வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 9
2452
1
அத்தியாயம் 9:
மணமகளை சுமந்த அந்த கார் வாழைமரம் கட்டி, சீரியல் செட் வெளிச்சத்தில் தகதகத்த வீட்டு வாசலின் முன் நின்றது.
“இது தான் மாப்பிள்ளை வீடு ரம்யாக்கா, மாப்பிள்ளை அப்பா இந்த ஊருக்கு முக்கிய புள்ளி. வயல் தோட்டம் தொரவுன்னு ஏகப்பட்டது இருக்கு, ஒரே மகன், இரண்டு மகள். சுகுணா கொடுத்து வச்சவ” என்று பேசிக்கொண்டே குவளை நெல்லும் அதற்குள் எரிந்த நல்விளக்கையும் பக்குவமாக எடுத்து சுகுணாவிடம் கொடுத்தவளை உருத்து விழித்த காளிதாசன்,
“அப்படின்னா, மூனு அண்ணன் ஒரு தங்கை இருக்குறவனை கல்யாணம் பன்னிக்கறவங்க ரொம்ப பாவப்பட்டவங்களோ????!!! “என்றான் பொய்கோபத்துடன்.
அவளும் அசராமல் “இதுல சந்தேகம் வேறயா?, சரிதானா அக்கா” என்று ரம்யாவை துணைக்கழைக்க,
“அம்மா உங்கள் சண்டைக்கு நான் வரவில்லை. இன்னைக்கு அடிச்சிப்பீங்க நாளைக்கு கூடிப்பிங்க, நடுல நான் யாரு?” என்று கிண்டலாகவே ஒதுங்கிக்கொள்ள அவளை ஆச்சர்யத்தோடு பார்த்தனர் காளிதாசனும் சுகுணாவும்.
“நம் விஷயமெல்லாம் அவங்களுக்கு தெரியும்” என்று வெட்கச்சிரிப்புடன் மதி தலைகுனிய., அசடு வழிந்தான் காளிதாசன்.
அதற்குள் மாப்பிள்ளையின் சொந்தங்கள் ஆரத்தி தட்டுடன் வாசலுக்கு வந்துவிட., ஒலி பெருக்கியில்,
“மணமகளே மருமகளே வாவா…
உன் வலதுகாலை எடுத்து வைத்து வாவா
குலமகளே குண மகளே வாவா
திரு கோவில் வாசல் திறந்து வைத்தோம் வாவா”
என்ற பாடல் ஒலிக்க… காரிலிருந்து இறங்க சுகுணாவிற்கு உதவி புரிந்தாள் ரம்யா. சுகுணாவின் இடுப்பில் நெல்நிறைந்த வெங்களக்குவளையை வைத்து கனம் அதிகம் அவள் மேல் இறங்காமல் தன் கைகளில் அழுந்தப் பற்றியபடி அருகில் நின்றாள் மதி. காரிலிருந்து இறங்கியதால் கசங்கிய சேலை மடிப்புகளை குனிந்து சரிசெய்தாள் ரம்யா.
அதற்குள் ஆரத்தி சுற்றும் பெண்கள் கூட்டம் இவர்களை நெருங்கிவிட, அதேநேரம் இரண்டு வேன் நிறைய பின்னே வந்த கூட்டமும் வந்து சூழ்ந்து கொண்டது. பின் கேலியும் கிண்டலும் மேலோங்கியது. ஆரத்திப் பெண்கள் சுகுணாவை வம்பிழுக்க அவர்களை பதிலுக்கு வாங்கிக் கொண்டிருந்தாள் மதியழகி.
“ஏபுள்ள வெண்ணிலா சீக்கிரம் வா, நாத்தனார் மெட்டி போடனும்” என்று சுகுணாவின் மாமியார் மஞ்சம்மா கூற கையில் ஒரு கைக்குழந்தையுடன் விரைந்து வந்தாள் வெண்ணிலா.
