Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-15

அத்தியாயம் 15 – காலாமுகர்கள்

உதய சூரியனுடைய செங்கதிர்கள் வந்தியத்தேவனுடைய முகத்தில் சுளீர் என்று பட்டு அவனைத் துயிலெழுப்பி விட்டன. உறக்கம் தெளிந்ததும் எழுந்திருக்க அவனுக்கும் மனம் வரவில்லை, கண்ணை விரித்துப் பார்த்தான். சற்றுத் தூரத்தில் பயங்கர ரூபமுள்ள இரண்டு சாமியார்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய திரித்துவிட்ட சடை, ஒரு கையில் திரிசூலம், இன்னொரு கையில் அக்கினி குண்டம் இவற்றிலிருந்து அவ்விருவரும் காலாமுக வீர சைவர்கள் என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். இவர்களுடன் வாதப் போர் செய்வதற்கு ஆழ்வார்க்கடியான் இங்கு இல்லையே என்று எண்ணம் உண்டாயிற்று. அந்தக் காலாமுகச் சாமியார்கள் போகும் வரையில் கண்ணை மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்வதென்று தீர்மானித்தான்.

 

அவர்கள் அவன் பக்கத்தில் வந்து நிற்பதாக அவன் உணர்ந்தபோது கண்களைத் திறக்கவில்லை. அவர்களில் ஒருவர் அருகில் வந்து கனைத்தபோது, அவன் கண்ணை விழித்துப் பார்க்கவில்லை.

 

“சிவோஹம்! பையன் நல்ல கும்பகர்ணனாயிருக்கிறான்” என்றார் ஒருவர்.

 

“சிவோஹம்! இவனைப்போல் ஒரு வாலிபப் பிள்ளை நமக்குக் கிடைத்தால், எவ்வளவு நன்றாயிருக்கும்?” என்று சொன்னார், இன்னொரு சாமியார்.

 

சிவோஹம்! ஆளைப்பார்த்து, முகம் களையாயிருக்கிறதே என்று சொல்லுகிறாய்! இவனால் நமக்குப் பயன் ஒன்றுமில்லை. வெகுசீக்கிரத்தில் இவனுக்கு ஒரு பெரிய ஆபத்து வரப் போகிறது!” என்றார் முதல் வீர சைவர்.

 

மேலும் தூங்குவதுபோல் பாசாங்கு செய்வது மூச்சுவிட முடியாமல் திணறும் உணர்ச்சியை வந்தியத்தேவனுக்கு உண்டாக்கிற்று. எனினும் அச்சமயம் விழித்தெழுந்தால் தன் பாசாங்கு வெளியாகிவிடும். மேலே அவர்கள் ஏதாவது பேசுவதைக் கேட்க முடியாமலும் போய்விடும். தனக்கு என்ன பெரிய ஆபத்து வரப் போகிறது என்பதையும் இவர்கள் ஒரு வேளை சொல்லலாம் அல்லவா?…

 

ஆனால் அவன் எண்ணிய எண்ணம் நிறைவேறவில்லை.

 

“சிவோஹம்! அவனவனுடைய தலையெழுத்து! நீ வா போகலாம்!” என்று ஒரு வீரசைவர் கூற, இருவரும் அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள்.

 

அவர்கள் சற்றுத் தூரம் போவதற்கு அவகாசம் கொடுத்து விட்டு வந்தியத்தேவன் எழுந்தான். “சீக்கிரத்தில் இவனுக்கு பெரிய ஆபத்து வரப்போகிறது!” என்ற வார்த்தைகள் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.

