மனதோடு ஒரு ராகம்-18
14808
0
அத்தியாயம் – 18
கிழக்கு மெல்ல வெளுத்துக் கொண்டிருக்கும் அதிகாலை வேளை… இரைதேடிச் சிறகடிக்கும் பட்சிகளின் ஓசை மூடியிருக்கும் அந்த அறைக்குள் ஊடுருவி, உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பூர்ணிமாவின் கவனத்தை ஈர்த்தது. சோர்வுடன் உடலை முறுக்கி சோம்பல் முறித்துவிட்டு எழுந்து அமர்ந்தவளுக்கு வயிற்றைப் புரட்டியது. மீண்டும் படுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வயிற்றுக்குச் சிறிதாவது ஈதாலொழிய இந்தக் களைப்புத் தீராது என்பது அவளுக்குத் தெரியும். அதனால்தான் பிடிவாதத்துடன் எழுந்துக் குளியலறைக்குள் நுழைந்தாள். வெளியே வரும் பொழுது அவளுடைய தோழி திவ்யா கையில் சிறு பிளாஸ்குடன் அறைக்குள் நுழைந்தாள். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“மெஸ் ஹால் போயிருந்தியா திவி?” பூர்ணிமா தளர்ந்தக் குரலில் கேட்டாள்.
“ம்ம்ம்…” அவளிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கையிலிருந்த பிளாஸ்க்கை மேஜை மீது வைத்தாள் திவ்யா.
அவளுடைய நடவடிக்கை பூர்ணிமாவை முள்ளாய் குத்தியது. அதற்கு மேல் எதுவும் பேச்சுக் கொடுக்காமல் காலணியை மாட்டிக் கொண்டு அறையிலிருந்து வெளியேற எத்தனித்தாள்.
“எங்கப் போற? அதுல காபி இருக்கு. எடுத்துக் குடிச்சுட்டுப் போ” – வார்த்தைகள் அதட்டலாக வந்து விழுந்தன.
இது போன்ற அதட்டல் உருட்டல் மிரட்டலையெல்லாம் பொடிப் பொடியாக்கி, ஊதிக் காற்றில் பறக்கவிடும் ஆற்றல் பூர்ணிமாவிற்கு உண்டு என்றாலும் இப்போது அவள் அதைச் செய்யவில்லை. மாறாகக் காபியை டம்ளரில் ஊற்றிக் குடித்தாள். ஒரு மிரடுதான் விழுங்கியிருப்பாள். உடனே “உவ்வே…” என்று மீண்டும் குளியலறைக்குள் ஓடினாள். கடுமையான உமட்டலுடன் கூடிய வாந்தி அவளை நிலைகுலையச் செய்தது.
அதுவரை திவ்யாவிடம் இருந்த கடுமை மறைந்து உண்மையான பதட்டத்துடன் “பூர்ணி… பார்த்துடி” என்று தோழியின் தலையைப் பிடித்தாள்.
“முடியல… திவி…”
“பயப்படாத ஒண்ணும் இல்ல. முகத்தைக் கழுவிட்டு வெளியே வா” – அவளைத் தாங்கிப் பிடித்து வெளியே அழைத்துக் கொண்டு வந்து படுக்க வைத்தாள்.
துள்ளலும் துடுக்குமாகவே சுற்றிக் கொண்டிருக்கும் பூர்ணிமா இப்படி வேரறுந்த கொடியாய் துவண்டுக் கிடப்பதைப் பார்க்கும் பொழுது திவ்யாவின் மனதில் இரக்கம் சுரந்தது.
“சித்தார்த்கிட்ட சொல்லிட்டியா பூர்ணி?”
“இல்ல…” என்றபடி அசதியாகக் கண்களை மூடினாள். திவ்யாவின் முகம் மீண்டும் கடுமையானது.
“ஏண்டி?” – பல்லைக் கடித்தாள்.
“சித்து இன்னும் ஊர்லேருந்து வரல திவி”
“எப்போ வருவானாம்?”
ஓரிரு நிமிடங்கள் அமைதியாகத் தோழியின் கண்களைப் பார்த்த பூர்ணிமா “போனை எடுக்க மாட்டேங்கிறான்” என்றாள்.
