Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Veppangulam

Share Us On

[Sassy_Social_Share]

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 2

அத்தியாயம் : 2

மௌனமாக துணிகளை எடுத்து  கப்போர்டில் அடுக்கிக் கொண்டிருந்தாள் ரம்யா. மனதில்  யோசனை தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தது, சுகுணாவின்  திருமணம் வரை எப்படியும் இங்கே ஓட்டி விடலாம்…… பிறகு?

 

இங்கேயே  ஏதேனும் வேலை கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று நினைத்த படி ஒரு பெரு மூச்சு விட்டாள், குளியலறையில் சென்ற சுகுணா,  வெளி வந்து,

 

“ஹீட்டர் போட்டு விட்டேன், இன்னமும் ஒருமணி நேரத்தில்  சூடாகி விடும் நீ குளிக்கலாம், பேஸ்ட், பிரஷ், சோப் எல்லாம் இருக்கிறது” என்று பேசிக் கொண்டே சென்றவள், அந்த அறையில்  ஜன்னலை திறந்தாள். திறந்த ஜன்னலின் வழியே ஜில்லென்ற காற்று பிய்த்துக் கொண்டு வந்து ரம்யாவின் முகத்தில் அடித்து புத்துணர்ச்சி ஊட்டியது. கண் மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள்.

 

“சூப்பரா காத்தடிக்குதுல்ல…. இங்க எப்பவுமே இப்படிதான் ஜில்லுன்னு இருக்கும். சரி போ…..போய் குளி” என்று தோழியை அனுப்பி வைத்தாள்.

 

“அந்த கிராம சூழலும் இந்த அறையின் பிரம்மாண்டத்திற்கும் சற்றும் ஒத்து வர வில்லை. ஸ்பான்ஞ் மெத்தை கொண்ட கட்டில், காற்று குறைவில்லாமல் இருக்கையில் ஏசி வேறு, மரத்தாலான கபோர்டு, ஹீட்டர், வெஸ்டர்ன் டாய்லட், ஷவர் என்று நவீன குளியலறை இப்படி எல்லாம் வித்தியாசமாகப்பட்டது அவளுக்கு . யோசனையோடு  குளித்தவள் வெளியே வந்ததும் அதை தோழியிடம் கேட்டும் விட்டாள்.

 

“இதெல்லாம் என் கடைசி அண்ணன் காளிதாசனுடைய ஏற்பாடு தான் நானும் அண்ணாவும் தான் சென்னையில் எங்கள் மேல் படிப்பை முடித்தோம். அண்ணாவிற்கு பட்டணத்து நண்பர்கள் அதிகம். அவ்வப்பொழுது திருவிழா விசேஷங்களுக்கு அவர்கள் வந்து போவதுண்டு. அதனால்வீட்டில் மாடியில் இருக்கும் அறைகள் மட்டும் எல்லா நவீன வசதிகளுடன் இருக்கும். அம்மா  அப்பா.,முதல் அண்ணன் அண்ணி இவர்கள் மட்டும் தான்  கீழே இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றும் கழனி பம்புசெட்டுதான்” என்று சுகுணா சிரிக்காமல் சொல்ல ரம்யாவோ கலகல வென்று சிரித்து விட்டாள். அவளும் இப்படி சிரித்து எத்தனை மாதங்கள் ஆகின்றது.

 

இவர்கள் சிரிக்கையிலேயே கதவு தட்டப்பட்டு பின் திறக்கப்பட்டது.கையில் காப்பி கோப்பைகளுடன் ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து கொண்டிருந்தாள். சுங்குடிச் சேலையில் கொசுவம் அவளின் நடைக்கேற்ப அழகாக ஆடியது, கறுத்து அடர்ந்த கூந்தலை சுற்றி முறுக்கி கொண்டையிட்டிருந்தாள், அதைச் சுற்றி மல்லியும் கனகாம்பரமும் சேர்ந்த மலர்ச்சரம், நெற்றி வகிட்டில் அடர் குங்குமம், கால்களில் தண்டை, கைகளில் கண்ணாடி வளையல்கள், நெற்றியில் வட்ட வடிவ குங்குமப் பொட்டு, காதுகளில் ஜிமிக்கி, மூக்கில் ஒற்றைகல் மூக்குத்தி., ஆக பாரதி ராஜா வின் கிராமத்தது பைங்கிளி  நேரே வந்து தனக்கு காப்பி  கொடுப்பது போல உணர்ந்தாள் ரம்யா.

