Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-24

அத்தியாயம் – 24

 

பெரியப்பா வீட்டிலிருந்து வெளியே வந்த பூர்ணிமா அனிச்சையாய் நடந்து வந்து காரில் ஏறி அமர்ந்தாள். உற்றாரெல்லாம் பொய்த்துப் போன வேதனைத் தீயில் அவள் நெஞ்சம் வெந்து மாய்ந்தது. உலகமே இதுதானா! சுயநலமும் பேராசையும்தான் இங்கு விரவிக் கிடக்கிறதா. நெருக்கமான உறவுகளுக்குள் கூட அது ஊடுருவியிருக்கிறதே! – சிந்தனைகள் அவளைப் புழுவாய் அரித்தன.

 

குற்றம் செய்த தன் ரெத்த பந்தங்களைத் தண்டிக்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது. ஆனால் காவல்துறை, வழக்கு, விசாரணை இவற்றுக்கெல்லாம் அவர்களைத் தண்டிக்கும் சக்தி இருப்பதாகத் தோன்றவில்லை. மேற்கூறிய முயற்சிகள் அனைத்தும் பாறையில் முட்டிக்கொள்வதன் பலனைத்தான் தரும் என்று அவள் உள் மனம் கூறியது. அதையும் தாண்டி அவளைப் பெற்ற அப்பாவை, வளர்த்தப் பெரியப்பாக்களை அவளால் காட்டிக் கொடுக்க முடியுமா! – முடியவில்லை. அதே சமயம், உடன்பிறந்தவளைக் கொன்றவர்கள் கண்முன்னே இருக்கும் பொழுது எவ்வாறு அவர்களைத் தண்டிக்காமல் விடுவது! – மனசாட்சிச் சுட்டது. இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தாள். இந்தத் தவிப்பைத் தாங்க இயலவில்லையே! இதிலிருந்து எப்போது அவளுக்கு விடுதலைக் கிடைக்கும்.

 

கிடைக்காது. சுயநலம் மிக்க உறவுகளோடு பற்றுக் கொண்டிருக்கும் வரை அவளுக்கு விடுதலை என்பதே கிடைக்காது. அனைத்தையும் அறுத்தெறிய வேண்டும். பந்தம், பாசம், உறவு எதுவும் வேண்டாம்… போய் விடலாம்… எங்காவது… கண்காணாத தொலைவிற்கு… – அவள் முடிவெடுத்த சமயம் கார் வீட்டு வாசலில் வந்து நின்றது.

 

“எங்கம்மாப் போயிட்ட? என்கிட்டச் சொல்லியிருந்தா நானும் கூட வந்திருப்பேன்ல?” – வேல்முருகன்.

 

“கொலைப் பண்ணுணீங்களா?” – முகத்துக்கு நேராகக் கேட்டாள்.

 

“எ… என்ன! கொலையா!” – அதிர்ந்துப் போனார்.

 

“ராஜிய உயிரோடு எரிச்சுக் கொன்னீங்களா?”

 

“ச்சே… உங்கிட்ட யாரு இது மாதிரியெலாம் சொன்னது? எங்க போயிட்டு வர்ற?” கோபத்துடன் கேட்டார்.

 

“சொல்லலைன்னா என்னையும் கொன்னுடுவிங்களோ!”

 

“பூர்ணி… என்னடா? ஏன் இப்படில்லாம் பேசுற?”

 

“நடிக்காதீங்க”

 

“நடிக்கலப் பூர்ணி. எனக்கு நீ முக்கியம். எல்லாத்தையும் விட”

 

“ஓஹோ… அதனாலதான் என்னை உயிரோடு விட்டு வச்சிருக்கிங்கல்ல?”

 

“ப்ச்… உள்ளப் போ. போயிக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறம் பேசிக்கலாம்” – ஏறியிருந்த தன் முன்னந்தலையைத் தடவி கொண்டே கூறினார்.

 

“இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் ஹேண்டில் பண்றது உங்களுக்கு ரொம்ப ஈஸில்ல?”

