூசணிக்காயோட பவர் என்னன்னு நானும் பார்க்கறேன்…”

 

அவள் அவனை முறைத்தாள். அவனோ “கோவப்படும் போது கூட நீ ரொம்ப அழகு பூசணி… செக்கச் சிவந்த மிளகாய் பழம் மாதிரி…” என்று ஐஸ் வைத்தான்.

 

அவளுடைய கோபம் குறைவில்லை என்றாலும் பிடிவாதத்தைக் கைவிட்டுவிட்டு சேரில் அமர்ந்தாள்.

 

“என்ன…? நேத்து அவ்வளவு பேசிட்டு இன்னிக்கு இப்படி வழியிரிங்க?” – அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்ட விதத்தில் அவனுடைய மூக்கு உடைபட்டிருக்க வேண்டும். ஆனால் அவனோ “ஏதோ கோவத்துலப் பேசிட்டேன். அதுக்காக எப்பவும் கடுகடுன்னே இருக்க முடியுமா? நீகூடத்தான் நேத்து என்னை ராஸ்கல்னு சொன்ன. அதையெல்லாம் மனசுல வச்சுகிட்டே இருந்தா ஃப்ரண்ட்ஷிப்ப எப்படி மெயின்டன் பண்ணறது?” என்று இலகுவாகப் பேசினான்.

 

“யாருக்கு யாரு ஃப்ரண்ட்? நீங்கல்லாம் எனக்கு ஃப்ரண்ட் கிடையாது…”

 

“கரெக்ட்… நீ கூட எனக்கு ஃப்ரண்ட் இல்ல…” என்றவன் சற்று மென்மையான குரலில் “அதுக்கும் மேல…” – என்று கூறியபடி அவளை ஆழ்ந்து நோக்கினான்.

 

அவனுடைய மென்மையான குரலும் ஆழ்ந்தப் பார்வையும் அவளைப் பாதித்திருக்க வேண்டும். நேற்றைய கோபத்தின் வீரியம் இந்தத் தருணத்தில் காணாமல் போய் மனதில் ஓர் இதமான உணர்வுப் பரவியது. தனக்குள் தோன்றிய உணர்வுகளை மறைத்துக் கொண்டு “என்னவோ பேசணும்னுச் சொன்னீங்களே?” என்றாள்.

 

“ஹ்ம்ம்… இன்னிக்கு எப்படி காலேஜ்கு வந்த?”

 

“வண்டிலதான்… ஏன்?”

 

“எது? அந்த ராட்சச குதிரையிலையா?” – உள்ளே தோன்றிய எரிச்சலை வெளிக்காட்ட முடியாமல் நக்கலாகக் கேட்டான். அவளோ பெருமையாக “ம்ம்ம்… ஆமாம்…” என்றாள்.

 

“இனி உனக்கு அந்த வண்டி வேண்டாம். மொத்தமாத் தலை முழுகிட்டுப் புதுசா எதாவது லேடிஸ் வண்டி வங்கிக்கோ… இல்ல நடந்து வா…”

 

“என்னது!” – பூர்ணிமா அதிர்ச்சியுடன் சித்தார்த்தைப் பார்த்தாள். அவளுடைய வண்டியை அவள் தலைமுழுக வேண்டுமா…! அந்த வண்டியை வாங்க அவள் எத்தனை சிரமப்பட்டாள் என்பது இவனுக்கு என்ன தெரியும்…!

 

“என்ன பூசணி…?”

 

“என்ன நொன்ன பூசணி? என் வண்டி இல்லாம நான் எப்படி டெய்லி காலேஜ்கு நடந்து வர்றது?” – எரிச்சலுடன் கேட்டாள்

 

“ஏன்…? எல்லாரும் நடக்கற மாதிரிக் காலாலத் தான் நடந்து வரணும்…”

 

“நக்கலு?”

 

“நக்கலோ… விக்கலோ… நாளையிலிருந்து அந்தச் சனியன் பிடிச்ச வண்டி உனக்கு வேண்டாம்… சேஃப்டி இல்ல… அன்னைக்கு பைக் ஸ்கிட் ஆனப்போ உன்னால பாலன்ஸ் பண்ண முடிஞ்சிருந்தா உன் கால்ல அடிப் பட்டிருக்காது. சோ வேண்டாம்…” – அவளுடைய விஷயத்தில் அவன் உறுதியாக முடிவெடுத்தான்.

