Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-14

அத்தியாயம் – 14

 

தமிழை பார்த்துவிட்டு வருகிறேன் என்று நேற்று வெளியே சென்றவன் இன்னும் வீடு திரும்பவில்லை. எங்குப் போயிருப்பான்! பார்வதிக்குப் பயம் பிடித்துக் கொண்டது. தமிழிக்கு போன் போட்டுக் கேட்கலாம் என்று நினைத்தால் அவளையும் பயமுறுத்த வேண்டாமே என்கிற எண்ணம் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் எவ்வளவு நேரம்தான் பொறுப்பது. இதோ போனை எடுத்துவிட்டாள்.

 

 

“ஹலோ… தமிழு…”

 

 

“சொல்லுங்கத்த…”

 

 

“எப்படிம்மா இருக்க?”

 

 

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்கத்த?”

 

 

“நான் இருக்கறது இருக்கட்டும்… அந்தப் பய நேத்து உன்கிட்ட என்னம்மா சொன்னான். உன்னைப் பார்க்க வந்தவன் திரும்ப வீட்டுக்கு வரவே இல்லையே…”

 

“என்னது! வீட்டுக்கு வரலையா!” – தமிழ் அதிர்ச்சியுடன் கேட்டாள்.

 

 

‘இதுக்குத்தான் இவகிட்டச் சொல்ல வேண்டாம்னு நினச்சேன்… அவனுக்கு ஒண்ணுன்னாத் துடிச்சுப் போயிடறா. இவளோட அருமை அவனுக்கு எங்க தெரியுது… ஹும்ம்ம்…’ – பெருமூச்சுடன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பார்வதி.

 

 

“அத்த… அவர் என்னைப் பார்க்க வந்தது நேத்துக் காலையில… பகல் முழுக்க வீட்டுக்கு வரலைன்னதும் எனக்கு ஒரு போன் பண்ணிச் சொல்லியிருக்க வேண்டியது தானே? இப்போ பாருங்க ஒரு பகல்… ஒரு நைட் முடிஞ்சுடிச்சு. எந்த நிலமையில எங்கப் போயி விழுந்துக் கிடக்கராரோ தெரியல… இல்லைன்னா யார்கிட்டையாவது வம்பிழுத்து அடிதடின்னு ஏதாவது…. கடவுளே…!” – அழுதுவிடுபவள் போல் பேசினாள்.

 

 

“அப்படியெல்லாம் இருக்காதும்மா. நீ மனசப் போட்டுக் குழப்பிக்காத. நேத்து உன்கிட்டப் பேசும் போது என்ன சொன்னான்”

 

 

‘என்னத்த சொல்லித் தொலச்சான்!’ – எரிச்சலுடன் எண்ணியவள் நேற்று தனக்கும் அவனுக்கும் நடந்த பேச்சு வார்த்தையை வருங்கால மாமியாரிடம் ஒப்புவித்தாள்.

 

 

“நீ வீண் பிடிவாதம் பிடிக்கிற தமிழ். காதல் கன்றாவின்னுச் சொல்லி உன்னோட வாழ்க்கையைக் கெடுத்துக்கப் பார்க்கற”

 

 

“என்னோட வாழ்க்கையை நான் எப்படி வேணாக் கெடுத்துகிட்டுப் போறேன். அதைப் பற்றி உனக்கென்ன கவலை?”

 

 

“நீ மட்டும் கெட்டு ஒழிஞ்சா எனக்கென்ன கவலை வரப் போகுது? ஆனா நீ என்னையும் சேர்த்து இல்ல சிக்கல்ல இழுத்துவிடப் பார்க்கற”

 

 

“ஆஹா… இவர் பெரிய கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்காரு. எங்களைக் கல்யாணம் பண்ணிக்கிரதுனாலதான் புதுசா சிக்கல்ல மாட்டிக்கப் போறாரு… ஆளையும் மூஞ்சியையும் பாரு…” – போதையில் மினுமினுக்கும் அவன் முகத்தைக் காதலுடன் பார்த்து ரசித்துக் கொண்டே கூறினாள்.

 

 

அவளுடைய பார்வை அவனைத் தடுமாறச் செய்தது. அவளுக்குப் புத்திச் சொல்லித் திருத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் அவன் பேச வந்தால், அவள் அவனைப் பார்வையாலேயே மயக்கிவிடுவாள் போலிருக்கிறதே! அவன் பயந்து போனான்.

