Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-20

அத்தியாயம் – 20

 

வாய்விட்டுச் சொல்ல முடியாத துயரத்தை மனதிற்குள் போட்டு அழுத்தி வைத்துவிட்டு, இயல்பாக இருப்பது போல் தன்னை காட்டிக் கொள்ள முயன்றான் சித்தார்த். எதிலும் லயிக்க முடியாமல் தடுமாறும் தம்பியை நுட்பமாக கவனித்துக் கொண்டிருந்த ரவியிடம் அவனுடைய முயற்சி செல்லுபடியாகவில்லை.

 

“லவ்வா? நல்ல பொண்ணாத் தானேடா தெரியறா? அவளுக்கிட்ட என்ன கோவம் உனக்கு?” – ரவி.

 

சித்தார்த் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. ரவியின் பார்வை பதிலை எதிர்பார்த்து சித்தார்த்தின் முகத்திலேயேப் பதிந்திருந்தது.

 

“கோவம் அவமேல இல்ல. அவ அப்பன் மேல” – மெல்ல நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.

 

கணநேரத்தில் ரவியால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. இருந்தாலும் அவன் நினைப்பதை உறுதிப் படுத்திக்கொள்ளும் பொருட்டு “என்ன சொல்ற நீ?” என்றான்.

 

“இங்க வந்துட்டு போனவதான் வேல்முருகனோட பொண்ணு” – சொல்லும் பொழுதே அவள் வேல்முருகனின் மகளாக இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் மனதில் படர்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

 

“என்ன!” – நம்பமுடியாத ஆச்சர்யத்துடன் கேட்டான் ரவி.

 

‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தான் சித்தார்த்.

 

“இவ எப்படிடா உன்னோட?”

 

“ஒரே காலேஜ்”

 

“அவளைப் பயன் படுத்திக்கிட்டியா?”

 

“…………..” சித்தார்த்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

 

“கேக்குறேன்ல?”

 

“வேல்முருகனோட வாழ்க்கை இனி நரகம்டா”

 

ரவியின் பார்வை தம்பியின் கண்களை ஊடுருவியது.

 

“பூரணியைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நான் இல்லன்னா அவ வெறும் ஜடம். மகளுக்காகவே வாழ்க்கையை அர்பணிச்சவனாச்சே. இனி ஒவ்வொரு நிமிஷமும் அவளை நெனச்சு துடிப்பான். நரகமுன்னா என்னன்னு இனி அவனுக்குப் புரியும். அவன் சேத்து வச்சிருக்க சொத்து, பணம், புகழ், அதிகாரம் எல்லாம் அவனை பார்த்து இனி எகத்தாளமா சிரிக்கும்” – சித்தார்த்திடமிருந்து வன்மம் நிறைந்த சொற்கள் கொதிப்புடன் வெளிப்பட்டன. நொடியில் ரவியின் கைரேகை அவன் கன்னத்தில் பதிந்தது.

 

“தேர்ட் ரேட் பொறுக்கிப் பண்ற வேலையைப் பண்ணிருக்க. நாயே… நாயே!”

 

“ரவி!!!”

 

“ஒரு வார்த்தப் பேசாத”

 

“ஏண்டா? அவனைப் பழிவாங்கணும்னு தானே நீ துடிச்சுகிட்டு இருந்த? அருவாளைத் தூக்கிட்டு வெட்டப் போனியேடா!”

 

“அதைச் செஞ்சிருக்கணும்டா. நீ நல்ல ஆம்பளையா இருந்த அதைச் செஞ்சிட்டு வந்து என்கிட்டச் சொல்லியிருக்கணும். அதைவிட்டுட்டு இப்படிக் குள்ளநரித்தனம் பண்ணியிருக்கக் கூடாது”

 

“ஏன் பண்ணக்கூடாது? என் அண்ணனை அவன் கொள்ளும் போது, என் அண்ணியை அவன் உயிரோட கொளுத்தும் போது, நம்ம குடும்பத்து வாரிசைக் கருவிலேயே அவன் அழிக்கும் போது… நான் மட்டும் அவனோட பொண்ண பழிவாங்கக் கூடாதா. செய்வேன். வாய்ப்புக் கெடச்சா இன்னமும் அதிகமா செய்வேன்” – சிங்கமென கர்ஜித்தான்.

