Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ஷ்! இது வேடந்தாங்கல்! – 1

ஷ்! இது வேடந்தாங்கல்!

பாலா  சுந்தர்

(ஒரு மரத்திற்கு அடியில் நின்றுகொண்டு என்று சொன்ன காலம் மாறி) ஒரு செல்ஃபோன் டவருக்கு அடியில் நின்றுகொண்டு இருவர் கிசு கிசு பேசிக் கொண்டனர். கிசு கிசு பத்திரிக்கைகளில் மட்டும் சுவாரசியமாக இருப்பதில்லை. அலுவலகங்களில்  எதிர் டேபிளில் அமர்ந்திருப்பவர் அப்போது வந்து சென்ற பெண் வாடிக்கையாளரை  திருட்டுத்தனமாக திரும்பிப் பார்த்தால்.. அது அவரது சக பணியாளர்களின் கைபேசியில் பகிரப்படும் அச்சில் ஏற்றப்படாத கிசு கிசுவாகிவிடுகிறது.

அதேபோல் நட்சத்திரங்களின் வாழ்க்கையை மட்டுமே நாம் நமது இஷ்டம்போல் துவைத்து உலரவைக்க வேண்டும் என்பதும் இல்லை. எதிர் வீட்டில் வசிக்கும் மல்லிகாவின் வாழ்க்கையைக் கூட நாம் நமது இஷ்டம்போல் துவைத்து உலரவைக்க முடியும். அப்படி இந்த இருவர் முன்னொருகாலத்தில் அவர்கள் அடித்துத் துவைத்து காயப்போட்ட ஒருத்தியைப் பற்றித்தான் செல்ஃபோன்  டவருக்கடியில்  நின்று  பேசிக்கொண்டனர்.

கிசு கிசு :

ஏட்டையா பழநிவேல் :  ஏய் கிரி. அந்த ஸ்ரீ கேஸ் என்ன ஆச்சு? வெங்கட் கைக்கு கேஸ் போகப் போதாமே? அந்த பொண்ணு அட்ரஸே இல்லையாமே? அதை   எப்படிப்பா இவர்  கண்டுபிடிப்பார்?  கௌன்சிலர்  ஸ்ரீயைக் கண்டுபிடிக்காமல்  விடமாட்டார்  போலத்  தெரியுதே!

ஏட்டையா கிரி : வெங்கட்  சார்  கைக்கு  கேஸ் போச்சுன்னா அப்புறம் கேஸே  முடிந்த  மாதிரிதான். கௌன்சிலர்  ஸ்ரீயைக் கண்டுபிடிப்பாரோ மாட்டாரோ வெங்கட் கண்டுபிடிச்சிடுவார். ஆமாம் அந்த பொண்ணப் பற்றிய விஷயம்  ஏதாவது  தெரியுமா  உனக்கு?

ஏட்டையா பழநிவேல் : அந்த பொண்ணு மசூத்தை கல்யாணம் செய்த பிறகு ஒரு நியுஸ_ம் இல்லை. நான் என்னோட மாமியார்கிட்ட கேட்டுச் சொல்றேன். அந்த பொண்ணு முன்பு இருந்த வீட்டிற்கு பக்கத்தில் தான் அவுங்க வீடும் இருக்குது.

ஏட்டையா கிரி: ஆமாம் நம்ம பிரதமரை சந்திக்க நேதாஜி ஜப்பானில் இருந்துகொண்டு  இளைஞர் படை  திரட்டுறாராமே?  அப்படியா?

ஏட்டையா பழநிவேல் : அப்படித்தான் ஜனங்க பேசிக்கிறாங்க! ஆனா பிரதமரை இந்தியாவில் சந்திப்பதை விட ஏதாவது ஒரு சர்வதேச ஃப்ளைட்டில் சந்தித்தால்  பக்கம்  பக்கமாய்  லெக்ச்சர்  எடுக்கலாம் என்று நேதாஜி நினைக்கிறார்.

ஏட்டையா கிரி: அப்படினா  பிரதமர்  அமெரிக்கா  போயிட்டு  திரும்பும்போது  அவர்கிட்ட  பெரிய  மாற்றம் இருக்கும் என்று சொல்லு! ஃப்ளைட் ஹவர்  இருபதுமணிநேரமும்  நேதாஜியோட  லெக்ச்சர் இருக்கும்ல?

