முகங்கள் – 2
2655
4
அத்தியாயம் – 2
சென்னை நிவாரணம் ஹாஸ்பிடல் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. கொத்துக்கொத்தாக பத்திரிக்கையாளர்களும் ரசிகர்களும் ஆங்காங்கே காணப்பட்டார்கள்.
மருத்துவமனையின் முதன்மைக் கட்டிடத்தின் வராண்டாவில், காவல்துறை ஆய்வாளர் கிருபாகரனின் சரமாரியான கேள்விகளுக்கு சிறு பதட்டத்துடன் பதிலளித்துக் கொண்டிருந்தான், நந்தினியை பார்க்க வந்த தேவ் நாயர்.
“அவங்க நாலு பேரையும் நான் தான் சார் அந்த காட்டுக்குள்ள இறக்கி விட்டேன். டைரக்டர் சார் சொன்னது போல சரியா அரைமணி நேரம் கழிச்சி அவங்களை பிக்அப் பண்ண மறுபடியும் அதே இடத்துக்குப் போனேன். அப்போ டைரக்டர் சார் மட்டும் மேலே வந்து ஸ்டெரச்சரை கயறுகட்டி கீழே இறக்கினாரு, அதுக்குள்ள பிரகாஷ் சாரும் ஏணில ஏறி வந்துட்டாரு, என்னாச்சுன்னு யோசிச்சேனே தவிர எதுவும் கேக்கலை, முதல்ல சந்தனா மேடத்தையும் பிறகு நந்தினி மேடத்தையும் மேலே ஏத்தினாங்க,ரெண்டு பேருமே மயக்கமாயிருந்தாங்க. பின்னாடியே ரன்வீரும் ஏறிவந்துட்டான் ரொம்ப டென்க்ஷனா இருந்தான். எல்லாரையும் ஏத்திக்கிட்டு ஹெலிகாப்டரை மூவ் பண்ணிட்டேன் . அப்புறம் போர்ட்பிளேர்ல இருந்த ஹாஸ்பிடல்ல சேர்த்தோம் ,ஆனா சந்தனா ஸ்பாட்லயே இறந்துட்டாங்கன்னு சொல்லிட்டாங்க ,நந்தினி மேடம் அதிர்ச்சில இருந்தாங்க. ஸ்பெஷல் பர்மிஷன் கேட்டு பிரைவேட் விமானத்துல நம்ம ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டோம்.”
“சந்தனாவிற்கு தலையில் எப்போது, எப்படி அடி பட்டது?”
“ஸ்பாட்ல நான் இல்ல சார்… குகைக்குள்ளே என்ன நடந்ததுன்னு எதுவும் எனக்குத் தெரியாது”
“ம்…. ம்…ஓகே. மேக்கப்மேனுடைய கான்டாக்ட் நம்பர் கிடைக்குமா? ” – தேவ் கூற தனது செல்லில் குறித்துக்கொண்டார் கிருபாகரன்.
“ஓகே மிஸ்டர் தேவ் நாயர், தேங்ஸ் ஃபார் யூவர் கோ – ஆப்ரேஷன். ஃபர்தரா இன்வஸ்டிகேஷன் இருந்தா கால் பண்ணுவேன். உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன் ” – இறுக்கமான முகமும் உதட்டில் புன்னகையுமாக முரணான பாவத்தோடு அவனிடம் கைநீட்டினார்.
அவரிடம் கைகுலுக்கிய தேவ் நாயருக்கு, அவர் கண்களில் ஒருவித நம்பகமின்மை இருந்ததோ என்கிற சந்தேகம் தோன்றியது. அந்த சந்தேகம் அவனுக்குள் பயத்தை துளிர்விடச் செய்தது.
‘எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் போலீஸ் விசாரணை, கேஸ் என்றால் பதட்டம் இருக்கத்தானே செய்யும் ‘என்று தன்னைத்தானே அவன் சமன்படுத்திக்கொள்ள முனைகையில்
ருத்ரபிரதாப்பின் பிஎம்டபிள்யூ கார் கான்கிரீட் தரையை வழுக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் லாபியில் நுழைந்தது. பத்திரிக்கையாளர்கள், மைக்கும் கேமிராவுமாக அவனது காரை முற்றுகையிட்டனர்.
