மனதில் தீ-4
4066
4
அத்தியாயம் – 4
அன்று
தினமும் நிரஞ்சனி ஏழு மணிக்கே மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தாள். அவள் இன்ஸ்பெக்டர் பிரசன்னாவின் பேச்சை அலட்சியம் செய்துவிட்டாள். அதில் எரிச்சலடைந்த பிரசன்னா மீண்டும் மருத்துவமனைக்கு வந்துவிட்டான். அவளோடு வேலை செய்யும் பெண்களுக்கு முன் வைத்து நிரஞ்சனியை கேவலமாக பேசினான்.
“என்னடி… சொல்ல சொல்ல நீ பாட்டுக்கு காலையிலேயே கிளம்பி வந்துடற… ஏன்…? வேற எவனாவது இளிச்சவாயன் மாட்டிட்டானா…? அதுதான் என்னை தூக்கி எரிஞ்சிட்டியா…? ஒன்னோட தகிடுதத்தம் வேலையெல்லாம் என்னுகிட்ட வச்சுக்காத… தொலைச்சுடுவேன் தொலைச்சு…” என்று அவளை மிரட்டினான்.
அவன் பேசியது எதற்கும் நிரஞ்சனி பதில் பேச முடியாமல் விக்கித்து நின்றாள். அவன் பேசியவிதம் என்னவோ நிரஞ்சனி அவனோடு பழகிவிட்டு ஏமாற்றியது மாதிரி இருந்தது. அப்படித்தான் அவளோடு வேலை செய்த பெண்கள் நினைத்துக் கொண்டார்கள். அவனும் அதை எதிர்பார்த்துதான் அப்படி பேசினான்.
நிரஞ்சனி அவனுக்கு பயந்ததற்கு காரணம் அவன் ஒரு போலீஸ் காரன். இரண்டாவது, பிரச்சனையை அவன் கொண்டு செல்லும் விதம். எல்லோரிடமும், அவனுக்கு நிரஞ்சனியோடு நீண்ட நாள் பழக்கம் என்பது போல் ஒரு மாயையை அவன் உண்டாக்குவதை நிரஞ்சனி புரிந்து கொண்டாள். இந்த நிலையில் அவனை எப்படி கையாள்வது என்று புரியாமல் திகைத்தாள்.
அவன் நிரஞ்சனியிடம் பேசிய இடம் கார்த்திகா மருத்துவமனையில் Dr.புகழேந்தியின் அறைக்கு எதிரில். புகழேந்தியை பற்றி நிரஞ்சனிக்கு சிறிதும் தெரிந்திருக்கவில்லை. எனவே அவளுக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை. அவன் பேசியது மட்டும் தான் அவளுக்கு பொருட்டாக இருந்தது.
ஆனால் மருத்துவமனைக்கு வந்துவிட்டு தன்னுடைய நோயாளிகளை அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று பார்த்துவிட்டு (ரௌண்ட்ஸ்) தன்னுடைய அறைக்கு வந்த புகழ், பிரசன்னா பேசியதையும் அதற்கு நிரஞ்சனி பதில் சொல்லாமல் திகைத்து நிற்பதையும் தெளிவாக பார்த்தான்.
அவனுக்கு அந்த போலீஸ்காரன் நிரஞ்சனியிடம் பேசுவது பிடிக்கவில்லை. அவர்களை நெருங்கியவன் “என்ன இங்க பிரச்சனை…”என்று அதட்டலாக கேட்டான்.
திடீரென்று ஒரு டாக்டரை அங்கு பார்த்ததும் நிரஞ்சனி பயந்துவிட்டாள். ஏதாவது திட்டிவிடுவாரோ என்று அவள் பயந்து கொண்டிருக்கும் போதே…
“சொந்த விஷயம்…” என்று பிரசன்னா பதில் சொன்னான்.
