மனதோடு ஒரு ராகம்-23
5278
2
அத்தியாயம் – 23
ஜெயராமன் தம்பதியும் குலசேகரனும் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. வேல்முருகனைப் பார்க்கச் சகிக்கவில்லை. மகள் ஏற்படுத்திய அவமானத்திலிருந்து மீள முடியாமல் உழன்று கொண்டிருந்தவர் தூணாய் நம்பியிருந்தது சகோதரர்களைத்தான். அவர்களின் துணை கொண்டுதான் அந்தக் குருவின் குடும்பத்தை வேரறுக்க நினைத்திருந்தார். ஆனால் நடந்ததோ வேறு. அவர் மலை போல நம்பியிருந்தவர்கள் இக்கட்டான நேரத்தில் அவரைக் கைவிட்டுச் சென்றார்கள். அவர் செயல்பட முடியாமல் நிலைகுலைந்து போனார்.
“மல்லிம்மா, என்னால தானே அவங்கல்லாம் போயிட்டாங்க” பூர்ணிமா ஆற்றாமையுடன் கேட்டாள்.
“எத்தன தடவ இதே கேள்வியக் கேப்ப பூர்ணி?”
“கஷ்ட்டமா இருக்கும்மா. அம்மா, பெரியப்பால்லாம் இல்லாம இந்த வீடே நல்லால்ல. எம்மேல இருக்கிறக் கோவத்துல அப்பாவையும் விட்டுட்டுப் போயிட்டாங்க. எல்லாத்துக்கும் நாந்தான் காரணம். என்னாலதான் எல்லாமே” உடைந்து அழுதாள்.
“சொன்னாக் கேளு பூர்ணி. நீயா எதையாவது நெனச்சு அழுதுகிட்டே இருந்தா என்ன அர்த்தம்? இங்க நடந்த எதுக்கும் நீ காரணம் இல்ல. எல்லாம் விதிப் படி நடக்குது. நீ அமைதியா இரும்மா” நிலவரத்தை ஓரளவுக்கு ஊகித்து வைத்திருந்த மல்லிகா அதைப் பூடகமாகப் பூர்ணிமாவிற்கு எடுத்துரைத்தாள்.
“அமைதியா!” – விரக்தியாகக் கேட்டாள்.
“அப்படியெல்லாம் நினைக்காத பூர்ணி. இதுவும் கடந்து போகும்னு நினைச்சுக்க. துக்கப் பட ஒரு காலம் வந்தா சந்தோஷப்படவும் ஒரு காலம் வந்தே தீரும். அதை யாராலும் தடுக்க முடியாதும்மா” – ஆறுதல் கூறினாள்.
பூர்ணிமாவிற்குத்தான் ஆறுதல் அடைய முடியவில்லை. அவள் வாழ்க்கைச் சிதைந்ததோடு அல்லாமல் குடும்பமும் சிதைந்துவிட்டதே. இதைச் சரி செய்தால் ஒருவேளை அவள் மனம் சற்று ஆறுதலடையுமோ! முயன்றுப் பார்க்கலாம் என்று தோன்றியது.
“மல்லிம்மா… நா போயிப் பெரியப்பாக்கிட்ட மன்னிப்புக் கேட்டு வீட்டுக்குக் கூட்டிட்டு வரட்டுமா?”
“இல்ல… அது…”
“இல்ல… நா நேர்லப் போயி நின்னா அம்மாவுக்கும் என் மேல இருக்கக் கோபம் போயிடும். பெரிய பெரிப்பாவும் அப்படித்தான். சேகரன் பெரியப்பா வேணுன்னாக் கொஞ்சம் திட்டுவாரு. அப்புறம் அவரும் சரியாயிடுவாறு” நம்பிக்கையோடு கூறியவள், அதே நம்பிக்கையை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டுதான் சரளாவின் முன் சென்று நின்றாள்.
அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்த சரளா, ஓடாய் மெலிந்து, கருத்து, களையிழந்துப் போய், லேசாக மேடிட்ட வயிற்றோடு வந்து நிற்கும் பூர்ணிமாவைக் கண்டு பதறினாள். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் அவள் மனதில் ஆயிரம் கோபதாபங்கள் இருந்தாலும், தான் தூக்கி வளர்த்த மகள் பரதேசிக் கோலமாய் வந்து நிற்பதைக் கண்டு உள்ளம் பதறியது சரளாவிற்கு.
“பாவி மகளே! இந்தக் கோலத்துலையா உன்ன நா பாக்கணும்?” – பாய்ந்துக் கட்டிக் கொண்டாள்.
“அம்மா…” என்று பூர்ணியும் அவளோடு ஒட்டிக் கொண்டாள்.
