Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-14

அத்தியாயம் 14 – பறக்கும் குதிரை

நந்தினி ஒளி வீசிய அந்த வாளை எடுத்து ஆசையுடன் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். பிறகு முகத்துடன் சேர்த்து வைத்துக் கொண்டு தன் செவ்விதழ்களினால் முத்தமிட்டாள். ஒரு கணம் அக்கினிக் கொழுந்தைச் செந்தாமரை மலர் முத்தமிடுவது போலிருந்தது. அடுத்த கணத்தில் இரத்த வர்ம மேகம் பூரண சந்திரனைக் குறுக்கே நின்று தடுக்கப் பார்ப்பது போலிருந்தது. நந்தினியின் முகம் அப்போது காபாலிகர்கள் பூசித்த இரத்த பலி கேட்கும் காளியின் கோர சௌந்தரிய முகம் போலாயிற்று. கத்தியை எடுத்து முன்போல் பக்கத்தில் வைத்ததும் அவளுடைய முகம் பழைய வசீகரத்தை அடைந்தது.

 

“ஆம், தெய்வம் எனக்கு அளித்திருக்கும் சூசகம் இந்த வாள். ஆனால், அந்தச் சூசகத்தின் பொருள் இன்னதென்பதை நான் இன்னும் அறியவில்லை. இந்த வாளை நான் அடிக்கடி கொல்லன் உலைக்கு அனுப்பித் துருநீக்கிப் பதப்படுத்திக் கூராக்கி வைத்துக் கொண்டு வருகிறேன். தாய்ப்புலி தான் பெற்ற குட்டிப் புலியைப் பாதுகாப்பதுபோல் இதை நான் பாதுகாத்து வருகிறேன். உரிய பிராயம் வருவதற்குள் புலிக்குட்டி நீண்ட கொம்புகள் படைத்த காட்டு மாடுகளிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது அல்லவா? அராபிய நாட்டார் தங்கள் குதிரையை எவ்வளவு அன்புடன் பேணுகிறார்களோ அப்படி இதை நான் பாதுகாத்து வருகிறேன். நோய்ப்பட்ட சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு வானமாதேவி பணிவிடை செய்வதுபோல் நானும் இந்த வாளுக்குச் செய்து வருகிறேன். இதைக் கொண்டு நான் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெய்வம் இன்னும் எனக்கு அறிவிக்கவில்லை. மலர்மாலை தொடுத்துப் பழகிய இந்தக் கைகளினால் இந்த வாளை எந்தக் கொடியவனுடைய விஷ நெஞ்சத்திலாவது செலுத்த வேண்டுமென்பது தெய்வத்தின் ஆக்ஞையோ அல்லது என்னுடைய மார்பில் என்னுடைய கையினாலேயே இதைச் செலுத்திக் குபுகுபுவென்று பெருகும் இரத்தத்தை ஆடை ஆபரணங்களால் அலங்கரித்த இந்த உடம்பில் பூசிக் கொண்டு நான் சாகவேண்டும் என்பது தெய்வத்தின் சித்தமோ, இன்னும் அது எனக்குத் தெரியவில்லை. இந்த வாளை எனக்கு அளித்திருக்கும் தெய்வம், சமயம் வரும்போது அதையும் எனக்குத் தெரியப்படுத்தும். அந்தச் சமயம் எப்போது வரும் என்று தெரியாத படியால் இரவும், பகலும் எந்த நேரத்திலும் ஆயத்தமாயிருக்கிறேன். ஆம்; அழகிற்குப் பெயர்போன பழுவூர் இளைய ராணிக்கு ஆடை ஆபரண, அலங்காரங்களில் மிக்க பிரியம் என்பது நாடறிந்த செய்தி. இரவு பகல் அறுபது நாழிகையும் நான் இந்த என் மேனியை அலங்கரித்து அழகு படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன். பாவம்! பெரிய பழுவேட்டரையர் அவருக்காகவும், அவருடைய கௌரவத்தை முன்னிட்டும் நான் இப்படி சதா சர்வகாலமும், சர்வாலங்காரத்துடன் விளங்குவதாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்! என் நெஞ்சத்தில் கொழுந்துவிட்டெரியும் தீயை அவர் அறியார்!”

 

இதையெல்லாம் பிரமை பிடித்தவன் போலக்கேட்டுக் கொண்டிருந்த வல்லவரையன் சுய உணர்ச்சியை வருவித்துக் கொண்டு, “அம்மணி! பெரிய பழுவேட்டரையர் எங்கே!” என்று கேட்டான்.

