Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Veppangulam

Share Us On

[Sassy_Social_Share]

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 10

அத்தியாயம் –  10         

“வண்டி வேப்பங்குளத்திலிருந்து கெளம்பிடுச்சாம் அக்கா சீக்கிரம் முகம் கழுவி கெளம்புங்க நான் போய் சுகுணா கிட்ட சொல்றேன்,அவளுக்கு தான் இப்ப பூமி காலுக்கு கீழ இல்லையே “என்று ஏதோ புலம்பிக் கொண்டே சென்ற மதியை சிரித்துக்கொண்டே பார்த்தாள் ரம்யா. கல்யாண ஏக்கம் அவளது பேச்சில் தெளிவாக தெரிந்தது. துணைவனை தேர்ந்தெடுத்தாகிவிட்டது, வீட்டிலும் எதிர்ப்பு  வருவதற்கு சாத்தியக் கூறு இல்லை ஆனாலும் ஒரு தடங்கல் பாஸ்கரன் ரூபத்தில் ,பாவம் தான் மதி அழகி என்று நினைத்தவள் மெல்ல தயாரானாள் ,சுகுணா தயாராவதற்கும் உதவினாள்.

 

டீயும் ,பஜ்ஜியும் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. எல்லோரும் சேர்ந்து லூட்டி அடித்துக் கொண்டே உண்டு முடித்தனர். இதில் புதிதாக மலர் என்ற பெண்  அறிமுகமானாள், மாப்பிள்ளையின் தூரத்து தங்கை. அவளிடம் காளிதாசன் பேசினாலே மதியழகிக்கு புகைந்தது. இவளுக்கு புகைகிறதென்று அவனும் வேண்டுமென்றே மலரிடம் கதையளக்க ஆரம்பித்துவிட்டான்.

 

“ஏங்க மலரு, இம்புட்டு நேரம் எங்கங்க இருந்தீங்க?  காலையிலிருந்து ஒரே போரு, மொக்க பீசு கூடல்லாம் பேசி.,ஐயா டைம் வேஸ்ட்டாயிடுச்சு தெரியுமா?”

ஓரக்கண்ணால் மதியழகியின் எள்ளும் கொள்ளும் வெடித்த முகத்தை ரசனையோடு பார்த்துக்கொண்டே பேசினான்.

 

“சித்தி கூட உள்ள வேலையா இருந்தேன் அத்தான் ”

அவள் எதார்த்தமாக முறைகூறி அழைக்க…

 

“அடடா நீங்க அத்தான்னு சொல்லும் போது காதுல தேனு பாயிர மாதிரியே இருக்குங்க, இன்னொருதரம் சொல்லுங்களேன்” மதியழகி கையிலிருந்த பஜ்ஜி தூள் தூளாக மாறுவதை ஆசையாக பாத்தான்.

 

“வந்து….சித்தி தான் அத்தானுக்கு காப்பி கொடுன்னு அனுப்பினாங்க ” லேசான பயம் தொற்ற பின்வாங்கினாள் மலர்

 

“அட என்னங்க நீங்க உங்க கையால வெஷம் குடுத்தாலும் குடிப்பேங்க ” என்று காளிதாசன் முடிப்பதற்குள்

 

“அதுக்குத்தான் காஃபி கொடுக்கராங்க, அவங்க போட்ட காஃபியும் நீங்க கேட்ட வெஷமும் ஒரே மாதிரிதான் இருக்குமாம் வாங்கி வாயில ஊத்திக்கோங்க, ஸ்ரெயிட்டா சொர்கம் தான்” என்று இடுப்பில் கைவைத்து அக்கினிக் கண்களுடன் உறுத்து விழித்தாள் மதியழகி

 

“சாமிவந்துடுச்சு…. அது மலையேறதுக்குள்ள நீ போம்மா, நாம பெரகு பார்ப்போம் ” என்று கூறி மலரை அனுப்பியவன் மதியழகியிடம் திரும்பி

 

“அட என்ன புள்ள மதி இப்படி வெரச்சிக்கற, அத்தான் அப்படி என்ன செஞ்சிட்டேன், சும்மா விளையாட்டுக்கு, டைம் பாஸ் அவ்வளவுதான் ”

 

“என்ன…. என்ன டைம் பாஸா?!!!  அப்போ மெட்ராஸ்ல போய் படிச்சீங்களே அப்போ இப்படி நிறைய டைம்பாஸ் நடந்ததோ” வாக்குவாதம் அனல் பறக்க ஒரு வித சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ரம்யா.