 

பூர்ணிமாவின் சுதந்திரத்தில் அவன் தலையிடுவது அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவளுடைய பாதுகாப்பைப் பற்றி அவன் யோசிப்பது பிடித்துத்தான் இருந்தது. அவள் லேசாகக் குழம்பினாள். அவளுடைய மனக் குழப்பத்தை முகக்குறிப்பிலிருந்து புரிந்துக் கொண்டவன் தன்னுடையப் பேச்சை அவள் நிச்சயம் தட்டமாட்டாள் என்கிற உறுதியுடன் அவளிடம் தலையசைத்துக் கண்களால் விடைபெற்று அங்கிருந்து அகன்றான். அவன் அந்த ஹாலிலிருந்து வெளியேறும் வரை அவனைக் கண்களால் தொடர்ந்து கொண்டிருந்த பூர்ணிமாவின் மனம் ஏனோ அவனுடைய ஒவ்வொரு அசைவையும் ரசித்தது.

 

சித்தார்த் பூர்ணிமாவின் பார்வையிலிருந்து மறைந்ததும் ஆசுவாசமாக சேரில் சாய்ந்து அமர்ந்தவள் தனக்கருகில் யாரோ வந்து அமர்வதை உணர்ந்துத் திரும்பிப் பார்த்தாள். சதீஷ்…

 

‘உன் கூட உட்கார்ந்ததுனாலதான் அவனை அடிச்சேன். இனி எவன் உட்கார்ந்தாலும் அடிப்பேன்…’ – சட்டென்று சித்தார்த்தின் குரல் அவள் செவிகளில் ஒலித்தது. எப்பொழுதும் போல் இயல்பாய் அவன் பக்கத்தில் அமர முடியாமல் ஏதோ ஓர் உறுத்தல் தோன்ற முள் மேல் அமர்ந்திருப்பது போல் தவிப்பாக உணர்ந்தாள்.

 

“ஹாய் பூர்ணி…”

 

“ஹா…ஹாய் சீனியர்…” தடுமாற்றத்துடன் பேசினாள்.

 

“என்ன சொல்லிட்டுப் போறான் அந்தக் காட்டான்…”

 

“காட்டானா…? யாரை சொல்றீங்க?”

 

“அவன்தான்… அந்த சித்தார்த்…” – கோபமும் அலட்சியமுமாகக் கூறினான்.

 

அவன் பேசும் தொனி பூர்ணிமாவிற்குப் பிடிக்கவில்லை. அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் “அவர் ஒண்ணும் சொல்லல சீனியர்… சும்மாதான் பேசிட்டு இருந்தார்… உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு?” – பேச்சை மாற்ற முயன்றாள்.

 

“என்னை விடு பூர்ணி… நீ எப்படி இருக்க? உன் கால் எப்படி இருக்கு?” – சற்று முன் சித்தார்த் கேட்ட அதே கேள்வியை இப்போது சதீஷ் கரிசனமாகக் கேட்டான். சாதாரண நல விசாரிப்புதான். ஆனால் அந்த விசாரணை சித்தார்த்திடமிருந்து வந்த பொழுது மனதிற்குள் ஜில்லென்று உணர்ந்தவள் இப்போது, ‘ஒரே கேள்விக்கு எத்தனை முறைதான் பதில் சொல்வது?’ என்று எரிச்சல் பட்டாள்.

 

“இப்போ பரவால்ல சீனியர். எனக்கு ஸ்டேஜ்ல கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்பறேன். நாம அப்புறம் பார்க்கலாம்” என்று அவனுடனானப் பேச்சைத் துண்டித்துக் கொண்டு எழுந்துச் சென்றுவிட்டாள்.

 

‘அவனோட கடலை வருக்கும் போது மட்டும் வேலை இல்ல. என்கிட்டப் பேச ஆரம்பிச்சதும் வேலை வந்துடுச்சா? அடிச்சவன் ஹீரோ… அடி வாங்கினவன் ஜோக்கரா…? பார்த்துக்கறேண்டி உன்னை…’ – மனதிற்குள் கருவியபடிப் பூர்ணிமாவின் முதுகை வெறித்தான் சதீஷ்.




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    D Deepa D deepa says:

    Nice

You cannot copy content of this page