மனதோடு ஒரு ராகம்-9
4660
0
அத்தியாயம் – 9
டிவி சீரியலைப் பார்த்தபடி மதியச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த பார்வதி வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்தாள். அழுக்கு ஆடையும், பரட்டைத் தலையும், வீங்கிய முகமும், கடைவாயில் ஒழுகும் வானியுமாகப் பார்க்கச் சகிக்க முடியாத நிலையிலிருக்கும் ரவியைப் பொக்கிஷம் போல் தன் தோளில் சாய்த்துக் கொண்டு, ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் கீழே இறக்கிக் கொண்டிருந்தாள் தமிழி.
தன் மகனை அந்த நிலையில் பார்த்ததும் பார்வதியின் மனதில் கூர்மையான ஈட்டிப் பாய்ந்தது போல் வலித்தது.
“இன்னிக்கு எங்கக் கிடந்தான்…?” – பூட்டியிருந்த திண்ணை கேட்டைத் திறந்துவிட்டபடி வேதனைப் படிந்தக் குரலில் கேட்டாள்.
“பஸ் ஸ்டாண்ட்ல…”
“தள்ளு நான் பிடிக்கிறேன்…”
“வேண்டாம்… வேண்டாம்… முற்றத்துல ஒரு சேரை எடுத்துப் போடுங்க… குளிக்க வைக்கணும்” – தமிழி சொல்ல அவசரமாக முற்றத்தில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துப் போட்டுவிட்டு மூவருமாகச் சேர்ந்து அவனை முற்றத்திற்குள்ளே இறக்கினார்கள்.
“நீ போயி ஆட்டோவுக்குக் காசைக் கொடுத்து கட் பண்ணிட்டு வாம்மா… நான் இவனைக் குளிக்க வைக்கிறேன்”
“இல்ல…இல்ல… நான் இவரைப் பார்த்துக்கறேன். நீங்க போயி ஆட்டோவை கட் பண்ணிட்டு வாங்க” – ஒரு நொடி கூட அவள் அவனைவிட்டு விலகத் தயாராக இல்லை.
ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து சென்ற பார்வதி ஆட்டோவை கட் செய்துவிட்டு வந்து மகனைக் குளிப்பாட்ட தமிழிக்கு உதவினாள்.
கல்லூரியில் படிக்கும் ஓர் இளம் பெண் அந்நிய ஆடவனைத் தொட்டுக் குளிப்பாட்டுகிறோம் என்கிற தயக்கம் இல்லாமல் ஒரு குழந்தையைக் கையாள்வது போல் அவனைக் குளிப்பாட்டிக் கொண்டிருப்பவளைக் கண்டு பார்வதியின் மனம் வருந்தியது. நம் மகளாக இருந்தால் இப்படி ஒரு செயலைச் செய்ய அனுமதிப்போமா என்கிற எண்ணம் தோன்றியதும் குற்ற உணர்ச்சி அவளைக் குத்தியது.
“தமிழு… இன்னமும் நீ இவனை நம்பிகிட்டு இருக்கறது நல்லது இல்ல கண்ணு. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு….”
“என் வாழ்க்கையே இவர் தானே அத்த…”
“வேண்டாம்மா… நீ வாழ வேண்டிய பொண்ணு…” – பார்வதியின் கண்கள் கலங்கின.
“அப்போ இவர் மட்டும் வாழ வேண்டாதவரா அத்த?” – தன் போக்கில் கேட்டுவிட்டு அவனுடைய தலையை நன்கு அழுத்தித் துடைத்துத் துவட்டிக் கொண்டிருந்தாள்.
“யாய்… விட்ரி என்னை…” – திமிறிய ரவி ‘அவளே… இவளே…’ என்று உளறலாகவே கண்டபடி வார்த்தைகளைக் கொட்டினான். அவனுடைய பேச்சு எதுவும் அவளைப் பாதிக்கவில்லை. அவனுக்கு உடை மாற்றிப் படுக்கையறையில் கொண்டு வந்து படுக்க வைக்கும் வரை அவள்தான் செய்து கொண்டிருந்த வேலையிலேயே கருத்தாக இருந்தாள்.
“நீ காலேஜ் போகலையா?” – பார்வதி கேட்டாள்.
