Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal epi 10

பத்து நாட்கள்
ஹேம்நாத்தை ஊருக்கு அனுப்பி வைத்தான் திலிப். இரண்டு நாட்கள் தங்க சம்மதித்தவள் பத்து நாட்கள் தங்கினாள். இருவரும் பேசாத விஷயம் இல்லை. அவள் அவனிடம் ஹோமோ ஆளுங்களைப் பற்றிக்கேட்டாள்.
அவன் அவளிடம் “எய்ட்ஸ் வராம இருக்க நீ என்ன ப்ரிகாஷன் செய்யிற? ” என்று கேட்டான்.
கிரிக்கெட் ஏலம் பற்றி அவனிடம் கேட்டவள் ஆட்டக்காரர்களின் ஏலத்தொகையை கேட்டதும் ஒரு கிரிக்கெட் வீரர் இந்த வருடத்தில் விளையாடிய போட்டிகளை விரல்விட்டு எண்ணியவள் இரவு தூங்காமல் இருந்தது அவனுக்குத் தான் வசதியாகிப் போனது.
இருவரும் குடும்பத்தைப் பற்றி மட்டும் பேசுவதில்லை. கௌன்சிலர் மனைவியின் தம்பிதான் திலிப் என்பதுவரை பவித்ராவிற்குத் தெரியும். வேறு எதுவும் பேசுவதில்லை இருவரும். அவன் நண்பன் இறந்ததை மறக்கவே இங்கே வந்திருப்பதாக மட்டும் ஒரு தரம் சொன்னான் திலிப். வேறு தனிப்பட்ட விஷயம் எதுவும் இருவரும் பேசவில்லை. அதிக நாட்கள் திலிப்புடன் தங்குவதால் ஸ்ரீயிடம் தினமும் அறுபது வசவுகள் வாங்கிவிடுவாள். ஸ்ரீ என்ன விளக்கம் கேட்டாலும் பவித்ராவின் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். அது money is god என்பதுதான். திலிப்தான் அந்த புதுமொழியை பவித்ராவிற்குச் சொல்லிக்கொடுத்தது. அவளுக்கு அது ரொம்ப பிடித்துவிடவே அவள் ஸ்ரீயிடம் அடிக்கடி சொல்லிக் காண்பித்தாள்.
வயதைப்பற்றிய பேச்சு வந்தபோது இருவரும் இருபத்தி ஆறு என்று பொய் கணக்கு சொன்னார்கள். இருவருக்குமே அது நிஜம் இல்லை என்று தெரிந்தபோதும் விசாரணையில் இருவரும் இறங்கவில்லை. பத்தாவது நாள் திலிப் கண்ணாடியைப் பார்த்து கிளம்பிக் கொண்டிருந்த பவித்ராவிடம் வந்தான். அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அவனது செயலை கண்ணாடியில் பார்த்து ரசித்தவளிடம் அமைதியாக அவன் முத்தமிட சிறுதடையைக் கூட தராதவளிடம் கேட்டான்,
“பவித்ரா நீ என்னுடன் சிங்கப்பூர் டூர் வருவியா? நான் மூன்று மாதம் இனி அங்கதான் இருப்பேன். எனக்கு சமையலுக்கும் ஆள் தேவை. உனக்கு சமைக்கத்தெரியுமா? ”
கொஞ்சம் பிகு பண்ணுவோம் என்று நினைத்தவள் சமையலில் கைதேர்ந்தவள் சொன்னாள் “தெரியாது. சுட்டுப்போட்டாலும் வராது. அப்புறம் சிங்கப்பூர் எல்லாம் வர முடியாது. வீட்டிலே ஒத்துக்க மாட்டாங்க. நீங்க வேற ஆளைப் பார்த்தக்கோங்க திலிப். ”
எவ்வளவுதான் முகத்தை பிகுபண்ண நினைத்து கடினமாக வைத்துக்கொண்டே அவள் சொன்னாலும் ‘அவன் இன்னும் ஒரு தரம் கேட்கணும் அப்படி கேட்டுவிட்டால் பிகு பண்ணிக்கிட்டே ஒத்துக்கணும்’ என்று கடவுளிடம் அவள் பத்து லஞ்சத்துடன் கூடிய பிராத்தனை செய்தபோது திலிப் மீண்டும் கேட்டான்
“பவித்ரா சிங்கப்பூர் இப்ப நம்ம டெல்லி போல ஆகிடுச்சு. காலையில் சென்னையில் எழுந்து இரவில் மலேஷியா இல்லை சிங்கப்பூரில் தூங்குறான் இது ஒரு விஷயமா? இல்லை நான் அங்க உன்னை யாரிடமாவது…. ”
“ச்ச ச்ச.. அதெல்லாம் பயம் இல்லை. ”
“அப்படினா என்கூட வா. ”
“ரொம்ப யோசிக்கணும்.. ” என்று சொன்னவள் அரை நொடிப்பொழுதில் ரொம்ம்ம்ப யோசித்துவிட்டு
“சரி. எவ்வளவு கொடுப்பீங்க? ” என்றாள்.