புகழேந்திக்கு அதை கேட்டதும் யாரோ நெருப்பை போட்டு அவனை பற்றவைத்தது போல் எரிந்தது. அந்த எரிச்சலை மறைக்காமல் “சொந்த விஷயமெல்லாம் ஹாஸ்ப்பிட்டளுக்கு வெளிய பேசிக்கோங்க… இங்க அனாவசியமா நிக்கக் கூடாது… ” என்று அவனிடம் எரிந்து விழுந்துவிட்டு…
அவளிடம் திரும்பி “பேர் என்ன…?” என்றான் எரிச்சலாக.
“நிரஞ்சனி சார்…” என்று மெதுவாக சொன்னாள்.
அந்த குரலில் இருந்த நடுக்கமும் மென்மையும் அவனை என்னவோ செய்தது…. ஆனாலும் ஏதோ ஒரு கோவம் உந்த “டியூட்டி டைம்-ல இங்க என்ன வெட்டி அரட்டை… ம்ம்… உங்க ப்லேஸ்க்கு போங்க…” என்று குரலை உயர்த்தாமல் அழுத்தமாக சொல்ல அவள் ‘விட்டால் போதும்’ என்று ஓடியேவிட்டாள்.
பிரசன்னாவும் புகழேந்தியை முறைத்துக்கொண்டே வெளியேறிவிட்டான்.
புகழேந்திக்கு தான் அந்த சம்பவத்திற்கு பின் எதுவுமே ஓடவில்லை. ‘முதல் முதலில் அவளிடம் இந்த மாதிரி ஒரு மனநிலையில் தானா பேசவேண்டும்…’ என்று அந்த சூழ்நிலையை மனதில் நினைத்து அலுத்துக் கொண்டான்.
அவனுக்கு ஒரு தெளிவு தேவைப்பட்டது. அந்த போலீஸ்காரன் பேசியதை பார்த்தால் நிரஞ்சனியும் அவனும் ஒருவரை ஒருவர் விரும்பியதாகவும்… இப்போது அவர்களுக்குள் ஏதோ ஊடல் மாதிரியும் தோன்றுகிறது. ஆனால் நிரஞ்சனியின் முகம் அவனுக்கு பயந்து நடுங்குவது போல் இருக்கிறது. இதில் எது உண்மையாக இருக்கும்…?
அதை தெரிந்துக்கொள்ள புகழ் நிரஞ்சனியை கவனமாக கண்காணிக்க ஆரம்பித்தான்.
இன்று
அதிகாலை பொழுது. கீழ் வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. பொழுது முழுதாக விடிதிருக்கவில்லை. பறவைகள் இறை தேடி கூட்டை விட்டு பலவித ஒலிகளை எழுப்பிக் கொண்டே சிறகடித்தன. பால்காரன் சாலையில் “கிளிங் கிளின்” என சைக்கிள் மணியை அடித்துக் கொண்டே சென்றான். அல்லி வாசலில் சாணம் தெளித்து… கூட்டி… மாக்கோலம் போட்டுக் கொண்டிருந்தார். இராஜசேகரின் புல்லெட் வாசலில் வந்து நின்றது. நிமிர்ந்து பார்த்த அல்லி
“வாங்க… மாப்ள. என்ன இந்நேரத்துக்கு…?” என்று இழுத்தார்.
“ஒன்னும் இல்ல அத்த… அவ என்ன பண்றா? நல்ல இருக்காளா…?”
“யாரு ரஞ்சியயா கேக்குறீங்க…?”
“ஆமா… நேத்து ஏதோ ஒரு வெறியில அவ மேல கை வச்சுட்டேன்… நல்லா அடி பட்டிருக்கு(ம்)… ஒடம்பு ஏதும் முடியாம போய்ட்டோன்னு பாத்துட்டு போகலாமுன்னு வந்தேன்…”
“ஆமா… ராத்திரி கொஞ்ச(ம்) காச்சலடிச்சுது… இப்ப தேவலா (ம்)… உள்ள வாங்க… காப்பி போடறேன்… குடிக்கலா(ம்)…”
“இல்ல இல்ல… அவ எப்புடி இருக்கான்னு கேக்கதா வந்தே(ன்). வயலுக்கு ஆளு வர சொல்லியிருந்தே(ன்). போயி பாக்கணும்…. நேரமாச்சு…. நா பத்து மணி போல திரும்ப வர்றேன்… பேசிக்கலா(ம்)…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
காலை பத்து மணிக்கு அல்லியின் வீட்டு கூடத்தில் நிரஞ்சனி, தாமரை, அரசு, அல்லி, வேணு, சிவரஞ்சனி, நீரஜா, இராஜசேகர் அனைவரும் ஆஜராகிவிட்டார்கள்.