 

“ஏன்? அந்தக் கிழவரைப் பார்ப்பதற்கு உமக்குப் பயமாயிருக்கிறதா?” என்றாள் நந்தினி.

 

“இல்லை, அம்மணி! தங்களைப் பார்க்கவே நான் பயப்படவில்லையே, பழுவேட்டரையரிடம் எனக்கு என்ன பயம்?” என்றான் வந்தியத்தேவன்.

 

“ஆகா! உம்மை எனக்குப் பிடித்திருப்பதின் காரணம் அதுதான். எதனாலோ, என்னைக் கண்டு எல்லோரும் பயப்படுகிறார்கள். வீராதி வீரரும் எத்தனையோ போர்க்களங்களில் போரிட்டு உடம்பில் அறுபத்துநாலு புண் சுமந்தவருமான பெரிய பழுவேட்டரையர் என்னைக் கண்டு பயப்படுகிறார். சின்னப் பழுவேட்டரையர் – காலனையும் கதிகலங்க அடிக்கக்கூடிய காலாந்தக கண்டர், – என்னிடம் வரும்போது பயந்து நடுங்குகிறார். இந்தச் சோழ ராஜ்யத்தை ஏகசக்கராதிபதியாக ஆளவிரும்பும் மதுராந்தகத் தேவர் என்னிடம் வரும்போதும் பயபக்தியுடன் வருகிறார். யம லோகத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் சுந்தர சோழச் சக்கரவர்த்திகூட நான் அருகில் சென்றால் நடுங்குகிறார். ஒவ்வொரு தடவை அவர் என்னைக் கண்டு மூர்ச்சையே அடைந்து விடுகிறார். இன்றைக்கு வந்தானே பார்த்திபேந்திர பல்லவன்! அவனுடைய அஞ்சா நெஞ்சத்தையும், வீரத்தைப் பற்றியும் வெகுவாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆதித்தகரிகாலரின் உயிர்த்தோழன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் என் அருகில் வந்த அரை நாழிகைக்கெல்லாம் அவன் எப்படி அடங்கி ஒடுங்கிப் போய்விட்டான்! ஆதித்தகரிகாலரிடம் உடனே போக வேண்டிய கடமையையும் மறந்து, என்னைத் தொடர்ந்து வருகிறான். நான் காலால் இட்ட பணியைத் தலையால் நிறைவேற்றி வைக்க ஆயத்தமாயிருக்கிறான். அதே சமயத்தில் என்னருகில் நெருங்கும்போது அவன் நடுங்குகிறான். அதைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. சிறு குழந்தையாயிருந்த போது எரியும் நெருப்பைக் காண எனக்கு ஆசையாயிருக்கும். நெருப்பின் அருகில் செல்வேன். தீயின் கொழுந்தைத் தொடுவதற்கு ஆசையுடன் கை விரலை நீட்டுவேன். ஆனால் அதற்குத் தைரியம் வராது. சட்டென்று விரலை எடுத்துக்கொண்டு விடுவேன். இம்மாதிரி எத்தனையோ தடவை செய்திருக்கிறேன். பார்த்திபேந்திரன் என் பக்கத்தில் நெருங்கி வருவதையும், பயந்து விலகுவதையும் பார்க்கும்போது அந்தப் பழைய ஞாபகம் எனக்கு வந்தது. பல்லவன் மட்டும் என்ன? நீர் யாருடைய தூதராக ஓலை எடுத்துக்கொண்டு காஞ்சியை விட்டுக் கிளம்பினீரோ, அந்த ஆதித்தகரிகாலரும் அப்படித்தான். நாங்கள் குழந்தைகளாயிருந்த நாளிலிருந்து அவருக்கு என்பேரில் அளவில்லாத வாஞ்சை; கூடவே ஒரு பயம். அதனால் என் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறி விட்டது! ஐயா! உமது எஜமானரை நீர் மறுபடியும் சந்திக்கும் போது எனக்காக ஒரு செய்தி சொல்வீரா? ‘சென்றதையெல்லாம் நான் மறந்து விட்டேன். நான் இப்போது அவருக்குப் பாட்டி உறவு பூண்ட பழுவூர் ராணி. என்னைப் பார்ப்பதற்குச் சிறிதும் பயப்பட வேண்டாம். அவரை நான் கடித்துத்தின்று விழுங்கி விட மாட்டேன்!’ என்று சொல்லுவீரா?”

