Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-16

அத்தியாயம் – 16

அன்று காலை கண் விளித்ததிலிருந்தே ராஜிக்கு ஒரே பரபரப்பு… ‘சொல்லிவிடலாமா? வேண்டாம் வேண்டாம்… ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சுகிறது… இந்த மாதம் கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு அப்புறமா சொல்லிக்கலாம்…’ – குருவிற்குக் காலை உணவை எடுத்து வைத்தபடித் தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

 

“என்னாச்சு ராஜி…? காலையிலிருந்து ஒரே யோசனையிலேயே இருக்க?”

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல… நீங்கச் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஸ்டுடியோவுக்குக் கிளம்புங்க…”

 

“சீக்கிரம் கிளம்பணுமா?” அவன் அவளை அதிசயமாகப் பார்த்தான். ‘எப்பொழுதும் அவன் வெளியே கிளம்பும் பொழுது அனுப்ப மனம் இல்லாமல் அனுப்பும் ராஜியா இவள்…!’

 

“என்ன? என்ன அப்படிப் பார்க்கறீங்க?”

 

“இன்னிக்கு உனக்கு என்னவோ ஆயிடிச்சு… காலையிலிருந்தே நீ நார்மலா இல்ல…” – உணவை உண்டு முடித்துவிட்டுக் கைகழுவ எழுந்து சென்றான்.

 

அவன் பேசுவதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவனுடைய தேவைகளையெல்லாம் கவனித்து அனுப்பி வைத்துவிட்டு… அவசரமாக வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே கிளம்பினாள். பக்கத்து வீட்டு அக்காவின் ஆலோசனைப்படித் தெருமுனையில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பிற்குள் நுழைந்து அவளுக்குத் தேவையான அந்தக் கிட்டை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிச் சோதித்துப் பார்த்தாள்.

“கடவுளே…! உண்மையா!” – ரிசல்ட்டைத் திரும்பத்திரும்பச் சரிபார்த்தாள். ‘பாசிட்டிவ்தான்…! பாசிட்டிவேதான்…!’ – அவள் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.

 

“கடவுளே… லட்சம்… இல்ல.. கோடி.. இல்ல இல்ல…. கோடான கோடி நன்றிகள் சாமி…” – விபூதியையும் குங்குமத்தையும் நெற்றியில் அள்ளிப் பூசிக் கொண்டு கடவுள் படத்தைத் தொட்டுத் தொட்டு வணங்கினாள்.

 

“குரு… குருவுக்குச் சொல்லணுமே…!” – அவசரமாக டெலிபோனைத் தேடி ஓடினாள். ‘ஐயோ..! பாப்பாக்குக் கஷ்டமா இருக்குமே!’ – சட்டென்று அவள் நடை நின்றது. மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து டெலி போன் மேஜையை நெருங்கி ரிஸீவரைக் கையிலெடுத்துக் கணவனுக்கு டயல் செய்தாள்.

 

“சொல்லு ராஜி…”

 

“குரு…”

 

“ம்ம்ம்… சொல்லும்மா…”

 

“குரு…” – பேச்சு வராமல் திக்கித் திணறினாள். தாளமுடியா சந்தோஷத்தில் அவள் தொண்டை அடைத்துக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டது. அவளுடைய உடைந்த குரலைக் கேட்டுப் பதட்டம் அடைந்த குரு… “ராஜி… என்ன ஆச்சு?” என்றான் படபடப்புடன்.

 

“குரு… உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க… நான் உங்களை இப்போவே பார்க்கணும்…”

 

“உடனே கிளம்பி வரணுமா! நான் இன்னும் ஸ்டுடியோவுக்குப் போய்ச் சேரவே இல்லையேடா… இப்போதான் பஸ்ல இருக்கேன். என்ன ஆச்சு உனக்கு? ஏன் ஒரு மாதிரியாப் பேசுற? குரல்வேற அழற மாதிரி இருக்கு? உடம்பு ஏதும் சரியில்லையா? காலையிலிருந்தே நீ ஒரு மாதிரியாத்தான் இருந்த…” – அவன் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போனான்.

