மனதில் தீ-5
4012
3
அத்தியாயம் – 5
அன்று
மாலை ஏழு மணிக்கு அந்த பஸ் நிறுத்தத்தில் நிரஞ்சனி வெளிறிய முகத்தோடு நின்று கொண்டிருதாள். அவளுக்கு முன் பிரசன்னா நின்று அவளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான். இதை தன்னுடைய காரில் அமர்ந்தபடி புகழேந்தி தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
இந்த ஒரு வாரமாக அவன் நிரஞ்சனியை கண்காணித்துப் பார்த்ததில் நிரஞ்சனியின் கண்கள் துளியளவு கூட பிரசன்னாவை பார்க்கும் போது காதலை பிரதிபலிக்கவில்லை. மாறாக ஒரு பயத்தை தான் காட்டியது. இன்று அது கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது.
பிரசன்னா நிரஞ்சனியின் கையை பிடிக்க முயன்றான். புகழ் தன் காரை ஸ்டார்ட் செய்துவிட்டான். நொடியில் அவர்களை நெருங்கியவன், சடன் பிரேக் அடித்து காரை நிறுத்திவிட்டு, நிரஞ்சனியை பார்த்து
“ஜெனி… பஸ்சுக்கு வெயிட் பண்றியா…? வாயேன்… உன்ன நான் பஸ் ஸ்டாண்ட்ல டிராப் பண்றேன்… கூட்டம் இல்லாமல் இருக்கும்…” என்றான் எதேச்சையாக பார்த்து கேட்பதுபோல். சந்து கேப்பில் அவன் மனதிற்குள் உருபோட்டுக் கொண்டிருக்கும் பெயரையே சொல்லி அவளை அழைத்தான்.
அதையெல்லாம் அவள் கவனிக்கவில்லை. தெரிந்த டாக்டர் லிப்ட் கொடுக்கிறார். அருகில் நின்று கொண்டிருக்கும் பிசாசிடமிருந்து தப்பிக்க நினைத்து சட்டென காரில் நுழைந்து கதவை பட்டென மூடினாள் .
அது பிரசன்னாவிற்கு பெரிய தலையிறக்கமாக போய்விட்டது. நிரஞ்சனியை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான்.
*******************
“உனக்கு ஏன் இவ்வளவு வேர்க்குது ஜெனி… ஏசியை அதிகமாக்கவா…?” என்று நிரஞ்சனியை பார்த்துக் கேட்டான் புகழ்.
அப்போதுதான் அவள் அதை கவனித்தாள். அவன் அவளை ‘ஜெனி’ என்று அழைத்தான்.
“இல்ல சார்… வேண்டாம்… என் பேர் நிரஞ்சனி சார்…” என்று பவ்யமாக சொன்னாள்.
“ஹோ… அன்னிக்கு நிரஞ்சனின்னு சொன்னல்ல…! எனக்கு ‘ஜெனி’யே மனசுல நின்னிடுச்சு…. உன்ன நான் அப்படியே கூப்பிடலாமா… அதுதான் எனக்கு ஈஸி…” என்றான்.
‘நிரஞ்சனி’ என்ற அவளுடைய பெயரை அவன் மறந்திருப்பானா….?! நிரஞ்சனியின் செல்ல சுருக்கம் ‘ஜெனி’ என்பதை அவளிடம் சொல்லாமல் எவ்வளவு சாமர்த்தியமாக சமாளிக்கிறான்…!
நிரஞ்சனி எதுவும் சொல்லாமல் ‘சரி’ என்பதுபோல் தலையாட்டினாள்.
“யார் அந்த பையன்… அன்னிக்கு கூட ஹாஸ்பிட்டல்ல ஏதோ உன்கிட்ட பிரச்சனை பண்ணிக்கிட்டு இருந்தார்… இன்னிக்கும்…” என்று மேலே சொல்லாமல் இழுத்தான்.
“எனக்கே தெரியல சார்… முதல்ல பஸ்ல வரும்போது பார்த்திருக்கேன். அப்புறம் அவரா என்ன தெரிஞ்ச மாதிரி பேசினார். இப்போ ஏதேதோ உளறிகிட்டு தொல்லை பண்ணிக்கிட்டு இருக்கார். ”
“என்ன பத்தின விபரம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கார். எங்க படிச்சேன், அப்பா அம்மா பேர், என்னை வீட்டில் கூப்பிடும் பேர், எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கார். அதெல்லாம் இவருக்கு எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல…” என்று இதுவரை யாரிடமும் சொல்லாமல் தனக்குள் வைத்திருந்த விபரங்களை அவனிடம் கோடிட்டு காட்டினாள்.