“என்ன மாமா… ரஞ்சிக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிட்டீங்க போல…” என்று இராஜசேகர் நிரஞ்சனியின் தந்தை அரசுவை பார்த்து கேட்டான்.
“அதெல்லா(ம்) இல்ல மாப்ள…”
“என்ன இல்ல… கோபாலன் சித்தப்பா அந்த பயல தஞ்சாவூருக்கு போயி பாத்துருக்காரு… நீங்க சொல்லாமலா அவரு போயிருப்பாரு?”
“ஆமா மாப்ள… பையன பாத்துட்டு வர சொன்னோம்… ஆனா நீங்க இல்லாம எப்புடி கல்யாணத்த முடிவு பண்ணுவோ(ம்)…” என்று அவனை சமாதானம் செய்ய முயன்றார்.
“எதுக்கு அவர போயி பாக்க சொன்னீங்க…? பெரிய டாக்டர்ன்னா கண்ண மூடிகிட்டு பொண்ண கொடுத்துருவியலோ…! ”
அரசு ‘இவனுகிட்ட பேசுறதுக்கு எங்கையாவது போயி முட்டிக்கலா(ம்)…’ என்று மனதிற்குள் நினைத்தாலும் ‘பெண் கொடுத்துவிட்டோம்… கொஞ்சம் பொறுத்துத்தான் போக வேண்டும்’ என்று மனதை தேற்றிக்கொண்டு “அதெல்லாம் இல்ல மாப்ள…” என்று சமாளித்தார்.
வேணு தொடர்ந்தார்… “மாப்ள… நீங்க ஏ இவ்வளவு ரோசப்பட்டுக்குறீங்க….? நல்லா படிச்ச மாப்ள வசதியானவரு… அவருக்கு பொண்ணு கொடுக்கிறதுல என்ன தப்பு…?” தெளிவாக கேட்டார்.
“சின்ன மாமா…. அவன் நம்ப சாதி இல்ல…” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் இராஜசேகர். அவ்வளவுதான்… அங்கு இருந்த அனைவரும் அந்தர் பல்ட்டி அடித்துவிட்டார்கள்.
“அடக்கடவுளே… நம்ப சாதி இல்லையா… என்னக்கா நீ… அவ(ன்) எவ்வளவு பெரியா நாடாளுற ராசாவா இருந்தாலு(ம்) நமெக்கென்ன கரும(ம்)… வேத்து சாதிக்கார பயலுக்கு பொண்ணு கொடுக்கவா நீ இவள பெத்து வளத்து வச்சிருக்க…?” அல்லி பொரிந்தாள்.
“அட கருமமே… இத கேக்காம வந்திருக்கார கோபாலண்ண(ன்)…. ஐயேய்ய… ஐயேய்ய… சாதி விட்டு சாதி சம்மந்தம் பன்னிருப்போமே…! எல்லா இந்த குட்டியோட வேல தா(ன்) அல்லி ” என்று தாமரை அங்காலைத்துக் கொண்டார்.
“எல்லாத்தையும் சொன்னவ சாதிய மட்டும் சொல்லல பாத்தியா….? இவள… ” என்று கையை ஓங்கிக்கொண்டு அரசு நிரஞ்சனியின் மீது பாய்ந்தார். அதற்குள் பெண்கள் அவளை வேறு ஒரு அறைக்குள் தள்ளி கதவை மூடிவிட்டார்கள்.