 

பழைய காபாலிகர்களின் பரம்பரையில் வந்தவர்கள் காலாமுகர்கள். காபாலிகர்களைப் போல் அவர்கள் நரபலி கொடுப்பதில்லை. மற்றபடி காபாலிகர்களின் பழக்க வழக்கங்களை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் மயானத்தில் அமர்ந்து கோரமான தவங்களைச் செய்து வருங்கால நிகழ்ச்சிகளை அறியும் சக்தி பெற்றிருந்ததாகப் பலர் நம்பினார்கள். சாபங்கொடுக்கும் சக்தி அவர்களுக்கு உண்டு என்றும் பாமர ஜனங்கள் எண்ணினார்கள். ஆகையால் காலாமுக சைவர்களின் கோபத்துக்கு ஆளாகாத வண்ணம் அவர்களுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய, பலர் ஆயத்தமாயிருந்தனர். சிற்றரசர்கள் பலர் ஆலயங்களில் காலாமுகர்களுக்கு வழக்கமாக அன்னமளிப்பதற்கு நிவந்தங்கள் விட்டிருந்தனர். இதுவரையில் சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அரசர்கள் மட்டும் காலாமுகர்களுக்கு எவ்வித ஆதரவும் காட்டவில்லை.

 

இந்த விவரங்களையெல்லாம் அறிந்திருக்க வந்தியத்தேவன், “அவர்கள் ஏதாவது உளறிவிட்டுப் போகட்டும்; இதுவரையில் நேராத ஆபத்து நமக்குப் புதிதாக என்ன வந்துவிடப் போகிறது?” என்று எண்ணித் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டான். ஆயினும் வருங்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆசை அவன் மனத்தைவிட்டு அடியோடு அகன்று விடவில்லை. வந்தியத்தேவன் எழுந்து நின்று பார்த்தபோது அந்தக் காலாமுகர்கள் சற்றுத் தூரத்தில் ஒரு பழைய மண்டபத்தின் அருகில் போய்க் கொண்டிருப்பதைக் கண்டான். மண்டபத்துக்கு அருகில் செயற்கைக் குன்றம் ஒன்று காணப்பட்டது. அதில் ஒரு குகை, சிங்க முகத்துடன் வாயைப் பிளந்து கொண்டிருந்தது. பழைய நாள்களில் திகம்பர ஜைனர்கள் கட்டிக் கொண்டிருந்த அந்தக் குகைகளைக் காலாமுகர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

அங்கே சென்று அவர்களுடன் சிறிது பேச்சுக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுக்கு உண்டாயிற்று. குதிரையைக் கட்டியிருந்த இடத்திலேயே விட்டுவிட்டுச் செய்குன்றை நோக்கிப் போனான். மண்டபத்தை நெருங்கியபோது காலாமுகர்கள் குகையின் மறுபக்கத்தில் நின்று பேசியது அவன் காதில் இலேசாக விழுந்தது.

 

“அந்தப் பையன் பொய்த் தூக்கம் தூங்கவில்லை. உண்மையாகவேதான் தூங்கியிருக்க வேண்டும்” என்று சொன்னார் ஒருவர்.”

 

“அது எப்படி நிச்சயமாய்ச் சொல்கிறாய்?” என்றார் இன்னொருவர்.

 

“‘அபாயம் வரப்போகிறது’ என்ற வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அதைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்பாத மனிதர் யாரையும் நான் இதுவரையில் கண்டதில்லை.”

 

“பையன் நல்ல தீரனாகத் தோன்றுகிறான். அவனை நம்மோடு சேர்த்துக்கொண்டால் நன்றாய்த்தான் இருக்கும் நீ என்ன சொல்லுகிறாய்?”

 

“இவனைப் போன்ற வாலிபர்கள் எதற்காக? இன்னும் கொஞ்ச நாளில் இந்தச் சோழ நாட்டின் சிம்மாதனம் ஏறப்போகிறவனே காலாமுகத்தைச் சேரப் போகிறான்…”

 

“யாரைச் சொல்கிறாய்?”

 

“வேறு யாரை? மதுராந்தகத் தேவனைத்தான் சொல்கிறேன்! இது கூட உனக்குத் தெரியவில்லையா?”

 

“அது எப்படி? மற்ற இரண்டு பேர்?”