“உனக்கு எவ்வளவு வேண்டும்? ”
“ஒரு லட்சம். ”
“சரி. தர்றேன். ”
“ஒரு மாசத்துக்கு ஒரு லட்சம். ”
திகைத்தவன் ஒரு நொடிக்குப் பிறகே சொன்னான் “சரி தர்றேன்.”
“இது சமைக்க மட்டும் தான். ” என்று பவித்ரா திமிராக சொல்லவும் திகைக்காமல் அசராமல் வாதாடாமல் அவன் சொன்னான் “சரி. ”
என்ன? ‘சரி’ என்று சொல்லிட்டானா? தன் காதுகளை நம்பாமல் திகைத்து திரும்பியவள் அவனைப் பார்க்கவும் அவன் சொன்னான் “சிங்கப்புரில் பெட்ரூமும் கிச்சணும் ஒன்றாகத்தான் இருக்குமாம். ”
அப்போது பவித்ரா ஸ்ரீயுடன் மட்டுமே சிரித்து மகிழும் சிரிப்பில் மூழ்கினாள். பவித்ராவின் இதழில் அவன் மூழ்கினான்.

திலிப்
திலிப் எட்டு லட்சம் ரொக்கமாகவே பவித்ராவின் கைகளில் கொடுத்தான். பவித்ராவிடம் அவள் பெயரை யாராவது அந்த நிமிடம் கேட்டிருந்தால் எட்டு லட்சம் என்றுதான் சொல்லியிருப்பாள். அந்த எட்டு லட்சத்தை அவள் வெறும் காகிதங்களாக பார்க்க வில்லை. அந்த காகிதத் தாள் எடுத்த வடிவங்கள் பலப் பல. அதாவது அது அவள் கண்களுக்கு அழகிய 4ஜி கைபேசியாக ஒத்திக்கு பிடித்த மகளிர் மட்டும் என்ற போர்ட் மாட்டிய இரு பெட்ரூம் கொண்ட வீடாக மாதா மாதம் இரண்டாயிரம் வட்டிதரும் சிறு முதலீட்டாக ஹேம்நாத்தை ஓட ஓட விரட்ட உதவும் எட்டு கூர்மையான பற்கள் கொண்ட நாய்போல அவளையும் ஸ்ரீயையும் சுற்றி நிற்கும் எட்டடிகொண்ட கோட்டைச் சுவர் போலத்தெரிந்தது.
