மனதில் தீ-2
5518
2
அத்தியாயம் -2
இன்று
காவல் நிலையத்திலிருந்து வண்டியில் வேகமாக வந்து கொண்டிருந்த இராஜசேகரை கடைத்தெருவில் ஒருவன் வழிமறித்தான்.
“என்ன இராஜா… சவுரியமா…?”
“சவுரியந்தா சின்னப்பா… நீ எப்புடி இருக்க?”
“நல்லாருக்கே(ன்) இராஜா… நா கேள்விப் பட்டதெல்லாம் உண்மையாடா… நீ இருக்கும் போது இது எப்படிடா நடக்கலாம்….”
“எதப்பத்தி கேக்குற…?”
“எல்லா(ம்) உங்க ரஞ்சிய பத்தி தான்… ஊரே சிரிக்குது… நீ ஒன்னுந் தெரியாதவ மாதிரி பேசுற…” என்று அவனுடைய பொறுமையை சோதித்தான்.
“எல்லாந் தெரியு(ம்)… நீ வேலைய பாரு…” என்று முறைப்பாக பதில் சொல்லிவிட்டு வண்டியை வேகமாக உதைத்து கிளப்பிக் கொண்டு சென்றான் இராஜசேகர்.
இதோடு அவனிடம் நான்கு பேர் இதை பற்றி பேசிவிட்டார்கள். அவனுக்கு அவமானம் பிடிங்கித் தின்றது… ஊருக்குள் யாரிடமும் நிமிர்ந்து பேச முடியவில்லை… அந்த கோவத்தை யாரிடம் காட்டலாம் என்று துடித்துக் கொண்டிருந்தான்.
*******************
கோபாலன் தாமரை அல்லி மூவரும் உடன் பிறந்தவர்கள். கோபாலனுக்கு ஒரே மகன். அவர் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு லேட்டாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு தான் அவருக்கு சாரதி பிறந்தான்.
தாமரைக்கு இரண்டு பெண்கள். நீரஜா… நிரஞ்சனி. நீரஜாவிற்கு திருமணம் முடிந்துவிட்டது. அவளை கல்லூரிக்கு செல்லும் போது பார்த்துவிட்டு அவளுடைய கணவன் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணத்திற்கு அந்த ஊரில் எதிர்ப்பு இருக்கும் என்றாலும் நீரஜாவின் கணவர் வேம்பங்குடிகாரர் என்பதாலும் அவர்கள் ஒரே இனத்தவர்கள் என்பதாலும் அதிகம் பிரச்சனை இல்லாமல் அவர்களுடைய திருமணம் முடிந்துவிட்டது.
அந்த திருமணத்திற்கும் சில பிரச்சனைகள் கிளம்பின. பையன் பள்ளி படிப்பிற்கு மேல் படிக்கவில்லை என்று பெண் வீட்டிலும்… பெண் வீட்டில் வசதி குறைவு என்று பையன் வீட்டிலும் பிரச்னையை கிளப்பினார்கள்.
ஆனால் பையனும் பெண்ணும் பிடிவாதமாக இருந்து பெற்றோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டார்கள்.
அல்லிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன். மகளுக்கு லண்டன் மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். மாப்பிள்ளை வீடும் வேம்பங்குடிதான். அதனால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மகன் பெங்களூரில் மென்பொருள் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறான்.
தாமரையின் அண்ணனும் தங்கையும் வசதியாக வாழ்ந்தார்கள். தாமரையின் கணவர் குடிப்பவராக அமைந்து விட்டதால், அவருடைய வாழ்க்கைதரம் படிப்படியாக குறைந்து இன்று இருக்க வீடும் சாப்பாட்டுக்கு விவசாயம் செய்ய நிலமும் தவிர வேறு எதுவும் இல்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டது.
தாமரை தன்னுடைய வாழ்க்கை தரம் தாழ்ந்தாலும் தன்னுடைய மகள்களுக்கு எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக்கொள்வார். ஆப்பிள் சாப்பிட்டால் பெண்களுக்கு தோல் ‘பல பல’வென இருக்கும் என்று யாரோ சொன்னதை கேட்டுவிட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வேம்பங்குடியிளிருந்து நடந்து வளநாடு வந்து, நாள் முழுக்க தான் வெய்யிலில் நின்று வயல் வேலை செய்து சம்பாதித்த பணத்தை கொடுத்து மகள்களுக்கு ஆப்பிள் வாங்கிச் செல்வார்.