“போற வழியிலத்தான் இவரைப் பார்த்தேன். அப்புறம் எப்படி…? லெமன் இருக்கா?” – என்று கேட்டுக் கொண்டே உரிமையுடன் சமையலறைக்குள் நுழைந்துக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தாள்.
‘இருக்கு…’ என்று பார்வதி பதில் சொல்வதற்கு முன்பே ஓர் எலும்பிச்சம்பழத்தை எடுத்துப் பிழிந்துச் சாறெடுத்து, அதில் பொடிப்பொடியாக நறுக்கிய இஞ்சி, உப்பு மற்றும் தண்ணீர் கலந்து நன்கு கலக்கிப் படுக்கையறைக்குக் கொண்டு வந்தாள்.
கட்டிலில் படுத்திருந்த ரவி இன்னமும் போதைத் தெளியாமல் எதையோ உளறிக் கொண்டிருந்தான். கையில் இருந்த டம்ளரை பார்வதியிடம் கொடுத்துவிட்டுக் கட்டிலில் அமர்ந்து அவனுடைய தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டவள் மூத்தவளிடமிருந்த டம்ளரை கையில் வாங்கிக் கொண்டு அவளுக்குக் கண் ஜாடைக் காட்டினாள்.
வழக்கம் போல் பார்வதி மகனுடைய காலடியில் அமர்ந்து அவனுடைய கால்களை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள, தமிழி அவனுடைய மூக்கைப் பிடித்துக் கொண்டு வாயில் எழும்பிச்ச ஜீஸை ஊற்றிவிட்டாள். அவன் திமிறினான்… அவள் கையில் இருந்த டம்ளரை தட்டிவிட்டான்… கண்டபடி மோசமான வார்த்தைகளில் அவளைத் திட்டினான். ஆனாலும் பெண்கள் இருவரும் அவனுக்குச் சமமாகப் போராடியதால் பாதிக்குப் பாதி ஜீஸ் அவன் வயிற்றிக்குள் சென்றது.
தள்ளாட்டத்துடன் எழுந்து தமிழியைத் தாக்க முயன்றான். பார்வதி குறுக்கே வந்து மகனைத் தடுத்துவிட்டாள். வார்த்தைகளால் அவளைக் காயப்படுத்தி விரட்ட முயன்றான். போதையில் தெளிவாகப் பேசமுடியாமல் உளறிக் கொண்டிருப்பவனால் நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை. கத்திக் கத்திப் பேசி ஓய்ந்து மீண்டும் கட்டிலில் சாய்ந்துப் படுத்துவிட்டான்.
“இனி தூங்கிடுவாருத்த… நான் கிளம்பறேன். வெளியே எங்கேயும் போகவிடாதீங்க” – என்று கூறிவிட்டு தன்னுடைய புத்தகப் பையுடன் வெளியேறினாள்.
மாலை ஆறு மணி… தமிழி கல்லூரிப் பேருந்திலிருந்து இறங்கிப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தாள். அதற்குள் எங்கிருந்தோ புயல் வேகத்தில் உள்ளே வந்த ரவி அவளுக்குக் குறுக்கே வண்டியை நிறுத்தி அவளை வழி மறித்தான்.
“யார்டி நீ? எனக்கு அத்தை மகளா இல்ல மாமன் மகளா? எதுக்குடி என் பின்னால வால் பிடிச்சுகிட்டுத் திரியிற?” – ஆக்ரோஷமாகப் பேசினான்.
அவள் பதில் பேசவில்லை. லேசான போதையில் இருக்கிறான் என்பதை அவனுடைய வியர்த்திருந்த முகமும் சிவந்திருந்த விழிகளும் காட்டிக் கொடுத்தன.
“வேண்டாம் வேண்டாம்னு ஒதுங்கிப் போனாலும் வெட்கம் இல்லாம ஆம்பள பின்னாடி அலையிறியே அசிங்கமா இல்ல?”
“வாயைத் திறந்துப் பேசுடி… நான் இவ்வளவு தூரம் பேசிகிட்டு இருக்கேன். சூடு சுரணை இல்லாதவ மாதிரி அப்படியே நிக்கற? உப்புப் போட்டுத் தானே சாப்பிடற? இல்ல காது கீது எதுவும் தீஞ்சுப் போச்சா?”