 

“தேவி! நான் உயிரோடு திரும்பிபோய் ஆதித்த கரிகாலரைப் பார்ப்பேன் என்பது நிச்சயமில்லை, அப்படிப் பார்த்தால் அவரிடம் நான் சொல்லுவதற்கு எத்தனையோ செய்திகள் இருக்கின்றன. தங்களுடைய செய்தியைச் சொல்லுவதாக என்னால் உறுதி கூற முடியாது. தயவு செய்து மன்னிக்க வேணும்!”

 

“ஆம்! நான் பார்த்திருப்பவர்களுக்குள்ளே நீர் ஒருவர்தான் தைரியசாலி. மனத்தில் உள்ளதை ஒளியாமல் பேசுகிறீர். ஆகையால்தான் உம்மை எனக்குப் பிடித்திருக்கிறது. வாணர்குல வீரரே! நான் அதிகம் பேரைப் பார்ப்பது கிடையாது. பழையாறை இளைய பிராட்டியைப் போல் ரதத்தில் ஏறிப் பிரயாணம் செய்வதில்லை. எங்கேயாவது போகவேண்டி நேர்ந்தால் மூடுபல்லக்கில் போகிறேன். எனக்கு யார் மூலமாகவாவது ஏதேனும் காரியம் ஆகவேண்டியிருந்தால் அவர்களை மட்டுந்தான் பார்க்கிறேன். அவர்கள் பெரும்பாலும் கோழைகளாயிருக்கிறார்கள். மனத்தில் உள்ளதைச் சொல்வதற்குத் துணிவதில்லை. நீர் மனத்தில் தோன்றுவதை ஒளிக்காமல் சொல்கிறீர்…”

 

“ஒளிப்பதில் பயனில்லை என்று நான் அறிந்திருக்கிறேன், ராணி! தங்களுடைய கண்கள் ஊடுருவிச் சென்று அறிய முடியாத இரகசியம் எந்த மனிதனுடைய நெஞ்சிலும் இருக்க முடியாது!”

 

“அது உண்மையாக இருக்கலாம். ஆனால் உம்முடைய நெஞ்சில் உள்ளதைத்தான் நான் இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை. போனால் போகட்டும், பழுவேட்டரையரைப் பற்றிக் கேட்டீர். என் கணவரும், பார்த்திபேந்திரனும் பரிவாரங்களுடன் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கே கண்ணகிக் கூத்தும், வேலனாட்டமும் நடைபெறுகின்றன. சின்ன இளவரசரைப் பற்றி வெறியாட்டக்காரனிடம் ஏதாவது தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்ப்பதற்காகப் போயிருக்கிறார்கள், பைத்தியக்காரர்கள்! யாரைக் கேட்க வேண்டுமோ அவரைப் பிடித்துக் கேட்காமல் ஜோசியக்காரனிடம் சென்றிருக்கிறார்கள். திரும்பி வருவதற்கு வெகுநேரம் ஆகும். ஆகையால் உம்மை நான் அழைத்துவரச் செய்தேன். ஐயா! மறுபடியும் கேட்கிறேன். இளவரசரைப் பற்றிய உண்மை உமக்குத் தெரியும் அல்லவா? அதை நீர் எனக்குச் சொல்லமாட்டீர் அல்லவா?”

 

“இல்லை தேவி! சொல்வதற்கில்லை! இனிமேல் எந்தக் காரியத்திற்கும் புனைந்துரைப்பதில்லையென்றும், உண்மையே சொல்வதென்றும் இன்றைக்குத்தான் தீர்மானம் செய்து கொண்டேன். ஆகையால் இளவரசரைப் பற்றிச் சொல்ல முடியாது. சற்று முன்னால் கூட என் தீர்மானத்தை மறந்து விட்டேன். மன்னிக்க வேணும்!” என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் தன்னுடைய இடைக் கச்சின் சுருளை அவிழ்த்து அதற்குள்ளேயிருந்த பனை இலச்சினை மோதிரத்தை எடுத்தான்.