 

 

“ஏய்…! இந்தப் பருகுறப் பார்வை… கிண்டல் பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம். இதுக்கெல்லாம் மயங்கற ஆள் நான் இல்ல…”

 

 

“உன்னை யாரு மயங்கச் சொன்னது. நீதான் பொழுதுக்கும் போதையில மயங்கிக் கெடக்குறியே! உனக்கு என்னைப் பார்த்து மயங்கரதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கப் போகுது”

 

 

“அதைதான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன். நான் மொடாக் குடிகாரனாயிட்டேன். உன்னோட அன்பு காதல் கீதலெல்லாம் காட்டி மயக்கி என்னைத் திருத்திரலாங்கறக் கனவுலயெல்லாம் கல்யாண முடிவ எடுத்துடாத. நான் கட்டுறத்தாலி உன் கழுத்துல ஏறிடிச்சுன்னா அப்புறம் வாழ்க்கை உனக்கு நரகம்தான்…”

 

 

“மெரட்டுரியாக்கும்?” – அலட்சியமாகக் கேட்டாள்.

 

 

“உண்மையைச் சொல்றேன்…”

 

 

“ஓஹோ… அப்போ சரிங்க ஹரிசந்திரரே! எனக்கு நீங்களே ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிருங்க. உங்களோட உண்மை நேர்மையெல்லாம் பாராட்டி எங்களுக்குப் பிறக்கிற குழந்தைக்கு உங்களோட பெயரையே வச்சிடறேன்…” – அவளுடைய சொல்லம்புகள் குறித் தவறாமல் அவன் நெஞ்சில் பாய்ந்தன.

 

 

‘உனக்கு மாப்பிள்ளை நான் பார்க்கனுமா! நீ… எவன் குழந்தைக்கோ என் பெயரை வைப்பியா! ராட்சசி…! எங்கேயாவது கண்காணாத இடத்துலப் போயி வாழ்ந்துத் தொலைடின்னுச் சொன்னா என்னையே மாமன் தானம் பண்ணச் சொல்லுவாப் போலருக்கே!’ – கடுப்பான ரவி “ஏய்… என்னை என்ன ப்ரோக்கர்னு நெனச்சியா? அப்படியே ஓங்கி ஒண்ணு விட்டேன்னு வச்சுக்கோ… முப்பத்திரெண்டும் உதுந்துடும் ஜாக்கிரதை…” என்று அடிக் குரலில் சீறினான்.

 

 

“ரோஷம் வருதோ…! லவ் பண்ணினப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்காமக் கழட்டிவிடத் துடிக்கற மானஸ்தனுக்கு ரோஷமெல்லாம் வரக்கூடாது சாமி…” – அவள் பேசிய நக்கல் மொழியில் அவனுடைய தன்மானம் அடிவாங்கியது. “ஏய்…” என்று அவளிடம் கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்தவன் சுற்றுப் புரத்தை மனதில் கொண்டு தன்னை அடக்கிக் கொண்டான்.

 

 

‘ஊர்ல இருக்க அப்பனெல்லாம் பொது இடத்துல எவனாவது தன் பொண்ணுகிட்ட வாலாட்டினா அரிவாளையும் சுளுக்கியையும் தூக்கிகிட்டு வருவானுங்க. ஆனா இவ அப்பன் மட்டும் கெடச்சுதுடா சாக்குன்னு… தேங்காப் பழத்தோட வெத்தலை பாக்கையும் சேர்த்துத் தாம்பூலத்துல அடுக்கிக்கிட்டுச் சம்மந்தம் பேசல்ல வந்துடுவான்…’ – கடுகடுவென்ற முகத்துடன் அவளை முறைத்தான். அவள் முகத்தில் புன்னகையின் சாயல் லேசாகத் தெரிந்தது.

 

 

‘இவ நம்மள வெறுப்பேத்திக் காரியத்தைச் சாதிக்கப் பார்க்கிறா…’ – சுதாரித்துக் கொண்டான்.

 

 

“ஆமாடி… உன்னோட குரங்கு மூஞ்சியைப் பார்க்கப் பிடிக்காமதான் கழட்டி விடப் பார்க்கிறேன். போயித் தொலைய வேண்டியது தானே? எதுக்கு நாயி மாதிரி என் பின்னாடியே அலையிற…” – கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து அவன் இதயத்தைக் குத்திக் கிழித்தான்.