“உனக்கு என்ன கொர வச்சேன் பூர்ணி. இந்த அம்மா நெனப்பு உனக்கு வரலையா? ஏண்டி இப்படிப் பண்ணுன? உனக்கு நல்லதுப் பண்ணிப் பாக்குற ஆசை எனக்கு இருக்காதா? ராஜி பண்ணினது ஒரு பங்கு வலின்னா நீ பண்ணினது நூறு பங்கு வலிடி எனக்கு” – சரளாவின் பிடித் தளரவில்லை. மனதில் உள்ள ஆதங்கத்தையெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள்.
பூர்ணிமா அவள் பிடியிலிருந்து நழுவி சரளாவின் பாதத்தில் முகம் பதித்தாள். மனதில் உள்ள குற்ற உணர்ச்சிக் கண்ணீராய் பெருகித் தாயின் பாதத்தைக் கழுவி மன்னிப்பை வேண்டியது.
“வேண்டாம்டா என் கண்ணே! எந்திரி. உள்ள வா” – மகளை அணைத்து உள்ளே அழைத்துச் சென்றாள். அவள் எப்படி வந்தாள் என்று விசாரித்து, நம்பிக்கையான டிரைவரோடு காரில்தான் வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு நிம்மதியடைந்தாள். மகளுக்குக் காபிக் கொடுத்து உபசரித்தாள். உடல் நலனை விசாரித்து, உபாதைகளுக்கு நிவாரணம் கூறினாள். ஒருவாறுத் தாயும் மகளும் பேசி அழுதுச் சமாதானமாகி இயல்பு நிலைக்குத் திரும்பியதும் பூர்ணிமா கேட்டாள்.
“நீங்கல்லாம் இல்லாம என்னால அங்க இருக்கவே முடியலம்மா. கெளம்புங்க. நம்ம வீட்டுக்குப் போகலாம்”
“இல்ல பூர்ணி. இனி இதுதான் எங்க வீடு. என்னைப் பாக்கணும்னுத் தோணுச்சுன்னா இங்க வந்து பாத்துட்டுப் போ”
“என்னம்மா? இன்னும் என் மேல இருக்கக் கோவம் போலியா?”
“உம்மேல எனக்கு என்னடாக் கோவம்? அதெல்லாம் ஒண்ணும் இல்ல”
“அப்புறம் என்ன? ஓ பெரியப்பாக் கோவப்படுவாரா. ஓகே அவர் வந்ததும் அவரையும் சமாதானம் பண்ணி நம்மலோடையே கூட்டிட்டுப் போய்டுவோம். சரியா?”
“அது இல்ல பூர்ணி… வந்து…”
“எதுக்கு மென்னு முழுங்குற? இனி உங்க குடும்பத்துக்கும் எங்கக் குடும்பத்துக்கும் எந்த ஓட்டும் இல்ல உறவும் இல்லன்னுச் சொல்லி வெட்டிவிட வேண்டியது தானே?” என்றபடி ஜெயராமன் உள்ளே நுழைய குலசேகரன் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.
“பெரியப்பா…!!!”
“எதுக்கு நீ இங்க வந்த? யாரு உன்ன உள்ள விட்டது? ஏய் என்னடி? ஆடு பக குட்டி உறவா?” மகளிடம் ஆரம்பித்து மனைவியிடம் முடித்தார் ஜெயராமன்.
“பெரியப்பா… நா பண்ணதுத் தப்புதான். மன்னிச்சுடுங்க”
“எம் பொண்ணையே நா மன்னிக்கல. எரிச்சுட்டேன்… உன்னைய மன்னிக்கனுமா? மரியாதையா ஓடிடு. இல்ல…” – சுட்டுவிரல் நீட்டிக் கடுமையாக எச்சரித்தார். அவர் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது அவளுக்கு.
‘இவர் என்ன பேசுகிறார்!’ – ஓரிரு நொடிகள் விளங்காமல் விழித்தவள்,
“எ… என்ன? என்ன சொன்னிங்க இப்போ? ரா… ராஜிய… நீங்களேவா!!!” என்றாள் தட்டுத் தடுமாறி.
“ஆமா நாங்களேதான். அதுக்கு என்ன இப்போ?” ஆணவமாகக் கேட்டார்.
‘என்ன!!!’ – அவள் உள்ளம் பதறியது. எப்படி முடிந்தது! செவி வழிக் கேட்டதை இதயம் நம்ப மறுத்தது. ஆனால் அவளுடைய பாசமிகுப் பெரியப்பாவின் முகத்திலிருந்த கொடூரம், அவரால் எதையும் செய்ய முடியும் என்று எடுத்துரைத்தது. எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்குவாள். யாருக்காக அழுவாள். ராஜி!!!
“ஏ…ஏன்…? ரா… ராஜி வயித்துல… தெரியாதா உங்களுக்கு?” – பேச முடியாமல் தொண்டையை அடைத்தது அவளுக்கு.