 

“ஒருவன் தான் கடலில் முழுகி இறந்துவிட்டானாம். இன்னொருவனுடைய காலம் குறுகிக்கொண்டிருக்கிறது…”

 

வந்தியத்தேவன் அதற்கு மேல் அந்தக் காலாமுகச் சாமியார்களின் பேச்சைக் கேட்கச் சிறிதும் விரும்பவில்லை. அவர்களுடன் பேச்சுக் கொடுக்கவும் எண்ணவில்லை.

 

விரைவிலே பழையாறை அடைந்து இளவரசியிடம் செய்தியைச் சொல்லிவிட்டுக் காஞ்சிக்குப் போக விரும்பினான். எல்லாருக்கும் மேலாகத் தான் அதிகம் கடமைப்பட்டிருப்பது ஆதித்த கரிகாலருக்கு அல்லவா? அவரை எத்தனையோ வித அபாயங்கள் சூழ்ந்திருப்பது உண்மை. பார்த்திபேந்திரன் கூடப் பழுவூர் ராணியின் மாய வலையில் விழுந்து விட்டான். எந்தக் காரியத்திலும் படபடப்புடன் இறங்கக் கூடியவரான ஆதித்த கரிகாலர் எப்போது எந்தவித அபாயத்துக்கு உள்ளவாரோ தெரியாது. அவரிடம் சென்று அவரைக் காத்து நிற்பது தன் முதன்மையான கடமை. வழியில் வீண்பொழுது போக்குவது பெருங்குற்றம். இந்தக் கணமே சென்றுவிட வேண்டும்.

 

வந்தியத்தேவன் சப்தமில்லாமல் திரும்பிச் சென்று குதிரை மீது ஏறிக்கொண்டான். குதிரையை வேகமாகத் தட்டிவிட்டான். காலாமுகர்களின் குகையோரமாகச் சென்றபோது அவர்கள் தன்னை வெறித்து நோக்குவதைக் கண்டான். ஒரு முகம் அவன் எப்போதோ பார்த்த முகம் போலத் தோன்றியது. ஆனால் நின்று பார்க்க விருப்பமின்றி மேலே சென்றான்.

 

வழியில் ஜன நெருக்கமான பல கிராமங்களை அவன் பார்த்தான். அங்கேயெல்லாம் இளவரசர் கடலில் மூழ்கியது பற்றிய செய்தி இன்னும் பரவவில்லையென்று தெரிந்தது. ஏனெனில் ஜனங்கள் சாவதானமாக அவரவர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அதுவரையில் நல்லதுதான். இளவரசரைப் பற்றிய செய்தி பழையாறையை அடைவதற்குள் தான் அங்கே போய்ச் சேர்த்துவிட வேண்டும். இளைய பிராட்டியிடம் உண்மையை அறிவித்து விடவேண்டும். குந்தவை தேவியின் காதில் வேறுவிதமான செய்தி விழுந்தால் ஏதாவது விபரீதம் நேரிட்டு விடலாம் அல்லவா? இளைய பிராட்டியாவது நம்புவதற்குத் தயங்கலாம். அந்தக் கொடும்பாளூர் இளவரசி உயிரையே விட்டாலும் விட்டுவிடுவாள்!… இந்த எண்ணம் வந்தியத்தேவனுக்கு மிக்க பரபரப்பை உண்டாக்கிற்று. ஆனால் அவனுடைய அவசரம் குதிரைக்குத் தெரியவில்லை. கால்களில் புதிதாக லாடம் அடிக்கப்பட்டிருந்த அக்குதிரை வழக்கமான வேகத்துடன் கூட ஓட முடியாமல் தத்தளித்தது. கடைசியாகப் பிற்பகலில் சூரியன் அஸ்தமிப்பதற்கு இரண்டு நாழிகை இருந்தபோதுதான் பழையாறைக் கோட்டையின் பெரிய சுவர் அவனுக்குப் புலப்பட்டது.