 

‘இந்த சண்டை கூட அழகாக இருக்கிறதே.’ நல்ல வேளை அங்கே தக்க நேரத்தில் பாஸ்கரன் வந்து காளிதாசனை காப்பாற்றினான்.

 

“அடடா மாப்பிள்ளை வீட்டுல என்ன இது சின்ன பிள்ளத்தனமா ரெண்டு பேரும் முரண்டு பிடிச்சிகிட்டு” என்ற அதட்டலோடு பாஸ்கரன் அறையினுள் நுழைய

 

“பாருங்க அத்தான் இவரை” என்று சலுகையாய் பாஸ்கரனிடம் வத்திவைத்தாள்.

 

“விடு மதி அவனுக்குத்தான் அறிவில்ல உனக்குமா? ” என்று அவளுக்கு ஒத்து ஊதினான்.

 

கார் அனுப்புவதாக கூறிவிட்டு அவனே வந்து நின்றதும் முதலில் ஒன்றும் புரியவில்லை ரம்யாவிற்கு, பின்னே அவரது தங்கையை மறுவீடு அழைக்க அவர் வந்ததில் என்ன ஆச்சர்யம். அதற்காகத்தானே காளிதாசனை இங்கே தங்கவைத்தார்?  மனசாட்சி எதையோ எதிர்பார்த்து அது என்ன என்று தேடிக் கொண்டிருந்தது. அவனுக்கு காஃபி உபசாரம் நடைபெற்றது. பிறகு தான் கிளம்பமுடிந்தது.

 

எல்லோரிடமும் கூறிக்கொண்டு  மாப்பிள்ளையும் பெண்ணும் காரில் ஏறியதும் காளிதாசனிடம் ஒரு சாவியை கொடுத்த பாஸ்கரன்

“நேத்து எடுத்து வந்த வண்டி இங்கதான் தெக்கால வைக்கப்போர் பக்கத்துல நிக்கிது அத எடுத்துகிட்டு நீயும் மதியழகியும் மாப்பிள்ளை வீட்டாளுங்க மூனு பேரு வராங்களாம் அவங்களையும் கூட்டியாந்துருங்க.”என்று கூறி ரம்யாவை பார்க்க அவளோ பேந்தப் பேந்த விழித்தாள்.

 

பின் இருக்கையில் புது மண ஜோடி அமர்ந்திருக்க அவர்களை தொல்லை செய்வது நியாயமல்ல முன்னால் பாஸ்கரன். அவன் அருகில் அமர்வதை தவிர வேறு வழியில்லை என்றுணர்ந்தவள். சத்தமில்லாமல் முன்னிருக்கையில் அமர்ந்தாள்

ஒரு புன்சிரிப்புடன் வண்டியை கிளப்பினான் பாஸ்கரன்.

 

பின்சீட்டில் மணமக்கள் கைகளை கோர்த்துக்கொண்டு காதோடு காது ஏதேதோ பேசிக் கொண்டே வர, நமக்கு எதற்கு வம்பு என்று வேடிக்கை பார்க்கலானாள் ரம்யா. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த அமைதி என்னவோ செய்ய அவளாகவே பாஸ்கரனிடம் பேச ஆரம்பித்தாள்

 

“நீங்களே கார் ஓட்டி வந்துட்டீங்களே!!!   டிரைவரைத்தான் அனுப்பிவைப்பீங்கன்னு நினைச்சேன்”

 

ஸ்டியரிங்கை லாவகமாக திருப்பி, சாலையில் கவனம் செலுத்தி

“நானும் அப்படித்தான் நினைச்சேன் ஆனா அது என்னவோ தெரியல நீ இல்லாம என்னால அங்க இருக்கவேமுடியல ” என்று ஒருமாதிரிக் குரலில் பேசியவனை அதிர்ச்சியாக பார்த்தாள் ரம்யா,

 

பின் சீட்டிலும் அரவம் தெரிய தங்கையும் தன் பேச்சை கேட்டுவிட்டாள் என்றுணர்ந்த பாஸ்கரன்.

 

“அ…..அதாவது நீங்க எல்லாரும் இங்க இருக்க அங்கே வீடே வெரிச்சோடி போயிடுச்சு. அதுவும் சுகுணா இல்லாம ஏதோமாதிரி இருந்துச்சு ” என்று ஒருவாரு பாதி உண்மையையே முழு உண்மை போல் கூறி முடிக்க ரம்யாவின் முகம் தெளிந்தது. சுகுணாவின் கண்களோ கண்ணீரில் மிதந்தன.

