Vedanthangal epi 7
1472
0
கேட்பதற்கே தயங்கித் தயங்கி நின்ற ஸ்ரீ பவித்ராவிடம் ஒருவழியாக கேட்டேவிட்டாள்.
“பவித்ரா இங்க வாயேன். ஒரு ஐநூறு ரூபாய் இருக்குமா? ”
“இருக்கும் ஸ்ரீ. எதுக்கு கேக்கிற? ”
“ஒண்ணுமில்லை. இந்த மினரல் வாட்டர்காரனுக்கு கொடுக்கணும். பத்து நாளாக கேட்கிறான் பவித்ரா. ”
தனது கைப்பையிலிருந்து ஐநூறு ரூபாய் தந்தவள். ஸ்ரீயிடம் மேலும் பேச்சுக்கொடுத்தாள்.
“ஏன் ஸ்ரீ உனக்கு இந்த வாரம் கஸ்டமரே இல்லையா? ”
“அதெல்லாம் இருந்தது பவித்ரா. மோகனா அக்கா காஸ் சிலின்டர் வந்திருக்குன்னு ரூபாய் கேட்டாங்க. நானும் அவங்களுக்கு கொடுத்தேன். அதான் என் பணம் செலவாகிடுச்சு. அவுங்களோட பையன் பிரித்விக்கு பீஸ் கட்டணும் என்று சொன்னாங்கப்பா. எப்படி பீஸ் கட்டப் போறாங்களோ? ”
ஸ்ரீயின் பதிலைக் கேட்ட பவித்ரா அவள் கைகளைப் பற்றிச் சொன்னாள் “ஸ்ரீ மற்றவங்க பாரத்தை நாம சுமக்க முடியாது. அவனவன் பசிக்கு அவன்தான் சம்பாதிக்கணும். முதலில் நீ அநியாயத்திற்கு இரக்கப்படுவதை விடுப்பா. ”
இதை எதிர்ப்பார்த்த ஸ்ரீ சிரித்துக்கொண்டே பவித்ராவின் முதுகு பக்கமாக நகர்ந்து அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டு அவள் காதுகளை கடித்துவிட்டு “எனக்கு இப்ப பசிக்குது என் குழம்பு எப்படி இருக்குன்னு சொல்லு. உனக்குதான் கொண்டு வந்தேன். சொல்லப்போறியா? இல்லையா? இல்லை நானே மார்க் போட்டுக்கிறேன். ”
“இல்லை இல்லை. என்கிட்ட கொடு நான் புட்டு புட்டு வைக்கிறேன். பேச்சை மாத்துற? சரி சரி வா சாப்பிடலாம். ”
இருவரும் ஆளுக்கு ஒரு தட்டில் சாப்பாட்டை போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது பவித்ரா சாப்பிடும்போது அவள் உதடுகளில் ஒரு சாரல் புன்னகை. முகத்தை குளிர்ச்சியாக காண்பித்த சாரல் புன்னகை. ஸ்ரீ ‘ஏன் சிரிக்கிற? ’ என்று புருவங்கள் வாயிலாக பவித்ராவிடம் கேள்வி கேட்டாள்.