இராஜசேகர் தெளிவாக சொன்னான்…”மாமா… நீங்க உங்க பொண்ண யாருக்கு வேணுன்னாலும் கொடுங்க… அது உங்க விஷயம்… ஆனா சாதி விட்டு சாதி பொண்ணு கொடுத்திங்கன்னா அதுக்கப்பற(ம்) உங்க மூத்த பொண்ணு என்னோட பொண்டாட்டியா இருக்க மாட்டா….” என்ற சொன்னதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்ச்யில் உறைந்து விட்டார்கள்.
பொதுவாக கிராமங்களில் ஒரு பெண் கணவனோடு வாழாமல் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டால், அவள் மீது தவறு இல்லை என்றாலும் அவளுக்கும் அவளுடைய பெற்றோருக்கும் அது மிகப்பெரிய அவமானம்….
அவன் பேசிமுடித்த அடுத்த கணமே நிரஞ்சனியின் தாய் தாமரை…. “இந்த கல்யாண(ம்) நடக்காது மாப்ள…” என்றார். இதை அடுத்த அறையிலிருந்து கேட்ட நிரஞ்சனிக்கு நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் இருந்தது.
“அப்ப சரி… நீங்க எனக்கு வாக்கு கொடுத்துருக்கீங்க… இனிமே அவ வேலைக்கு போக வேண்டாம்… அவகிட்ட இருக்க செல்போன் எனக்கு வேணும்… சாயந்தரமா வர்றேன் வாங்கி வைங்க… அவளுக்கு நா மாப்ள பாக்குறேன். அவ கல்யாணத்துக்கு நா பொறுப்பு….” என்று பொதுவாக சொல்லிவிட்டு…
“சின்ன மாமா… அவளுக்கு கல்யாணம் முடிவாவுற வரைக்கும் அவ இங்கயே இருக்கட்டும் ” என்று நிரஞ்சனியின் சித்தப்பாவிடம் சொல்லிவிட்டு போய்விட்டான்.
அவன் வெளியே சென்றதும் ஆண்கள் இருவரும் அவரவர் வேலைக்கு சென்றுவிட, நிரஞ்சனி அவள் இருந்த அறையிலிருந்து வெளியே வந்து சிவரஞ்சனிக்கு அருகில் அமர்ந்தாள். அவள் முகத்தை பார்த்ததும் தாமரை தன் ஆத்திரத்தை அவளிடம் கொட்ட ஆரம்பித்துவிட்டார்.
“அடி பாவி… சண்டாளி… குடிய கெடுக்க வந்த கூனி…. வேத்து சாதிக்கார பயலையாடி புடுச்ச…? அன்னைக்கு அவ்வளவு சொல்லி என்ன ஏமாத்துனியேடி…! இவ(ன்) வேத்து சாதிக்காரன்னு சொன்னியாடி நீ…? ” என்று தாமரை மகளை கொத்தி பிடுங்கினார்.
அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“உக்காந்துருக்கா பாரு…! எங்கண்ணு முன்னால உக்காராதடி… உன்ன பாத்தாலே பச்சனாவியா(விஷம்) இருக்கு… போயி தொல… ”
அவள் அப்போதும் அசையாமல் அமர்ந்திருந்தாள்… யாரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள். அனைவருக்குமே நிரஞ்சனியின் மீது கோவம் இருந்தது. அதனால் தாமரையை யாரும் தடுக்கவில்லை.
“என்னடி மொறச்சுகிட்டு உக்காந்துருக்க…? ஒனக்கு போனு (போன்) ஒரு கேடா…? எங்கடி வச்சிருக்க அத…? அத வச்சுகிட்டு தானே அவனோட கொஞ்சிகிட்டு இருப்ப…!? நா ஒரு ஏமாந்த சிறுக்கி.. நீ பேசுறத பாத்தாலு(ம்) நம்ப மவளும் போனெல்லாம் வச்சு பேசுராலேன்னு பெருமையா நெனச்சுக்குவே(ன்)… ஒ(ன்) வண்டவாலத்த வேம்பங்குடியா (ன் ) கரயேத்திபுட்டா(ன்)….”
