Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-13

 

அத்தியாயம் – 13

 

‘அவசரப் பட்டுவிட்டோம்… அவளுக்குத்தான் புரியவில்லை. நம் புத்திக்கு என்ன கேடு வந்தது?’ – சித்தார்த்தின் மனம் குறுகுறுத்தது. நடந்து முடிந்துவிட்ட தவறை சரி செய்யும் வழி தெரியாத நிலையில் மனசாட்சி அவனைக் குத்தியது.

 

‘ஆனால் அவள் ஏன் அப்படிச் செய்தாள்! எப்பொழுதும் போல் பதிலுக்குப் பதில் சண்டைப் போடாமல் எதற்காக எல்லை மீற தூண்டினாள்…! ‘ – ஹோட்டலிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்த உணவு வகைகளை பேப்பர் டப்பாவிலிருந்து பாத்திரத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தவன், ஏதோ சிந்தனையுடன் சோபாவில் அமர்ந்திருக்கும் பூர்ணிமாவைத் திரும்பிப் பார்த்தான். தனித்து விடப்பட்ட குழந்தை போல் பாவமாக அமர்ந்திருப்பவளைக் கண்டதும் அவன் மனதைப் பிசைந்தது.

 

அவசரமாக உணவை டைனிக் டேபிளுக்குக் கொண்டு வந்து வைத்துவிட்டு “சாப்பிட வா பூரணி…” என்றான்.

 

அவள் கண்களில் ஏதோ கேள்வியுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். “சாப்பிட வா…” – அவன் மீண்டும் அழைத்தான்.

 

பதில் பேசாமல் எழுந்துச் சென்று ஒரு சேரில் அமர்ந்தாள். அன்பு பொங்கும் மனதுடன் சித்தார்த் அவளுக்குப் பரிமாறினான்.

 

“நீயும் சாப்பிடு சித்து…”

 

“ம்ம்ம்… இதோ…” – அவள் பேச்சைத் தட்டாதவனாகத் தனக்கும் ஒரு தட்டை எடுத்துப் பரிமாறிக் கொண்டு அமர்ந்து ஒரு பிடி உணவை எடுத்து அவன் வாயில் வைத்த தருணம், அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமா கேட்டாள்… “இப்போ என்னை நம்புறியா சித்து?”

 

அவ்வளவுதான்… வாயில் வைத்த உணவுத் தொண்டைக் குழிக்குள் இறங்காமல் சிக்கிக் கொண்டது.

“பூர்ணி!” – அதிர்ச்சியில் பேச்சு வராமல் திகைத்து விழித்தான்.

 

“உன்னைத் தவிர வேறு யாருக்கும் என் வாழ்க்கையில இடம் இல்ல சித்து… இனி உன் மனசு அமைதியா இருக்குமா?” – அவன் மீதான அக்கறை மட்டுமே இருந்தது அவள் குரலில்.

 

‘என் நம்பிக்கைக்காகவா! என் மன அமைதிக்காகவா!’ – இதயத்தில் கூர்மையான ஈட்டிப் பாய்ந்தது போல் துடித்துப் போனான். கண்களில் கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்தது.

 

“சித்து… என்ன ஆச்சு?” – அவனுடைய கண்ணீரைக் கண்டதும் தவிப்புடன் கையை உதறிவிட்டு எழுந்த பூர்ணிமா அவனுக்கருகில் வந்ததும் அவள் இடுப்பை வளைத்துப் பிடித்துக் கொண்டு குலுங்கி அழுதான்.

 

“சாரி… சாரி பூரணி… நான் தப்புப் பண்ணிட்டேன்… ரொம்பப் பெரிய தப்புப் பண்ணிட்டேன்…” – புலம்பினான்.

 

அதுவரை அவளிடமிருந்த ஒருவித இறுக்கம் அவனுடைய கண்ணீரைக் கண்டதும் கரைந்து போய்விட்டது.

 

“சித்து… ப்ளீஸ்… அழாத… சொல்றேன்ல… சித்து… என்னடா… எதுக்கு இப்படி அழற?” – அவன் தலையைக் கோதி, முதுகைத் தடவிச் சமாதானம் செய்ய முயன்றாள்.

 

ஆனால் அவன் சமாதானம் ஆகவில்லை. சிறு பிள்ளை போல் ஆத்திரம் தீரும் வரை அழுது ஓய்ந்தவன் மெல்ல நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். கோவைப் பழம் போல் சிவந்திருந்த அவன் கண்கள் மீண்டும் கலங்கின.