 

அதோ, கோட்டை வாசலில் துர்க்கையின் கோவில் தெரிகிறது. கோட்டைக்குள் எப்படிப் பிரவேசிக்கிறது என்பதைப் பற்றி எத்தனையோ யோசனைகள் அவன் உள்ளத்தில் மின்னல் வேகத்தில் படையெடுத்து வந்தன. ஆனால் ஒன்றும் காரிய சாத்தியமாகத் தோன்றவில்லை. பனைமுத்திரை மோதிரமோ இங்கே பயன்படாது. ஏனெனில் அந்த மோதிரத்துடன் வருவான் என்பது முன்னமே கோட்டைக் காவலர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும். இப்போது மோதிரத்தைப் பார்த்ததும் வேறு விசாரணையின்றிச் சிறைப்படுத்தி விடுவார்கள். சின்ன பழுவேட்டரையரிடம் அவனை அனுப்பி விடுவார்கள். இளைய பிராட்டி குந்தவை தேவியைப் பார்ப்பதற்கு முன்னால் அவ்விதம் அகப்பட்டுக் கொள்ள அவன் சிறிதும் விரும்பவில்லை.

 

யோசனை செய்த வண்ணம் குதிரையின் வேகத்தை அவன் குறைத்துக்கொண்டு கோட்டை வாசலை நெருங்கியபோது மற்றொரு திசையிலிருந்து ஒரு கூட்டம் வருவதைக் கண்டான். வேல் பிடித்த வீரர்கள், விருதுகளைச் சுமந்தவர்கள், குதிரைகள் ஏறி வந்தவர்கள் – இவ்வளவு பேருக்கும் நடுவில் தாமரைப் பூ வடிவமாக அமைந்த ஒரு தங்க ரதம். ஆஹா! அந்த ரதத்தில் வீற்றிருப்பது யார்? இளவரசர் மதுராந்தகத் தேவர் அல்லவா? கடம்பூர் அரண்மனையிலும் தஞ்சாவூர் பொக்கிஷ நிலவறையிலும் பார்த்த அதே இளவரசர்தான்! – கோட்டைக்குள் பிரவேசிப்பதற்கு யுக்தி என்னவென்பது உடனே வந்தியத்தேவன் மனத்தில் தோன்றி அவனுக்கு உணர்ச்சியூட்டிவிட்டது.

 

“ஆபத்து வரப்போகிறது என்ற வார்த்தை காதில் விழுந்தால் அதைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பாதவனை இதுவரை நான் பார்த்ததில்லை.”- இவ்விதம் காலாமுகர்களில் ஒருவர் கூறிய வார்த்தைகள் அவன் மனத்தில் பதிந்திருந்தன. அவனே அந்த ஆவலுக்கு இடங்கொடுத்து விட்டான் அல்லவா? அந்தக் காலாமுகரின் யுக்தியை இங்கே கையாண்டு பார்க்க வேண்டியதுதான். தாமரை மலரின் வடிவமான தங்க ரதத்தை நோக்கி வந்தியத்தேவன் களைப்படைத்திருந்த தன் குதிரையை வேகமாகச் செலுத்தினான். மதுராந்தகத்தேவருடைய பரிவாரங்களில் யாரும் அவ்விதம் ஒருவன் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அவனை யாரும் தடுக்க முன்வருவதற்குள் குதிரை ரதத்தின் சமீபத்தை அடைந்துவிட்டது. அந்தச் சமயத்தில் வந்தியத்தேவன் குதிரைமீது எழுந்து நின்றான். ரதத்தில் வீற்றிருந்த மதுராந்தகரை உற்றுப் பார்த்தான். பார்த்துவிட்டு, “ஓ! அபாயம்!” என்று ஒரு குரலைக் கிளப்பினான். உடனே தடால் என்று குதிரை மீதிருந்து தரையில் விழுந்து உருண்டான். குதிரை சில அடிதூரம் அப்பால் சென்று நின்றது.