பதில் கூற நினைத்த பவித்ரா சிரிப்பை விடாது பதில் கூறினாள் “இல்லை ஸ்ரீ அந்த ஹேம்நாத் மோகனாகிட்ட சரியா திட்டு வாங்கினான். உன்னை கல்யாணம் செய்துக்கிறானாம். கல்யாணத்துக்கு பிறகு குடும்பம் குழந்தைன்னு நீ நிம்மதியாக இருக்கலாமாம். போன வருஷம் என்கிட்ட அதே புலம்பல். இந்த வருஷம் உன்கிட்ட ஆரம்பிச்சிருக்கு. ”
“ஏய் பவித்ரா நிஜமாகவா சொல்ற? என்னை ரூட்விடுவது எனக்குத் தெரியும். உன்கிட்ட நெருங்குச்சா? எனக்குத் தெரியாதே. நீ பேசாமல் அவனை கட்டிக்கிட்ருக்கலாமே. ஒரு குழந்தை பொறந்திட்டா அது நிச்சயம் உன் காலிலே கிடக்கும்டி. ”
“போப்பா ஏழுமணிக்கு திறக்கும் டாஸ்மாக் கடையை கெட்ட வார்த்தையில் வைதிட்டு ஆறு மணிக்குத் திறக்கும் டாஸ்மாக் கடைக்கு போகுதே.. அதையா மாற்ற முடியும்? எனக்கு நம்பிக்கையில்லைப்பா . பலசரக்கு கடையில் மசூதும் உன்னிடம் காலையில தனியே பேசிகிட்டிருந்தான் என்ன விஷயம்?” என்று மசூத் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலில் பவித்ரா ஸ்ரீயிடம் கேட்டாள்.
மசூத் எதிர்வீட்டுக்காரன். டெய்லர் கடையில் வேலை பார்க்கிறான். நல்ல பையன்தான். ஸ்ரீயின் மீது அளவில்லா நேசம் கொண்டவன்தான். அம்சமானவன்தான். குடிதான் கொஞ்சம் உண்டு..
பவித்ராவின் கேள்விக்கு ஸ்ரீயே பதில் சொன்னாள் “ஹேம்நாத் டயலாக்தான். ஆனால் மசூத் நிஜமாகவே கல்யாணத்தை சீரியசாக விரும்புகிறான் பவி. எனக்கும் அவனை பிடிச்சிருக்கு. ஆளும் நல்லாதான் இருக்கான். பசங்க பாஷையில் சொன்னால் செம கட்டைதான். பேசாமல் கல்யாணம் செய்துக்கலாமா என்றுகூட தோணுது. வேலைக்கெல்லாம் ஒழுங்காக போகுமான்னு தான் தெரியல. என் அம்மா மாதிரி ஏமாந்திடக்கூடாதுல்ல? அதான் ஒரு வருஷம் போகட்டும் என்று சொல்லியனுப்பிட்டேன். நான் திரும்ப தொழிலுக்கு வந்திடக்கூடாதுடா. கல்யாணம் ஆகிட்டா ஒதுங்கிடணும். புள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும். ”
ஸ்ரீ சொல்லிக் கொண்டே போகப் போக பவி டைரியில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். ஸ்ரீ இதை கவனித்துவிட்டு “ஏய் நான் பேச பேச அதை அப்படியே எழுதுறியா? ஏன்? ”
“ஏன்னா? ஒரு பத்து வருஷம் கழித்து நீயும் நானும் இதை வாசித்துப்பார்த்து சிரிக்கணும்ல்ல? அதான். ”
“ஏய் அதை கொடு. நான் மசூதை சைட் அடிச்சதை சொல்லிட்டேனே? நீ யாரையும் சைட் அடிச்சதே இல்லையா? கொடு என்கிட்ட. கொடுப்பா.. தெரியாம மசூத்தை சைட் அடிச்சதை சொல்லிட்டேன். ”
அந்த அறை முழுதும் பவித்ரா பின்னே ஓடினாள் ஸ்ரீ. ஆனால் பவித்ரா கைகளிலிருந்து டைரியை வாங்க முடியாமல் ஸ்ரீ மூச்சு வாங்கி சோபாவில் பொத்தென விழுந்ததுதான் மிச்சம். சிறிது நேரத்தில் பவித்ராவும் சோபாவில் பொத்தென விழ. . தோழிகள் இருவரும் சிரித்து சிரித்து லந்தடித்தனர்.
இருவரின் சிரிப்பையும் நிறுத்தியது ஸ்ரீயின் கைபேசி.
ஹேம்நாத் தான் அழைத்தது. ஸ்ரீ கைபேசியை எடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தவாறே அழைப்பை ஏற்றாள் ஸ்ரீ.