திலிப் பவித்ராவிடம் சொன்னான் “ஏழு மாசம் தங்கனும். சிங்கப்பூரில் என்கூட ஏழுமாசம் தங்கனும். மறுக்க முடியாமல் பண்ணணும் என்றுதான் பணத்தை முதலில் தந்தேன். தப்பா நினைச்சுக்காத. எனக்கு இறந்துபோன பிரசாத்தை மறக்க நீ வேண்டும். தனியா இருந்தா பயித்தியம் பிடிச்சிடும். வருவீல்ல? பணத்தை காட்டி ஆசை காட்டுறேன்னு நினைக்காத. நீ நோ சொல்லாமல் இருக்கதான் பணத்தை முதலில் காட்டினேன். எலும்புத்துண்டு போல இல்லை. ”
பவித்ராவுக்கு அப்போதுதான் தான் எலும்புத்துண்டுக்கு ஆசை பட்டது புரிந்தது. அந்த எட்டு லட்சம் செல்ஃபோனாக தெரிந்தது வீடாக தெரிந்தது கோட்டைச்சுவராகக் கூட தெரிந்தது. ஆனால் திலிப் சொல்வதுபோல எலும்புத்துண்டாகத் தெரியவில்லையே என்று நினைத்தவள் பணம் என்னவெல்லாம் செய்கிறது? என்ற சிந்தனையில் இருக்கும்போது.. அவளை தன் எண்ணங்களோடு ஒத்துபோக விளக்கம் தர நினைத்து திலிப் சொன்னான்
“பவித்ரா நீ கற்பனை செய்து பாரு… உன் ஃப்ரண்ட் பேர் என்ன? ம் ம்.. ஞாபகம் வந்திடுச்சு. ஸ்ரீ! ஸ்ரீதானே? ஸ்ரீயும் நீயும் காரில் போரிங்க.. நீ வண்டி ஓட்டுற கொஞ்சம் போதையில் இருக்கீங்க ரெண்டுபேரும். எதிரே ஒரு லாரி உன்னை நோக்கி வேமா வருது.. ”
“உன் ஃப்ரண்ட் கார் லாக்கை எடுத்துவிட்டு உன்னை கார் கதவைத் திறந்து கீழே தள்ளி விடுறாள். ஆனால் அவளும் தப்பிக்க கீழே விழுவதற்குள்ளே லாரி மோதிடுது. இதை நேரில் பார்த்த பிறகு நீ எத்தனை ராத்திரி தூங்க முடியும் என்று நினைக்கிற? ”
“டமார் என்ற சத்தம் உன்னைத் துரத்தாதா? அப்படி என்னை அந்த சத்தம் இரவெல்லாம் கண்களை நொடிப்பொழுது மூடவிடாமல் துரத்தும்போது என்னை மறக்க துணை வேணும். அது நீயாக இருந்தால்.. நீ துணையாக இருந்தால்… ” வேகமாக அவன் பேசுவதைக் கேட்ட பவித்ரா அமைதியாக மூளைக்கு வேலை கொடுத்தாள். மூளை அவன் சொன்னதை எப்படி மொழி பெயர்த்தது? இப்படித்தான்!
‘துணை வேண்டும் என்கிறான். கம்பனி கொடு என்று கேட்கவில்லை. நீ அருகில் இருந்தால் தூக்கம் வரும் என்கிறான். கட்டிலைப் பகிரலாமா? என்று கூப்பிடவில்லை. ’
மிச்சமீதி மொழிப்பெயர்ப்பும் மூளை செய்யும் முன்னே அவன் இதழை பொத்தியவள் இரவுகளை மட்டுமல்ல பகலையும் அவன் மறக்கச்செய்ய சம்மதித்தாள்.
மகாபலிபுரம் கெஸ்ட் ஹவுஸ் வாசலில் பவித்ரா நின்றுகொண்டே ஆர்ப்பரித்து அடங்கும் கடலின் அழகை ரசித்தாள். படுக்கை அறையின் கண்ணாடிக்கதவுகள் வழியாக தினம் தினம் இந்த பத்து நாட்களாக அவள் ரசித்தது தான். ஆனால் அது இனிமேல் பார்க்கக் கிடைக்காதே என்ற எண்ணமே இப்போது அதனை கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கச்சொன்னது.
வாசலில் டிரைவரிடம் திலிப் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். பிறகு பவித்ராவிடம் வந்து அவளது இடையில் கைகளை படரவிட்டுச் சொன்னான் என்ன பார்க்கிற?
“ஒண்ணுமில்லை. நான் கிளம்பட்டுமா? எப்போ சிங்கப்பூர் மலேஷியா போகணும்? ”
“நான் இன்று நைட் கிளம்பிடுவேன். நீதான் உன் ஃப்ரண்ட் ஸ்ரீகிட்ட சொல்லிட்டுதான் வருவேன்னு சொல்றியே. அதனால அடுத்த வாரம் உனக்கு டிக்கெட் போட்டிருக்கேன். இந்த பேக்கில் விபரம் எல்லாம் இருக்கு. பத்திரமாக வச்சிக்கோ. என்ன?”