கதவினை திறந்து கொண்டு அவன் இறங்கியதும் பிளாஷ் வெளிச்சம் அவனை குளிப்பாட்டியது. அவனோடு பிரகாஷும் வந்து இறங்கினான்.
“சார் உங்கள் படத்தில் நடிக்கும் நடிகையின் அசிஸ்டன்ட் இறந்ததற்கு என்ன காரணம் சார்?”
தன் உயர்தர கூலரை கழட்டிய படி “இட் வாஸ் ஏன் ஆக்சிடன்ட். அவங்களுக்கு ஏற்கனவே வெர்ட்டிகோ பிராப்ளம் இருந்திருக்கிறது ஆனால் அவங்க அதைபற்றி எங்களுக்கு இன்பார்ம் பண்ணல. பணத் தேவை அதிகம் இருந்ததால் உண்மையை மறைச்சிருக்காங்க. நாங்கள் ஷுட் செய்தது பாரைகள் அதிகம் இருக்கும் லோகேஷன் அதனால் நடக்கும்பொழுது வெர்டிகோ பிராப்ளம் தாக்க அவங்க மயங்கி கீழே விழுந்துட்டாங்க. நாங்கள் ஓடிப்போய் தூக்க முயற்சித்தோம் அப்போதுதான் அவங்க தலையிலிருந்து ரத்தம் கசிந்திருந்ததை நோட் பண்ணினோம், துரதிஷ்டவசமாக சந்தனா ஒரு கூரான கல்லின் மீது தலை பலமாக அடிபடும் படி விழுந்துட்டாங்க”
“படப்பிடிப்பிற்கு நடிகை மட்டும் போதுமே ஏன் நடிகையின் அசிஸ்டன்டும் உடன் வந்தார்கள்?”
“உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு மிஸ்டர். ஒர்கிங் அவர்ஸ்ல அசிஸ்டெண்ட்ஸ், பாஸ் கூடவே இருக்கிறதுதான் வழக்கம். ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட் அண்ட் ப்ளீஸ் அவாய்ட் சில்லி கொஸ்டின்ஸ் லைக் திஸ்” – கண்டிப்புடன் வெளிப்பட்டது அவன் குரல்.
“நந்தினி மேடத்திற்கும் அடிபட்டதா சார்? அவர் ஏன் மருத்துவமனையில் இருக்கிறார்.?”
“ஷி வாஸ் ஷாக்ட். டாக்டர்ஸ் டிரீட்மன்ட் கொடுக்கிறாங்க. அதனால் சீக்கிரமே குணமாயிடுவாங்க.”
“ஸ்பார்ட்ல நீங்க நாலுபேர் மட்டும் இருந்ததா சொல்லிக்கிறாங்களே சார். உண்மையா?”
“உண்மைதான்… நாங்கள் ஷீட் செய்த குகை மிகவும் சிறியது. அங்கே அதிக அளவு தண்ணீர் ஊற்றுதான் இருக்கு. அதனால் அவசியப்பட்டவங்களை மட்டும் கூட்டிட்டுப் போனோம்”
“சார்… ஷுட்டிங் ஸ்பாட்ல நீங்க நாலுபேர் மட்டும் இருந்ததா சொன்னீங்க. அதில் ஒருவர் இல்லை. ஒருவர் சிகிச்சை பெறுகிறார். வேலை என்று வந்துவிட்டால் நீங்கள் கண்டிப்புடன் இருப்பீர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படி ஏதேனும் ஸ்டிரஸ்சில் அவர்களை….” – கேள்வியை முடிக்காமல் இழுத்தான்.
