Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-17

அத்தியாயம் – 17

 

ஒன்றுக்கு இரண்டு தூக்க மாத்திரைகளை விழுங்கிய பிறகும் ரவிக்கு உறக்கம் வரவில்லை. கண்களை இறுக்கமாக மூடித் தலையைத் தலையணையில் புதைத்துக் கொண்டு உறக்கத்தை வரவழைக்க முயன்றான். முடியவில்லை…

 

“ஐயோ… தம்பி… புடிடா… தூக்குடா… முடியலடா… ரவி… தம்பி… தூக்கு… தூக்கு…” வழக்கம் போல் அழுகையினூடே புலம்பும் குருவின் குரல் அவனுடைய உறக்கத்தைக் காத தூரம் துரத்திவிட்டது.

 

ஆஜானுபாகுவான அண்ணன் நெருப்பில் வெந்து போய் மருத்துவமனையில் கிடந்து மூன்று மாதங்கள் துடியாய் துடித்த கோலம் அவன் கண்முன்னே வந்து போனது.

 

“சென்னை சிங்கபெருமாள் கோவில், தணிகாச்சலம் நகரில் அமைந்துள்ள உள்ள ஒரு தனி வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்துத் தீ விபத்து ஏற்பட்டதில் அந்த வீட்டில் வசித்து வந்த திருமதி ராஜி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய கணவன் திரு குருபிரசாத் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” – சம்பவம் நடந்த மறுநாள் அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்தி அன்று போலவே இன்றும் அவனைக் கொதிக்கச் செய்தது…

 

‘முழுப் பூசணிக்காயை ஒரே பிடிச் சோற்றில் மறைத்துவிட்டானே! பணம் பாதாளம் வரை பாய்ந்துவிட்டது…’ – கசப்புடன் நினைத்துக் கொண்டான்.

 

இன்று அந்தப் பட்டறைக்காரன் கூடப் பணத்தில் தானே குறியாக இருந்தான்!

 

“பெரிய இடத்தைப் பற்றிப் பேசுறீங்க… பணம் கொஞ்சம் செலவாகும். எப்படி வசதி?”

 

“எவ்வளவு செலவாகும்?”

 

“என்ன… ஒரு முப்பது… முப்பத்தஞ்சு செலவாகும். ஏற்பாடுப் பண்ணிக்கிட்டு வாங்க. அப்புறம் பேசுவோம்…” – கொஞ்சம் செலவாகும் என்று கூறிவிட்டுத் தன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தொகையை இலகுவாகக் கூறிய பட்டறைக்காரனின் இறுக்கமான முகம் அவன் நினைவில் வந்தது.

 

‘முப்பது…! முப்பத்தஞ்சு…!’ – எவ்வளவு சாதாரணமாகச் சொல்லிவிட்டான். அவ்வளவு பணத்திற்கு அவன் எங்கே போவான்…! அதற்காக… ஒன்றுக்கு மூன்று உயிர்களைக் கொன்றுக் குடித்தவனை அப்படியே விட்டுவிடுவதா! பிறகு இவன் என்ன தம்பி…! இவன் என்ன ஆண்மகன்…! இவனுக்கு எதற்கு மீசை…! – தனக்குத் தானே வெறி ஏற்றிக் கொண்டான்.

 

மரணத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு… எப்போதடா இந்த உயிர் தன்னைவிட்டுப் போகும் என்று காத்துக்கிட்டந்த குரு தாளமுடியா வேதனையுடன் அவ்வப்போது பேசிய ஒவ்வொரு  வார்த்தையையும் ரவியின் உயிருள்ள வரை அவனால் மறக்கவே முடியாது.

 

“ரெட்டை உயிர் ரவி… ராஜி வயித்துல நம்ம வீட்டு வாரிசு…” – வெந்து போயிருந்த இதழ்களைப் பிரித்து மேலே பேச முடியாமல் ஆயாசத்துடன் கண்மூடிக் கொண்டான் குரு.