“உங்க வீட்டுக்கு இவனை பற்றி தெரியுமா…?”
“தெரியாது சார்…”
“ஏன் சொல்லல…?”
“ஆரம்பத்துல ‘சின்ன விஷயம்… இத எதுக்கு வீட்டுக்கு சொல்லி நாமே பெருசாக்கணும்’ என்று நினைத்து சொல்லாமல் விட்டுட்டேன். இப்போ சொன்னா பெரிய பிரச்சனையாகிவிடும். எங்க சொந்தக்காரங்க எல்லாம் அடி தடின்னு இறங்கிவிடுவாங்க… பயமா இருக்கு…” என்றாள்.
“காலையில ஹாஸ்பிட்டல் வரும் போதும் இப்படிதான் தொல்லை செய்றானா…?”
“இல்ல சாய்ந்திரம் தான்… வீட்டுக்கு போகும் போது பஸ் நிறுத்தத்துக்கு வந்து ஏதாவது பேசிகிட்டே இருக்கான்…”
“சரி… என்னோட டைம் கூட இதுதான்… இனி நீ என்னோட கார்ல சாய்ந்தரம் வந்துடு… உன்னை நான் பஸ் ஸ்டாண்ட்ல டிராப் பண்ணிடுறேன்.”
அவன் அதை சொன்னதும் நிரஞ்சனிக்கு ஆச்சர்யம்.
‘ஏதோ வழியில பார்த்த ஹாஸ்பிட்டல் ஸ்டாப்க்கு ஒரு டாக்டர் லிப்ட் கொடுத்தது ஓகே… ஆனால் தினமும் அதை செய்றேன்னு சொன்னா அதை எப்படி எடுத்துக்கிறது…?’
நிரஞ்சனியின் முகம் சட்டென மாறியது. அவள் கண்களுக்கு இப்போது புகழேந்தியும் தவறாக தெரிந்தான்.
“இல்ல சார்… நானே பார்த்துக்கிறேன்… உங்களுக்கு எதுக்கு சிரமம்…” என்று மறுத்துவிட்டாள்.
புகழேந்திக்கும் கொஞ்சம் அவசரப் பட்டுவிட்டோம் என்று புரிந்தது. அதனால் அவளை கட்டாயப்படுத்தாமல் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டுவிட்டு தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பஸ்ஸில் ஏறி பஸ் கிளம்பியதும் அவனும் காரை கிளப்பிக் கொண்டு புறப்பட்டான்.
இன்று
நிரஞ்சனி அவளுடைய சித்தியின் வீட்டில் தங்கியிருந்தாள். அவளிடமிருந்து கைபேசி பறிக்கப்பட்டு விட்டதால் அவளால் புகழேந்திக்கு தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் அவள் மனம் முழுவதும் அவனிடமே இருந்தது. அவள் ஒவ்வொரு முறை மூச்சு காற்றை சுவாசிக்கும் போதும் ‘புகழ்… புகழ்…’ என்று சொல்லிக் கொண்டே தான் சுவாசித்தாள். அவன் அவளுடைய உயிரோடு கலந்துவிட்டான் என்பதை அவளே அப்போதுதான் உணர்ந்தாள்.
அவள் இருப்பது கிராமத்தில். என்னதான் சித்தியின் வீடாக இருந்தாலும் அது அவளுடைய வீடு இல்லை. அதுவும் அவர்களை பொறுத்தவரை ஏதோ செய்யக் கூடாத ஒரு தவறை செய்துவிட்ட ஒரு குற்றவாளி அவள். அந்த நிலையில் சித்தியும் சிவரஞ்சனியும் வீட்டு வேலைகளை செய்யும் போது, அவள் மட்டும் சோம்பியிருந்தால் வித்தியாசமாக தெரியும் என்பதால் முடிந்த அளவு தன்னை தேற்றிக்கொண்டு சித்திக்கு உதவிகளை செய்துகொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள். அதுவே அவளுக்கு பழகிவிட்டது. ஆரம்பத்தில் சித்திக்கு உதவிகளை செய்து கொண்டிருந்தவள் பின் அனைத்து வேலைகளையும் தானே செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
மற்றவர்கள் தடுத்தாலும் இழுத்துப் போட்டுக்கொண்டு வேலைகளை செய்வாள். அந்த வேளைகளில் அவளால் அவளுடைய கவலைகளை மறக்க முடிந்தது தான் அதற்கு முக்கிய காரணம். பார்பவர்களுக்கு அவள் பழயபடி தெளிந்து விட்டாள் என்று தோன்றியது. ஆனால் அவள் உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருந்தது யாருக்கும் தெரியவில்லை.