 

 

அவள் அழுத்தக்காரிதான். தைரியசாலிதான். ஆனாலும் மனதுக்குப் பிடித்தவனுடைய வார்த்தையம்புகளின் வலி தாங்காமல் மனம் துவண்டுவிட்டாள். நீர் கோர்த்துக் கொண்ட கண்களுடன் அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

 

 

“ரோஜா பூவாய் இருந்த என் முகம் இப்போ உனக்குக் குரங்கு மூஞ்சியா ஆயிடிச்சுல்ல? செல்லக் குட்டியாய் இருந்த நான் இப்போ தெரு நாயாய் ஆயிட்டேன்ல…? பேசுடா… பேசு… இன்னும் என்ன வேணுன்னாலும் பேசு. ரெண்டுக் காதையும் நல்லாத் திறந்து வச்சுகிட்டு நீ பேசுற எல்லாத்தையும் கேட்டுக்குறேன். ஆனா உன்னோட பேச்சுக்கெல்லாம் பயந்து உன்னை விட்டுட்டு ஓடிப் போய்டுவேன்னு மட்டும் நினைக்காத. உயிரை விட்டாலும் விடுவேனே தவிர… இந்த ஜென்மத்துல உன்னை விடவே மாட்டேன்…” – தாரை தாரையாய் கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைக்கும் உணர்வு கூட இல்லாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

“ஏன்னுக் கேட்கறேன்…? அப்படி என்ன ‘டாஷு’க்கு நீ என்னை விடாமச் சுத்துற?” – சற்றும் இலக்கமில்லாமல் அதே கடுகடுத்த முகத்துடன் கேட்டான்.

 

 

“ஏன்னா நீதான் ரவி… நீ மட்டும்தான் என்னோட ரவி… உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்…” – கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கூறியவளின் குரலிலும் முகத்திலும் பழைய உறுதித் திரும்பிவிட்டது. ஆனால் ரவியின் மனம்தான் அலையில் சிக்கிக் கொண்ட துரும்பாகத் தத்தளித்தது.

 

 

‘இப்படி ஒருத்தியை இழந்தே தீர வேண்டுமா…?’ – அவன் மனம் கேள்விக் கேட்டது. ஆனால் ‘அண்ணன்…? அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி…? அதற்கு யார் பதில் சொல்வது?’ – இருவேறுபட்ட உணர்வுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவித்தவன் ‘இன்னும் சற்று நேரம் இவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு இங்கு நின்றால் அவள் காலடியில் விழுந்து சரணாகதி அடைந்துவிடுவோம் என்கிற பயத்தில் வேகமாக அங்கிருந்து அகன்றான்.

 

 

‘பார்க்கிலிருந்து அப்போது சென்றவன் முழுதாக ஒரு நாள் கடந்துவிடப் பிறகும் இன்னும் வீட்டுக்குப் போகவில்லையா! எங்குப் போயிருப்பான்…!’ – தமிழியின் மனம் தவித்தது. அவளுக்கு எப்படிச் சமாதானம் சொல்வது என்று புரியாமல் கையைப் பிசைந்த பார்வதி “நான் சின்னவனுக்குப் போன் பண்ணிக் கேக்குறேன்மா. நீ பயப்படாத” என்று கூறிவிட்டுப் போனை அணைத்தாள்.

###

கயல் போல் கன்னத்துத் தசையை உள்ளிழுத்து… இதழ்களைக் குவித்து மெல்ல மெல்லத் திறந்து மூடி அழகுக் காட்டி, கண்ணாடித் தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருக்கும் மீன் குஞ்சுகளைக் கொஞ்சிக் கொண்டிருந்த ராஜி, தன் செவ்விதழைத் தொட்டுப் பார்க்கும் ஆசையில் வேகமாய் வந்து கண்ணாடியில் முட்டிக் கொண்டு கோபத்துடன் எதிர் திசையில் திரும்பி நீந்தும் தங்க மீனைப் பார்த்துக் கலகலத்துச் சிரித்தாள்.

 

சிரிப்பில் சுருங்கும் காதல் மனைவியின் கண்களையும்… கொஞ்சலில் குவியும் செவ்விதழ்களையும்… மகிழ்ச்சியில் மலரும் முகத்தையும் உடனுக்குடன் கேமிராவில் பதிவு செய்து கொண்டிருந்தான் குரு.

 

“அக்கா… அக்கா… அக்கா…” – பால்கனியில் தொங்கிக் கொண்டிருக்கும் கூண்டிற்குள் அமர்ந்திருந்த கிளி என்னையும் கொஞ்சம் கவனி என்பது போல் அவளைக் கீச் குரலில் கூவி அழைத்தது.