 

அவர் இமைக்காமல் மகளையே பார்த்தார்.

 

“வெட்கப் படறேம்பா… உங்களுக்குப் போயி மகளாப் பெறந்துட்டோமேன்னு நெனச்சு வேதனைப் படறேன். நீங்க போட்டச் சாப்பாட்டுல வளர்ந்த இந்த ஒடம்பச் சொமக்குறதே பாரமா இருக்குப்பா… ஏம்பா? ஏன் இப்படிப் பண்ணுனீங்க? சொல்லுங்க… ஏன்…?” – ஆத்திரத்துடன் வார்த்தைகளை அள்ளி வீசியவளுக்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெருங்குரலெடுத்து அழுதபடி அவர் சட்டையைப் பிடித்து உலுக்கி நியாயம் கேட்டாள்.

 

“பூர்ணி.. சொல்றதக் கேளுடா.. அம்மாடி… அப்பா… அப்பா சொல்றேன்ல…” – தவிப்புடன் மகள் தோள்களைப் பிடித்து உலுக்கித் தேற்ற முயன்றார்.

 

“தொடாதீங்க…” – அவரை உதறித் தள்ளினாள். அவர் அதிர்ந்து விழித்தார்.

 

“நரமாமிசம் சாப்பிடரவரு நீங்க. என்ன தொடாதீங்க” – அருவருப்புடன் கூறினாள்.

 

நொறுங்கிவிட்டார் வேல்முருகன். எவ்வளவு பெரிய கல் நெஞ்சக்காரனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய மூர்க்கனாக இருந்தாலும் அவருக்கும் ஒரு பலவீனம் இருக்குமல்லவா? வேல்முருகனின் பலவீனமாகப் பூர்ணிமா இருந்தாள்.

 

“நான் போறேன். இங்கிருந்து… உங்ககிட்டேருந்து… எங்காவது தூரமாப் போகப்போறேன். குறைந்தபட்சம் நா உயிரோடு இருக்கணும்னு ஆசைப்பட்டா என்ன ஃபாலோ பண்ணாதீங்க. விட்டுடுங்க” சிறிதும் தயக்கமின்றி வீட்டை விட்டு வெளியேறினாள். மனம் சற்றே லேசானது போல் இருந்தது. இப்படியே எங்காவது சென்று தன் வாழ்க்கையைப் புதிதாகத் துவங்கலாம் என்று நினைத்தாள். ஆனால் அதற்கு முன் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று பாக்கி இருக்கிறேதே. ஸ்ரீரங்கத்திற்குப் பேருந்து ஏறினாள்.

 

****************

 

அவள் விசாரித்துக் கொண்டு வந்து சேர்ந்த வீட்டு வாசலில், நான்கைந்து ஆட்கள் பந்தலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். பூர்ணிமா அந்த வீட்டுத் திண்ணையில் ஏறிய சமயம், தன் ஈரக் கூந்தலைத் துணியால் சுற்றிக் கொண்டையிட்டு, கழுத்தில் புத்தம் புது மஞ்சள் கயிற்றோடு, வகிட்டில் குங்குமமிட்டு, வேலையாட்களுக்குக் காபி கொடுப்பதற்காகக் கையில் ட்ரேயுடன் வெளியே வந்தாள் ஒரு பெண்.

 

பூர்ணிமாவின் இதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது. அதுவரை அவளுக்குச் சித்தார்த்துடன் தன் வாழ்க்கை மீண்டும் மலர வேண்டும் என்கிற எண்ணம் தோன்றவில்லை. ஆனால் இந்தப் புதுப் பெண்ணைப் பார்த்ததும் ஏதோ ஒரு கலக்கம்.

 

‘எல்லாம் முடிந்துவிட்டதோ!’ – நாவரண்டது அவளுக்கு.

 

“நீங்க?” – நெற்றியைச் சுருக்கினாள் புதுப் பெண்.

 

“நா… நா…” பேச முடியாமல் தடுமாறினாள்.