 

“அப்பன் பண்ணினத் தப்புக்கு மகளைத் தண்டிக்கிறது பெரிய பாவம்டா. அந்தப் பொண்ணு உனக்கு என்னடா துரோகம் பண்ணினா? அவளை ஏன் கஷ்ட்டப்படுத்தற? பொம்பளப் புள்ளைய அழுவ வைக்காதடா…”

 

“அதை நீ சொல்லாத. அந்த தகுதி உனக்கு இல்ல”

 

“சித்தூ…” – குரலை உயர்த்தி தம்பியை அதட்டினான்.

 

“நீயே உலகம்… நீ மட்டுமே வாழ்க்கைன்னு உன்னையே சுத்தி சுத்தி வந்த பொண்ணுக்கு நீ என்னத்த செஞ்சு கிழிச்சுட்ட? அவங்க கண்ணீர தொடச்சுவிட்டியா? இல்ல அவங்களை புரிஞ்சுக்கத்தான் முயற்சி பண்ணுனியா? எதுவும் இல்லைல? அப்போ பேசாத…”

 

ரவி வாயடைத்துப் போனான். உண்மைதானே! தமிழி என்ன பாவம் செய்தாள்! ஆனால் அவன் தமிழியை வேண்டாம் என்று கூறுவது அவளுடைய நலனைக் கருத்தில் கொண்டல்லவா! இவன் எதற்கு எதை இணைகூட்டிப் பேசுகிறான்….

 

“புரியாம பேசாதடா… தமிழிக்கு நான் இல்லன்னா வேற வாழ்க்கை அமையும். ஆனா வேல்முருகனோட பொண்ணுக்கு? அவளோட நீ அத்து மீறிப் பழகியிருக்க சித்து… அதுக்கு என்ன பதில் சொல்லப் போற?” – நியாயம் கேட்டான்.

 

சித்தார்த்தின் மனசாட்சிச் சுட்டது. பதில் சொல்ல முடியாமல் உதட்டைக் கடித்தான்.

 

“இந்தத் தப்பை எப்படியாவது சரி பண்ணிடு சித்து”

 

“என்னுடைய நோக்கம் பூர்ணிமாவைக் காயப்படுத்தறது இல்ல. அவ அப்பன பழிவாங்கறதுதான். இவளை அடிச்சாதான் அவனுக்கு வலிக்கும். என்னால வேற என்ன பண்ண முடியும்? எது எப்படி இருந்தாலும் குருவுக்கு நியாயம் கிடைக்கணும். கிடைச்சிடிச்சு… இதுக்கு மேல பேசறதுக்கு எதுவும் இல்ல. இதை இத்தோட விட்டுட்டு நிம்மதியா இரு” என்று தன்னுடைய இறுதி முடிவை அண்ணனிடம் கூறியவனின் மனதில் துளியளவும் நிம்மதி இல்லை. வேதனை மட்டுமே நிறைந்திருந்தது.

 

தலையைக் குறுக்காக ஆட்டித் தம்பியின் கூற்றை மறுத்தான் ரவி. “இப்பவும் சொல்றேன் சித்து. நீ பண்ணினது தப்பு. அதை எப்படியாவது சரி பண்ணப் பாரு” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர எத்தனித்தவன் நின்று, தம்பியைத் திரும்பிப் பார்க்காமலேயே அதைக் கேட்டான்.

 

“அந்த ஆல்கஹால் ரி ஹாபிட்டேஷன் கோர்ஸ் எப்போ ஸ்டார்ட் பண்ணறாங்கன்னுச் சொன்ன?”

 

***

 

ஏமாற்றம்… நம்பிக்கைத் துரோகம்… அவமானம்… எப்படித் தாங்குவாள் அந்தச் சின்னப் பெண். அதனால்தான் செத்துவிட வேண்டும் என்று தோன்றுகிறதோ!

 

அவள்தான் அவன் பின்னால் சுற்றினாளாம்! அவள்தான் அவனைக் காதலிப்பதாக் கூறினாளாம்! அதற்கும் மேலாக அவள்தான் அவனோடு சேர்ந்து வாழவும் தூண்டினாளாம். எத்தனைக் கேவலம்…!