 

“அம்மணி! இதோ தாங்கள் அளித்த பனை முத்திரை மோதிரம். இலங்கையில் பூதிவிக்கிரம கேசரியின் ஆட்கள் இதை என்னிடமிருந்து பலவந்தமாகக் கவர்ந்து கொண்டது உண்மைதான். ஆனால் சேனாதிபதி திருப்பிக் கொடுத்து விட்டார். இதோ தங்களிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்; பெற்றுக் கொண்டு அருள் புரியவேணும்!” என்று கூறி முத்திரை மோதிரத்தை நீட்டினான்.

 

நந்தினி அதை உற்றுப்பார்த்துத் தான் கொடுத்த முத்திரை மோதிரம் அதுதான் என்று தெரிந்து கொண்டாள். “ஐயா! நான் கொடுத்ததை திரும்பி வாங்கிக்கொள்ளும் வழக்கமில்லை. உம்முடைய நேர்மையைச் சோதித்து அறிவதற்காகவே கேட்டேன். சோதனையில் நீர் தேறி விட்டீர். என்னுடைய ஆட்களைக் கொண்டு உம்மைச் சோதனை போடும் படியான அவசியத்தை எனக்கு ஏற்படுத்தவில்லை. மோதிரத்தை என்னுடைய ஞாபகத்துக்காக நீரே வைத்துக் கொள்ளலாம்!” என்றாள்.

 

“அம்மணி! யோசித்துச் சொல்லுங்கள். இது என்னிடமிருந்தால் மீண்டும் அவசியம் நேரும்போது உபயோகப்படுத்த வேண்டியிருக்கும்…”

 

“அதைப்பற்றிக் கவலை இல்லை. எப்படி வேணுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உம்மை இப்போது மறுபடியும் கண்ணைக் கட்டிப் பல்லக்கிலே ஏற்றிக்கொண்டு போகச்சொல்லப் போகிறேன். உம்மைப்பிடித்த இடத்திலேயே திரும்பவிட்டு விடுவார்கள்….”

 

“நான் அதற்கு மறுத்தால்?”

 

“இந்த பாழடைந்த அரண்மனையிலிருந்தும் கோட்டையிலிருந்தும் உம்மால் திரும்பிப் போக முடியாது. திரும்பத் திரும்பப் புறப்பட்ட இடத்துக்குத்தான் வந்து கொண்டிருப்பீர்.”

 

“தேவி! இந்தக் கோட்டை? இந்தப் பாழடைந்த அரண்மனை?…”

 

“ஆம்; ஒரு காலத்தில் இந்தச் சோழநாடு பல்லவர் ஆட்சியில் வெகுகாலம் இருந்தது. அப்போது பல்லவ சக்கரவர்த்திகள் இங்கே கோட்டையும், அரண்மனையும் கட்டியிருந்தார்கள். பிறகு சோழநாடு பாண்டியர்கள் வசப்பட்டது. பாண்டிய மன்னர்கள் சில சமயம் இந்த அரண்மனையில் வசித்தார்கள். விஜயாலய சோழர் காலத்தில் இங்கே ஒரு பெரிய யுத்தம் நடந்தது. கோட்டை இடிந்து தகர்ந்தது. அரண்மனையிலும் பாதி அழிந்தது. மிச்சம் அழியாமலிருந்த பகுதியில் இப்போது நாம் இருக்கிறோம். இந்தக் கோட்டையைச் சிலர் பல்லவராயன் கோட்டை என்றும், இன்னும் சிலர் பாண்டியராயன் கோட்டை என்றும் சொல்வார்கள். இரண்டிலும் உண்மை உண்டு. ஆனால் நன்றாக வழி தெரிந்தவர்களாலேதான் இதற்குள்ளே வந்துவிட்டு வெளியேற முடியும்! என்ன சொல்கிறீர்? என் ஆட்களை அழைத்துக்கொண்டு போய்விடச் சொல்லட்டுமா? அல்லது நீரே வழி கண்டுபிடித்து…”

 

“இல்லை, தேவி! வழி கண்டுபிடித்துச் செல்ல எனக்கு நேரம் இல்லை. என்னை அழைத்து வந்தவர்களே திரும்ப அழைத்துச் செல்லட்டும். ஆனால்… நான் போவதற்கு முன்னால்… என்னைத் தாங்கள் அழைத்து வரும்படி சொன்ன காரணம் வேறொன்றும் இல்லையா? நான் தங்களுக்குச் செய்யக்கூடிய உதவி வேறொன்றும் இல்லையா? அப்படி ஏதாவது இருந்தால், சொல்லுங்கள்!”

