Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-11

அத்தியாயம் – 11

 

“வாவ்… சீனியர்… எங்களை போட்டோ எடுத்தீங்களா…?” – பூர்ணிமாவின் உற்சாக குரலில் ஆண்கள் இருவருமே அதிர்ந்தார்கள்.

 

‘என்ன சம்மந்தம் இல்லாம ரியாக்ஷன் கொடுக்கறா?’ – சித்தார்த் பூர்ணிமாவை விசித்திரமாகப் பார்த்தான்.

 

‘இவளுக்கு என்ன மண்டை குழம்பிடுச்சா? இல்ல நம்மள ஜோக்கராக்க பார்க்கிறாளா?’ – சதீஷ் எரிச்சலானான்.

 

“உங்களை மட்டும் போட்டோ எடுக்கல… நீங்க அடிச்ச கூத்தையும் சேர்த்துத்தான் போட்டோ எடுத்திருக்கேன் பூரணி… சாரி… பூசணி… உனக்கு அப்படி கூப்பிட்டா தான் பிடிக்கும்ல?” – நக்கலாகப் பேசினான்.

 

“பூசணியா!” – பல்லைக் கடித்த சித்தார்த் “ஏய்… மரியாதையா பேசு. இல்ல மூஞ்சி முகவாயெல்லாம் பேந்துடும்.” – கடுமையாகப் பேசினான்.

 

“அட எதுக்கு மச்சி இவ்வளவு கோவப்படர? இப்போ என்ன நான் நம்ம பூசணியோட மரியாதை பற்றி குறைவா பேசிட்டேன். நாளைக்கு நம்ம காலேஜே பேசப் போதுதே! எம்எல்ஏ பொண்ணோட மானம்… மரியாதை… கேரக்டர் எல்லாத்தை பற்றியும் அலசி ஆராயப் போகுதே! அப்போ என்ன செய்வ?”

 

“என்னடா சொல்ற?” – இறுகியக் குரலில் கேட்டான் சித்தார்த்.

 

“இந்த செல் போன்ல இருக்க போட்டோஸ் எல்லாம் நாளைக்கு காலேஜ் நோட்டிஸ் போர்ட்ல இருக்கும்னு சொல்றேன்” – கையிலிருக்கும் போனை ஆட்டிக் காட்டினான் சதீஷ்.

 

“சீனியர்… நிஜமாவா சொல்றீங்க?” – பூர்ணிமா மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாகக் கேட்டாள்.

 

“உனக்குச் சந்தேகமா இருந்தா நாளைக்கு காலையில நோட்டிஸ் போர்டை பார்த்த பிறகு தெரிஞ்சுக்கோ பூரணி…”

 

“ஆஹா… செம்ம மேட்டரா இருக்கே..! சீனியர் நீங்க ஒண்ணு செய்யுங்க… உங்க போன்ல இருக்க போட்டோஸ் எல்லாம் கிளியரா இருக்கான்னு ஒரு தரம் செக் பண்ணிக்கோங்க. இல்லன்னா இன்னும் ரெண்டு மூணு போஸ் கொடுக்கறோம்… அதையும் கேப்ச்சர் பண்ணி பப்ளிசிட்டி பண்ணிடுங்க. நச்சுன்னு நாலே போட்டோ… நல்ல கிளியர் பிரிண்ட்டா இருக்கணும்… அதை பார்த்ததும் அப்படியே காலேஜே பத்திகிட்டு எறியணும்… ஓகேவா சீனியர்?” – என்று சதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினாள்.

 

“இப்படி வா சித்து… கையை நல்லா மேல போட்டுக்க. அப்போதானே எஃபெக்ட் நல்லா இருக்கும்” – என்று சித்தார்த்துடன் நெருங்கி நின்றுக் கொண்டு, “இந்த போஸ் ஓகேவா சீனியர்?” என்று சதீஷிடம் ஐடியா கேட்டதோடு நிறுத்தாமல் “இல்லன்னா இது ஒகேவான்னு பாருங்க…” என்று நுனி காலில் எக்கி நின்று சித்தார்த்தின் கன்னத்தில் இதழ் பதிக்கவும் செய்தாள்.