ஒரு மாடு வைத்திருந்தார். அதில் மகள்களுக்கு சுண்ட காய்ச்சி கொடுத்த பால் போக மீதியிருந்தால் மட்டும் தான் விலைக்கு கொடுப்பார். இரவில் ஒரு கற்பூரவள்ளி வாழைப்பழமும் பாலும் சாப்பிட்டால் நல்லது என்று கேள்விப்பட்டு அதற்காகவே கற்பூரவள்ளி மரம் பதியம் போட்டு வளர்த்து மகள்களுக்கு தினமும் இரவில் பாலும் பழமும் கொடுப்பார்.
கோபாலன் தாமரை அல்லி ஆகியோரின் அன்னை பாக்கியத்தம்மாள் அந்தகாலத்து ஐஸ்வர்யா ராய்… அவருடைய திருமணத்தின் போது சுயம்வரம் நடந்ததாம். பெண் கேட்டு வந்த முறை பையன்களில் யார் முதலில் ஐம்பது பவுன் நகை போடுகிறார்களோ அவர்களுக்குத்தான் பெண் என்று அறிவிக்கப்பட்டதாம். உடனே தாமரையின் தந்தை வரதன் ஐம்பது பவுன் நகையை கொண்டுவந்து போட்டுவிட்டு, அடுத்த பத்தாவது நாளே திருமணம் செய்து கொண்டாராம்.
ஆனால் திருமணத்திற்கு பிறகுதான் தெரிந்ததாம், அவர் போட்டது போலி நகைகள் என்று. மருமனாகிவிட்டவரை எதுவும் பேசமுடியாமல் தாமரையின் தாத்தா அமைதியாக இருந்து விட்டாலும், வரதன் ஓராண்டு காலம் கடுமையாக உழைத்து அந்த ஐம்பது பவுன் நகையை பாக்கியத்தம்மாளுக்கு வாங்கிக் கொடுத்தாராம்.
அவர் தப்பே செய்திருந்தாலும் இன்றுவரை அவருடைய புத்திசாலித் தனத்தையும் பாக்கியத்தம்மாளின் அழகையும் பாராட்டாதவர்கள் கிடையாது.
அந்த அழகு தேவதையின் வாரிசுகளும் அவருக்கு சளைத்தவர்கள் அல்லர். அவருடைய முதல் வாரிசான கோபாலன் முதல் கடைசி வாரிசான சாரதிவரை யாரும் பாக்கியத்தம்மாளின் அழகுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்லர்.
தாமரையின் இரண்டு மகள்களும், அல்லியில் ஒரு மகளும் அச்சில் வார்த்தது போல் இருப்பார்கள். அதிலும் நிசஞ்சனியும் சிவரஞ்சனியும் வெவ்வேறு தாய்களின் மகள்கள் என்று சொல்லவே முடியாது. இருவருக்கும் ஒரே வயது. பள்ளி படிப்புவரை ஒன்றாக படித்தார்கள். பின் சிவரஞ்சனி பொறியியல் சேர்ந்துவிட நிரஞ்சனி அறிவியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டாள்.
வளநாடு அல்லியின் வீடு…
இன்று நீரஜாவின்(நிரஞ்சனியின் அக்கா) கணவர், தாமரையையும் அவர் கணவரையும் தொலைபேசியில் அழைத்து அல்லியின் வீட்டிற்கு வர சொல்லிவிட்டு, தன் மனைவி நீரஜாவையும் ஒரு வயது குழந்தை ஆகாஷையும் கொண்டுவந்து அல்லியின் வீட்டில் விட்டுவிட்டு இப்போதுதான் வெளியே சென்றார்.
“என்னடி நீரு… ஒம்புருஷன் எதுக்கு எங்கள வர சொன்னாரு… ஏதாவது சேதியா…? அதுக்கு நம்ப வீட்டுக்கு வந்துருக்க வேண்டியதுதானே… இங்க எதுக்கு வர சொன்னாரு…?” என்று வினவினார் தாமரை.
“என்னன்னு தெரியலம்மா… வளநாட்டிலேருந்து வீட்டுக்கு வந்தவருக்கு முகமே சரியில்ல… என்ன கெளம்ப சொன்னாரு. புடவைய கட்டிக்கிட்டு ஒடனே கெளம்பிட்டேன்…” என்றாள் நீரஜா.
“அவரு வந்து இப்போ சொன்னா தெரிஞ்சுட்டு போவுது… நீ ஏ இப்புடி அடுச்சுக்குற? பேசாம உக்காருக்கா… நீரு இந்தா… இத புள்ளைக்கு குடு… நா ரஞ்சி என்ன பண்றான்னு பாத்துட்டு வர்றேன்.. ” என்று சிவரஞ்சனியை தேடிச்சென்றாள் அல்லி.