 

“வாங்க வாங்க… உள்ள வாங்க” – ரவியின் குரல் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. பெண்கள் இருவரும் ஒருசேரக் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார்கள்.

 

“தமிழு. என்ன பாத்துகிட்டு இருக்க.. உள்ள கூட்டிட்டுப் போ. நம்ம வீட்டுப் பொண்ணுதான்” – வந்திருப்பவள் யார் என்கிற விபரத்தைப் புரிந்து கொண்டவள் குழப்பமும் ஆச்சர்யமுமாக அவளின் மேடிட்ட வயிற்றைக் கவனித்தாள். பிறகு, “பூர்ணிமா?” என்று கேள்வியாக அவளை நோக்கினாள்.

 

பூர்ணிமாவிற்குப் பார்க்கும் போதே அவர்கள் கணவன் மனைவி என்று தெரிந்து விட்டதாலோ என்னவோ அவளுக்குள் ஒருவித நிம்மதிப் பரவியது. ஆசுவாசத்துடன் ஆழமாக மூச்செடுத்து “ம்ம்ம்… சித்தார்த்தைப் பார்க்க வந்தேன்” என்று தமிழியின் கேள்விக்குப் பதிலளித்தாள்.

 

“உள்ள வா…” – கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். என்னவென்று புரியாத ஒருவித பதட்டத்துடன் அவள் சுட்டிக் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள் பூர்ணிமா.

 

கொல்லைப்புறத்தில் இருக்கும் மரத்தைக் கழித்துக் கொண்டிருந்த சித்தார்த்தை தேடி வந்தான் ரவி.

 

“இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?”

 

“ஆங்… இந்த மரம் இங்க நிக்கிறது எடஞ்சலா இருக்குன்னு கொஞ்ச நாளாவே நெனச்சுக்கிட்டு இருந்தேன். அதான்…”

 

“தேவையில்லாத வேலையை பார்க்கறதுக்குன்னே பொறந்தவனாடா நீ? அருவாளை தூக்கியெறிஞ்சுட்டு உள்ள வாடா…”

 

“என்னண்னு சொல்லு?” என்றபடி ஓங்கிய அரிவாளை மரத்தின் கிளை ஒன்றின் மீது வீசினான். அது முறிந்து விழுந்தது.

 

“சித்து. நா சொல்றதை கொஞ்சம் நிதானமா கேளு. உன்ன பார்க்க அந்த பொண்ணு வந்திருக்குடா” சிறு தயக்கத்துடன் சொன்னான் ரவி.

 

மரத்தின் மீது உக்கிரமாக அரிவாளை பிரயோகித்துக் கொண்டிருந்த சித்தார்த்தின் கை, ஓங்கிய வேகத்திலேயே தடைபட்டு நின்றது. அவனுடைய இதயம் தடதடத்தது. ‘பூர்ணியா!’ சுவாசத்தின் வேகம் அதிகமானது. முகம் சிவந்து காது மடல்கள் சூடாவதை உணர்ந்தான்.

 

“பூர்ணிமா… அதுதானே அந்த பொண்ணோட பெரு? வீட்டுக்குள்ள உக்கார சொல்லியிருக்கேன். வாடா… வந்து பேசு…” இந்த முறை தம்பியின் வாழ்க்கையை எப்படியாவது சரிசெய்துவிட வேண்டும் என்கிற பதட்டம் ரவியிடம் தென்பட்டது. ஆனால் சித்தார்த் அமைதியாக இருந்தான்.

 

உள்ளுக்குள் நெகிழும் உள்ளத்தை மீண்டும் கடினமாக்கிக்கொள்ள சிறு அவகாசம் தேவைப்பட்டது அவனுக்கு. ஓரிரு நொடிகள் கண்களை மூடி மனதை கட்டுக்குள் கொண்டுவந்தவன், நிதானமாக கண்களைத் திறந்து “அவ எதுக்கு இங்க வந்தா?” என்றான்.