 

*************

 

நாட்டாமை மணிவண்ணன் வீடே களைகட்டியது, இரவு டிபனுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன. உறவுப்பெண்கள் எல்லோரும் ஆளுக்கொரு அரிவாள்மணையுடன் அமர்ந்து காய்கறி அறிந்து கொண்டிருந்தனர், அங்கே காய்கறியுடன் ஊர்கதைகளும் சேர்ந்து அலசப்பட்டது.

 

“ஏய் சிட்டு இன்னும் ஒரு கல்லுக்கு அரிசி இருக்கு கொஞ்சம் போட்டு எடுத்தாறியா? ”

பார்வதியின் குரலுக்கு

 

“சரி அக்கா ” என்ற சிட்டு தான் கொண்டுவந்திருந்த குவளையில் இருந்த மாவினை எதிரிலிருந்த மூன்றடி வெங்கள குவளையில் கொட்டிவிட்டு பார்வதி கொடுத்த அரிசி தூக்கினை பெற்றுக்கொண்டு சென்றாள். இது தான் கிராமம்….

கிரைண்டர் இருக்கும் எல்லா வீடுகளுக்கும் அரிசியையும் உளுந்தையும் பகிர்ந்து கொடுத்துவிட்டால் அவரவர் வீட்டில் மாவு அரைத்து கொண்டு வந்து அதற்கான குவளையில் கொட்டிவிட்டு சென்று விடுவார்கள் பின் உப்பு போட்டு கரைத்துவிட்டால்.,காலை ஊரூக்கே இட்டிலி ஊற்றிவிடலாம்.

 

“பாலுக்கு ஒர ஊத்திட்டியா கவிதா ” என்ற மரிக்கொழுந்திடம்

 

“டீ போட பத்துலிட்டர் பால் எடுத்து வச்சிட்டு மிச்சம் பால்ல ஒர ஊத்திட்டேன் அத்த” அதற்குள் வாசலில் கார் ஹாரன்  சத்தம் கேட்க

“பொண்ணு மாப்பிள்ளை வந்துட்டாங்க, வெரசா….வா…ஆரத்தி எடுக்கனும் ” பரபரப்பானாள் மரிக்கொழுந்து சுகுணாவின் சித்திப் பெண்கள் புடைசூழ ஆரத்தி எடுக்கப்பட்டது. கேலியும் கிண்டலுமாக மணமக்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.

 

மச்சினிகள் ஒன்று கூடி மச்சானை ஒருவழியாக்கி விட்டார்கள், முகிலனோ எல்லோரையும் அழகாகவே சமாளித்தான். ஒரு வழியாக சடங்குகள் முடிந்து முதலிரவுக்காக இருவரையும் அறையினுள் அனுப்பிவிட்டு படியிரங்கிய ரம்யாவின் மனதில் ஒரு வெறுமை படர்ந்தது.

 

‘இதோ திருமணம் முடிந்துவிட்டது. மூன்றாம் நாள் சுகுணா புக்ககம் சென்று விடுவாள். பின் நிச்சயம் இங்கிருந்து கிளம்ப வேண்டும் இல்லையேல் தேவையில்லாத சந்தேகம் கிளம்பும். ஆனால்…. எங்கே போவது…? மறுபடியும் சென்னைக்கா???

ஐயோ அதற்கு தற்கொலையே மேல்….’

இப்படி பல்வேறு சிந்தனை ஓட.  கவனம் படிகளிலில்லாமல் சட்டென நிலைகுலைந்து விழப்போனவளை தன்னோடு சேர்த்து தாங்கிப்பிடித்தான் பாஸ்கரன்.

 

கதகதப்பான பிடியில் தான் இருப்பது புரிந்து அது பாஸ்கரன் தான் என்றுணர்ந்து சட்டென விலகி நின்றாள். தன் அசட்டுத்தனத்தை எண்ணி தலைகவிழ்ந்தாள்.

 

“அப்படி என்ன சிந்தனை அம்மணிக்கு?  படிகட்டு கூட தெரியாம நடக்குற அளவுக்கு ” அவனது  கேள்வியில் கேலி நிறைந்திருந்தது. ஆனால் அவன் எதிர்பார்த்த நாணம் அவள் முகத்தில் இல்லை. அதற்கு பதிலாக முகம் வெளிரி ,வலி நிறைந்த பார்வையால் அவனை பார்த்தவளை புரியாமல் பார்த்தான் பாஸ்கரன்

 

‘என்னாச்சி இந்த பொண்ணுக்கு? நல்லாத்தானே இருந்தது, ஒரு வேள சிலுக்குவார்பட்டியில காத்து கருப்பு அடிச்சிருக்குமோ? ‘ அவன் சிந்தித்துக்கொண்டிருக்க, அவள் கீழே சென்றுவிட்டாள்.