 

அவள் செய்துக் கொண்டிருந்த அழும்பில் அரண்டு போன சித்தார்த் “ஏய்… லூசு… என்னடி செய்ற? அவனே போட்டோ எடுத்து வச்சுகிட்டு நம்மள ப்ளாக் மெயில் பண்ணிக்கிட்டு இருக்கான். அவனுகிட்ட போயி இன்னும் ரெண்டு போஸ் சேர்த்து கொடுத்துக்கிட்டு இருக்க?” – கடுகடுத்தான்.

 

“என்ன சித்து நீ? சீனியர் நமக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கார்ன்னு புரியாம ப்ளாக் மெயில்… அது இதுன்னு…” என்று சித்தார்த்திடம் கடிந்து கொண்டதோடு “நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க சீனியர்” என்று சதீஷிடமும் சமாதானமாக பேசிவிட்டு, அவள் செயலுக்கான விளக்கத்தை சொன்னாள்.

 

“சித்து… என்னைக்கு இருந்தாலும் உன்னை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். இந்த விஷயத்தை நானா அப்பாகிட்ட போயி சொன்னா, மேட்டரை கமுக்கமா வீட்டுக்குள்ளேயே முடிச்சு நம்மளை பிரிச்சாலும் பிரிச்சிடுவார். சதீஷ் சீனியர் மாதிரி யாராவது நம்ம மேட்டரை பப்ளிசிட்டி பண்ணினா அது நியூஸ் ஆயிடும். அப்புறம் நம்மளை யாராலையும் பிரிக்க முடியாது. என்ன… இன்னும் நாலு வருஷத்துக்கு அப்புறம் நடக்க வேண்டிய கல்யாணம் இப்போவே நடந்துடும். அது கூட எனக்கு வசதிதான். எக்ஸாம் முடிஞ்ச பிறகு உன்னை டெய்லி பார்க்க முடியாதேங்கற கவலைக் கூட இருக்காது பாரு” – சித்தார்த்தை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்.

 

சதீஷின் முகம் இஞ்சியை மென்றுத் தின்ற மந்தி போல் மாறியது.

 

“நீங்க கண்டினியூ பண்ணுங்க சீனியர்…” – அவனை ஊக்கப் படுத்தினாள்.

 

அவனோ அவள் சித்தார்த்துடன் ஒட்டிக் கொண்டு இழைவதைக் காண சகிக்காமல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

 

“அடடா… என்ன ஆச்சு சீனியர்…? கொஞ்சம் ஓவரா போயிடிச்சா…? ஓகே… ஓகே… இப்போ பாருங்க… இது ஓகேவா..? சீனியர்… திரும்பி பாருங்க சீனியர்…” – அவனை மேலும் வெறுப்பேற்றினாள்.

 

‘அடிப்பாவி… பழிவாங்க வந்த என்னை வேறமாதிரி வேலை பார்க்க வச்சிருவா போலருக்கே…!’ – மெல்ல அங்கிருந்து நழுவினான்.

 

“சீனியர்… ஹலோ… எங்க ஓடுறீங்க? சீனியர்…” – பூர்ணிமாவின் குரல் அவனைத் துரத்தியது.

 

“ஏய்… அவன் போகட்டும் விடுடி ரௌடி…” – சித்தார்த் சிரித்தான்.

 

“ச்ச… இப்படி ஏமாத்திட்டாரே…! இப்போ யாரு நம்மள போட்டோ எடுக்கறது?” – வருத்தத்துடன் கேட்டாள்.

 

“கொழுப்புடி உனக்கு… நம்ம போட்டோ அவன்கிட்ட சிக்கியிருக்கு. அவன்பாட்டுக்கு எக்கு தப்பா எதையாவது செஞ்சு வச்சுட்டான்னா என்ன செய்றது?”

 

“என்ன வேணா செஞ்சுட்டு போகட்டும் எனக்கு கவலை இல்ல…”

 

“அப்போ நாளைக்கே என்னை கல்யாணம் பண்ணிக்க நீ ரெடியா?”