சட்டென்று சிரித்தான் ருத்ரபிரதாப். “சினிமாக்காரனை விட நீங்க நல்லா ஸீன் கிரியேட் பண்ணுறீங்க. காண்டாக்ட் நம்பர் கொடுங்க. அடுத்த படம் பண்ணும் போது ஸ்டோரி டிஸ்கஷன் டீம்ல ஜாயின் பண்ணிக்கலாம்” – எள்ளலாகக் கூறியவன் தொடர்ந்து, ” போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ஸும் சந்தனாவோட பழைய மெடிக்கல் ரிப்போர்ட்ஸும் பிரஸ்க்கு கொடுக்கப்படும். சோ ப்ளீஸ் எக்ஸ்கியூஸ் மீ…” – பதட்டப்படாமல் நிதானமாக ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்துவிட்டு பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு மருத்துவமனை கட்டிடத்திற்குள் நுழைந்தான். அவனை பின் தொடர்ந்தான் பிரகாஷ்.
உள்ளே வரவேற்பறையில் காத்திருந்த கிருபாகரன் இவர்களை பார்த்ததும் எழுந்து வந்து கைகுலுக்கினார்.
“ஹலோ மிஸ்டர் ருத்ரபிரதாப். நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாகரன்”
“சொல்லுங்க சார்! ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?”
“சந்தனா டெத் விஷயமா ஃபார்மலா ஒரு சின்ன என்கொய்ரி. தனியா பேசலாமா?”
“நிச்சயமா” என்று அவரிடம் உறுதியளித்தவன், பிரகாஷிடம் “நீ உள்ள போ நான் வர்றேன்” என்றான்.
“ஒரு நிமிஷம் சார். நீங்க தானே பிரகாஷ்? ” பிரகாஷை ஏறிட்டார் இன்ஸ்பெக்டர்
“எஸ்…”
“நீங்களும் ஸ்பார்ட்ல இருந்திருக்கீங்க! உங்கக்கிட்டேயும் கொஞ்சம் விசாரிக்கணும்”
“ஓகே சார்”
“மிஸ்டர் ருத்ரபிரதாபிக்கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன். ஒருமணி நேரத்துக்கு ஹாஸ்ப்பிட்டல இருந்து வெளியே எங்கேயும் போக வேணாம்”
“ஓகே” – என்று இறுக்கமான முகபாவத்துடன் இருவருக்கும் தலையசைத்துவிட்டு அங்கிருந்து அகன்றான் பிரகாஷ்.
அந்த அறையில் ஆய்வாளர் கிருபாகரனோடு ருத்ரபிரதாப் மட்டும் தனித்திருந்தான். இருவரும் எதிரெதிர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள்.
“நம்மளோட பேச்சுவார்த்தை ரெக்கார்ட் ஆகுது” என்று கூறியபடி வாய்ஸ் ரெக்கார்டர் ஒன்றை ஆன் செய்து நடுவில் வைத்துவிட்டு முதல் கேள்வியைக் கேட்டார் கிருபாகரன்.
“சந்தனாவை எப்படி உங்களுக்கு தெரியும்? ” என்று அடிமுடியைப் பிடித்தார். அதிலிருந்து அடுக்கடுக்காக நூறு கேள்விகளைக் கேட்டார். சில சமயம் கேட்ட கேள்வியையே வேறுவிதமாகக் கேட்டார். அனைத்துக் கேள்விகளுக்கும் வழக்கம் போல் நிதானமாகவும் பதட்டமில்லாமலும் பதில் சொன்னான் ருத்ரபிரதாப்.
இறுதியாக, “இது வெளிப்படையா பொதுவான இடத்துல நடந்த விபத்தா இருந்திருந்தா இவ்வளவு விசாரணை இருந்திருக்காது. ஆனா இந்த கேஸ் அப்படி இல்லை. மீண்டும் வருவேன், உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி” என்றார் சினேகமாக.
“நோ பிராப்ளம். கேள்வி கேட்பது உங்கள் வேலை. பதிலளிப்பது என் கடமை” என்று அவரிடம் கைகுலுக்கிவிட்டு எழுந்தான்.
விஐபி வெயிட்டிங் ரூமில் தனித்திருந்த ருத்ரபிரதாப்பின் முகம் இறுக்கமாக இருந்தது. அவனுடைய கண்கள் அடிக்கடி வாயிலை நோக்கியபடி இருந்தன.