 

“என்னடா… இப்போ என்ன நடந்து போச்சு? எதுக்கு இவ்வளவு வருத்தப்படற?” – ஆதரவுடன் அவன் முகத்தை வருடியபடிக் கேட்டாள்.

 

அவளுடைய அந்த அன்பு அவனை மேலும் வருத்தியது. “பூர்ணி… நாம எங்கேயாவது போயிடலாமா… யாருக்கும் தெரியாம… யார் கண்ணுலையும் படாதக் கண்காணாத தூரத்துக்கு… நாம ரெண்டு பேர் மட்டும்… போயிடலாம் பூர்ணி…” – கெஞ்சினான்.

 

எதற்காக இவன் இப்படித் தவிக்கிறான். யாருக்குப் பயப்படுகிறான்… அல்லது எதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறான்! அவளுக்குப் புரியவில்லை.

 

“ஓடிப் போகலாமான்னுக் கேக்குறியா சித்து?” – புன்சிரிப்புடன் கேட்டாள்.

 

“ஆமாம்… வா… நாம எங்காவது ஓடிப் போயிடலாம். நமக்கு இந்த ஊர் வேண்டாம்… சித்தார்த் பூர்ணிமாங்கர அடையாளம் வேண்டாம். சொந்தபந்தம் எதுவும் வேண்டாம்… எனக்கு நீ… உனக்கு நான்… அது மட்டும் போதும்…” – தீர்மானமாகச் சொன்னான்.

 

“ஏண்டா… இதே வார்த்தயக் காலையில நான் சொன்னதுக்கு என்னென்ன ஆர்ப்பாட்டம் பண்ணின? இப்போ… நீயே இப்படிச் சொல்ற?” – அவள் இப்போது வெளிப்படையாகவே சிரித்தாள்.

 

உச்சந்தலையிலடித்தது போல் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளி அவனுக்கு உரைத்தது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் பதட்டத்துடன் அவளைப் பார்த்தான்.

 

“என்னடா? எதுக்கு இப்படி முழிக்கற?”

 

“நீ சின்னப் பொண்ணு பூர்ணி… உனக்கு நான் தப்புப் பண்ணிட்டேன்…” –

 

“நான் ஒண்ணும் விபரம் தெரியாத குழந்தை இல்ல… எனக்கு எல்லாம் தெரியும். நீதான் சின்னப் பிள்ளை மாதிரி தேவையில்லாம மனசப் போட்டுக் குழப்பிக்கற. இந்தத் தாலி கல்யாணமெல்லாம் ஜஸ்ட் ஒரு சம்பிரதாயம்தான்டா… அதைத் தாண்டி நம்ம மனசுக்குத் தெரியாதா…? உனக்கு நான்… எனக்கு நீன்னு? அப்புறம் எதுக்காக இந்தப் பயம் வருத்தமெல்லாம்? பேசாமச் சாப்பிடு…” – என்று அவனுக்கு எடுத்துக் கூறி சமாதானம் செய்து அவனைச் சாப்பிட வைத்தாள்.

 

அப்போதைக்குச் சற்றுத் தெளிந்தாலும் அதன் பிறகு அடிக்கடி அவன் மனம் குற்ற உணர்ச்சியில் சிக்கிக் கொண்டு தவிக்கும். மனசாட்சிக் கேள்விக் கேட்கும் போதெல்லாம் உறக்கம் வராமல் தவிப்பான். அவளுடன் ஓட்டிப் பழகவும் முடியாமல் விலகிச் செல்லவும் முடியாமல் ஒரு கூட்டுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்வான்.

 

வாரம் முழுக்கக் காத்திருந்து சனி ஞாயிறுகளில் அவனைச் சந்திக்க அவனுடைய குடியிருப்பிற்கு ஓடி வருகிறவளுக்கு அவனுடைய விலகலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனைப் பழையபடி உற்சாகமும் அடாவடித்தனமும் கொண்டவனாக மாற்ற பல உக்திகளைக் கையாண்டுப் பார்த்துத் தோற்றுப் போனாள். கடைசியில் முள்ளை முள்ளால் எடுப்பது போல் நீயும் நானும் வேறல்ல… இருவரும் ஈருடல் ஓருயிர் என்று அவனோடு ஒன்றாகக் கலந்துவிடுவாள். இப்படியே அவர்களுடைய வாழ்க்கைத் தொடர்ந்தது.