வெண்ணிலா மெட்டியை அணிவித்ததும் பெண்ணை அவர்கள் வீட்டு பூஜை அறைக்கு அழைத்துச்சென்று, அவள் தாய் வீட்டிலிருந்து எடுத்து வந்த நல்விளக்கை அவர்கள் பூஜையறையில் வைத்து வணங்க கூறினர். அவர்களின் கட்டளை படி வரிசை தவறாமல் எல்லாம் செய்தாள் சுகுணா. சுவாமியை கும்பிட்டு எழுந்ததும் பெண்வீட்டாருக்கு விருந்து வழங்கப்பட்டது.
“மறுபடியும் சாப்பிடனுமா? அதுவும் இந்த நடுராத்திரியிலா? வெதுவெதுப்பான பால் குடித்தால் தேவலை மதி”
“அய்யோ அக்கா, அது மரியாதை இல்லை. சும்மாவாச்சு உக்காந்து எந்திரிக்கனும் இல்லன்னா பின்னால நம்ம சுகுணாக்குதான் சொல்லாயிடும்” எனவும் மறுக்க வழியில்லாமல் சாப்பாட்டு பந்தியில் அமர்ந்தாள்.
நடுஇரவு 11.30 மணிக்கு சாப்பிடுவது இங்குதான் நடக்கிறது என்று உள்ளுக்குள் நினைத்தவள் சாப்பிட ஆரம்பித்தாள். ஒரு இட்டிலிக்கு மேல் உள்ளே செல்ல மறுத்தது. இலையில் இருந்த கேசரியும், வடையும், கிச்சடியும் ரம்யாவை பார்த்து சிரித்தது.
“இதற்குத்தான் அங்க ரெண்டே ரெண்டு இட்டிலி சாப்டேன். இல்லன்னா இங்கவந்து உங்கள மாதரிதான் பேந்தப் பேந்த முழிச்சிருக்கனும்” என்று அசால்டாக கூறி நேய்யில் மிதந்த கேசரியை அலேக்காக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தாள் மதி.
அவளை எரித்து விடுவதுபோல் முறைத்த ரம்யா., பரிதாபமாக இலையை பார்த்தாள். அவளது முக உணர்வுகளை பார்த்த பாஸ்கரன், தான் உண்டு முடித்த இலையினை மடித்து விட்டு கைகழுவுவதற்கு நடந்தவன் போகிரபோக்கில் கைதவறி தட்டுவது போல் ரம்யாவின் இலைக்கருகில் இருந்த தண்ணீர்நிறைந்த டம்ளரை தட்டிவிட்டான். இலை முழுவதும் தண்ணீர்மயமாகிவிட சட்டென எழுந்து விட்டாள் ரம்யா.
“அடடா சாரி ரம்யா தெரியாம தட்டிட்டேன். வேறு இலை போடச்சொல்லவா?” – கேட்கையில் அவனது கண்களில் குறும்பு மின்னியது.
“இல்…. இல்ல சார் பரவால்ல, எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு அதனால் சாப்பிடத்தோனலை” என்றவள் அவனுடனே கைகழுவ நடந்தாள்.
“வேண்டாம்னா போடும்போதே சொல்லமாட்டியா?” அடிக்குரலில் கண்டித்தான். அப்படியென்றால் நம் நிலை அறிந்து தான் உதவி செய்திருக்கிறாரா? இது தெரியாமல் போய்விட்டதே என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவள்.
“இல்ல மதிதான் சுகுணாக்கு சொல்லாயிடும்னு…”
“ஆமாம், அவபெரிய பாட்டி, அவங்க பேச்ச நீ தட்டாம காப்பாத்த, கொஞ்சம் திரும்பி அவ அடிக்கிர கலாட்டாவைப்பார்” அவசரமாக திரும்பிய ரம்யாவின் கண்களில் பின்னே இவர்களைப் போலவே சற்று இடைவேளை விட்டு வந்து கொண்டிருந்த மதியழகியும் காளிதாசனும் தென்பட்டனர்.