 

“இன்னிக்கே ரெடி… கையில தாலி இருந்தா இப்போவே என் கழுத்துல கட்டு… இப்படியே உன் பின்னாடி வந்தடறேன்…” – விளையாட்டு போல் சொன்னாலும் அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்பதை உணர்ந்த சித்தார்த்தின் மனம் நெகிழ்ந்தது.

 

###

 

“ரிம் ஜிம்… ரிம் ஜிம்… ரிம் ஜிம்… ரிம் ஜிம்…” – தன் கைபேசியில் ஒலித்த பூர்ணிமாவின் குரலைக் கேட்டதும் சமையலறையில் தோசை வார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தின் முகத்தில் பலப் எரிந்தது. ஸ்டவ்வை அணைத்துவிட்டு வேகமாக ஹாலுக்கு பாய்ந்து வந்தவன் கைபேசியை எடுத்து இயக்கி காதில் வைத்த நொடி “ஹாய் சித்து….” என்கிற அவளுடைய உற்சாகமான குரல் அவனை வரவேற்றது.

 

“குட் மார்னிங் பூசணி…”

 

“பேட் மார்னிங்டா… இன்னையோட சிக்ஸ்டி டேஸ் ஆச்சு உன்னை பார்த்து…” செமெஸ்டர் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு சென்றிருந்த பூர்ணிமா அலுத்துக் கொண்டாள்.

 

“நீ தானே என்னை இங்க தனியா விட்டுட்டு ஓடிப் போன? இப்ப என்ன பெருசா உருகுற?”

 

“சரி சரி… கோவிச்சுக்காதடா… இன்னும் ஒரே வாரம்… லீவ் முடிஞ்சிடும். உன்னை பார்க்க ஓடி வந்துடுவேன்… ஓகே?”

 

“இன்னும் ஒரு வாரமா! அதெல்லாம் முடியாது… நீ நாளைக்கே கிளம்பி வந்துடு…”

 

“நாளைக்கேவா? முடியாது முடியாது…” – அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே காலிங் பெல் சத்தமிட்டது.

 

“முடியாதா…! ஏன்?” – கேட்டுக் கொண்டே அவன் கதவை திறந்த நொடியில் “இன்னிக்கே வந்துட்டேன்….” என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு துள்ளிக் குதித்தவள், உற்சாக மிகுதியில் அவனை இழுத்துக் கொண்டே ‘லாலலா… லாலலா…” என்று பாட்டும் நடனமுமாக ஆர்ப்பாட்டத்துடன் உள்ளே நுழைந்து சோபாவில் பொத்தென்று விழுந்தாள்.

 

புயல் வேகத்தில் உள்ளே நுழைந்து தன்னை நிலைகுலையச் செய்துவிட்ட பூர்ணிமாவின் வருகை கனவா நிஜமா என்பதைக் கூட ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகே உணர்ந்த சித்தார்த், தான் இருக்கும் நிலையை உணர்ந்து அவளிடமிருந்து விலகி அமர மேலும் சில நிமிடங்கள் ஆனது. அதுமட்டுமா…? எப்படி ஊருக்கு சென்ற பூர்ணிமா எப்படி திரும்பி வந்திருக்கிறாள்….! – சித்தார்த் ஆச்சர்யத்துடன் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

 

எப்பொழுதும் ஜீன்சும் டாப்சுமாக திரிகிறவள் இன்று சுடிதாரில் வந்திருந்திருக்கிறாள். போதாக் குறைக்கு தோள்பட்டை வரை முடி வளர்த்து சென்டர் கிளிப் போட்டதோடு, நெற்றியில் சின்னதாக ஒரு பொட்டு கூட வைத்திருக்கிறாள். என்ன ஆச்சு இவளுக்கு!

 

“பூசணி… இது நீ தானா?” – அவனுக்குள் ஏற்பட்டிருந்த அதிர்வும் இன்ப படபடப்பும் இன்னமும் கூடக் குறையவில்லை.

 

“நானேதான்… ஏனிந்த சந்தேகம் தலைவா?”

 

“சேலத்துல இருந்தவ இங்க எப்படிடி திடீர்னு வந்து குதிச்ச? அதோட… ரெண்டே மாசத்துல ஆளே மாறிப் போயிட்ட?”