 

“என்ன கண்ணு அப்படி பாக்குற காப்பி தண்ணி எடுத்துக்க” என்று தட்டை இவள்புறம் நீட்ட,

 

“எடுத்துக்கடி, இவங்கதான் என்னுடைய முதல் மதனி, அதாவது அண்ணி”

 

“இவ..,.”என்று சுகுணா ஆரம்பிக்க,

 

“எனக்கு தெரியும் கண்ணு இவுக உன் சினேகிதி ரம்யாதானே?  அத்தே சொல்லித்தான் அனுப்புனாக அந்த சினிமால வர்ற கதாநாயகி கணக்கால்ல இருக்காக, ஆகா… என்ன அழகு” என்று ஆசை தீர திருஷ்டி கழித்தார் அந்த மதனி பார்வதி.

 

“நீங்களும் தான் நாட்டாமை படத்து குஷ்பு மாதிரி இருக்கீங்க” பதிலுக்கு ரம்யா கூற முகம் குப்பென்று சிவந்து விட்டது பார்வதிக்கு.

 

“அடி ஆத்தி… என்ன பரிகாசம் இது… முதல்ல காப்பி குடிங்க, கீழே அத்தான் தேடுவாரு ”

 

‘ஆமாம் ஆமாம்… அண்ணனுக்கு மதனி இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது… விட்டு விடடி போங்கள் மதனி” என்று சிரித்துக் கொண்டே இருவரும் வழியனுப்ப தப்பித்தோம் பிழைத்தோமென்று கிட்டத்தட்ட ஓடியே விட்டாள் பார்வதி.

 

ஒருவழியாக வளவளத்துக்கொண்டே தோழிகள்  இருவரும் கோவிலுக்குத் தயாராகி கீழே வந்தார்கள். அங்கே கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம்  ரம்யாவை தன்வசம் இழுத்தது.

 

“ஏய், இது என்ன ஃபோட்டோடி ஒரு ஊரே ஓரேஃபோட்டோல இருக்கு”

 

“ஒருஊர் இல்லையடி, ஒரு குடும்பம்,என் அப்பாவைப் பெற்ற தாத்தாவின் குடும்பம் .எனக்கு மொத்தமும் நாலு பெரியப்பா….இதோ  நடுவில் இவர்தான் என் அப்பா, பிறகு ஆறு சித்தப்பாக்கள் மூன்று அத்தைகள். மொத்தம்  பதினாலு குழந்தைகள்  என் தாத்தாவிற்கு இதில் மூன்று பிறந்து இறந்ததாக வேறு கேள்வி”

 

கேட்கையிலேயே தலை சுற்றியது  ரம்யாவிற்கு.

 

“இதோ ஓரத்தில்  நிற்கிற இவங்க தான் என் பாட்டி…..” என்று சுகுணா  காண்பிக்க, அவரையே விழி அகலாமல் பார்த்தாள் ரம்யா. பாவமாகவும்.அமைதியாகவும் ஃபோட்டோவிற்கு வெட்கப்படுபவள் போல்  ஓரமாக நாணிக் கோணி நின்று கொண்டிருந்தார்.அந்த பெண்மணி. இவரா இத்தனை பிள்ளைகளைப் பெற்றது?