“எங்கடி வச்சுருக்க அந்த போன…? கொண்டாடி அத… கொண்டாடிங்கிரன்ல…” என்று நிரஞ்சனியிடம் பாய்ந்து வர அப்போதும் அவள் அழுத்தமாக இருக்க, தாமரைக்கு வெறி வந்து அருகில் கிடந்த துடைப்பத்தை எடுத்து ‘சக்கு சக்கென்று’ நிரஞ்சனியை விளாசி தள்ளிவிட்டார்.
நிரஞ்சனி கண்ணிலிருந்து சொட்டு கண்ணீர் வரவில்லை. அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள். அவள் அப்படி இறுகி அமர்ந்திருப்பது தாமரைக்கு இன்னும் வெறியானது. தென்னங்கீற்று துடைப்பம் சுக்கல் சுக்கலாக சிதறியது. நிரஞ்சனியின் கையில் தோல் கிழிந்து இரத்தம் வழிந்தது.
தாமரை வாயால் பேசும் போதும் அடிக்கும் போதும் மற்றவர்கள் (அல்லி, சிவரஞ்சனி, நீரஜா) தடுக்கவில்லை. பிள்ளையை கண்டிக்க வேண்டும். அது சரிதான் என்று அனைவரும் அமைதியாக இருந்தார்கள். நிரஞ்சனியின் கையில் இரத்தத்தை பார்த்ததும் அனைவரும் பதறினார்கள். தாமரையை பிடித்து இழுத்தார்கள். நிரஞ்சனியை சிவரஞ்சனி இழுத்துக்கொண்டு அவளுடைய அறைக்கு போனாள்.
ஆனால் நிரஞ்சனி சிவரஞ்சனியின் கையை உதறிவிட்டு உள்ளே சென்று அவளுடைய கைபேசியை எடுத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே புகழேந்தியின் அண்ணிக்கு தொலைபேசியில் அழைத்தாள்.
புகழேந்தி இப்போது அவனுடைய அண்ணன் வீட்டில் தான் இருக்கிறான். அவனுடைய சொந்த ஊர் சேலம். பெற்றோர்கள் அங்கு தான் இருக்கிறார்கள். இவன் அண்ணனுடன் வசிக்கிறான். அண்ணனும் ஒரு மருத்துவர். அவர் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்-ல் வேலை செய்கிறார்.
“அக்கா நா நிரஞ்சனி பேசுறேன்கா…”
“சொல்லு ஜெனி… இன்னிக்கு ஹாஸ்பிட்டல் போகலையா…?”
“அக்கா…” என்று ஆரம்பிக்கும் போதே தாமரை பாய்ந்து வந்து அவளுடைய முடியை கொத்தாக பிடித்துக்கொண்டு முதுகிலும் கையிலும் அடித்தார். கைபேசியை பிடுங்க முயற்சி செய்தார். ஆனால் நிரஞ்சனி எதற்கும் மசியவில்லை.
மற்றவர்கள் தாமரையை தான் பிடித்து நிரஞ்சனியிடமிருந்து பிரித்தார்கள்.
நிரஞ்சனி தன்னை திடப்படுத்திக் கொண்டு அனைவருக்கும் முன்பே பேசினாள்.
“அக்கா.. இங்க பிரச்சனை நடக்குது… என்னை எல்லாரும் அடிச்சு நொறுக்குறாங்க… எனக்கு வேற மாப்பிள்ளை பார்க்க போறாங்களாம். ”
“ஐயோ.. என்ன ஜெனி சொல்ற… தம்பிக்கு என்ன கொறச்சல்… இது அநியாயம்… நேத்து வந்து உங்க மாமா சம்மந்தம் பேசிட்டு இன்னிக்கு இப்படி சொல்றது உங்களுக்கே நல்லா இருக்கா…?” என்று பொரியவும் நிரஞ்சனிக்கு கண்களில் குளம் கட்டியது. சிரமப்பட்டு அழுகையை விழுங்கிக் கொண்டாள். ‘என்ன நடந்தாலும் சரி… அழுகவே கூடாது’ என்று பிடிவாதமாக நினைத்துக் கொண்டு தொடர்ந்தாள்.