 

அவன் அரைகுறையாய் சொன்ன விஷயத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ரவியின் உள்ளம் பதறித் தவித்தது. ‘குழந்தையா…! அண்ணி… அண்ணி ரெட்டை உயிரா இருந்தாங்களா! இந்த நேரத்தில் ஏன் இப்படி நடந்தது…! கடவுள் ஏன் இப்படிச் சோதித்தார்…! ‘ – அவன் கடவுளை நொந்து கொண்டிருந்த வேளையில் மீண்டும் கண்விழித்த குரு சோதித்தது கடவுள் அல்ல என்கிற விபரத்தைச் சொன்னான்.

 

“விட்டுப் பிடிச்சானுங்கலாம்! வந்திருந்தவனுங்கச் சொன்னானுங்க…!”

 

“வந்திருந்தவனுங்களா! யாரு? யாரு வந்திருந்தது? அண்ணா… நீ என்ன சொல்ற?” – பதறினான் ரவி. அவனுடைய பதட்டம் குருவை பாதிக்கவில்லை. அவன் சோர்வுடன் மீண்டும் கண்மூடிக் கொண்டான்.

 

 

அண்ணன் மீண்டும் கண்விழிக்கும் வரை தணல் மேல் நின்று கொண்டிருந்த ரவி அவன் கண்விழித்த அடுத்த நொடிக் கேட்டான்.

 

“அண்ணா… அன்னைக்கு யாரு வீட்டுக்கு வந்திருந்தது? என்ன பண்ணினானுங்க?”

 

அணைந்துப் போகும் நேரத்தில் ஒளிவிட்டு மிளிரும் தீபம் போல் கண்விழித்ததும் முகத்தில் ஒருவித மலர்ச்சியுடன் காணப்பட்ட குரு சற்று சிரமப்பட்டு நடந்ததைச் சொல்லி முடித்தான். அதற்காகவே காத்திருந்தது போல் அடுத்த ஓரிரு நிமிடங்களிலெல்லாம் ஊசலாடிக் கொண்டிருந்த அவன் உயிர் உடல் கூட்டைவிட்டுப் பிரிந்தது…

 

ரவி கொந்தளித்துப் போய்விட்டான். ‘கொலையா…! காத்திருந்துப் பழி தீர்த்துக் கொண்டானா! அது வெளியே தெரியாமல் மறைத்தும் விட்டானா!’ – அவனால் பொறுக்க முடியவில்லை. வீறு கொண்டு எழுந்தான். வீச்சரிவாளுடன் சேலத்திற்குச் சென்றான். வெட்டிக் கொன்றுவிடத்தான் துடித்தான். ஆனால் ஒற்றை ஆளாய் அவனால் நினைத்ததை முடிக்க முடியவில்லை. தோல்வியுடன் திரும்பி வந்தான்.

 

தோல்வியின் துயரம் இன்றுவரை அவனைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அவனுக்குப் பணம் வேண்டாம்… பாசம் வேண்டாம்… காதல் வேண்டாம்… கல்யாணம் வேண்டாம்… குடும்பம் வேண்டாம்… எதுவுமே வேண்டாம்… அவனுக்கு வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்… உறக்கம்…! ஆண்டுக் கணக்கில் மூடாமல் விழித்துக் கிடக்கும் அவன் விழிகள் நிம்மதியான தூக்கத்தைத் தழுவ வேண்டும். அது மீண்டும் விழித்தெழும் சாதாரண உறக்கமாக இருந்தாலும் சரி… விழித்தெழவே முடியாத மீளா உறக்கமாக இருந்தாலும் சரி…

 

###

 

வேலை நேரம் முடிந்து வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்த சித்தார்த் எரிச்சலான மனநிலையில் இருக்கிறான் என்பதை அவனுடைய கடுகடுத்த முகம் பறைசாற்றியது. அந்த நேரம் பார்த்து அவனுடைய கைபேசி ஒலித்து அவனுடைய எரிச்சலை அதிகமாக்க ‘ப்ச்… யாரது இந்த நேரத்துல..’ – என்கிற முணுமுணுப்புடன் போனைக் கையில் எடுத்தான்.

 

“பூசணி…!” – பூசணி என்கிற பெயரைத் திரையில் பார்த்ததும் அவனுடைய கடுமைச் சற்றுக் குறைந்தது.