அந்த நிலையில் இராஜசேகர் ஒரு நாள் வந்தான்.
“மாமா… இனி ரஞ்சிக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்… ஓரளவுக்கு அவ இப்போ ‘நார்மலா’ ஆயிட்டான்னு நினைக்கிறேன்…” என்றான் வேணுவிடம்.
“ஆமா மாப்ள… அதுக்கும் வீட்டுக்குள்ளயே இருக்கிறது கஷ்டமா இருக்கும்… சூட்டோட சூடா இந்த விஷயத்த முடிச்சிறனும்… அந்த பையன் ஏதாவது பிரச்னைக்கு வந்தாலும் வந்துடுவான்….” என்று வேணு தெரியாத்தனமாக சொல்லிவிட்டார். அவ்வளவுதான் இராஜசேகர் குதிக்க ஆரம்பித்துவிட்டான்.
“அவன் மட்டும் இங்க வரட்டும்… வெட்டி போதைச்சுறேன்… அவனுக்கு என் கையாலதான் சாவுன்னு எழுதி வச்சிருந்தா அதை அந்த ஆண்டவனால கூட தடுக்க முடியாது… ” என்று ‘குய்யோ முயோ’ என்று கத்த ஆரம்பித்துவிட்டான். சின்ன மாமனார் அவனை கெஞ்சாத குறையாக கேட்டு மலையிறக்கினார்.
அதற்கு பிறகு தான் அவன் விஷயத்துக்கு வந்தான்.
“மாமா… அவன் டாக்டர் வேல பாக்குறான். நம்ப ரஞ்சியும் ஒன்னுங்கொரஞ்சவ இல்ல… நீங்க அவளுக்கு ஒரு டாக்டர் மாப்பிள்ளையே பாருங்க… அப்படி அமையலைன்னா இஞ்சினியர் மாப்பிள்ளையா பாருங்க… செலவு எத்தன லட்சம் ஆனாலும் நான் செய்யிறேன்… அவ எனக்கு கட்டுப்பட்டு இந்த வீட்டோட இருக்கா… அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க வேண்டியது என்னோட கடமை…” என்று நெகிழ்ச்சியாக அவன் பேசிய விதத்தில் அங்கிருந்த பெண்கள் அனைவருக்கும் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது…. நிரஞ்சனியை தவிர.
அவன் அந்த பக்கம் சென்றதும் நிரஞ்சனி சொல்லிவிட்டாள். “சித்தி… எனக்கு கல்யாணம் பண்ணனும் என்று நினைக்காதீங்க… அது உங்களுக்கு தான் கடைசில அவமானமா முடியும்…” என்றாள் அழுத்தமாக.
அவளுடைய குரலில் இருந்த அழுத்தம் அவளை இந்த கல்யாண முயற்சிக்கு வளைக்கவே முடியாது என்று தெளிவாக சொன்னது.
***********************
“அண்ணி அண்ணன் கிளம்பிட்டாரா…?”
“அவர் காலையிலேயே கிளம்பிட்டார் புகழ்… நீ வா….. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…”
“இல்லைண்ணி… எனக்கு வேண்டாம்… லேட் ஆச்சு… நா கிளம்பறேன்…”
“என்ன புகழ் நீ… சின்ன புள்ள மாதிரி… எத்தன நாள் இப்படி அறையும் குறையுமா சாப்பிடுவ? அவ தான் அவளோட நிலமைய நமக்கு தெரியப்படுத்தி விட்டாளே. கொஞ்சம் பொறுமையா இருப்பா…”
“என்ன தெரியப்படுத்தினா…? அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறத உங்களுக்கு சொன்னா…” என்றான் எரிச்சலோடு.
“புகழ்… அந்த பொண்ண நீ எந்த காரணத்துக்காகவும் தப்பா பேசாத. அவ எங்கிட்ட பேசும் போதே யாரோ அவள அடிச்சாங்க. எனக்கு நல்லா கேட்டுச்சு. அந்த அடியை வாங்கிக்கொண்டே எனக்கு தகவல் சொன்னா. எந்த காரணத்துக்காகவும் அவ உன்னை விட்டுக் கொடுக்கமாட்டா…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணுக்கு கண் கலங்கியது.