 

ரவி அதிர்ந்து போனான். அவனுக்குத் தெரியும். பூர்ணிமாவை இழந்ததில் அவன் மிகவும் வேதனைப்படுகிறான். உறங்க முடியாமல் தவிக்கிறான். மதுவையும் புகைப்பழக்கத்தையும் துணையாகக் கொண்டு தன் உணர்வுகளை வெல்ல போராடிக் கொண்டிருக்கிறான். இவ்வளவு போராட்டங்களுக்கு இடையிலும் கூட தானாக தேடி வந்தவளை புறக்கணிக்கிறான் என்றால் அவனை எந்த வகையில் சேர்ப்பது!

 

“வேண்டாண்டா சித்து. தயவு செஞ்சு உன்னோட வாழ்க்கையை நீயே அழிச்சுக்காத. அவளை வந்து பாரு. பேசு. அந்த வேல்முருகனை பத்தி சொல்லி புரிய வையி… நீ நெனச்சா எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்டா” – எடுத்துக் கூறினான்.

 

“அவளை நான் பார்க்க விரும்பல. இங்கேருந்து போ சொல்லு…”

 

“நானும் உன்ன பார்க்க விரும்பல சித்து. உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கணும். அதுக்கு மட்டும் பதில் சொல்லு. நான் போயிடுறேன்” – பூர்ணிமாவின் குரல் சித்தார்த்தின் ஒவ்வொரு அணுவையும் அதிரச் செய்தது. சட்டென்று அவள் புறம் பார்வையைத் திருப்பினான். திகைத்துப் போனான்.

 

திகைக்காமல் வேறு என்ன செய்வான். இப்போது அவன் கண் முன்னால் நிற்பது பூர்ணிமாவே அல்ல. அவளுடைய சாயலிலிருக்கும் வேறு யாரோ ஒரு பெண் என்கிற எண்ணம் ஒரு கணம் அவனுக்குள் தோன்றியல்லவா மறைந்தது!

 

பூர்ணிமாவின் பொலிவு… துறுதுறுப்பு… வெகுளித்தனம்… எதுவுமே இவளிடம் இல்லை. ஒளியிழந்த கண்கள்… கலையிழந்த முகம்… ஒடிந்து விழுவது போல் மெலிந்திருந்த தேகம்… இவையெல்லாம் பூர்ணிமாவின் அடையாளங்கள் அல்லவே. அவளுடைய சந்தோஷம் எங்கே போனது? எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் கண்கள் எங்கே போயின? படபடவென்று பேசிக் கொண்டே இருக்கும் வாய்மொழிக்கு என்னவானது? – சிந்தித்தான்.

 

‘அவை அனைத்தையுமே உன்னுடைய வன்மத்திற்கு இரையாக்கிக் கொண்டாய் சித்தார்த்…’ என்று அவனுடைய மனசாட்சி உறக்கக் கத்தியது. அவனுடைய பார்வை மெல்ல கீழே இறங்கிய போது, மேடிட்டிருந்த அவளுடைய வயிறு உணர்த்திய செய்தி அவன் உள்ளத்தை உலுக்கியது. இதயத்தை மாபெரும் பாரம் அழுத்தியது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

 

இவை அனைத்தையுமே தன்னுடைய வன்மத்திற்கு இரையாக்கிக் கொண்டுவிட்டோம் என்கிற எண்ணம் அவன் உள்ளத்தை உலுக்கியது.

 

“தமிழு… ஏன் பூர்ணிமாவை இங்க கூட்டிட்டு வந்த? நாந்தான் இவன வீட்டுக்குள்ள கூட்டிட்டு வர்றேன்னு சொன்னேன்ல..?” ரவியின் கேள்விக்கு தமிழி பதில் சொல்வதற்கு முன் பூர்ணிமா சித்தார்த்திடம் தான் கேட்க விரும்பிய கேள்வியைக் கேட்டாள்.

 

“ஏன் இப்படி பண்ணின சித்து?”