 

“நல்லது; நீர் கேட்கிறபடியால் சொல்கிறேன். பறக்கும் குதிரை ஒன்று எனக்கு வேண்டும். உம்மால் முடிந்தால் சம்பாதித்து வந்து கொடுக்கலாம்.”

 

“என்ன? பறக்கும் குதிரை என்றா சொன்னீர்கள்?”

 

“ஆம்; பறக்கும் குதிரைதான்!”

 

“பறப்பதுபோல் அதிகவேகமாய் ஓடக்கூடிய அரபு நாட்டுக் குதிரையைச் சொல்கிறீர்களா?”

 

“இல்லை; இல்லை! என்னால் அத்தகைய குதிரை மேல் ஏறவே முடியாது. பூமியில் கால் வைத்து ஓடும் குதிரையை நான் சொல்லவில்லை. பறவைகளைப்போல் இறகுகளை விரித்து வானத்தில் பறந்து செல்லும் குதிரையைச் சொல்கிறேன். அம்மாதிரி அதிசயக் குதிரைகள் இந்தப் பூவுலகில் எங்கேயோ இருப்பதாகக் கதைகளில் கேட்டிருக்கிறேன். அத்தகைய இறகுள்ள பறக்கும் குதிரைதான் எனக்கு வேண்டும்!”

 

“எதற்காக? சொர்க்க லோகத்துக்குப் பறந்து போவதற்காகவா?”

 

“என்னைப் பார்த்தால் சொர்க்கத்துக்குப் போகக் கூடியவளாகத் தோன்றுகிறதா? அத்தகைய புண்ணியம் செய்தவள் அல்ல நான். கொடிய பாவங்கள் பல செய்தவள்.”

 

“சொர்க்கத்தில் உள்ளவர்கள் புண்ணியம் மட்டுந்தானா செய்கிறார்கள்? அங்கேயும் பாவங்கள் செய்கிறார்கள். அதற்குப் பரிகாரம் தேடப் பூவுலகத்துக்கு வருகிறார்கள். வந்த காரியம் ஆனதும் சொர்க்கத்துக்குப் போகிறார்கள்.”

 

“இல்லை எனக்குச் சொர்க்கத்துக்குப் போக விருப்பம் இல்லை. பாண்டிய நாட்டில் ஒரு பாலைவனம் இருக்கிறது. அதன் நடுவில் சில மொட்டைப் பாறைகள் இருக்கின்றன. புல், பூண்டு முளைக்காத பாறைகள். அவற்றில் சில முழைகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் அந்த முழைகளில் திகம்பர ஜைனர்கள் இருந்து தவம் செய்தார்கள். இப்போது பாம்புகளும் நரிகளும் அவற்றில் வசிக்கின்றன. தேவலோகத்து அமராவதி நகரைக் காட்டிலும் அந்தப் பாண்டிய நாட்டுப் பாலைவனப் பாறைகளே எனக்கு அதிகம் பிடித்தமானவை.”

 

“தேவி! தங்களுடைய ஆசை அதிசயமானதுதான்.”

 

“பறக்கும் குதிரை கிடைத்தால் நான் அந்தப் பாலைவனத்துக்குப் போவேன். பிறகு அங்கிருந்து இலங்கைத் தீவுக்குப் பறந்து செல்வேன். இலங்கையில் வானை முட்டும் மலைகளும், அம்மலைகளை மறைக்கும்படி உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடுகளும் இருக்கின்றனவாம். இந்தச் சோழ நாட்டில் காணப்படும் எருமை மந்தைகளைப் போல் இலங்கைக் காடுகளில் யானை மந்தைகள் திரியுமாம்; அவற்றையெல்லாம் பார்ப்பேன். இன்னும் இந்தப் பூவுலகத்தின் மத்தியில் உலகம் தோன்றின நாள் தொட்டுப் பனிக்கட்டியால் மூடப்பட்ட சிகரங்களையுடைய மலைகள் இருக்கின்றனவாம். சூரியன் உதயமாகும் சமயத்தில் அவை வெள்ளி மலைகளைப் போல் ஜொலிக்கும். பறக்கும் குதிரை மேல் ஏறிச் சென்று அம்மலைச் சிகரங்களைப் பார்க்க விரும்புகிறேன். இன்னும் அப்பால் பாண்டிய நாட்டுப் பாலைவனத்தைப்போல பதினாயிரம் மடங்கு விஸ்தாரமான பாலைவனங்கள் ஒரே வெண்மணல் காடாக இருக்குமாம். பகல்வேளையில் அங்கே எரியும் தீயின் மத்தியில் இருப்பது போலவே தோன்றுமாம். அங்கேயெல்லாம் போக விரும்புகிறேன். இன்னும் அப்பால் போனால் கடுங்குளிர் காரணமாகக் கடல்நீர் உறைந்து கெட்டிப்பட்டு மனிதர்களும் மிருகங்களும் நடந்து போகும்படியிருக்குமாம். பறக்கும் குதிரை மேல் ஏறிச்சென்று அந்த இடங்களைப் பார்க்க விரும்புகிறேன்…”

