ஷ்! இது வேடந்தாங்கல்! – 3
1478
0
இடைவிடாது பேசிய கௌன்சிலரை வெங்கட் நிறுத்தி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவன் உள்வாங்கிய செய்தியில் சின்னதாய் ஒரு சந்தேகம் தோன்ற கைகளால் சைகையில் அவரை மறித்து “ஒரே ஒரு கேள்வி.” என்று சொன்னான் வெங்கட்.
“கேளுங்க வெங்கட். ”
“அந்த வீடியோ நாலு வருஷம் முன்பு பதிவாகியிருந்ததா? ”
“ஆமாம். ”
“பவித்ரா இப்ப எங்கே? ”
“அட்ரஸ் இல்லை” என்றார் கௌன்சிலர் பற்களைக் கடித்துக்கொண்டு.
“ஸ்ரீயைப் பற்றி ஏதாவது க்ளு? ”
“எதுவுமே இல்லை.”
“ஓ! கஷ்டம்தான். அவள் கூட இருந்த பொண்ணு ‘ஸ்ரீ’ க்கு கண்டிப்பா பணம் பற்றி எப்படி தெரியும்? ”
“அவுங்க இரண்டு பேரும் மாலில் இருந்த தினம்.. பணம் தொலைந்த இரண்டாவது நாள். மேலும் இருவரும் நான்கு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்திருக்காங்க.. அந்த மால் முழுதும் சுற்றிச் சுற்றி பர்சேஸ் செய்திருக்காங்க.. ”
“சரி. நைன்டி பர்சன்ட் வாய்ப்பிருக்கு” என்று அவசரமாக பதில் தந்தான் வெங்கட்.
“ஃபோட்டோ இருந்திருந்தால் நாங்களே இப்போ கஷ்டப்பட தேவையில்லை. ஃபோட்டோ இல்லாதலால இப்ப பிரச்சனை. ”
“மூன்று வருஷத்திலே நாற்பது எல் செலவாகியிருக்காதா? கிடைக்கப் போகாத பணத்திற்கு எதற்கு செலவு செய்றீங்க? ”
“இருக்கும்தான். ஆனால் என் பணத்தைக் கை வச்சவங்க தப்புவதா? நோ மிஸ்டர்.. ” என்று அவர் வெங்கட்டின் பெயரை யோசித்தபோது வெங்கட் அவரிடம் “வெங்கட். ” என்று கூறி ஞாபகப்படுத்தினான்.
“யெஸ்… யெஸ்.. வெங்கட்.. என் பணம் யார் மடியை நிரப்புச்சுன்னு தெரியணும். எதிர் கோஷ்டியா? இல்லை பிளாட்பாரம் ஆளுங்களான்னு தெரியணும். அந்த பொண்ணு ஸ்ரீயை கண்டுபிடிக்கணும்.. ” என்று ஸ்ரீயைப் பற்றி பேசும் போது மட்டும் அவர் கண்கள் இரத்தமாகச் சிவந்ததை வெங்கட் கவனித்தான்.
“அப்படியா?உங்கள் பணம் உங்ககிட்ட வருகிறதோ இல்லையோ கண்டிப்பா அக்கூயூஸ்ட் என் கஸ்டடியில்தான் இருக்கணும். கண்டிஷனுக்கு ஓகேயா? நான் பொண்ணுங்க விஷயத்தில் ரொம்ப கவனமாக இருப்பேன். கன்னியமாகவும். உங்களிடமும் அதை எதிர்பார்க்கிறேன் சார். உங்களுக்குத்தான் பணம் யார் மடியை நிரப்புச்சுன்னு தெரிந்திடுதே? அப்புறம் என்ன பிரச்சனை?
