Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal epi 12

ராஜனும் கோபியும்
ராஜனும் கோபியும் பைக்கில் மதுரையின் விளக்குத் தூண் நான்கு வழிச் சாலையை நோக்கி மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்தனர். விளக்குத் தூண் அருகே நெருங்கிய போது போக்குவரத்து நெரிசலில் அந்த சாலை ஸ்தம்பித்து நிற்பதைப் பார்த்து வண்டியை ஓரம் கட்டினான் ராஜன்.

அந்த சாலையில் ஒரு வட நாட்டு டபிள் ஆக்சில் டூரிஸ்ட் பஸ் தவறாக ஒன்வே சாலையில் திரும்பியதாலும் திரும்பிய சாலையில் மற்றொரு அரசு பேருந்தோடு முத்தமிட்டுக்கொள்வது போல எதிர் எதிரே சொருகிக்கொண்டு நின்றதாலும் அனைத்து வாகனங்களும் உருமத் தொடங்கின. முழுமையாக திரும்பவும் முடியாமல் டிராஃபிக் போலீஸ் பேசும் பாஸையும் புரியாமல் விழித்த வட நாட்டு டூரிஸ்ட் பஸ் ஓட்டுனர் ஒரேடியாக குழம்பிப்போனான்.
சாலையைக் கடக்க வேண்டியவர்கள “அப்பாடா இன்னைக்குதான் ஆர அமர இந்த ரோட்டை கிராஸ் பண்ணிருக்கேன்.” என்று மகிழ்ச்சியாக சொல்வதைக் கேட்டுக்கொண்டே ராஜனும் கோபியும் முன்னே சென்றனர்.
அவர்கள் அருகில் இரு பாதசாரிகள் நெரிசலைப் பற்றி பேசிக்கொண்டனர்.
ஒருவர் சொன்னார் “ஏன்னப்பா அந்த மடையன் பாதி வழியில திரும்பினான்? டிராஃபிக் ஜாம் ஆகிடுச்சு பார்! ”
மற்றொருவர் சொன்னார் “அந்த டூரிஸ்ட் பஸ்காரன் என்கிட்டதான்ப்பா மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வழி கேட்டான். திருமலைநாயக்கர் மஹால் போயிட்டு வந்திருப்பான்போல. நான் தெளிவாக சொன்னேன் ‘இந்தப்பக்கம் டூவீலர் தான் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போக முடியும். யு கோ டூ பெரியார் அன்ட் டேக் தானப்ப முதலியார் ஸ்டிரிட் ரோட்’ என்று தெளிவாக சொன்னேன். போலிஸ்காரன் ஒன்வேன்னு போர்ட்டு போடுறான். இது டூரிஸ்ட் ப்லேஸ்ன்னு தெரியும. அப்ப என்ன செய்யணும்? டூரிஸ்ட் பஸ்காரனுக்கு அங்க அங்க மீனாட்சிஅம்மன் கோயிலுக்கும் திருமலைநாயக்கர் மஹாலுக்கும் ரூட் மேப் கொடுக்கணும். இல்லை கொட்டை எழுத்தில் இங்கிலீஸ்சில் போர்டாவது வைக்கணும். அந்த டிராஃபிக் போலிஸ்காரனப்பாரு என்ன பண்றான்னு.. ”
இருவரும் டிராஃபிக் போலிசைப் பார்க்க இவர்கள் பேச்சைக் கேட்ட ராஜனும் பார்த்தான்.
வட நாட்டு டிரைவர் டிராஃபிக் போலீசிடம் : “கியா சாகப்? ”
பற்களைக் கடித்துக்கொண்டே டிராஃபிக் போலீஸ் பஸ்காரனுடன் உரையாடினான்.. இல்லை இல்லை பற்களைக் கடித்துக்கொண்டே கஷ்டப்பட்டு பேசினான்.
டிராஃபிக் போலிஸ் : ஏய் வெண்ணெ! திரும்புடா. ர்pவர்ஸ் வா!
