மனதோடு ஒரு ராகம்-8
4715
0
அத்தியாயம் – 8
கல்லூரியில் கடந்த வாரம் முழுவதும் நடந்த கருத்தரங்கின் பொருட்டு அடிக்கடிச் சந்தித்துக் கொண்ட சித்தார்த்தும் பூர்ணிமாவும் கிண்டல், கேலி, சண்டை, சமாதானம், பிடிவாதம் பிடித்தல், விட்டுக்கொடுத்தல் என்று பலதரப்பட்ட உணர்வுகளைக் கடந்து இனைந்து வேலை செய்ததால் ஒருவருக்கொருவர் மனதளவில் நெருங்கியிருந்தார்கள். ஆனால் கருத்தரங்கம் முடிந்தப் பிறகு சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது.
முழுதாய் ஐந்து நாட்கள் முடிந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளக் கூட முடியவில்லை. பூர்ணிமா வெகுவாய் சோர்ந்துப் போய்விட்டாள். அவனைக் கண்ணில் காணாமல் அவள் மனம் தவித்தது. கேண்டீன், லைப்ரரி, லேப் என்று அவனைத் தேடி நடையாய் நடந்தாள். இப்போது கூட அவன் இங்கு வருவானா என்கிற எதிர்பார்ப்புடன்தான், கல்லூரி நேரம் முடிந்தப் பிறகும் சோதனைக் கூடத்தில் கடனே என்று விசைப்பலகையைத் தட்டிக் கொண்டிருக்கிறாள்.
“ஹாய் பூசணி…” – அவள் காதோரம் அந்தக் குரல் ஒலித்தது.
நொடி கூடத் தாமதிக்காமல் “சித்து….” என்கிற கூச்சலுடன் திரும்பிப் பார்த்த பூர்ணிமாவின் முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி. அதுவரை களையிழந்து போயிருந்த அவளுடைய உலகம் சட்டென்று வண்ண மயமாகிவிட்டது. காரணம் பக்கத்து சேரில் அவளுக்கு வெகு அருகில் அமர்ந்திருந்தது சித்தார்த்தே தான்…
“ஷ்ஷ்ஷ்… பூசணி…. இது லேப்….” – அவளுடைய ஆர்ப்பாட்டமான வரவேற்பை மனதிற்குள் ரசித்துக் கொண்டே, இருக்கும் இடத்தை அவளுக்கு நினைவு படுத்தினான்.
“அது எங்களுக்கும் தெரியும். நீங்க இவ்வளவு நாளா எங்கப் போய்ட்டிங்க…?” – செல்லக் கோபத்துடன் சண்டைக்கு வந்தாள்.
“கொஞ்சம் வேலை அதிகமாயிடிச்சு பூசணி…”
“பெரிய வேலை… ஒரு நாள் கூட பிரேக்ல கேண்டீன் பக்கம் எட்டிப் பார்க்க முடியாத அளவு அப்படி என்ன வேலை உங்களுக்கு?”
“அதெல்லாம் நீ ஃபைனல் இயர் வரும் போது தெரிஞ்சுக்குவ. இப்போ எதுக்கு என்னைத் தேடினன்னுச் சொல்லு… ”
“சொல்ல முடியாது போங்க…” – கோபம் குறையாதவளாக முறுக்கிக் கொண்டாள்.
அவளுடைய கோபத்தைக் கண்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது. வழக்கமான புன்சிரிப்புடன்… “என்ன பூசணி… இப்போதான் உன்னைத் தேடி வந்துட்டேன்ல. இன்னமும் என்ன கோவம்… ம்ம்ம்…?” என்றான் சரசமாக.
அவள் பதில் பேசவில்லை. ஆனால் சிறு புன்னகையுடன் அவனை முறைத்தாள். சிரித்துக் கொண்டே கோவப்படுவது ஆழ்ந்த அன்பில் மட்டும் தானே சாத்தியம். பூர்ணிமாவின் அன்பு சித்தார்த்தின் உள்ளத்தில் பதிந்தது. சற்று நேரம் அவன் எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன லுக்கு?” – அவள் புருவம் உயர்த்தினாள்.
