மனதோடு ஒரு ராகம்-19
4419
1
அத்தியாயம் – 19
சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் கேசவனின் அறை…
“ரவிக்கு நீங்க என்ன வேணும்?”
“தம்பி டாக்டர்”
“ம்ம்ம்”
“ரவி எப்படி இங்க?”
“சுயநினைவில்லாம ரோட்லக் கிடந்தாரு. நான்தான் இங்க அட்மிட் பண்ணினேன். ரொம்ப நாளாக் குடிக்கிறாரோ!”
“ஆமாம் டாக்டர்”
“ஓ… அவரோட உடம்பு கண்டிஷன் மோசமா இருக்குப்பா. அதைவிட மனசு ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கு. பேச்செல்லாம் தப்பா இருக்கு”
“தப்பாப் பேசுறானா!” குழப்பத்தில் நெற்றிச் சுருங்கியது.
“ம்ம்ம்… சேலத்துல ஒரு முக்கியமான ஆளைக் கொலை செய்யப் போறதா உளர்றது சரியான பேச்சு இல்லையே”
சித்தார்த் உதட்டைக் கடித்தான். ரவி என்ன பேசியிருப்பான் என்பது அவனுக்குப் புரிந்தது.
“இந்த மாதிரி ஆக்டிவிட்டிஸ் அவருடைய உயிருக்கே ஆபத்தாயிடும் தம்பி. இது ரொம்ப சீரியசான விஷயம்”
“குடும்பப் பிரச்சனை டாக்டர். மத்தபடி எதுவும் இல்ல” சமாளித்தான்.
“உங்க பிரச்சனையைப் பற்றி எனக்கு எதுவும் தெரிய வேண்டியது இல்ல. ஆனா நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா உங்க பிரதருக்கு இமீடியட்டா கெளன்ஸ்லிங் தேவைப்படுது”
“ஓகே டாக்டர்”
“நீங்க எங்க இருக்கீங்க? சொந்த ஊர் எது?”
“சொந்த ஊர் ஸ்ரீரங்கம். நான் சென்னைல இருக்கேன்”
“ரொம்ப நல்லது. சென்னைல எனக்குத் தெரிஞ்ச ‘டி அடிக்ஷன் சென்டர்’ ஒண்ணு இருக்கு. அங்க இந்த வாரம் ‘ஆல்கஹால் ரி ஹபிட்டேஷன் கோர்ஸ்’ ஸ்டார்ட் பண்ணுறாங்க. ரவியை அங்க அனுப்பறதுக்கு ஏற்பாடுப் பண்ணுங்க”
“சரியாயிடுவானா டாக்டர்”
“சின்ன வயசுதானே. ரெக்கவர் ஆயிடுவார். டிஸ்ச்சார்ஜ் பண்ணிக் கூட்டிட்டுப் போங்க”
“தேங்க் யூ டாக்டர்” அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
###
சென்னை… சித்தார்த்தின் இல்லம்…
“சொன்னாக் கேளு சித்து… சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன்டா”
“இது மாதிரி நீ ஆயிரம் சத்தியம் பண்ணிட்ட. இனி ஏமாற முடியாது”
ரவி பதில் பேச முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.
“எதுக்குடா நீ சேலத்துக்குப் போன? அங்க என்ன உன் மாமனாரா இருக்கான்?” எரிச்சலுடன் கேட்டான். சட்டென்று தலை நிமிர்ந்துத் தம்பியை முறைத்தான் ரவி. அவன் முகத்தில் கோவத்தின் ஜுவாலை தெரிந்தது.
“வேல்முருகன் இருக்கான்டா. அவனைக் கொன்னாத்தான் என் ஆத்திரம் அடங்கும்”
“இதுக்குத்தான்… இந்தக் கோவத்துக்குத் தான் கெளன்ஸ்லிங் தேவைன்னுச் சொல்றேன்” சித்தார்த் கிடிக்கிப்பிடிப் போட்டான்.
ரவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை. இயலாமையுடன் கண்களை இறுக மூடித் தலையைக் கோதினான். பெருமூச்செடுத்துத் தன் உணர்வுகளை அடக்கப் பெரும்பாடுபட்டான். அண்ணனைப் பார்க்க சித்தார்த்திற்குப் பாவமாக இருந்தது.