வட நாட்டு டிரைவர் போலீஸைப் பார்த்து சலாம் போட்டான். சலாம் போட்டவன் மீண்டும் சொன்னான்
வட நாட்டு டிரைவர் : கியா சாகப்? மீனாட்சி அம்மன் டெம்பிள் விச் வே?
டீராஃபிக் போலிஸ் : ஏய் வெண்ணெ! வெண்ணெ! திரும்புடா. ரிவர்ஸ் வாடா! இது ஒன்வே!
பஸ் டிவைர் ரிவர்ஸ் எடுத்தால் அவனை பின்னால் நிற்கும் குட்டியானை வண்டிக்காரன் குண்டுகட்டாக தூக்கிக் கொண்டுபோய் ஸம்ஹாரமே செய்திடுவான். அதை அறிந்த பஸ்காரன் பின்னால் செல்வதைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை. டிராஃபிக் போலிஸ{க்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த சிங்கத்தை வடநாட்டு பஸ்காரன் தன்னையும் அறியாமல் பெல்ட்டால் அடித்து எழுப்பிக் கொண்டிருந்தான்.
வட நாட்டு டிரைவர் : “கியா சாகப்? ”
ஒன்றானது இரண்டானது.. பிறகு மூன்றானது..
டிராஃபிக் போலிஸ் : “ஏய் வெண்ணெ! வெண்ணெ! வெண்ண! கோ பேக். ரிவர்ஸ்! ”
ராஜனும் கோபிநாத்தும் விழுந்து விழுந்து சிரித்தனர். அந்த இரு பாதசாரிகள் ராஜனின் யுனிபார்ம் பார்த்ததும் கப் சிப் என்றாகினர். எவனுக்கு வெண்ணெய் பட்டம் வந்தால் நமக்கென்ன? என்று வேகமாக நடை போட்டனர். ராஜன் நேரே அந்த டிரைவரிடம் சென்றான். எதிரே நின்ற அரசு பேருந்தை ரிவர்ஸ் எடுக்கச் சொன்னான். அரசு பேருந்து ரிவர்ஸ் எடுத்ததும் அதனை ஓரம் கட்டச் சொல்லிவிட்டு ஒன்வேயிலேயே டூரிஸ்ட் பஸ்ஸை போகச் சொன்னான். நாலு அடி நகர்ந்ததும் பக்கத்தில் ஒரு டீ கடையில் இருந்த வாலிபனிடம் கேட்டான் “உனக்கு இங்கிருந்து மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு பாதை தெரியுமா? ” இளைஞன் ஆம் என்று தலையாட்டவும் ராஜன் சொன்னான் “நீ பஸ்ஸில் ஏறு. அவனுக்கு வழி சொல்லு. ”
இளைஞனும் சட்டென்று கீழ்படிந்தான். டிராஃபிக் போலிஸ் திரு திருவென்று விழிக்க பலர் வேடிக்கை பார்க்க டூரிஸ்ட் பஸ் ஒரு வழிப்பாதையில் ஜம்மென்று சென்றது. ஒரு வழிப்பாதையில் சென்றதால் அடுத்த சிக்னல் வரை எதிரே வந்த வாகனங்ளைத் தாண்டிச் செல்ல கொஞ்ச நேரம் திணறிய பஸ் டிரைவர் அடுத்த சிக்னலில் இளைஞனின் உதவியுடன் சரியான பாதையில் பஸ்ஸைத் திருப்பி சரியான பாதையைப் பிடித்தார். பஸ் சென்றதும் டிராஃபிக் மின்னல் வேகத்தில் சரியானது.