அப்போதும் அவள் பதில் பேசவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அவர்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவன் போட்டச் சத்தத்தில் ஒரு சிலர் அவர்களை நெருங்கி வந்து “என்னம்மா பிரச்சனை…” என்று கூடக் கேட்டார்கள். அவர்களுக்குக் கூட அவள் பதில் சொல்லவில்லை. அவனுடைய முகத்திலிருந்து பார்வையை விளக்காமல் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘நிக்கறாப் பாரு மரம் மாதிரி…’ – அவன் பல்லைக் கடித்தான்.
“சொல்லேண்டி… கேக்கராங்கள்ள… நான் ஒரு பொருக்கி… குடிச்சிட்டு வந்து உன்னை வழி மறிச்சு உன் கையைப் பிடிச்சு இழுத்தேன்னு சொல்லேண்டி… ஏன் இப்படிச் சிலை மாதிரி நின்னு என் உயிரை எடுக்குற?”
அவன் பேசுகிற விதமும் அதற்கு அவள் பதில் சொல்லாமல் நிற்கிற பாங்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பதும் அதற்கும் மேல் அவர்களுக்குள் ஏதோ ஒரு விதத்தில் நெருக்கமான உறவிருக்கிறது என்பதும் அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது. அதனால் சமாதானப் பேச்சு வார்த்தையை அவன் பக்கம் திருப்பினார்கள்.
“தம்பி… இந்தப் பொண்ணப் பார்த்தாப் படிக்கிறப் பொண்ணாத் தெரியிது. என்ன பிரச்சனையா இருந்தாலும் வீட்டுக்குப் போயிப் பேசிக்கோங்கப்பா. இப்படி நடு ரோட்லச் சத்தம் போடாதீங்க”
“படிக்கிறப் பொண்ணா…! இவளா? ஹா… படிக்கிற வேலையை விட்டுட்டு மத்த எல்லா வேலையும் பார்ப்பா சார் இவ… இவளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. எனக்கும் இவளுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது. தேவையில்லாம என் விஷயத்துல அடிக்கடி மூக்கை நுழைக்கிறா. அது இருக்கக் கூடாதுன்னு சொல்லி வையுங்க. இல்ல… ஒரு கொலையோடு… இவளையும் சேர்த்து இன்னொரு கொலை செஞ்சுட்டுப் போயிட்டே இருப்பேன்” என்று அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே சமாதானம் பேசியவரிடம் கூறிவிட்டு வண்டியைத் திருப்பிக் கொண்டு போய்விட்டான்.
###
அன்று காலை ரவி கண்விழிக்கும் போதே அவனுடைய கட்டிலுக்கு வெகு அருகில் யாரோ அமர்ந்திருப்பது போல் உணர்ந்துத் தலையைத் திருப்பிப் பார்த்தான். தமிழிதான் ஒரு சேரில் அமர்ந்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய்… நீயா…!” – சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்தான். “ம்மா… ம்மா… எங்கம்மா போயித் தொலஞ்ச?” – சத்தம் போட்டான்.
“நான் உனக்கு அத்தை மகளும் இல்ல… மாமன் மகளும் இல்ல… என்னை யாருன்னே உனக்குத் தெரியாது… இல்ல?” – நிதானமாகக் கேட்டாள்.
“ஏய் நீ எதுக்குடி இங்க வந்த? வெளியே போ முதல்ல…”
“உனக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல… இல்ல?”
“உன்னை யாருடி உள்ளவிட்டது. ம்மா… ம்மா…”
“அத்தை வீட்ல இல்ல…”
“உடனே திறந்த வீட்டுக்குள்ள நாயி நுழைஞ்ச மாதிரி நீ உள்ள பூந்துட்டியா? எதுக்குடி என் பின்னாடியே அலையிற?”
“நீ எதுக்குடா மூணு வருஷமா என் பின்னாடி அலஞ்ச?”
“அந்தப் பாவத்துக்குத் தான் இப்போ அனுபவிக்கிறேனே…”
‘என்னை லவ் பண்ணினது பாவமா!’ – அவள் மனம் வலித்தது.