 

“அது எப்படியடி ஒன்னும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு  ஓரமாக நிற்கிறார்.ஒன்றும் தெரியாமலா இத்தனை பிள்ளைகளைப் பெற்றிருப்பார்?” என்று கூறிவிட்டு ரம்யா சிரிக்க, எதிரில் நின்ற சுகுனா சிரிக்காமல் விழிவிரிய மேலே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வையைத் தொடர்ந்த ரம்யா, அங்கே வந்து கொண்டிருந்த நபரைப் பார்த்ததும் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

 

அதிக உயரமும் இல்லாமல் குள்ளமும் இல்லாமல் நடுத்தரமாக வளர்ந்திருந்தான். அவன் தோள்களை தேக்கு மரத்துடன் ஒப்பிட்டால் அது மிகையாகாது. சுருள சுருளான கேசம் அவன் படிகளில் இறங்குவதற்கு ஏற்ப நடனமாடியது வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை கழுத்தில் தங்கச் சங்கிலி, கையில் தடிமனான தங்க நிற வாட்சை கட்டிக்கொண்டே கீழிறங்கியவனின் கூர் பார்வை ரம்யாவை துளைத்தது.

 

ஏன் இத்தனை கோபமான பார்வை?  ஓ… ஒரு வேளை நான் அவரது பாட்டியைப் பற்றி பேசியது காதில் விழுந்திருக்குமோ?  நிச்சயம் விழுந்திருக்கும். நான் என்ன ரகசியம் போலவா பேசினேன்… செத்தேன். அவன் இறங்கி அருகில் வர வர இதயத்திற் படபடப்பு அதிகமானது. நேரே சுகுனாவிடம் சென்றவன்,

 

“யாரம்மா ….இவர்கள் ” என்று அமைதியாகவே கேட்டான்.

 

“எ….எ…என்னுடைய தோழி அண்ணா திருமணத்திற்கு வந்திருக்கிறாள் ”

 

“ஓ…” என்று இழுத்தவனது பார்வை ஒரே ஒரு நொடி ரம்யாவிடம் சென்று மீண்டது தொடர்ந்து,

 

“இது கிராமம்… இங்கு பெண்கள் அடக்கமாக மெதுவாக பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல்,  வீட்டு பெரியவர்களைப் பற்றி தரக் குறைவாய், இப்படி பொது இடத்தில் பேசுவது நிச்சயமாய் கண்டிக்கத்தக்கது… பெண் சிரித்தால் போச்சு புகையிலை விரித்தால் போச்சு என்ற பழமொழி எப்போதும் நினைவிலிருக்கட்டும் என்று உன் தோழிக்கு சொல்லிவை” என்றவன் போகிற போக்கில் இவளையும் ஒரு முறை முறைத்து விட்டுச் சென்றான்.

 

அத்தனை நேரம் தீச்சட்டிக்குள் இருப்பது போல் இருந்தது ரம்யாவிற்கு. அவன் அகன்றதும்தான் மூச்சு கூட சீராக வந்தது எனலாம்.

 

“ஏய்… ரம்யா மன்னித்து விடடி… இந்த அண்ணா கொஞ்சம் கட்டு பெட்டிதான்… நீ எதுவும் மனதில் வைத்துக் கொள்ளாதே ”

 

“யாருடி இவர்?? ” மலைப்பாகவே கேட்டாள்.

 

“இவர்தான் என் மூன்றாவது அண்ணன் பாஸ்கரன்”

 

“பாஸ் என்கின்ற பாஸ்கரனோ?” கூறிவிட்டு சத்தமாக சிரிப்பை ஆரம்பித்தவள், உடனே தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு ‘பெண்கள் சிரிச்சா போச்சு” என்று கூறி மீண்டும் இருவரும் சிரிப்பு வெள்ளத்தில் குதித்தனர்.

 

கோவிலுக்காக இரு பெண்களும் பூஜை பொருட்களோடு அந்த மண்தரையில் நடந்து கொண்டிருக்க,

 

“உன் ஒரு அண்ணனை பார்த்தாகிவிட்டது. இன்னமும் மூன்று அண்ணன்களை எப்போது காட்டுவாய். இரண்டாவது அண்ணியையும் பார்க்க வேண்டுமே”

 

“எல்லோரும் ரொம்ப பிஸி, என் கல்யாண வேலைகள் இருக்கின்றதா… அதனால் என் இரண்டாவது அண்ணனும் மதனியும் பத்திரிகை வைப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். சின்ன அண்ணன் சென்னையில் தன் நண்பர்களுக்கு பத்திரிக்கை வைக்க சென்றுவிட்டார். முதல் அண்ணனும் அப்பாவும் ரைஸ் மில்லில் இருக்கிறார்கள். இரவு ஏழு மணிக்குத்தான் வருவார்கள்”

 

“அப்படியானால் இந்த சிடுமூஞ்சி அண்ணனுக்கு வேலையே இல்லையா?”