உள்ளே பிரகாஷிடமும் அதே கேள்வி கேட்கப்பட்டது “சந்தனாவை உங்களுக்கு எப்படி தெரியும்? ”
“ருத்ரன் கதை எழுத ஒரு அமைதியான இடத்தை தேடினான், பொள்ளாட்சியிலிருந்து இருபது கிலோமீட்டர் உள்ளே ஒரு செழிப்பான கிராமம், அதுதான் சந்தனாவின் ஊர், பொதுவாகவே கதை எழுதும் பொழுதும், டிஸ்கஷன், லொகேஷன் செலக்ஷன் பொழுதும் நான் ருத்ரனுடன் இருப்பது வழக்கம் தான், எங்களுக்கு சாப்பாடு சந்தனாவின் வீட்டிலிருந்துதான் வரும், இயல்பிலேயே சினிமா ஆசை இருந்த சந்தனா, ருத்ரன் டைரக்டர்னு தெரிஞ்சதும் நடிக்க சான்ஸ் கேட்டாங்க, பட் நாங்க அதை பெருசா எடுத்துக்கலை, பாக்கலாம்னு சொல்லிட்டோம், ஆனா அவங்க விடலை, வேற ஏதாவது ஹெல்பர் வேலைன்னாலும் பரவாயில்லைன்னு கேட்டாங்க, அப்போதான் அவங்க வீட்டை பத்தி விசாரிச்சான் ருத்ரன், அவங்களுக்கு ஒரு சித்தியும் தங்கையும் தான்னு தெரியவந்தது, தங்கை சித்திக்கு பிறந்தவள், வீட்டில் சித்தி கொடுமையால்தான் அந்தப்பெண் வேலைகேட்டதேன்னு அப்போதான் தெரிஞ்சது, அதனால் மனமிரங்கிட்டான் ருத்ரன், அதேநேரத்தில் நந்தினிக்கு அசிஸ்டன்ட் தேவைன்னு கேள்விப்பட்டோம், உடனே சங்கத்துல சொல்லி நந்தினி மேடமோட மேனேஜர் அஷ்வின் கிட்ட கேட்க சொன்னோம், அவர் ஓகே சொன்னதும் சந்தனா நந்தினிக்கு அசிஸ்டென்டா ஜாயின் பண்ணிட்டாங்க, ” நீண்ட உரை நிகழ்த்தி நிறுத்தினான் பிரகாஷ்
அவனது பேச்சை உற்று கவனித்த இன்ஸ்பெக்டர் கிருபாகரனின் மூளையில் சிறு ஒளி, ஓரே கேள்வியில் இத்தனை விபரமும் கூறிவிட்டான் பிரகாஷ், ஆனால் இதில் பாதியை வரவைக்கவே ருத்ரனிடம் பத்து கேள்விகள் கேட்க வேண்டியிருந்தது ஆக இந்த பிரகாஷை தட்டினால் உண்மை தெரிந்துவிடும்,
“சந்தனா நந்தினியோட அசிஸ்டென்டா சேர்ந்த பொழுது நந்தினி மேடம் உங்க படத்துக்கு கால் ஷீட் கொடுத்துட்டாங்களா? ”
“இல்லை சார், சந்தனா மேடம் ஜாயின் பண்ணதுக்கப்புறம் தான் ருத்ரன் இந்த ஸ்கிரிப்ட்டை எழுதி முடிச்சான், அப்போ நிறைய ஹீரோயின்கிட்ட கால்ஷீட் கேட்டோம் நந்தினி மேடமோடது தான் ஒத்துவந்துச்சு, அதான் அவங்களையே பிக்ஸ் பண்ணிக்கிட்டோம்”
“அதுக்கு பிறகு அவங்க நடிக்க வாய்ப்பு கேக்கலையா? ”
“இல்லை சார், அவங்களும் நந்தினி மேடமும் ரொம்ப நல்ல ஃபிரண்ட்ஸ்சா இருந்தாங்க, நந்தினிமேடமோட அஸிஸ்டென்டாவே கண்ட்டினியூ பண்ணத்தான் ஆசைபட்டாங்க ”
“அவங்களுக்கு எப்படி அடிபட்டது? ”
“ஷாட் முடிஞ்சு பேக்அப் பண்ணிகிட்டிருந்தோம் சார், நல்லாதான் சார் இருந்தாங்க, திடீர்னு ஒரு அலறல், கேமிராவை பேக் பண்ணிட்டிருந்த நான் பார்த்த போது தரையில கிடந்தாங்க, அதுக்குள்ள மத்த மூனுபேரும் அவங்க கிட்ட ஓடி வந்தோம், ஆனா மூச்சு பேச்சு இல்ல சார், உடனே ஹாஸ்பிடல் தூக்கிட்டு போயிட்டோம், தலையில இரத்தம் கூட வந்தது”
“அடிபட்டதும் அவங்க ஏதாவது பேசினாங்களா? ”
“இல்ல சார் ”
“நந்தினி மேடம் ஏன் ஹாஸ்பிடல்ல இருக்காங்க?”
