Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-1

அத்தியாயம் -1

 

பச்சை பசேலென்று, பார்க்க பட்டுக்கம்பளம் போர்த்தியது போல் இருபக்கமும் வயல்வெளி… நடுவில் நீளமான கருத்து அகன்ற தார் சாலை… சாலையோரம் வரிசையாக புங்கை மரங்கள் வெயிலை சாலையை நெருங்கவிடாமல் அரணாக காத்து நின்றன. அந்த மரங்களின் வேர்களை ஒட்டி வாய்க்கால் ‘சல சல’ வென ஓடிக்கொண்டிருக்க தென்றல் காற்று ரம்யமாக வீசிக்கொண்டிருந்தது.

 

 

இந்த அருமையான சூழ்நிலைக்கு கொஞ்சமும் பொருந்தாத மனநிலையோடு ஊருக்குள்ளிருந்து ராஜசேகரன் ‘புடு… புடு…’ வென புல்லெட்டில் வந்து கொண்டிருந்தான். மக்கள் குடியிருப்பு பகுதியை தாண்டி, வயல்வெளியை தாண்டி, அந்த கிராமத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் பாலத்தை  தாண்டி அடுத்த ஊரான “வளநாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது “என்கிற ஆர்ச்சுக்குள் நுழைந்து அந்த ஊருக்குள் சென்று கொண்டிருந்தான்.

 

 

வளநாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி. அதை சுற்றி இருபத்தி எட்டு கிராமங்கள் உள்ளன. அந்த இருபத்தி எட்டு கிராமங்களும் வளநாட்டை மையமாக கொண்டு இயங்கிக் கொண்டிருந்தன.

 

 

பத்து கல்யாண மண்டபம், இரண்டு சினிமா தியேட்டர், ஒரு அரசு மருத்துவமனை, இரண்டு தனியார் மருத்துவமனை, இரண்டு அரசு கல்லூரிகள், ஒரு தனியார் கல்லூரி, இரண்டு அரசு உயர்நிலை பள்ளிகள், இரண்டு தனியார் பள்ளிகள், ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு தீயணைப்பு நிலையம், இவை அனைத்துக்கும் மேல் தஞ்சாவூர் பெரிய கோவிலை ஜெராக்ஸ் செய்தது போல் ஒரு பெரிய கோவில்… என்று சகலத்தையும் தனக்குள் அடக்கிக் கொண்டிருந்தது வளநாடு ஊராட்சி.

 

 

ஆனால் அந்த வளநாட்டை முழுவதுமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் அடக்கி வைத்திருந்தது அதை சுற்றி இருக்கும்  இருபத்தியெட்டு கிராமங்களில் ஒன்றான வேம்பங்குடி…. வளநாட்டில் பாதிக்கு மேல் வேம்பங்குடிகாரர்களுடையதாக இருந்து.

 

 

வேம்பங்குடி, மற்ற கிராமங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது. அந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். அவர்களுடைய குல தொழில் விவசாயம். அவர்களே அதன் பூர்வகுடிமக்கள். அவர்களால் மற்ற சில இன மக்களும் அந்த ஊரில் சில நூறு வருடங்களுக்கு முன்பே குடியேற்றப்பட்டார்கள். பூர்வகுடிமக்களை போலவே மற்றவர்களுக்கும் அந்த ஊரில் முழு உரிமையும் சுதந்திரமும் இருந்தது.

 

 

மேலோட்டமாக பார்த்தால் வேம்பங்குடிக்கும் மற்ற கிராமங்களுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் வேம்பங்குடியில் அதிகமாக மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்காது.

 

 

அந்த ஊரில் ‘நூறு குழி நிலமும், குடியிருக்க மனைக்கட்டும் இல்லாதவன் ஆண்பிள்ளையே இல்லை’ என்பார்கள். அதனால் அங்கு அனைவரும் குறைந்தபட்சம் நூறு குழி நிலத்துக்கு உரிமையாளனாக இருப்பான். அதே போல் நுறு குழி நிலத்துக்கு உரிமையாளன் பத்து ஏக்கருக்கு சொந்தக்காரனை தைரியமாக கேள்விக் கேட்பான். ஏனென்றால் அவனுக்கு பின்னாடியும் பத்து பேர் இருப்பான். ‘என்ன இருந்தாலும் இவனும் நம்ப ஊர் தானே…’ என்ற எண்ணம் அவர்கள் அனைவரிடமும் ஊறிப் போயிருந்தது.