அவன் “ம்ஹும்…” என்று தலையசைத்துவிட்டு சேரிலிருந்து எழுந்து “வெளியே வா…” என்றான். இருவரும் இனைந்துச் சோதனைக் கூடத்திலிருந்து வெளியேறினார்கள்.
சித்தார்த் தன்னுடன் சேர்ந்து நடக்கும் சிட்டுக் குருவியைத் திரும்பிப் பார்த்தான். எப்பொழுதுமே உற்சாகம்… முகத்தில் வெகுளித் தனமான சிரிப்பு… நடையில் ஒரு துள்ளல்… ‘இதுதான் இவளா!’ – ஆச்சர்யமாக இருந்தது. உடனே அவனுக்கு இன்னொரு ஆசையும் தோன்றியது. ‘இவளைக் கொஞ்சம் வம்பிழுத்துப் பார்த்தால் என்ன…?’
“ஹேய் பூசணி… அங்க ஒரு பொண்ணு வருதுப் பாரேன்…” – எதிர் திசையில் வந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைச் சுட்டிக் காட்டினான்.
“ம்ம்ம்… அவளுக்கு என்ன?”
“உன் கிளாஸ் தானே? பேர் கூட ஸ்வேதா… சரிதானே?” என்றவன் தொடர்ந்து “அந்தப் பொண்ணு எவ்வளவு பாந்தமா… அடக்க ஒடுக்கமா நடந்து வருது. அதுமாதிரியெல்லாம் உனக்கு நடக்க வராதா? எதுக்கு இப்படி ஸ்ப்ரிங் மாதிரிக் குதிச்சுகிட்டே வர்ற?” என்றும் கேட்டான்.
பூர்ணிமா சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனோ முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு அவளுடைய பதிலுக்காகக் காத்திருந்தான்.
“எனக்கு இப்படித்தான் நடக்கத் தெரியும். உங்களுக்குப் பிடிக்கலன்னா நீங்க இப்படியே திரும்பி அவ கூட ஜாயின் பண்ணிக்கோங்க. என்னை யார் கூடவும் கம்பேர் பண்ண வேணாம்” – சுள்ளென்று பாய்ந்தாள்.
“ப்ப்ப்பா… எவ்வளவு ரோஷம்… அனல் அடிக்குது பூசணி…”
“அனல் மட்டும் அடிக்காது. நானும் அடிப்பேன்…”- சட்டென்று இலகுவாகிச் சிரித்தாள். அவளுடைய சிரிப்பை உள்வாங்கிக் கொண்டே அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.
“ஆமாம்… உனக்குப் பாட்டெல்லாம் பாட வருமா?”
“ம்ம்ம்… பாடுவேனே… சின்ன வயசுல மியூசிக் கத்துகிட்டேன்”
“அன்னைக்கு ஆடிடோரியம்ல நீ பாடினதைக் கேட்டேன்” அவன் சொல்லி முடிப்பதற்குள் வேகமாக அவன் பக்கம் திரும்பியவள் கண்களில் ஆர்வம் மின்ன “நிஜமாவா? நல்லா பாடினேனா? பிடிச்சிருந்ததா?” என்றாள்.
“இப்ச்… சரியா ஞாபகம் இல்ல. வேணுன்னா இன்னொரு தரம் பாடிக்காட்டு… பிடிக்குதான்னுச் சொல்றேன்”
“அப்படியா?” – அவளுடைய சுருதிச் சற்றுக் குறைந்தது. ‘பிடிச்சிருந்தா மறந்திருக்க முடியாதே….!’
பேசிக் கொண்டே வந்த இருவரும் மரத்தடியில் போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தார்கள்.