“நான் வராமல் உன்னை ஏமாத்திட்டா? பணத்தை வாங்கிட்டேன்ல்ல? இப்ப ஏமாத்திட்டா என்ன பண்ணுவீங்க? ”
அவளை மேலும் கீழும் பார்த்து ஒரு லுக் விட்டவன் அவளிடம் கேட்டான் “பவித்ரா ஏமாத்திறவங்க அவுங்க ஃப்ரண்ட் பெயர் என்னிடம் சொல்லமாட்டாங்க. அப்புறம் என் காரில் போய் அவுங்க வீட்டு வாசலில் இறங்க போறவ என்னை ஏமாற்றபோறதா சொன்னா அதோ அங்க தெரியுதே ஒரு காக்கா அது கருப்பா சிவப்பான்னு கேட்பதுபோல இருக்கு. ”
தலையைக் குனிந்து சிரிப்பதை மறைத்தவளின் அழகை முழுவதுமாக அள்ளிக்கொள்ள நினைத்தவன் கைக்கெட்டும் தூரத்தில் அவள் இடையும் இரண்டடியில் தனது அறையும் இருப்பதை கணக்கிட்டவன் இன்னும் ஒரு வாரம் தானே என்று தனது ஆசையை அடக்கினான்.
பவித்ராவிற்கும் பணம் தந்த உற்சாகமும் அவன் அவளை ராணிபோல நடத்தும்போது தன்னிடமே தனக்கு கிடைக்கும் மரியாதையும் பெற்று பெருமகிழ்ச்சி அடைந்தாள். அதனால் தன்னைப்போல அவனையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்க நினைத்தவள் சிரித்துக்கொண்டே சொன்னாள் “சிங்கப்பூரில் மலேஷியாவில் ஏழு மாதம் ஏழு நாளாக பறக்கப் போது பார் திலிப் .” இன்னும் ஒரு வாரம் தானே என்று நினைத்தவனுக்கும் ஏழுமாதம் ஏழு நாட்களாகப் பறக்கப் போது பார் என்றவளுக்கும் காலன் கூப்பிட்டால் கேட்கும் தூரத்தில்தான் இருந்தான் என்பது எப்படித் தெரியும்?
பவித்ரா வீடு வந்ததும் ஸ்ரீயிடம் நடந்தவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கொட்டித் தீர்த்தாள். எட்டு லட்சத்தை என்ன செய்ய என்று தெரியாமல் பல கணக்கு போட்டார்கள். மதியத்திற்கு மேல் இருவரும் மில்லியனம் மாலில் சுற்றி வந்தார்கள். இடையில் ஹேம்நாத் ஸ்ரீயை அழைத்து ஒரு பார்ட்டிக்காரன் அவளுக்காக வெயிட் பண்ணுவதாகச் சொன்னான். மீண்டும் இதே சாக்கடையா? என்று பவித்ராவிடம் ஜாடையாக கேட்ட ஸ்ரீ அவளின் அறிவுரைப்படி அவனிடம் “சரி மில்லியனம் மால் பார்க்கிங்கில் அவனை வெயிட் பண்ணச் சொல்லு.” என்று பதில் தந்தாள்.
செல்பேசியை அணைத்ததும் பவித்ரா அவளிடம் “ஸ்ரீ ஹேம்நாத்துக்கு பணம் பற்றி எதுவும் தெரியாது. நான் போவது பற்றியும் எதுவும் தெரிய வேண்டாம். அதனால்தான் இந்த பார்ட்டிகாரனை ஒத்துக்க சொன்னேன். அவன்கூட சும்மா வெளியில் சுத்திட்டு நாலு நாள் கழிச்சு டேட் கொடுத்திட்டு வந்திடு.” என்றாள்.
“சரி அவன்கூட சும்மா ஊரைச் சுத்திட்டு வந்திடுவேன் நான் வேற எங்கயும் போக மாட்டேன் பவி. பணத்தை நான் சொல்லும் இடத்தில் வை. ஹேம்நாத் கண்ணில் அப்பதான் அது படவே படாது.” என்றவள் வைக்கவேண்டிய இடத்தைச் சொன்னதும் பவியும் உடனே தலையாட்டினாள்.
ஸ்ரீ தன் அம்மாவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லப் போவதாகச் சொல்லிச் சென்றாள். பவித்ரா ஹேம்நாத்துடன் ஒரு பலசரக்கு கடையில் நின்று கொண்டு அவனிடம் கமிஷன் பணம் கொடுத்தபோது அவள் செல்பேசி அடித்தது.
திலிப்பாக இருக்குமோ என்று ஆசையாக எடுத்து “ஹலோ” என்றாள்.
“பவித்ரா வா?” என்று கேட்ட குரல் திலிப் அல்ல என்று அவளிடம் காண்பித்தபோது சுவாரசியமே இல்லாமல் “ஆம் ” என்றாள்.




Comments are closed here.

You cannot copy content of this page