 

 

தலையே போனாலும் வெளியூர்காரகளிடம் தங்கள் ஊர்காரர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தங்களுக்குள் பிரச்சனை வந்தால் ஊர் பெரியவர்களை வைத்து பேசி சுமூகமாக முடித்துக் கொள்வார்கள்.  படிப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். IAS, IPS, மருத்துவர், பொறியாளர் இராணுவம் என்று அந்த ஊரில் குடும்பத்துக்கொருவர்(பங்காளிகள்) நல்ல பதவியில் இருந்தார்கள்.

 

 

தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளிலும் முக்கிய பதவிகளில் இருவர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாட்டுக்கு எப்படி உண்மையாக இருக்கிறார்கள் என்பது தெரியாது. ஆனால் அந்த ஊர் மக்களுக்கு உண்மையாக இருந்தார்கள். தங்களால் முடிந்ததை ஊருக்காக செய்தார்கள். ஒருவர் செய்வதை மற்றவர் தடை செய்யாமல் இருந்தார்கள். அதனால் மற்ற ஊர்களைவிட அந்த ஊர் நல்ல முனேற்றம் அடைந்ததாக இருந்தது.

 

 

வேம்பங்குடிகாரன்  உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் அவனுக்கு முன் அங்கு  அவனுக்கு உதவ ஒரு வேம்பங்குடிகாரன் இருப்பான்.

 

 

அந்த ஊரில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. அந்த அம்மன் கோவில் திருவிழா மிக பிரசித்திப் பெற்றது. வெளி ஊர்களில்… வெளி நாடுகளில் வசிக்கும் வேம்பங்குடி மக்கள் குடிம்ப விழாக்களுக்கு வருகிறார்களோ இல்லையோ… ஊர் திருவிழாவுக்கு ஆஜராகிவிடுவார்கள். அதே போல் அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அம்மன் கோவில் திருவிழாவுக்கு ‘பூவரி மண்டகப்படி’ (திருவிழா நடத்த தங்களுடைய பங்கு பணம்) வந்து சேர்ந்துவிடும்.

 

 

ஊர் பற்று மிக அதிகமாக உள்ள அந்த மக்களுக்கு ஒரு பிரத்தேக குணமும் இருந்தது. அவர்கள் எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும்… பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும் அந்த குணம் மட்டும் அவர்களுக்குள் மறைந்தே இருக்கும்.

 

 

வீண் வம்புக்கு அதிகம் போக மாட்டார்கள். அதே சமயம் ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் எதிரியை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள். இதுதான் அந்த குணம். தவறு அவர்கள் பக்கம் இருந்தாலும், ஊர்காரன் ஒருவனுக்கு பிரச்சனை என்று தெரிந்துவிட்டால் அந்த ஊரே அவன் பின் நிற்கும்.

 

 

‘என்ன இருந்தாலும் நம்ப ஊரானாச்சே…’ அந்த மாதிரி நேரங்களில் இதுதான் அவர்கள் அனைவரின் வாய் மொழியாக இருக்கும். ஒருமுறை மந்திரி ஒருவனின் மகனை தங்கள் ஊர் பெண்ணை வம்பிழுத்தான் என்று சொல்லி சக்கையாக பிழிந்துவிட்டது அந்த ஊரின் இளைஞர் கூட்டம் ஒன்று. அந்த விவகாரத்தில் இடையில் போலீஸ் தான் தலையை சொறிந்துகொண்டு எதுவும் செய்ய முடியாமல் தவித்தது. யாராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை.