 

“ஏய், என் அண்ணனை அப்படியெல்லாம் சொல்லாதே . எனக்கு நிரம்பவும் பிடித்த அண்ணா அவர்தான். திருச்சி பக்கம் பத்திரிகை வைக்கச் சென்றவர் இன்று மதியம்தான் வந்தார். நாளை முதல் பந்தக்கால், சமையல் பாத்திர ஏற்றுமதி, இறக்குமதி என்று பிசியாகி விடுவார். இப்போது மார்கழி மாதம் என்பதால் வேலைள் சற்று மந்தமாக இருக்கிறது. பொங்கல் முடிந்ததும் பார் சூடு பிடிக்கப்போகிறது. நாளை மறுநாள் போகிப் பண்டிகை, ஊரே கோலாகலமாக இருக்கும்… எல்லாம் பார்க்கலாம்… சரி வேகமாக நடையைக்கட்டு…” என்று தோழிக்கு உத்தரவு பிறப்பித்தவள் தானும் வேகமாக நடந்தாள். எதிர்பட்டோரின் இன்முகத்திற்கும் விசாரிப்புகளுக்கும் ஏற்றபடி பதிலளித்துவிட்டு நடக்கலானாள். அவளுடன் வருவதால் ரம்யாவிற்கும் இன்முக வரவேற்பு கிடைக்கவே மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

பின்னே நாட்டாமைக்காரப் பெண்ணாயிற்றே கையில் போட்டு வைத்துக் கொண்டால் எல்லாவற்றிற்கும் சுகம்தானே என்று நினைத்தவளுக்கு திடுமென ஒரு சந்தேகம்,

 

“உனக்கு நான்கு பெரியப்பாக்கள் இருக்க உன் அப்பா எப்படி நாட்டாமை ஆனார்?”

 

“நான்கு பெரியப்பாக்கள் என்பது உண்மைதான்,ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதுதான் கேள்வி. அவர்கள் ஒவ்வொருவராக இயர்கை எய்திய பிறகுதான் என் தந்தை நாட்டாமை ஆனார் ”

 

“ஓ..” என்ற சிந்தனையினூடே நடந்தவள் எதிரில் வந்த நபர் மீது தெரியாமல் இடித்து விட்டாள்.

 

“பெண்கள் கொஞ்சம் கவனத்துடன் நடக்க வேண்டூம்” என்று சற்று முன் கேட்ட அதே குரல், அது தான் அந்த சிடுமூஞ்சியின் குரல். இடித்ததும் இடித்து விட்டு திமிர் வேறு என்று உள்ளுக்குள் நினைத்தவள் சட்டென நிமிர்ந்து அவன் விழி பார்த்து,

 

“ஆண்களுக்கு கவனம் தேவையில்லை என்று கூறிய முட்டாள் யாரோ?  அவரை நிச்சயம் நான் பார்க்க வேண்டும்” குரலில் லேசான குத்தலுடனே முடித்தாள். ஏனோ அவனின் தங்கை சுகுணாவை ஒரு முறை முறைத்தவன் சட்டென விலகி நடக்கலானான்.

 

“அவரிடம் கொஞ்சம் நாவடக்கமாக பேசடி… அதிக கோபக்காரர்”

 

“அதுதான் உன் அண்ணனின் முகத்திலேயே கொட்டை கொட்டையாய் எழுதி ஒட்டி இருக்கிறதே, இதற்கு விளக்கம் வேறா?”

 

“அப்படிச் சொல்லாதடி கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்”

 

“ஏதோ இருந்தால் சரி வா சாமி கும்பிடப் போகலாம்” என்றபடி ரம்யா முன்னேறினாள்.




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Aaka ivarthan herova


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      Yes…… why? Any doubt

You cannot copy content of this page