“ம்ம்ம்… ஸ்டார்ட் பண்ணு… அன்னைக்குப் பாடின அதே பாட்டு…” பாடலைக் கேட்க அவன் வசதியாக அமர்ந்து கொண்டான். அவளும் ஒரு பக்கம் அமர்ந்து அதே பாடலைப் பாடினாள். அன்று போலவே இன்றும் அந்தப் பாடலின் இனிமை அவனைச் சொக்க வைக்கத் தன்னை மறந்துக் கண்களை மூடினான். அவளுடைய இசை ஞானத்தில்… அவளுடைய குரலில்… இல்லையில்லை… அவளுக்குள்ளேயே அவன் கரைந்து கொண்டிருந்தான்.
“ரிம் ஜிம்…! ரிம் ஜிம்…! ரிம் ஜிம்…!” – எக்கோ எஃப்பெக்ட்டுடன் அவளுடைய குரல் மீண்டும் மீண்டும் அவன் செவிகளில் விடாமல் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.
“எப்படி இருந்துச்சு? ஹலோ…” – பாடி முடித்து ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகும் அவன் கண்களைத் திறக்காததை அடுத்து அவனை உலுக்கி எழுப்பினாள்.
மந்தகாசப் புன்னகையுடன் தன் தோளில் பதிந்திருந்த பூங்கரத்தை நோக்கியபடிக் கண்களைத் திறந்தவன் பிறகு அவள் முகம் நோக்கிப் பார்வையை உயர்த்தினான். இப்போதெல்லாம் அடிக்கடி அவள் அவனிடம் சந்திக்கும் பார்வை… உயிரோடு பருகுவது போன்றதொரு பார்வை. “எ… என்ன? பாட்டு… ஓகேவா?” அவனுடைய பார்வையில் பாதிக்கப்பட்டவளாக நாணத்தில் முகம் சிவந்து தடுமாறினாள்.
‘வெட்கம்…ம்ம்ம்! தமிழச்சிடி நீ…!’ அவனுடைய பார்வை இன்னும் ஆழமாக அவள் மீது பதிந்தது.
“என்ன பூசணி நீ… பாடச் சொன்னா இப்படித் தாலாட்டுப் பாடி என்னைத் தூங்க வச்சிட்டியே!” – குழைந்த குரலில் கேலிப் பேசினான்.
அவனுடைய சீண்டல்களை மனதிற்குள் ரசித்துக் கொண்ட பூர்ணிமா ‘லுக்கு விடறதுக்கும், பூடகமாப் பேசறதுக்கும் உனக்கு மட்டும்தான் தெரியுமா? எங்களுக்குத் தெரியாத…?’ என்று நினைத்து அவனுடைய பருகும் பார்வைக்குப் பதில் பார்வைப் பார்த்தாள். ‘அடடா… பூசணிக்காவுக்கு ரொமாண்டிக் லுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கே!’ – உள்ளுக்குள் மகிழ்ந்து போனான்.
“பிடிச்சிருக்கா?” – சரசமான குரலில் கேட்டாள்.
“சின்னதா ஒரு பொட்டு வச்சு… ஷோல்டர் வரைக்கும் கொஞ்சமா முடி வளர்த்துக் குட்டியா ஒரு கிளிப் போட்டா இன்னும் ரொம்பப் பிடிக்கும்…” – ஆசையாகச் சொன்னான்.
“ம்ம்ம்… பாட்டுக்கு எப்படி பொட்டு வச்சு ஹேர் கிளிப் போடறது…!”
“பாட்டுக்கா???” – முகத்தைச் சுளித்தான்.
“ஆமாம் பாட்டுக்குத் தான்…” – அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.
“பாட்டையாப் பிடிச்சிருக்கான்னுக் கேட்ட?”
“ம்ம்ம்…. நீங்க என்ன நினைச்சிங்க?”
‘திருப்பதிக்கே லட்டு கொடுத்துட்டாளே!’ – மனதிற்குள் மெச்சிக் கொண்டவன், அவளுடைய சமீபத்திய கேள்விக்குப் பதில் சொல்லாமல் முன்னாள் கேள்விக்குப் பதில் சொல்லி நழுவினான்.