“நீ மாறனும் ரவி. நமக்காக இல்ல. அண்ணிக்காக…” – கெஞ்சலாகக் கூறினான்.
‘முடியாது’ என்பது போல் தலையைக் குறுக்காக ஆட்டிய ரவி சட்டென்று உடைந்தான். “இல்ல… இல்ல சித்து… நா… தமிழுக்கு நான் வேண்டாம்… அவ… அவ நல்லா இருக்கணும்டா” – சத்தம் போட்டு ஓவென்று அழுதான்.
“ரவி… ரவி.. என்னடா நீ? கோழை மாதிரி. உனக்கு ஒண்ணும் இல்ல. நீ அண்ணி கூடச் சந்தோஷமா இருக்கப் போற. நம்பிக்கையை விடாதடா. ம்ம்… அழுகையை நிறுத்து எழுந்திரு” – அண்ணனின் தோள்பிடித்து எழுப்பிவிட்டான்.
ரவி சுதாரித்துக் கொண்டு எழுந்தான். “குரு உனக்கு மட்டும் அண்ணன் இல்ல. எனக்கும்தான். நான் இருக்கேண்டா. விட்டுடுவேனா? போ… முகத்தைக் கழுவிட்டு வா” ஆறுதல் கூறிக் குளியலறைக்கு அனுப்பி வைத்தான்.
அந்த வேல்முருகனால்தான் இன்று தன் குடும்பத்தின் நிம்மதியே தொலைந்துவிட்டது என்கிற எண்ணம் சித்தார்த்தின் மனதில் மேலும் பகை உணர்ச்சியை அதிகரிக்கச் செய்தது. அதே நேரம் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தான்.
“என்னடா ஆச்சு உனக்கு? எத்தனை தடவை போன் பண்ணறது. எடுத்துப் பேச கூட டைம் இல்லையா? கதிர் அண்ணன் சொல்லன்னா நீ வந்துருக்க விஷயமே எனக்குத் தெரிஞ்சிருக்காது. ஆமா… அம்மா எப்படி இருக்காங்க?” படபடவென்று பொரிந்து கொண்டே சித்தார்த்தின் நெஞ்சில் கைவைத்து அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் பூர்ணிமா.
எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் அவன் வேல்முருகனின் மீது கொலைவெறியில் இருந்த நேரத்தில் பூர்ணிமா அங்கு வந்து சேர்ந்தது தான் தாமதம், சித்தார்த் என்னும் மனிதனுக்குள் ஒளிந்திருந்த மிருகம் சீற்றத்துடன் வெளியேறியது.
“யாருடி நீ? எதுக்கு இங்க வந்த?”
“என்ன!” – நம்பமுடியாத திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.
“நீ யாருன்னு கேட்டேன். எதுக்கு இங்க வந்தன்னுக் கேட்டேன்”
“என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்படியெல்லாம் பேசுற?”
“என்கிட்ட கேள்வி கேட்க நீ யாருடி? வெளியே போ முதல்ல. உன்ன பார்த்தாலே வெறி மண்டைக்கு ஏறுது” கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து அவள் மனதை உடைத்தான்.
கண்களில் திரண்டிருந்த கண்ணீருடன்,” நீ இந்த அளவுக்கு கோவப்படற மாதிரி நா என்ன பண்ணுனேன்னே எனக்கு தெரியல. எதுவா இருந்தாலும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அமைதியா இருந்து, நா என்ன சொல்ல வர்றேன்னு கேளு சித்து” என்றாள். அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே குளியலறை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் ரவி. பூர்ணிமா அவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.
“யார்ரா இந்தப் பொண்ணு?” – ரவி கேட்டான்.
“……………..” – சித்தார்த்திடமிருந்து பதில் இல்லை.