புகழேந்திக்கு அவனுடைய அண்ணியின் ‘எங்கிட்ட பேசும் போதே யாரோ அவள அடிச்சாங்க… அடியை வாங்கிக்கொண்டே எனக்கு தகவல் சொன்னா… ‘ என்ற வார்த்தைகள் உயிர்வரை சென்று வலித்தது. அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
‘அவள் எங்கேயோ அவளுடைய சித்தியின் வீட்டில் இருக்கிறாளாம்… அந்த வீடு எங்கே இருக்கிறது. தெரிந்தாலும் போய் பேசிப் பார்க்கலாம்…’ என்று ஏதேதோ சிந்தனைகள் ஓட… சிந்தனைகளுடே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.
நாளுக்கு நாள் புகழ் பைத்தியம் பிடித்தவனாக மாறிக்கொண்டிருந்தான். அவனால் அவனுடைய தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரே சிந்தனை… ‘ஒரு முறை நிரஞ்சனியை பார்க்க வேண்டும்’ என்ற சிந்தனை மட்டும் தான் அவனுடைய மனதில் முழுவதுமாக ஓடிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் நிரஞ்சனியே அவனுக்கு கைபேசியில் அழைத்தாள்.
************************
“ரஞ்சி உன்னோட போன் கொஞ்சம் தர முடியுமா…?” நிரஞ்சனி சிவரஞ்சனியிடம் கேட்டாள்.
“ஐயோ… ரஞ்சி.. எதுக்குடி…? அந்த பையனுக்கு பேசப் போறியா…? மாமாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் யோசிச்சியா…? உனக்கு மட்டும் இல்லடி… நீ ஏதாவது புது பிரச்சனைய கிளப்பினா அது அந்த பையனுக்கும் தான் ஆபத்து. பேசாம டிவி பாரு. இல்லன்னா வேற ஏதாவது பண்ணு. மனச போட்டு குழப்பிக்காத.”
“இல்ல ரஞ்சி… நா அவருக்கு போன் பண்ணனும். இல்லன்னா… புகழ் இங்க வந்துடுவார். அது அவரோட உயிருக்கே ஆபத்துன்னு உனக்கே தெரியும். அவரை இங்க வரவிடாம தடுக்கணும்.”
“அவர் இங்க வருவார்ன்னு உனக்கு எப்படி தெரியும்…?”
“அவரை பத்தி என்னைவிட யாருக்கும் அதிகமா தெரியாதுடி. நா இல்லாம இப்போ பைத்தியம் பிடிச்ச மாதிரி இருப்பார்டி ரஞ்சி… என்ன காதலிச்ச பாவத்துக்காக அவர் என்னவெல்லாம் கஷ்டப்படுறார்…’ நிரஞ்சனிக்கு அழுகை வந்துவிடும் போல ஆனது. உடனே பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
சிவரஞ்சனிக்கு பாவமாக ஆகிவிட்டது… ‘ஒரு காதலை செய்துவிட்டு இவ என்னவெல்லாம் அனுபவிக்கிறா…? இந்த மாமா மட்டும் சம்மதிச்சா எல்லாரும் சரின்னு சொல்லிடுவாங்க… அவர் மட்டும் ஏன்தான் இப்படி இருக்காரோ… ச்ச… என்ன ஜாதி… ஜாதி…’ என்று அவள் மனம் தங்கைக்காக வருத்தப்பட்டாலும் நிரஞ்சனியிடம் காட்டிக் கொள்ளவில்லை.
“சரி ரஞ்சி… அவர நீ வர வேண்டாம் என்று சொல்றதுக்காகன்னு சொல்ற… பேசு… ஆனா இதுவே கடைசியா இருக்கட்டும்…” என்று சொல்லி
நிரஞ்சனியிடம் தன்னுடைய கைபேசியை கொடுத்துவிட்டு அவள் பேசி முடிக்கும் வரை யாரும் வராமல் பார்த்துக் கொண்டாள்.
அவள் பேசிய நேரம் புகழ் ஓய்வெடுக்கும் நேரம். அந்த நேரத்தை கணக்கிட்டுத்தான் அழைத்தாள்.
******************
அந்த பக்கம் கைபேசியை எடுத்து காதில் வைத்தவன் நிரஞ்சனியின் குரலை கேட்டு தடுமாறிவிட்டான்.
“ஜெனி… ஜெனி… ஜெ… ஜெனிமா… எப்படி இருக்க ஜெனி… ஜெனி… உன்ன… உன்ன பார்க்கணும்… ஜெனி…” என்று பத்து நாட்களுக்கு பின் அவளுடைய குரலை கேட்டவன் என்ன பேசுவது என்று புரியாமல் தவித்துவிட்டான்.