 

கீழே கூடத்தில் பெண்கள் ஒரு வட்டமாய் சுற்றி அமர்ந்து மலர்களை தொடுத்துக்கொண்டிருந்தனர். மல்லிகை, முல்லை, கனகாம்பரம் என்று சிறு சிறு மலர் குன்றுகள் குமிந்திருக்க, பெண்கள் பேசிச்சிரித்து கொண்டே தொடுக்கலாகினர். அவர்களோடு அமர்ந்து ரம்யாவும் பூ தொடுக்க ஆரம்பித்தாள்.

 

மதியழகி தான் அங்கே மாப்பிள்ளை வீட்டில் மக்கள் இப்படி அப்படி என்று பிட்டு பிட்டு வைத்துக் கொண்டிருந்தாள். அதனை கேட்டுசிரித்துக் கொண்டிருந்தனர். தன் கவலையை புறம் தள்ளி அந்த கும்பலோடு தானும் ஐக்கியமானாள்.

 

அடுத்த நாள்பெண் வீட்டு வரவேற்பு, பெண் வீட்டில் சாப்பாடு  ஜாம் ஜாம் என்று நடந்தது. பெண் சார்பில் மொய் எழுதுபவர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். பெண் வீட்டிலிருந்து லட்டு, மைசூர் பாக்கு, அதிரசம், இட்லி, பொங்கள் வடை என்று பலகாரக் கூடை சம்பிரதாயம் மாப்பிள்ளை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

கூட்டமும் கேலியுமாக அந்த நாளும் முடிவடைந்து மூன்றாம் நாள் காலை சுகுணா கணவன் வீட்டிற்கு செல்ல தயாராகிவிட்டாள்.

 

சுகுணா புகுந்த வீடு சென்றதும் நாட்டாமை மணிவண்ணனிடம் தன்நிலையை கூறி இந்த கிராமத்தில் ஒருவேலையும் ஒருவீட்டையும் ஏற்பாடு செய்து தரச்சொல்லி கேட்க வேண்டும் என்று உள்ளுக்குள் நினைத்தவள் ஒருவித கலக்கத்தோடுதான் வளையவந்தாள்.நெரிஞ்சி  முள்ளாய் இதயத்தில் குத்திக் கிழிக்கும் கடந்தகாலம் வேறு அவளை துரத்தி துரத்தி வருத்தியது.

********

 

கூடத்தில் நின்ற அணைவரது கண்களும் கண்ணீரில் நிறைந்து. சுகுணாவோ தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். கல்நெஞ்சம் என்று ரம்யாவால் விளிக்கப்பட்ட பாஸ்கரனது கண்கள் சிவந்திருந்தது. “யாருக்கும் தெரியாமல் உள்ளே அழுதிருப்பாரோ?” மனதோடு நினைத்துக் கொண்டாள் ரம்யா.

 

“அவ என்ன சீமைக்கா போகப்போறா? இதோ தடுக்கி விழுந்தா சிலுக்குவார்பட்டி இதுக்கு ஏன் இப்படி எல்லாம் கூடி அழறீங்க “முந்திக்கொண்டு வந்த அழுகையை விழுங்க விட்டு பேசிய நாட்டாமையை பாவமாக பார்த்தாள் ரம்யா…

 

பாஸ்கரன் சுகுணாவின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தான். அதற்கு மேல் அவனுக்கு பேச்சே வரவில்லை.பார்வதியும், கவிதாவும், மரிக்கொழுந்தும் கண்ணீரை கட்டுப்படுத்த நினைத்து தோற்றுக் கொண்டிருந்தனர் “.

 

அழகையினோடே “நல்ல நேரம் முடியப்போகுதம்மா சீக்கிரம் கெளம்புங்க “என்ற ஆச்சியின் குரல் கேட்டதும் தான் எல்லோரும் சேர்ந்து மணமக்களை காரில் ஏற்றி பிரியா விடை கொடுத்தனர்.

 

கார் கண் மறையும் வரை வாசலிலேயே நின்று கையசைத்த மொத்த குடும்பமும் கவலையோடு உள்ளே செல்ல எத்தனிக்க, வேகமாக வந்த ஸ்கார்ப்பியோஅடித்த பிரேக் சத்தத்தில் எல்லோரும் நின்று திரும்பிப் பார்த்தனர்.