பூர்ணிமாவிற்கு அவனை எங்கோ பார்த்தது போல் இருந்தது. அவன் யார் என்கிற விபரத்தை நினைவடுக்கிலிருந்து உருவ முயன்றாள். இயலவில்லை. சித்தார்த்திடம் பார்வையைத் திருப்பினாள். அவன் முகத்தில் தெரிந்தச் சீற்றம் அவளை அச்சம் கொள்ளச் செய்தது. ஆனால் அச்சம் கொண்டு ஒதுங்கிவிடும் நேரம் இதுவல்லவே. அவள் அவனிடம் சொல்ல வேண்டியதை இன்னும் சொல்லவில்லையே.
“உன்கிட்ட தனியாப் பேசணும் சித்து. ஒரு அஞ்சு நிமிஷம்… ப்ளீஸ்…” கெஞ்சினாள்.
“மரியாதையாச் சொன்னாப் புரியாதா? ஏன் இப்படி ஸீன் கிரியேட் பண்ற? கெளம்பு…” – விரட்டினான்.
“ஏய், கேக்கறேன்ல… யார்ரா இந்தப் பொண்ணு. என்ன பிரச்சனை?” – ரவி தம்பியை அதட்டினான்.
அவன் பதில் சொல்வதற்கு முன் பூர்ணிமா பேசினாள். “ஸீன் கிரியேட் பண்றேனா! நானா? ரெண்டு வருஷமாப் பழகிட்டு இப்போ காரியம் முடிஞ்சதும் விரட்டிவிடப் பறக்கற இல்ல?” அவள் முடிக்கும் முன் சித்தார்த் கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.
“அப்டியே விட்டேன்னா செவுலுத் திரும்பிடும். நான் உன்கூடப் பழகினேனா? விலகிப் போகப்போக விடாம என் பின்னாடி சுத்தினது நீ.. லவ் பண்றேன்னு என்கிட்டக் கொஞ்சிக் குழாவினது நீ… ஒவ்வொரு தடவையும் அத்து மீறிப் போக என்னை டெம்ட் பண்ணினது நீ… எல்லாத்தையும் நீ பண்ணிட்டு இப்போ என் மேல குத்தம் சொல்றியா? கேவலமா இல்ல?” – வார்த்தைகளை விஷமாகக் கக்கினான்.
பூர்ணிமாவிற்கு உலகமே தலைகீழாய் சுற்றியது. நெஞ்சை அடைத்தது. ‘ஹார்ட் அட்டாக்கா! சாகப் போறோமா! செத்துடு… செத்துடு பூரணி… செத்துடு…’ அவள் தன்மானம் அலறியது. கண்கள் இருட்ட நிலைதடுமாறிப் பொத்தென்று சோபாவில் விழுந்தாள். வலுவிழந்த அவளுடைய நிலை இறுகியிருந்த அவன் உள்ளத்தை சிறிதும் அசைக்கவில்லை. கொலைவெறிபிடித்த அரக்கன் போல் அவள் கையைப் பற்றி இழுத்து வீட்டிலிருந்து வெளியே தள்ளி கதவை அறைந்து சாத்தினான்.
“பைத்தியமாடா நீ? ஏண்டா இப்படி நடந்துக்கற? கேக்குறேன்ல… பதில் சொல்லுடா” – ரவி தன் தம்பியை அதட்டி நியாயம் கேட்டான்.
“இப்ப என்கிட்டே எதுவும் கேட்காத. என்ன கொஞ்சம் தனியா விடு” – சித்தார்த் ரவியிடமிருந்து விலகி ஜன்னல் பக்கம் சென்று நின்றான். அனைத்தையும் இழந்துவிட்ட அபலை பெண்ணாக தளர்ந்த நடையுடன் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் பூர்ணிமா அவன் கண்ணில் பட்டாள். நொடிப்பொழுதில் சுருக்கென்று அவன் இதயத்திற்குள் வலி ஒன்று ஊடுருவியது. அது அவன் கண்களையும் கலங்க செய்தது. நீர் திரையினூடே களங்களாக தெரியும் பூர்ணிமாவின் பிம்பம் அவனிடமிருந்து வெகுதூரமாக விலகிக் கொண்டிருந்தது..
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Niveta Mohan says:
Adapaaviii…… Siddu.. Enna kaariyam pannitaa… Poorani paavam da…
Thappu pannitiye Poorani konjam yosichurkkalaam
Counselling sidkkum ravikum serthu thevai