 

இவ்வளவும் சில வினாடி நேரத்தில் நடந்துவிட்டது. மதுராந்தகத்தேவரின் பரிவாரத்தைச் சேர்ந்த சிலர் அவனுடைய குதிரை ரதத்தை நோக்கிப் போவதை கண்டு அவசரமாகக் கத்தியை உறையிலிருந்து எடுத்தார்கள். சிலர் வேலை எறிவதற்குக் குறிபார்த்தார்கள். அதற்குள் அவன் குதிரைமேல் நிற்கமுயன்று கீழேயும் விழுந்து விட்டபடியால் அவர்களுடைய கவலை நீங்கியது.

 

பிறகு கீழே விழுந்தவனைப் பார்த்து எல்லாரும் சிரித்தார்கள்; மதுராந்தகரும் சிரித்தார். அதற்குள் ரதம் நிறுத்தப்பட்டிருந்தது. அவர் கையைக் காட்டி சமிக்ஞை செய்யவே, வீரர்கள் இருவர் வந்தியத்தேவன் அருகில் சென்று அவனைத் தூக்குவதற்கு முயன்றார்கள். அதற்குள் அவனே எழுந்து உட்கார்ந்திருந்தான். வீரர்களுடைய உதவியில்லாமல் குதித்து எழுந்து நின்றான். தான் விழுந்தது பற்றிச் சிறிதும் கவனியாதது போல் இளவரசர் மதுராந்தகரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“அவனை இப்படி அருகில் கொண்டு வாருங்கள்!” என்றார் இளவரசர். வீரர் இருவரும் வந்தியத்தேவனை கையைப் பிடித்து அழைத்துச்சென்று ரதத்தின் பக்கத்தில் நிறுத்தினார்கள். இன்னமும் அவனுடைய கண்கள் மதுராந்தகர் முகத்தின் பேரிலேயே இருந்தன.

 

“அப்பனே! நீ யார்?” என்று இளவரசர் கேட்டார்.

 

“நான்… நான்தான்! சக்கரவர்த்திப் பெருமானே! என்னைத் தெரியவில்லையா?” என்றான் வந்தியத்தேவன்.

 

“என்ன உளறுகிறாய்?.. அடே! நீங்கள் சற்று விலகி நில்லுங்கள்” என்றார் மதுராந்தகர். மற்ற வீரர்களைப் பார்த்து, வீரர்கள் விலகினார்கள்.

 

“என்னை யார் என்று எண்ணிக் கொண்டாய்?” என்று மறுபடியும் மதுராந்தகர் கேட்டார்.

 

“மன்னிக்க வேண்டும் இளவரசே! தவறாகச் சொல்லி விட்டேன். தாங்கள் இன்னும்…இன்னும்” என்று தட்டுத் தடுமாறிப் பேசினான்.

 

“இதற்கு முன் எப்பொழுதாவது என்னை நீ பார்த்திருக்கிறாயா?”

 

“பார்த்திருக்கிறேன்… இல்லை; பார்த்ததில்லை…”

 

“என்னைப் பார்த்திருக்கிறாயா? இல்லையா? உண்மையைச் சொல்!”

 

“நேற்றிலிருந்து நான் உண்மையைச் சொல்வதென்று வைத்திருக்கிறேன். அதனால்தான் நிச்சயமாக சொல்ல முடியவில்லை!”

 

“ஓகோ! நேற்று முதல் நீ உண்மை பேசுகிறவனா? நல்ல வேடிக்கை” என்று மதுராந்தகர் சிரித்தார். “அதனால் நிச்சயமாய்ச் சொல்ல முடியாமற் போவானேன்?” என்று மறுபடியும் கேட்டார் மதுராந்தகர்.

 

“இந்தக் காலத்தில் எதைத்தான் நிச்சயமாகச் சொல்ல முடிகிறது? ஒருவரைப் போல் இன்னொருவர் இருக்கிறார். ஒரு நாள் மூடு பல்லக்கில் இருந்தவர், இன்னொரு நாள் ரதத்தில் இருக்கிறார்…”

 

“என்ன சொன்னாய்?” என்று மதுராந்தகர் சிறிது திடுக்கிட்ட குரலில் வினவினார்.”