 

 

அதிலிருந்து போலீஸ்காரகளுக்கு வேம்பங்குடிகாரன் எவனாவது மாட்டினால் பிழிந்து எடுத்துவிட வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் முடியாது. வேம்பங்குடியான் மீது கைவைத்துவிட்டு அவர்களால் வளநாட்டை தாண்ட முடியாது. சுற்றியிருக்கும் இருபத்தேழு கிராமங்களும் பயந்து நடுங்கும் ஒரு ஊர் மீது எங்கிருந்தோ வந்து வேலை செய்யும் ஒற்றை போலீஸ்காரன் எப்படி கைவைக்க முடியும்…?

 

 

இவ்வளவு சிறப்புகளையும் கொண்ட அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த, அந்த கிராமத்துகாரனான முப்பத்திரண்டு வயது நிரம்பிய இராஜசேகர் புல்லெட்டில் வளநாட்டில் நுழைந்து காவல் நிலையத்திற்கு முன் வண்டியை நிறுத்துவிட்டு லேசாக மடித்து கட்டியிருந்த வேட்டியை கணுக்கால் வரை அவிழ்த்து விட்டுக்கொண்டு நிமிர்வாக உள்ளே நடந்தான்.

 

 

அவனை அடையாளம் தெரிந்துகொண்ட ‘ரைட்டர்’ காசி

 

 

“வாங்க சார்…உக்காருங்க சார்… ” என்றான்.

 

 

“பையன் எங்க…” இராஜசேகர் முறைப்பாக கேட்டான்.

 

 

“உள்ளே இருக்கான் சார்… இதோ வர சொல்றேன்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த ஸ்டேஷனின் SI உள்ளே நுழைந்தார்.

 

 

“வாங்க சார்… போன் பண்ணி பத்து நிமிஷம் தான் ஆகுது அதுக்குள்ள வதுட்டீங்க…”என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.

 

 

அமந்திருந்தபடியே அமர்த்தலாக பதில் சொன்னான் இராஜசேகர் “என்ன SI சார்… பையன் மேல கை வச்சிரிக்கீங்க போல….”

 

 

“உங்க ஊர்ன்னு தெரியல சார்….”

 

 

அதற்குள் அங்கு வந்துவிட்ட அந்த பதினெட்டு வயது பையன் மகேஷ்  “சித்தப்பா… நான் மொதல்லேயே சொன்னேன்… எங்க ஊர் வேம்பங்குடின்னு.. அதுக்கு அப்புரம்மும் என்னை ரெண்டு அடி சேர்த்து அடிச்சானுங்க…” என்று குறை சொன்னான்.

 

 

ராஜசேகர்  இப்போது போலீஸ்காரரை அனல்பார்வை பார்த்தான். அதில் நடுங்கிப்போனவர்…

 

 

“யார புடிச்சாலும் உங்க ஊர் பேர்தான் சொல்றானுங்க… கடைசியாதான்  வேற ஊர் பயலுகன்னு தெரியுது… அது மாதிரு தான் இந்த பையனும் சொல்றான்னு நினைத்துவிட்டேன் சார்…. தப்பு நடந்துடுச்சு…”  என்று இழுத்தார்.

 

 

“என்ன போலீஸ்ஸு… இந்த பசப்பல் எல்லாம் என்னுகிட்ட வேண்டாம்… எங்க ஊர் பேர சொன்னா… நல்லா விசாரிச்சுட்டு மேல கைவை… இல்லன்னா உன் உடம்புல கை இருக்காது…”

 

 

அவர் விழித்தார். வேம்பம்குடிக்காரனை போட்டுத்தாக்க எண்ணிதான் அவர் அந்தப் பையன் மீது கை வைத்தார். நான்கு அடி போடும் முன் அவன் ஊர் பேரை சொல்லிவிட்டான். ஆத்திரம் தாங்காமல் மேலும் ரெண்டு கொடுத்துவிட்டார். இதற்கு போய் கையை இழக்கனுமா…?

 

 

“சாரி சார்… தப்பு நடந்து போச்சு…” என்று தன் வியர்த்த முகத்தை துடைத்துக்கொண்டு சொன்னார்.