“சரி. ஆனா எதிர் கோஷ்டியாக இருந்தால்? என் கையில விட்டுடணும். பதிலுக்கு பதில் இவன் தருவான்டான்னு அவனுங்களுக்கு தெரியணும். என் இனம் அவனுடையதுக்கு சளைத்தது இல்லை என்று அவனுக்குப் புரியணும். ஸ்ரீயிடம் எனக்கு பத்து நிமிஷம் போதும். பழைய கணக்கு தீர்க்கணும். ”
மேலும் வெங்கட் அவசரமாக பதில் தந்தான் “இந்த கேஸை நான் சால்வ் பண்றேன். எனக்கு உங்களால் ஒரு ஃபேவர் ஆகணும். ”
“சொல்லுங்க வெங்கட். ”
“கேஸ் முடிந்தபிறகு எனக்கு கால் பண்ணக்கூடாது. வேற கேஸ் எதுவும் நான் எடுக்கமாட்டேன். உங்க ஆளுங்க கேஸ் வேற எதுவும் நான் எடுக்கமாட்டேன். நம்ம மூன்று பேர் தவிர இந்த ப்ராசஸ் யாருக்கும் தெரியக்கூடாது. கிளியர்? ”
“ம்.. ம்.. ”
“மூன்று பேர் தவிர யாருக்கும் தெரியக்கூடாது. மீண்டும் கான்டாக்ட் பண்ணக்கூடாது. இதிலே காம்ப்ரமைஸ் பண்ணமாட்டேன். ”
“சரி.. சரி…”
“வீடியோ ஃபூட்டேஜ் தாங்க. என் சார்ஜ் ஒரு எல். இன்றே கிரடிட் ஆகணும். நான் கிளம்பட்டுமா? ”
“ஓகே சார். உங்களை மீட் பண்ணதுல ரொம்ப திருப்தி. உங்க ரிலேடிவ் ராகுல் டி.ஐ.ஜி எனக்கு ரொம்ப க்ளோஸ். கேஸைப் பற்றிய கவலை இனி எனக்கு இல்லை வெங்கட். ”
“எனக்குத் தேவையான விபரங்களை பிறகு உங்களுக்கு வாட்ஸ் ஆப் பண்றேன். என் நம்பர் உங்களுக்கு தெரியும் தானே? உங்களை எந்த நம்பரில் கான்டாக்ட் பண்ணணும்கிறதை எனக்கு வாட்ஸ் ஆப் பண்ணுங்க. ”
வெங்கட் தன் வேலை முடிந்ததால்.. தனது அலுவலக ஜீப்பில் கிளம்பினான். பவித்ராவும் ஸ்ரீயும் அவன் நினைவுகளை நிரப்பினர். நாலு வருஷம் கிடைக்காத பொண்ணு என்னிடமா கிடைக்கப் போகிறாள்? முடிந்தவரை முயற்சி செய்யலாம் முடியவில்லை என்றால் அவன் பாடு என்று நினைத்துக் கொண்டே காரை ஓட்டினான். கார் வேகமாக அவன் ப்ளாட்டிற்குள் நுழைந்தது. அதிமாக மிடில் கிளாஸ் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி.
தனது ப்ளாட்டில் ஹெச்–பி-ஓ வில் ‘அக்லி ட்ரூத்’ திரைப்படத்தை பார்த்துக் கொண்டே வெங்கட் தனது கைபேசியில் மில்லியனம் மால் வீடியோவைப் பார்த்தான். ‘அக்லி ட்ரூத்’ திரைப்படத்தின் இறுதிக்காட்சி தொலைக்காட்சியில் அழகாக காட்சியாக விரிந்தது.
படத்தில் இறுதிக்காட்சியான அழகான முத்தக் காட்சியை கண் இமைக்காமல் பார்த்தவன் ‘ஹீரோயின் கண்களில் 6mm காலிபர் பிஸ்டல்’ இருக்குது. பின்னே படம் பாக்ஸ் ஆஃபீசில் தூள் கிளப்பாதா என்ன? தியேட்டரில் பிய்ச்சிக்கிட்டு போகாதா என்ன? என்று தன்னிடமே கேட்டுக்கொண்டான். கௌன்சிலர் பி.ஏ அனுப்பின வீடியோவை கைபேசியில் ஓடவிட்டான்.
மீண்டும் படத்தின் முத்தக்காட்சி அவன் கண்களை இங்கே பார் என்று அழைத்தது. பார்த்தவன் மீண்டும் தன்னிடம் சொல்லிக்கொண்டான் ‘இந்த சீன் பார்த்தவனெல்லாம் இன்று நைட் தூங்கிடுவானா? மற்றவன் பாடுயிருக்கட்டும் முதலில் நம்ம தூக்கம் போச்சு!’ என்று அவன் நினைக்கையில் செல்பேசி சிணுங்கியது.
Comments are closed here.