“சந்தனா மேடம் தலையில இரத்தத்தை பார்த்ததும் அவங்களும் மயங்கி விழுந்துட்டாங்க சார், அதிர்ச்சி, அவங்க ரெண்டுபேரும் ரொம்ப குலோஸ் சார் ”
“சந்தனாக்கு வெர்ட்டிகோ இருக்குன்னு முன்னமே தெரியுமா? ”
“தெரியாது சார், டாக்டர்ஸ் சொன்னதுக்கப்புறம் தான் தெரியும் ”
இன்னும் சில கேள்விகளை கேட்ட பின்பு பிரகாஷை அனுப்பிவைத்தார் கிருபாகரன்
சரியாக அரைமணிநேரம் கழித்து ருத்ரன் காத்திருந்த அறைக்குள் நுழைந்தான் பிரகாஷ்
“என்ன ஆச்சு?” என்று எழுந்து வந்தான் ருத்ரபிரதாப்.
“நத்திங் டு ஒர்ரி”
“ஏதாவது கிரிட்டிக்கலான கேள்வி?”
“எல்லாம் எதிர்பார்த்ததுதான். சமாளிச்சுட்டேன். டென்ஷனாகாத” – நண்பனைக் கட்டிக்க கொண்டான்.
“அடுத்து ஸ்பாட்ல இருந்தது நந்தினிதான். அதிலும் அவங்க அசிஸ்டன்ட் சந்தனாங்கரதால கேள்விகள் கடுமையா இருக்க வாய்ப்பிருக்கு ” என்ற ருத்ர பிரதாப் அங்கேயிருந்த சேரில் அமர.
‘ருத்ரனின் முகத்தில் சிறு கவலை வந்து போனதோ? ‘என்ற குழப்பத்துடன் அவனருகில் அமர்ந்த பிரகாஷ்.
“எப்போ விசாரிப்பாங்க? ” – என்று கேட்டான்
“எனி டைம். கான்ஷியஸ் வரணும்… டாக்டர் அலவ் பண்ணனும்” என்றான் பிரகாஷின் கண்களை கூர்மையாகப் பார்த்து.
புரிந்துக் கொண்டதற்கு அடையாளமாக “ம்ம்ம்…” என்று மேலும் கீழும் தலையசைத்தான் பிரகாஷ்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த நர்ஸ், “டாக்டர் உங்களை அழைக்கிறார்” என்றாள் ருத்ரபிரதாப்பிடம்.
நண்பனிடம் அர்த்தம் பொதிந்த பார்வையை வீசியபடி நர்சுடன் நடந்தான் ருத்ரபிரதாப். மனதில் பக்கம் பக்கமாக வசனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நிஜவாழ்க்கைக்கே திரைக்கதை வசனம் தயாரிக்கும் நிலை ஏற்படும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.
முகங்களின் தேடல் தொடரும்……..
4 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sadha says:
Very interesting story……
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Radhi Muthuvel says:
Nice
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Achcho aala maathittangala
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Idhukea ippadiya…. innum naraiya iruku pa