அவர்கள் சிவரஞ்சனி நிரஞ்சனி இருவரையுமே ரஞ்சி என்று தான் அழைத்தார்கள்.
*******************
வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நிரஞ்சனியை, புகழ் பஸ் நிறுத்தத்திற்கு அழைத்துக்கொண்டு காரில் வரும் பொழுது நிரஞ்சனியின் கைபேசி அழைத்தது. எடுத்து பார்த்தாள்.
“யார் போன்ல…?” புகழ் காரை ஓட்டியப்படி கேட்டான்.
“ரஞ்சி…” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு நிரஞ்சனி கைபேசியை எடுத்தாள்.
தாய் வீட்டிற்கு வருடத்திற்கு ஒருமுறை வரும் சிவரஞ்சனி அப்போது தன் தாய் வீட்டில் இருந்து நிரஞ்சனிக்கு அழைத்தாள்.
“சொல்லு ரஞ்சி…”
“ரஞ்சி… இப்போ எங்க இருக்க…?”
“பஸ் ஸ்டாண்டுக்கு போயிகிட்டு இருக்கேன் ரஞ்சி… பாப்பா எப்படி இருக்கு…?”
“நல்லா இருக்குடி… ரஞ்சி… நீ வேம்பங்குடிக்கு போகாத… பெரியம்மா, பெரியப்பா, நீரு எல்லாரும் இங்கதான் இருக்காங்க. நீயும் இங்க வா…”
“இல்ல ரஞ்சி… அங்க வந்தா நாளைக்கு வேலைக்கு போறப்ப டிரஸ் இல்லாம கஷ்ட்டமா இருக்கும்.. நா வீட்டுக்கே போறேன் அம்மா வர்றப்ப வரட்டும்…” என்றாள்.
“ஐயோ ரஞ்சி… அப்படி ஏதும் செஞ்சுடாத… நீ இங்கேயே வந்துடு… மாமா உனக்கு போன் பண்ணி இங்க வர சொன்னாங்க…”
“எந்த மாமா…?”
“இராஜசேகர் மாமா…”
நிரஞ்சனிக்கு திக்கென்றது. அவளுக்கு இராஜசேகர் மீது அதிக பயம் இருந்தது. என்னவென்று தெரியவில்லை. இவளால் அவனுடைய முகத்தை பார்க்கவே முடியவில்லை. இப்போதெல்லாம் அவன் முகம் அவ்வளவு கடுமையாக இருக்கிறது. முன்புபோல் அவளிடம் சிரித்து பேச மாட்டேன் என்கிறான். ஒரு வேளை என்னுடைய காதல் விவகாரம் அவனுக்கு பிடிக்கவில்லையோ… என்று பயந்தாள்.
அவள் முகத்தை பார்த்துவிட்டு “என்ன ஜெனி…?” என்று வினவினான் புகழ்.
“ராஜா மாமா என்னை எங்க சித்தி வீட்டுக்கு வர சொல்லியிருக்கார். என்னன்னு தெரியல… நம்பள பத்தி கேப்பாருன்னு நினைக்கிறேன்…”
“அதுக்கு ஏன் இப்படி பயப்படற… தைரியமா பேசு… உங்க அப்பா அம்மா நமக்கு ஓகே சொல்லிட்டாங்க… அப்புறம் என்ன…? அதோட அவரும் லவ் மேரேஜ் பண்ணினவர் தானே… அப்படியெல்லாம் நமக்கு எதிரா எதுவும் சொல்ல மாட்டார்…” என்று அவளுக்கு தைரியம் சொன்னான்.
“அதுக்கு இல்ல…” அவள் இழுத்தாள்.
“என்ன ஜெனி… இன்னிக்கு வீடு பார்க்க போனதிலிருந்தே நீ இப்படிதான் எல்லாத்தையும் போட்டு குழப்பி என்னையும் குழப்புற…” என்று சற்றே கோபமாக பேசவும் நிரஞ்சனி முயன்று புன்னகையை வரவழைத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறிக்கொண்டு அவனுக்கு விடை கொடுத்தாள்.
அன்று
கோவிலுக்குள் நுழைந்த நிரஞ்சனியையும் சாரதியையும் அந்த இளைஞர் கூட்டம் தொடர்ந்தது. அவர்களுக்கு எப்படியாவது நிரஞ்சனியை பற்றி தெரிந்து கொண்டு அவளை பிராக்கெட் போட வேண்டும். அவளுடைய அழகு அவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது.