“ஸ்ரீ ஒரு நல்ல கிராக்கி. நீ தான் வேணும். அப்பதான் பார்ட்டியை ஆல்டைம் நம்மகிட்ட வச்சுக்க முடியும். மகாபலிபுராம் போகணும். ஒரு நைட்டுக்கு பத்தாயிரம் தருவான். என்ன சொல்ற? ”
“என்ன ஹேம்நாத்? மணி என்ன தெரியுமா? ஆறுதான் ஆகுது. வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம்தான் ஆகுது. நாங்க இப்பதான் மதிய சாப்பாடே சாப்பிடப்போறோம். சாப்பிட்டதும் கால் பண்றேன். ”
ஸ்ரீ கோபமாக கைபேசியை அணைக்கவும் பவித்ரா ஸ்ரீயிடம் கேட்டாள்
“என்ன ஸ்ரீ?”
“ஒரு நைட்டுக்கு பத்தாயிரம். எவனோ தருவானாம். என்னைக் கூப்பிடுது. ”
“கட் பண்ணிட்டியா? ஏன்? ”
“பவி புது ஆளுங்களை நம்பி மகாபலிபுரம் வரை போறது சரியாகப் படலை. வேணாம். நான் வரவில்லை என்று ஃபைனலாக சொல்லப் போறேன். நீயும் மாட்டேன் என்று சொல்லிடு. ”
“ஸ்ரீ எனக்கு ரொம்ப நாளாக ஒரு டச் ஃபோன் வாங்கணும் என்ற ஆசை இருக்குப்பா. ஏழாயிரம் ரூபாய் ஆகுதுப்பா. ”
“அதெல்லாம் தேவையில்லை. இருக்கிற ஃபோன். போதும். ”
“இல்லை. நான் கேட்க மாட்டேன். எனக்கு வேணும்ன்னா வேணும்தான். என் ஃபோனில் ஃபோட்டோ எடுத்தால் எல்லோரும் கருவண்டு கலர்ல்ல தெரியிறோம். கண் மட்டும் ஆடு மாடு கண் போல ரேடியம் கலர்ல்ல தெரியுது. எனக்கு டச் ஃபோன் நல்ல கேமிராவுடன் வேணும்” என்று பவித்ரா கோபமாகக் கூறி முடித்ததும் ஸ்ரீ அவளிடம் பொறுமையாகக் கூறினாள்
“நான் வாங்கித் தர்றேன் பவி. நிச்சியமாக. என்னை நம்பு. ”
“ஸ்ரீ உன் பர்ஸே காலி என்று எனக்குத் தெரியும். கிடைக்கிற சான்ஸை விடச்சொல்றியா? போப்பா.” என்று பதில் கூறிக்கொண்டே தனது கைபேசியை எடுத்து ஹேம்நாத் எண்ணிற்கு கால் செய்தாள். முதல் ரிங்கிலேயே ஹேம்நாத் கைபேசியின் அழைப்பிற்கு பதில் தந்தான்.
“ஹலோ பவித்ரா. ஸ்ரீ சொன்னாளா? நல்ல பார்ட்டியை வேண்டாம் என்று சொல்றாளே?”
“ஸ்ரீ தான் வரணுமா? நான் வரக்கூடாதா? ”
பதில் கூறாமல் ஹேம்நாத் இரண்டு நிமிடங்கள் தாமதித்தான். இரண்டு நிமிடங்கள் கடந்த பிறகு சொன்னான் “ஸ்ரீ வந்தால் பார்ட்டி கையை விட்டுப்போகாதே என்று நினைத்தேன். சரி இப்ப கிடைக்கும் பைசா பற்றி யோசிப்போம். நீ இன்னும் பத்து நிமிஷத்தில் ரெடியாகிடு. நான் வந்து உன்னை கூட்டிட்டுபோறேன். ”
Comments are closed here.