 

ஆரம்பத்தில் அவர்களுடைய உறவு நெறிமுறைகளற்றுத் தடம் புரண்டுப் போனதில் வெகுவாய் வருந்தியவன்… தன்னவளின் மரியாதையைக் குலைத்துவிட்டோம் என்று துன்பப்பட்டவன்… அப்பாவிப் பெண்ணைப் பயன்படுத்திக் கொண்டோம் என்கிற குற்ற உணர்ச்சியில் தவித்தவன் போகப்போக இயல்பாகிவிட்டான். அவர்களுடைய புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்டு அதில் வாழப் பழகிவிட்டான்.

 

இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் அவள் இல்லாமல் அவனால் அந்த வீட்டில் தனித்து இருக்க முடிவதில்லை. ஏதாவது ஒரு வாரம் அவள் வரவில்லை என்றாலும் அவன் விடமாட்டான். விடுதிக்குச் சென்று கட்டாயப்படுத்தி அவளை அழைத்துக் கொண்டு வந்தால்தான் அவனுக்கு நிம்மதியாக இருக்கும். அவளுக்காக அவன் எதையும் செய்தான்… அவனுக்காக அவள் எதையும் விட்டுக்கொடுத்தாள். தங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்கிற நினைவே அவர்கள் இருவருக்கும் இருக்கவில்லை. ஒருவர் மீது ஒருவர் கொண்ட அதீதக் காதலினால் உலகத்தை மறந்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

###

 

“வணக்கம்… என் பேர் ராதாகிருஷ்ணன். தமிழியோட அப்பா…”

 

“சொல்லுங்க… என்ன விஷயம்?” – வாசலிலியே நிற்க வைத்துக் கேட்டான் ரவி.

 

“ரவி… அவரை உள்ள கூப்பிடுப்பா… நீங்க உள்ள வாங்க…” – மகனைக் கடிந்து கொண்ட பார்வதி வந்திருப்பவரை உள்ளே அழைத்தாள்.

 

வாசலை அடைத்துக்கொண்டு நின்ற ரவி தாயை முறைத்துக் கொண்டே விலகி வழிவிட்டான்.

 

“உட்காருங்க… ” – அவர் சோபாவில் அமர்ந்ததும் “என்ன சாப்பிட்ரிங்க?” என்று உபசரித்தாள்.

 

“நான் சாப்பிடறதுக்காக வரலம்மா…” –

 

“அப்போ வந்த விஷயத்தைச் சொல்லிட்டுக் கிளம்ப வேண்டியது தானே?” – முகத்திலடித்தது போல் பேசினான். அவர் முகம் சிவக்க அவனை முறைத்துப் பார்த்தார்.

 

“ரவி…!” – மகனை அதட்டிய பார்வதி “நீங்க சொல்லுங்க…” என்று அவரிடம் தணிந்துப் பேசினாள்.

 

“என் மகளுக்கு என்னம்மா வழி… அவ வாழ வேண்டிய பொண்ணு. உங்க பையனை மனசுல நினச்சுகிட்டுக் கல்யாணம் பண்ணினா அவரைத் தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருக்கா. ஆனா உங்க பையன்…?” – அவருடைய பார்வை அவனைக் குற்றம் சொன்னது.

 

“ஹலோ… உங்க பொண்ணு மனசுல நினைக்கறதுக்கெல்லாம் நாங்கப் பொறுப்பாக முடியாது. அவளைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்காக இங்க யாரும் தவம் கிடக்கல.. போயிச் சொல்லுங்க அவகிட்ட…” – எடுத்தெறிந்து பேசினான்.

 

“தெரியும் தம்பி… அவ மனசுல நினைக்கறதுக்கு நீங்க பொறுப்பாக முடியாது. ஆனா அவ மனசுல ஆசையை விதச்சதுக்கு நீங்க தானே பொறுப்பாகணும்?”

 

‘எல்லாரும் இதையே பிடிச்சுகிட்டுத் தொங்குங்கடா…!’ – அவன் பதில் பேச முடியாமல் பல்லைக்கடித்தான்.

 

“அடிக்கடி என் பொண்ணு உங்க வீட்டுக்கு வந்து போறா… பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க ?”

 

“அவளை ஒண்ணும் நாங்க வெத்தலைப் பாக்கு வச்சுக் கூப்பிடலங்க… அவளா வந்து தொலைச்சு எங்க உயிரை வாங்கறா. பார்க்கறவங்க அவளை மட்டும்தான் தப்பாப் பேசுவாங்களா? எங்களைப் பேச மாட்டாங்க?” – எரிச்சலுடன் வெடுவெடுத்தான்.