“என் வம்சத்துலக் கலப்பா! ஹா…” – அலட்சியமாகக் கூறினார்.
‘என்ன மிருகத்தனம்! சொந்த மகளையே…! கடவுளே! ராஜி…! ராஜி!’ உள்ளம் புலம்பக் கண்களில் கண்ணீர் கொட்டியது.
“ஏன்…? ஏன் இப்படிப் பண்ணுனிங்க? மனசுல ஈரமே இல்லையா உங்களுக்கு? ஐயோ ராஜி…! ராஜி!” வாய்விட்டு அழுதாள். உணர்ச்சிப் பெருக்கில் உடல் நடுங்கக் கால்கள் பலமிழந்துத் தொய்ந்து மடங்க, நிலைதடுமாறிக் கீழே சரிந்தாள்.
“பூர்ணி” – பாய்ந்து வந்து தாங்கிப் பிடித்த சரளா, “மனுஷனா நீ?” என்று கணவனிடம் சீறினாள்.
“திருந்தவே மாட்டியா நீயெல்லாம்? ஒரு பொண்ணத்தான் காவுக் கொடுத்துட்ட. இன்னொன்னையும் அதே மாதிரிப் பண்ணலாம்னுப் பாக்குறியா?” கடுமையாகக் கேட்டாள்.
“விடுங்கம்மா” – சரளாவின் பிடியிலிருந்து திமிறி விடுபட்டாள் பூர்ணி.
“உங்களுக்கும் தெரியும் தானே?”
“இல்ல… அப்போ இல்ல… அப்புறம்..”
“தெரிஞ்சப் பிறகு என்ன பண்ணுனீங்க?”
சரளாவிடம் பதில் இல்லை. மகளை எரித்துக் கொன்றதில் ஒரு தாயாக, பெண்ணாக அவளுக்கு நிச்சயமாக உடன்பாடில்லை. ஆனால் தன் மகள் மீதும் தவறு இருக்கிறதோ என்கிற சந்தேகமும் இருந்துள்ளது. கலப்புத் திருமணம் பெரும் குற்றம் என்கிற கூற்றை அவளும் நம்பியிருக்கிறாள். அதனால் தானே அவள் கணவன் மற்றும் கொழுந்தனை வலுவாக எதிர்க்கவில்லை. ஆனால் இப்போதோ, பூர்ணிமாவை மன்னித்தவர்கள் தன் மகளை மன்னிக்கத் தவறிவிட்டார்களே என்று கிடந்துத் தவிக்கிறாள். மற்றபடி பூர்ணிமாவையும் கொன்றிருந்தாலோ அல்லது பூர்ணிமா இந்தக் குற்றத்தைச் செய்யாமலே இருந்திருந்தாலோ ராஜியுடைய மரணத்திற்குச் சரளா எந்த நியாயமும் கேட்டிருக்க மாட்டாள்.
“இல்ல… இல்ல… விட மாட்டேன்… உங்களச் சும்மா விடவே மாட்டேன். ராஜிக்கு நியாயம் கிடைக்கணும். இப்போவே போலீஸுக்குப் போயி உங்களையெல்லாம் கம்பி எண்ண வக்கிறேன் பாருங்க. அப்படி என்ன வெறி உங்களுக்கெல்லாம்” ஆவேசத்துடன் வாசல் நோக்கி நடக்கத் துவங்கினாள்.
“போ போ… கம்ப்ளைன்ட் குடுக்கையில உங்கப்பன் பேரையும் சேர்த்துக்குடு. ஏன்னா அவன்தான் இந்தக் கேஸ்ல முதல் குற்றவாளி. அவனுக்காக… அவன் பேச்சைக் கேட்டுத்தான் நாங்க இத செஞ்சோம்” – சட்டென்று அவள் நடைத் தடைப்பட்டது. ஏற்கனவே நொருங்கிப் போயிருந்த அவள் இதயத்தில் மேலும் ஒரு பயங்கரமான சம்மட்டி அடி விழுந்தது.
“முருகனோட பதவி, கௌரவம், அங்கீகாரம் அத்தனையும் ஆட்டம் காண வச்சது ராஜியோட திருட்டுக் கல்யாணம். அவன் சொன்னான், அவனுக்காக நாங்க அமைதியா இருந்தோம்”
பூர்ணிமா மெல்ல திரும்பி தன் பெரியப்பாவின் முகத்தைப் பார்த்தாள். பெரியப்பாவைப் பார்த்தாள். மனதின் உணர்வுகளை அள்ளிப் பூசிக்க கொண்டிருந்த அவர் முகம், அவருடைய வார்த்தையிலிருந்த உண்மையை அவளுக்கு உணர்த்தியது.
“செஞ்சது உங்கப்பனோட ஆளுங்க”
“…….” – மெளனமாக நின்றாள்.