 

ஒரே ஒரு கேள்விதான். இந்தக் கேள்விக்கு சற்று முன்பு வரை அவனிடம் பதில் இருந்தது. அவன் பக்கம் சொல்வதற்கு ஆயிரம் நியாயங்களும் காரணங்களும் இருந்தன. ஆனால் பூர்ணிமாவை பார்த்த நொடியிலிருந்து அவனிடம் எந்த நியாயமும் இல்லாமல் போனது. பேசுவதற்கு நாயெழவில்லை. உள்ளுக்குள் வலித்தது.

 

“உன்ன நம்பினேன் சித்து. என்னோட நம்பிக்கையை கொன்னுட்ட. என்னுடைய உணர்வுகளை காயப்படுத்திட்ட. ஏன் இப்படிப் பண்ணின?”

 

“பூர்ணி…”

 

“எம்பேர சொல்லாத… உனக்கு அந்த உரிமை இல்ல”

 

“………..”

 

“என்னைய நீ லவ் பண்ணியிருந்தா… எம்மேல நம்பிக்கை வச்சிருந்தா… எங்கப்பாவை பத்தி எங்கிட்ட சொல்லியிருக்கலாமே சித்து. உனக்கு துணையா நா நின்னுருப்பேனே ! நீயேன் அதை செய்யல?”

 

“பூர்ணி ப்ளீஸ்…”

 

“ஏமாத்திட்டல்ல…? ம்ஹும்… நாந்தான் ஏமாந்தேன்… அதுதான் கரெக்ட் இல்ல? நானாத்தான் உன்கிட்ட பழகினேன். நானாத்தான் உன்ன லவ் பண்ணினேன்… அப்புறம் நாந்தான் உன்ன எல்லா விஷயத்துக்கும் டெம்ப்ட் பண்ணினேன் இல்ல”

 

“ஐயோ… பூர்ணி… இந்த மாதிரியெல்லாம் பேசாத?” – வேகமாக அவளிடம் நெருங்கி அவளுடைய கைகளை பிடித்துக் கொண்டான். அவனுடைய உடல் நடுங்குவதை அவள் உணர்ந்தாள்.

 

“என்ன ஆச்சு சித்து? வருத்தப்படறியா? என்னைய நெனச்சா!” – வியந்தாள். அவன் மீதான நம்பிக்கையின்மையை அவள் முகம் அப்பட்டமாகக் காட்டியது.

 

“இல்ல… இப்படி பார்க்காத பூர்ணி… என்னை இப்படி பார்க்காத ப்ளீஸ்…” தவிப்புடன் அவளிடம் கெஞ்சினான்.

 

“இத சொல்லத்தான் அன்னைக்கு வந்தியா?” – பார்வை அவளுடைய வயிற்றின் மீது நிலைத்திருந்தது.

 

“………………” அவள் பதில் சொல்லவில்லை. அவனிடம் சிக்கியிருந்த கையை உறுவிக்கொள்ள முயன்றாள். அவனுடைய பிடி அழுத்தமாய் இருந்தது.

 

“கையை விடு சித்து”

 

“தப்புப் பண்ணிட்டேன் பூர்ணி. பெரிய தப்பு… உன்னைய நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டேன். ஆனா… வேணுன்னு செய்யல பூர்ணி. என்னோட அண்ணே மேல இருந்த பாசம்… உங்கப்பா மேல இருந்த வெறுப்பு… என்னைய அப்படி பண்ண வச்சிடிச்சு”

 

“ஹா…” – விரக்தியாக சிரித்தாள். அவனுக்கு வலித்தது. அவளை இயலாமையுடன் பார்த்தான்.

 

“உங்க அண்ணனோட சாவுக்கு நியாயம் கெடச்சிடிச்சு. எங்க அப்பாவை பழி வாங்கிட்ட. இப்போ திருப்தியா இருக்கல்ல? சந்தோஷமா இருக்கல்ல? நல்லா இரு” என்று வாழ்த்திவிட்டு திரும்பி வந்த வழியே நடந்தாள்.