“ஏண்டா இப்படி மாறிப் போய்ட்ட?” – பொங்கிவந்த துக்கத்தைத் தொண்டையில் தேக்கிக் கொண்டு கேட்டாள்.
அவளுடைய வேதனைப் படிந்தக் குரலை அவனுக்குக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. கண்களை இறுக்கமாக மூடித் திறந்தான்.
“போயிடு தமிழ்… என்னை விட்டுட்டுப் போயிடு. நான் உனக்கு வேண்டாம்” – நொந்து போன குரலில் கூறினான்.
“எனக்கு நீதான் வேணும்”
“நான் குடிகாரண்டி… பொறுப்பில்லாதவன். பொருக்கி… பைத்தியக்காரன்… கொலைகாரன்… எனக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம்”
“நடக்கட்டுமே… யாரு வேணான்னுச் சொன்னது? நீ குடி… கூத்தடி… யாரை வேணுன்னாலும் அடி… எத்தனை கொலை வேணும்னாலும் பண்ணு… எத்தனை வருஷம் வேணுன்னாலும் ஜெயிலுக்குப் போ… எப்போ வேணுன்னாலும் செத்துப் போ… உன்னை நான் தடுக்கல… ஆனா… அதுக்கு முன்னாடி என் கழுத்துல ஒரு தாலியைக் கட்டிட்டு நீ எங்க வேணாப் போ… என்ன வேணாச் செய்யி…” – உணர்ச்சிப் பெருக்கில் அவள் உடல் நடுங்கியது.
புயலடித்துக் கொண்டிருக்கும் ரவியின் மனதில் தென்றலை வீசச் செய்தது அவள் பேசிய வார்த்தைகள். அவன் கண்கள் கலங்கின.
“அப்படி என்னடி இருக்கு என்கிட்ட?”
“உன்கிட்ட ஒரு மண்ணும் இருக்க வேண்டாம்… நீ மட்டும் இருந்தாப் போதும்”
“என்னையத்தான் செத்துப் போகச் சொல்லிட்டியே” நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் முகத்தில் புன்சிரிப்புத் தோன்றியது.
“தாலியக் கட்டிட்டுத்தான் சாகச் சொன்னேன்…”
“நானே போயிட்டப் பிறகு நான் கட்டினத் தாலி மட்டும் எதுக்கு உனக்கு?”
“சாகர வரைக்கும் உன்னோட பொண்டாட்டியா வாழ்ந்துட்டுச் செத்துப் போகணும். அதுக்குத்தான்” – உறுதியாகச் சொன்னாள்.
கட்டுப்படுத்த முடியாமல் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. உறுதியான அவன் மனம் உடைந்து போனது. அவளை இழுத்துத் தன்னோடு இறுக்கிக் கொண்டான். அவளும் அவனுடன் இணை’ந்து கொண்டாள். உணர்ச்சியின் பிடியிலிருந்த ஈரிளம்(ஈர் இளம்) உள்ளங்களும் பிரிய முடியாமல் ஒன்றோடொன்றுப் பின்னிக் கொண்டன. நொடிகள் நிமிடங்களாகி… நிமிடங்கள் பல கடந்து கொண்டிருந்த தருணத்தில் அவன் செவிகளில் அந்தக் குரல் கேட்டது.
“ஐயோ… தம்பி… புடிடா… தூக்குடா… முடியலடா… ரவி… தம்பி… தூக்கு… தூக்கு…” அழுகையினூடே கேட்ட அந்தக் குரலில் ரவி விதிர்விதிர்த்துத் தன்னிலைக்கு மீண்டான். தன்னை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு நின்றத் தமிழியை விளக்கித் தள்ளினான்.
“போடி இங்கிருந்து… இன்னொரு தரம் என் முன்னாடி வந்த… உன்னை வெட்டிப் போட்டுடுவேன்…” – காட்டுத்தனமாகக் கத்தினான்.
அவன் பிடித்துத் தள்ளிய வேகத்தில் தரையில் சென்று விழுந்த தமிழி ‘எப்போதாண்டா மாறுவ?’ – என்கிற கேள்வியைத் தாங்கியபடி அவனை மிரட்சியும் துக்கமுமாக நோக்கினாள்.
Comments are closed here.