 

“ஏன்? பிடிக்கலையா? நீ தானே அன்னைக்குச் சொன்ன… முடி வளர்த்து… பொட்டெல்லாம் வச்சு பொண்ணு மாதிரி இருந்தா ரொம்பப் பிடிக்கும்னு… அதான்… உனக்கு ஒரு சர்ப்ரைசா இருக்கட்டுமேன்னு ஊருக்கு போய்ருந்தப்போ ஹேர் கட் பண்ணவே இல்ல… எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா?” – ஆசையாகக் கேட்டாள்.

 

“ம்ம்ம்… அழகா இருக்கு. பட் முன்னாடியும் நீ ரொம்ப அழகுதான் பூசணி. நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும். அதனால நீ எப்பவும் போலவே இரு. ஓகே?”

 

“என்னடா குழப்பற? இப்படி இருந்தா அப்படி இருன்னு சொல்ற… அப்படி இருந்தா இப்படி இருன்னு சொல்ற… இப்போ நான் ஹேர் வளர்க்கவா இல்ல கட் பண்ணவா? ரெண்டுல எதையாவது ஒண்ண சொல்லு…”

 

“எது உனக்குப் பிடிச்சிருக்கோ அதை செய்யி…”

 

“எனக்கு பல்சர் வண்டி ஓட்டிகிட்டு… கபடி விளையாடி கையை காலை உடச்சுக்கறதுதான் பிடிச்சிருக்கு. செய்யட்டுமா?” – முறைத்தாள். அவனுக்கு சிரிப்பு வந்தது.

 

“நீ எதுவும் செய்ய வேண்டாம் தாயே! இப்படியே இரு… அதுசரி.. இந்த வீட்டு அட்ரெஸ் உனக்கு எப்படி தெரிஞ்சுது?”

 

“ஆமாம்… இது பெரிய கம்பர் வரஞ்ச சித்திரம். எங்களுக்கு தெரியாம போறதுக்கு… போடா… போடா… போயி ஜில்லுன்னு ஒரு ஜீஸ் கொண்டுவா… வீட்டுக்கு வந்திருக்க கெஸ்ட்டை எப்படி கவனிக்கரதுன்னு கூடத் தெரியல. கேள்வி கேட்க வந்துட்டான்”

 

“வாய் கொழுப்பு மட்டும் உனக்குக் குறையவே இல்லடி… நீ என்ன இந்த வீட்டுக்கு கெஸ்ட்டா? கெஸ்ட்னா கூப்பிட்டா தான் வரணும். இப்படிக் கூப்பிடாமலே உள்ள வந்து உட்கார்ந்துகிட்டு அடாவடி பண்ணக் கூடாது”

 

“நீதான் வேலை கெடைச்சதைக்கூட என்கிட்ட சொல்லாம இப்படி ஊருக்கு ஒதுக்குப் புறமா வந்து ஒளிஞ்சுகிட்டு கிடக்கறியே… நீ எப்படி என்னை வீட்டுக்கு கூப்பிடுவ?” – மனத்தாங்கலுடன் கேட்டவள் முகத்தை திருப்பிக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்று குளிர்சாதனப் பெட்டியை திறந்தாள்.

 

‘அடக் கடவுளே! வேலை விஷயமும் தெரிஞ்சு போச்சா! யார் அந்தத் துரோகி!’ – மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவளை நெருங்கி பின் பக்கத்திலிருந்து அணைத்து “நீ மட்டும்தான் எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைப்பியா?” என்று கிசுகிசுத்தான்.

 

இது சரியா தவறா என்பதை தாண்டி சிறு அணைப்புகள் செல்ல முத்தங்களெல்லாம் இப்போது அவர்களுக்குள் சகஜமாகிவிட்ட ஒன்று என்பதால் பூர்ணிமா இயல்பாகக் கையிலிருந்த கூல்ட்ரிங்க்சை குடித்துவிட்டு நிதானமாக அவன் பக்கம் திரும்பினாள்.

 

“சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கறவன் அதை ஒழுங்கா செயல்படுத்தணும். இப்படிச் சொதப்பிட்டு வழியக் கூடாது…” – அவன் நெஞ்சில் கைவைத்து பின்னுக்குத் தள்ளிவிட்டுவிட்டு வீட்டைச் சுற்றி பார்த்தாள்.