 

“யா…ர…து…?” – தெரியாதது போன்ற பாவனையில் பால்கனிப் பக்கம் தலையைச் சரித்து எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

 

“சின்னு… சின்னு…” – கேரளாவிலிருந்து வாங்கிவரப்பட்ட பேசும் கிளி தனக்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயரை சொன்னது.

 

“ஓ… சின்னுவா…! சின்னு செல்லத்துக்கு என்ன வேணும்?” பேச்சுக் கொடுத்துக் கொண்டே கிளிக் கூண்டை நெருங்கினாள்.

 

“அக்கா… அக்கா…”

 

“அடடே…! அக்காதான் .வேணுமா…?” – கூண்டைத் திறந்துக் கிளியைக் கையில் எடுத்து மற்றொரு கையில் இரையை அள்ளி அதனிடம் நீட்டினாள்.

 

அவள் மீது சலுகையாய் அமர்ந்து கொண்டே அவள் கொடுத்த இரையைக் கொத்திக் கொரித்தது சின்னு என்னும் அவளுடைய செல்லக் கிளி. அதே நேரம் அவள் காலடியில் நின்று “வவ்… வவ்…” – என்று குரல் கொடுத்து அவள் சேலையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த வெண்மை நிற புசுபுசு பொமரேனியன் அவள் கவனத்தைக் கவர “டேய்… டாமி… சின்னுவுக்கு ஃபீட் பண்ணும் போது தொல்லைப் பண்ணாத…” என்று செல்லமாய் அதட்டினாள்.

 

உடனே கோவித்துக் கொண்டு ஹாலுக்குள் ஓடிய டாமி சோபாவின் மீது ஏறி படுத்துக் கொண்டது. அவள் சின்னுவைப் பாதுகாப்பாகக் கூண்டுக்குள் அனுப்பிவிட்டு, பக்கத்துக் கூண்டிலிருந்த லவ் பேர்ட்ஸ்கும் இரை போட்டுவிட்டு ஹாலுக்கு வந்த போது அவளைக் கண்டுகொள்ளாமல் சுருண்டு படுத்திருந்த டாமியைப் பார்த்து மகிழ்ந்து சிரித்தாள்.

 

‘என்…ன… ஊடல்!!!’

 

“டாமி செல்லம்… என் மேலக் கோவமா?” என்று அதைக் குழந்தை போல் கையில் ஏந்தி, நெற்றியோடு நெற்றி முட்டிச் செல்லம் கொஞ்சிச் சமாதானம் செய்தாள்.

 

சிறு வயதிலிருந்தே செல்லப் பிராணிகள் மீது அலாதிப் பிரியம் கொண்ட ராஜிக்கு இப்போது திருமணமாகி ஓராண்டு காலம் கழிந்துவிட்டது. பெற்றோரைவிட்டு விலகியிருக்கும் அந்தத் தம்பதிக்குத் திருமணமான ஓரிரு மாதங்களிலேயே குழந்தை ஏக்கம் வந்துவிட, அந்த ஏக்கம் அவர்களைப் பாதிக்காமல் பாதுகாப்பது அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள்தான்.

 

அவற்றோடு விளையாடும் பொழுது… அவள் முகத்தில் எல்லையில்லா சந்தோஷம் மிளிரும். அதைப் பார்ப்பதற்காகவே வீடு முழுக்கச் செல்ல பிராணிகளை வாங்கிக் குவித்தான் குரு. சிட்டிக்குள் இருக்கும் நடுத்தரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்பிற்குத் தடைவிதிக்கப்பட்டதால், புறநகர் பகுதியில் ஒரு தனி வீட்டைப் பார்த்துக் கொண்டு வந்துவிட்டான்.

 

இந்த ஏரியாவிலிருந்து அவனுடைய ஸ்டுடியோவிற்குச் சென்றுவரக் குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகும். தினமும் வேலைக்குச் செல்பவனுக்கு அலைச்சல்தான். ஆனால் அவனுக்கு அது பற்றிக் கவலை இல்லை. காரணம்… இங்குத்தானே அவனுடைய செல்ல மனைவியும், அவளுடைய செல்லப் பிராணிகளும் தனி ராஜாங்கத்தில் இருப்பது போல் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். அவளுடைய சந்தோஷத்திற்காகத் தானே அவன் உழைக்கிறான்! அவளுக்காகத்தானே வாழ்கிறான்!




Comments are closed here.

You cannot copy content of this page