ராஜனும் கோபியும் மீண்டும் தங்களது பைக்கில் ஏறிக்கொண்டு ஸ்டேஷன் சென்றடைய பத்து நிமிடங்கள் ஆனது. இருவரும் தங்களது பணி நிமித்தம் பேசிக்கொண்டே சென்றனர். ராஜன் அப்போதுதான் கோபியிடம் சொன்னான் “கோபி நான் சீக்கிரம் கல்யாணம் செய்துக்கல்லாம் என்றிருக்கிறேன். அம்மாவின் தங்கச்சி கமலா சித்தி ஊரிலிருந்து ஒரே அணத்தல்ப்பா. நீ எப்போதுப்பா பண்ணப்போற? ”
“அட போப்பா என் விஷயத்தை விடு. கிரேட் டூவிலிருந்து கிரேட் ஒண்ணிற்கு இப்போதான் என் அண்ணன் வந்திருக்கான். நானும் இப்பதான் பரீட்சை முடிச்சி ஏ.எஸ்.ஐ டிரைனிங் போஸ்டிங்குக்கே வந்திருக்கேன். இன்னும் எஸ்.ஐ ஆக பத்து வருஷம் இருக்கு. அப்ப நினைத்து பார்க்கலாம் என் கல்யாணத்தைப் பற்றி. நீ என்னய்யா நல்ல விஷயத்தைக்கூட சீரியஸாக சொல்ற? நீ ஏ.எஸ்.ஐ யாக டிபார்ட்மென்டடில் சேர்ந்து ஒன்பது வருஷம் ஆகிடுச்சு. நம்ம ஊரிலிருந்து வந்தவனில் நீ ஒருத்தனாவது இன்ஸ்பக்டர் ஆகிடுவ என்று நினைக்கிறேன். எஸ்.ஐ இன்ஸ்பக்டர் ஆக பத்து வருஷம் அனுபவம் வேணும். உனக்கு எப்படியும் இன்னும் ஒரு வருஷத்தில் இன்ஸ்பக்டர் போஸ்ட் போட்டிடுவாங்க. அதுவரை உங்க அம்மாவின் தங்கச்சி பொறுமையாக இருக்கமாட்டாங்க. நீ சட்டுன்னு முடி. ”

ராஜன்
ராஜன் தனது பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நுழையும்போது அவனிடம் எஸ்.ஐ தன்னை வந்து பார்க்கச் சொன்னதாக கான்ஸ்டபிள் செல்வன் அழைக்க அவரது அறைக்குச் சென்றான்.
“ராஜன் அந்த பவித்ரா பொண்ணு கேஸ்ஸை நீங்க எடுக்கணும் என்று கேட்டீங்கல? டி.எஸ்.பி கிட்ட எதுக்கு இந்த சின்ன விஷயத்தை எல்லாம் சொல்லணும். என்கிட்டயே சொல்லியிருக்கலாம். நான் என்ன தரமாட்டேன் என்றா சொல்லப்போறேன்? ” என்றார் எஸ்.ஐ.
“சாரி சார். நீங்க கண்டிப்பா தருவீங்களோ மாட்டீங்களோ என்ற சந்தேகத்தில் டி.எஸ்.பிகிட்ட பேசினேன். அந்த பொண்ணு டெத் வெரி பிட்டிஃபுல் டெத் சார்.”
“சரி. நீங்களே பாருங்க. கௌன்சிலர் இதில் இன்வால்ட். சோ பி கேர்ஃபுல். அவர் அந்தப் பொண்ணு எடுத்த பணம் வேண்டும் என்று டார்ச்சர் பண்றார். ” என்றார். “சரி ” என்ற ராஜன் நினைவில் பவித்ராவின் இறுதி மரண வாக்குமூலம் நெஞ்சில் மறையாது நின்றது. ஸ்ரீயைக் கண்டுபிடித்து பவித்ராவின் முகத்தை தனது கனவிலிருந்து அகற்ற எண்ணினான்.
நீங்கள்தான் இங்கே அயர்ன் உருப்படிகள் வாங்குவீங்களா?” என்று இஸ்திரிகாரனிடம் உதவி சப் இன்ஸ்பக்டர் ராஜன் கேட்டான்.