“எம் மக செஞ்சது எனக்குப் பிடிக்கலதான். கலப்புக் கல்யாணம் என் குலத்துக்கு உதவாதுதான். ஆனா அவளைக் கொலைப் பண்ணனும்னு நான் நினைக்கல. அவன் நெனச்சான். அவ இருந்தா என்னைக்கி இருந்தாலும் அவனோட கட்சியில அவனுக்குப் பிரச்சனைக் கிளம்பும்னுச் சொன்னான். அவனோட கௌரவத்துக்குப் பாதிப்புன்னு சொன்னான். நம்புனேன். அவனுக்காக எம் பொண்ணையே பலிக் கொடுத்தேன். ஆனா இன்னைக்கு என்ன ஆச்சு?”
“அன்னைக்கு ராஜி பண்ணுனதத் தான இன்னைக்கு நீயும் பண்ணியிருக்க. உன்னைய கொல்லணும்னு நெனச்சானா? இல்லையே! ஏன்னா அவனுக்கு எல்லாத்தையும் விட நீ பெருசு. அப்போ எம் மக?”
“ஏன்னுக் கேட்டா ‘நொண்டிக் குதிரைக்குச் சருக்குனதுதான் சாக்குன்னு’, அந்தக் குருவோட தம்பி உன்னைய சதிப் பண்ணி ஏமாத்திட்டான்னுக் காரணம் சொல்றான். அதுக்கும் ராஜியோட கல்யாணம்தான் காரணமாம். ஏன், ராஜியோட சாவுதான் காரணம்னுச் சொல்லலாம்ல? அப்படிச் சொல்லிட்டாத் தப்பு அவன் பக்கம் திரும்பிடுமே! பழியையெல்லாம் எம்மகச் சுமக்கணும். பலனையெல்லாம் அவனும், அவன் மகளான நீயும் அனுபவிக்கணும். நல்லாருக்கு நியாயம்…” – இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். அவளுக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை.
அவளுடைய மனம், ‘அந்தக் குருவோட தம்பி உன்னைய சதிப் பண்ணி ஏமாத்திட்டான்னுக் காரணம் சொல்றான்’ என்கிற கூற்றிலேயே நிலைக் கொண்டுவிட்டது.
‘குரு…! ராஜியோட கணவனா! ஆமாம், அவர் பேர் தானே குரு. அப்போ… அவரோட தம்பிதான் சித்துவா. அப்படித்தான் இருக்கணும். அன்னைக்கு சித்து வீட்டுல ஒருத்தனைப் பார்த்தோமே! அவனை எங்கேயோ பார்த்திருக்க மாதிரித் தோணுச்சுல்ல! அவன்… அவன்… எஸ்… அவன் தானே ஒரு நாள் அருவாளோட நம்ம வீட்டுக்குள்ள நொழஞ்சான்! அப்போ! அப்போ எல்லாமே சதியா! நாடகமா! – அப்பாவைப் பழிவாங்க என்னை… இல்ல என் காதலை யூஸ் பண்ணிகிட்டானா?’ தவிப்பாக இருந்தது அவளுக்கு.
திரை விலகினார் போல் அனைத்தும் தெளிவாக விளங்கிவிட்டது. எத்தனை ஏமாளியாக இருந்திருக்கிறாள். அவள் நம்பிய அனைவரும் நஞ்சாய் மாறி, நயவஞ்சகமாய் அவளை கொன்றுவிட்டார்களே! இனி யாரை நம்புவாள். கதறியழ வேண்டும் போல் இருந்தது. அழுதாலும் ஆறுதல் சொல்ல கூட ஓர் உறவில்லாமல் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டதே! தாள முடியாத துக்கத்தில் மூழ்கிப் போனாள். இனியும் என்ன இருக்கிறது.
‘ராஜி… ராஜி… நானும் உங்கிட்டியே வந்துடறேன் ராஜி… என்னைக் கூட்டிக்க… உனக்காகச் சிந்திக்க… உன்னோட வலிய உணர, உனக்குன்னு ஒரு உறவில்லாமப் போயிட்டே…! அம்மா அப்பா குடும்பம்னு இருந்து என்ன பிரோயஜனம்? இப்போ எனக்கும் உன் கதிதான் ராஜி… உனக்காவது சாகும் போது கூடவே வர்றதுக்கு ஒரு மகத்துவமானக் காதல் இருந்துச்சு. ஆனா எனக்கு அந்தக் கொடுப்பினைக் கூட இல்ல ராஜி… நான் பாவி… பாவி… இப்படி அனாதையாப் போயிட்டேனே!’ உள்ளம் நைந்துக் கண்ணீர் கசிந்தது.
2 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Doss says:
Its something special manasu romba barama iruku sister poorni should not forgive sidhu. Avan kita niyamana kaaranam irunthalum she should not forgive him
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Chriswin Magi says:
Next episode ji