 

“தேவி! என்னால் அத்தகைய பறக்கும் குதிரையைத் தங்களுக்கு கொண்டு வந்து தர முடியாது. ஆனால் தாங்கள் கூறிய சில இடங்களுக்குப் போகச் சுலபமான வழி இருக்கிறது. ஒரு நல்ல படகிலே ஏறினால் அரை நாளில் இலங்கைக்குப் போகலாம். கப்பல் ஏறிச் சென்றால்…”

 

“ஐயா! அந்த வழி எனக்குத் தெரியாத வழி அல்ல. ஆனால் எனக்குக் கடலைக் கண்டால் பயம். கப்பலிலே ஏறுவதென்றால் பயம். நதியைப் படகில் ஏறிக்கடக்கும்போது படகு அசைந்தால் கூடப் பயம். ஆகையால் உம்முடைய யோசனை எனக்குச் சிறிதும் பயன்படாது. நீர் போய் வரலாம்!” என்று கூறி நந்தினி எழுந்தாள்.

 

“தேவி! வேறொன்றும் தாங்கள் என்னிடம் சொல்வதற்கு இல்லையா?”

 

“இல்லை! நீர் ஏதோ சொல்ல விரும்புவது போல் காண்கிறது.”

 

“ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அதற்கு மட்டும் விடை சொல்ல வேண்டும். சில நாளைக்கு முன்பு தாங்கள் இலங்கைக்கு வந்திருக்கவில்லையா? அநுராதபுரத்தின் வீதிகளில் இருண்ட நிழலில் தனியாக நின்றிருக்கவில்லையா?”

 

“இல்லவே இல்லை. பழுவேட்டரையரின் அரண்மனையையும் காவலையும் தாண்டி நான் ஒரு பொழுதும் அப்பால் சென்றதே இல்லை. உமக்கு ஏன் அத்தகைய சந்தேகம் உதித்தது?”

 

“அம்மணி! இலங்கையில் சில தினங்களுக்கு முன்பு தங்களைப் பார்த்தேன். ‘பறக்கும் குதிரை’ என்றெல்லாம் சொல்லுகிறீர்களே? ஒருவேளை உண்மையில் அத்தகைய குதிரை தங்களிடம் இருக்கிறதோ, அதில் ஏறி அங்கு வந்தீர்களோ என்று நினைத்தேன். ஆனால் இப்போதுபோல் ஆடை ஆபரணங்கள் புனைந்து அலங்காரமாக இருக்கவில்லை. சாதாரண சேலை ஒன்று மட்டும் உடுத்தி ஒருவித ஆபரணமும் புனையாமல் கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு நின்றீர்கள். அந்த ஸ்திரீ தாங்கள் அல்லவா?”

 

“இல்லை; நான் இல்லை ஐயா! நீர் கூறும் அந்த ஸ்திரீ வாய் திறந்து ஏதாவது பேசினாளா?”

 

“இல்லை; ஜாடையினாலேதான் பேசினாள். ஆனால் தங்களுக்கு மந்திரவாதிகளுடன் பழக்கம் இருக்கிறது. ஒருவேளை அத்தகைய மந்திர சக்தியினால் தங்களுடைய சூக்ஷும வடிவம் அங்கே வந்திருக்கலாம் அல்லவா?”

 

“நானோ, என்னுடைய சூக்ஷும சரீரமோ இல்லை என்றால்?…”

 

“தங்களை வடிவத்தில் மிகவும் ஒத்தவளாய், பேச முடியாத ஸ்திரீயாக அவள் இருக்க வேண்டும்.”

 

நந்தினியின் பார்வை எங்கேயோ வெகு தூரத்தில் சென்றிருந்தது. ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள்.