“பூர்ணி!” – அதிர்ந்தாள் திவ்யா.
“இதை எள்ளளவு நாள் மறைக்க முடியும் பூர்ணி? என்ன பண்ணப் போற?”
அவளுடைய பதட்டத்தில் சிறிதளவுக் கூட பூர்ணிமாவிடம் இல்லை. அவள் அமைதியாகக் கூறினாள்.
“எதுக்கு திவி இவ்வளவு டென்ஷன்? சித்து வந்துட்டா எல்லாம் சரியாயிடும்”
“வந்துட்டா சரியாயிடும்… ஆனா வருவானா?”
“நிச்சயமா” – பூர்ணிமாவின் உறுதியான பதில் திவ்யாவிற்குச் சற்று ஆறுதலாக இருந்தாலும் சித்தார்த்தை அவளால் முற்றிலும் நம்ப முடியவில்லை. ஒரு பெண்ணோடு எல்லை மீறி பழகி அவளைத் தாய்மையடையச் செய்துவிட்டு இப்போது எங்கோ ஊரில் போய் அமர்ந்து கொண்டு போனை எடுக்க மறுப்பவனை எப்படி நம்புவது?
*********
வீட்டைவிட்டுச் சென்ற ரவி எங்கு இருக்கிறான். என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று எந்த விபரமும் தெரியவில்லை. காணாமல் போய்விட்டானே என்று கவலைப்படுவதற்கு அவன் ஒன்றும் சிறு குழந்தையோ அல்லது வயது பெண்ணோ இல்லைதான். ஆனால் அவன் நிலையான புத்தி உள்ளவனும் அல்ல… அதிகமாகக் குடிப்பான். திடீரென்று கோபப்படுவான். யாரிடம் எந்த நேரம் சண்டைக்குப் போவான் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்டவனை மூன்று நாட்களாகக் காணவில்லை என்றால் பெற்றவளுக்குப் பதட்டம் இருக்கத்தானே செய்யும். அந்தப் பதட்டத்தில்தான் தன் இளைய மகன் சித்தார்த்தைத் தொடர்பு கொண்டு வரவழைத்தாள் பார்வதி.
சென்னையிலிருந்து அவசரமாகக் கிளம்பி வந்த சித்தார்த் தன்னால் முடிந்தவரை அண்ணனைத் தேடிக் கலைத்துவிட்டான். ரவி எங்கெல்லாம் போகக் கூடும் என்று அவனுக்குத் தோன்றியதோ அங்கெல்லாம் நேரில் சென்றும்… தொலைப்பேசியில் அழைத்தும் விசாரித்துவிட்டான். ஆனால் பலன்தான் கிட்டவில்லை.
“சின்னவனே…! போலிஸ்ல வேணுன்னா கம்ப்ளைன்ட் கொடுத்திடுவோமா?” – பார்வதி கவலையுடன் கேட்டாள்.
சித்தார்த்திடமிருந்து எந்தப் பத்திலும் வரவில்லை. அவனுடைய கவலை வேறுவிதமாக இருந்தது.
‘கொஞ்ச நாளாவே ரொம்ப டிப்ரஸ்டாதான் இருந்தான். எதாவது தவறான முடிவு எடுத்திருப்பானோ!’ – நினைத்த கணமே மனதில் பயங்கரமான பாரம் ஏறிக் கொண்டது.
‘ஒரு அண்ணனை தான் இழந்துவிட்டோம். இன்னொருவனையும் இழந்துவிடுவோமோ’ என்கிற பயத்தில் அவன் உடலில் மெல்லிய நடுக்கம் ஊடுருவியது. தன்னுடைய பயத்தைத் தாயிடம் சொல்லி அவளையும் கலவரப்படுத்த விரும்பாமல் தலையை அழுந்தக் கோதியபடி ஊஞ்சலிலிருந்து எழுந்தான். அந்த நேரம்தான் அவனுடைய கைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பேசினான். அவன் முகம் உச்சபட்ச அதிர்ச்சியைப் பிரதிபலித்தது.
“என்னப்பா…?” – மகன் போனை அணைத்ததும் பார்வதி கேட்டாள்.
“நான் அவசரமா சேலம் கிளம்பணும்மா…”
Comments are closed here.