“அக்கா… நா உயிரோட இருக்குற வரைக்கும் என்னை வேற எவனுக்கும் கட்டி வைக்க முடியாது… நா இப்ப உங்களுக்கு கூப்பிட்டது உங்களுக்கு விபரம் சொல்லதான். நா இனிமே வேலைக்கு வர முடியாது. இப்ப உங்களுகிட்ட பேசி முடிச்சதுமே என்னோட போனையும் பிடுங்கிடுவாங்க… இனி நா உங்களை தொடர்புகொள்ளவே முடியாது… ஆனா பயப்படாதிங்க புகழ்க்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்… புகழ்கிட்ட நா சொன்னேன்னு சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு போனை அனைத்து தாமரையிடம் தூக்கி எறிந்தாள்.
நிரஞ்சனியின் செயலில் வெறியான தாமரை, அவளை கை ஓயும் வரை அடித்துவிட்டு…
“எப்புடி…டி அவன கட்டிக்குவ… எப்புடி கட்டிக்குவ…?” என்று ஆங்காரமாக கேட்டாள்.
“ஏன் முடியாது…?” நிரஞ்சனியும் சளைக்காமல் பதில் கேள்வி கேட்டாள்.
“வேம்பங்குடியான அவ்வளவு லேசா நெனச்சுட்டியா…? ஒன்ன தல கீழ கட்டி தொங்கவுட்டு தோல உரிச்சுப்புடுவான்டி…”
தாமரை இராஜசேகரைத் தான் குறிப்பிட்டார். அதை புரிந்து கொண்ட நிரஞ்சனி..
“அவன் யாரு என் மேல கை வைக்க…? பொம்பள புள்ள மேல கைவைக்கிறா(ன்)… வெக்கங் கெட்டவன்…” என்றாள்.
அடுத்த நொடி நிரஞ்சனியின் கன்னத்தில் ‘பட்’ என்று அறை விழுந்தது. தாமரையின் கை விரல்கள் நிரஞ்சனியின் கன்னத்தில் பதிந்திருக்க, உதட்டில் பல் பட்டு ரெத்தம் வடிந்தது.
அதை நிரஞ்சனி தாமரை இருவருமே அலட்சியம் செய்து தங்களுடைய வாதத்திலேயே குறியாக இருந்தார்கள்.
“அவரு எம் மருமவன்டி… எனக்கு ஆம்புள புள்ள இல்லாதத்துக்கு அவரு தான் எம் மவன்…. உன்ன அடிக்கவும் கொள்ளவும் அவருக்கு உரிமை இருக்கு தெரிஞ்சுக்க…”
“உனக்கு ஆண் பிள்ளை இல்லன்னா, அவன் என்னை அடிப்பானா…? உனக்கு ஆண் பிள்ளையா நான் பிறந்திருந்தேன்னா, அவன தல கீழ கட்டி… நான் தொங்க விட்டிருப்பேன்… அத நீ தெரிஞ்சுக்க…” நிமிர்வாக சொன்னாள்.
அதை சொல்லிவிட்டு தாமரையிடம் பலமாக வாங்கிக் கொண்டாலும் அவள் அழவும் இல்லை அவளுடைய உறுதியிலிருந்து தளரவும் இல்லை.
4 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
PAPPU PAPPU PAPPU PAPPU says:
nice ma
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
ரஞ்சனியின் மனவுறுதி புகழுடன் ரஞ்சனியை சேர்த்துவைக்குமா.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Dhivya Bharathi says:
Akka super chance illa 😍😍😍😍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Chriswin Magi says:
Wowww semma super ji niranjani osum ooruku naal per ipdi iruntha pothum ji lovely awaiting for next uds