 

“ஐயா! சற்று முன்னால் எனக்கு ஏதேனும் உதவி செய்யவிரும்புவதாகச் சொன்னீர் அல்லவா?”

 

“ஆம்!”

 

“அது தாங்கள் உண்மையாகச் சொன்ன வார்த்தைதானே?”

 

“சந்தேகமில்லை.”

 

“அப்படியானால் இதைக் கேளும். எப்போதாவது ஒரு சமயம் மறுபடியும் அந்த ஸ்திரீயைப் பார்க்க நேர்ந்தால் அவளை எப்படியாவது பிடித்துக் கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பியும். அது முடியாவிட்டால் என்னையாவது அவளிடம் அழைத்துக் கொண்டு செல்லும்!” என்றாள் நந்தினி.

 

அரை நாழிகைக்கெல்லாம் வந்தியத்தேவன் மறுபடியும் முல்லையாற்றங்கரையில் நின்றான். அவனுடைய குதிரையும் பக்கத்தில் நின்றது. அவனை அங்கே அழைத்து வந்தவர்கள் ஒரு நொடியில் மறைந்துவிட்டார்கள். தேவராளனைக்கூடக் காணவே இல்லை.

 

முல்லையாற்றங்கரையோரமாகக் குதிரையை மெதுவாகவே செலுத்திக்கொண்டு வந்தியத்தேவன் இரவெல்லாம் பிரயாணம் செய்தான். மூன்றாம் ஜாமத்தில் வால் நட்சத்திரம் அதன் பூரண வளர்ச்சியை அடைந்து வானத்தில் ஒரு நெடிய பகுதியை அடைத்துக்கொண்டு காணப்பட்டது. மக்கள் உள்ளத்தில் பீதியை விளைவித்த அந்தத் தூமகேதுவின் காரணமாக உண்மையிலேயே ஏதேனும் விபரீதம் ஏற்படப் போகிறதா அல்லது இதெல்லாம் வெறும் குருட்டு நம்பிக்கைதானா என்று அடிக்கடி அவன் சிந்தனை செய்தான். நந்தினியின் நினைவும் இடையிடையே வந்து கொண்டிருந்தது. அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவன் மனத்தில் நன்கு பதிந்திருந்தன. முதல் தடவை தஞ்சை அரண்மனையில் அவளைப் பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சி இப்போது மறைந்துவிட்டது. ஏதோ பயங்கரமான துன்பங்களில் அடிபட்டவள் இவள் என்ற எண்ணத்தினால் ஒருவித அநுதாபமே உண்டாகியிருந்தது. ஆயினும் அவளுடைய நோக்கம் என்ன, அவள் செய்ய விரும்பும் காரியம் என்ன, அவளுடைய உண்மையான வாழ்க்கை வரலாறு என்ன என்பவை மர்மமாக இருந்தபடியால் ஒரு பக்கத்தில் கோபமும் இருந்தது. ஒப்பில்லாத சௌந்தரியத்தோடு, ஏதோ ஒருவித மாயாசக்தி உடையவள் அவள் என்றும் தோன்றியது. ஆதலின் அவளுடன் இனி எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளாமலிருப்பதே நல்லது. பனை இலச்சினை உள்ள மோதிரத்தை அவள் திருப்பி வாங்கிக் கொண்டிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும். அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டாளே? நதியிலே எறிந்துவிடலாம்; அதற்கும் மனம் வரவில்லை. இந்த அபாயகரமான காலத்தில் அது மீண்டும் சமயத்துக்கு உபயோகப்படலாம்; எதற்காக எறிய வேண்டும்?

 

பழையாறைக்குச் சென்று இளைய பிராட்டியைப் பார்த்துச் சொல்லவேண்டிய செய்தியையும் சொல்லிவிட்டால், அப்புறம் அதை எறிந்தே விடலாம். இம்மாதிரி தொல்லையான காரியங்களில் பின்னர் பிரவேசிக்கவே கூடாது. இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்குத் திசையில் வெள்ளி முளைத்தது. சுக்கிரனை எதிரிட்டுக் கொண்டு போகக்கூடாது என்று வந்தியத்தேவன் கேள்விப்பட்டிருந்தான். குதிரையை நிறுத்தி ஒரு மரத்தில் கட்டிவிட்டுத்தானும் தரையில் படுத்துச் சிறிது உறங்கினான்.




Comments are closed here.

You cannot copy content of this page