“அடடா… நான்தான் தூங்கிட்டேனே பூசணி! சோ… இன்னொரு நாள் சொல்றேன்… இன்னொரு பாட்டைக் கேட்டுட்டு… ஓகே?”
‘எதையுமே அவ்வளவு சீக்கிரம் வெளியே சொல்ல மாட்டன் போலிருக்கே! அழுத்தக்காரன்…’ – பூர்ணிமா அவனை முறைக்க அவனோ சத்தமாகச் சிரித்தான்.
###
கேண்டீன் வளாகத்தில் மாணவர்கள் வெயில் மழைக்கு ஒதுங்குவதற்காக ஆங்காங்கே சிறு சிறு குடில்களை அமைத்திருந்தார்கள். கீழே வட்ட வடிவில் போடப்பட்ட சிமெண்ட் தரை… சுற்றிலும் இடுப்பளவு எழுப்பப்பட்ட சுவர்… அதற்கு மேல் மூங்கில் தட்டியால் செய்யப்பட்ட அடைப்பு… மேலே பனை மட்டையால் வேயப்பட்டுக் கோரைப்புல்லால் போர்த்தப்பட்டக் கூரை… உள்ளே அமர்வதற்கு வசதியாகச் சுற்றிலும் கல் பெஞ்சுகள். காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்துப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் அந்தக் குடில்களில் ஒன்றில்தான், கல்லூரி நேரம் முடிந்தும் விடுதிக்குச் செல்லப் பிடிக்காமல் பூர்ணிமா தனிமையில் அமர்ந்திருந்தாள்.
அவள் மனம் சித்தார்த்தையே சுற்றிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் போல் இயல்பாகத் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள். ஆனால் அதற்காக அவள் வருத்தப்படவில்லை. மாறாகத் தினமும் கல்லூரியில் அவனுடன் கழிக்கும் இனிமையான பொழுதை நினைத்து நினைத்து மகிழ்ந்தாள்.
அவன் பார்க்கும் பார்வை, பேசும் குரல், சிரிக்கும் கம்பீரமான சிரிப்பு அத்தனையும் அவள் மனதிற்குள் புகுந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. முதல் முறையாக ஓர் ஆண்மகனை ஆண் என்கிற நோக்கோடு பார்த்தவள் தன்னையும் பெண்ணாக உணர்ந்தாள். அவளுக்குள் நிகழ்ந்திருக்கும் இந்தப் புதிய மாற்றம் அவளை நிலைத் தடுமாறச் செய்தது.
உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகள் முட்டி மோதின. மனம் எங்கோ பறப்பது போல் ஆனந்தமாக இருந்தது. விழித்திருக்கும் பொழுதும் உறங்கும் பொழுதும் நினைவிலும் கனவிலும் அவனைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே அவளை ஆட்கொண்டிருந்தன. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து படாப்பட்டாக வாழ்ந்து பழகியிருந்த பூர்ணிமாவிற்கு, இளம் வயதிற்கே உரிய இந்த மெல்லிய உணர்வுக் குவியலைக் கையாளும் விதம் புரியவில்லை.
மனதிலிருப்பதை வெளிப்படுத்தினால்தான் உறங்க முடியும் என்று தோன்றியது. அதே சமயம் அவன் முதலில் சொல்லலாமே…! அவன் மனதிற்குள்ளும் தானே ஆசை இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவன்தான் அழுத்தக்காரனாயிற்றே…! – தனக்குள் சிரித்துக் கொண்டாள். காரணம் அவனுடைய அழுத்தமும் அவளுக்குப் பிடித்திருந்தது.
அவள் தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதே சடசடவென்று பெரிய பெரிய தூறல் போட ஆரம்பித்தது. அதே நேரம் “ஹேய் பூசணி…” என்றபடி சித்தார்த்தும் அந்தக் குடிலுக்குள் ஓடிவந்து நுழைந்தான்.
“ஹேய்… சித்து…” – பூர்ணிமா மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டாள்.