அவன் தவிப்பை பார்த்து நிரஞ்சனி நெகிழ்ந்து விட்டாள். ‘இவனிடமிருந்து என்னை பிரித்தால் இவன் என்ன ஆவான்…’ என்று அவனுக்காக உருகினாள். ஆனாலும்,
“புகழ்… நா சொல்றத கவனமா கேளுங்க… ” என்றாள் நிரஞ்சனி குரலில் அழுத்தத்தை கொண்டு வந்து.
அவளுடைய குரல் மாற்றத்தை புரிந்து கொண்டு “சொல்லு….” என்றான்.
“என்னையும்… உங்களையும் யாராலையும் பிரிக்க முடியாது. நான் அதுக்கு விட மாட்டேன். ஆனா நீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கணும். எந்த காரணத்தை கொண்டும் என்னை தேடி இங்க வரக் கூடாது. என்னோட பேச்சை மீறி நீங்க இங்க வந்தால் என்னோட பிணத்தை தான் பார்க்க முடியும்…” என்று அவனை மிரட்டினாள். அது மிரட்டல் மட்டும் அல்ல…
அவளுக்கு தெரியும்… அவன் வேம்பங்குடிக்கோ அல்லது ஓரத்தநாட்டுக்கோ நிரஞ்சனியை தேடி வந்தால் அவன் உயிரோடு திரும்பமுடியாது. இராஜசேகரின் மூர்க்க குணம் அப்படி… அவனுக்கு ஆபத்து வந்து அதை அவள் பார்ப்பதைவிட அதற்கு முன்பே அவள் போய் விடுவது மேல்… என்று எண்ணித்தான் அப்படி அவனிடம் சொன்னாள்.
நிரஞ்சனியின் வார்த்தைகளை கேட்ட புகழேந்திக்கு உடல் நடுங்கியது.
“ஏய்… வாய மூடுடி… எங்கடி நீ இப்போ இருக்க…? சொல்லு…”
“நா என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்… நீங்க என்ன கேட்குறீங்க…?”
“பேசாதடி… ஒரு வார்த்த பேசாத… இத்தன நாள் உன்னோட குரலை கேட்காம… உன்ன பார்க்காம கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருக்கேன்…. இப்போ ஒரேடியா சாகடிக்க தான் நீ எனக்கு போன் பண்ணினியா…?”
“ஏன் இப்படி பேசுறீங்க புகழ்…? என்ன கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…”
“என்னத்தடி புரிஞ்சுக்குறது… நீ தஞ்சாவூருக்கு வந்து பத்து நாள் ஆகுது… நீ பாட்டுக்கு அங்க உக்காந்துருக்க… எனக்கு அங்க என்ன நடக்குதுன்னே தெரியல… உங்க வீட்டுக்கு வந்து சமாதானம் பேசலான்னு பார்த்தா இப்படி உயிர பிடுங்குற மாதிரி ‘பிணத்தை தான் பார்க்க முடியும்ன்னு’ சொல்ற… ” என்று எரிந்து விழுந்தான்.
“இங்க நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்… இது எனக்கும் என்னோட சம்மந்தப்பட்டவங்களுக்கும் நடக்கிற போராட்டம்… இதுல எனக்கு உங்களோட உதவி தேவைப்படும் போது கண்டிப்பா உங்களுகிட்ட கேட்பேன்… அதுவரை நீங்க பொறுமையா இருங்க…” என்று அவனை சமாதானம் செய்தாள்.
அவன் முழுதாக சமாதானம் ஆகவில்லை.
“சரி… இது யாரோட நம்பர்… இதுக்கு நான் கூப்பிடலாமா…? ” என்று வேறு பேச்சிற்கு தாவினான்.
“இல்ல… இது ரஞ்சியோட நம்பர்… நீங்க இதுக்கு கூப்பிட வேண்டாம். ஏதாவது செய்தின்னா நானே உங்களுக்கு கூப்பிட்றேன்…” என்று சொல்லி போனை அணைத்தாள்.
3 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Punitha. Muthuraman. says:
என்ன காதலோ பெத்தவங்களையும் மத்தவங்களையும் ஈஸியா தூக்கி எறியசொல்ற காதல்.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
நன்றாக இருந்தது இப்பகுதி .
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
To be true first 2-3 epi drag aachi… Inda epi la irundu soodu pidichirichi… Enna aagum ranji ku?!