வெங்கட்

மதுரையின்  வியாபார  மையமான  கீழவாசலில் அனைத்து தெருக்களிலும் அன்று  ஜனக்கூட்டம்  எந்த  திசையில்  நகர்கிறது  என்று  கணிக்க  முடியாதபடி  இருந்தது.

அன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். அதுவே கூட்டத்திற்கான காரணம். பகலில் பரபரப்பாக இருக்கும் விளக்குத்தூண் வீதி இரவில் நமது மக்கள்  தொகையின் அளவை உலகுக்கு சாட்சியோடு காண்பிக்கும்.

ரோட்டோரமாய் ஒரு ஜமுகாளத்தில் எவர்சில்வர் பாத்திரங்களை பரப்பிப்போட்டு  விற்றுக்கொண்டிருந்த  வடநாட்டு இளைஞன் கூட்டத்தைக் கண்டு புரியாது விழித்தபடி இருந்தான். காரணத்தை தெரிந்து கொள்ள அதிக விருப்பம்  கொண்டான். அவன்  ஏன்  மக்கள்  கூட்டம்  இரண்டு  நாட்களாக அதிகம்  ஆகியது  என்று  தெரிந்து கொள்ளும் ஆவலில் பக்கத்தில் இருந்த செருப்பு  வியாபாரியிடம்  கேட்டான் “என்ன சாகப் ஜனம் ரொம்ப நிறைய இருக்கு?”

அந்த  வியாபாரிக்கு தமிழில் சொன்னால் அவனுக்குப் புரியாதே என்று கருதி இந்திய மக்களிடையே பிரபலம் அடைந்த பத்து வார்த்தை அடங்கிய இந்திய மொழி எதுவாகினும் அதில் ஐந்து வார்த்தைகள் ஆக்கிரமித்துள்ள ஆங்கில மொழியில் (ஐந்து என்பது கூடிக் கொண்டேபோவதுதான் கவலையளிக்கிறது) பதில் தந்தார் “டுடே மீனாட்சி டெம்பிள் பிக் பூஜா ஆர்த்தி பங்க்ஷன். நோ.. நோ.. மேரேஜ்  பங்க்ஷன். ”

கீழவாசல் திருமலைநாயக்கர் மகால் சாலையில் குறைந்தபட்சம் ஆயிரம் மனிதர்கள் வேகமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்திருப்பார்கள். அதில் பெண்களே அதிகம்.

மதுரையின் ஃபேமஸ் ஜிகர்தண்டா கடையில் முப்பது நாற்பது பேர் நின்றுகொண்டே  இதமாக  கொட்டும்  மழையிலும் தாங்கள் வாங்கிய ஜில்லென்ற ஜிகர்தண்டாவை கிளாஸை நோக்கிக் குனிந்த தலை நிமிராமல் குடித்துக் கொண்டிருந்தனர். அந்த கூட்டத்தில் மலைத்துப் போய் தனது காரை எங்கே பார்க் செய்யலாம் என்று குழம்பியபடி ‘கடவுளே’ என்று புலம்பினான் வெங்கட்  என்ற  வெங்கடேஷ்.

ஒரு  வழியாக பார்க்   செய்ய  இடம் கிடைத்தபோது அவன் செல்பேசி “ரயில் ஆராரோ ரயில் ஆராரோ” என்று  பாட்டு  பாடியது. அவன்  அதைக்  கவனிக்காமல் காரைவிட்டு  இறங்கினான். அவன்  பக்கத்தில்  இருந்த  ஆட்டோ  டிரைவர்

“சார்  உங்க  போன்தான்  அடிக்குது” என்றதும்

“என்  ஃபோனா? ” என்று  குனிந்து  பார்த்தவன் தனது ரிங்டோன் தான் என்று உறுதிசெய்துவிட்டு அசடு வழிந்துவிட்டு தனது செல்பேசியைக் கையாண்டான்.


Tags:


2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Indra Selvam says:

    தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. ஆரம்பமும் வித்தியாசமே. பார்ப்போம் போக போக தெரியும். ஆனால் நேத்தாஜி பெயர் தான் குழப்புகிறது. இது எந்த காலத்தில் நடக்கும் கதை? .


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Nice start .sila it at hil puriyala ettu rentu perum shree paththi than pesunanka apuram thitirunu pirathamar nethajinu pesuranga.

You cannot copy content of this page