 

“ஐயோ குரு… எனக்கு ஒண்ணும் இல்ல… எனக்கு உங்களை இப்போவே பார்க்கணும். ப்ளீஸ் வாங்களேன்…”

 

“ச்ச… ச்ச… ப்ளீஸ் எல்லாம் எதுக்குச் சொல்ற? நான் அடுத்த ஸ்டாப்லேயே பஸ்லேருந்து இறங்கி உடனே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்தடறேன். நீ பத்திரமா இரு… சரியா…?” என்று அவளுக்குச் சமாதானம் சொல்லி போனை அணைத்துவிட்டு, சொன்னபடி அடுத்த நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கி ஆட்டோ பிடித்துக் கொண்டு அரை மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தான்.

 

அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு ஆவலுடன் கதவைத் திறந்த ராஜி வாசலில் குருவைக் கண்டதும் மகிழ்ச்சியும் ஆனந்தக் கண்ணீருமாக அவன் கழுத்தை வளைத்துக் கன்னத்தில் இதழ்பதித்து… நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்.

 

“ஹேய்… ராஜி…!” – அவள் மிக மிகச் சந்தோஷமான மனநிலையில் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் அதற்கான காரணத்தை அறியும் ஆவலில் “என்னடா…?” என்றான்.

 

அவள் பதில் சொல்லாமல் அவனோடு ஒட்டிக் கொண்டே நின்றாள். அவளைத் தன் கையணைப்பிலேயே உள்ளே அழைத்துக் கொண்டு வந்தவன் சோபாவில் அமரவைத்துத் தானும் அவளுக்கருகில் அமர்ந்து கொண்டு பழையபடி அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். சற்று நேரம் அவள் ஆசுவாசமடையட்டும். பிறகு அவளே வாய் திறந்து என்ன விஷயமென்று சொல்வாள் என்று காத்திருந்தான். அவன் நினைத்தது நடந்தது…

 

சில நிமிடங்கள் கணவனுடைய கையணைப்பில் இருந்தவள் பிறகு அவனிடமிருந்து விலகி உள்ளே சென்று வீட்டிலிருந்த சர்க்கரையில் கொஞ்சம் கொண்டுவந்து அவன் வாயில் போட்டுவிட்டு விஷயத்தைச் சொன்னாள்.

 

“நம்ம வீட்டுக்கு ஒரு குட்டிப் பாப்பா வரப்போகுது குரு… கடவுள் நமக்குக் கருணைக் காட்டிவிட்டார்”

 

“ராஜி…!!!” – ஆனந்தம் என்றால் அப்பேற்பட்ட ஆனந்தம் அவனுக்கு. காதில் தேன்தான் வந்து பாய்ந்ததோ…! எத்தனை இனிமையான உணர்வு அவன் நெஞ்சுக்குள் பரவுகிறது!

 

“நி…நிஜமா…? எப்படி ராஜி… டாக்டர்கிட்டப் போனியா?” – விலகாதத் திகைப்பும் மகிழ்ச்சியுமாகக் கேட்டான்.

 

“இல்லை…” என்று கூறி அவள் விளக்கம் சொன்னாள்.

 

அவன் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தான். தித்திப்பான செய்தியைச் சொல்லி அவனைத் திகைக்க வைத்தவளைக் கொஞ்சித் தீர்த்தான். கணவன் மனைவி இருவரும் அந்தச் சந்தோஷத்தின் பிடியிலிருந்து வெளியே வருவதற்கு முன் மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது. குருதான் கதவைத் திறந்தான். வாசலில் படு டீசண்டான ஆட்கள் நான்கு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

 

“யார் நீங்க?”

 

“நீங்கதானே குரு?”

 

“ஆமாம்… ஏன் கேட்கறீங்க?”

 

“ஒரு முக்கியமான விஷயம் பேசணும். உள்ள போயிப் பேசலாமா?”

 

சற்று நேர யோசனைக்குப் பின் வந்திருந்தவர்களின் நாகரீகமான உருவமும் அவர்கள் முகத்திலிருந்த புன்னகையும் நம்பிக்கை அளிக்க “ஓகே… வாங்க…” என்று அவர்களை வீட்டிற்குள் அனுமதித்தான்.