 

சித்தார்த்தின் உயிரே ஒடுங்கிவிட்டது. படபடக்கும் நெஞ்சத்துடன் “பூர்ணி… எங்க போற…?” என்று பாய்ந்து வந்து அவளை வழிமறித்தான். திடீரென்று அவனுக்கு மேல் மூச்சு வாங்கியது. இனம்புரியாத பயத்தில் முகம் வெளுத்துவிட்டது.

 

“வழிவிடு சித்து” – கலக்கமில்லாமல் கூறினாள் பூர்ணிமா.

 

“இல்ல. நா உன்ன போக விடமாட்டேன். என்னைய விட்டு நீ எங்கேயும் போக முடியாது” – ஆத்திரத்துடன் கத்தினான்.

 

அவள் அவனை ஒதுக்கிவிட்டு வேகமாக வாசல் வரை வந்துவிட்டாள். ஓரிரு நொடிகள் திகைத்து நின்றுவிட்டவன், சுதாரித்துக் கொண்டு ஓடிவந்து அவள் கையைப் பிடித்துத் தடுத்தான்.

 

“போயிடாத… உன்ன கெஞ்சிக்கேக்கறேன் பூர்ணி. என்ன மன்னிச்சுடு… ப்ளீஸ்” -மனமுருகி யாசித்தான். கலங்கினான்… கண்ணீர்விட்டான்.

 

அன்றொருநாள் இதே போன்றொதொரு யாசகத்தோடு அவன் முன் நின்றவளை ஏறெடுத்தும் பார்க்காமல்… அவள் சொல்ல வந்ததையும் காது கொடுத்துக் கேட்காமல், கண்டபடி பேசி… கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து வெளியே தள்ளி கதவை சாத்திய சம்பவம் அவள் மனத்திரையில் படம் போல் ஓடியது.

 

“உனக்கு தெரியாது பூர்ணி. நா ரொம்ப வேதனைப்படறேன். உள்ளுக்குள்ளேயே புழுங்கறேன். தினந்தினம் செத்துக்கிட்டிருக்கேன். எல்லாத்துக்கும் காரணம் என்னோட முரட்டுப் பிடிவாதம்தான். நா இல்லைன்னு சொல்லல. ஆனா… ஒரே ஒரு தடவ… இந்த ஒரு தடவ மட்டும் என்னை மன்னிக்கக் கூடாதா பூர்ணி?”

 

“எனக்கு நல்லா தெரியும் சித்து. உனக்கு எம்மேல அன்பு இல்ல. அக்கறை இல்ல. பிரியம் இல்ல… காதல்… கத்திரிக்கா… எதுவுமே இல்ல…” – இதை சொல்லும் பொழுது அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாக வடிந்தது.

 

அந்த நேரத்தில் அவன் மணமடைந்த வேதனையை விவரிக்க வார்த்தைகளில்லை. பூர்ணிமாவின் மீதான அவனுடைய நேசத்தின் ஆழத்தை அவனே அப்பொழுதுதான் முழுமையாக உணர்ந்தான் எனலாம்.

 

“என்னோட உணர்வுகளுக்கு கொஞ்சமாவது மதிப்புக்கு கொடுக்கணும்னு நீ நெனைச்சேன்னா என்னை என்னோட வழியில போக விடு சித்து” – துக்கம் நிறைந்திருந்த அவனுடைய கண்களை நேருக்கு நேர் சந்தித்தபடி இதைக் கூறினாள்.

 

அவனுடைய பிடி வலுவிழந்தது. அவள் சுலபமாக தன்னுடைய கையை உருவிக் கொண்டாள்.