 

 

“என்னடா இது…. கடைத்தெருவுக்கு போனா சும்மா வரமாட்டியா….? அங்க என்ன உனக்கு வம்பு…?” போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்ததும் இராஜசேகர் மகேஷிடம் சீறினான்.

 

 

“இல்லை சித்தப்பா… நான் ஒன்னும் வம்புக்கு போகல… அந்த கடைக்காரன் தான் கடைக்கு முன்னாடி நிக்காதன்னு மொதல்ல சத்தம் போட்டான்.”

 

 

“நீ ஏன் அவனுடய வியாபாரத்த கெடுத்துகிட்டு அங்க போயி நின்ன …? இனிமே இதுமாதிரி நடக்க கூடாது…” என்று அவனை எச்சரித்துவிட்டு வண்டியை கிளப்பினான். மகேஷ் அவனுக்கு சொந்த அண்ணன் மகன் இல்லை. பங்காளி வீட்டு பையன். ஆனால் உரிமையுடன் அவனால் மகேஷை கண்டிக்க முடிந்தது. இதுவும் அந்த ஊரின் சிறப்புகளில் ஒன்று…

 

 

******************

 

 

“புகழ்… ஏன் இவ்வளவு அவசரப்படறீங்க…? இப்போவே வீடு பார்க்கனுமா…?”

 

 

“என்ன ஜெனி இப்படி கேட்டுட்ட… இந்த வீட்டை நேத்து  நான் போய் பார்த்தேன். ரொம்ப அருமையா இருக்கு. இப்போ விட்டுட்டா இதை போல வீடு நமக்கு கிடைக்காது. ”

 

 

“ஆனால் நம்பளோட கல்யாணம் இன்னும் முடிவாகல… அதுக்குள்ள வீடு பார்க்கனுமா… எனக்கு பயமா இருக்கு…”

 

 

“இப்ச்… பைத்தியம்… ஏன் இப்படி பயப்படற….? உங்க மாமா நேத்து என்னை வந்து மீட் பண்ணினது உனக்கு தெரியும் தானே… அவருக்கு என்னை பிடித்துவிட்டது. உன்னோட அம்மாவும் அப்பாவும் சொல்லிதானே அவர் என்னை வந்து பார்த்தார்….?”

 

 

“ம்ம்ம்… ஆமாம்….”

 

 

“அப்புறம் என்ன…? உங்க ஊர் திருவிழா முடிந்ததும் நம்ப கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று சொன்னார்… அதுக்கு இன்னும்  எவ்வளவு நாள் இருக்கு…?”

 

 

“சரியா முப்பது நாள்”

 

 

“ம்ம்… அதுக்கப்புறம் நம்ப கல்யாணம் தானே… இப்போ வீடு பார்த்துவிட்டால் நாம கல்யாணம் முடிஞ்சு குடிவரும் போது சரியா இருக்கும்…”

 

 

“………………”

 

 

“என்ன ஜெனி…”

 

 

“என்னவோ தெரியல… கொஞ்சம் பயமாவே இருக்கு…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த வீடு வந்துவிட புகழேந்தி காரை நிறுத்தினான். நிரஞ்சனி மறுபக்க கதவை திறந்துகொண்டு இறங்கினாள்.

 

 

அந்த வீடு சகல வசதிகளுடன் சிறு பங்களா போல் இருந்தது. அதை பார்த்த நிரஞ்சனி “என்ன டாக்டர் சார்…. சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் வீட்டுக்கு வாடகை மட்டுமே கொடுக்குறதா ஐடியாவா…?” என்று கேட்டாள்.

 

 

“அடேங்கப்பா… இப்போவே கணக்கு கேட்க ஆரம்பிச்சாச்சா…? என் பாடு

ரொம்ப கஷ்ட்டம் போலருக்கே…” என்று அவன் போலியாக அலுத்துக்கொண்டு பின் சிரித்தான்.

 

 

“என்னோட வருமானம் இந்த வீட்டுக்கு கட்டுபடியாகும் அம்மணி… நீங்க கவலை படாம வீடு பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லுங்க…” என்றான்.

 

 

அவளும் புன்னகைத்துக் கொண்டே “பிடிச்சிருக்கு….” என்றாள்.