“பேர் நட்ச்சத்திரம் சொல்லுங்கோ…” ஐயர் அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டே நிரஞ்சனியிடம் கேள்விக் கேட்டார்.
அவள் ஒரு நிமிடம் விழித்தாள். அவளுக்கு எதிர் வரிசையில் அந்த இளைஞர் கூட்டம் நின்று கொண்டிருக்கும் போது சொல்லலாமா வேண்டாமா….?
ஐயர் மறுபடியும் கேட்கவும் வேறுவழியின்றி “பேர் நிரஞ்சனி… நட்ச்சத்திரம் அவிட்டம்…” என்று சொன்னாள்.
‘ஆஹா… சுப்பர் பேர்… நிரஞ்சனி…’ பெயர் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் அந்த பையன்கள் பெருமிதமாக நிற்கும் போது அவர்களை பார்த்துக்கொண்டே சாரதி சொன்னான்….”ஊர்… வேம்பங்குடி…”
“அர்ச்சனைக்கு ஊர் பேரெல்லாம் தேவை இல்லடா அம்பி…” என்று சொல்லிக்கொண்டே ஐயர் அர்ச்சனையை ஆரம்பிக்க, அதுவரை சாருமதியை தொடர்ந்து வந்த கூட்டம் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட்டது.
சாரதி இப்போது தனக்கு இல்லாத மீசையை தடவிக்கொண்டான். தன் அத்தாச்சியை பெருமையாக பார்த்துக் கொண்டான். அவளுக்கு சிரிப்பு வந்தாலும் தன் மாமன் மகனனுடைய புத்திசாலி தனத்தை பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டாள்.
********************
சாரதி அவளை பத்திரமாக கூட்டம் இல்லாத தஞ்சாவூர் பஸ்ஸாக பார்த்து ஏற்றிவிட்டான்.
“அத்தாச்சி… இந்த சீட்ல உக்காந்துக்கோ…” என்று ஜன்னல் ஓர சீட்டை காட்டினான்.
“நான் பத்தரமா போயிக்கிறேன் சாரதி… நீ வீட்டுக்கு போ… ஸ்கூல்க்கு லேட் ஆயிடும்… பத்திரமா போ…” என்று அவனை அனுப்பிவைத்தாள்.
அவன் அவள் பேச்சை அலச்சியம் செய்து காத்திருந்து பஸ் கிளம்பியபின் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
ஜன்னல் ஓரம் அழகு தேவதையாக அமர்ந்திருந்தவள் ஒரே நாளில் ஒரே பார்வையில் இரண்டு பேரின் மனதை சுண்டி இழுத்தாள். அதன் விளைவு பயங்கரமாக அவளுடைய வாழ்க்கையை தாக்கியது.
இரண்டு ஊர் தாண்டி மூன்றாவது ஊரில் ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றது. வெளியே ஒரு பெட்டிக்கடையில் நின்று சிகரட் பிடித்துக் கொண்டிருந்த இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, பஸ்ஸில் ஜன்னலோரம் தெரிந்த அழகிய முகத்தை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் பிரம்மித்து நின்றுவிட்டான்.
புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை காலில் போட்டு மிதித்துவிட்டு அவசரமாக அந்த பஸ்ஸில் ஏறினான். அவன் தினமும் செல்லும் பஸ் அதுதான். சீட்டில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் அவனுடைய காக்கி உடையை பார்த்துவிட்டு மரியாதைக்கு எழுந்து இடம் கொடுத்தார். அதை மறுத்துவிட்டு நிரஞ்சனியை நன்றாக பார்க்க முடிகிற இடத்தில் நின்று கொண்டு அந்த பயணம் முழுக்க அவளை கண்களால் விழுங்கினான்.
ஒரு மணி நேர பயணம் முடிந்து பஸ் தஞ்சாவூரை அடைந்தது. பஸ் கார்த்திகா மருத்துவமனையை தாண்டி பஸ் நிறுத்தத்திற்கு செல்லும் போது எதிரில் வந்த காரிலிருந்து புகழேந்தி பஸ்சின் ஜன்னல் ஓரம் தனியாக தெரிந்த அந்த தங்க முகத்தை முதல் முதலில் பார்த்தான். அந்த முகம் முதல் பார்வையிலேயே அவனுடைய அனுமதியின்றி அவனுடைய இதயத்திற்குள் நுழைந்து கொண்டு அவனை இம்சை செய்ய ஆரம்பித்தது…
2 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
PAPPU PAPPU PAPPU PAPPU says:
very nice ud ma
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
நன்றாக இருந்தது இப்பகுதி.
நன்றி