 

“ஒருவரைப்போல் இன்னொருவர் இருப்பதால் நிச்சயமாய்ச் சொல்ல முடியவில்லை என்றேன்!”

 

“நான் யாரைப் போல இருக்கிறேன்?”

 

“இரண்டு தடவை தங்களை நான் பார்த்திருக்கிறேன். அல்லது தங்களைப் போன்றவரைப் பார்த்திருக்கிறேன். தாங்கள்தானா அதாவது நான் பார்த்தவர்தானா, என்று சந்தேகமாயிருந்தது. அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான்… சற்று முன்…”

 

“குதிரைமேல் ஏறி நின்று அப்படி உற்றுப் பார்த்தாயா?”

 

“ஆம், ஐயா!”

 

“என்ன தெரிந்து கொண்டாய்?”

 

“தாங்கள் நான் பார்த்தவராகவும் இருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம் என்று தெரிந்து கொண்டேன்.”

 

மதுராந்தகருக்குக் கோபம் உண்டாகத் தொடங்கியதென்பது அவருடைய முகத்திலிருந்தும், குரலின் தொனியிலிருந்தும் தெரிந்தது. “நீ சுத்தப் போக்கிரி. உன்னை….”

 

“இளவரசரே கோபிக்க வேண்டாம். நான் தாங்களையோ, தங்களைப் போன்றவரையோ பார்த்தது எங்கே என்று சொல்கிறேன். பிறகு தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.”

 

“அப்படியானால் சொல், சீக்கிரம்!”

 

“ஒரு பெரிய கோட்டை, நாலாபுறமும் நெடிய மதில்சுவர். வீராதி வீரர்கள் பலர் அங்கே கூடியிருந்தார்கள். நடுராத்திரி, சுவரில் மாட்டிய பெரிய அகல் விளக்கிலிருந்து புகையினால் மங்கிய வெளிச்சத்தில் அவர்கள் ஆத்திரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். சுவர் ஓரமாக ஒரு பல்லக்கு இருந்தது. அந்த வீரர்களின் தலைவரை மற்றவர்கள் ஏதோ கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார்கள். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. வேகமாக எழுந்துபோய் பல்லக்கின் அருகில் நின்றார். பல்லக்கை மூடியிருந்த பட்டுத்திரையை விலக்கினார். பல்லக்கின் உள்ளேயிருந்து ஒரு சுந்தர புருஷர் வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் அங்கே கூடியிருந்த வீரர்கள் அனைவரும் ‘வாழ்க! வாழ்க!’ என்று கோஷித்தார்கள். ‘பட்டத்து இளவரசர் வாழ்க!’ என்றும் சிலர் கூவினார்கள். ‘சக்கரவர்த்திக்கு ஜே!’ என்று கோஷித்ததாகவும் ஞாபகம்! ஐயா, அப்போது பல்லக்கிலிருந்து வெளி வந்தவருடைய முகம் தங்கள் முகம் போலத்தான் இருந்தது. ஏதாவது நான் தவறாகச் சொல்லியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவேண்டும்.”

 

நடுவில் குறுக்கிடாமல் இத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்த மதுராந்தகத் தேவருடைய நெற்றியில் வியர்வை துளிர்க்கலாயிற்று. அவருடைய முகத்தில் பயத்தின் சாயை படர்ந்தது.

 

“நேற்று முதல் உண்மையைச் சொல்லுகிறவனே! அந்த வீரர்களின் கூட்டத்தில் நீ இருந்தாயா?” என்று கேட்டார்.

 

“இல்லை, ஐயா! சத்தியமாக இல்லை!”

 

“பின் எப்படிக் கூடயிருந்து பார்த்தது போலச் சொல்கிறாய்?”