 

 

தஞ்சாவூரில் மேல்மட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் அருமையான வீட்டை பார்த்து ‘அட்வான்சும்’ கொடுத்துவிட்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

 

 

டாக்டர் புகழேந்தி MBBS., MD., DM (Gastro)   முடித்துவிட்டு இரைப்பை குடல் இயல் (Gastroenterology) துறையில் அந்த சிறு வயதிலேயே பிரபலமாகிக் கொண்டிருந்தான்.

 

 

நிரஞ்சனி அவன் வேலை செய்யும் மருத்துவமனையில் (lab technician ) ஒரு ஆய்வக தொழில்நுட்பராக இருக்கிறாள்.

 

 

இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக மனதார விரும்புகிறார்கள். இவர்களுடைய காதல் திருமணத்தில் முடியுமா…?

 

 

ஒரு ஆண்டுக்கு முன்….

 

“ஏ…. கோயிந்தன்னோ….வ்…. என்னோ…வ்…  ” என்று தாமரை சாலையோரமாக நின்று கொண்டு, தூரத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பெரியவரை கூவி அழைத்தார்.

 

 

அவர் சைக்கிளை நிறுத்திவிட்டு, திரும்பிப்பார்த்து அங்கிருந்தபடியே கேட்டார்.

 

 

“என்னா…யி ஏதுஞ்…சேதியா…?”

 

 

“ஆமான்னா…. அப்புடியே எங்க அன்னமுட்டு பக்கம் எட்டி பாத்து சாரதி இருந்தா நா வர சொன்னேன்னு சொல்லிட்டு போங்க…”

 

 

“சரியாயி.. நீ போ நா சொல்லிர்றே…” என்று சொல்லிவிட்டு அவர் சைக்கிளை மிதித்துக்கொண்டு அங்கிருந்து அகன்றார்.

 

 

வேம்பங்குடி தாமரையின் வீடு…

 

“என்னம்மா… இது… இவ்வளவு நாள் காலேஜ் போன எனக்கு இன்னிக்கு வேலைக்கு போக தெரியாதா… எதுக்கு சாரதியை வர சொல்ற…?” என்று நிரஞ்சனி, ரோட்டிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்த தன் தாயை பார்த்து எரிச்சலாக கேட்டாள்.

 

 

“நீ சும்மா இரு ரஞ்சி… இத்தினி நாளு(ம்) நீ காலேஜி  பஸ்சுல போயிட்டு வந்த.. இப்ப வெளி பஸ்சுல போவனும்… ரெண்டாவது, சாரதி வந்து உன்ன பஸ்சு ஏத்திவிட்டுட்டு வந்தா… நீயும் பத்தரமா போயிட்டு வரலாமுள்ள… நமக்கு(ம்) ஆள் இருக்குன்னு எல்லாருக்குந் தெரியணுமே…” என்று முதன் முதலில் வேலைக்கு போகும் தன் மகளை பார்த்து பேசினார்.

 

 

“ஏம்மா… பத்து வயசு பையன் உனக்கு ஆளா…? அவன் என்னோடு வந்தால் எனக்கு பாதுகாப்பா…? சும்மா ஜோக் அடிக்காதம்மா..”

 

 

“என்ன ரஞ்சி இப்புடி சொல்ற…? ஜான் புல்லையானாலும் அவன் ஆண் புள்ளடி…” என்று நிரஞ்சனிக்கு புத்தி சொல்லிவிட்டு சுண்ட காய்ச்சிய பாலை கொண்டுவந்து மகளிடம் கொடுத்தாள்.

 

 

அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு ராணி  “என்ன தாமரக்கா… நீ வயலுக்கு வரலையா…?”  என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.