“ஹாஸ்ட்டலுக்குப் போகாம இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”
“சும்மாதான்… நீங்க என்ன இந்தப் பக்கம்…?”
“உன்னைப் பார்த்துட்டுத் தான் ஓடி வந்தேன்…”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மழை வலுத்தது. மூங்கில் தட்டி வழியே அடிக்கும் மழைச் சாரல் அவர்களைச் சிலிர்க்கச் செய்தது. “நல்ல சாரல் இல்ல…?” – மேனியைத் தீண்டும் ஜில்லென்றக் காற்றையும் மெல்லிய சாரலையும் அனுபவித்தபடி அவனிடம் கேட்ட பூர்ணிமா அவன் பதில் சொல்வதற்கு முன் பாட ஆரம்பித்தாள்.
“மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன தின்மை என்ன வன்மை
எந்தப் பெண்ணும் அதிசய விண்களம்
போகப் போகப் புரிகின்ற போர்க்களம்
ஒன்று செய் இப்போதே
உள் நெஞ்சில் உடையச் செய்…”
சட்டென்று பாடலை நிறுத்திவிட்டு அவன் கண்களுக்குள் எதையோ தேடினாள். இந்த முறைக் கண்களை மூடாமல் பாடலோடு சேர்த்து அவள் முகபாவங்களையும் ரசித்துக் கொண்டிருந்தவன் அவள் பாடுவதை நிறுத்திவிட்டுத் தன்னையே பார்ப்பதைக் கண்டு குழப்பத்துடன் அவளை நோக்கினான். ஓரிரு நிமிடங்கள் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவள் அதைக் கூறினாள்.
“சித்து… நான்… நான் உங்கள லவ் பண்றேன்னு நினைக்கிறேன்” – பட்டென்று சொல்லிவிட்டாள்.
“நினைக்கிறியா? இல்ல லவ் பண்றியா?” – நிதானமாகக் கேட்டான்.
“கொஞ்ச நாளாவே நீங்க என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றீங்க. உங்களைப் பற்றிதான் அதிகம் யோசிக்கிறேன். சரியாத் தூங்க முடியல. சாப்பிட முடியல… மற்ற வேலைகள்ல கவனம் செலுத்த முடியல. உங்க கூடப் பேசணும்… உங்க கூட பைக்லச் சுத்தணும்… உங்க கூடச் சாப்பிடணும்… உங்களைத் திட்டணும்… உங்ககிட்டத் திட்டு வாங்கணும்… உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்… உங்க கூடவே இருக்கணும்… இப்படில்லாம்… இன்னும் என்னென்னவோ தோணுது… இதெல்லாம்தான் லவ்னா நான் உங்கள லவ்தான் பண்றேன்”
சற்று நேரம் அவன் அமைதியாக இருந்தான். அவளுக்குள் ஒரே படபடப்பு… ‘ என்ன இவன்…! இவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்லியிருக்கோம்… ஒரு ரியாக்ஷணும் கொடுக்காமல் இப்படிக் கல் மாதிரி இருக்கானே!’ – அவளை அதிக நேரம் தவிக்க விடாமல் அவன் பேசினான்.
“பூர்ணிமா… லவ்ல ஒரு தரம் கமிட் ஆயிட்டா என்ன கஷ்டம் வந்தாலும் வெளியே போகக் கூடாது. அதுக்கு நான் விடமாட்டேன்… நல்லா யோசிச்சுச் சொல்லு…” – அவன் முகம் வெகுதீவிரமாக இருந்தது.
“உங்களைத் தவிர வேறு யாரும் என்னோட லைஃப் பார்ட்னர் ஆக முடியாது சித்து” அவளுடைய குரலில் அவனைவிட அதீதத் தீவிரம் இருந்தது. அவன் முகத்தில் ஒருவிதப் புன்னகைத் தோன்றியது. எதையோ வென்றுவிட்டது போன்றதொரு பாவம்… ஒரு பெண்ணின் மனதைக் கவர்ந்துவிட்ட கர்வமோ!!!
Comments are closed here.