 

கணவனுக்குத் தெரிந்தவர்கள் யாரோ வந்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தில், ராஜி அவர்களுக்கு வணக்கம் சொல்லி “உட்காருங்க… என்ன சாப்பிட்ரிங்க? டீ…? காபி…?” என்று உபசரித்தாள்.

 

“ம்ம்ம்… டீ கொடுங்களேன்…” – வந்திருந்தவர்களில் ஒருவன் சொன்னான்.

 

மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்திருந்த ராஜி, நன்றாகச் சுண்டக் காய்ச்சியப் பாலில் ஸ்ட்ராங்காக டீ கலந்து… சர்க்கரையைச் சற்றுத் தூக்கலாகப் போட்டு அனைவருக்கும் விநியோகித்தாள்.

 

“அருமையான டீம்மா… ரொம்ப நல்லா இருந்தது… தேங்க்ஸ்…” டீயைச் சுவைத்துக் குடித்து முடித்த ஒருவன் சொன்னான்.

 

“தேங்க்ஸ்…” – அவள் புன்னகையுடன் கூறினாள்.

 

“அப்புறம்… என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கிங்க?” – குரு கேட்டான். ‘ஏதாவது விஷேஷத்திற்கு வீடியோ கவரேஜிற்கு ஆர்டர் கொடுக்க வந்திருப்பார்கள் என்பது அவனுடைய எண்ணமாக இருந்தது. ஆனால் விஷயம் அதுவல்ல…

 

வந்திருந்தவர்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுச் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு இன்முகத்துடன் அவள் கொடுத்த டீக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு… அவர்களிடம் விடைபெற்று வெளியேறினார்கள். அடுத்த ஐந்தாவது நிமிடம் வெடி வெடிப்பது போன்ற பெரும் சத்தத்துடன் அந்த வீட்டில் தீ பிடித்துக் கொண்டது. இரு இளம் காதல் சிட்டுக்களோடு சேர்ந்து அந்த வீட்டில் வாழ்ந்த மற்ற செல்லப் பிராணிகளின் மரண ஓலமும் விண்ணைக் கிழிக்க… அவர்களைத் தனக்கு இரையாக்கிக் கொண்ட கோரத் தீயும் விண்ணை நோக்கிக் கொழுந்துவிட்டு எரிந்தது.

 

ஊதா நிறத்தில், காற்றின் அழுத்தத்தால் “புஷ்ஷ்…” என்ற சத்தத்துடன் ஆக்ரோஷமாக எரியும் நெருப்பை வெறித்து நோக்கிக் கொண்டிருந்த ரவியின் கண்களிலும் அந்தத் தீயின் ஜுவாலைத் தெரிந்தது.

 

“என்ன தம்பி… ரொம்ப நேரமா இப்படி நெருப்பையே வெறிச்சுப் பார்த்துகிட்டு இருக்கீங்க?” – அந்த வெல்டிங் பட்டறையின் உரிமையாளர் கேட்டார்.

 

அவன் கனவிலிருந்து விடுபட்டவன் போல் நிமிர்ந்து அவரைப் பார்த்தான். “என்ன கேட்டீங்க?”

 

“என்ன விஷயம் தம்பி. உங்களைப் பார்த்தா…” – அவர் முடிக்காமல் இழுத்தார்.

 

“ம்ம்ம்… நான் ஸ்ரீரங்கத்திலிருந்து வர்றேன். திருச்சி சைக்கிள் கடை மணியண்ணன் உங்களை வந்து பார்க்கச் சொன்னாரு…”

 

“மணியா!” – என்று அவனைச் சிந்தனையுடன் பார்த்தவர் “உள்ள வாங்க பேசலாம்…” என்று அவனைத் தனியாக அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

 

“இப்போ சொல்லுங்க. என்ன விஷயம்?”

 

ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அவரைப் பார்த்தவன் “ஒரு கொலைப் பண்ணனும்…” என்றான்.

 

ஏதோ கத்திரிக்காய் வியாபாரத்தைப் பற்றிப் பேசுவது போல் சாதாரணமாகக் கொலையைப் பற்றிப் பேசுகிறவனை ஊடுருவும் பார்வைப் பார்த்தார் அந்த மனிதர்.




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    giffi i says:

    Tq its opened

You cannot copy content of this page