 

போன் செய்து கொஞ்சிக் கொஞ்சி அழைத்ததெல்லாம் மறந்துவிட்டதா! அவனுடைய மனக் குழப்பங்களுக்கெல்லாம் அந்த அப்பாவிப் பெண்ணை மருந்தாக்கிக் கொண்டதெல்லாம் நினைவில் இல்லையா! எல்லாவிதத்திலும் இவளைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டு இப்போது குப்பையைப் போல் ஒதுக்கிவிட்டானே! நினைக்கவே முடியவில்லை. கண்ணீர் வற்றிவிட்டதோ என்னவோ, விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த பூர்ணிமா அழவில்லை.

 

சித்தார்த்தா இப்படிச் செய்தான்! அவனால் எப்படி முடிந்தது? அவளுடைய களங்கமில்லா அன்பு அவன் இதயத்தைத் தொடவே இல்லையா? அவளுக்குத் துரோகம் செய்ய அவன் மனம் எப்படி ஒப்பியது! இன்னமும் அவளால் முழுமையாக நம்ப முடியவில்லை. ஒருவேளைக் கனவாக இருக்குமோ! இல்லையே… இதோ கிள்ளினால் வலிக்கிறதே! அப்படியானால் அவன் ஏமாற்றியது உண்மைதான். மீண்டும் எப்படி அவனால் முடிந்தது என்னும் கேள்வி தான் அவள் முன் வந்து நின்றது.

 

ஏன் முடியாது? அவள் செய்யவில்லையா? அவன்தான் உலகம் அவன்தான் வாழ்க்கை என்று நினைத்து, பெற்றவருக்கும் வளர்த்தவர்களுக்கும் துரோகம் செய்தாளே! அது எப்படி அவளுக்குச் சாத்தியமானது? காதல்!!! உலகத்தில் இல்லாத காதல்…! அது அவள் கண்ணை மறைத்தது போல் அவன் கண்ணை எது மறைத்ததோ! பேராசையும் பெண் பித்தும்தான் மறைத்திருக்கக் கூடும். வேறு என்னவாக இருக்க முடியும்? பாவிப் பாவி…!

 

எத்தனை ஆசைகளோடும் கற்பனைகளோடும் பட்டாம்பூச்சி போல் சிறகடித்துக் கொண்டிருந்தாள். நயவஞ்சகமாக அவள் சிறகை வெட்டி அவளைத் துடிதுடிக்க வைத்துவிட்டானே! இனி என்ன செய்யப் போகிறாள். இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள். அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவின் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறாள். அதைவிட வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்ன வழி! தெரியவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது. இனியும் உயிரோடு இருந்து என்ன செய்யப் போகிறோம். பேசாமல் செத்துவிடலாம். ஆம்… சாவுதான் ஒரே வழி… பூர்ணிமா அந்த முடிவை எடுத்த நொடிப் பளீரென்ற வெளிச்சம் அந்த அறையில் பரவியது.

 

“லைட் போடாம இருட்டுக்குள்ள உட்கார்ந்துகிட்டு என்ன செய்ற?” – திவ்யா கேட்டாள்.

 

“ம்ஹும்… ஒண்ணுமில்ல… சும்மாதான்” – எழுந்து பீரோவைத் திறந்து மாற்று உடையை எடுத்தாள்.

 

“சித்தார்த்தைப் பார்க்கப் போனியே. என்ன சொன்னான்?”

 

“குளிச்சிட்டு வந்து சொல்றேன்” – குளியலறைக்குள் நுழைந்துக் கதவைச் சாத்திக் கொண்டாள்.

 

கையில் இருந்த துணியை ஹாங்கரில் மாட்டிவிட்டுப் பைப்பைத் திறந்துவிட்டாள். மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து வலது கை மணிக்கட்டில் ‘சரட்’ ‘சரட்’ ‘சரட்’ என்று மூன்று முறைக் கிழித்துக் கொண்டாள். ரெத்தம் கொட்டியது. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. பொருட்களெல்லாம் மங்கலாக… மேலும் மேலும் மங்கலாகத் தெரிந்துப் பின் மறைந்து போக, பூர்ணிமா சரிந்துத் தரையில் விழுந்தாள்.

 




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    giffi i says:

    Omg


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      enna aachchu!!!

You cannot copy content of this page