 

“சொதப்பினது நான் இல்லடி… உன்கிட்ட என்னோட விஷயத்தையெல்லாம் போட்டுக் கொடுத்துகிட்டு இருக்கானே அந்த எட்டப்பன். அவன்தான்…” – அவளோடு சேர்ந்து நடந்தபடி பேசினான்.

 

“கதிர் அண்ணனையா சொல்ற?” – சர்வ சாதாரணமாக தனக்கு உதவி செய்தவனையே போட்டுக் கொடுத்துவிட்டாள்.

 

“நினச்சேன்… அந்தப் பயல் தானா? கவனிச்சுக்கறேன் அவனை”

 

“அதெல்லாம் அப்புறம் கவனிச்சுக்கோ. இப்போ எதுக்கு வீட்டை மாத்தினேன்னு சொல்லு? கதிர் அண்ணன் கூட இப்போ உன் கூட இல்ல போலருக்கு?”

 

“ம்ம்ம்… நான் ஆபீஸ் பக்கத்துல வீடு பார்த்துகிட்டு வந்துட்டேன். அவனுக்கு பழைய வீடுதான் வசதின்னு சொல்லி அங்கேயே இருக்கான்”

 

“வீடு நல்லா வசதியா தான் இருக்கு… எப்போ என் கழுத்துல தாலியை கட்டி குடும்பஸ்த்தன் ஆக போற?”

 

“நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லு… நாளைக்கே குடும்பத்தோட வந்து உன் அப்பாகிட்ட பொண்ணு கேட்கறேன்”

 

“பொண்ணு கேக்கறதா? அதெல்லாம் சரிவராது. பேசாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா? அதுதான் ஈஸி…” என்று அவனை பார்த்து கண்ணடித்தாள்.

 

அவனோ அவளுடைய குறும்புப் பேச்சை ரசிக்காமல் பல்லைக் கடித்தான். “ஏன்…? நானெல்லாம் பொண்ணு கேட்டா உங்கப்பன் கொடுக்க மாட்டான்னு நீயே சொல்லிடுவ போலருக்கு? என்னை பார்த்தா அவ்வளவு இளக்காரமா இருக்கா உனக்கு?”

 

“சித்து… அப்பாவை அவன் இவன்னு பேசாதன்னு உனக்கு எத்தனை தடவ சொல்லியிருக்கேன். படிச்சுகிட்டு இருக்க பொண்ணை வந்து பெண் கேட்டா எந்த அப்பாதான் ஒத்துக்குவார்? கொஞ்சமாவது யோசிக்க மாட்டியா?” – அவளுக்கும் கோபம் வந்தது.

 

“அப்படின்னா இன்னும் மூணு வருஷத்துக்கு என்கிட்ட கல்யாணத்தைப் பற்றி பேசாத…” – என்று கூறிவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தவனுடைய கடுமை சற்றும் குறையவில்லை.

 

‘இவனோட இது ஒரு தொல்லை… ஆஊன்னா கோச்சுகிட்டு போய் தனியா உட்கார்ந்துடுவான்…’ – என்று நினைத்துக் கொண்டே வந்து அவனோடு ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள். அவனுடைய கையைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு “என்ன சித்து…? அப்பா உனக்குப் பெண் கொடுக்க மாட்டார்னு நான் சொன்னேனா? எதுக்கு இப்படி காம்ப்ளெக்ஸா ஃபீல் பண்ணற?” என்று அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.

 

“காம்ப்ளெக்ஸா…! எனக்கா! வேல்முருகன் பெரிய மகாராஜன். அவனோட பொண்ணு நீ பெரிய இளவரசி. உன்னை கல்யாணம் செய்துக்க அலையற வெட்டிப் பயல் நான்… எனக்கு காம்ப்ளெக்ஸ்… இல்ல?” – அவளிடம் சிக்கியிருந்த தன் கையை உருவிக் கொண்டு வெகுண்டு எழுந்தான்.

 

 




Comments are closed here.

You cannot copy content of this page