 

“நான் கண்ட காட்சி உண்மையாக நடந்ததா அல்லது கனவிலே கண்டதா என்று எனக்கே நிச்சயமாகத் தெரியவில்லை. இன்னொரு காட்சியையும் கேளுங்கள். இருளடர்ந்த ஒரு நிலவறை, அதில் ஒரு சுரங்கப் பாதை. வளைந்து வளைந்து கீழே இறங்கி மேலே ஏறிப் போகவேண்டிய பாதை. அதன் வழியாக மூன்று பேர் வந்துகொண்டிருந்தார்கள். முன்னால் ஒருவன் தீவர்த்திப் பிடித்துக்கொண்டு போனான். பின்னால் ஒருவன் காவல் புரிந்துகொண்டு வந்தான். நடுவில் ஒரு சுந்தர புருஷர் – வடிவத்தில் மன்மதனையொத்த ராஜகுமாரர் வந்து கொண்டிருந்தார். தீவர்த்தியின் வெளிச்சம் அந்த நிலவறையின் மூலை முடுக்குகளில் பரவியபோது அங்கேயெல்லாம் பொன்னும், மணியும், வைடூரியங்களும் ஜொலிப்பதுபோலத் தோன்றியது. அது மன்னாதி மன்னர்களில் இரகசியப் பொக்கிஷங்களை வைக்கும் நிலவறையாக இருக்கலாம் என்று தோன்றியது. தூண்களில் கோரமான பூத வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அத்தகைய சுரங்க வழியில் வந்துகொண்டிருந்த மூன்று பேரில் நடுவில் வந்த சுந்தர புருஷரின் முகம் தங்கள் திருமுகம் போலிருந்தது. அது உண்மையா, இல்லையா என்பதைத் தாங்கள்தான் சொல்ல வேண்டும்….”

 

இளவரசர் மதுராந்தகர், “போதும் நிறுத்து!” என்றார். அவருடைய குரலில் பீதி தொனித்தது.

 

வந்தியத்தேவன் சும்மா இருந்தான்.

 

“நீ நிமித்தக்காரனா?”

 

“இல்லை ஐயா! அது என் தொழில் இல்லை. ஆனால் நடந்ததையும் சொல்லுவேன்; இனிமேல் நடக்கப் போவதையும் சொல்லுவேன்.”

 

மதுராந்தகர் சிறிது யோசித்துவிட்டு, “குதிரை மேல் நின்றபோது ஏதோ கத்தினாயே, அது என்ன?” என்று கேட்டார்.

 

“அபாயம் என்று கத்தினேன்.”

 

“யாருக்கு அபாயம்?”

 

“தங்களுக்குத்தான்!”

 

“என்ன அபாயம்?”

 

“பல அபாயங்கள் தங்களைச் சூழ்ந்திருக்கின்றன. அது போலவே பெரும் பதவிகளும் காத்திருக்கின்றன. அவற்றைக் குறித்துச் சாவகாசமாகச் சொல்லவேண்டும். என்னுடைய கத்தியைக்கூடத்தான் தங்கள் வீரர்கள் பிடுங்கிக் கொண்டு விட்டார்களே? தங்களுடன் என்னைக் கோட்டைக்குள் அழைத்துக் கொண்டு போனால்…”

 

“ஆகட்டும்; என்னுடன் வா! சாவகாசமாகப் பேசிக்கொள்ளலாம்!”

 

மதுராந்தகத் தேவர் தம்முடன் வந்த வீரர்களின் தலைவனைக் கைகாட்டி அருகில் அழைத்தார். வந்தியத்தேவனைச் சுட்டிக்காட்டி அவனை அவர்களுடன் கோட்டைக்குள் அழைத்து வரும்படி கட்டளையிட்டார். அந்தக் கட்டளை அவ்வீரர் தலைவனுக்கு அவ்வளவு உற்சாகம் அளிக்கவில்லை. ஆயினும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வந்தியத்தேவனையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

 

சற்று நேரத்துக்கெல்லாம் பழையாறைக் கோட்டைக் கதவு திறந்தது. மதுராந்தகத்தேவரும் அவருடைய பரிவாரங்களும் வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தார்கள்.




Comments are closed here.

You cannot copy content of this page