 

அதிலிருந்து 30 வயது மதிக்கத்தக்க ஒருவன் குதித்திறங்கி “ஏய் ரம்யா! ஏய் ரம்யா ! இங்க வந்து பதுங்கிகிட்டா என்னால கண்டுப்பிடிக்க முடியாதுன்னு நினைச்சியா! நீ இந்த உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் விடமாட்டேன்டி” தாறு மாறாக கத்தத்தொடங்கிவிட்டான்.

 

இதுதான் பிரச்சனை என்று புரிவதற்கே அங்கே இருப்பவர்களுக்கு நேரம் பிடித்தது.

“ரம்யா” என்ற பெயரை கேட்டதுமே உன்னிப்பானது பாஸ்கரன் மட்டும்தான்.

 

ஒர் அடி முன் வந்து அந்தப் புதியவனின் கண்களை நேரக சந்தித்து, “முதல்ல நீங்க யாரு சார்?  ஏன் ரம்யாவ கேக்கறீங்க கொஞ்சம் மரியாதையா பேசுனா எல்லாருக்கும் நல்லது ” என்று பொறுமையாகவே பேசினான்.

 

“உனக்கென்னடா மரியாத, வீட்டுக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கீங்களே ரம்யா அவள கூப்பிடுடா ” என்று அந்த புதியவன் கூச்சலிடவும் அதற்குள் விவரமறிந்து விரைந்து வந்த ரம்யா அந்த புதியவனை பார்த்து விதிர்விதிர்த்து போனாள்.

 

பயத்தினால் தயங்கித் தயங்கி வந்தவள் பாஸ்கரனின் முதுகிற்கு பின்னால் மறைந்து நின்று, அந்த புதியவனை எட்டிப்பார்த்தாள்.

“வாடி…வா…. அது என்ன அவன் பின்னாடி பம்முற ” என்றவனை மேலும் பயம் பொங்க பார்த்தாள். அவளை திரும்பிப்பார்த பாஸ்கரன் நான் இருக்கிறேன் என்பது போல் விழி மூடித்திறக்க, இதனை பார்த்த புதியவன் வெகுண்டெழுந்தான்.

 

“ஓ. …இவன் தான் உன் புது ஆளா?  ம்….வாட்ட சாட்டமா நல்லாத்தான் இருக்கான்…. என்ன உங்களுக்குள்ள எல்ல்ல்லாம் முடிஞ்சிதா? ” கண்ணடித்து பச்சையாக பேசியதுதான் தாமதம், அவனது சட்டையை கொத்தாக பிடித்துவிட்டான் பாஸ்கரன். அவன் கண்களில் கொலைவெறி அப்பட்டமாக தெரிந்தது. அங்கே நின்ற கூட்டமே “ஐய்யோ!!!!  ” என்று அலற, சட்டென முன்னே வந்து புதியவனின் சட்டையிலிருந்து பாஸ்கரனின் கரங்களை பலங்கொண்ட மட்டும் விடுவிக்க முயன்றாள் ரம்யா

 

“விடுங்க சார், பிஸீஸ் விடுங்க” என்ற ரம்யாவின் கெஞ்சும் குரலுக்கு

“என்ன தைரியமிருந்தா இந்த நாய் உன்னை பத்தி இப்படி கண்டதையும் பேசும்” அவன் பிடி இன்னும் இறுக்கமானது.

 

“ஐய்யோ விடுங்க ” கதறினாள் ரம்யா

 

“இந்த நாயை சும்மா விடுரதா? இவன கொல்லாம விடமாட்டேன்” ஆக்ரோஷமாக பேசினான் பாஸ்கரன்.

 

இத்தனை நாட்களாய் இதயத்தில் நெரிஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்த முள் வெளி வரும் நேரம் வந்துவிட்டது என்ற கசப்பான உண்மை பிடிபட வேறு வழியில்லாமல் தன் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கலியை வெளியே எடுத்தவள் அதனை பாஸ்கரனிடம் காண்பித்தாள். தங்கத் தாலி அதில் ஜொலி ஜொலித்தது.

 

“இவரு என்னை தொட்டு தாலிகட்டிய புருஷன்…. எங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கும், நடுவுல நீங்க யாரு?  எடுங்க கையை” உறுதியான குரலில் திடமாக அவள் பேசியதும், பாஸ்கரனின் கைகள் புதியவனின் சட்டையிலிருந்து தாமாக அகன்றன.

அவன் இதயத்தில் நூறு கோடி அணு குண்டுகள் மொத்தமாக ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியது.




Comments are closed here.

You cannot copy content of this page