 

“சொல்லு பூசணி”

 

“சி…த்…து…”

 

“ம்ம்ம்… சொல்லு…”

 

“சி…த்…து… கண்ணா…”

 

“என்னன்னுச் சொல்லு பூர்ணி…”

 

அவனுடைய இறுக்கமான குரலை அவள் இனம் கண்டு கொள்ளவில்லை. “உன்னைப் பார்க்கணும் போலத் தோணுது… சனிக்கிழமை எப்படா வரும்?” – கொஞ்சலாகக் கேட்டாள்.

 

அவளுடைய கொஞ்சல் மொழியை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை என்பதோடு அவளுடைய அபத்தமான கேள்வி மட்டுப்பட்டிருந்த அவனுடைய எரிச்சலை அதிகப்படுத்த “அது வர்றப்போ வரும். நீ இப்போ எதுக்குப் போன் பண்ணின? அதைச் சொல்லு முதல்ல…” என்று எறிந்து விழுந்தான்.

 

“என்னடா ஆச்சு? எதுக்கு இப்போ டென்ஷனாப் பேசற?” – தணிந்தக் குரலில் கேட்டாள். அவன் ஒரு நொடி அமைதியானான்.

 

“சாரி பூசணி… வேற ஒரு டென்ஷன்ல உன்கிட்டக் கத்திட்டேன். சொல்லு என்ன விஷயம்?”

 

“ஒண்ணும் இல்ல சித்து… உன்கிட்டப் பேசணும்னுத் தோணிச்சு… அதான்…”

 

“ஓ…” – மீண்டும் அவனிடம் கணநேரம் அமைதி நிலவியது. பிறகு “நானே உனக்குப் போன் பண்ணனும்னு நினச்சுட்டு இருந்தேன் பூர்ணி…”

 

“அப்படியா? எதுக்குடா?”

 

“அவசரமா ஊருக்குக் கிளம்பிட்டு இருக்கேன் பூர்ணி உன்கிட்டச் சொல்லிட்டுப் போறதுக்காகத் தான் போன் பண்ண நினச்சேன்…”

 

“ஊருக்கா! எதுக்கு?”

 

“அது… அம்மா… அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்… போன் வந்தது…”

 

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா! என்ன ஆச்சு சித்து…”

 

“சரியாத் தெரியில பூர்ணி… போயிப் பார்த்தா தான் தெரியும்…”

 

“சரி சரி… நீ கவலைப்படாத… இப்போ நீ எங்க இருக்க?”

 

“ஆபீஸ்லிருந்து கிளம்பிட்டு இருக்கேன் பூர்ணி. வீட்டுக்குப் போயிட்டுக் கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணிக்கிட்டுக் கிளம்பணும்”

 

“நான் வேணுன்னா இப்போ கிளம்பி நம்ம வீட்டுக்கு வரட்டுமா சித்து…”

 

“வேண்டாம்.. வேண்டாம்.. நீ வர்றதுக்குள்ள நான் பஸ் ஸ்டாண்ட் போயிடுவேன். நீ அலைய வேண்டாம்…”

 

“சரி… எப்போ திரும்ப வருவ?”

 

“ஒரு வாரமாவது ஆகும்னு நினைக்கறேன்…”

 

“ஒரு வாரமா!” – அவள் குரலில் மலைப்புத் தெரிந்தது. முழுதாக ஏழு நாட்கள் உன்னைப் பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறேன் என்கிற ஆயாசத்தில் உண்டான மலைப்பு என்பது அவனுக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் அவனுக்கும்தான் வேறு வழியில்லையே!

 

“சாரி பூசணி… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…” – வருத்தத்துடன் கூறினான்.

 

“ச்ச… ச்ச… சாரியெல்லாம் எதுக்குச் சித்து? நீ போய் அம்மாவைப் பாரு. ஒன் வீக் தானே. நான் வெயிட் பண்ணறேன்” – தன் துன்பத்தை மறைத்துக் கொண்டு அவனுக்கு ஆதரவாகப் பேசிவிட்டுப் போனை வைத்தாள்.

 

அவள் அழைப்பைத் துண்டித்த பிறகு காதிலிருந்து எடுத்த கைபேசியைச் சற்று நேரம் வெறித்துப் பார்த்தச் சித்தார்த் பிறகு ஒரு பெருமூச்சுடன் அதைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு அலுவலகத்திலிருந்து வெளியேறினான்.

 




Comments are closed here.

You cannot copy content of this page