 

“அம்மாடி… அவனை விட்டுத்தள்ளும்மா. நா இருக்கேண்டா ராஜாத்தி உனக்காக. இங்க பாரு… தமிழு… உனக்கு அக்காவாட்டம் இருப்பா. ரவி… உன்ன கூட பொறந்தவளாட்டம் கவனிச்சுக்குவான். நீ எங்கேயும் போக வேண்டாம்டா. இங்கேயே இருந்துரும்மா. உனக்கு இந்த பயல பாக்க பிடிக்கல…பேசப் பிடிக்கலைன்னா… அவனை இங்கேருந்து வெரட்டிடறேன். இந்த வீட்ல உன்ன பத்தி பேசாத நாளே இல்லம்மா. அதே மாதிரி… இந்த பயல நா திட்டாத நாளும் இல்லம்மா. வயித்துப்புள்ளத்தாச்சி நீ. இவ்வளவு நாளும் உங்க அப்பாகிட்ட என்ன படுபாட்டியோ தெரியல. இனிமேலும் அந்த நரகத்துக்கு போக வேண்டாம்டா கண்ணு. நா சொல்றத கேளும்மா” – சித்தார்த்தின் தாய் பூர்ணிமாவை சமாதானம் செய்ய முயன்றாள்.

 

அந்த தாயின் அன்பில் உடைந்து போன பூர்ணிமா அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள். அவளுடைய மனக்குமுறல்களும் ஆதங்கங்களும் கண்ணீராக கரைந்து கொண்டிருந்தன. அவள் முதுகை தடவிக் கொடுத்து தேற்ற முயன்றாள் பார்வதி.

 

தமிழியும் அவளுடைய தலை கோதி… முதுகைத் தடவி ஆறுதலளித்தாள். ரவி எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க… நிலைகொள்ளா தவிப்புடன் பூர்ணிமாவைப் பார்வையால் வருடிக் கொண்டிருந்தான் சித்தார்த்.

 

அழுதழுது ஓய்ந்து தானாக பார்வதியிடமிருந்து விலகிய பூர்ணிமா, “உங்களோட அன்புக்கு ரொம்ப நன்றி ஆன்ட்டி…” என்றாள் ஜீவனற்ற புன்னகையுடன்.

 

“நீ எம்பொண்ணு மாதிரிம்மா” – பார்வதி.

 

மீண்டும் ஒருமுறை உயிரற்ற புன்னகையை உதிர்த்த பூர்ணிமா, “என்னைய மன்னிக்கணும் ஆண்ட்டி. நீங்க சொல்றதை கேட்டுக்க முடியாத நிலமையில நான் இப்போ இருக்கேன். கிளம்புறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள். யாராலும் அவளுடைய முடிவை மாற்ற முடியவில்லை. சர்வமும் ஒடுங்கிப் போனவனாக நின்றுக் கொண்டிருந்தான் சித்தார்த்.

 

கனத்த இதயத்தோடு பூர்ணிமாவிற்கு வழிவிட்டு ஒதுங்கினர் சித்தார்த்தின் குடும்பத்தார். அவள் அவர்களிடமிருந்து விலகி சென்றுக் கொண்டே இருந்தாள். சக்திகள் அனைத்தையும் இழந்துவிட்டது போல் உணர்ந்த சித்தார்த், மலையளவு துக்கத்தை மனதில் சுமந்தபடி செய்வதறியாது சமைந்து நின்றான். அப்போதுதான் அந்த சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.

 

புயல் வேகத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த அம்பாஸிட்டர் கார் ஒன்று, பூர்ணிமாவின் மீது மோதி அவளைத் தூக்கியெறிந்து.

 

“பூ…ர்…ணீ…!!!” – சித்தார்த்தின் அலறல் சத்தம் விண்ணைக் கிழித்தது.

 

“ஆ… ஐயையோ….! கடவுளே! ” – நான்கு திசைகளிலிருந்தும் கலவையான கூக்குரல்கள் ஓங்கி ஒலித்தன. ரெத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த பூர்ணிமாவை நோக்கிப் பறந்தோடின உறவுகள்.

 

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Niveta Mohan says:

    Aiyayooo poorni…. Athavittutu ambassador car.. Poorni periyappa anupinatha… Illa appa.. Appa anupinatha….. Kkkaaaa…. Manasu kidanthu patharuthu kka. Poorni baby rendu perum safe ah venummm.. :'(

You cannot copy content of this page