 

 

“நீ போ ராணி… நா புள்ளைய அனுப்பிட்டு வர்றேன்…”

 

 

“என்னக்கா நீ… ரஞ்சி என்ன சின்ன புள்ளையா…? கெளப்பி விட்டுகிட்டு இருக்க…? எம்மவள கெளம்பி போவ சொல்லிட்டு கலக்கட்ட(புல் செதுக்கும் ஆயுதம்) கையில எடுத்துகிட்டு நா வரல… நீ என்னான்னா… இப்பதா பச்ச புள்ளக்கி பால் ஊட்டிவிட்டுகிட்டு இருக்க…” என்று போகிற போக்கில் சொல்லிக்  கொண்டே போக தாமரை உஷ்ணமாகி… ராணி சென்ற பிறகு அவளுடைய காலடி மண்ணை எடுத்து மகளுக்கு சுத்திப் போட்டார்.

 

 

தூரத்தில் தன் அண்ணன் மகன் சாரதி வருவது தெரிந்தது. அவன் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது…

“என்னப்பா தம்பி கொஞ்சம் வெள்ளனமே வதிருக்கலாமுல்ல… அத்தாச்சி கெளம்பிட்டா பாரு…” என்றார்.

 

 

“அம்மா கண்ணுகுட்டிக்கு தண்ணி காட்டிட்டு போவ சொன்னுச்சுத்த… அதாங் கொஞ்ச லேட்டு…” என்று விளக்கம் சொன்னவன்

 

 

“சரி வாத்தாச்சி…” என்று நிரஞ்சனியை பார்த்து அழைத்தான்.

 

 

“பெரிய கோயிலுக்கு போயி சாமிக்கு ஒரு அருச்சன பண்ணிட்டு போங்க…” என்று தாமரை அதற்க்கு தேவையான பூஜை சாமான்களை வைத்து ஒரு பையை கொடுத்தார்.

 

 

“சரித்த…” என்று சொல்லி அந்த பையை வாங்கிக்கொண்டு சைக்கிளை எடுத்தான்.

 

 

“இருடா தம்பி… நான் இன்னிக்கு சைக்கிள் மிதிக்கிறேன்” என்றாள் நிரஞ்சனி.

 

 

“அத்தாச்சி… பொம்பள புள்ளைய மிதிக்க சொல்லி நா பின்னாடி உக்காந்து வரணுமா… அதெல்லா முடியாது… நா மிதிக்கிறேன் நீ பின்னாடி உக்காரு…” இந்த வயதிலேயே அவன் தான் ஆண் பிள்ளை என்கிற வீராப்பை காட்டினான்.

 

 

நிரஞ்சனிக்கு வேலை கிடைத்திருப்பது தஞ்சாவூரில். தஞ்சாவூர் செல்ல வளநாட்டிற்கு வந்துதான் பஸ் பிடிக்க வேண்டும்.

 

 

அவர்கள் வேம்பங்குடியை தாண்டி ஓரத்தநாட்டிர்க்குள் நுழைந்து சிறிது தூரம் சென்றார்கள். அங்கு ஒரு விளையாட்டு மைதானத்தில் ஆண் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிர்ந்தார்கள். ஒரு அழகிய பெண் ஒரு சிறுவனுடன் சைக்கிளில் செல்வதை பார்த்துவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களில் நான்கு பேர் அந்த சைக்கிளை பின் தொடர்ந்து இரண்டு சிக்கிளில் வந்தார்கள்.

 

 

அவர்கள் விசில் அடித்தும்… பாட்டு பாடியும் நிரஞ்சனியின் கவனத்தை ஈர்க்க முயன்றார்கள்.

 

 

அதை கவனித்துவிட்ட சாரதி பற்களை கடித்துக் கொண்டான். “நா வரும்போதே வாலாட்றானுவளே… நீ தனியா வந்தா என்ன செயவானுவளோ… இதுக்கு இன்னைக்கே ஒரு வழி பண்றேன்…” என்று நிரஞ்சனியிடம்  முனுமுனுத்த அந்த சிறுவன் கோவில் வந்ததும் சொன்னது போலவே நான்கு வாலிபர்களை விரட்டியடித்தான்.

 




5 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Amudha says:

    How to read this story


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    D Deepa D deepa says:

    Nice


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    PAPPU PAPPU PAPPU PAPPU says:

    starting arumai nithya ma


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    இப்பகுதி நன்றாக இருந்தது.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Wowwww .super kiramathu kathai.

You cannot copy content of this page