 

“இப்போ இவ்வளவு ரோஷப்படறவர் அவளை வீட்டுக்குள்ள அனுமதிச்சிருக்கக் கூடாதுத் தம்பி… அவகிட்ட ஆசைக் காட்டிப் பேசி மயக்கிவிட்டு இப்போ கைகழுவப் பார்த்தா என்ன அர்த்தம்?”

 

“ஆசைகாட்டிப் பேசினேனா? எப்போ? ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையெல்லாம் இப்போ பேசாதீங்க….”

 

“எப்போ நடந்த கதையா இருந்தா என்ன? அவ மனசைக் கெடுத்தது நீங்கதான். அதுனால அவ மனசை மாத்தற பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கு. ஒண்ணு அவ உங்கள மறந்துட்டு நாங்கப் பார்க்கற மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்துக்கணும்… இல்ல நீங்க அவளைக் கல்யாணம் செய்துகிட்டு ஒழுங்காக் குடும்பம் நடத்தணும். இது ரெண்டுல ஏதாவது ஒண்ணு நடந்தாகணும். அதை நீங்கதான் நடத்தணும்…”

 

 

“யோவ்… என்ன விளையாடறியா? உன் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதுன்னா அதைப் பற்றி அவகிட்டப் பேசு. எதுக்கு என் வீட்டுல வந்து உட்கார்ந்துகிட்டுப் பஞ்சாயத்து வச்சுகிட்டு இருக்க? நான் உன் மகளைக் கல்யாணம் பண்ணிக்கற ஐடியால இல்ல. ஒரு நாளும் அது நடக்காது. நீ கிளம்பு…”

 

“ரவி… பெரியவங்ககிட்ட மரியாதை இல்லாமப் பேசுறது என்னடாப் பழக்கம்?”

 

“ம்மா… நீ கொஞ்சம் சும்மா இரு…”

 

“வாயை மூடுடா…” – என்றைக்கும் இல்லாமல் பார்வதியின் குரலில் இன்று அதீதக் கடுமை இருந்தது. தன் மகனுக்கும் ஏதோ நல்லது நடந்துவிடும் போலிருக்கே என்கிற அவளாசை அவளைப் படபடக்க வைத்தது. ரவி பதில் பேசவில்லை.

 

“நீங்க உண்மையா தான் சொல்றீங்களா? ரவியைப் பற்றி எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறீங்களா?” – தமிழியின் தந்தையிடம் கேட்டாள்.

 

“தெரிஞ்சுதானம்மாப் பேசறேன். எனக்கு வேற வழி இல்ல. தமிழோட மனச என்னால மாத்த முடியல. ஊர்ல இருக்கறவங்கல்லாம் தப்பாப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இதை இப்படியே விட்டுட்டா என்னோட அடுத்தப் பொண்ணு வாழ்க்கையும் பாதிக்கப்படும். இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தாகணும்”

 

“ஆனா இவன்….” – முடிக்க முடியாமல் தங்கினாள்.

 

“உங்க பையனை என் பொண்ணு நம்பரா… அவளோட வாழ்க்கை… அவ எடுக்கற முடிவு… இதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்?”

 

பார்வதிக்கு ஒரு பக்கம் இவனை நம்பி ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பணயம் வைப்பதா என்கிற தயக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இவனை அவளால் மட்டுமே திருத்த முடியும் என்றும் நம்பினாள். அதனால்… “உங்க விருப்பம்ங்க… நீங்க என்ன முடிவு சொன்னாலும் எனக்குச் சம்மதம்…” என்றாள்.

 

அவர் ரவியைத் திரும்பிப் பார்த்தார். அவனோ இறுகிய முகத்துடன் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருந்தான். ஒரு பெருமூச்சுடன் “ஒரு நல்ல நாளை பார்த்துச் சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

 

சட்டென்று நிமிர்ந்த ரவி “அவசரப்பட வேண்டாம்… நான் இன்னொரு தடவ அவகிட்டப் பேசறேன்…” என்றான். அதற்கும் சம்மதம் என்பது போல் “பேசிப் பாருங்க… இப்போ நான் கிளம்பறேன்” என்று கூறி கைகுவித்து விடைபெற்றுக் கிளம்பினார்.




Comments are closed here.

You cannot copy content of this page