அவர்கள் கைகளில் பாதி கடித்த வடை இருந்தது, இவள் பார்த்த நொடியில் கண்சிமிட்டும் நேரத்தில் அது கைமாறியது. உடனே திரும்பிவிட்டாள் ரம்யா, அவர்கள் வெட்கப்பட்டார்களோ தெரியாது.ஆனால் இந்தக்காட்சியை கண்ட ரம்யா செங்கொழுந்தானாள். அவளது வெட்கம் படர்ந்த முகத்தில் பாஸ்கரனின் கண்கள் ரசனையோடு படிந்தன.
************************
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்ற கனீர் குரல் கேட்க. குறித்த முகூர்த்த நேரத்தில் ஊர் பெரியவர்கள் முன் சுகுணாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் முகுந்தன். எல்லோரும் அட்சதை தூவி வாழ்த்த திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
அதற்கு பின் ஒவ்வொருவராக வந்து மணமக்களை வாழ்த்த, போட்டோக்கள் , வீடியோ கேமராக்கள் சுழன்று சுழன்று அதன் வேலையை செவ்வனே செய்தன.
சிறிது நேரத்திற்கெல்லாம் சுகுணாவின் உறவுக்கூட்டம் கலைந்தது, வேன் கிளம்பும் தருவாயில் ரம்யாவிடம் வந்த மரிக்கொழுந்து, “சுகுணாவை விட்டு எங்கயும் போயிடாத கண்ணு, புது இடம் அதுக்கு கஷ்டமா இருக்கும். சாயந்தரம் வண்டி அனுப்பி சடங்குக்கு நம்ம வீட்டுக்கு அழைச்சிப்போம் அதுவரைக்கும் இங்கனயே இருதாயி” என்று லேசான அழுகை கலந்த குரலில் கூற உடனே ஒப்புக்கொண்டாள் ரம்யா.
அவளுக்குமே அந்த புது சூழல்… என்னவோ போல்தான் இருந்தது. இருப்பினும் மரிக்கொழுந்தின் வேண்டுகோலுக்கினங்க தலையாட்டினாள்.
“அம்மா, மதியையும் இங்க இருக்கச்சொல்லுங்க, அவளும் இருந்தா மூனுபேருக்கும் பேச சரியாஇருக்கும் ” என்று கேலிபோல் ரம்யாவிற்கு உதவினான்.
மதியழகியின் கண்கள் வேனுக்குள் அமர்ந்திருந்த காளிதாசனை பார்த்து தயங்க, உடனே பாஸ்கரன்,
“டேய் காளி நீ எங்க உள்ள உக்காந்துகிட்டு இருக்க எறங்கு, சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் நம்ம கார் வந்துடும். ஒரு கார்ல பொண்ணு மாப்பிள்ளையும், இன்னொருகார்ல மாப்பிள்ள வீட்லேந்து வர்றவங்களையும் ஏத்திகிட்டு வரனும், அதுக்கு நம்ப வீட்டு சார்புல ஒருத்தர் இங்க இருந்தாகனும். எறங்கு எறங்கு…” என்று காளிதாசனை எழுப்ப. பிறகு எல்லாம்சரியாகிவிட்டது. மகிழ்ச்சியுடனே மூவரும் பின்தங்கினர்.
மாப்பிள்ளை வீட்டில் மதிய உணவு பரிமாறப்பட்டது. காளிதாசனும், மதியழகியும் அவ்வப்போழுது ஒருவர் காலை ஒருவர் வார, பேச்சு சுவாரஸ்யம் பிடித்தது, மணமக்களை தனித்து விட்டு அவர்களுக்கு இடையூரு இல்லாத தொலைவில் மூவரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். மூவருக்குள்ளும் ஒரு நெருக்கம் உருவானது. தானும் இந்த குடும்பத்தில் ஒருவராகிவிடமாட்டோமா என்கின்ற ஏக்கம் ரம்யாவினுள் அதிகரித்தது.
விதி… கைகொட்டி சிரித்தது.
ரம்யாவின் நிம்மதியான நாட்கள் முற்று பெறப்போகிறது.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Achchi pavam ramya kathai ipathan sutu pitikkuthu