“ஆமாம் சார். எனக்கு இங்க நடக்கும் தப்புதன்டா பற்றியெல்லாம் தெரியாது சார். நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன் சார். ”
“அந்த நாலு வீடு இருக்கிற காம்பவுன்டுக்குள் எத்தனை குடும்பம் இருந்தது? ”
“ஒரு பொண்ணு பேரு மோகனா அந்த பொண்ணும் அவளோட பையன் பிரித்வியும் முதல் வீட்டில் இருந்தாங்க. இரண்டாவது வீட்டிலதான் பவித்ரா இருந்திச்சு. அந்த புள்ளையோட ஃப்ரண்டுதான் ஸ்ரீ. அந்த பொண்ணுதான் அடிக்கடி இங்க வரும். மூனாவது வீட்டில் தனு என்று ஒரு பொண்ணு இருந்துச்சு. இவுங்க எல்லோரும் தனித்தனியாக இருந்தாலும் ஒரே குடும்பம் மாதிரி சார். நாலாவது வீட்டில் …” என்று அவர் சொல்லி முடிக்காமல் இழுத்தபோது..
“சொல்லுங்க சார்.. எங்களுக்கு விபரம் தெரியணுமுல்ல? ஏட்டய்யா இரண்டு இளநீர் வாங்கும். காசு இந்தாங்கோ.. ” என்று சாவதானமாக இஸ்திரி செய்பவரிடம் உதவி சப் இன்ஸ்பக்டர் ராஜன் கேட்டான்.
தயங்கின இஸ்திரிஆள் தொடர்ந்தார் “சார் நாலாவது வீட்டில் தான் ஹேம்நாத் இருந்தான். சரியான மாமா பையன் சார். இந்த வீடுகள் அவனோடதுதான். இந்த பொண்ணுங்க அவன் கூட போகும் வரும். ஆனா எங்க? யாரிடம்? என்றெல்லாம் தெரியாது சார். அந்த முதல் வீட்டு குட்டிப்பையன் ஸ்கூலுக்கு ஒரு ஆட்டோவில் போவான். அந்த ஆட்டோகாரனும் ஹேம்நாத்தும் நல்ல ஃப்ரண்ட்ஸ். இங்க பக்கத்தில மதர் மேரி சர்ச் வாசல்லதான் அவன் ஸ்டான்ட். நீங்க அங்க போய் மேற்கொண்டு விசாரிச்சுக்கோங்க. அந்த பவித்ராபுள்ள இறந்த பிறகு எல்லோரும் வீட்டைக் காலி செய்துட்டாங்க. ”
“பவித்ராவுக்கு யார் இறுதிச்சடங்கு செய்தா? ”
“ஸ்ரீ யோட அம்மாதான் செய்தாங்க. பாவம் அந்த அம்மாவும் அன்றைக்கே ஒரு ஆக்சிடன்ட்ல்ல இறந்திட்டாங்க.”
“எப்படி ஆக்சிடன்ட் ஆச்சு? ”
“நைட்ல காரியம் முடிந்த பிறகு மெடிக்கல் ஷாப்போயிருக்காங்க. ரோட்டைக் கிராஸ் பண்ணும் போது கார் காரன் இடிச்சிட்டான். ”
“அந்த பொண்ணு ஸ்ரீ இப்ப எங்க இருக்கு? அந்த மெடிக்கல் எது? ”
“மெடிக்கலா சார்? அதோ அந்த காம்பளக்ஸ் தெரியுதா? அந்த காம்பளக்ஸ்குள்ளதான் இருக்கு. ”
இஸ்திரிகாரனின் பதிலைக் கேட்ட எஸ்.ஐ இளநீரை ஏட்டையாவிடம் இருந்து வாங்கிக்கொண்டு ஜீப்பிற்கு நடந்தார். ஏ.எஸ்.ஐ ராஜன் இடத்தைவிட்டு நகர்ந்த பிறகுதான் இஸ்திரி அப்பாடா என்று மூச்சை இழுத்துக்கொண்டு வேலையைத் தொடர்ந்தான். இஸ்திரியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவனது மூன்று வயது மகளோ அவனிடம் கேட்டாள் “அப்பா அந்த போலீஸ் ஏன் தொப்பி வச்சிக்கல? ”
“தொப்பியை வீட்டில் மறந்து வச்சிருப்பார். ”
“ஓ! நீங்க ஸ்ரீ அக்காவோட புது அட்ரஸ் சொல்ல மறந்தது போலயா? ”
“ஆமாம் டா கண்ணு. ” என்று கூறி இஸ்திரி சிரித்தான்.




Comments are closed here.

You cannot copy content of this page